எதிர்பாராத யுத்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 6, 2021
பார்வையிட்டோர்: 10,060 
 

காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரும் மூட்டைகளை சுமந்து கொண்டு குடும்பம் குடும்பமாக வேற்றிடம் நோக்கி சென்றார்கள். போர் அபாயத்தை வானொலியும் தொலைக்காட்சியும் அறிவித்துக்கொண்டே இருந்தன. ஆயுதங்களையும் ஆட்களையும் இந்தியாவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் குவித்து வைத்திருந்தனர். பனித்தூறல்களை துடைத்துவிட்டு சூரியகதிர்கள் உலாவிக்கொண்டு இருந்தன. இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருந்தார்கள். பதுங்கு குழிகள் வெட்டி வைக்கப்பட்டிருந்தன. இடுக்குகளிலும் மலை முடுக்குகளிலும் வீரர்கள் பதுங்கி தங்களை காத்துக்கொண்டும் எதிரிகளை தாக்குவதற்கு தயாராக இருந்தனர். சில இராணுவ வீரர்கள் முதுகில் ரொட்டிகளையும் துப்பாக்கி குண்டுகளையும் சுமந்து சென்றனர். ஆயுதங்களை தாங்கி மலைகளில் லாரிகள் அணிவகுத்துச் சென்றன. வெடிகுண்டுகளை தாங்கிய பீரங்கிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. எப்பொழுதும் போர் ஏற்படலாம் என்பதற்கு அறிகுறியாக இவைகள் தென்பட்டன.

தனது அறையிலிருந்து ரொட்டித் துண்டுகளையும், வெடி குண்டுகளையம் முதுகில் சுமந்தும் கையில் பெரிய துப்பாக்கியை ஏந்திக் கொண்டு மிகவும் ஆக்ரோசத்துடனும் தாய்நாட்டுப் பற்றுடனும் வெளியே வந்தான் விவேக்.

“சார், உங்களுக்கு தபால் வந்து ரெண்டு நாளாகுது என்றான் ஒரு ராணுவ வீரன். “கொடுங்க” என்று வேகமாக வாங்கி அனுப்பியவரின் முகவரியைப் பார்த்தான். “ஹேமா” என எழுதியிருந்தது. கண்களில் நீர் வழிய கைகளால் துடைத்தான். அவள்தான் விவேக்கின் கணவு கன்னி. கருவேலங்காட்டு கிராமத்தில் சின்ன வயசுலேயிருந்து ஒன்னாப் படிச்சாங்க. விவேக்கின் சிந்தனை கடந்த காலத்துக்கு மாறியது.”

“டேய் எனக்கு கொஞ்சம் கொடுடா அய்சு” என்றான் முத்து. “சும்மா இருடா ஹேமாவுக்காக நா பழைய புத்தகத்த அய்சுக்காருக்கிட்ட போட்டுட்டு ஒரு அய்சு வாங்கிருக்கேன். வேணும்னா கொஞ்ச நேரம் இரு. ஹேமா வந்தவுடனே மூணு பேரும் சாப்பிடுவோம்” என்றான் விவேக். சிறுவயதில் இப்படித்தான் ஹேமாவும், விவேக்கும் பழகினார்கள். பிறகுதான் காதலாக மாறியது. இவர்களுக்கு ஆதரவாக முத்து திகழ்ந்தான்.

விவேக்கின் எண்ணம் முழுவதும் ராணுவத்தில் சேருவதிலேயே இருந்தது. இதுதான் ஹேமாவின் ஆசையும். ஹேமா பத்தாம் வகுப்போடு நிறுத்திவிட்டு அவங்க ஆத்தாவோடு மாடு மேய்க்கச் சென்றாள். இருந்தாலும் இவர்கள் காதல் தொடர்ந்து கொண்டே இருந்தது. முத்துவும் விவேக்கும் நல்ல முறையில் படித்து கல்லூரியில் பி.காம். இளங்கலையை முடித்தார்கள். அந்த நேரத்தில் தான் எல்லை இராணுவத்திற்கு நேரடியாக ஆள் எடுத்தார்கள். விவேக் தனது சான்றிதழ்களை எடுத்தக்கொண்டு ராணுவப் பயிற்சி நடக்கும் சென்னை பரங்கிமலைக்கு விரைந்தான். விவேக்கின் திறமையும் தன்னம்பிக்கையும் அவனை இராணுவத்தில் சேர வைத்தது. இதைக் கேள்விப்பட் ஹேமாவுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. ஹேமாவுக்கு விவேக் அத்தை மகன் தான். தனது மகிழ்ச்சியை சக தோழிகளிடமும் சொல்லி ஆனந்தம் அடைந்தாள். அன்றிலிருந்து விவேக் ஹேமா இருவரது கடிதத் தொடர்பும் ஆரம்பித்தது.

முத்து தனது கிராமம் அருகில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக வேலையில் சேர்ந்தான்.

சிந்தனையில் மூழ்கியிருந்த விவேக் காதுகளுக்கு மலைச்சரிவில் தாக்குதல் நடத்தும் சத்தம் கேட்டது. தீயில் பட்ட விரல் போல திரும்பினான். தனது கைகளில் ஹேமாவின் கடிதம்; எதிரே யுத்தம். கடிதத்தைப் படிக்காமலேயே தனது சட்டைப் பைக்குள் வைத்தான். போருக்கு வேகமாகச் சென்றான்.

யுத்தம் பலமாக இருந்தது. குண்டு மழை தான் பொழிந்தன. வீரர்கள் குழுக்களாகப் பிரிந்து யுத்தம் புரிந்தார்கள். ஷேக்கப்சிங், பகருல்லா, விவேக் மூவரும் ஒரு குழுவாக பிரிந்தனர். இருபக்கமும் பொருட்சேதமும் உயிர்சேதமும். காஷ்மீர் பனி மலைகளில் இரத்த ஊற்றுகளே வழிந்தன. ஆங்காங்கே இரத்தம் உறைந்தும் காணப்பட்டன. ஏழு நாட்கள் போர் நடந்தது. முடிவில் தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களை இந்திய ராணுவம் மீட்டது. ஆனால் விவேக் குழுவினர் மூவரையும் காணவில்லை. மூவரின் நிலை என்னவென்று தெரிய வில்லை என்று மூவரது புகைப்படமும் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது.

கருவேலாங்காட்டு கிராமம் சோகத்தை தாங்கி இருந்தது. வயதான விவேக்கின் அம்மாவும் அப்பாவும் மிகவும் வேதனை அடைந்தார்கள். இதுநாள் வரையிலும் விவேக்கின் பெற்றோருக்கு முத்து தான் துணையாக இருந்து வந்தான். விவேக் அவன் குடும்பத்துக்கு ஒரே செல்லப்பிள்ளை தான். விவேக்கின் நிலை கேட்டு முத்து தீராத சோகத்தில் ஆழ்ந்தான். கம்மங்காட்டில் மாடு மேய்த்த ஹேமாவின் காதுக்கும் எட்டியது.

தலையை விரிகோலமாய் கதறி அழுதாள். அவளது கால்கள் கருவேலங்காட்டை நோக்கி ஓட்டம் எடுத்தது. மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கினாள்.

“ஏண்டி கழுதை அத்தமயன கட்டிக்கிறேனு ஒத்தக் காலுல நின்னுயே இப்ப என்னடி ஆச்சு. இராணுவத்துல சேர்ந்தாவே உசுரு கையில இல்லேனு, தலையால அடிச்சுக்கிட்டு சொன்னேனே கேட்டாளா. அழு நல்லா அழு.ஏதோ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே போய் சேர்ந்துட்டான்” கத்திக்கொண்டு அவளது கையைப் பிடித்து இழுத்துச் சென்றார் ஹேமாவின் அப்பா அந்தோணி.

கூடியிருந்தவர்கள் எதுவும் பேசாமல் தலைகுனிந்தபடி…

மூன்று நாட்களுக்குப் பிறகு நாட்டிலும் அமைதி நிலவியது. அவசர அவசரமாக சகாயத்துக்கும் ஹேமாவுக்கும் மாதா கோயிலில் திருமணம் நடந்தது. இதில் உமாவின் விருப்பம் கேட்கப்படவில்லை. ஹேமாவின் தாய்மாமன் மகன் தான் சகாயம். மனதில் விவேக்கை சுமந்து கொண்டு மணவாழ்வில் சகாயத்தோடு எப்படி வாழமுடியும்.

“அப்பா நா உடனே எல்லைக்குப் போயி விவேக்கப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு வர்றேன்” விவேக்கின் பெற்றோரிடம் விடை பெற்று இரயிலில் ஏறி உட்கார்ந்தான் முத்து. முத்துவின் மனம் இரயிலின் வேகத்தைவிட அதிகமாக ஓடிக்கொண்டு இருந்தது. டெல்லியில் இறங்கி மீண்டும் காஷ்மீருக்கு விமானம் மூலம் புறப்பட்டான். ஸ்ரீகர் அரசு மருத்துவமனை அவனை வரவேற்றது. உள்ளே சென்றான். கண் இழந்தவர்கள், கை இழந்தவர்கள், பார்க்கவே வேதனையாக இருந்தது. அவன் கண்களில் விவேக் முகம் தென்படவே இல்லை. தேசியக்கொடியை ஏந்திக்கொண்டு தளர்நடையோடு ஒரு மலைச்சரிவை அடைந்தான்.

இருபது வீரர்கள் வரிசையாக நின்று பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தார்கள். தூரத்திலிருந்தே அவர்களை நோட்டமிட்டான். அவர்களில் விவேக்கின் முகம் தென்பட்டது. முத்துவின் உதடுகளோ “பாத்துட்டேன் பாத்துட்டேன்” என்று உரக்க சத்தமிட்டன.

இராணுவ வீரர்களில் ஒருவன் சத்தம் வந்த திசை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். நல்லவேளை முத்துவின் உயிர் தப்பியது. அடுத்தமுறை சுடுவதற்குள் விவேக் தடுத்து விட்டான். ஆங்கிலத்தில் “அவன் என் நண்பன்” என்று சகவீரர்களிடம் சொல்லிவிட்டு முத்துவை நோக்கி ஓடி வந்தான்.

கட்டிப்பிடித்தான். கண்கள் கலங்கின.

“டேய் ஒனக்கு எதுவும் ஆகலையே”

“இல்லடா, அவங்க சுட ஆரம்பிக்கும் போதே விழுந்துட்டேன்ல. அதான் கையில லேசான சிராய்ப்பு” தனது வலது கையை காட்டினான்.

“நீ எறந்துட்டியோனு நெனச்சு அம்மாவும், அப்பாவும் ரொம்ப வேதனையில இருக்காங்க. நீ உசுரோட இருக்குற விசயம் தெரிஞ்சா எப்புடி இருக்கும் தெரியுமா” ஆனந்தமானான் முத்து. என்றான் ஏக்கத்தோடு.

“என்னோட உயிருக்கு ஆபத்து இல்லடா. போர்ல பாகிஸ்தான் எல்லைக்குள்ள போயிட்டோம். அங்கிருந்து தப்பிச்சு வர ரொம்பவும் கஷ்டப்பட்டோம்” என்று மற்ற இருவரையும் காட்டினான்.

“சரிடா ஹேமா எப்புடி இருக்கா”

“நல்லா தான் இருக்கா, ஆனா உனக்கு கிடைக்கமாட்டாடா”

“ஏன்டா! எதுக்குனு சொல்லு, அவசரப்படுத்தினான் விவேக்,”

“உனக்குதான் தெரியும்ல. உங்க காதலுக்கு அவளோட அப்பா எதிர்ப்பு தானே தந்தாரு. நீ எறந்துட்டதா நெனச்சு நம்மோடப் படிச்சானே சகாயம், அவனுக்குக் கட்டி வச்சுட்டாரு. பாவம்டா ஹேமா” கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.

“என்னய மனிச்சுருடா. நா ஊருக்கு வரலடா. நா உசுரோட இருக்க விசயம் தெரிஞ்சா ஹேமாவோட வாழ்க்கைக்கு கலங்கம் ஏற்பட்டிரும். நா எறந்துட்டதா நெனச்சு அவ வாழட்டும். என்னயப் பத்தி போகபோக மறந்துடுவா. அம்மா அப்பாக்கிட்ட மட்டும் சொல்லிட்டு அவங்கள என்னோட சேத்துருடா” முத்துவின் கைகளைப் பிடித்துக் கெஞ்சியவன் துப்பாக்கியை தோளில் மாட்டிக்கொண்டு புறப்பட்டான்.

விவேக்கின் நல்ல உள்ளத்தை எண்ணிய முத்து வேறெதுவும் பேசாமல் விமான நிலையத்திற்கு நடைபோட்டான். அவனது கால்கள் கருவேலாங்காட்டில் மிதித்தது. அவன் எதிரே ஹேமாவின் சடலத்தை தூக்கிக்கொண்டு சென்றனர். அவள் மருந்து குடித்துவிட்டு இறந்ததாக முத்துவிடம் ஒருவர் சொன்னார். அவனது கால்கள் நடக்க மறுத்தன.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *