ஒரு சந்தேகத்தின் நன்மை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 125 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

காற்றில் சாய்ந்த வாழையைப் போல, அவள் சாய்ந்து கிடந்தாள். வகிடெடுத்த தலைமுடி, கைகளில் உடைந்து போன வளையல்கள். எந்தவிதக் கோரமும் இல்லை அலங்கோலம் இல்லாமல் அசந்து தூங்கியவள் போல் மீனாட்சியின் உடல் கிடந்தது.

வழக்கப்படி ஒப்பாரி வைக்கும் கிழவிகள் கூட, வழக்கத்துக்குப் புறம்பான அந்தச் சாலைக் கண்டு அஞ்சியவர்கள் போல், மூலையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்கள். மீனாட்சியின் அம்மா மட்டும் “அட, கடவுளே! என்னைக் கொண்டுக்கிட்டு போயிருக்கக் கூடாதா? என் மவதானா கிடைச்சா?” என்று புலம்பிக் கொண்டிருந்தாள். ஒரே ஒரு பெண் மட்டும் மீனாட்சியின் காதோடு உரசிக் கொண்டிருந்த காலி டம்ளரை எடுத்து வைத்துக் கொண்டு, “கொலைகாரப் பாவிப்பய மவனே, நீ விளங்குவியாடா? உன் அக்கா தங்கச்சிக்கும் இந்த மாதிரி வராதா?” என்று கேவிக் கேவி அழுதாள்.

வீட்டிற்கு வெளியே, ஆண்கள் திரண்டு நின்றார்கள். சிலர் வாதமடக்கி மரத்திலிருந்து பத்துப் பதினைந்து கம்புகளைச் செதுக்கி, குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு, மீனாட்சியின் கடைசிப் பயணத்துக்கு தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

ஆம்பிள்ளைகள் கூட்டத்தில் அச்சந்தரும் நிசப்த்ம், எப்படி அவள் இறந்திருப்பாள் என்பதை, மீனாட்சியின் அண்ணன் உதிரமாடன் சொன்னதில் இருந்து, அவர்கள் புரிந்து கொண்டார்கள். என்றாலும், ஒவ்வொருவருக்கும் தெரிந்த அந்த ரகசியத்தை, அவர்களால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. உதிரமாடன் மாட்டுத் தொழுவத்தில் கல்தூணில் தலையைச் சாய்த்துக் கொண்டு பித்துப் பிடித்தவின் போல் கிடந்தான்.

வெளியூர்க்கார சொந்தக்காரர் ஐயாசாமி, துஷ்டி கேட்பதற்காக வந்தார்.

“நேத்து தாய, வயக்காட்டில் பார்த்தேன். அடிச்சி கொன்னாக்கூட ஆறு மாசம் ஆகும். எப்படி இறந்துட்டா?” என்றார் ஐயாசாமி.

கூட்டத்தில் ஒருவர் பதிலளித்தார்.

“மீனாட்சி, மூணு மாசமா இங்க இருக்காதது உமக்குத் தெரியுமல்லா…?”

“தெரியும். நான் தான் அவ புருஷனை முந்தா நாளுப் பாத்து சத்தம் போட்டேன். அப்பன் பேச்சைக் கேட்டுக்கிட்டு ஆடாதல: நகைப் பாக்கியை உதிரமாடன் போடாம போகமாட்டான்’னு புத்திமதி சொன்னேன். நாளைக்குப் போயி மீனாட்சிய கூட்டிக்கிட்டு வரப்போறேன், மாமா’ன்னு எங்கிட்ட அவன் சொன்னானே.”

“அந்த அநியாயத்தை ஏன் கேக்கிறீரு? அவ புருஷன் நேத்து ராத்திரி வந்தான். ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்காங்க. காலையில் ஒண்ணா காபி சாப்பிட்டிருக்காங்க. அவா காபி சாப்பிட்டவுடனே, அந்தப் பய பக்கத்து ஊருக்குப் போயிட்டு வந்துடுறேன், தயாராய் இரு’ன்னு சொல்லிட்டுப் போயிருக்கான். அரை மணி நேரத்துல செத்துட்டா. காபி டம்ளரை முகந்து பாத்தா, ஒரே வாடையாய் இருக்கு.”

“நீர் சொல்றதைப் பார்த்தா…”

“சொல்றதைச் சொல்லிப்புட்டேன். புரிஞ்சிக்கிடும்.”

“வே, அந்தப் பய. அப்பன் பேச்சைக் கேட்டு, அட்டியல் போடணும்னு சொல்லி, அவள இங்க விட்டுட்டுப் போறது எல்லாப் பயலுஞ் செய்யறதுதான். அதுக்காகக் கட்டின பெண்டாட்டிய கொல்லுவானா?”

“ஏன் மாட்டான்? அய்யா அட்டியல் கேக்குறார்னு சொல்லி இங்க அவளை விட்டது. கம்மா ஒரு சாக்கு வேணுமுன்னு அந்தக் கிழவன சந்தியில இழுக்கிறான். அந்தப் பயலுக்கு நம்ம மீனாட்சி பிடிக்கலையாம்.”

“ஏனாம்?”

“அந்தப் பய ஒரு சினிமாவை ஒன்பது தடவ பாப்பான்னு ஒமக்குத் தெரியும். மீனாட்சி சினிமாக்காரிங்க மாதிரி ஸ்டைலா இல்லியாம். ‘முன் கொசுவம்’ வச் சிக் கட்டிக்க மாட்டேனுட்டாளாம். இப்போ பட்டினத்துல இருக்கிறவங்க போடுறதுகளே, பிராவோ, பருந்தோ அதை வாங்கிக் கொடுத்தானாம். அவள் அதைத் தூக்கி எறிஞ்சுட்டாளாம். அன்னைக்கே அந்தப் பொண்ண அடி அடின்னு அடிச்சு இங்க கொண்டு வந்து விட்டுட்டான். கம்மா வெளில மெய்க்கிறதுக்கு நகைப் பாக்கின்னு சொல்லுதான்.”

“நீரு என்னதான் சொல்லும்.நாம் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்திடக் கூடாது. விஷங்குடுத்து கொன்னுருப்பான்னு உடனே சொல்றது தப்பு.”

“நீரு ஒண்னு ஆவுடையானுர்ல, சவுடையாங்குட்டம் வகையறாவுல போயி, இந்தப் பய, ஒரு பொண்ண கட்டிக் குடுக்கும்படி கேட்டிருக்கான். அதுக்கு அவங்க, ‘ஒன் பெண்டாட்டி செத்தா போயிட்டா. எங்க பொன்ன குடுக்கிறதுக்குன்னு சொல்லி இருக்காங்க.”

“அதனால ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக, மீனாட்சியை கொன்னுட்டான்னு சொல்றீரா? நீரு சொல்றபடி நடந்திருக்கலாம். ஆனால், இப்பவும் சொல்றேன். கண்ணால பாக்குதும் பொய்யி: காதால கேக்குதும் பொய்யி: தீர விசாரிக்கதே மெய்யி. விசாரிக்காம, நீங்க பாட்டுக்குப் பேசாதீங்க.”

கல்தூணில் சாய்ந்து கொண்டிருந்த உதிரமாடன், சட்டென்று எழுந்து வீட்டுக்குள் போனான். இடங்கொள்ளாமல் இருந்த கூட்டத்திற்குள் இருந்து, அவன் தங்கையான பத்து வயதுச் சிறுமியை, பரபரவென்று இழுத்துக் கொண்டு வந்து கூட்டத்திற்கு மத்தியில் நிறுத்தினான். “தாத்தா, நீங்களே…இவள விசாரியுங்கோ” என்றான்.

ஐயாசாமி விசாரணையைத் துவக்கினார்:

“ஏய். லச்சுமி, நடந்ததை நடந்தபடியாகச் சொல்லனும். நேத்து ஒன் அத்தான் எப்போ வந்தான்? சொல்லும்மா…அழாமச் சொல்லு.”

“ராத்திரி எட்டு மணிக்கு.”

“அக்கா என்ன சொன்னா?”

‘அத்தானப் பாத்து இப்பதான் கண்ணு தெரிஞ்சதான்னு சொல்லிட்டு, சுவர்ல தலையை வச்சி அழுதாள்.

“அப்போ. வீட்ல யாரும் இருந்தாங்களா?”

“நான் மட்டும்தான் இருந்தேன்.”

“சரி, அக்கா அழுதிச் சில… ஒன் அத்தான் என்ன பண்ணுனான்?”

“அக்காவோட தோளப் போயி பிடுச்சி அவரு பக்கமாகத் திருப்பினாரு அப்புறம்…அப்புறம். அக்கா முகத்துல. அப்புறம்…”

“சரி போதும் நீ அப்போ என்ன பண்ணுனே?”

“எங்க அக்கா, ராமசாமி மாமா சந்தைக்குப் போயிட்டு வந்திருக்காரான்னு பாத்துட்டு வான்னு’ என்கிட்ட சொன்னா. அத்தான் பத்துப் பைசா குடுத்தாரு நான் வெளில போயிட்டேன்.”

“அப்புறம் நீ ராத்திரி சீக்கிரமா தூங்கிட்டியா?”

“இல்ல.”

“ஏன்?”

“அத்தானும் அக்காவும் போட்ட சிரிப்புல என்னாலே தூங்க முடியலே.”

“சரி, காலைலே அவங்க காபி சாப்பிடும்போது பாத்தியா?”

“நான் தான், கொண்டு போயி குடுத்தேன் அத்தான் ‘நீ போ புள்ளே’ன்னு என்ன துரத்தினாரு.”

“நீ போயிட்டியோ?”

“இல்ல”.

“ஏன் ?”

தயங்குகிறாள்.

“சொல்லுழா, வாய்க்குள்ளே கொழக்கட்டையா வச்சிருக்க?”

“நான் வெளியே போற மாதிரி போயி கதவு இடுக்குலே நின்னேன்.”

“எதுக்கு?”

“சும்மா.”

“தோல உறிச்சுப்படுவேன். எதுக்குக் கதவு இடுக்கிலே நின்ன?”

“அத்தான் அக்காள என்ன பண்ணுறார்னு பாக்கறத்துக்காக. ராமசாமி மாமா மவன் பாத்துட்டு வரச் சொன்னான். பத்துப் பைசா குடுக்கிறதாயும் சொன்னான்.”

“அத்தான் என்ன பண்ணுனான்?”

“அக்காவோட வாயில் காபி டம்ளரை வச்சாரு. உடனே அக்கா அதை எடுத்து அத்தான் வாயில் வச்சா…” சிறுமி சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.

“அத்தான் குடிச்சானா?”

“குடிக்கலே: அக்காளயே குடிக்கச் சொல்லிட்டு, அவள் கழுத்துல…”

“சரி, போவட்டும், காபி குடிக்கும்போது, அக்கா ஏதாவது. சொன்னாளா?”

“கடைசி முடுக்க கசக்குதுன்னு சொல்லித் துப்புனா.”

“அத்தான் அப்போ என்ன பண்ணுனான்?”

“துண்டை எடுத்து. அக்கா வாயைத் துடைச் சாரு.”

“அப்புறம்…”

“உடனே புறப்பட்டாரு. அக்கா அழுதாள். அதுக்கு அவரு, ‘நான் ஏமாத்த மாட்டேன். பக்கத்து ஊருக்குத் தான் போறேன். இன்னும் அரை மணிலே வந்திடுவேன். இன்னைக்கு முன்கொகவம் வச்சி கட்டியிருக்கது மாதிரி இருக்கணும். பிடிக்கலன்னு சேலய அவுத்தியானா? நான் வந்து முன்கொகவம் வச்சி கட்டுவேன்’னு சொல்லிட்டு வெளில வந்தாரு. அக்காளும் வெளில வந்தாள்.”

“போகும்போது எதுவும் சொன்னானா?”

“ஏன் ஒரு மாதிரி இருக்க? எதுவும் பண்ணுதான்னு கேட்டாரு. அக்கா, லேசா தலை வலிக்குது’ன்னு சொன்னா. பேசாமப் படு…நான் வந்துடுறேன்’னு சொல்லிட்டுப் போனாரு.

“வேற எதுவும் சொன்னானா?”

“இல்லே.”

“அவன் போகையில், திரும்பித் திரும்பிப் பார்த்தானா?”

“ஆமாம் பாதித் தூரம் போனவரு, திரும்பி வந்து, ‘உடம்புக்கு ஒண்னுஞ் செய்யலியே’ன்னு கேட்டாரு. அதுக்கு அக்காள். ஒண்னுமில்ல. நீங்க வரமாட்டியான்னு பயமா இருக்கு. நான் முன்கொசுவத்தை அவுக்கல. நீங்க சொல்றது மாதிரி பவுடர் வேணுமுன்னாலும் பூசிக்கிடுறேன். சீக்கிரமா வந்துடுங்க’ன்னு சொன்னாள்.”

“அப்புறம் என்ன நடந்தது?”

“கால்மணி நேரத்தில் அக்கா வாந்தி எடுக்கறது மாதிரி வாயப் பண்ணுனா. அப்புறம் கட்டுல்ல போயி, படுத்தாள். கையி, காலை வெட்டுனா. அம்மா வந்து, ‘என்னம்மா பண்ணுதுன்னு கேட்டா. அக்கா. அந்த தம்ளரையே பாத்தா அப்புறம் அதை எடுத்து சீலய வச்சி நல்லா துடைச்சா எண்னக் கூப்பிட்டு, அத்தான் வாறாராண்னு பாக்கும்படி சைகை காட்டினாள். நான் வெளில வந்தேன் அதுக்குள்ளே அம்மாவும் அண்ணாச்சியும் சத்தம் போட்டு அழுதாங்க “

ஐயாசாமி தாத்தா, தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். அதைப் பார்த்த கூட்டத்தில், ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

“பழி வாங்காம விடக்கூடாது. அந்தப் பய இங்க வரத்தான் செய்யுவான். அவனையும் வெட்டி, அவளோடயே புதைக்கனும்.”

ஐயாசாமி ஏதோ பேச வாயெடுத்தார் அதற்குள், கூட்டத்தில் ஒரு கொந்தளிப்பு. உதிரமாடன், ஆவேசம் வந்தவன் போல் வீட்டுக்குள் ஓடினான் பாளை அரிவாள் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தான். இதற்குள் அவனின் முதல் பங்காளிகள் ஆளுக்கொரு ஆயுதத்தை எடுத்துக் கொண்டார்கள். எல்லாரும் மீனாட்சியின் கணவன் வருகைக்காகக் காத்து நின்றார்கள். ஒருவர், “ஏல. நம்ம கிட்ட ஆயுதம் இருக்கறதைப் பாத்துட்டாமுன்னா அந்தப் பய ஒடிப்போயிடுவான். மறைச்சு வச்சிப்புட்டு பேசாம இங்க வந்து உக்காருங்க. அவன இன்னைக்கி தீட்டித் தள்ளிடனும்” என்றார்.

எங்கும், மயான அமைதி.

உதிரமாடன், சுமாரான வசதியுடையவன் அவன் அய்யா, அவனுக்குப் பதினைந்து வயசிருக்கும்போதே போய்விட்டார். பள்ளிக்குப் போவதை நிறுத்திவிட்டு வயல் வேலையில் அவன் இறங்கினான். பலர், பெண் கொடுக்க முன்வந்தார்கள். அவன் மறுத்துவிட்டான். தங்கை மீனாட்சியை நாத்தினாக்காரி’ கொடுமைக்குள் ஆழ்த்த அவன் விரும்பவில்லை. அவள் மீது உயிரையே வைத்திருந்தான். கொஞ்சம் முன்கோபக்காரன். ஒரு தடவை, பக்கத்துத் தெருக்காரர் ஒருவர் கையில் இருந்த அவத்திக் கீரையைப் பார்த்து விட்டு, அது தன் தோட்டத்துக் கீரையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அனுமானத்துடன் தெரு வழியாகப் போனவரின் துண்டைப் பிடித்து இழுத்துக் கொண்டே, “உள்ளதச் சொல்லாட்டா முப்பத்திரண்டு பல்லையும் தட்டிடுவேன். எங்க தோட்டத்துல தான பறிச்சே?”என்று அதட்ட, அதற்கு அந்த அவுத்திக்கீரை, “டேய், நான் பறிச்சதப் பாத்தியா?” என்று கெஞ்சங் குரலில் கேட்க, அடிக்கப் போன உதிரமாடன் கையை வந்து பிடித்தாள் மீனாட்சி “அண்ணாச்சி அவரு பறிச்சத நீ கண்ணால பார்க்கல. அவரு வேற தோட்டத்துலகூட பறிச்சிருக்கலாம். எதுவும் உறுதியா தெரியுறதுக்கு முன்ன, ஒருவர் மேல குத்தம் சுமத்தறது தப்பு. இந்த மாதிரி சமாசாரங்களைக் கடவுள் கிட்ட விட்டுடனும், அண்ணாச்சி” என்று சொன்னவுடனே, உதிரமாடன் பெட்டிப் பாம்பாகி, வீட்டுப் பெட்டிக்குள் அடங்கி விட்டான்.

அடிக்கடி தங்கையிடம், சின்ன விஷயங்களுக்கெல்லாம் கூட ஆலோசனை கேட்கும் உதிரமாடன், அவள் திருமணத்தை ஓர் உயிர்ப், பிரச்சினைக்குரிய பெரிய விஷயமாக நினைத்து, பக்கத்து ஊரிலேயே பணக்காரரான ஒரு வீட்டின் ஒத்தைப் பிள்ளை’க்கு ஆறாயிரம் ரூபாய் சுருளோடு ஐம்பது கழஞ்சி நகையோடு கொடுத்தான்.

நான்கு வேளை சாப்பிட்டுவிட்டு. மூன்று வேளை சினிமாப் பார்க்கும் மீனாட்சியின் கணவன் மருதராசாவுக்கு, மனைவி பிடிக்கவில்லை. அவளை, அடிக்கடி அடித்தான். ‘உன் அண்ணனை இன்னொரு செயினு போடச் சொல்லு’ன்னு சொல்லி அடிக்கடி பிறந்தகத்துக்கு அனுப்பி வந்தான். உதிரமாடன், மச்சான்காரன் கேட்பதை எல்லாம் கொடுத்தான். ஒரு தடவை கடைசியாக அவள் வந்தது ‘அட்டியல் கேட்டு.

உதிரமாடனுக்கு அப்போது நல்ல விளைச்சல். அட்டியல் போட்டிருப்பான். ஆனால், மீனாட்சியை வைத்து வாழ விருப்பமில்லாமல்தான் அவன் இப்படி அடித்து அலைக்கழிப்பதாக உணர்ந்ததும், தங்கையை அழைத்து உண்மையா?’ என்று கேட்டான். அவள் முதலில் மறுத்தாள். இறுதியில் கண்ணிர் விட்டாள். எனவே, நாலு பெரியவர்களை வைத்து விவகாரம் பேசி, கேட்பதை யெல்லாம் போட்டு, இனிமேல் அடிக்க மாட்டேன்’ என்று மருதராசாவிடம் உறுதி வாங்கிக் கொண்டு, தங்கையை அனுப்பலாம் என்று நினைத்தான். அதற்குள் மீனாட்சியோ, அவனை விட்டுப் பிரிந்து விட்டாள். இப்படி.

உதிரமாடன், பாளை அரிவாளை கூர் பார்த்துக் கொண்டான்.

துரத்தே இரண்டு தலைகள் தெரிந்தன. மருதராசாவும் இன்னொருவனும் ஓடிவந்து கொண்டிருந்தார்கள். மருதராசா. தலையில் அடித்துக் கொண்டே வர, அருகில் வந்தவன் அவனை அனைத்தபடியே வந்தான்.

“செருக்கி மவனுக்கு சினிமாப் பார்த்துப் பாத்து நடிப்பு வந்துட்டு. பொண்டாட்டியைக் கொன்னுப்புட்டு, நடிச்சிக்கிட்டு வாரான் பாரேன்!”

“ஏல, சத்தம் போடாதீங்க. பூனை மாதிரி இருங்க. அவன் வந்ததும் புலி மாதிரிப் பாயனும். இங்கேயே பொலி போட்டுடனும். ஏல.தருமரு. இன்னொரு ‘பாடை கட்டுடா!”

மருதராசா நெருங்கிக் கொண்டிருந்தான். அனைவரும் அவனைத் தாக்குவதற்குத் தயாரானார்கள்.

ஐயாசாமி தாத்தாவால் பொறுக்க முடியவில்லை.

“ஏய், சொல்லுறதைக் கேளுங்கடா அவன் குத்தம் செய்யாம இருந்தால், அந்தப் பாவம் நம்ம விடாது.”

“நீரு கம்மா கிடயும். அவன் போன அரைமணி நேரத்துல மீனாட்சி இறந்துட்டா; இதைவிட என்ன அத்தாட்சி வேனும்?”

“மாரடைப்புலகூட அவள் செத்திருக்கலாம்.”

“அப்படியே வச்சிக்கிருவோம்; மீனாட்சி எதுக்கு டம்ளரைத் தொடைக்கனும்?”

“புருஷன் ஆசையா வாயில வச்ச டம்ளர்னு அதை எடுத்திருக்கலாம்: அவன் மருந்து போட்டிருந்தா. மீனாட்சி ஏன் தங்கச்சிய, அத்தான் வாறாரான்னு வெளில நின்னு பாக்கச் சொல்லணும்? சொல்லுங்கடா.”

“மீனாட்சி தங்கச்சி பேக்குப் பய மவா; ஒண்னு கிடக்க ஒண்னு சொல்லுவா”

“நீங்க சொன்னதைத்தாண்ட நான் சொல்லுறேன். மீனாட்சிய்ோட தங்கச்சி பேக்குப் பய மவா, ஒண்னு கிடக்க ஒண்ணு சொல்லுவா.”

“அப்படின்னா இந்தப் பய, அவள கொல்லலன்னு சொல்றீரா?”

“நான் அப்படியும் சொல்லல. இப்படியும் சொல்லல. பொண்டாட்டியைக் கொல்லுதவன் காலையில வந்து எதையாவது போட்டுக் குடுத்துட்டுப் போவான். ராத்திரில் பொண்டாட்டிகிட்ட தூங்கிட்டு, காலையில கொல்ல மாட்டான். அப்படிக் கொன்னுருந்தால் அவன் கையி காலு அழுவி சாவான். நாம ஒரு நாளையிலே காரியத்தை முடிச்சிக்கக் கூடாது. அது அவனுக்கு உபகாரம் பண்ணுவது மாதிரி…”

“தாத்தா நீரு பூசி மெழுகாதேயும். அவனைக் கண்டங் கண்டமா வெட்டாட்டா, நாங்க உடல வச்சிருக்கதுல அர்த்தமில்ல.”

உதிரமாடன், அரிவாளை எடுத்துக் கொண்டான். எல்லோரும் ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டார்கள். ஐயாசாமி தாத்தா, செய்வதறியாது திகைத்து நின்றார்.

இதற்குள் மருதராசா, நெருங்கி விட்டான். கூட்டத்தினர், ஓர் ஆளைப் போல் எழுந்து போர்க்கோலத்துடன் நின்றனர்.

திடீரென்று, காட்சி மாறிற்று. உதிரமாடன், அரிவாளை ஓங்கிக் கொண்டு, ஆவேசம் வந்தது போல் கத்தினான்.

“என் உடன்பிறப்ப கொன்னுட்டு, நாக்கு மேல பல்லப் போட்டுக்கிட்டு வாறீயா? வா.உன்ன, இன்னைக்கு கண்டதுண்டமா வெட்டிப் போடுறோமா இல்லியாண்னு பாரு” இப்புடிக் கத்திக் கொண்டே உதிரமாடன் ஆவேசம் வந்தவன் போல் மருதராசாவை நோக்கி ஓடினான்.

தலையில் அடித்துக் கொண்டே ஓடிவந்த மருதராசா, திடுக்கிட்டு நின்றான். அடுத்த கணம் நிலைமை புரிந்துவிட்டது. உயிர் காக்கும் முயற்சியாகத் திரும்பி, கூட்டத்தினர் பிடிக்க முடியாத அளவிற்கு வேகத்துடன் ஓடினான்.

சற்று தூரம் துரத்திவிட்டு உதிரமாடன், சோர்ந்து போய் திரும்பி வந்து கல்தூணில் சாய்ந்தான். அவன் கண்களிலிருந்து கண்ணிர் பெருகி வழிந்தது.

கூட்டத்தினர் அவனை எரிச்சலோடு பார்த்தார்கள்.

“இந்தப் பயலுக்கு எப்பவும் அவசரம். அப்போ அவனுக்கு கேக்குற நேரமுல்லாம், குடுத்துக் கெடுத்தான். இப்போ, அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துட்டான்.”

“அவசரப் பட்டுட்டியே பேசாம இருந்திருந்தா, அவன் தானா சிக்கி இருப்பான். கோழிக்குஞ்ச நசுக்குறது மாதிரி நசுக்கியிருக்கலாமே அறிவு கெட்ட பயலே “

உதிரமாடனா, அறிவுகெட்ட பயல். அவன் தனக்குள்ளே துயரத்தோடு சிரித்துக் கொண்டான். ஐயாசாமி தாத்தா உபதேசம் செய்கையில், அவன் காதுகளில் மீனாட்சியின் குரல்-அவுத்திக்கீரை தகராறின் போது பேசிய பேச்சுக்கள் ஒலித்துத் தடுத்துவிட்டன. சட்டத்தில், ‘பெனிபிட் ஆப் டவுட் குற்றவாளிக்குச் சேர வேண்டும் என்று இருப்பதையே அறியாத நிலையில் .ஆனால், அதற்கு மூலமாக விளங்கும் இயல்பான பகுத்தறிவால், மீனாட்சி சொன்ன அந்த வார்த்தைகள், மருதராசாவைக் கொல்லக்கூடாது என்று உடனே தீர்மானித்து விட்டான். ஆனால் இப்போது, தான் மட்டும் அவனைக் கொல்லக்கூடாது என்று சொன்னால், மற்றவர்கள் ஒத்துக்கொண்டு கேட்பார்களா? அவனையே அடித்துப் போட்டுவிட்டு, மருதராசாவை அக்குவேறு ஆணிவேறாக ஆக்கியிருப்பார்கள் ஆகையால், மருதராசாவுக்கு வரப்போகும் அபாயத்தை உணர்த்தி, அவனைத் தப்பிக்க வைக்கும் உபாயமாகத் தான் உதிரமாடன், முன்னதாகவே குரல் கொடுத்துக் கொண்டு அப்படி ஆவேசமாக ஓடினான் என்பது யாருக்குத் தெரியும்?

திரும்பி வந்து தூணில் சாய்ந்து கொண்டு, கேவிக் கேவி அழுது கொண்டிருந்த உதிரமாடனின் செவிகளில் மீண்டும் மீனாட்சியின் குரல் கேட்டது.

‘நீங்க செஞ்சது ரைட்டு அண்ணாச்சி எதுவுமே உறுதியா தெரியுறதுக்கு முன்ன, ஒருவரு மேல குத்தம் சுமத்துவது தப்பு. அதுக்காக அவங்க மேலே பாயறது அதைவிடத் தப்பு. இந்த மாதிரி சமாசாரங்களைக் கடவுள் கிட்ட விட்டுடனும் அண்ணாச்சி..’

‘நான் அப்படித்தான் விட்டுட்டேன், . தங்கச்சி…’ என்று கேவினான் உதிரமாடன்.

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *