தெய்வானை கிழவிக்கு என்னதான் வேண்டுமாம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2024
பார்வையிட்டோர்: 1,665 
 

அம்மாவுக்காக மட்டும்தான் அருண் இன்னமும் மௌனம் காத்துக்கொண்டிருந்தான். அவனது மௌனம் களைய, இன்னும் கொஞ்சம் மேலே போய் சீற்றம் கிளர்ந்து எழ, அந்தக் கிழவியை எதையாவது வசைந்திருப்பான். அதெல்லாம் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் அங்கிருந்து கிளம்பி எதிர்த்த வீட்டு மாரியப்பன் வீட்டில் சென்று பதுங்கியிருந்தான். அங்கேயும் வந்துவிட்டிருந்தாள் கிழவி. அவளது பிரச்சனைதான் என்ன? ஏன் அவனை மட்டும் சுற்றிச் சுற்றி வருகிறாள் என்பது கொஞ்சம் புதிரான சமாச்சாரம்.

கிழவி, மாரியப்பன் வீட்டுக்குள் நுழைவதற்குள் அங்கிருந்து பின் கதவு வழியாகத் தந்திரமாக வெளியேறினான். கிழவியை ஏமாற்றியதில் ஒரு சின்ன ஆனந்தம் அவனுக்கு.

சாவை எடுக்க இன்னும் மூன்று மணி நேரத்துக்கும் மேலே இருக்கிறது. கொஞ்சம் நேரம் கழித்து வந்திருக்கலாம்தான். கண்ணம்மா வற்புறுத்தி இழுத்து வந்துவிட்டாள் அவனை. சரி போனால் போகிறது, அம்மாதானே என்று வந்ததற்கு இப்படி ஓர் அவஸ்தை! கண்ணம்மா பாட்டுக்கு ஒப்பாரி வைக்க பிணத்தின் பக்கத்தில் போய் வாட்டமாக உட்கார்ந்து கொண்டாள். செத்தவன் யாரென்று கண்ணம்மா பலமுறை உறவுமுறைகளைச் சொல்லி விளக்கியும் விளங்காமல் போயிருந்தது அருணுக்கு. அவனுக்கு என்னவோ சாவுகளில் ஒப்பாரி வைத்து மூக்குச் சளியைச் சிந்தி பக்கத்தில் உக்கார்ந்திருப்பவன் மேல் தடவி, பதிலுக்கு அவனும் தன்னுடைய மூக்குச் சளியை திருப்பித் தடவி… சீச்சீ என்ன இது அசிங்கம் என்கிற ரகம் அருண். வாழ்க்கையின் அசிங்கமான முகங்களை இன்னும் பார்த்திராத இருபத்து நான்கு வயதில் அதெல்லாம் குமட்டல் வரவழைக்கிற விஷயங்களாய் இருந்தன அவனுக்கு. அதனால் இழவு விழுந்த அந்த வீட்டுப் பக்கமே நெருங்குவதைத் தவிர்த்துக்கொண்டான்.

தள்ளிநின்றபடியே பிணத்துக்குத் தரிசனம் வழங்கிகொண்டிருந்த அருணை அப்போதுதான் அடையாளம் கண்டிருந்தாள் தெய்வானை கிழவி. அவளது ஈரம் வற்றிய பழைய மூளையில் என்றோ சேமித்து பத்திரப்படுத்தியிருந்த ஞாபகம் இன்று எட்டிப் பார்த்தது. அப்போது முதல் அவன் பக்கத்திலேயே ஒட்டிக்கொண்டாள்.

“ஐயா… அருண் தானைய்யா நீயி? கண்ணம்மா கடசி பையன் அருணு தான? என்னிய ஞாவகம் வெச்சிருக்கியா ராசா?” என்று ஆரம்பித்ததுதான். சத்தியமாக அந்தக் கிழவி யாரென்று அவனுக்குத் தெரியாது. ஆனால், கிழவி அவனைப் பற்றியும் அவனது பூர்வீகத்தைப் பற்றியும் புட்டுப் புட்டு வைப்பதைப் பார்த்தால், நிச்சயம் அம்மாவுக்கு இந்தக் கிழவியைத் தெரிந்திருக்கக் கூடும் என்று தோன்றியது அவனுக்கு. ஆனால், கண்ணம்மா இருக்கும் நிலையில் இப்போது தகவல் பெறுவது கொஞ்சம் கடினம்தான். யார் யாருடைய மூக்குச் சளியோ சட்டையெல்லாம் இழுப்பி வைத்திருக்கும் கண்ணம்மாவைப் பார்த்ததுமே கொஞ்சம் குமட்டல் வந்திருந்தது அவனுக்கு. நெடுநாள் தோட்டத்து மண்வாசனையை மறந்திருந்த அருணுக்கு இதெல்லாம் புதுசாகவும் அருவறுப்பாகவும்தான் இருந்தது.

இந்தத் தோட்டத்தில்தான் தனது பூர்வீகம் என்பது அருணுக்குத் தெரியும். கண்ணம்மா தனது பழம்பெருமைகளைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து கொள்ளும் இந்த தோட்டத்தைப் பற்றிய கற்பனை பிம்பத்துக்கும் இப்போது கண்கூடாகக் காணும் அதே தோட்டத்துக்கும் இடையில் ஆயிரம் வித்தியாசங்கள்! அதில் ஒன்றுகூட அருணின் மனதைச் சுண்டியிழுக்கத் தவறியிருந்தன. சின்ன வயதில் இங்கேதான் விளையாடினாய், அங்கே தான் ஓடினாய் என்றெல்லாம் இழவு வீட்டை நெருங்குகிற வரையிலும் கண்ணம்மா சுட்டுவிரல் காட்டிச் சுட்டிக்கொண்டுதான் வந்தாள். கண்ணம்மா காட்டியதுபோல் அப்படியொன்றும் நினைவுகள் சொல்லவில்லை அவனுக்கு. இதில் ஏதோ ஒரு கிழவி வேறு “என்னை ஞாபகம் இருக்கா?” என்று கேட்பதெல்லாம் கொஞ்சம் கூடுதல் எரிச்சல் தருகிற விஷயம்தான் அவனைப் பொருத்தமட்டில்.

கிழவிக்கு என்னதான் வேண்டுமாம்? அடுத்த முறை கிழவி வந்து ஒட்டிக்கொள்ளும் போது மூஞ்சில் அடித்துவிடுகிற மாதிரி எதையாவது கேட்டுவிட வேண்டும் என்று முடிவோடுதான் இருந்தான் அருண். காசு கொடுத்தாலும் வாங்க மாட்டேன் என்கிறாள். என்னதான் வேண்டும் தெய்வானை கிழவிக்கு? கேட்டால் சொல்லாமல் கூடவே தொற்றிக்கொண்ட நோயைப் போல தொற்றிக்கொண்டு வருகிறாள்!

எழுவது வயதைக் கடந்த கிழவியின் வெற்றிலைக் கறையேரிய தூக்குப் பற்களும், காணாமல் போய்விட்ட நிலையில் குகை வாயில் போல சந்துகளைக் காட்டி நிற்கும் எதிர்களும், காய்ந்து வெகுவாக குறைந்துவிட்ட வெளுத்துப்போன தலை முடியும், அங்கங்கே கொப்புளங்களும் காய்ந்த புண்களும் நிறம்பிய தோல் மேற்பரப்பும், கெட்ட கவிச்சி நாற்றமும் என்று… சேச்சே! அந்தக் கிழவியைப் பார்க்கவே மிகையான அருவறுப்பு அப்பியது அருணுக்கு.

கண்ணம்மாவை எப்படியாவது பிடித்தாக வேண்டிய சூழல் வந்துவிட்டது. அனைவரது கவனத்தின் மையத்தை ஈர்த்து வைத்திருந்த அச்சபையை எக்கி நோக்கினான். கண்ணம்மா அங்கு இல்லை. ஒருவேளை அங்கிருந்து வெளியேறியிருக்கலாம் என்று எண்ணி விரைந்தான்.

கண்ணம்மா ஒப்பாரிச் சபையை விட்டு விலகி, தவித்த வாய்க்கு தண்ணீர் கொட்டி நனைத்துக்கொண்டிருந்தாள். இன்னொரு சுற்று ஒப்பாரிக்குச் செல்லும் முன்பதாகவே அதிர்ஷ்டவசமாகப் போய் பிடித்துக்கொண்டான் அவளது கையை.

“அம்மா, ஒன்னு கேக்கனும். மொதல்ல இருந்து ஒரு கெழவி என்னிய தொந்தரவு பண்ணிகிட்டே இருக்கும்மா. யாரும்மா அந்தக் கெழவி? அசிங்கப் பிடிச்ச கெழவி!” என்று கேட்டான். “யாரைடா சொல்லுற? மஞ்ச கலரு துணியப் போட்டுக்கிட்டு இருந்தாங்களே, வயசானவங்க…”
“ஆங், அந்த கெழவியேதான். நம்மளப்பத்தி சும்மா புட்டு புட்டு வெக்கிது கெழவி! சும்மா சும்மா என்னைய ஞாபகம் இருக்கான்னு கேட்டுக் கேட்டு கழுத்தறுக்குது! நானும் எத்தன தடவதான் ஞாபகம் இல்லன்னு சொல்றது. அதோட விட்டுச்சா? கையெல்லாம் புடிக்கிது. ஒரே அருவறுப்பா இருக்கு.” என்றான் அவன்.

கண்ணம்மா தாள்ளாடிய ஒரு புன்னகை செய்தாள். அவனைப் பார்த்தபடி “அந்த தெய்வானை பாட்டி இருக்காங்களே…”

18 ஆண்டுகளுக்கு முன்

தெய்வானை கிழவிக்கு ஒன்பது பிள்ளைகள். ஒன்பதில் ஒன்றே ஒன்றைத் தவிர மற்ற எல்லா பிள்ளைகளும் பெற்றவளைத் தொல்லையாய் நினைத்து வாக்கப்பட்ட வீட்டிலிருந்து எட்டிகூட பார்ப்பதில்லை. அந்த ஒரே ஒரு பிள்ளை தெய்வானையின் கடைகுட்டி, ஆடலரசு. இதே தோட்டத்தில்தான் அப்போதும் இவர்கள் இருந்தார்கள். அவர்கள் இருக்கும் வீட்டுக்கு அடுத்த லயத்தில்தான் கண்ணம்மாவின் வீடு இருந்தது.

கண்ணம்மா குடும்பத்துக்கும் ஆடலரசு குடும்பத்துக்கும் எந்த ஒட்டுறவும் இல்லைதான். ஆனால் இந்த இரு குடும்பத்துக்கும் ஒரு யதார்த்த ஒற்றுமை உண்டு. ஆடலரசுவின் பிள்ளைகள் மொத்தம் நான்கு. முதல் மூன்றும் பெண் பிள்ளைகள். கடைசி ஆண்பிள்ளை; முத்து. கண்ணம்மாவுக்கும் அதே மாதிரிதான். கண்ணம்மாவின் கடைசி பையன்தான் அருண். இரண்டு வீட்டுப் பிள்ளைகளும் எல்லாம் ஏறக்குறைய ஒரே ஈடு தான். அதனாலோ என்னவோ தெய்வானை அடிக்கடி சொல்லிச் சொல்லி மாய்வாள் “ஒம்புள்ளைக்களும் எம்பேரப்புள்ளைங்களும் ஒரே மாதிரி” என்று.

தெய்வானை பாட்டிக்கு அவளது பேரப்பிள்ளை முத்து என்றால் கொள்ளை பிரியம். அந்தச் சின்னஞ் சிறு வயதில் அவன் படு சுட்டி. யார் எந்த வேலையைச் சொன்னாலும் ஓடிப் போய் செய்வான். தெய்வானை பாட்டிக்கு முழு ஒத்தாசை அவன்தான். மூச்சுக்கு மூச்சு “பாட்டீ பாட்டீ” என்று சுற்றிச் சுற்றி வருவான்.

அந்தப் பேரப்பிள்ளையின் கடைசி தினம் அந்தத் தோட்டத்து மக்களில் இன்னும் இருப்போர் யாருடைய நினைவையும் விட்டுக் கழன்றிருக்காது. அப்போது அவனுக்கு ஆறு வயது. எப்பவும் போல பாட்டியின் காலைச் சுற்றிச் சுற்றி சைக்கிலை ஓட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தான். “பாட்டீ இங்க பாரு… பாட்டீ இங்கப் பாரு…” அதுதான் தெய்வானை கிழவி அவனிடமிருந்து ஆகக் கடைசியாகக் கேட்ட வார்த்தைகள்.

சும்மாயிருக்க முடியாத வாய் எப்போதும் வெற்றிலையை போட்டுக்கச் சொல்லி தெய்வானையை வற்புறுத்தும். எந்த நிலையாயிருந்தாலும் தானே கடைக்குச் சென்று பொருளை வாங்கிவரும் கிழவி அன்று மட்டும் முத்துவை அனுப்பி வைத்தாள்.

கையில் கொஞ்சம் சில்லரைகளைக் கொடுத்து, “போய் பாட்டிக்கு வெத்தல வாங்கியாடா முத்து” என்று அனுப்பி வைக்க அதுதான் ஆகக் கடைசியாக அவனை அத்தனை துள்ளலோடும் எப்பவும் உள்ள துடுக்கோடும் தெய்வானை கிழவி பார்த்தது.

கடையிலிருந்து தெய்வானை வீட்டு லயத்துக்கு வரும் பாதை கொஞ்சம் மேடாக இருக்கும். முத்து திரும்பி வருகிற போது அந்த மேட்டில் சைக்கிலை மிதித்துக் கொண்டு வர கொஞ்சம் மூச்சு டம்கட்டித்தான் வரவேண்டியிருந்தது. வெற்றிலையை வாங்கி வந்ததும் தாகம் அடிக்கிறது என்று சொல்லி கூப்பிட்டிருக்கிறான் பாட்டியை. தெய்வானை அந்த நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் புளிச்சைக்கீரை கொள்ளையில் களையெடுத்துக் கொண்டிருந்தாள்.

தாகம் அடிக்கிறது என்று பாட்டியைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு பாட்டியைக் காணாததால் வீட்டின் வாசலில் சப்பாத்து கழற்றி வைக்கும் இடத்தில் இருந்த ‘கொக்க கோலா’ போத்தலில் பாதி மிச்சமிருந்ததை அவ்வளவையும் எடுத்துக் குடித்துவிட்டான்.

குடித்து முடித்ததும் தொண்டையை அறுக்கிறது போல் இருப்பதாகச் சொல்லி தெய்வானையைத் தேடி கொள்ளை பக்கம் ஓடினான் முத்து. தெய்வானையை அடையும் முன்னமே மயக்கமுற்று மண்ணில் சாய்ந்துவிட்டான். தெய்வானை ஓடி வந்து பார்ப்பதற்குள் முத்துவின் வாயில் நுரை தள்ளிவிட்டிருந்தது. “ஐயா… ஐயா…” என்று கத்தினாளே ஒழிய வேரெதுவும் தோன்றவில்லை அவளுக்கு. என்னதான் ஆனது பையனுக்கு என்பதும் புரியவில்லை.

அவனை அப்படியே இரு கைகளால் தூக்கிக் கொண்டு வாசலுக்கு ஓடியபோதுதான் அந்த ‘கொக்க கோலா’ போத்தல் காலியாக கீழே உருண்டபடி கிடந்தது தெரிந்தது. அதில்தான் புல்லுக்கு அடிக்கிற ‘கோப்பியோ’ மருந்தை ஊற்றி வைத்திருந்தாள் கிழவி. ‘கோப்பியோ’ மருந்து அதிக காட்டம் வாய்ந்தது. பார்க்க ‘கொக்க கோலா’ மாதிரியே இருக்கும். வர கோப்பி மாதிரி என்றும் சொல்லலாம்தான்.

முத்துவின் உடல் அசைவுகள் சன்னம் சன்னமாகக் குறைந்து அசைவற்ற நிலைக்குப் போயிருந்தது. வீட்டு ஐந்தடியில் காலைப் பரப்பி உட்கார்ந்து கொண்டு செத்துப்போயிருந்த பேரப்பிள்ளையை மடியில் கிடத்தி கதறியதைக் கேட்டுத்தான் அக்கம் பக்கத்திலிருந்த தோட்ட மக்களே திரண்டார்கள்.

அந்தக் காட்சியை நேரில் கண்ட கண்ணம்மாவுக்கும் தெரியும் அது போல வேரெந்த வேதனையும் இல்லை என்று. முத்துவின் ஈடு உள்ள அருண், அந்தக் காட்சியையெல்லாம் பார்த்துக்கொண்டு கண்ணம்மாவின் கைலியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த வயது அது. முத்துவையும் அருணையும் எப்போதுமே ஒரே மாதிரி பார்த்துப் பழகிய தெய்வானைக்கு முத்து இன்னும் செத்துப் போயிருக்கவில்லை என்று தோன்றியிருப்பதில் நியாயம் இருக்கிறதுதான்.

தெய்வானை கிழவி காணாமல் போயிருந்தாள்

கண்ணம்மா அந்தப் பழையக் கதையைச் சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்களின் ஈரம் வளர்ந்தது. “நாம எஸ்டேட்ட விட்டுப் போனதுல இருந்து தெய்வானை பாட்டி ரொம்ப ஏங்கி போயிட்டாங்களாம்யா. நீன்னா அவங்களுக்கு அவ்ளோ பிரியம். உன் உருவத்துல முத்துவப் பாக்குறதா ஏற்கனவே பல தடவ எங்கிட்டச் சொல்லியிருக்காங்க. என்னா செய்யிறது? இதுக்காக இங்கயே இருக்கமுடியுமா என்னா? எத்தனையோ வருஷம் ஓடிடுச்சு. அதுவும் மாரியப்பன் அண்ணனப் பாக்காம இருந்திருந்தா இன்னைக்கும் வந்துருக்க மாட்டேன் இந்தத் தோட்டத்துக்கு,” என்று சொல்லி குடித்தக் குவளையை அலம்பி வைத்தாள்.

கண்ணம்மாவின் கவனம் மட்டும் எங்குமே சிதராமல் வந்திருந்த சாவை மட்டும் மையமாகச் சுற்றியிருந்தது. திரும்பிப் பார்த்தாள். பிணத்துக்குக் கோடித்துணி போடுகிற நேரம் வந்துவிட்டது. கண்ணம்மா ஓடிப்போய் மீண்டும் கலந்தாள் கூட்டத்துக்குள்ளே.

கண்ணம்மா போன பின்னர்தான் கண்களிலிருந்து நீரை உதிர்க்க அனுமதித்தான் அருண். தெய்வானை கிழவிக்கு வேண்டியது என்ன என்று தெரியாமல் அப்படிச் செய்துவிட்டோமே என்று மனம் புழுங்கியது. “எவ்வளவு பெரிய பாவம்?” கிழவியை இப்போது பார்க்கவேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

மாரியப்பன் வீட்டின் பின் கதவு வழியாக கிழவிக்குப் பயந்து தப்பித்து வந்தபோது அதை அவள் கண்டுபிடித்து அங்கேயும் வந்து கையைப் பிடித்துக்கொண்டபோது அருண் கையைத் தட்டிவிட்டிருந்தான். வயதான கிழவி அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி கீழே கூழாங்கல் பரப்பில் விழுந்தபோது கை முட்டியில் காயம் ஏற்பட்டு ரத்தம் ஒழுகத் தொடங்கியிருந்தது. அப்படியே விட்டுவிட்டுத்தான் முதலில் கண்ணம்மாவைப் பார்க்கச் சென்றிருந்தான்.

அனேகமாக தெய்வானை கிழவி இன்னமும் அங்கேயேதான் உட்கார்ந்திருப்பாள் என்று எண்ணி மாரியப்பன் வீட்டுப் பின்புறத்தை நோக்கி ஓடினான் அவன். தெய்வானை கிழவி அங்கே இல்லை. தரையில் ஒன்றிரண்டு கூழாங்கற்களில் ரத்தக் கரை மட்டும் காய்ந்து கிடந்தது.

– மக்கள் ஓசை, மலேசிய நாளிதழ் (12-11-2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *