இறக்கை முளைக்கும் பறவைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 9,359 
 

ஆழ்ந்த கவலையின் தாக்கத்தால் அசந்துபோய், நாடியை ஒரு கையால் தாங்கியபடி வேதனை ததும்பும் முகத்துடன் தீவிரமான சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தாள் முத்தம்மா.

இருந்த சொற்ப அரிசியில் கீரைக் கஞ்சி காய்ச்சி ஒருவாறு சமாளித்துப் பிள்ளைகளை உறங்க வைத்தாயிற்று. பெரியவள் சுந்தரிக்குத்தான் அரை வயிற்றுக்குக் கூடக் காணாது. பருவமாகும் வயதை எட்டும் பூரிப்பு எதுவுமின்றி, பன்னிரண்டு வயதில் எட்டு வயதுப் பிள்ளைபோல் காட்சி தரும் அவளைப் பார்க்க முத்தம்மாவின் பெற்ற வயிறு எரிந்தது.

ஊதிய உயர்வின்மை, பொருட்களின் விலையேற்றம், தோட்டங்களில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி, வட கிழக்கு யுத்தத்தின் தாக்கம் என பல்வேறு காரணங்களால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு அதல பாதாளத்திற்குச் சென்றுகொண்டிருந்தது. தோட்டத்திலும் எல்லா நாட்களிலும் வேலை கிடைப்பதில்லை. வீராசாமியும், முத்தம்மாவும் மழை, பனி, குளிர் என்று பார்க்காமல் மலையில் உழைத்தும் கூட, வரும்படி பற்றவில்லை. வீட்டிலுள்ளவற்றை விற்றுச் சீவிக்குமளவுக்கு அவர்களது வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்திருந்தது. வீராசாமியின் குடிப்பழக்கமும் வறுமைக்கு இன்னொரு காரணம்.

ஏற்கனவே குடிப்பழக்கமிருந்த வீராசாமி வீட்டு நிலைமையின் கவலைகளை மறக்கவென குடிக்க ஆரம்பித்து மேலதிக கஸ்டத்தை உருவாக்கிக் கொண்டான். தனது உழைப்பைக் குடியில் செலவழிப்பதோடு நின்றுவிடாமல், முத்தம்மாவிடமிருந்தும் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு போய்க் குடிப்பான். அதுமட்டுமன்றிக் குடித்துவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் வீட்டிற்கு வந்து மனைவியையும் அடித்துத் துன்புறுத்துவான்.

இன்றும் வீராசாமி இன்னமும் வீடு திரும்பவில்லை. வந்தாலும் அவனுக்குப் போட சாப்பாடு இருக்கவில்லை. நிறை வெறியில் வந்தால் சாப்பிடாமலே படுத்து விடுவான் என நினைத்துச் சமாதானமடைந்தாள் முத்தம்மா.

கடையிலும் ஏகப்பட்ட கடன் இருந்ததால் மேலும் கடன் கொடுக்கக் கடைக்காரன் மறுத்துவிட்டான். ‘சம்பளத்திற்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அதுவரையில் எப்படிச் சமாளிப்பது?’ எனப் பலவாறு யோசித்தபடியிருந்த முத்தம்மா, வெளியே நாய் குரைக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். ‘வழக்கத்தை விட முன்னதாக வீட்டிற்குத் திரும்பிய அவனுக்கு இப்போது சாப்பிட எதைக் கொடுப்பது?’

வீராசாமி நெற்றியில் வடிந்தோடும் வியர்வையைத் துணிகளுடன் காம்பராவின் இஸ்தோப்பில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் வந்தமர்ந்து வியர்வையைக் கைகளால் துடைத்துக்கொண்டான். இன்று அதிக வெறியில்லை. எனினும் எதையோ பறி கொடுத்தவன் போலக் கடுகடுப்புடன் முகத்தை வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்த முத்தம்மாவுக்குக் கலக்கமாக இருந்தது.

“அந்தப் பரதேசிப் பய காசில்லாமச் சாராயம் தரமாட்டானாம். தாரதே தண்ணிக் கலப்பும், கசிப்பும். அதில கைக்காசு வேணுமாம். எளிய நாயி..” முழுமையான வெறியேறுமளவு சாராயம் குடிக்கக் கிடைக்காத ஆத்திரத்தில் பிதற்றிய வீராசாமி மீது ஆத்திரம் ஏற்பட்டாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அப்பால் சென்றாள் முத்தம்மா. வீட்டில் ஒருபிடி அரிசியோ மாவோ இல்லாத போது கூட அது பற்றிய சிந்தனையின்றிக் கடனுக்குக் குடிக்கும் கணவன் மீது சீற்றம் ஏற்பட்டது.

வீராசாமிக்குப் புரிந்தது. இன்று இவள் போர் தொடுக்கப் போகிறாள். அதற்கு முன்னோடியாகத்தான் இந்த மெளனமும் அலட்சியமும். இது ஒன்றும் இவனுக்குப் புதுமையில்லை. பதினைந்து வருடங்கள் இணைந்து வாழ்ந்து வரும் இவனுக்குப் புரிந்தது. குடித்துச் சீரழிந்து, குடும்பத்தையும் சீரழிக்க வேண்டாமெனத் தினமும் இவள் எடுத்துச் சொல்கிறாள். எனினும் அது இவனுக்கு செவிடன் காதுச் சங்குதான்.

மனைவி அப்பால் போனது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. “என்னடி, எங்கேடி போயிட்டே? சத்தத்தையே காணோம். வாயில் என்ன கொழுக்கட்டையா?” உள்ளே நோக்கியபடி குரல் கொடுத்தான். வீராசாமியின் அகங்காரமான பேச்சு முத்தம்மாவைச் சீண்டியது. அவனருகே வந்த முத்தம்மா அவனை முறைத்துப் பார்த்தாள்.

“காலையில் கொழுந்தெடுக்கப் போகணும்… பேசாமப் படுத்துத் தூங்குங்க… பிள்ளைகளும் முழிக்கப்போகுது…”

“பசிக்குதடி…” அவன் கேட்கும்போது அவளுக்கு அந்தரமாக இருந்தது. “எனக்கும் தான் பசிக்குது….. மத்தியானம் மலையில் சாப்பிட்ட ரொட்டிதான். இங்கே சமைக்கிறதுக்கு என்ன இருக்கு? இருந்ததையும் காலையில் பிடுங்கிக்கொண்டு போயிட்டீங்க”. அவளுக்கு நெஞ்சு அடைத்தது. பேச முடியாமல் குரல் தழதழத்தது.

வீராசாமி குற்ற உணர்வுடன் அவளையும் பிள்ளைகளையும் நோக்கினான். மனதில் பிரளயம். “அழாத முத்து… என்னிக்காவது எங்கட கஸ்டம் தீரும்….” என்று அவளைத் தேற்ற முயன்றான்.

“நீங்க குடிப்பழக்கத்தை விடுற வரைக்கும் எங்கட, வாழ்க்கையில் விடிவு வராதுங்க”. அவளது கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

“அழாத முத்து… இன்னிக்கு தவறணையில் வேலுவைச் சந்திச்சன். வீட்டுக் கஸ்டம் பற்றி கதைச்சன். நம்ம சுந்தரியை எங்கேயாச்சும் வீட்டு வேலைக்கு சேர்த்திட்டா நமக்கும் ஆயிரமோ இரண்டாயிரமோ கிடைக்கும். அவளுக்கும் வயிறு நிரம்பச் சாப்பிடக் கிடைக்கும்.

“என்னங்க… அவ பச்சப் புள்ளங்க… வேல வெட்டியும் சரியாகப் பழகல.. படிக்கணுமென்னு ஆசைப்படுறா.. இந்தப் பேச்சையே விட்டுடுங்க..”

“கஸ்டம் தீரணுமுன்னா அனுப்பித் தானாகணும்.. காலையில் கூட்டிக்கிட்டு போறதுக்கு வேலுவை வரச் சொல்லியிட்டேன்… காலையில் வருவான்” என்று உறுதியாகக் கூறிவிட்டு எழுந்தான் வீராசாமி.

“நம்மட கஸ்டம் நம்மோட இருக்கட்டும். அதுக்காக பிள்ளைகளைப் படுகுழியில் தள்ளுறதாங்க? வேலை செய்யுற இடங்களில் வாட்டி வதைச்சிடுவாங்க… அடியுதை வேற…”

முத்தம்மாவின் எதிர்ப்பு அவனிடம் எடுபடவில்லை. “அனுப்புறதுன்னு நான் முடிவு செய்திட்டேன்” என்று மறுபடி உரத்துக் கூறிவிட்டு கயிற்றுக் கட்டிலில் சாய்ந்த வீராசாமி விரைவிலேயே குறட்டையில் ஆழ்ந்தான். முத்தம்மாவுக்கோ தூக்கம் வரவில்லை. என்னதான் உதைபட்டாலும் சுந்தரியை வீட்டு வேலைக்கு அனுப்புவதில்லை என முடிவு செய்தாள்.

காற்று ஜன்னலினூடே பிசாசைப் போல் உள் நுழைந்து அவள் உடலை சிலிர்க்க வைத்தது. குளிருக்குக் கம்பளிபோல் போர்ப்பதற்குப் பழைய சேலை கூட இல்லை. நிலவொளி வான் பரப்பில் செளந்தர்யமாய்ப் பொழிந்துகொண்டிருந்தது. ஜன்னலினூடே உள்நுழையும் வெளிச்சத்தில் அருகே குறண்டிப் போய் படுத்திருக்கும் சுந்தரியை நோக்கினாள். முத்தம்மாவின் மனசிலிருந்து பெருமூச்சொன்று வெடித்துக் கிளம்பியது.

இன்று ரகளை ஏதுமின்றிக் கணவன் படுத்ததில் அவளுக்கு நிம்மதிதான். அடி உதை உக்கிரம் ஒருபுறம், பாத்திரம் பண்டம் எறியும் சத்தம் மறுபுறம் எனக் குழந்தைகள் விழித்தெழுந்து கூக்குரலிட்டு அமைதியையே கலைத்திருப்பார்கள்.

காலையில் மைமல் விடியலிலேயே வேலு வந்துவிட்டான். அவனது அழைப்பில் எழுந்த முத்தம்மா சன்னதம் கொண்டாள். “அது சாப்பிடாமல் பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்லை. வீட்டு வேலைக்கு அனுப்புறதாயில்லை…. நீங்க போயிடுங்கண்ணே…”

வேலு அவ்விடத்தை விட்டகலவில்லை. முத்தம்மாவின் மனதை மாற்ற எத்தனையோ சமாதானம் சொன்னான்.

“அக்கா… பைத்தியம் மாதிரி போசத…. வீட்டுக் கஸ்டத்தைக் கொஞ்சமாவது யோசிச்சுப் பாத்தியா? பிள்ளைகளும் பசி பட்டினி… அடுத்த குழந்தைக்காக உன்ர அடி வயிறு உப்பிப் போயிருக்கு… தோட்டத்திலே§யும் வரும்படி குறைவு.. சாப்பிடாவிட்டால் இரத்தமில்லாமல் பிள்ளை பெறவும் கஸ்டமாயிடும்.

இதற்கிடையில் வேலுவின் உரத்த உரையாடலில் வீராசாமியும் கண்விழித்து எழுந்து வந்தான். அவனைக் கண்டதும் வேலு, “அண்ணே… உங்க சம்சாரம் அனுப்ப மாட்டேன்னு நிக்கிறா. நல்ல இடம்.. வீட்டுக்கார ஐயா தங்கமானவரு… அதைவிட அம்மா இன்னும் நல்லவா.. எம்மாம் பெரிய வீடு தெரியுமா? நல்லாச் சாப்பிடலாம். ரீவியில் படம் பார்க்கலாம். அதை விட்டுட்டு இங்கே வைச்சுப் பட்டினி போட்டு பிள்ளையைச் சாகடிக்கப் போaகளா? பிள்ளைக்கு நல்ல சாப்பாடுமாச்சு…. மாசம் ஒங்களுக்கும் சம்பளமாச்சு….. மறுக்காமல் அனுப்பி வையுங்க…” என்றான். முத்தம்மா சிணுங்கினாள். வீராசாமி மனைவியை முறைத்துப் பார்த்தான். “ராத்தரி சொன்னேனில்ல?”

முத்தம்மாவின் மெளனமே பதிலானது.

வேலு தனது தரகர் வேலையைக் கச்சிதமாகச் செய்தான். அடிக்கு மேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பது போல முத்தம்மாவின் மனதையும் தன் பேச்சுச் சாதுரியத்தால் மாற்றி விட்டான். அப்போதுதான் விழித்தெழுந்த சுந்தரியின் காதுக்குத் தகவல் கிட்டவே, அவள் “ஓ” என்று குழறி அழ ஆரம்பித்துவிட்டாள்.

“நான் மாட்டன், நான் வீட்ட விட்டுப் போகமாட்டன். நான் படிக்கணும்…” சுந்தரியின் பெருக்கெடுக்கும் கண்களை யாரும் பொருட்படுத்துவதாக இல்லை. முத்தம்மா மட்டும் மனதுக்குள் அழுதாள். வேலு தனது திறமை மூலம் சுந்தரியையும் சாந்தப்படுத்தினான்.

“சுந்தரிக் கண்ணு… நீபோய் ஒழைச்சுக் கொடுத்தாத்தானே இங்க தம்பி, தங்கச்சி எல்லோரும் வடிவாகச் சாப்பிடலாம். உனக்கும் அங்§கே ஒரு குறையுமில்லை. வேண்டிய எல்லாம் இருக்கு. ஒன்னைப் போல ஒரு தங்கச்சியும் இருக்கு…” தனது இனிப்பான போலி வார்த்தைகளால் சுந்தரியையும் வேறு சம்மதிக்க வைத்துவிட்டான். ஐஸ்கிaம். சொக்கிலட் கனவுகளுடன் அவள் உடன்பட்டாள்.

சுந்தரியை அவன் அழைத்துச் செல்லும்போது ஐநூறு ரூபா நோட்டை எடுத்து முத்தம்மாவிடம் நீட்டினான். வீராசாமி அதை உடனேயே வாங்கிவிட்டான்.

சுந்தரி அழுதழுது விடைபெற்றபோது முத்தம்மாவின் கண்கள் கலங்கின. சிறு வயதில் வேலைக்காரியாக ஒரு வீட்டிலிருந்து அனுபவித்த வேதனைகள் அவள் மனதில் நிழலாடின.

ரயில் பயணம் சுந்தரிக்குக் குதூகலமாக இருந்தது. தான் படப்போகும் கஸ்டம் தெரியாமல் அந்தக் குழந்தையுள்ளம் குதூகலமாக அனைத்தையும் ரசித்துக்கொண்டு பயணித்தது. மலைகள், பள்ளத்தாக்குகள், குகைகள் அனைத்தையும் தாண்டி கொழும்பு நகரை நோக்கி ரயில் பயணித்துக்கொண்டிருந்தது.

கொழும்பு நகரில் பிரமாண்டமான கட்டடங்கள் அனைத்தையும் கண்டதும் பிரமிப்பில் ஆழ்ந்த சுந்தரி ஏதோ சொர்க்கத்திற்கு வந்தது போல் உணர்ந்தாள். ஒரு தொடர்மாடி வீட்டு லிப்டில் ஏறிச் சென்றபோது வாழ்வின் உயரத்திற்கே போவதாக உணர்ந்தாள்.

“வா வேலு… சொன்னபடியே கொண்டு வந்திட்ட….” எனச் சுந்தரியை நோட்டம் விட்டபடி, “சின்னப் பிள்ளையாக இருக்கிறாள்?” என்று கேட்டாள், வீட்டு எஜமானி.

“கடுகு சிறிதானாலும் காரம் பெரிசம்மா…. வலு கெட்டிக்காரி…. எல்லா வேலைகளும் செய்வாள்… சுறுசுறுப்பானவள்…” வேலு வெட்டி முழக்கினான். வீட்டுக்கார அம்மா கொடுத்த மூவாயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு சலாம் கூறி புறப்பட்டான் வேலு. “மாசா மாசம் பணம் வாங்க வருவேனுங்க… போயிட்டு வாறேன் அம்மா…”

வேலு போனதும் சுந்தரியைத் தனிமை உணர்வு விரட்டியது. வீட்டு நினைவில் ஒரு கணம் ஆழ்ந்து நின்றாள். எஜமானி அம்மாவும் அன்பாக அவளுடன் அவளது வீட்டு நிலவரம் பற்றி கேட்டறிந்தாள்.

சுந்தரிக்கு அந்த வீட்டைப் பார்க்க வியப்பாக இருந்தது. மின் விசிறிகள், மின் குமிழ்கள், செற்றி, பிறிஜ், ரீ.வி. மின் உபகரணங்கள், கணனி என பலபல அவள் கேள்விப்படாத பெயர்கொண்ட பொருட்களைப் புதுமையோடு பார்த்தாள். சடைநாயொன்று வீட்டுச் செற்றியில் படுத்திருந்தது. புதிதானாலும் அவளைப் பார்த்துக் குரைக்கவில்லை.

இவ்வாறான டாம்பீக வீடுகள் ஒருபுறமும், தோட்டப்புறத்தில் குச்சு லயங்கள் மறுபுறமுமாக ஒரே நாட்டில் இருப்பதைப் பார்த்ததும் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள் பிறந்தன. “கடவுள் ஏன் இப்படியான வேறுபாட்டை வைத்திருக்கிறார்? ஒருவேளை நாங்க முற்பிறப்பில் பாவம் செய்திருப்பமோ?” என்று எண்ணி மனதில் எழுந்த கேள்விக்கு தானே விடை கண்டுபிடித்துத் தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள்.

பாட்டி ஒருவரும் அந்த வீட்டில் இருந்தாள். பாட்டியின் அறை அந்தப் பெரிய வீட்டின் பிற்பகுதியிலிருந்தது. ஒவ்வொரு அறையிலும் குளியலறை இருந்தது. வீட்டுக்குள்ளேயே கக்கூசு இருப்பது அவளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சுந்தரி யோசித்துக் கொண்டிருக்கும்போதே அந்த வீட்டுக்காரப் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து காரில் வந்து இறங்கினார்கள். அவர்களது அழகான உடைகளில் அவள் சொக்கிப்போய் நின்றாள்.

“இந்த அக்கா யாரம்மா?” எஜமானியம்மாவின் சிறு மகன் அவளைப் பார்த்துக் கேட்டான். “இது அக்கா இல்லை. வேலைக்காரப் பெட்டை.” அம்மாவின் பதிலில் சுந்தரியின் முகத்தில் இருள் படர்ந்தது. உள்ளிருந்து அழுகை உடைத்துக்கொண்டு வரக் கண்கள் பெருக்கெடுத்தன. அவள் அழுவதைப் பார்த்த வீட்டுக்கார அம்மா, “என்னடி அழுகிறே? போ… போய் குசினியில் பாத்திரமெல்லாம் கழுவு…” என விரட்டினாள். சுந்தரி கால்கள் பின்னப் பின்ன உள்ளே சென்றாள்.

சுந்தரி வந்ததிலிருந்து தினமும் நிறைய வேலை கள் செய்திட வேண்டியிருந்தது. வயதுக்கு மிஞ் சிய உழைப்பு, உடுப்புகள் தோய்க்க வேண்டும். கூட்டித் துடைக்க வேண்டும். பாத்திரங்கள் கழுவ வேண்டும். படுக்கையிலுள்ள பாட்டியைப் பார்த்தெடு க்க வேண்டும். சமையலில் உதவி புரிய வேண்டும். இப்படிப் பல வேலைகள் அதிகாலையிலிருந்து இரவு வரை குவிந்து போயிருக்கும்.

வேலை அதிகமானாலும் சாப்பாட்டிற்குக் குறைவில்லை. எனினும் மற்றவர்கள் எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பின்னர்தான் சாப்பிட வேண்டும். பசித்தாலும் வேளைக்குச் சாப்பிட முடியாது. வீட்டில் ரேடியோ, ரீ.வி. எல்லாம் இருந்ததால் பொழுது போனது,. அம்மா எல்லா வேலைகளையும் சொல்லிக் கொடுத்தார். எனினும் தனது பிள்ளைகளை இவளோடு பழக விடுவதில்லை என்பதில் இவளுக்கு கவலை. ஐயா நல்லவர்.

வேலைக்குப் போய் வந்தால், தானும் தன் பாடும். எப்போதாவது ஐயாவும் அம்மாவும் சண்டை பிடிப்பார்கள். அவளது அப்பாவைப் போல் அம்மாவுக்கு அடிப்பதில்லை.

சாப்பிடும்போதும், மீதமான உணவு வகைகளைக் கொட்டிக் கழுவும்போதும் சகோதரர்களினதும், அம்மாவினதும் நினைவு வரும். சிலவேளைகளில் வீட்டிற்குப் போய் எல்லோரையும் பார்க்க வேண்டும்போல இருக்கும். மாதா மாதம் மாமா சம்பளத்திற்கு வந்து போகும்போது “எப்படி இருக்கே?” என்று கேட்பார். எல்லோரின் முன்னிலையில் என்பதால் “நல்லாயிருக்கேன்” என்று கூறுவாள். அம்மா அடிக்கடி ஏசுவது பற்றியோ, சில வேளைகளில் அடிப்பது பற்றியோ கூறுவதில்லை. வீட்டிலும் ஏச்சும் அடியும் வாங்கிப் பழக்கப்பட்டவள் தானே! ஆனாலும் ஒரு வித்தியாசம். அடிக்கிற கை இங்கு அணைப்பதில்லை.

ஒரு முறை வேலு மாமா வந்திருந்தபோது, வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகும்படி இரகசியமாகக் கேட்டாள். “அடுத்த மாதம் பார்ப்போம்” என்று கூறிச் சென்றான் வேலு.

கேக்கும், ஜஸ் கிaமும், வகை வகையான சாப்பாடுகளும் கிடைத்த போதிலும் அவளது மனதில் ஏதோ ஒரு வித ஏக்கம் குடிகொண்டிருந்தது. ஊரில் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடி, குதூகலிக்கும் வாய்ப்பு இங்கு இல்லை. ஒருவித சிறைபோல உணர்ந்தாள் சுந்தரி.

அடுத்த முறை வீட்டுக்கு வந்த வேலு, இவளது எஜமானியம்மாவுடன் கதைத்து இவளை வீட்டிற்குக் கூட்டிச் சென்று, ஒரு வாரத்தில் மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவதாக வேண்டினான். முதலில் மறுத்தாலும், அவனது நச்சரிப்பும், சுந்தரியின் அழுகையும் அவர் மனதை மாற்றவே, அனுமதி கொடுத்தார்.

“சரி கூட்டிக்கொண்டு போ…. ஒரு கிழமையில திரும்பக் கூட்டி வரவேணும். சுணங்கக்கூடாது”.

வேலு மாமா அவளைத் தோட்டத்திற்குக் கூட்டிச் சென்றபோது அவள் மாத்திரமல்ல, அவளது வீட்டில் எல்லோரும் குதூகலித்தனர்.

“எடியே… நல்லா கொழுத்து சிவந்திட்டாய்…” அம்மா பூரிப்புடன் கூறினாள். கொழும்பு புதினங்களை எல்லாம் அவள் அவிழ்த்துவிட, திறந்த வாய் மூடாமல் தம்பி தங்கையர் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

மண் விளையாட்டு, தாயம், நாயும் புலியும் எனப் பொழுது போவது தெரியாமல் உற்சாகமாக இருந்தாள். ஒரு வாரம் ஓடிக் கழிந்ததே தெரியவில்லை. அப்பா கூட அவள் வேலை செய்து உழைக்கும் பிள்ளையென்று ஒருவித மரியாதையுடனேயே நடந்தார்.

காலையிலே அவளை வந்து கூட்டிச் செல்வதாக வேலு கூறிச் சென்றான். திடீரென்று சுந்தரியின் முகத்தில் இருள் படர்ந்தது. “அம்மா நான் போகலை….” என்று தாயிடம் சிணுங்கினாள்.

“அந்த இடம் நல்ல இடம் என்று தானே சொன்னாய்? சாப்பாடும் விதம் விதமாய் கிடைக்கிறதாகச் சொன்னியே? இப்ப ஏன் மறுக்கிறாய்?”

“நான் போகலை….” அவர்கள் உரையாடிக்கொண்டிருந்தபோதே, அவளது தம்பி தான் பிடித்து வந்து கூண்டிலடைத்த கிளியைக் காட்டி, “அம்மா… வாழைப்பழம், அப்பிள்பழம், மரக்கறி எல்லாம் வைச்சேன். இந்தக் கிளி சாப்பிடுதில்லையே அம்மா….” என்று கவலையோடு கூறினான்.

“ராசா…. அது சுதந்திரமாகப் பறந்து திரியிற கிளி. கூட்டிலை வைச்சால் சிறைதானே?…. அதுதான் இது ஒண்டும் சாப்பிடாமலிருக்கு” என்று மகனைச் சமாதானம் செய்தாள் முத்தம்மா.

சுந்தரிக்குப் பசி எடுக்கவில்லை. அழுகை அழுகையாக வந்தது. காலையில் அம்மா எழுப்பியதும் படுக்கையிலேயே அமர்ந்திருந்தபடி அழ ஆரம்பித்தாள். முத்தம்மாவுக்கு அந்தரமாக இருந்தது. எனினும் கடந்த சில மாதங்களாக சுந்தரியின் சம்பளப்பணத்தின் உதவியினால் வீட்டில் தினமும் அடுப்புப் புகைந்ததை எண்ணினாள்.

“போ பிள்ளை… அச்சாப் பிள்ளையெல்லெ…. நீ போய் வேலை செய்தால் தானே தம்பி தங்கச்சி எல்லாம் சாப்பிடலாம்…”

“நான் மாட்டன் அம்மா…. நான் போகலை….” இதற்கிடையில் வேலு வந்துவிட்டான். வேலுவைக் கண்டதும் வீராசாமியும் தன் பங்கிற்கு, “சுந்தரி, இன்னமும் வெளிக்கிடவில்லையா? என்ன செய்யுறே?” என்று மனைவியை ஏசினான்.

எழுந்து வந்த சுந்தரி கிளிக் கூண்டினருகே வந்து நின்று கருணையோடு அதைப் பார்த்தாள். வீங்கிப் புடைத்திருந்த அவள் முகத்தில் விழி நீர் அருவியாக ஓட ஆரம்பித்தது. கிளி அவளைக் கெஞ்சுவது போல தலையை அங்குமிங்குமாக ஆட்டியது.

“சுந்தரி, என்ன அதில நின்னு மெனைக்கடுறாய்…? போகலையா? முகத்தைக் கழுவி வெளிக்கிடு…” வீராசாமி உரத்துக் கூறினான். சுந்தரி அசையவில்லை. அவளது பார்வை கிளியிலேயே நிலைத்து நின்றது.

“சுந்தரி…. வெளிக்கிடன் குஞ்சு…” அம்மா தேநீருடன் அவளருகில் வந்து கெஞ்சுமாப் போல் கூறினாள். “அப்பாவுக்கு கோபம் வரப்போகுது… மகள்…”

அவள் அம்மாவின் பக்கம் திரும்பி முறைத்தாள். ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. மறுபடியும் கிளிக் கூண்டின் பக்கம் திரும்பினாள். நேற்று வைத்த பழங்கள் சிறிதளவு மட்டும் கோதப்பட்டு, மிகுதி அப்படியே கிடந்தது.

“நீ போகலையா இப்ப…?” என கையை ஓங்கியபடி வீராசாமி அவளை நெருங்கினான். சுந்தரி சற்று விலகி, அடி விழுவதிலிருந்து தப்பிக்கொண்டாள். வீராசாமி பற்களை நறநற என்று கடித்துக்கொண்டான்.

சுந்தரி நிதானமாக கிளிக் கூண்டின் பக்கம் திரும்பி அதைத் திறந்து கிளியை வெளியே பறக்கவிட்டாள். பின்னர் சந்தோஷமாக அது பறப்பதைப் பார்த்தபடி நின்றாள்.

வீராசாமி மறுபடியும் கையை ஓங்கிக்கொண்டு வந்து தனது முரட்டுக் கரங்களால் சுந்தரியைத் தாக்கினான். “வெளிக்கிடடி நாயே….”

அவள் முறைப்புடனே தகப்பனின் பக்கம் திரும்பினாள். “நான் போகலை…. போகலைன்னா போகலை….” அவளது ஆக்கிரோசமான உறுதியான வார்த்தைகளில் ஒருகணம் கால் பின்ன நின்றான் வீராசாமி.

சுற்றிச் சுற்றிப் பறந்துகொண்டிருந்த கிளி தொலைவிலிருந்த மரத்திலமர்ந்து ஏதோ ஒரு காயைக் கோதிக் கொண்டிருந்தது.

– 2009/08/30

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *