கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 12,912 
 

அம்மா”ஏதோ வேலையாக இருந்த சீதா திரும்பினாள்.

கிடார் வகுப்பிலிருந்து சரவணன் வீடு திரும்பி இருந்தான்.

“”காபி கொண்டு வரட்டுமா?”

“”வேண்டாம்மா. இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன்னு கேளு”

“”யாரையாவது லவ் பண்றியா?”

“”போம்மா நீ. ஒரு அம்மா தன் பையன் கிட்டே கேக்கற கேள்வியா இது? அதுக்கும் மேலே”

“”அதுக்கும் மேலே மேலே எனக்கு உத்தரம் தான் தெரியுது.”

”சரி நானே சொல்றேன். எங்க மாஸ்டர் இருக்கார் இல்லை””

“”உம்”

“”ரகுவரன் ஸார்”

“”உம்”

“”என்னம்மா நீ உற்சாகமா கேக்காம உம் உம்னு சொல்றே?”

“”சரி உற்சாகம்னா எப்படி? நானும் கிடார் வாசிசிட்டே கேக்கணுமா?”

சரவணன் சிரித்தான்.

“”எங்க மாஸ்டருக்கு நாங்க அதாவது சிஷ்யர்கள் சேர்ந்து விழா எடுக்கப் போறோம்”.

“”ஏது திடீர்ன்னு?”

ஒரே ஒரு தடவை“”அவர் சென்னையிலே இருக்கார் எங்களுக்காக மாதா மாதம் இங்கே வந்து டியூஷன் எடுக்கறார். கிடார் , வீணை கூட ரொம்ப நல்லா வாசிப்பார் தெரியுமா? நாங்க ஸ்டூடன்ட்ஸ் கிட்டத் தட்ட நூறு பேர் இருக்கோம். úஸா இந்த டீச்சர்ஸ் டேயிலே ஸாருக்கு ஒரு பிரம்மாண்ட விழா எடுக்கப் போறோம்.”

“”ரொம்ப சரி”

“”சரின்னா மட்டும் போதாது. சம்திங் தரணும்..”

சீதா சிரித்தாள்.

“”என்ன தரணும்?”

“”பணம் மணி.. துட்டு..”

“”எவ்வளவு?”

“”ஆயிரம் ரூபாய்”

“”அவ்வளவா?”

“”ஒரு வெள்ளி வீணை மினியேச்சர் சைஸிலே ரெடி பண்ணி ஒரு கண்ணாடி கேஸூலே வைச்சுத் தரப்போறோம்.. ஸ்பான்சர்ஸ் கிடைச்சா சாவனிர் கூடப் போடுவோம். எல்லாமே நாங்க சிஷ்ய கோடிகள் தான்..”

“”சிஷ்ய கேடிகள் இல்லையே?”

“”போம்மா நீ… அடுத்த வாரம் பணம் தரணும்.”

“”தந்துட்டா போச்சு”

“”அம்மா”

“”சொல்லு”

“”பங்ஷனுக்கு எல்லாரோட பேரண்ட்ஸூம் வருவாங்க ..நீயும் வரணும்”

தயங்கித் தயங்கிப் பேசினான்.

சீதா தன் மகனைப் பார்த்தாள்.

“”ஆமாம்மா நீ வெளியே எங்கேயும் போறதில்லை. எந்த பங்ஷனுக்கும் ஒத்துக் கொள்றதில்லை. அப்பா இறந்ததிலேயிருந்து நீ வீணையை எடுக்கறதே இல்லை. அந்த உறையைக் கூடக் கழட்டறதில்லை.

சரஸ்வதி பூஜை அன்னிக்கு மட்டும் பூஜையிலே வைப்பே எனக்கு பாட்டி நிறையச் சொல்லி இருக்கா. இப்போ பாட்டி இல்லை. இல்லேன்னா பாட்டியைக் கூட்டிட்டுப் போவேன். அதனால இந்த பங்ஷனுக்கு நீ வரணும். கட்டாயம் வரணும் . எங்க மாஸ்டரை நீ பாத்ததே இல்லை இல்லையா? எப்படி இருப்பார் தெரியுமா? “காவியத் தலைவன்’ சினிமாவிலே வர்ற பிருத்விராஜ் மாதிரி “ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ சினிமாவிலே வர்ற மோகன்லால் மாதிரி ..”

சீதா இடை மறித்தாள்

“”அப்பறம் யார் யார் மாதிரி ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜி… தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரி ..ஏன் உங்க மாஸ்டருக்கு தனி அடையாளம் ஏதும் இல்லையா? எல்லாமே மாதிரி தானா?”

“”போம்மா நீ..”

சரவணன் பொய்க் கோபம் காட்டிப் போய்விட்டான்.

சீதா யோசனையில் ஆழ்ந்தாள்.

ரகுவரன் யார் மாதிரி?

கட்டுக் குடுமியும் கழுத்தில் தங்கச்செயினும் நெற்றியில் விபூதிப் பட்டையுமாக அவன் அந்த ஊரில் அடி எடுத்து வைத்தபோதே சீதாவிற்கு ரகுவரனைத் தெரியும்.

“”நம்ம ஊருக்கு ரகுவரன்னு ஒரு சின்னப் பையன் வந்திருக்கான். பாட்டு வாத்தியாராம். என்னமாப் பாடறான் தெரியுமா? நல்ல குரல் வளம். வீணை வாசிக்க வேறே தெரியுமாம். கோவில்லே பாடினான். தஞ்சாவூரிலே சங்கீதம் கத்துண்டு வந்திருக்கான். நல்ல வித்வத். நல்ல பாடாந்திரம். ஏழைக் குடும்பம் பொழப்பைத் தேடி இங்கே வந்திருக்கான். அவன் அம்மா கால்லே விழாத குறையா யாராவது டியூஷனுக்கு ஏற்பாடு பண்ணினா தேவலைன்னு அழுதா. நாங்க எல்லாம் சேந்து ஒரு முடிவுக்கு வந்துட்டோம். நம்ம ஸ்கூல்லே தினமும் சாயங்காலம் ஒரு மணி நேரம் ரகுவரன் மியூஸிக் டியூஷன் எடுப்பான் . இஷ்டப்பட்டவா வரலாம். ஆரம்பப் பாடம், அடுத்த பேட்ஜ் இப்படி பேட்ஜ் பிரிச்சுக் கத்துத் தருவான். சனி, ஞாயிறு லீவு நாட்கள்லே காலைலே இருந்து சாயங்காலம் வரை பாட்டுக் கிளாஸ். அந்த அந்த வகுப்புக்கு ஏத்த மாதிரி ஸ்டூடண்ட்ஸ் வரலாம்”

இவள் தந்தை ஊருக்குப் பெரிய மனுஷர். செல்வாக்கு உள்ளவர்.

ரகுவரன் வகுப்பு ஆரம்பமானது.

பெண்களும் பையன்களுமாய் கிட்டத் தட்ட ஐம்பது பேர்..

கண்களில் நீர் மல்க ரகுவரனின் தாய் இவள் தந்தைக்கு நன்றி தெரிவித்தாள்.

நமஸ்கரித்தாள்.

“”இதெல்லாம் வேண்டாம்மா.. பொண் குழந்தைகள் பழகற இடம். ரகுவரனை பவ்யமா நடந்துக்கச் சொல்லுங்கோ. அது போதும்”

“”உங்க பேருக்கு களங்கம் ஏற்படுத்த மாட்டான் என் புள்ளை”

முதல் நாளன்று இவள் வெற்றிலை பாக்குத் தட்டில் பழங்களுடன் குரு தட்சணையாக நூறு ரூபாய் நோட்டை வைத்து நமஸ்கரித்தாள்.

ரகுவரன் சற்றே ஒதுங்கி நின்று அவள் நமஸ்காரத்தை ஏற்றுக் கொண்டான்.

சுருதி சேர்ந்தது.

ஆரம்பப் பாடம். சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம் கீதம் என்று படிப்படியாக முன்னேறினாள்.

அன்று வகுப்புக்கு இவள் சற்று முன்னதாகவே போய்விட்டாள்.

“”யாரும் வரலியா ஸார்?”

“”அதான் நீ வந்துட்டியே?”

“”இன்னிக்கு என்ன பாடம்?”

“”நேத்தைய பாடமே உனக்கு சரியா வரல்லை.. அதுக்குள்ளே என்ன புதுப் பாடம்?”

“”ஒரே பாடமா… போரடிக்குது ..”

ரகுவரன் சிரித்தான்.

அவன் சிரித்தபோது கண்களும் சிரித்தன. வரிசைப் பற்கள்.

துரிதகதியில் பாடும் போது சில சமயம் அவன் குடுமி அவிழ்ந்து விடும்..

அதைக் கட்டியபடி அவன் சிட்டை ஸ்வரங்கள் பாடுவான்.

இவளுக்குச் சிரிப்பு வரும்.

ஒரு நாள் தனிமையில் கேட்டாள்.

“”அது எதுக்கு ஸார் குடுமி? அதோட நீங்க அவஸ்தைப் படறதைப் பாத்தா பாவமா இருக்கு. பேசாம கிராப் வைச்சுக்கோங்கோ. இன்னும் அழகா இருப்பேள்.”

ரகுவரன் சட்டென்று திரும்பினான்.

“”அப்பறம் என்ன ஸ்வரம் ஸார்?”

“”சுஸ் ஸ்வரமா இருக்கணும் அபஸ்வரமா இருக்கக் கூடாது.. வர வர நீ தப்புத் தப்பா தாளம் போடறே”

“”இல்லே ஸார் நான் சரியாத்தான் போடறேன். நீங்க தான் லேட்டா தாளத்தை ஆரம்பிக்கறேள்”

இப்படி ஆரம்பமானது தான் அந்த உறவு.

அதன் பிறகு…எப்போது கூட்டம் குறைவாக இருக்கும் என்று கணக்குப் போட்டு சீதா வகுப்புக்கு போக ஆரம்பித்தாள்.

“”சீதா கீர்த்தனை வந்தாச்சு ராகங்கள் சொல்லித் தரணும். தனிப் பயிற்சி வேணும்..” என்று ரகு அவளைத் தனிமைப்படுத்தினான்.

தனிப் பயிற்சி ஆரம்பமானது.

“”இந்தத் தடவை திருவையாறு உற்சவத்துலே நீ பாடறே. அதுக்கு ப்ராக்டீஸ் பண்ணு. ஆரம்பப் பாடகாளுக்கு நிறைய நேரம் ஒதுக்க மாட்டா. ஒரு கீர்த்தனை… கொஞ்சம் நிரவல் ஸ்வரம். நான் உனக்கு கஷ்டப்பட்டு சிபாரிசு செய்து சான்ஸ் வாங்கித் தரேன். என் பேரைக் கெடுத்துடாதே”

இவள் கனவுகளில் மிதந்தாள். கூட்டம். கைத் தட்டல். தொடரும் கனவுகள்.

“”அம்மா”

கனவு கலைந்தாள். வந்தது சரவணன் தான்.

“”என்னம்மா ஒரு வாரமாகப் போறது. பணம் ரெடி பண்ணிட்டியா?”

“”உம்”

“”விழா எப்படி தெரியுமா? இது ஒரு மாதிரி ப்யூஷன் மியூஸிக். “கணாண்ணாம்த்துவா கணபதிம்’ அப்படீங்கிற விநாயகர் ஸ்துதியுடன் ஆரம்பிக்கறோம். மேடையிலே கிதார், வீணை, வயலின், தபேலா, மிருதங்கம், டிரம்ஸ் எல்லாம் இருக்கும். ஸார் தான் வீணை. இந்த ப்யூஷன் மியூஸிக்குக்கு ஐடியா கொடுத்ததே ஸார் தான். ஸார் ஒரு சகலகலா வல்லவர் தெரியுமா?”

சகலகலா வல்லவர் உண்மை தான்.

திருவையாறு உற்சவத்தில் பாடி கைதட்டு வாங்கிய அனுபவம். அதைத் தொடர்ந்து சில நாட்கள் தன் தந்தையின் நண்பர் வீட்டில் தங்கி தினம் தினம் ரகுவரனுடன் கச்சேரிகள் கேட்ட அனுபவம்.. எத்தனை எத்தனையோ அனுபவங்கள்.

அதன் பின் ஊர் திரும்பினார்கள். அன்று..

ரகுவரனின் தாய் இவர்கள் வீடு தேடி வந்தாள்.

“”இந்த ஊர்லே அடி எடுத்து வைச்ச நேரம் என் புள்ளைக்கு மெட்ராஸ் மியூஸிக் காலேஜிலே வேலை கிடைச்சிருக்கு. நாங்க கிளம்பறோம். சொல்லிண்டு போக வந்தேன். நீங்க எல்லாம் பண்ணின உதவியை மறக்க மாட்டேன்”

செய்தி கேட்டு இவள் தலை தெறிக்க பாட்டு கிளாஸூக்குப் போனாள்

வகுப்பறை பூட்டிக் கிடந்தது..

“இனி சங்கீத வகுப்புக்கள் இல்லை’ என்கிற அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது.

ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாள்.

அப்பா சொன்னார்.

“”ரகுவரன் வந்திருந்தான். அவனுக்கு சென்னையில் வேலை கிடைச்சுடுத்தாம். நீ தான் எங்கேயோ போயிட்டே. அவசரமாக் கிளம்பிப் போனான். போய் லெட்டர் போடறதா சொன்னான். நான் இப்பவே அவன் கிட்டே சொல்லிட்டேன். உன் கல்யாணத்துக்கு அவன் கச்சேரி தான்னு சொல்லிட்டேன். சரிதானே?”

அப்பா கேட்டார்.

ஒரு பெண் தன் கணவனின் இதய ராணி ஆகாமல் போகலாம்.

ஆனால் அவள் என்றென்றும் தன் தந்தைக்கு இளவரசி தான்.

இவள் தலை ஆட்டினாள்.

இந்த ஆட்டத்துடன் தான் முதலிரவு அறைக்குள்ளும் நுழைந்தாள்.

இவளைப் பெண் பார்த்து சம்மதம் சொன்னான் விவேக்.

தாய்க்கு ஒரே பிள்ளை. திருமண நாளன்று ரகுவரனுக்கு டெல்லியில் கச்சேரி இருந்தது.

தன்னால் வர முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து வாழ்த்துத் தந்தி அனுப்பி இருந்தான்.

இவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

விவேக்கிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட முடிவு செய்தாள்.

முதலிரவு அறையில் கையில் பழத் தட்டுடன் நுழைந்தாள்

விவேக்கை நமஸ்கரித்தாள்.

இதே போல் முன்பும் ஒரு முறை பழத்தட்டுடன் ரகுவரனை நமஸ்கரித்தது நினைவு வந்தது.

விவேக் இவளை எழுப்பித் தன்அருகில் அமரச் செய்தான்.

கொஞ்சம் நோஞ்சானாக இருந்தான். அதிகம் படித்துவிட்டால் இப்படித் தான் உடம்பு தேறாது.

“”உன் கிட்டே ஒரு உண்மையைச் சொல்லணும்” விவேக் ஆரம்பித்தான்.

“”நானும்..” இவள் ஆரம்பித்தாள்.

“”இரு முதல்லே நான் சொல்லிடறேன்”

இவளுக்கு மகிழ்ச்சி. இவனிடமும் ரகசியம் இருக்கிறது. யாரையாவது லவ் பண்ணி இருப்பான். விவேக் ஆரம்பித்தான்

“”நான் ஒரு ஹார்ட் பேஷண்ட். எனக்குத் திருமணமே பண்ணக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார். இல்லற சுகத்தை அனுபவிச்சா நான் செத்துடுவேன்னு டாக்டர் சொன்னதையும் மீறி என் அம்மா சொல்ல சொல்ல கேட்காம இந்தக் கல்யாணத்தை நடத்தி இருக்கா.. இது ஒரு தாயோட பேராசையா? பாசமா? எனக்குத் தெரியல்லை.. நான் ஒரு பொம்மை. மரப்பாச்சிக் கல்யாணத்துலே பெண்ணுக்குப் பக்கத்திலே இருக்கிற ஒரு பிரதிமை நான். என்னை ஏற்றாலும் புறக்கணித்தாலும் நான் எதுவும் சொல்ல மாட்டேன். இனிமே நீ சொல்ல வந்ததைச் சொல்லு”

இவள் அவனைப் பார்த்தாள்.

திருமணத்துக்குப் பயந்து ஓடிய ஒருவன்.

திருமணத்தை எதிர் கொண்டு சாவைச் சந்திக்கத் தயாராக வந்த ஒருவன்.

இவள் ஆரம்பித்தாள்.

“”நான் உண்மையைச் சொல்லிடறேன், நான் ஒருத்தரைக் காதலிச்சேன்.

ஆரம்பத்துலே காதல் பரிசுத்தமாத் தான் இருந்தது. ஆனா ஒரு நாள் அழுக்கு பட்டுடுத்து. அந்த அழுக்கு கருவா உருவா.. என் கர்ப்பத்துலே”

கதறி அழுதாள். இவள் பாடிய சங்கீதத்தில் அபஸ்வரம் தட்டிய நாள்

ஆசானாலும் திருத்தமுடியாத அபஸ்வரம். இருவரும் இணைந்தே பாடிய அபஸ்வரம். அறுந்த வீணையிலிருந்து எழுந்த அபஸ்வரம். சுருதி கலைந்த தம்பூராவின் கர்ண கடூர ஓசை. பேர் கெட்டுவிடக் கூடாது என்று இருவருமே கெட்டுப் போன நாள். களங்கப் பட்டுப் போன நாள்.

யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத ரகசியம். ஏக காலத்தில் சங்கீதத்திலும் வாழ்விலும் தோற்றுப் போன அனுபவம்.

அழுதபடி தன் கதை முடித்து நிமிர்ந்தாள்.

விவேக்கின் வாயோரத்தில் ரத்தப் புள்ளிகள்..

விவேக்கும் தன் கதையை முடித்திருந்தான்.

வீழ்ந்தது வீழ்ந்தபடி கிடந்தால் அது சடலம்.

வீழ்ந்த பின் எழுந்தால் அது சரித்திரம்.

இனி எழுந்தாள். கண்ணாடி முன் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

தலைப் பூவைப் பிய்த்து எறிந்தாள். நெற்றிப் பொட்டை கலைத்துக் கொண்டாள். கேசத்தைக் கலைத்துக் கொண்டாள். எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம்

விவேக்கின் கால்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

கதவு திறந்தாள்.

ரகுவரனின் பாராட்டுவிழா.

பெயர்போன வீணை வித்வான். வெளிநாடுகளில் கூட பேரும் புகழும் பெற்றவன். டி.வி.யில் பல நிகழ்ச்சிகள் தந்தவன். புகழின் உச்சியில் இருப்பவன். ஊரே திரண்டு வந்திருந்தது.

பிரம்மாண்டமான காரில் ரகுவரன் வந்து இறங்கினான். மெல்லிய மேளச் சத்தம்.

டிவி காமிராக்களும் மீடியாக்களும் பத்திரிகைக்காரர்களும்..

ரகுவரன் மீது ப்ளாஷ் வெளிச்சங்கள் வீழ்ந்தவண்ணமிருந்தன.

நிகழ்ச்சி அமைப்பாளர் ஓடிக் கொண்டிருந்தார்.

கச்சேரி முடிந்ததும் அடுத்த கச்சேரிக்கு தயார் பண்ண வேண்டும். இல்லையென்றால் ரகுவரனுக்குக் கோபம் வந்துவிடும்.

அவன் கேட்ட பிராண்ட் சைட் டிஷ் எல்லாம் தயாராக இருக்கவேண்டும்

அவர் கவலை அவருக்கு.

நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. ஆங்காங்கே ரகுவரனை வாழ்த்திப் பேனர்கள். சில பேர் அதற்குக் கீழே நின்று செல்பி எடுத்துக் கொண்டார்கள்.

ரகுவரனுக்கு ஆளுயர மாலையை நாலைந்து சிஷ்யர்களாகப் போட்டார்கள்.

வீணை மாடலை சீடர்கள் வழங்கியபோது தேவலோகத்தலிருந்து பூமாரி பொழிவதைப் போல் பூக்களின் வர்ஷிப்பு.

ரகுவரன் நெகிழ்ந்து போய் இருப்பது தெரிந்தது.

பட்டாஸூ சத்தம் பத்தாவது வரிசையில் அமர்ந்தபடி சீதா இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சங்கராபரணக் கதாநாயகி மாதிரி திரைப்படத்தின் நாயகி தன் பிள்ளையைத் தன் குருவிற்கு சமர்ப்பிப்பாள்..

இவளோ தன்னையே சமர்ப்பித்தவள்.

எல்லோரும் கைதட்டினார்கள். ரகுவரனின் ஏற்புரை முடிந்துவிட்டதா?

என்ன சொன்னான்? இவளைப் பற்றி சொன்னானா?

கூட்டம் கலைய ஆரம்பித்துவிட்டது. மைக்காரர்கள் செட்டைக் கழட்டிக் கொண்டிருந்தார்கள்.

மேடையில் சிலர் ரகுவரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

சரவணன் ஓடி வந்தான்.

“”வாம்மா வா. நாமளும் மாஸ்டரோட போட்டோ எடுத்துக்கலாம்”

இவளை பிடித்து இழுத்தபடி சரவணன் மேடைக்கு ஓடினான்.

ரகுவரன் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்.

“”சரவணன் எங்கே? நல்ல சிஷ்யன். கெட்டிக்காரன். கற்பூர புத்தி. அவனைத் தான் என் கலையுலக வாரிசாக அறிவிக்கப் போறேன்”

அதோ சரவணன்..

சிலர் அடையாளம் காட்ட ரகுவரன் பார்க்கிறான்.

ரகுவரனுடன் சீதா.

“”நீங்க தான் தப்புத் தப்பா தாளம் போடறேள்”

“”தினமும் ஒரே பாடம் தானா போரடிக்குது ஸார்”

சீதா மெல்ல இவன் அருகே வருகிறாள். நமஸ்கரிக்கிறாள்.

இவனுக்கு மட்டும் கேட்கும்படியாக மெல்லக் கூறுகிறாள்.

“”இவன் உங்க கலையுலக வாரிசு மட்டுமில்லை உங்களோட நிஜ வாரிசே இவன் தான்”

ரகுவரன் திகைக்கிறான். ஒரே ஒரு தடவை நடத்திய பாடத்தில் பிறந்த ஜன்ய ராகமா இவன்?

தலை சுற்றுகிறது. நெஞ்சில் ஏதோ வலி..

சரவணனின் கையைப் பிடித்துக் கொண்டு, சீதா மேடையை விட்டு இறங்குகிறாள்.

ரகுவரன் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறான்.

– மார்ச் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *