கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 8,481 
 

சந்தானத்திற்கு ஊருக்குப் போகிறோம் என்று சொன்னவுடன் மனது ஒரு பக்கம் குதியாளம் போட்டாலும் சட்டென அத்தை மகன் சிவாவின் நினைவு வந்தவுடன் மனதில் இருந்த மகிழ்ச்சி மொத்தமும் வடிந்து போனது.

சொந்த பந்தங்களின் ஏச்சுகளும் பேச்சுகளும் ஆச்சி, தாத்தாவின் மனதைப் புண்படுத்திய நினைவுகள் நெஞ்சின் ஓரம் அலைக்கழித்தன. தாத்தாவின் கம்பீரமான முகமும் மீசையும் நேர்த்தியான உடற்கட்டும் குரலும் அவனுக்குச் சிறுவயதிலிருந்தே நிரம்பப்பிடிக்கும். அப்படிப்பட்ட தாத்தா தன் மகனுக்குக் குழந்தை பிறந்தவுடன் நிலைகுலைந்து போனார். யார் செய்த பாவமோ? இந்தப் பிறவியில் நானும் என் மனைவியும் எந்தப் பாவமும் செய்யவில்லை. போன பிறவியில் ஏதாவது பாவம் செய்துவிட்டோமோ? மனதுக்குள்ளிருந்த கலக்கம் அவரைத் தூங்கவிடாமல் கலங்கடித்தன. அவரது உடலும் உள்ளமும் சோர்ந்து போனது.

சொந்த பந்தங்களிடம் துடுக்குத்தனமாய்ப் பேசும் தாத்தாவின் பேச்சுக் குறைந்து போனது. சிவா பிறந்த கொஞ்ச நாள் நன்றாக இருந்தான். ஆச்சியின் வளர்ப்பில் வளமாகவே இருந்தான். கருகருவென்ற முடியும் சிவந்த நிறமும் காண்பவரின் கண்ணைக்கவரும் முகமும் வீட்டுக்கு வந்த எல்லோரும் தூக்கிக் கொஞ்சினர். அவனது குழந்தைப் பருவம் சிறப்பாக இருந்தது. எனக்கு எதுவும் விகல்பமாகப் படவில்லை.

சிவா எட்டுமாதக் குழந்தையாக இருந்தபோது மாமா குடும்பத்தோடு வெளியூருக்குச் சென்றார். அதன் பிறகு சிவாவுக்கு அடிக்கடி பிக்ஸ் வந்து மருத்துவமனைக்குச் சென்றதாக மாமா மூலம் தகவல் அறிந்து குடும்பத்தார் அனைவரும் கவலை கொண்டோம்.

நான்கு வயதுக்கு மேல்தான் சிவாவை மாமா ஊருக்குத் தூக்கி வந்தார். சிவா வந்தவுடன் மத்த பிள்ளைகள் மாதிரி இயல்பாகப் பேசமால் ஊ…ஊ என்று கத்திக் கொண்டு பாட்டுப்பாடுவது போல் ராகமிட்டுக் கொண்டும் இருப்பதைப் பார்த்து அம்மா பதறிப்போய் ஆச்சியிடம் கேட்டாள்.

“என்னதாம்மா ஆச்சு இவனுக்கு”

“என்னத்த சொல்லச் சொல்ற. பிறந்தவுடன் குழந்தை அழுகல என்று சொல்லும்போதே எனக்குச் சந்தேகமா இருந்துச்சு. இங்கே இருந்தவரை நல்லாதான இருந்தான். இப்ப இயல்பான பிள்ளைங்க மாதிரி தெரியல. பேசமாட்டேங்கிறான். வெளிய போறத சொல்லத் தெரியல. ஆனா நாம எது பேசுனாலும் புரிஞ்சுக்கிறான்.”

என்று கூறிய ஆச்சியின் வார்த்தைகள் அம்மாவிற்கு வருத்தத்தைக் கொடுத்தன. “ஏம்மா ஆஸ்பத்திரில காண்பிக்கலாம்ல” என்றாள்.

“உங்கண்ணனும் காண்பிச்சுக்கிட்டுதான் இருக்கான்.பிள்ளைக்கு மனவளர்ச்சியில்லனு டாக்டர் சொல்லிட்டாங்களாம். அடிக்கடி பிக்ஸ் வந்து பிள்ளைய பாடாய்ப்படுத்துது போல” என்றாள் ஆச்சி.

எப்பொழுதும் விளையாடிக் கொண்டே இருக்கும் சிவாவைக் கண்காணித்துக் கொண்டும் அவனோடு விளையாடிக் கொண்டும் பொழுதைப் போக்குவேன். அம்மா அவனைக் கொஞ்சினால் என்றால் அம்மாவின் மடியின்மீது வந்து படுத்துக்கொள்வான். அம்மா அவனின் தலையைக் கோதிவிடுவாள். சிவா மாடிப்படியின் மீது ஏறினான் என்றால், ஏறாதே என அதட்டும் அம்மாவின் சொல்லை மீறி மாடியில் ஏறிவிட்டு அவளைப் பார்த்துச் சிரிப்பான். அம்மாவும் அவனின் கன்னத்தைக் கொஞ்சி சிரிப்பாள். சிவாவுக்கு நாம் பேசுகின்ற வார்த்தைகள் புரிகிறது என்பதையறிந்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

சிவாவின் குறையைப் பார்த்து அவனுக்கு எதனால் இந்தக் குறை ஏற்பட்டது என்ற ஆராய்ச்சியில் சொந்தபந்தங்கள் இறங்கினர். தாத்தாவின் வழியில் யாரும் இப்படி இல்லை. எனவே அத்தை வழியில்தான் ஏதாவது கோளாறு இருக்கவேண்டும் என்று பேசினர். எனக்கும் அம்மாவுக்கும் கூட அது உண்மையென்றே தோன்றியது.

சிவாவைக் குணப்படுத்தவே முடியாது என்ற நிதர்சனமான உண்மை எல்லோரையும் பாதித்தது. சிவாவுக்குப் பத்து வயதிற்கு மேல் ஆனபோதும் உடல்நறுங்கிப்போய் இன்னும் பேசமுடியாமல் குழந்தை போல ராகம்போட்டு அவனது மொழியில் பாடிக்கொண்டும், கத்திக் கொண்டும் இருப்பது யாருக்கும் தொந்தரவு இல்லையென்றாலும் அவனது முரட்டுத்தனம் சில சமயங்களில் வெளிப்பட்டது. கோபம் வரும்போதெல்லாம் சுவற்றில் தலையை முட்டிக்கொள்ள ஆரம்பித்தான். மாமா அவனை அதட்டினார் என்றால் அழ ஆரம்பித்துவிடுவான். இதனால் அவனையே கவனித்துக் கொண்டு பொழுதைப் போக்கும் அத்தையின் செயல் ஆச்சிக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. கிடைக்காத ஒன்றுக்காக ஏங்குவதை விட கிடைத்த செல்வமான இரண்டாவது பிள்ளையைப் பொறுப்போடு அத்தை வளர்ப்பதில்லை என்பது ஆச்சியின் பெருங்குறை.

குறைசொல்வது மாமியாரின் குணம் என ஊர் உலகம் நினைத்தாலும் ஆச்சியின் எண்ணம் சரியானதுதான் என்று எனக்குத் தோன்றியது. ஒரு நாள் ஆச்சி கோபத்தில் அம்மாவிடம்

“இப்படி ஒரு பிள்ளை இருந்து என்ன பயன்? இது செத்துப்போனால் கூட பரவாயில்லை. அவள் அடுத்த குழந்தையையாவது ஒழுங்காக வளர்ப்பாள்” என்று கூற,

“ஏன் இப்படிப் பேசுகிறீர்கள். இப்படியெல்லாம் பேசாதீர்கள்” என்று என் அம்மா கண்கலங்கினாள்.

“இல்ல அவனை ஏதாவது ஹோம்ல சேர்த்துவிடலாம்..ல. எதுக்குமே ஒத்துவரலன்ன எப்படி” என்றாள் ஆச்சி.

குழந்தைகளால் பெற்றோருக்கும் மற்றோருக்கும் பயன் இருக்கிறதோ இல்லையோ, பிறந்த குழந்தை இறந்துபோகவேண்டும் என்று எந்தப் பெற்றோரும் விரும்புவதில்லை. மனிதநேயமுள்ள யாரும் விரும்புவதில்லை. பிறந்த குழந்தை குறையோடு பிறக்கும்போது குழந்தை மட்டுமல்லாது குடும்பமும் சேர்ந்து அத்துன்பத்தை அனுபவிக்கிறது.

நாட்கள் செல்லச் செல்ல சிவா வளர்ந்து பெரியவன் ஆனான். ஆனால் எந்த முன்னேற்றமும் அவனிடம் தெரியவில்லை. மாமா இவனை நினைத்துக் கவலையிலேயே குடித்துக் குடித்து இறந்து போனார்.

சிவாவுக்கு இருபது வயதானபோது ஒரு நாள் அதிகாலையில் அத்தை சிவாவை எழுப்பினாள். எந்த உணர்வுமில்லாது அசைவின்றிக் கிடந்த சிவாவின் சடலம் எல்லோரையும் தூக்கிவாரிப்போடச்செய்தது. தூக்கத்திலேயே இறந்து போன சிவாவின் மரணம் எங்களுக்கு ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அழகும் கலங்கமில்லாத சிவாவின் முகமும் இன்னும் என் கண்களுக்குள் நிழலாடுகிறது.

சிவாவைக் காரணம் வைத்து எந்த வேலைக்கும் போகாமல் இருந்த அத்தை இப்பொழுதும் காரணத்தைத் தேடிக்கொண்டு சோம்பேறியாய் பொழுதைப் போக்குகிறாள். சிவாவின் நிலையைக் கூறித் திட்டிய ஆச்சியை, அவன் இறப்புக்கும் அவள்தான் காரணம் என்பதுபோல, எல்லோரும் வைது இப்பொழுதும் சாபம் விடுகின்றனர். சிவாவைக் காரணம் காட்டி தாத்தாவைக் கெக்கலிப்பு செய்த சொந்த பந்தங்களும் ஊரும் ஊமையாகிப் போனது.

– காற்றுவெளி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *