கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 23, 2023
பார்வையிட்டோர்: 3,056 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்குச் சிறுவயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. புக்ககத்தில் நிறைய மனிதர்கள். அவர்கள் என்னைக் கல்யாணத்தில் படுத்தி வைத்த பாட்டை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது!

என் கணவருக்கு அந்தக் குடும்பத்தில் தனி மதிப்பு இருந்தது. தமிழ்ப் பத்திரிகைகளுக்குக் கதை எழுதுவார். இதையெல்லாம் நினைத்தபோது எனக்குப் பெருமை அளவு கடந்து பொங்கிக்கொண்டிருந்தது. கல்யாணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மாடித் தாழ்வாரத்தில் திறந்த வெளியில் உட்கார்ந்துகொண்டிருந்தேன். என் மனம் அவரைப்பற்றித்தான் கனவு கண்டு கொண்டிருந்தது. அசைவில் பார்த்த அழகிய உருண்டை முகம்; விசாலமான நெற்றி; அதில் விழுந்து புரளும் கூந்தல்: கண்களின் குறும்புத்தனத்தை மறைக்கும் கண்ணாடி. கதர் ஜிப்பா. ‘நீ அதிருஷ்டசாலி!’ என்று என் மனமே எனக்கு நற்சாட்சிப்பத்திரம் அளித்தது.

இப்படி மெய்மறந்து இருந்தபோது என் கண்களைப் பின்புறமாக இரு கரங்கள் வந்து பொத்தி உணர்வு பெறச் செய்தன. குழந்தையின் கரங்கள் தாம்! வளை அணிந்த கரம். நீண்ட அழகிய விரல்கள். கைகளை விடுவித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தேன். அவருடைய சாயலாகவே சிறுமி ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள். அந்தப் பெண் ஆச்சரியத்தால் வாயைத் திறந்தவண்ணம் என்னைப் பார்த்துவிட்டு, ‘மன்னி, பாபு இதை உன்னிடம் கொடுக்கச் சொன்னான்’ என்றாள் ஒரு கடிதத்தை நீட்டியபடியே.

அவளைப் பிடித்து இழுத்து என் மடியில் உட்கார வைத்துக்கொண்டேன்.

“ஆமாண்டி கண்ணே! உன் பெயர் என்ன?” என்று கேட்டேன். “கல்யாணி” என்று கொஞ்சிக்கொண்டே சொல்லிற்று அந்தப் பெண்.

“அண்ணாவிடமிருந்து கடிதம் கொண்டு வந்தாயே, நான் இங்கே இருப்பது உனக்கு எப்படித் தெரிந்தது?”

கல்யாணி மோவாய்க்கட்டையில் கையை வைத்துக் கொண்டாள்.

“இது தெரியாதா மன்னி? பாபுதான் பார்த்துச் சொன்னான். அதோ மொட்டை மாடியில் எங்காத்திலிருந்து பார்த்தால் தெரியலையா மன்னி?”

அவள் பேச்சும் குலுக்கும் என் மனத்தை மகிழ்வித்தன.

“அண்ணாவைப் போய்ப் பெயரிட்டுக் கூப்பிடுகிறாயே. கூப்பிடக் கூடாதடி கண்ணே!” என்றேன்.

“பாபுவை அப்படித்தான் கூப்பிடுவேன். உன்னை வேண்டுமானால் மன்னி என்று கூப்பிடுகிறேன்” என்று பளிச்சென்று பதில் சொன்னாள்.

அவர் அனுப்பிய கடிதத்தைப் படிக்கக்கூட மனம் வராமல் அந்தப் போக்கிரிப் பெண்ணோடு பேசுவதிலேயே காலம் போய்விட்டது. அவள் கையில் இரண்டு லட்டுகளைக் கொடுத்து என்னை மீட்டுக்கொண்டேன்; என் உள்ளத்தை அல்ல.

***

பரிவுடன் கூடிய அவர் முகமும் கல்யாணியின் களங்கமற்ற முகமும் என்னைப் பிறந்தகத்தில் இன்பத்தில் ஆழ்த்தி வந்தன. கதை எழுதுகிறவர் அல்லவா?கடிதமும் கற்பனை ரசத்தில் தோய்த்தே எழுதப்பட்டிருக்கும். பாதி படிப்பதற்குள் ஒவ்வொரு சமயம் தலையை வலிக்க ஆரம்பித்துவிடும். கவரில் கொட்டை கொட்டையான எழுத்தில், ‘சின்ன மன்னிக்கு நமஸ்காரம்’ என்ற வரிகள் என் கண்ணில் பட்டுவிட்டால், அவர் கடிதத்தை வைத்துவிட்டு, அந்த இளம் இருதயத்தின் நிர்மலமான வாக்கியங்களைப் படிக்க ஆரம்பித்துவிடுவேன்.

“மன்னி, நீ சீக்கிரம் வந்துவிடு. நீயும் நானும் விளையாடுவதற்காகப் பாபுவைத் தொந்தரவு செய்து கேரம் வாங்கி வைத்திருக்கிறேன். என் சிநேகிதிகளிடமெல்லாம் உன்னைப்பற்றியே சொல்லியிருக்கிறேன் என்கிற வரிகளைப் படிக்கும்போது கண்கள் மளமளவென்று நீரைப் பெருக்க ஆரம்பித்துவிடும். பாபுவை அப்படித்தான் கூப்பிடுவேன் என்று அவள் உறுதியாகச் சொன்ன வார்த்தைகள் என் காதில் ஒலித்தன.

வருஷப் பிறப்பன்று அவருடன் அவள் வருவாள் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்த்ததற்கு மாறாக என் தாயார் இறந்து போய்விட்டாள். அந்தப் பெரிய துயரில் மாப்பிள்ளை அழைப்பை மறக்கத்தான் வேண்டியிருந்தது. என் மனம் மட்டும் கல்யாணியைக் கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தது. அப்பொமுது ஒன்பது, பத்து வயதாய் இருந்தவள் கொஞ்சம் உயரமாய் வளர்ந்திருப்பாள் என்று எனக்குள் எண்ணி மகிழ்ந்தேன். கல்யாணமாகி மூன்று வருஷங்கள் கழித்து அவர் என்னை அழைத்துப் போக வந்தார். அவர் வருவதற்கு முன்பே பல கடிதங்களில் கல்யாணியை அழைத்து வரச் சொல்லி எழுதியிருந்தேன். வாசலில் ‘டாக்ஸி’ வந்ததும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அவர் மட்டும் இறங்குவதைக் கண்டேன். மனம் சஞ்சலப்பட்டது.

“கல்யாணியை ஏன் அழைத்து வரவில்லை? எழுதியிருந்தேனே” என்று கேட்டேன்.

“என்னைவிடக் கல்யாணிதான் உனக்கு முக்கியமா?” என்றார் அந்த எழுத்தாளர்.

“இல்லை…..அவளைப் பார்க்கவேண்டும்போல் இருக்கிறது”.

“ஊருக்குப் போனால் பார்க்கத்தானே போகிறாய். அவள் நடுவில் வந்துவிட்டால் என்னைக்கூடக் கவனிக்க மாட்டாய் நீ ” என்றார் சிரித்துக்கொண்டே.

உண்மைதான். அவர் வீட்டில் காலடி வைத்தவுடன் ஆரத்தித் தட்டுடன் அவளே எதிரில் வந்தாள். பருவத்தின் மலர்ச்சியோடு ஒருவித வெட்கமும் அவள் முகத்தில் பரவியிருந்தது. அவள் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்த மேலாக்கு காற்றில் பின்புறம் பறக்க, “மன்னி!” என்று புன்முறுவலுடன் என்னைப் பார்த்தாள்.

“கல்யாணி!’ என்று அவர் கையை விட்டுவிட்டு அவள் கரத்தைப் பிடித்தேன்.

“மன்னி, உன்னைப் பார்க்காமல் எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா?” என்று என் தோளில் சாய்ந்து கண்ணில் நீர் துளும்பச் சொன்னாள் கல்யாணி!

“எனக்கும் அப்படித்தான் இருக்கிறது கல்யாணி! அண்ணாவோடு நீ ஏன் வரவில்லை?”

“பாபுவா அழைத்துக் கொண்டு போகிறவன்? அடே அப்பா! மன்னிகளெல்லாம் நல்லவர்கள் தாம். இந்த அண்ணாமார்கள் தாம் சுவர்க்கத்தைக் கண்டமாதிரி மயங்கிப் போகிறார்கள்” என்று கையை விரித்துத் தலையை ஆட்டி னாள்.

***

கதைகளையெல்லாம் ‘காப்பி’ செய்து அனுப்பும் வேலை என் தலையில் விழுந்தது. என் பின்புறம் மறைந்து வரும் கல்யாணியை நிர்த்தாக்ஷிண்யமாய் வெளியிலேயே நிறுத்திக் கதவைத் தாழிட்டுக்கொள்வார் அவர்.

”ஆமாம்; என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டாயே, கல்யாணியோடு விளையாடத்தானே?” என்று கேட்டார்.

“அவள் குழந்தைதானே?”

“நீயும் குழந்தைதான்! குழந்தையைப் போய்க் கல்யாணம் பண்ணிக்கொண்டேனே. என்னைத்தான் சொல்ல வேண்டும்.”

“இதோ பாருங்கள். உங்களிடம் எனக்கு அன்பு இல்லையா? என்னிடம் அளவுக்கு மீறி அன்பைச் செலுத்தும் அந்தப் பெண்ணை உதாசீனம் செய்ய என்னால் முடியவில்லை. அவள் உங்கள் தங்கைதானே?”

“என் தங்கையைப் பற்றி எனக்குத் தெரியும். இந்த இரண்டு கதைகளையும் ‘காப்பி’ செய்து அனுப்ப வேண்டும். தெரிந்ததா? நடுவில் கேரம் ஆடப் போனால் அது வெந்நீர் அடுப்புக்குப் போய்விடும்”.

புருஷர்களின் ஆக்ஞை பிரமாதமானது அல்லவா? ‘பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை’ யாகக் கதைகளை எழுத ஆரம்பித்தேன். கல்யாணி நாளடைவில் என்னைப்பற்றித் தவறாக நினைக்க ஆரம்பித்தாள்.

“பாபுவின் அறையிலேயே ஐக்கியமாகிவிடுகிறாயே மன்னி! நீ முதலில் இருந்த மாதிரி இல்ல” என்பாள்.

கல்யாணி அன்று மலர்ந்த புஷ்பம்போல் விளங்கினாள் குதிப்பும் சிரிப்பும் போய் லஜ்ஜைப்பட ஆரம்பித்தாள். அவள் அண்ணா எதிரில் வரக்கூட அவளுக்குப் பிரமாதமான வெட்கம். “கல்யாணிக்கு வயதாகி விட்டது பாபு.
உன் ஆபீஸில் நல்லவரனாகப் பாரேன்” என்று அம்மா தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள். கடைசியில் கல்கத்தாவில் வேலையாக இருந்த பிள்ளை ஒருவன் என் பொல்லாத கல்யாணியை ஏற்றுக்கொண்டான். மாப்பிள்ளை தீபாவளிக்கு வந்தபோது கல்யாணியை வெளியிலேயே பார்க்க முடியவில்லை.

“பார்த்தாயா அவளை? உன்னை என்னோடு தனியாகப் பேச விடமாட்டேன் என்றவள் அகத்துக்காரரைத் தனியாக விடமாட்டேன் என்கிறாள்” என்றார் இவர்.

தீபாவளி கழித்து மாப்பிள்ளை கல்யாணியைக் கூடவே அழைத்துக் கொண்டு போகவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார். ஊருக்குப் போகும் தினம் வந்தது. சிறுமியாய் என்னுடன் விளையாடிய கல்யாணி தலை குனிந்து என் அறைக்குள் நுழைந்தாள்.

“மன்னி, பாபு இல்லையா இங்கே? பாபுவுடன் பேசவிடாமல் உன்னை என்ன பாடு படுத்தி வைத்தேன்? இப்பொழுதுதான் தெரிகிறது மன்னி; பாபுவுக்கு ஆசை எவ்வளவு இருந்திருக்கும் என்று. அதற்காக உன் பேரில் கூடக் கோபித்துக்கொண்டிருந்தேன். அதையெல்லாம் மனத்தில் வைத்துக்கொள்ளாதே மன்னி” என்று கண்ணீர் வழியக் கூறினாள்.

“அசடே! அப்பொழுது நீ சிறிசு. உன் பேரில் கோபங்கூட வருமா கண்ணே?” என்றேன்.

“கல்யாணி!” என்று மாப்பிள்ளை கூப்பிட்டார். வெட்கத்தால் கல்யாணியின் முகம் சிவந்தது.

“மன்னியோடு விளையாடுகிறாளா?” என்றவாறு மாப்பிள்ளை வாசற்படி அருகில் வந்து நின்றார்.

“மன்னியோடு பேசுவது இன்னும் சில மணி நேரந்தான். உங்கள் தங்கையைக் கொஞ்சம் அடக்கி வையுங்கள். இல்லாவிட்டால் உங்கள் பாடு திண்டாட்டந்தான்” என்றேன்.

“போ மன்னி!” என்று என் வாயை இறுகப் பொத்தினாள்.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *