கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 1,706 
 

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கண்கள் காணும் சக்தியைப்பெறுமா, கைப் பிடித்த கட்டழகியைக் கண்ணாரக் காணும் நாள் வருமா என்று நான் மோனத்தவம் கிடந்ததெல்லாம் இதற்குத்தானா…?’

‘நீ எனக்கே சொந்தம். என்றென்றும் நீதான் என் துணை’

இப்படி நினைத்து இறுமாந்திருந்த என்னை ஏமாற்றிவிட்டு, என்னுடன் இணைந்திருந்த பந்தத்தை அகற்றிக்கொண்டு, பாசத்தை விலக்கிக்கொண்டு நீ பிரிந்து விட்டாய். இதற்கு எப்படி மனம் துணிந்தாய்?

இதோ, என் முன் சுருள் சுருளாய் விரியும் புகையின் ஊடே, உன் இனிமையான உருவமே தென்படுகிறது. எப்போதும் என் அருகில் நீ இருக்கிறாய் என்ற நினைவின் மிதப்பில் மனம் மலர்த் தெப்பமாய் அசைந்தாடுகிறது. உன்னைப்பற்றிய இனிமையான எண்ணங்களின் போதையில், நான் என்னையே மறந்திருக்கிறேன்.

‘சாருக்கு திடீரென்று பலமான யோசனை போலிருக்கு. பெண்ணின் கையிலிருக்கிறதை வாங்கி அக்கினியில் இடணும்…’

புரோகிதரின் குரலைத் தொடர்ந்து, என் கரங்களுடன் உரசிய மென்மையான ஸ்பரிசத்தை உணர்ந்ததும், திடுக்கிட்டுச் சுயநிலைக்கு வருகிறேன். முகையவிழ்த்துக் கொண்டிருக்கும் தாமரையை, குறுக்காக வைத்திருப்பது போல் இணைந்து, குவிந்திருந்த இரு மலர்க்கரங்கள் ஏந்தியிருந்த வெண்மையான சிறு துகள்களைத் தீயில் இடுகிறேன்.

‘பொரியிட்ட கைக்கு மோதிரம் உண்டா?… கேளடா உன் அத்தானை!.. விடாதே…’

பெண்களின் கூட்டத்தில் சிறு சலசலப்பு.

‘பொரியிட்டதற்காக மைத்துனனுக்கு ‘ஏதாவது’ தருகிறது வழக்கம்…’ புரோகிதரின் சிபாரிசு வேறு.

முகத்தில் புன்னகை வழிய என் எதிரே வந்து நின்ற சிறுவனை, என் விழிகள் வியப்புடன் அளவெடுக்கின்றன.

மைத்துனனா!

‘என்னடா பிரமிச்சுப் போயி ருக்கே?… தாலி முடியறத்துக்குன்னு அவா கொடுத்த சம்பாவனை அஞ்சு ரூபாயை அப்படியே திருப்பி விடு…’

அம்மாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. சிந்தனையிலிருந்து சிறிது சிறிதாய் விடுபட்டு செயலுக்கு வருகிறேன். ஓ!… இன்று, இப்போது, இங்கே எனக்கு ‘இரண்டாம் கல்யாணம்’ நடக்கிறது அல்லவா!

‘அன்று, நீ இருந்த இடத்தில் இன்று என் அருகே எவளோ ஒருத்தி…இனி அவளும் எனக்குச் சொந்தம். இந்த நியதி நியாயமானதுதானா?… இதற்கு நான் சம்மதம் தந்தது சரிதானா?…

‘அன்று, அக்கினி சாட்சியாக உன் கரம் தொட்டு, உன் சங்குக் கழுத்தில் தாலி அணிவித்த நான் தான், இன்று அதே அக்கினியைச் சாட்சியாகக் கொண்டு, இவளுடன் மணச் சடங்குகளில் கலந்துகொள்கிறேன்.

‘அன்று, மலர் மாரி பெய்ய, மங்கள கீதங்கள் முழங்க, புனிதமான மங்கலக் கயிற்றை உன் கோமளக் கழுத்தில் சூட்டுகையில்…

சம்பிரதாயத்துக்காக, மணமகனின் சகோதரி தாலி முடிவது என்பது, என் விஷயத்தில் சர்வ அவசியமாகிவிட்டது. தட்டுத் தடுமாறிக் கொண்டு நான் அணிவித்த அந்த பவித்திரச் சரடை, என் சகோதரிதான், உன் கழுத்தில் முழுமையாக முடிச்சிட்டாள்.

ஆம்: ஒளியிழந்திருந்த என் விழிகளினின்றும் அப்போது தெறித்த இருமுத்துக்கள், குனிந்திருந்த உன் சிரசில் சிதறியதை உணர்ந்த நீ, பதறிப்போய் அந்த விநாடி முதல், பிறரின் பரிகாசத் தைக்கூட சட்டை செய்யாமல், என்னையே கண்காணித்திருந் தாய் என்பதை, நம் முதல் சந்திப்பின் இனிமையான உரை யாடலின்போது உன் வாய்மூலம் அறிந்தேன்.

என் மனக்கலத்தில் துளும்பிக் கொண்டிருந்த மகிழ்ச்சியின் தெறிப்புக்கள் அவை என்பதை உணர்ந்ததும் நீதான் எவ்வளவு பூரிப்படைந்தாய் ?…உண்மையில் உன்னை அடைந்ததால் ஏற்பட்ட பெருமிதமும், உனக்கு நான் தகுதியற்றவனாயிற்றே என்ற மனச் சோர்வும் சேர்ந்து கலவை ட்ட இரு நீர்த்துளிகள் அவை என்பதை நீ அறிந்தால்…

இன்று…

மணச் சடங்குகளின் வழக்கமான வைபவங்களுக்கிடையே, என் கண்கள் உன்னையே காண ஆவலாய் ஏங்குகையில், என் அருகே எவளோ ஒருத்தி. இனி அவளும் எனக்குச் சொந்தம். இது எந்த நியாயத்தைச் சேர்ந்தது?…

புத்தொளி பெற்ற என் கண்கள், இதோ அருகிலிருக்கும் புது மனைவியைப் பார்க்க மறுத்து, உன் உருவையே தேடி அலைகின்றன. இந்தக் கணத்தில் என் விழிகள் காணத் துடிப்பது உன்னைத்தான். ‘சட்’டென்று எழுந்துவிடலாமா என்ற தவிப்பில் உள்ளம் அலைகையில், சடங்குகளின் நிர்ப்பந்தம், பம்பாத்தின் மேல் சுற்றிய சாட்டைக் கயிறாக என் மேல் இறுகுகிறது. புரோகிதரின் சொற்கள் என்னை ஆட்டுவிக்கின்றன.

‘…அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கவேண்டுமாம்…’

உன் தளிர்க் கரத்தைப் பற்றி அன்று தீயை வலம் வருகையில்…

எனக்குத்தான் எத்தனை தடு மாற்றம்!

அம்மி மேல் அழுந்திய உன் பாதத்தைத் தேடி, என் விரல்கள் அலைகையில் அழுகை குமுறும், மென் குரலில், ‘இதோ… இங்கே… பரவாயில்லை… கால் மெட்டியை நானே போட்டுக் கொள்கிறேன்… சும்மா பெயருக்கு இதெல்லாம் நடந்தால் போதும்…’ என்று நீ கூறியது என் செவியுள் ஒலிக்கையிலும்…

அருந்ததி பார்க்கும் சடங்கின் சமயம், சம்பிரதாயப்படி உன்னை நான், ‘அருந்ததி கண்டாயா…?’ என்று கேட்கவேண்டிய தருணத்தில்..

காணும் சக்தியை இழந்திருந்த நான்…

வானத்து அருந்ததியை ஞானக் கண்ணால் மட்டுமே பார்க்கமுடிந்ததை எண்ண, நான் கண நேரம் வேதனையால் துடிக்கையில்…

என் மனப் போராட்டத்தை ஊகித்தவளாய், இணைந்திருந்த என் கரத்தை இதமாக வருடிய நீ.

‘உங்கள் ஊனக் கண்களாக இதோ நான் இருக்கிறேன். இனி நீங்கள் வேறு, நான் வேறு அல்லவே…’

என்று மெல்லக் கிசுகிசுத்ததையும், நாம் பரஸ்பரம் சொல்லிச் சொல்லி, பரவசம் எய்திய இன்ப தினங்களை நினைக்கையிலும்…

இறும்பூது கொண்டிருந்த நான் தான், இன்று, உன்னையன்றி மற்றொருத்திக்கு என்னிடம் உரிமை அளிக்க முன்வந்திருக்கிறேன். என் புறக் கண்களுக்குக் கிடைக்க வெளியே மின்னல்கள் அகக் கண்களைத் தீய்த்து விட்டதோ!

பாசத்தின் நூலிழைகளில் சிக்குண்டு, உன் நினைவு என்னுள்ளும், என் நினைவு உன்னுள்ளுமாக ஒன்றியிருந்த நம்மைப் பலவந்தமாக பிரித்தது விதியா?…

இல்லை… உன் மதியா?…

‘… நீங்கள் அவசியம் மறுமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும்… எனக்காக இதற்கு நீங்கள் கட்டாயம் இணங்கித் தான் ஆகவேண்டும்…’

என்னிடம் உனக்கு இந்தப் பேச்சைத் தவிர எதுவுமே கிடைக்கவில்லையா?

அடிமேல் அடிபட்ட அம்மி நகரும் விந்தையைப்போல, உன் சொற்களின் வலிமைக்கு என்னை வளைந்துகொடுக்கச் செய்துவிட்டாயே?

உன்மேல் நான் வைத்துள்ள அன்பின்மேல் ஆணையிட்டு நீ என்னை இன்று, மற்றொரு பெண் ணுக்குத் தாலி கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கி விட் டாய். என் மீது நீ கொண்ட பேரன்பு காரணமாக நீ செய்த இரண்டாவது தியாகம் இது…

அப்போது…

உனக்கும் எனக்கும் திரு மணம் பேசித் தீர்மானித் திருந்த சமயம். ஆவணி மாதக் கடைசியில் நிச்சயித்த திரு மணத்தை, தை மாசம் வரை ஒத் தப்போட இடம் கொடுக்காத என் மனத்தின் பரபரப்பில், அம்மாவைக் கலந்துகொண்டு, ஐப்பசியிலேயே ஒரு நல்ல நாளில் நடத்திக் கொடுத்துவிட வேண்டும் என்று உங்கள் வீட் டாருக்குச் செய்தி அனுப்பர் னேன். சற்றே தயக்கம் காட்டிய உன் பெற்றோர் முடிவில் அதற்கு உடன்பட்டதும்…

என் இதயக் கலசத்தில் தேன் பெருக்கில் மிதந்து வந்த உன் நீலோற்பல விழி மலரைச் சுற்றிச் சுற்றி என் மன வண்டு ரீங்காரம் செய்துகொண்டிருந்தது.

லோசனா!

உனக்குத்தான் எவ்வளவு பொருத்தமான பெயர்!

உன் கஞ்ச மலர் விழிகளின் காந்த ஈர்ப்பில் மயங்கியவனாய், நெருங்க? வரும் மண நாளை நினைத்து நினைத்துப் பேராவலுடன் நான் காத்திருக்கையில்…

என் வாழ்வின் ஒளி உதயத்தை எதிர்நோக்கி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கையில்…

ஓரு நாள்…

போடியாய் அச்சம்பவம்…

ஆம். இடியின் தாக்குதல்தான் அது…

ஆங்கிலப் படம் ஒன்றின் இரவுக் காட்சிக்கு நண்பர்களுடன் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன். ஐப்பச அடை மழையின் உக்கிரம், சூலுண்ட மேகங்களின் வேதனைக் குமுறல்கள்; ஒளிச் சாட்டைகளாய்ச் சொடுக்கிய மீன்னல்கள். நடுச் சாமத்துக்கும் அப்பாற்பட்ட நேரம். வாகன வசதி கிடைக்காததால், கால்நடையாகவே வீடு திரும்பினோம். எதற்கும் அஞ்சாத காளைப் பருவம் அல்லவா?

அந்த மையிருளில், மழை வீடும் வரை எங்காவது தங்கயிருந்து விட்டுச் செல்லலாம் என்று நண்பர்கள் யோசித்தார்கள்.

‘ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி மெல்லப் போய்விடலாம். வீடு சமீபித்து விட்டது…’ என்று என் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து அனைவரும் முன்னேறினோம்.

‘மின்னும் வான ராணியின் பட்டாக் கத்திகள், அவ்வப் போது நமக்கு வழிகாட்டி விடும்…’ என்று நான், கொட்டும் மழையை லட்சியம் செய்யாமல் நடந்துகொண்டிருக்கையில்…

கோடானுகோடி சூர்யப் பிரகாசமாய் எழுந்த ஒரு மின்னலில்…

ஒரு விநாடி, வெள்ளிப் பரப்பாய்த் தெரிந்த பூமியை, வியப்புடன் ரசித்தேன். அடுத்த விநாடி…

இருள்; எங்கும் ஒரே இருள்… கன்னங்கரிய ராட்சத இருள் இறக்கைகளை விரித்துக்கொண்டு என் கண்களின் மேல் கவிந்தது. ‘ஏய், பாலு, ராமு சேகர்! என் கண்ணு… கண் போச்சுடா… இப்போ அடிச்ச மின்னல் என் பார்வையைப் பறிச்சிடுத்து…’

சேகரின் கையை உதறிவிட்டு, அலறியபடியே தரையில் சாய்ந்ததுதான் எனக்குத் தெரியும். எப்படியோ அவர்கள் என்னை அழைத்து வந்து அம்மாவிடம் சேர்ப்பித்தார்கள்.

‘மின்னுகிற சமயத்தில், கண்ணை மூடிக்கொள்ள மாட்டானோ ஒரு பிள்ளை…’ என்று அவள் துயரத்தால் விம்மிக் கதறினாள். பயன்?

செய்தியறிந்த உன் பெற்றோர், உன்னை எனக்குத் தர தீர்மானமாய் மறுத்தார்கள்.

‘கல்யாணத்துக்கப்புறம் கண் போயிருந்தால், என்ன செய்வோம் அப்பா!… மனதால் இவரை வாத்து, நிச்சயதார்த்தமும் ஆகிய பின்பு, இவர் மனைவி என்கிற உரிமையையும் மானசீகமாக ஏற்றுக்கொண்டு வீட்டேன். இனி இவருக்குத் துணையாயிருக்க வேண்டியது என் கடமை. வேறு ஒருவரை நினைக்கக்கூட என் உள்ளம் இடம் தராது…’

இப்படி உறுதியாகக் கூறி விட்டு, உற்றோரையும் பெற்றோ ரையும் விரோதித்துக்கொண்டு நீ என் கரம் பற்றினாய்.

‘கண்கள் போய்விட்டனவே என்று கவலையுறாதீர்கள். உங்கள் விழிகளின் ஒளி எங்கும் போய்விடவில்லை. என்னிடம் இருந்து அது உங்களுக்கு வழி காட்டும்…’ என்று கூறிய அன்பின் உருவமே!

வாழ்வின் பாதையில் வழி நடக்க எனக்கு இறுதிவரை துணையிருப்பாய் என்று எண்ணியிருந்தவனை இன்று வேறு ஒருவளுக்குத் துணையாக்கிவிட்டுத் தனி வழி பிரிய, நீ எப்படி மனம் துணிந்தாய்?

உன்னை எனதாக்கிக்கொண்ட அந்த ஓராண்டுக்காலம், என் இல்வாழ்வின் பொற்காலம் நீ காட்டிய ஒளி, என் பார்வைப் புலனின் சூனியத்தை நிறைத்தது. உன் உடைமைகளை எல்லாம் விற்று எனக்கு வைத்தியம் பார்த்துத் தோல்வியுற்றபோதிலும், நீ கடமையை மறவாமல் எனக்குச் சேவை செய்தாய்.

நம் மண வாழ்வின் ஆண்டு விழா வந்தது. குலதெய்வத்தின் கோயிலுக்கு அம்மாவுடன் நாம் சென்றிருந்தோம். என் நேத்திரங்களின் ஜீவ ஒளிக்காக நீ நெக்குருகிப் பிரார்த்தித்தாய். திரும்புங்கால் திடீரென வானம் குமுறியது. ஓராண்டுக்கு முன் நான் ஒளியிழந்த தினத்தைப் போல், ஊழிக்காற்றும், மழை மின்னலும், இடியும் பூதாகாரமாய்ச் சீறின.

அன்பு நண்பனின் கரம் பற்றி யிருந்த நான், இப்போது உன் அன்புக் கரத்தைப் பற்றியபடி அன்னையின் துணையுடன் வழி நடந்து கொண்டிருந்தேன். மூவருமே அவரவர் சிந்தனையின் படலங்களால் போர்த்தப்பட்டவராய்ப் பேச்சின்றி வந்துகொண்டிருக்கையில்…

திடீரென்று…

‘…லோசனா!… அம்மா!… மின்னல்… இப்போ ‘பளிச்’சினு… ஜோதி மயமாய்…’

நான் ஆர்ப்பரித்ததும்,

‘உனக்கு எப்படியடா அது தெரிஞ்சுது?…’

அம்மா வியப்புத் தாங்காமல் கூவ,

‘எனக்குப் பார்வை மீண்டு விட்டது அம்மா!… எடுத்தவனே கொடுத்துவிட்டான்…’ என்று ஆனந்தக் கூக்குரலிட்டேன். அந்த மழையிலும் உடனே உன்னைத்தான், கண் குளிரக் காண வேண்டும் என்ற ஆவல் எழ ‘…லோசனா! உன் பிரார்த்தனைக்குக் கைமேல் பலன்…லோசனா..’ என்று பூரித்தவனாய் உன்னை அப்படியே கட்டித் தழுவ, பரபரக்கும் மனதுடன் உன்னை நெருங்குகையில்…

‘உங்களை… உங்களை நான் பார்க்க முடியவில்லையே… ஒரே இருட்டு… வழியே தெரிய வில்லை… எங்கே இருக்கேள்?…’

கைகளால் துழாவியபடி நீ கதறுகையில், கல்லால் அடித்தாற்போல் என் இதயத்தில் கடும் வலி…

ஐயோ. லோசனா! எனக்குக் காணும் சக்தியைக் கொடுத்த அந்தப் பாழும் மின்னல் உன் பார்வைப் புலனில் ஊடுருவி… உன்னை ‘அந்தகி’யாக்கி…

என் விழிகளுக்கு ஒளி கொடுத்த தெய்வத்தின் வலிமைக் கரம், என் குல விளக்கின் ஒளியை அணைத்துவிட்டதே!

‘உங்கள் விழிகளின் ஒளி எங்கும் போய்விடவில்லை… என்னிடமிருந்து அது உங்களுக்கு வழி காட்டுகிறது…’ என்றாயே!

உன் ஒளியையும் சேர்த்துத் திரட்டி அர்ப்பணித்துத்தான் என் ஒளியை மீட்டுத் தந்தாயோ!

கண்கள் காணும் சக்தியைப் பெறுமா, கைப்பிடித்த கட்டழகியைக் கண்ணாரக் காணும் நாள் வருமா என்று நான் மோனத்தவம் கிடந்ததெல்லாம் இதற்குத்தானா?…

வெறுமையாகி விட்ட உன் விழி மலர்களிலிருந்து வெம்பனித் துளிகள், என் காலடியில் அர்ச்சிக்கையில் என் முதுகுத் தண்டுக்குள் மின்னல் நெளிந்தாற்போல் இருந்தது, பின் மண்டையுள் ஒரே பிரளயம்; துயரத்தின் அலைகள் மதில் மதிலாய் எழுந்து என்னுள் சரிந்தன.

லோசனா!

‘உன் கமல் லோசனங்களை மீண்டும் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தபோது பிரகாசமாக எறி்ந்துகொண்டிருந்த விளக்கின் திரியைத் தீடீரென்று உள்ளுக்கு இழுத்தாற்போல்…’

இருளடைந்துவிட்ட உன் இரு நயனங்களின் காட்சியில்..

ஐயோ லோசனா!…நான் பாவி… அன்றும், இன்றும் கொடுத்து வைக்காத மாபாவி!

அப்புறம்?…

அப்புறம் என்ன?

அடுத்த மாதமே நீ மற்றொரு அதிர்ச்சிச் சுடரை என்மேல் பொருத்தி எறிந்தாய்… ‘நீங்கள் மறுமணம் செய்துகொள்ளத் தான் வேண்டும்…’ என்று.

என்னுடைய அனுபவத்தின் மூலம், வைத்தியத்தால் உனக்குப் பார்வை மீளாது என்கிற குருட்டுத்தனமான ஒரு நம்பிக்கை, சிலந்தி இழையாய் உன் நெஞ்சுக்குள் கூடு கட்டியது. நடந்தவற்றுக்கெல்லாம் இந்த உன் திடீர்த் தாக்குதலில், நான் அதிர்ந்துபோனேன். உன் சொற்களே பூகம்பமாய் என் நெஞ்சப் பரப்பில், உனக்காக நான் உருவாக்கியிருந்த மாளிகையை ஆட்டம் காண வைத்துவிட்டதே!

உன்னிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன்; மன்றாடினேன்; நீ ஒப்புக்கொள்ளவில்லை.

‘கல்யாணத்துக்கப்புறம் அவர் கண் போயிருந்தால் என்ன செய்வோம் அப்பா?…’ என்று தந்தையிடம் வாதாடி அன்று குருடனை மணக்க நீ முன் வந்தாய்…

ஆனால்… இன்று நானோ?… ஆணுக்கொரு நீதி, பெண்ணுக் கொரு நீதி என்ற அநியாயத்தை அழிக்க சமூகம் முன் வந்த போதிலும், பெண்கள் தம்மையறியாமலேயோ, அல்லது தாமாகவே முனைந்தோ அதே நீதிக்குள்தான் அடங்கி விடுகிறார்கள் என்பதை மெய்ப்பித்துவிட்டாய்.

வழிவழியாய் வந்த, பாரதப் பெண்ணின் பண்பு, தியாகம், பொறுமை, அன்பு, வீரம் இவை ஐந்தும் திரிகளாகி, உன் இதயப் பிறையில், ஏற்றிவைத்த குத்து விளக்காய் சுடர் விடுகையில், அந்த ஒளியின் பவித்திரமான தேஜஸின் முன் நிற்க இயலாமல் என் ஆண் மனத்தி்ன் வைராக் கியமெல்லாம் ஓடி ஒளிந்து கொண்டதே!

‘உனக்காக, உன் மன் நிம்மதிக்காகவே நான் இதற்க்கு சம்மதிக்கிறேன்…’ என்று மே பூசப்பட்ட என் இல்லறத்தன் இரண்டாவது மாளிகை இன்று உருவாகிவிட்டது.

முடிவில் வெற்றிகண்டது நீ தான். ஆண் உள்ளத்தின் பலவீனம் பெண்மையின் பெருந்தன்மைக்கு முன் தலை குனிந்தது.

அன்றும், இன்றும் என் இல்லற தீபத்துக்கு ஒளி கொடுத்த சுடர் நீ.

தியாகத்தின் சுடர்… பெண்மையின் தெய்விக ஒளி.

– 17 நவ 1963, No: 42 – மித்திரன் வார இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *