வைதேகி காத்திருந்தாள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 10,272 
 

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரிப் பகுதியில் அன்று சற்றே கூடுதலாகக் களை கட்டியிருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பழைய மாணவர்களின் சந்திப்பு தினம் என்பதால் உற்சாகமும் எதிர்பார்ப்புமாக ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். மருத்துவக் கல்லூரி வளாகத்தின் அலுவலகத்தில் இருந்த பெண் அலுவலர் மிங்கியிடம் தங்களது பெயரைப் பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது தான் வந்து இறங்கிய வைதேகியை அடையாளம் கண்டு ஒடி வந்தாள் மாலினி.

“ ஏய்! வைதேகி …எப்படி இருக்கே? எங்கே இருக்கே? நான் கேகேயில் வேலை செய்யறேன்.”…..அதே குண்டு முகம். ஒப்பனை செய்து கொண்ட பளபளப்பு…..பேச்சில் படிக்கும் காலத்தில் இருந்தாற் போலவே இயல்பான கலகலப்பு! சீத்தா, வந்தனா, பிரஸில்லா, வாங், மஞ்சு, நர்மதா என்று ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். பத்தாண்டுகளில் அவர்களது அனுபவம் அவர்களிடையே ஒரு முதிர்ச்சியை உண்டாக்கி இருந்தாலும், இளம்பெண்களைப் போல் அபரிமிதமான குதூகலம் இழையோடியது. தங்களது பணியைப் பற்றியும், குடும்பம் பற்றியும், பசுமை நிறைந்த அந்தப் பழைய நாட்களைப் பற்றியும் அலுப்பு சலிப்பில்லாமல் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் உத்வேகம் அனைவரிடத்திலும் காணப்பட்டது!

இந்தத் தமயந்தியைத்தான் இன்னும் காணோம்! அனேகமாக எல்லோரும் வந்தாயிற்று! நெடிய வராந்தாவும், மரப் பெஞ்சுகளும், இடையிடையே வைக்கப்பட்டிருந்த குரோட்டன்ஸ் செடி வகைகளும், கல்லூரிக் காண்டீனும், நூலகமும், விளையாட்டு மைதானமும்…….எல்லாம் அப்படி அப்படியே!….இதோ …அந்த மகிழ மரத்தடி! அவளும் தமயந்தியும் சேர்ந்து படித்த மரத்தடி!

எத்தனையோ நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட அந்தச் சிமின்ட் பெஞ்ச்….அந்த இடத்தில் தமயந்தி டான்ஸ் பிராக்டீஸ் செய்த நிழலான ஒதுக்குப்புறம்..இதோ, இந்த லாபில்தான் இருவரும் கேஸ் ஸ்டடி செய்வார்கள். காரசாரமான விவாதங்களும், கசமுசவென்ற பேச்சுமாக அந்த இடம் அவர்களது நேரத்தை உள்வாங்கிக் கொண்டிருந்த அந்த நாட்கள், தற்போது மனதில் நிழலாடியது!

வைதேகியை விடத் தமயந்தி படிப்பில் படு சுட்டி! எதிலும் முதல்! படிப்பு மட்டுமா? பாட்டு, நடனம், ஓவியம் என்று சகலத்திலும் முன்னால் நின்றவள். தமயந்தி பங்கேற்காத கல்லூரிக் கொண்டாட்டங்கள் இல்லை! பணத்தாலும் பகட்டாலும் இட்டு நிரப்ப முடியாத பண்பும், பதவிசும் தமயந்தியிடம் நிறையவே இருந்தன. SPH-இன் ஸ்காலர்ஷிப் அவளுக்குக் கிடைத்ததில் வியப்பேதுமில்லை!

“வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள்’….கல்லூரி ஆண்டு விழாவில் தமயந்தி ஆடி முடித்தபோது, கரவொலி விண்ணைப் பிளந்தது! வெண்பட்டு உடுப்பில் சகலமும் வெள்ளையாகத் தமயந்தி ஒரு தேவதை போல் ஜொலித்தாள். கல்லூரித் தாளாளரின் சிறப்புப் பரிசு அவளுக்குக் கிட்டியபோது, அனைவருக்கும் மகிழ்ச்சி கரைபுரண்டது. வெள்ளிக் கோப்பையோடு வந்தவளை அனைவரும் சூழ்ந்து கொண்டு பாராட்டினர். .

‘ஏய் தமயந்தி! உன்னோட நடனம் ரொம்ப நன்றாக இருந்தது! அதற்குப் பாந்தமாய் நீ செய்து கொண்டிருந்த அலங்காரமும், முக்கியமாக வெள்ளை உடுப்புகளும், அணிகலன்களும்…..ரொம்பவே சிறப்பாக இருந்தது!…..எல்லோரும் சொல்லிப் பாராட்டிய போது, வைதேகியும் மகிழ்ந்து போனாள்.

“பார்த்தாயா தமயந்தி! என்னோட வெள்ளைப் பட்டுப் புடவையும், வெண்முத்து நகைகளையும் உனக்கு நான் இரவல் கொடுத்ததால் தான், நீ ஜம்மென்று நடனமாடிப் பரிசு வாங்கி இருக்கே! ஆள் பாதி ஆடை பாதி அல்லவா?…ஸோ, எனக்குத் தான் கிரெடிட்” என்று வைதேகி சொல்லி நிறுத்தியபோது விருட்டென்று எழுந்து கொண்ட தமயந்தியின் கண்களில் குளம் கட்டியிருந்தது. கொதிக்கும் பாலை நீர் தெளித்து அடக்கினாற் போல் அவளது உற்சாகம் அங்கே காணாமல் போயிருந்தது.

சடசடவென்று தனது விடுதி அறைக்குச் சென்று உடை மாற்றியவள், டான்ஸ் உடுப்பையும் அணிகலன்களையும் வைதேகியிடம் கொடுத்தாள்….முகம் சிவந்து கண்கள் கலங்கிப் போயிருந்தன. “நன்றி! வைதேகி! தாங்க்ஸ் :.பார் எவ்ரிதிங்….இனிமேல் உனக்கும் எனக்கும் எதுவுமில்லை! குட்பை!’…..

திடுக்கிட்ட வைதேகிக்கு அப்போதுதான், எல்லோர் முன்னாலும் தான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது என்று தோன்றியது. தமயந்தியின் தன்மானத்தை அத்தனை பேர் முன்னாலும் விலைபேசியது போல் தான் பேசியது மனத்தை ரொம்பவே உறுத்தியது. இல்லாமை பற்றியோ, தனது வீட்டுப் பொருளாதாரம் பற்றியோ, தமயந்தி யாரிடமும் பகிர்ந்து கொண்டதே இல்லை. பள்ளி மாணவர்களுக்கு ஒழிந்த நேரத்தில் பாடம் சொல்லிக் கொடுத்து, அதில் வரும் தொகையில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்பவள். இந்த நடனத்திற்குப் பளபளப்பான உடுப்பும் அணிமணியும் தேவை என்பதால், அவர்களது ப்ரொ:.பசர் வைதேகியிடம் கேட்டு வாங்கிக் கொடுத்ததே தவிர, தமயந்தி யாரிடமும் எதையும் இரவல் தரும்படிக் கேட்டதில்லை!… இந்நாள் வரையில், வைதேகியிடம் கூடத் தனது படிப்பையும், முன்னேற்றத்துக்கான முயற்சியையும் தவிர எதையும் பேசியதில்லை!

தான் அவசரத்தில், யோசிக்காது பேசிய வார்த்தைகள் கத்தியாக அவர்களது நட்பையே குதறிப் போட்டு விட்டதே! காலம் போகும்; வார்த்தை நிற்கும் என்பது இது தானா? தமயந்தியிடம் எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டும் பலனில்லை! இதோ …. இந்த மகிழ மரத்தடியில் தான் அழகிய அவர்களது ஐந்தாண்டு சிநேகம் முறிந்து போனது.

அதன் பின்னர் தேர்வு….பிறகு திருமணம்…பிள்ளைகள்…குடும்பம் என்று திக்குக்கு ஒருவராகப் போனதில் ஒரு சிலரைத் தவிர, யாருக்கும் யாரைப் பற்றியும் தெரிவில்லை. வைதேகியும் திருமணமாகி அமெரிக்கா போனவள் தான்! மெனக்கெட்டுத் தமயந்தியைப் பார்த்துத் தங்களது நட்பைப் புதுப்பிக்கும் ஆர்வத்தில்தான், இப்போது அவளது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். தமயந்திக்குப் பரிசாக வாங்கியிருந்த நீலப்பட்டுச் சேலை கையில் கனத்தது. இருவருக்கும் பிடித்த வண்ணம் நீலமாயிற்றே!….

நிகழ்ச்சி தொடங்கி விட்டது. கல்லூரியின் கரஸ்பாண்டன்ட் திருமதி ஆல்பர்ட் உரை ஆற்றத் தொடங்கினார். “திருமணமாகிப் போன பெண்கள் தங்களது பெற்றோரைப் பார்க்கத் தங்கள் தாய்வீடு வந்தது போல் உணருகிறேன்! தலை சிறந்த மருத்துவர்களாக நீங்கள் அனைவரும் நல்ல முறையில் பணியாற்றி, இக்கல்லூரிக்குப் பெருமை சேர்த்து வருவதைப் பாராட்டுகிறேன். மக்கள் சேவை மகேசன் சேவை என்பார்கள்.. .உங்களது தன்னலமற்ற சேவை, எப்போதும் தொடரட்டும்!…..” அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவரது செகரட்டரி அவரைத்தேடி யாரோ வந்திருப்பதாகச் சொன்னதும், ஆபீஸ் ரூமுக்கு விரைந்தார்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் திரும்பியவருடன், ….”ஹலோ எவ்ரிபடி! குட்ஈவினிங்….ஐ’ம் ராம்குமார். உங்கள் சிநேகிதி தமயந்தியின் கணவன்’ என்றபடியே ஒருவர் வந்தார். வைதேகி சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தாள். “தமயந்தி எங்கே?’….கண்கள் தமயந்தியை எதிர்பார்த்துக் காத்திருந்தன.

ராம்குமார் குரல் கம்மப் பேசலானார்….இந்த விழாவிற்கு வருவதற்குத் தமயந்தி ரொம்பவே விருப்பப் பட்டாள். கல்லூரியில் அவள் படித்த நாட்களை, முக்கியமாக நண்பர்களை, அவளது நெருங்கிய தோழி வைதேகியை பற்றியெல்லாம் என்னிடம் சொல்லுவதுண்டு. பசுமை நிறைந்த நினைவுகளையும், பழகிக் களித்த நண்பர்களையும், நினைத்தாலே இனிக்கும் அந்தப் பழைய நாட்களைப் பற்றியும் தமயந்தி அசைபோட்டுப் பகிர்ந்து கொள்ளும் போதெல்லாம் அவளது கண்கள் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்…..

ஹூம்! விதி யாரை விட்டது? என்னுடைய தமயந்தி, இரண்டு வாரங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் ஒரு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு விட்டுத் திரும்புகையில், எதிரே வந்த வாகனத்துடன் மோதி நிறைய ரத்தம் சேதமாகி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். தனக்குப் பிறர் ரத்தம் கொடுத்தால்தான் வாழ முடியும் என்பதைத் தமயந்தியும் உள்ளூர உணர்ந்திருக்க வேண்டும். அவளது சுபாவத்திலேயே, ‘தன கையே தனக்குதவி’ என்று எதற்கும் பிறரை எதிர்பாராத அவளது தன்மானம் இந்த ரத்த தானத்திற்கும் இடம் கொடுக்காமல் போனதாலோ என்னவோ, தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவளது உயிர் பிரிந்தது.’ ….மேலும் பேச முடியாமல் அவரது குரல் கம்மிப் போனது. தமயந்தியின் புகைப்படத்தை அவர் டேபிளில் வைத்த போது, அந்த அரங்கமே அழுது தீர்த்தது.

சற்று நேர மெளன அஞ்சலிக்குப் பின்னர், வைதேகியிடம் வந்தவர்….’தமயந்தியை நீங்கள் மன்னித்து விடுங்கள். ப்ளீஸ். அறியாத வயதில், பக்குவப்படாத பருவத்தில், உணர்ச்சி மிகுந்து சிலவற்றைப் பேசி விடுவதுண்டு. மனம் முதிர்ச்சி அடையும் போது, ஒரு காலத்தில் நடந்ததெல்லாம் உப்புப் பெறாத விஷயமாகி விடும்! உங்களிடம் பேசாமல் இருந்ததற்காக நிறையத் தருணங்களில் அவள் மனம் வருந்தியதுண்டு! உங்கள் நட்பைப் பொக்கிஷமாக எண்ணி, உங்களுக்குக் கொடுப்பதற்காக அவள் வாங்கி வைத்த பரிசு இது! ஏற்றுக் கொள்ளுங்கள்.”..

அவர் தந்த பார்சலில் ‘எனது இனிய வைதேகிக்கு’ என்று முத்து முத்தாக எழுதி, வைதேகி தமயந்திக்காக வாங்கியிருந்த அதே நீல வண்ணப் பட்டுப்புடவை கனத்தது! அவர்கள் இருவரின் ஒருமித்த எண்ணங்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் தேர்ந்தெடுத்த அந்தப் புடவையில் கூடத் தெரிந்தது.

‘ஒ! என் தமயந்தி எங்கும் போகல….நான் அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கேன்….இப்போ வந்துவிடுவாள்!”.. உடம்பை இரண்டாய் மடித்து, இதயம் குமுற, வெடித்துச் சிதறும் வைதேகியின் அழுகுரல் எனக்குக் கேட்கிறது….உங்களுக்கு?

– தமிழ் முரசு (சிங்கப்பூர்) – ஜனவரி 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *