கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 3, 2024
பார்வையிட்டோர்: 332 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

தீக்குச்சியைக் கிழித்து இதயத்திலே சூடு போட்டது போல வலித்தது அவள் போட்ட நிபந்தனை. நிபந்தனை என்னவோ சிறிதென்றாலும் கடுமையானதாகவே அவனுக்கு இருந்தது. அவனுக்கு மட்டுமல்ல எவனுக்கும் இது சீற்றத்தையே கொடுக்கும். மாறனுக்கும் சங்கீதாவுக்கும் மணவாழ்கை ஆரம்பித்து பதின் மூன்று வருடங்களைத் தாண்டி விட்டிருந்தாலும் இன்று தான் அவள் முதன் முறையாக இப்படிச் சொல்லியிருக்கிறாள்.

அப்படிச் சொல்ல எது? அல்லது யார்? இவளைத் தூண்டியது என்பது தான் இப்போதைக்கு அவனுக்குள் உள்ள மிகப் பெரிய கேள்வியாகும்.

மாறனின் மாமியோ அல்லாவிட்டால் வேப்பிலைச் சாமியோ யார் தான் இதற்கான காரணம் என்று சரியாகத் தெரியவில்லை அவனுக்கு. விடை கிட்டாத இந்த வினாவுக்கு விடை தேடுவதென்பது சிவனுக்கு அடி முடி தேடிய கதையினைப் போல ஆகி விடும் என்பதனால் இப்போதைக்கு அவன் இதை மறக்கவும் கதை வாசிக்கும் உங்களுக்கு மறைக்கவுமே விரும்புகிறான்.

ஆதலால் அதைப் பற்றி இப்போதைக்கு விட்டு விடுவோமே. மணவாழ்க்கை ஆரம்பித்த காலத்தில் இருந்தே சங்கீதாவுக்கும் அவளது மாமியாருக்கும் இடையேயான உறவு என்பது எட்டாப் பொருத்தமாகவே இருந்து வருகிறது. சங்கீதாவுக்கு எவ்வளவு தூரத்துக்கு அவள் மாமியைப் பிடிக்கவில்லையோ அதைப் போல இரு மடங்கு தூரத்துக்கு மாறனின் அம்மாவுக்கும் சங்கீதாவை பிடிக்கவில்லை. மாமியார், மருமகள் முறுகல் என்பது உலகத்தில் ஒன்றும் புதுமையல்ல. மாமியாரின் அவதி இன்றி ஒரு மருமகள் உலகத்திலே இருந்திருப்பாள் என்றால் அவள் ஏவாளாகத் தான் இருக்கவேண்டும் என்பதே சங்கீதாவின் நிலைப்பாடாகும். முறுகலுக்கு மத்தியிலே ஒரு முறுவல் எனில் சமாளிக்கலாம். தவறின் முறுகல் மட்டுமே முற்றிலும் எனில் சந்நியாசம் நோக்கி வறுகுவதே மேலான தென்றாகி விடும். தகித்துக் கொண்டிருந்த வெயில் தனது குண்டூசி விரல்களால் இலை முதல் மலை வரை உள்ள ஒவ்வொன்றையும் குத்திக் காயப்படுத்திக் கொண்டிருந்தது. வியர்வைப் பூக்கள் முகத்திலே பூத்திருக்க வீட்டுக்குள் நுழைந்த மாறன் மின் விசிறியை உடனடியாகச் சுழல விட்டான். குடியிருந்த வீட்டுக்கு சாளரம் இல்லாத காரணத்தினால் இருட்டாகவும் வெளியை விட வெக்கை அதிகமாகவுமே இருந்தது. அவன் இருந்த நிலைமைக்கு அவனுக்கு இன்னும் அது எரிச்சலையே தந்தது. கண்களை மூடியபடி சோபாவிலே சாய்ந்தவன் ஏதாவது கடிதம் வந்ததா ? என்று தனது மனைவியை வினாவினான். வரவேண்டிய கடிதம் வரேல்லை, உங்கடை அம்மா மட்டும் தான் வந்தவ. அவனது அம்மா வீட்டுக்கு வந்த செய்தியினையும் அம்மாவுக்கும் அவளுக்கும் ஏதோ தர்க்கம் நடந்திருக்கிறது என்பதையும் சங்கீதாவின் முகமும் அகத்திலிருந்து வந்த சொற்களும் பிரதிபலித்தன. இரண்டு நாட்களாக மழிக்கப் படாது இருந்த முகத்தை சவரம் செய்து கொண்டிருந்தபோதுதான் கைப்பேசி ஒலித்துக் கொண்டது. நீண்ட நேரமாகியும் யாருமே அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியாத படியினால் மழிப்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஓடிச் சென்று கைப்பேசியை எடுத்தான். தம்பி நான் அம்மா கதைக்கிறன். மறுமுனையிலே அவனது தாயார். சொல்லுங்கோ அம்மா. கோயிலுக்குப் போட்டு வரேக்கை உன்னையும் பாத்திட்டுப் போகலாம் எண்டு நினைச்சன். உன்ரை வீட்டுக்குக் கிட்ட கொட்டாஞ்சேனைச் சந்தியிலை தான் நிற்கிறன். ஒருக்கா வந்திட்டுப் போறியே. கோயில் பிரசாதத்தையும் தந்து விடுறன்.

அங்கேயே நில்லுங்கோ உடனை வாறன் கைப்பேசியை அணைத்து விட்டு நிமிர்ந்தபோது எதிரே அவன் மனைவி. ஆரது அம்மாவே பேசியது யாரென்பதை உறுதிப்படுத்துவதற்கான வினா போலவே அது அவனுக்குப்பட்டது. அது தான் ஆதி முதல் அந்தம் வரை கேட்டுக் கொண்டு தானே இருந்தனீர் அவசர அவசரமாக உடையணிந்து கொண்டு வாசலை நோக்கிப் போனான்.

தம்பி வந்து வெளிக் கதவைப் பூட்டி விடு. பதினொரு வயதேயான மூத்த மகனை அழைத்தான் மாறன். உட்பக்கமாக கதவைத் தாளிட்டுப் பூட்டிக் கொள்வதற்காக மூத்தவனான பல்லவன் திறப்புக் கோர்வையுடன் வந்தான். இந்தாங்கோ ஒருக்கா நில்லுங்கோவன். உள்ளே இருந்து ஓடி வந்தாள் அவனது மனைவி. ஏன் ஓடி வருகிறாள் என்று அறியாத படிக்கு அவள் வருவதையே பார்த் துக் கொண்டு நின்றான் மாறன்.உங் கடை பேசை ஒருக்காத் தாங்கோவன். கையை நீட்டியபடி அவன் முன்னே சங்கீதா நின்றாள்.

ஏதாவது காசு தேவை போல என்று நினைத்தவன் பேர்சை அவளிடம் குடுத்தான். பேர்சை வாங்கித் திறந்தவள் அதற்குள்ளே இருந்த வங்கிக் கடன் அட்டையை மட்டும் வெளியே இழுத்து எடுத்து விட்டு உள்ளே இருந்த பணத்தாள்களை எல்லாம் ஒரு தடவை எண்ணிப் பார்த்தாள். பின்னர் மீண்டும் அவனிடமே பேர்சைத் திருப்பிக் கொடுத்தாள். என்னத்துக்கு அதை எடுத்தனீர். ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பிய போதும் அதை எல்லாம் அடக்கிக் கொண்டு மெதுவாகவே கேட்டான்.

நீங்கள் உங்கடை அம்மாவைத் தானே பார்க்கப் போறியள். அங்கை என்ன நடக்கும் எண்டு எனக்குத் தெரியும். அவ காசு கேப்பா நீங்கள் இருக்கிற காசை எல்லாம் எடுத்துக் குடுப்பியள். இன்னும் கொஞ்சம் அதிகமா கேட்டாவெண்டா வங்கிலையும் எடுத்துக் குடுப்பியள். அப்படி அவள் உரத்துப் பேசிக் கொண்டிருக்கும் போதிலே மூடிக்கிடந்த அயல் வீடுகளின் கதவுகளும் காதுகளும் திறந்து கொண்டன. நிறுத்தி நிதானித்தவள் மீண்டும் தொடர்ந்தாள். இனியும் உதுகளைப் பார்த்துக் கொண்டு சும்மா நான் இருக்கேலாது. என்ர வீட்டிலை இருந்து இனி ஒரு துரும்பையும் மற்றாக்களுக்கு குடுக்க விட மாட்டன். எல்லாரும் நன்றி கெட்டதுகள்.

வங்கிக் கடன் அட்டையைக் கையிலெடுத்துக் கொண்டு விசுக் கெண்டு வீட்டுக்குள்ளே நுழைந்தாள் சங்கீதா.

எதை அவன் தனக்குள்ளே மறக்க நினைத்தானோ, எதை அவன் உங்களுக்கு மறைக்க நினைத்தானோ அதைத் தான் அவள் இப்போது எல்லோருக்கும் தண்டாரா போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தாள். தனது மகனுக்கு முன்பாக நின்று கொண்டு மற்றவர்களுக்கு கேட்கும் படியாக. தனக்கும் இது போல ஒரு நாள் நேர்ந்து விடும் என்ற பயத்தினாலோ என்னவோ அவள் சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்களின் பதினொரு வயதேயான மகன் பல்லவன்.

– இருக்கிறம் 2008.10.05

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *