கணுக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 6,696 
 

அம்மாவின் மடி நிறையக் காய், மடி பிதுங்கிற்று. ஆனாலும் அம்மாவுக்குத் திருப்தியில்லை. அவரைப் பந்தலின் இன்னொரு பக்கத்தில் ஏணியைத் திருப்பிப் போட்டாள்.

நாங்கள் பந்தலுக்கடியில் விளையாடிக் கொண்டிருந் தோம். நான், அம்பி, பாப்பா

எங்கள் தலைக்குமேல் காய் கொத்துக் கொத்தாய்த் தொங்கிற்று. அதுவும் இந்தத் தடவை சரியான காய்ப்பு: தினம் மாற்றி மாற்றி அவரைக்காய் கறி, அவரைக்கா புளிக்கூட்டு, அவரைக்காய் பொரித்த கூட்டு, அவரைக்காய் பருப்பு உசலி

அப்பா உள்ளேயிருந்து வந்தார், வழக்கப்படி வலது கையால் இடது விலாவைத் தடவிக்கொண்டும், தன்னுடம்பைத் தானே பார்த்துக்கொண்டும்.

“ஏண்டி – ”

அம்மா அப்பொழுதுதான் ஒரு காலை ஏணியின் முதல் படியில் வைத்திருந்தாள்.

“என்ன?”

“ரொம்ப இளைச்சுட்டேனாடி ?

அம்மா முகத்தில் புன்னகையரும்பிற்று.

“நல்ல நாளும் கிழமையுமா இன்னிக்காவது உடம்பைப் பத்திப் பேசாமல் இருங்களேன். சந்தோஷமாயிருப்போம்.”

அப்பாவுக்குத் தன்னுடம்பைப் பற்றி நினைப்பதிலும் பேசுவதிலும்தான் சந்தோஷம். ஏதாவது மருந்து சாப்பிட்ட வண்ணமிருப்பார். கண்ணாடியண்டை போய் கண்ணை இழுத்து இழுத்துப் பார்த்துக் கொள்வார். பக்கத்தில் நாங்கள் யாராவது இருந்தால், எங்கள் கண்ணையும் இழுத்துப் பார்த்துவிட்டுக் கசப்புடன் உதட்டைப் பிதுக்கிக்கொள்வார்.

“ஊ-ஹ-ம்: பிரயோசனமில்லை! வியாதியஸ்தனுக்குப் பிறந்தது வஸ்தாதாய்ப் பிறந்துவிடுமா?” என்று தன்னையே கேட்டுக்கொள்வார்.

வியாதியைக் கொண்டாடுவதிலேயே அவருக்கு ஒரு சந்தோஷம். அத்தனைக்கத்தனை அம்மா அவருக்கு எதிரிடை எதையுமே கொஞ்சமாய்ப் பண்ணவும் தெரியாது; கொஞ்சமாய்க் கொடுக்கவும் தெரியாது; சும்மாயிருக்கவும் தெரியாது. தோட்டத்தில் ஏதாவது கொத்திக் கிளறி, நட்டு, வளர்த்துப் பறித்துக்கொண்டிருப்பாள்.

இத்தனை நாளாயும் இப்பொழுது நினைக்கையிலும் என் அம்மாவின் தோட்டம் என் கண்முன் எழுகிறது. ஒரு மூலையில் ரோஜா- அப்பொழுதுதான் பதியம் போட்டது. அதை யொட்டினாற்போல் மல்லிகைச் செடி கொஞ்சம் எட்டி, தோட்டத்துச் சுவரை யொட்டினாற்போல் மாட்டுக் கொட்டில். அதில் “கல்யாணியென்று நாங்கள் ஆசையாய்ப் பேர் வைத்து அழைக்கும் எங்கள் பசு. சுத்த வெள்ளை. வலது தொடையில் மாத்திரம் உள்ளங்கை அகலத்துக்கு அழகாய் ஒரு கறுப்புத் திட்டு. அதற்கு எட்டியும் எட்டாத தூரத்தில் முளையில் புத்தம் புதிதாய்க் காளைக் கன்றுக்குட்டி அதற்கு என்ன பேர் வைப்ப தென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒரே துடி! துள்ளல்!

பந்தலின்மேல் படர்ந்த அவரையும் புடலும், நல்ல வெயிலில் தரைமேல் அழகான நிழற்கோலங்கள் வரைந்தன.

நாங்கள் எப்பொழுதும் அங்கேதான் விளையாடுவோம். வளர்ந்துகொண்டே வரும் இலைகளைத் தொட்டுப் பார்ப் போம். தொடாதேங்கோ பீடைகளா! இதோ வந்துட்டேன்.-” என்று அம்மா இரைவாள். நாங்கள் சிரிப்போம்.

ஒரு நாள் அம்மா அவரை இலை பஜ்ஜி பண்ணினாள். ருசியாயிருந்ததோ இல்லையோ, தமாஷாயிருந்தது. பஜ்ஜியைத் திறந்தால் நடுவில் இலை மாத்திரம் ஒட்டாமல் தளுக்காய், மினுக்காய், பச்சைப் பசேலென்று.

இந்தப் பந்தல், இந்தக் கொட்டில்- எல்லாமே அம்மா, தன் கையால், ஒருவர் ஒத்தாசையுமில்லாமல், தானே அமைத்தாள். அவளுக்கே அதெல்லாம் பிடிக்கும்.

இப்பொழுதுகூட அம்மாவின் சிரித்த முகத்தையும் அவளே ஒரு பசுப்போல், கொழகொழத்த சரீரத்துடன் தோட்டத்தின் நடுவில் பறித்த அவரைக்காய்கள் பிதுங்கும் மடியுடன் நிற்பதையும் நினைக்கையில் தொண்டையை என்னவோ பண்ணுகிறது. சாப்பிடும் சமயமாயிருந்தால் கையிலெடுத்த கவளம் வாய்க்குச் செல்லாது அந்தரத்தில் நிற்கிறது.

அம்மா பெயர் அன்னபூரணி.

“சொல்லேண்டி!” என்றார் அப்பா, தன் விலாவை அன்புடன் தடவிக்கொண்டே

“உங்களுக்கு உடம்பு ஒண்ணுமில்லே. போகி சொக்கப் பனையோடெ உங்கள் நோயும் போச்சுன்னு நிம்மதியா யிருங்கோ”

“அம்மா, அம்மா! பொள்ளா_ பொள்ளா-”
“சரிதாண்டா, போ!”- அம்பியின் அவசரமான அழைப்பைக்கூடச் சட்டை செய்யாமல், அம்மா அப்பாவுக்குத் தைரியம் கூறுவதில் முனைந்திருந்தாள்.

“நல்ல நாளும் கிழமையுமாப் பழசெல்லாம் வேண்டாம். ஒங்க மருந்து சீசாக்களுக்கும் பவுடர் பொட்டலங்களுக்கும் ஒரே முழுக்குப் போட்டுடுங்கோ. உடம்புக்கு ஒண்ணுமே யில்லேன்னு நெனச்சுண்டு வளைய வாங்கோ. ஒண்ணுமே யிருக்-”

“அம்மா, இதெப் பாரேண்டி- பொள்ளங்கா!”

“புடலங்காயாவது! காலமில்லாக் காலத்திலே-” என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே அம்மா திரும்பினாள்.

அம்பி சிரித்துக்கொண்டே சுட்டிக் காண்பித்தான். அவன் கைக்கு ஒரு சாண் எட்ட, நீளமாய்ச் சுண்டுவிரல் பரும்னுக்கு ஒரு புடலங்காய் தொங்கிற்று. பச்சைப் பசேலென்று அம்பி பக்கமாய் வளைந்து, நிமிர்ந்து முறுக்கிக் கொண்டு நெளிந்தது.

அம்மாவிடமிருந்து ஏதோ ஒரு வினோதமான சப்தம் கிளம்பி, அவள் மூச்சு கேவிக்கொண்டே போயிற்று. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அம்மா மூஞ்சியும் அதிலே சுழலும் கண்ணும் பயமாயிருந்தன.

இன்னமும் அந்தத் தோற்றத்தை என்னால் மறக்க முடியவில்லை. நான் மனம் சஞ்சலித்திருக்கையிலோ, குடும்பத்தில் ஏதேனும் அசம்பவம் நேரவிருக்கையிலோ, முன் அறிகுறியாக அம்மா என் கனவில், நாங்கள் அன்று அவளைக் கண்ட கோலத்தில் தோன்றிவிடுகிறாள். இருகைகளும் அடைத்த வாயும், வெளுத்த முகத்தில் பயங்கரத்தில் சுழலும் விழிகளும், மடிபிதுங்க அவரைக்காயுமாய் நிற்கிறாள்.

“என்னம்மா, என்னம்மா?” என்று நானும் பாப்பாவும் ஒன்றும் புரியாமல், கூடச்சேர்ந்து கத்துகிறோம். அப்பா, உஷ்” என்று எங்களைக் கையமர்த்தினார். பீதியால் நாங்கள் எல்லோரும் ஒண்ணாகி அந்தப் புடலங்காயையே பார்த்துக் கொண்டிருந்தோம். என்ன ஆச்சரியம்! அது தானே கழன்று, தரையில் விழுந்து, உயிரோடு சரசரவென ஊர்ந்துபோய் எட்டியிருக்கும் வாழைக்கன்றுகளிடையே மறைந்தது.

அம்மா ஒரு தாவுத் தாவி அம்பியை அப்படியே வாரிக்கொண்டாள். எங்கள் கல்யாணி கன்னுக்குட்டியை உடம்பெல்லாம் நக்கிக்கொடுத்து முகர்ந்து பார்ப்பதுபோல், அவள் மூர்க்கமாய் எதையோ தேடுவதுபோல் அம்பியை உடம்பெல்லாம் தடவிப் பார்த்தாள். அம்பிக்கு ஒரே வெட்கமாய்ப் போயிற்று. .

“எங்கேயாவது பட்டுதாடா கண்னே? சுப்ரமண்யா, என் வயத்துலே பாலை வார்த்தயா? அதற்குள்ளே சமாச்சாரம் பக்கத்திலே பரவிவிட்டது. என்னென்னவோ நினைத்துக் கொண்டு, ஒவ்வொருவராக வர ஆரம்பித்துவிட்டார்கள். அம்மாவை உபசாரம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

“என்னடீ அன்னபூரணி?”

“என்னடா அம்பி?”

அப்பா இதற்குள் சமாளித்துக்கொண்டுவிட்டார். “ஏண்டா, அம்பிவால்! சங்கராந்தியின் சக்கரைப் பொங்கலையும் வடையையும் கெடுக்க இருந்தையே எவ்வளவு சாமான் உன்னால் வீணாப் போயிருக்கும்! ஏண்டி, இவன் வாயைப் பிளந்திருந்தால், இவனுக்கு இப்போ புதைக்கிற வயசா, எரிக்கிற வயசா?”

– அம்மா சீறினாள். “போறுமே உங்கள் விகடம்!”

இந்தச் சந்தடியில் கன்றுக்குட்டி தும்பையறுத்துக் கொண்டு விட்டது. நான் ஒடிப்போய் அதன் வாலைப் பிடித்துக்கொண்டு கல்யாணியிடம் போகவொட்டாது தடுக்க முயன்றேன். ஆனால் அதன் பலம் என்ன! அப்பொழுது நான் குழந்தையில்லையா?

“விட்டுட்றா விட்டுட்றா!” என்று அம்மா கத்தினாள். ஆனால் அவள் அநுமதி கொடுக்கு முன்னரே அது என்னை மீறிவிட்டது. தாவிக் குதித்துக்கொண்டு தாயின் மடியில் மோதின வேகத்தில் கல்யாணிக்கு உடம்பெல்லாம் அதிர்ந்தது. மடிகூடச் சுளுக்கிக் கொண்டிருக்கும்.

கல்யாணி தன் கன்றுக்குட்டியை நக்கிக் கொடுத்தது. அம்மா அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஜலம் தளும்பிக் கன்னத்தில் வழிந்தோடியது. என்ன தோன்றிற்றோ, எதிரில் நின்றுகொண்டிருந்த என்னைத் தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டாள். நான் திமிறப் பார்த்தேன். முடியவில்லை.

எண்ணங்கள் போகிறபடி எழுதிக்கொண்டே போனால் எல்லையே இல்லை.

***

அம்மா என்னைக் கரும்பு வாங்கிவர அனுப்பினாள்.

சந்தைக்கும் வீட்டுக்கும் மூன்று மைலாவது இருக்கும்.

சாலை வழியெல்லாம் கரும்பைப் பற்றி யோசனை பண்ணிக்கொண்டே போனேன். இப்பொழுதெல்லாமே எனக்கு யோசனைகளெல்லாம் புதிது புதிதாய் வந்தன. அப்போதைவிட இப்போது எனக்கு வயது அதிகமில்லையா?

கரும்புக்கு இத்தனை கணுக்கள் இருக்கின்றனவே, எல்லாமா தித்திக்கப் போகின்றன? நுனியையும் அடியையும் விட்டு இடைக் கணுக்களில்தான் சொல்லுகிறேன். இந்த இடைக் கணுக்களுள்கூட ஏதோ ஒரு கணுவுள், எங்கோ ஒர் இடத்தில், முழுக் கரும்பின் இறக்கிய இனிப்பெல்லாம் ஒளிந்து கொண்டிருக்கிறது, உடலில் உயிருக்கே காரணமாய் இதயம் இருப்பது போல்.”

‘ஆனால் அந்தக் கணுவை, அதிலும் அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? அது யாருக்குக் கிட்டும்? கரும்பின் இதயம், இதயத்தின் கரும்பு!

‘சில சமயங்களில் வார்த்தையோடு வார்த்தை சேர்ந்தால், அல்லது மாற்றிப் போட்டால், புதுப்புது அர்த்தங்கள் எப்படி எப்படிப் பிறக்கின்றன! அப்படியும் தம்முள் இன்னமும் ஏதோ ரகஸ்யத்தை அடக்கிக்கொண்டு. உயிரோடு உயிர் கூடி உயிர் பிறப்பதுபோல்- அப்படியானால் வார்த்தைகளுக்கே உயிர் உண்போன்னோ?’

– இப்படியெல்லாம் எண்ண எனக்குப் பிடிக்கின்றது.

இப்படியெல்லாம் ஏன் எனக்கு எண்ணங்கள் ஒடுகின்றன? பொங்கல் என்றா? பொங்கலின் வெயிலுக்கே மனோகரமானதொரு மங்கல்- ஜாதி நாயனத்துடன் ஒட்டி ஒழுகும் ஒத்துப்போல. அதன் மருட்சியில் வழியில் துள்ளி ஒடும் ஆட்டுக்குட்டி மான்குட்டியாய்த் தோன்றுகிறது. எவனோ ஒருவன் எச்சில் துப்பிக்கொண்டு போகிறான்; முத்தைத் துப்பினாற்போல்தானிருக்கிறது! ஒரே குடும்பத்தின் பல ஆட்கள் மாதிரி, இன்று மாத்திரம் எல்லோரும் ஏதோ ஒரே காரியமாய்ப் போகிறார்கள், வருகிறார்கள்.

சாலையில் ஒரு மரத்தின் பின்னால் ஒருத்தி இடுப்புப் புடைவையைச் சரிப்படுத்திக்கொண்டிருந்தாள். என் பார்வை அவள்மேல் விழுந்த சமயம், அவள் மேலாக்கை மார்மேல் விசிறிப் போட்டுக்கொள்ளும் சமயம். ஆனால் இந்தக் காலைக் காற்று அதற்கு விடுகிறதா? எங்கிருந்தோ ஒரு ஊதல் கிளம்பி, அவள் கையிலிருந்து புடைவைத் தலைப்பைப் பிடுங்கிற்று. புடைவை பாய்மரத் துணிபோல் உப்பிப் படபட”வென அடித்துக்கொண்டது.

அவள் என்னைப் பார்த்தாள். வெட்கம் பிடுங்கி, முகம் கவிழ்ந்தது. ஆண் பார்வையின் பனி பொறுக்காது, உடலொடுங்கி, இருகைகளாலும் மார்பைப் போர்த்திக் கொண்டாள்.

கறுப்பானாலும், குறுகுறுப்பான முகத்தில், ரத்தமும் வெட்கக் சிரிப்பும் குழம்பின.
அந்நிலையில் அவள் விண்ணின்று சிறகின் மேலிறங்கி வந்த கந்தாவைப் போலிருந்தாள்! என் எண்ணங்கள் சுரக்கும் தேனில் நான் மிதந்துகொண்டு சென்றேன்.

சாலையோரமாய் மரத்தடியில் ஒருத்தி பனங்கிழங்கு, வேர்க்கடலை, கார்மாங்காய் கூறுகட்டி உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கலில் அவள் புருஷன் உட்கார்ந்திருந்தான். மரத்தின் மேல் ஒரு கரும்புக் கட்டைச் சார்த்திவிட்டு, அதனின்று அவன் மேல் தழைந்த தழைக்கடியில், தாடியை ஒரு கையால் கோதிக் கொண்டு அவன் வீற்றிருந்தது ஈசவரன் மாதிரியிருந்ததுகவரப்பட்டு நான் நின்றேன்.

‘கருகரு’வென்று பட்டுப்போல் பளபளத்துக்கொண்டு, தாடி மார்புக்கும் தழைந்திருந்தது. தலைமயிரையும் வெட்ட வில்லை. கூந்தல் மேனோக்கிச் சீவப்பெற்று, பிடரியில் அழகாய்க் குஞ்சம் குஞ்சமாய்ச் சுருண்டு தொங்கிற்று. யோக வேஷ்டியாய்ப் போர்த்தியிருந்த மேல்துணி இடது புஜத்தையும் கையையும் மறைத்தது. கரும்புத் தழைக்கடியில் யோக புருஷன் மாதிரி–

நான் அவன் தாடியை கவனிக்கிறேன் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. இடது கண்ணின் இமைகளை முறுக்கியடித்துப் புன்னகை புரிந்தான்.

“என்ன தம்பி, கரும்பு வாங்கலியா?”

கரும்பை நோட்டம் பார்ப்பதில் பெரும் புலிபோல் நான் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு, “என்ன விலை?” என்றேன். –

“சரிதான், அப்புறம் வாங்கலாம். இப்படிக் குந்தேன். அவசரமா? எப்படி நம்ம தாடி? பலே ஜோரில்லே?”

என்னையறியாமல் என் கன்னங்களை ஒருமுறை தடவிக்கொண்டேன். இப்போ இல்லாவிட்டாலும் போகிறது. வளருகிற சமயமாவது இவன்மாதிரி எனக்கு வளருமோ?

அதற்குள் அவள் இடைமறித்து, “தாடி அவருதில்லே, ஆண்டவருது” என்றாள்.

“ஆரம்பிச்சுட்டியா? சம்மனில்லாமே ஆசராயிட்டியா?”

அவள் கோபத்துடன் விரலையாட்டிக்கொண்டு, “இதோ பாரு, சொல்றேன். ரெண்டு வருசமா ஏமாத்திட்டு வரே. இந்தக் கிருத்திகிக்கி முடி குடுக்கலே பாத்துக்கோ! நான் அப்பறம் நொம்பக் கெட்டவளாயிருப்பேன். ஆமா, இப்பவே சொல்லிட்டேன்!” என்றாள்.

“ஒஹ்ஹொஹ்ஹோ” என்று ஏளனமாகக் கொக்கரித்துக் கொண்டே, கூறு கட்டியிருந்த மாங்காய்களில் ஒன்றை யெடுத்துத் தொடையில் துடைத்துவிட்டுக் கடிக்க ஆரம்பித்தான்.

“வாய்ஸ்தவம்தான்! மயிரென்னமோ ஆண்டவனுக்குத் தான் வளத்தேன். வளந்தப்பறம் மனசு வல்லியே!”

“சாமிக்கு வெள்ளிப்பாடம் வேண்டிக்கிட்டேனே, அதுக்குத் துட்டு உன்னைக் கேட்டேனா? கேட்டாத்தான் வரப் போவுதா? முடிதானே குடுங்கறேன். இதுக்கு மேலே பாக்கறே. கீழே பாக்கறே, இல்லாத கதையெல்லாம் அளக்கறே!”

“ஏதுக்கிந்த வேண்டுதல் எல்லாம்?” என்று கேட்டேன்.

“சொல்லேன்; தம்பி கேக்குதே!”

அவன் வாயிலிருந்து பேச்சு வரவில்லை. கரடி போன்ற புருவங்கள்தாம் உள்வலியில் நெரிந்தன.

திடீரென அவன் மேல்துணியை அவள் பிடித்து இழுத்து விட்டாள். எனக்குத் திக்கெனத் தூக்கி வாரிப்போட்டது. அவன் இடது கையில் முழங்கை வரை காணோம். நொண்டிகள் எவ்வளவோ பார்த்திருக்கிறோம். ஆனால் அவளுடைய திடீர்ச் செய்கையாலும், நான் அதற்குச் சற்றேனும் தயாராயில்லாததாலும் அவன் முடமையில் ஒரு பயங்கரம் ஏற்பட்டது. என் மனத்தின் துணுக்கு உடலையும் தாக்கிற்று.

அவன் அவளைப் பார்த்த பார்வையில் அவளுக்கு என்னவோபோல் ஆயிற்று. நான் அங்கு இல்லாவிடில் அவளை அவன் கை மிஞ்சியிருப்பான். எல்லாம் சில விநாடிகள்தாம். சமாளித்துக்கொண்டுவிட்டான். சிரித்தான். குஸ்திக்காரன் செளரியம் பழகுவதுபோல் நொண்டித் தோளை நல்ல் கையால் தட்டிக்கொண்டான்.

“என்னா தம்பி, இந்தக் கையெப்பத்தி ஒனக்கென்ன தெரியும்? இது செஞ்சிருக்கற வேலையும் ஒடைச்சிருக்கற மூஞ்சியும் எண்ண முடியும்னா நெனக்கிறே? என்நாளுலே தம்பி, என்னுாரிலே நான் கில்லேடி! அப்பத்தி நெஞ்சுக் கனத்தை இப்பொ நெனச்சுப் பாத்தா பயங்காணுது. கோயில் உச்சவத்துலே எட்டு மூலைக் கோலமாப் பந்தங்கட்டி, எட்டு மூலையுங் கொளுத்தி, மானத்துலே ஒரு பனைமர உசரம் தூக்கி எறிஞ்சு கீளே வரப்போ நடுவுலே புடிச்சா பாத்தவங்களுக்கு ஒரு மூச்சு தப்பி வருந் தம்பீ!”

குடிவெறி கண்டவன்போல் பேசினான். பேச்சு கொழ கொழத்தது.

எனக்கு அதிசயமாயிருந்தது. “கை எப்பொழுதாவது பற்றிக்கொண்டதா?” என்று கேட்டேன். அவன் முகம் விழுந்தது.

“அப்படியிருந்தாத்தான் சமாதானமாயிருக்குமே!”

வார்த்தைகளுக்குக் காத்துக்கொண்டிருந்தேன். அவன் மாங்கொட்டையை எறிந்துவிட்டு அருகில் கிடந்த ஒரு சுள்ளியை எடுத்துத் தரையில் கோடு வரைய ஆரம்பித்தான்.

“படுபாவி இவளாலெதான் கை போச்சு!”

“தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லாரிட்டியும் திட்டித் திட்டி இன்னும் ஆத்திரம் தீரல்லியா? இன்னும் எத்தினி நாளைக்கி இப்படி?”

அவள் குரலில் அலுப்புத் தட்டிற்று. ஒரு சிறு அழுகை நடுங்கிற்று.

“எப்படித் தீரும், பட்டி மவளே! என் கை போனது பெரிசில்லே, அப்புறம் உன் வீட்டுலே என்னை மேலும் பண்ணப் பாத்தாங்களே, அது ஆறுமா?”

வரவர வாக்குவாதம் அந்தரங்கமாகிக் கொண்டிருந்ததால் நழுவப் பார்த்தேன். ஆனால் அவள் என்னைச் சாட்சிக்கு அழைத்துவிட்டாள்.

“இதைக் கேளு தம்பி! என்கூடப் பொறந்தாட்டியா சொல்றேன்-”

“என்ன மச்சான்! சவிக்கமா? எப்ப வந்தே? உன் அக்கா சொல்லுதக் கேளு!” என்று அவன் கேலி பண்ணினான்.

“அது கெடக்கு இதெக் கேளு தம்பி; எண்ணக்கிமே அது எடக்குத்தான்.”

“அது மாதிரியெல்லாம் பேசாதே, பொம்புள்ளே! நான் சொல்றதெ அது கேக்கட்டும். இவுளுக்கும் எனக்கும் ரொம்ப நாளத்திய முடி என்னா, தெரிஞ்சுதா? ஆனா இவ வீட்டிலே நெனச்சமாதிரி நான் உருவாவலே. இந்த நாட்டுப்புறம் நெனைச்சுது, நாள் முளுக்கக் கலப்பை புடிச்சு, வேளா வேளைக்குக் கூழைக் குடிச்சுட்டு மாடத்துப் புள்ளையாருக்குப் பூசை பண்ணிக்கிட்டுப் படிஞ்ச மாடா காலத்தைத் தள்ளுவேனின்னு. ஆனா நான் ஒத்தருக்கு அடங்கறவன் ல்லே. சின்ன வயசுலேயே வீட்டுலே ஏதோ கோவம் பண்ணிக்கிட்டு ஊரைவிட்டு ஓடிப்பூட்டேன். நான் நொம்ப இடம் சுத்தியிருக்கிறேன் தம்பி, நொம்ப இடம்: ஒரு ஊரிலே ஒரு குளம் பார்த்தேன் பாரு-”

“சரிதான், கதை பண்ணாமே கதைக்கு வா-”

“நாலு வருசம் களிச்சுத் திரும்பி வந்தேன். நானும் மாறிப்போயிட்டேன்னு வச்சுக்க நொம்ப விசயம் கத்துக் கிட்டிருந்தேன். ஆனா இவுளும் நொம்ப வளந்துட்டா! பேச்சு வார்த்தையில்லையே தம்பி, அசப்புலே ஒத்தர் வளிலே ஒத்தர் குறுக்கே போனா, அப்போ நான் துளிர்மீசை மேலே கையைப் போட்டுக்கிட்டு நின்னா இவ அப்படியே கையைத் தொங்கப் போட்டுக்கிட்டு நிப்பா- உண்டாயில்லையா, நீயே கேளு-!”

“நீ சுத்த வெக்கங்கெட்டவனாப் போயிட்டே”

“அம்பலமானப்பறம் வெக்கமென்ன, வெக்கம்? நானும் ஊர் வந்தப்பறம் இவளைக் கட்டறவரைக்கும் கட்டாய்த் தானிருக்கணும்னு ஒரு இடத்திலே அமர்ந்து வேலை பாத்துக் கிட்டிருந்தேன். வேலையிலே சோடையில்லே தம்பி நான்நம்மகிட்ட எல்லாரும் பிச்சை வாங்கணும்!”

“சரிதான்! உன்மேலே பூப்போட்டு நீ இன்னும் ஒயலியா?”

அவள் இடைமறித்தலை கவனிக்காமல் மேலே சொல்லிக்கொண்டு போனான்:

“பொங்கல் நாள் வந்துரிச்சு, கரும்பு நாள் வந்துரிச்சு ஊர்க் கில்லேடிங்கள்ளாம் பையிலே கையை விட்டுப் பணத்தை ஜலஜலத்துக்கிட்டு உலாத்தறானுங்க. மூலைக்கி மூலை பந்தயம் வெச்சுக் கரும்பு வெட்டியாவுது.

“நானும் ஒருநாள் மூலையிலே வேடிக்கை பாத்துக்கிட்டு நின்னேன். அப்போ இவ கை இடுப்பிலே கூடையை வச்சுக் கிட்டு வேடிக்கை பாக்க நின்னா. இவளைப் பாத்ததும் நானும் பந்தயத்துலே கலந்துக்கிட்டேன். கையை நீட்டி மணிக்கட்டு மேலே கருப்பங்கணுவை வெச்சுக் கத்தியெக்கூட ஓங்கிட்டேன். அப்போ என் போறாக்காலம் இவளை லேசா ஒரக்கண்ணாலே பாத்தேன். இவ எண்ணத்துலே இப்போ நான் எவ்வளவு பெரிசாயிருக்கேனின்னு பாக்கணும்னுதான் வச்சுக்கயேன். எல்லாருக்கும் இருக்கற எண்ணம்தானே! அப்போ இந்த சூனியக்காரி பல்லுலே விரலை வெச்சுக் கடிச்சுக்கிட்டு சிரிச்சா! கைமேலே கத்தியிறங்கிட்டுது!”

நான் கண்ணை இறுக மூடிக்கொண்டு காதைப் பொத்திக் கொண்டேன். என் உடல் குலுங்கிற்று. அவன் சிரித்தான்.

“எனக்கு எப்படியிருக்கும்னு கண்டுக்கோ தம்பி! மூணு மாசம் ஆஸ்பத்திரியிலே கிடந்தேன். கத்தி துருப்பிடிச்ச கத்தி, கையிலே வினை வெச்சுட்டுது. புரை முழங்கை வரைக்கும் கடகடன்னு ஓடிப்போச்சு. முழங்கைக்குக் கீழே வெட்டி யெடுத்துட்டாங்க. கை போயிரிச்சு கையோடு கண்ணாலத் துக்குச் சேத்து வெச்ச பணமும் போயிரிச்சு! இன்னும் புண்ணு கூட ஆறல்லே. ஆஸ்பத்திரியிலேருந்து நான்தான் மிச்சமாத் திரும்பி வந்தேன்.

“இதுக்குள்ளே, இவ விட்டுலே என்னென்னவோ வேலைத் தனமெல்லாம் நடந்துகிட்டிருந்துது எனக்குத் தெரியாமே போச்சு. இவ அப்பன்காரக் கிளவன் ரெண்டு தடவை ஆஸ்பத்திரியிலே என்னைப் பாக்க வந்திருந்தான். வண்டயம் மாதிரி திருட்டு முளி முளிச்சுட்டு, வாயைத் துறக்காமெ போயிட்டான். நான் என்னாத்தைக் கண்டேன்? திரும்பி வந்தாத்தானே தெரியுது. இவுங்க ஏற்பாட்டின் துருசெல்லாம்!

“நான் ஆனா சும்மா விடல்லே! நியாயமாத்தான் நடந்து கிட்டேன். இவ வீட்டுக்குப் போனேன். கிளவன் திண்ணையிலே குந்திக்கிட்டிருந்தான், பொக்கை வாயைக் குதப்பிக்கிட்டு என்னைப் பார்த்தான். மூஞ்சி வெளுத்துப் போயிரிச்சு. நான் அதைக் கண்டுக்காமெ சொன்னேன். “மாமா உன் மவ எனக்குன்றது நொம்ப நாளைய விசயம். நீ சொல்லு தவறாமெ கட்டிக் கொடுத்துடு; பசியெடுக்குது, ஒருவேளைக் கஞ்சி ஊத்துன்னு உன் படியேறி வந்தாக் கேளு. மானம் போவாமே உன் மவளைக் காப்பாத்தறது என் பொறுப்பு. ஒரு கை போச்சுன்னு பாக்காதே மன்னனுக்கு இன்னும் ஒரு கை இருக்குது”

“அவன் பதிலே பேசாமெ என் கைக் கட்டையே பாத்துக்கிட்டிருந்தான். நாளைக்குப் பஞ்சாயத்திலே பேசலா மின்னான்.

“பஞ்சாயித்தாவது!” எனக்குக் கெட்ட ரோஷம் வந்துட்டுது. யாருக்கு யாரு பஞ்சாயித்து? நம்ப மாட்டின் களுத்திலே தும்பில்லேன்னா, நடுவுலே எவனோ வந்து ஒட்டிக்கிட்டுப் போறது நியாயம்னு சொல்றதுதானே பஞ்சாயித்து! அப்போ நான் ஒண்ணும் பேசிக்கிடலே பேசாமே திரும்பிட்டேன்.

மறுநாள் பஞ்சாயித்து இவுங்க வீட்டுத் திண்ணையிலே தான் கூடிச்சு. எல்லாரும், என் கை நல்லாயிருந்த நாளிலே, நான் முளிச்சுப் பாத்தேன்னா, கனாவுலேகூடப் பேத்தற பசங்க! என்மேலே பஞ்சாயித்துக் கூடியிருக்காங்க, ஹூ.

“நேரா வந்தேன். மாமா, உள்ளிருந்து உன் மவளைக் கூப்பிடு”ன்னேன். –

“இது என்னடா இல்லாத வளக்கம் பொல்லாத வளக்கம்-!”ன்னான்.

“டா வெல்லாம் ஒனக்கு இனிமே பொறக்கப்போற பேரப் பையனுக்கு வெச்சுக்க. ஒன் அவசரத்துலே சொன்ன பேச்சைத்தான் விட்டே மரியாதையையும் விட்டுடாதே நீ பஞ்சாயித்து வெச்சே- வெச்சபடி நடக்கட்டும். உன் மவளைக் கூப்பிடு! அவ வாய்ப்படத் தெரிஞ்சுகிட்டுப் போயிடுறேன்:இப்படிச் சொல்லிக்கிட்டே கிர்ரென்று உள்ளே போனேன். இவ தண்ணிமுடாவைத் தேச்சுக்கிட்டிருந்தா, ஈரக் கையோடெ ‘கரகர’ன்னு இஸ்துகிட்டு வெளிலே வந்தேன். அவ அப்பன் மேலே தள்ளினேன்.

“ஐயோ, பாவி’ன்னு கிளவன் லபலபன்னு அடிச்சு கிட்டான். ‘ஏ கிளவா! நாலுபேர் நடுவுலே உன் பொண்ணைத் தொட்டுட்டேன். இனிமே இவளை எவன் கட்றான்னு பாத்திடறேன்’னு சவால் அடிச்சிட்டுக் கிளம்பினேன்.

“ஊரெல்லாம் பத்திக்கிச்சு, கன்னிப்பொண்ணைக் கையைப் புடிச்சு இஸ்துட்டான்னு. என்னை ஆளை வெச்சு அடிக்கிறதுக்குக்கூடக் கிளவன் ஏற்பாடு பண்ணிட்டான். எனக்குத் தெரிஞ்சுபோச்சு. நேரா போனேன். ‘இதா பாரு நான் செத்தாலும் சாவறேன்! ஆனா குண்ணாத்தம்மன் கோயிலுக்குப் போறதுக்கு முன்னாலே, உன் பேரையும் உன் பொண்ணு பேரையும் சந்திலே இளுத்து, சாக்கடையிலே பெரட்டீட்டுப் பூடுவேன். நான் கதை கட்டிவிட்டேன்னா, இந்த விசயத்துலே ஊர் என்னை நம்புமா, உன்னை நம்புமா, ரோசனை பண்ணு! நான் உசிரோடு இருந்தாலாவது உன் மவ களுத்துலே நூலாடும். இல்லா, நான் கட்டிட்டுப் போற கெட்ட பேர்தான் நிக்கும். உன் பொண்ணு கையைப் புடிச்சு இஸ்துட்டேன்; கியாபகம் வச்சுக்க’ன்னேன்.

“கிளவன் இடிஞ்சுட்டான், புத்து மண்ணாட்டம்! ‘என் பொண்ணைக் கட்டு கட்டு’ன்னு காலுலே விளாத கொறையாக் கெஞ்சினான். அண்ணயப் பத்தாநாள் இவளை நான் கட்டினேன்.”

அங்கு ஒரு அணிலைத் துரத்திக்கொண்டு ஒரு பூனை ஒடி வந்தது. அணில் மரத்தின்மீது ஏறிக்கொண்டு பூனையைப் பார்த்துச் சிரித்தது.

“எதுக்கு சொல்ல வந்தேன்னா, நான் தேசம் சுத்தினப்போ இவளைவிட ரம்பையெல்லாம் பாத்திருந்தேன். நம்மை ஏமாத்தனும்னு எண்ணம் வெக்கறப்போதான் எண்ணம் அப்படியே திரிஞ்சுயூடுது- மூடியைத் திருகுவதுபோல் கையைத் திருகிக்கொண்டு, திரிஞ்சு பூடுது என்றான்.

“அதுக்காவ என் அப்பன் மேலே வெச்ச கோவத்தை என்மேலே இன்னமும் ஆண்டுக்கிட்டிருக்கையாக்கும்! நீயே சொல்லு தம்பி, கட்டிக்கொடுக்கற வரைக்கும் பெத்தவங்களுக்கு அடங்கி நடக்கணும். அப்புறம் கட்டிக்கொடுத்த இடத்துக்கு விசுவாச காதகம் பண்ணாமெ இருக்கணும். என்னா நான் சொல்றது?”

“என்னாத்தைச் சொல்றது! நீ இண்ணக்கித் தோலைச் செருப்பாத்தான் தச்சுப் போடேன். அதுனாலே நேத்திக்குச் செஞ்சது மறந்து பூடுமா?”

“மறந்துதான் ஆவணும். மறந்தாத்தான் இருக்க முடியும்.”

அவன் தனக்கே முணுமுணுக்க ஆரம்பித்தான். “காரியம் மாத்திரம் கடப்பாறையாச் செய்துடுவாங்க. அப்புறம் நம்மை மறந்துடும்னு சாஸ்த்ரம் படிப்பாங்க.” –

நான் நழுவப் பார்த்தேன். இடம் இம்சையாயிருந்தது.

“என்ன தம்பி, கரும்பு வாங்கலியா? கதை கேட்டியே!”

இரண்டு கரும்புகள் வாங்கிக்கொண்டு போனேன். ஒரே அடியா உப்புக் கரிக்கிறது? காசைக் கரியாக்கினியா?” என்று அம்மா இரைந்தாள்.

பிறர் இழைக்கும் பெருந் தவறுகளில் அம்மா காண்பிக்கும் பெருந்தன்மை பிரமிக்கத் தக்கதாயிருக்கிறது! சில சமயங்களில் சின்ன விஷயங்களில்கூட அவள் பொறுமை இழப்பது அதைவிட ஆச்சரியமாயிருக்கிறது.

ஒரே கணுவுள் முழுத் தித்திப்பையும் தேடுபவர்பாடே உப்புக் கரும்புதானோ?”

***

தோட்டத்துக் கோடியிலிருக்கும் வாழை மரத்தை வெட்டிச் சாய்ப்பதற்கு லக்ஷம் முத்தனிடம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள். நான் வாசலறையில் அப்போதுதான் வந்திருந்த தபால் கட்டைப் பிரித்துக் கொண்டிருந்தேன்.

தோட்டத்து மேலண்டைக் கோடியில் பழைய நாட்களின் அடையாளமாய் அவ்வொரு வாழைதான் தனியாய் நின்று கொண்டிருந்தது. லக்ஷம் அதன் மேலேயும் கண் வைத்து விட்டாள். அவளுக்கு எல்லாம் துடைத்துப் பெருக்கியிருக்க வேண்டும். அம்மாவுக்கும் இவளுக்கும் எவ்வளவு வித்தியாசம்!

மறுபடியும் அம்பி, பாப்பா, நான் எல்லோரும் சேர்ந்து விளையாடின தோட்டமேதான். அம்மா, காயும் பூவும் மரமுமாய் வைத்துப் பெருக்கிய தோட்டந்தான். மறுபடியும் சங்கராந்திதான்!

ஆனால் இப்போது அம்மாயில்லை, அப்பாயில்லை, தம்பியில்லை; பாப்பா இல்லை.

அம்பிக்குப் படிக்க வரவில்லை. அவன் வியாபாரத்தி லிறங்கிக் கொள்ளை கொள்ளையாகச் சம்பாதித்தான். எங்கேயோ சொந்த வீடு கட்டிக்கொண்டு, மோட்டார்
ரிக் ஷா எல்லாம் வைத்துக்கொண்டு வியாபாரமே நோக்கமாய், செல்வமே கொள்கையாய் வாழ்ந்து வந்தான்.

என்றோ ஒரு கடிதம் அவனிடமிருந்து வரும், நான் இருக்கிறேன். நீ இன்னுமா இருந்துகொண்டிருக்கிறாய்? என்ற தோரணையில்.

எந்த அம்பிமேல் அவ்வளவு உயிர் வைத்திருந்தாளோ, அவனிடந்தான் அம்மா போய்ப் படாத பாடெல்லாம் பட்டுச் சகித்துக்கொண்டு, அவனிடமே உயிரையும் விட்டு விட்டாள். நான் போனது முக முழிப்புக் காணவும், எங்களைப் பெற்ற வயிற்றில் நெருப்பைக் கொட்டவுந்தான்.

அம்பி அவளை அடித்ததாய்க்கூடக் கேள்வி. அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவள் இலையில் துப்பினதாய்க் கேள்வி. போகிறான், பாவி! அவனிடமிருப்பதால் எனக்கு என்னமோ மிச்சம் பிடிப்பதாய் அவள் எண்ணம். “எனக்கென்னடா குழந்தை? எங்கிருந்தாலும் ஒரு கவளமும் ஒரு சுத்துத் துணியுந்தானேடா? நீ சம்சாரி ஆயிட்டே நான் அசலிடமா போறேன்? அங்கேயும் என் பிள்ளைதான். கொஞ்சம் முன்கோபி. அவ்வளவுதானே?” என்பாள்.

அம்மாவால் எப்படியும் வேறெப்படியாயுமிருக்க முடியாது.

அம்மாவுக்கு முன்னால், நாங்கள் தலையெடுக்கு முன்னாலேயே அப்பா போய்விட்டார்.

பாப்பா இப்பொழுது ‘பீப்பா’வாகி, கலியாணமானதும் மாமனார் வீட்டுடன் ஐக்கியமாகி வடகோடியில் எங்கோ போலீஸில் வேலை பார்த்து வந்தான். அங்கிருந்து வந்தவர் ஒருவர் சென்னார், பயல் கருடாழ்வான் மாதிரி கைநீட்டி வாங்கும் லஞ்சத்திற்கு அவனுக்கு இரு கைகளுமே போதவில்லையென்று.

அவனிடமிருந்து கடிதமே கிடையாது.

அப்புறம் நான்தானிருக்கிறேன். எல்லோரையும்விட நிறையப் படித்தேன். குடும்பத்திலேயே நான்தான் சூடிகை யென்று சுற்றியிருந்தவர்கள் சொன்னார்கள்.

நானும் எங்கெங்கோ சுற்றினேன். ஆனால் கடைசியில் இப்பொழுது கிராமத்தில் வாத்தியார் என்கிற பட்டத்துடன், அவரவர் வீட்டுக் குழந்தைகளை ஒரு கொட்டகையில் மடக்கி மேய்த்துக் கொண்டிருக்கிறேன்.

என் வேலைக்குக் கூலியாய் வாசல் தூணில் ஒர் உண்டி கட்டியிருக்கும். அமாவாசைக்கு அமாவாசை திறந்து அதிலிருப்பதைத் துழாவியெடுத்துக் கொள்ளலாம். இப்படித் தான் என் காலந் தள்ளிக்கொண்டிருக்கிறது. எனக்கும் இரண்டு குழந்தைகளிருக்கின்றன. வெளியில் விளையாடப் போயிருக் கிறார்கள்.

போதும் போதாததற்குச் சென்ற இரண்டு வருடங்களாக நான் கிராமத்துப் போஸ்டு மாஸ்டர். ஆனால் என் மாதச் சம்பளம் ஆறு ரூபாயை நான் முழுசாய்க் கண்டதில்லை என்பதை நினைக்கச் சிரிப்பாயிருக்கிறது. ஸ்டாம்புப் பணத்திலிருந்து அவ்வப்போது கறிகாய்க்கும் கைச்செலவுக்கும் கையாண்ட பணத்தை இட்டு நிரப்புவதற்கே சரியா யிருக்கும்.

அப்படியும் எங்கெங்கோ சுற்றியும், அத்தனை நாட்கள் கடந்தும், எந்தையும் என் தாயும் எங்களைப் பெற்று வளர்த்துப் புழங்கிய இதே வீட்டில் நான் மறுபடியும் இப்படி உட்கார்ந்து கொண்டு இன்னமும் இதையெல்லாம் யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கையில், அதில் ஒரு ஆச்சரிய இன்பம் என்னைப் பரவசப்படுத்துகிறது. மனம் புரியாததொரு தெளிவையடைந்திருக்கிறது.

நான் காலத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறேனா, அல்லது இத்தனை நாட்களாய்க் காலம்தான் என்னைச் சுற்றுகிறதா எனும் கேள்வி தானாகவே என்னுள் எழுகிறது. அதற்கு பதில் கண்டுபிடிக்கும் முயற்சியில் அக்கேள்வியைச் சுற்றிச் சுற்றிவர, தெருவில் போய்க்கொண்டிருக்கையில் நான் முன்பின் அறியாத ரூபவதியான ஒரு அன்னிய ஸ்திரீ என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டே போனால் எனக்கு எப்படியிருக்குமோ, அதே இன்ப வேதனையும் வியப்பும் அடைகிறேன். அக்கேள்வியை ஆராய ஆராய, அதன் மயக்கமும் மர்மமும் என்னை அழுத்துகின்றனவே தவிர முடிவு கிட்டியபாடில்லை.

வாசலில் நிழல் தட்டிற்று.

“வா வா, சீமதி ரெண்டு நாளா இந்தப் பக்கமே காணுமே!” என்று லக்ஷம் உள்ளிருந்தபடியே கூப்பிட்டாள்.

கையில் தன் பையனைப் பிடித்தவண்ணம் ஸ்ரீமதி உள்ளே நுழைந்தாள்.

“தங்கம் மாமியாத்துலே அப்பளாம் இடக் கூப்பிட்டா. போயிருந்தேன். முந்தாநேத்து ருக்கு மாமியாத்துலே அவா மாமனாருக்குத் தெவசம் அதுக்கு சமைக்கப் போனேன்.”

ஸ்ரீமதியின் பிழைப்பே இப்படித்தான் நடந்து கொண்டிருந்தது.

“இப்பொத்தான் உன்னை நெனைச்சேன்! நீ என்ன வேணுமானா நெனைச்சுக்கோ, சீமதி. நீ இல்லாட்டா ஒரு கை ஒடிஞ்சமாதிரிதான் இருக்கு காப்பிக்கொட்டையை வறுத்து வெச்சுட்டேன் அசடாட்டமா. நமுத்துடறத்துக்கு முன்னாலே பொடிபண்ணியாகணுமேன்னு அப்புறம்தானே யோசனை தோணறது! ரெண்டுவாய்தான் காணும். நானும் வரேன். நீ இடி, நான் சலிச்சுப்பிடறேன். அப்புறம் சுடச் சுட கமகமன்னு போட்டுச் சாப்பிடலாம்-”

மாம்பூவைக் காம்பு ஆய்வது போன்ற பேச்சிலும், ‘யானை சுமந்துவரப் பின்னால் நரி முக்கிக்கொண்டே வந்ததாம்’ என்கிற தினுசில் வேலை வாங்குவதிலும் வேலை செய்வதிலும், லக்ஷத்திற்கு லக்ஷம் கொடுக்கலாம்.

சற்று நேரத்துக்கெல்லாம் உலக்கையிடி துவங்கிற்று. பக்கத்தில் அம்மிமேல் வைத்திருக்கும் பாத்திரங்கள் அதிரும் சப்தம் இனிப்பாய் ஒலித்தது. காப்பிப் பொடியின் மணம் ‘கம்’மெனக் கிளம்பிற்று.

தெருவில் ஒருவன் வெற்றிலை விற்றுக்கொண்டு சென்றான். மாதிரிக்குக் கையில் ஒரு கவுளி-ஒடிந்த இறக்கை மாதிரி. அந்த உவமை மனத்தில் பட்டதும் மறுபடியும் ஸ்ரீமதியின் மேல்தான் நினைவு தொடர்ந்தது. ஏனெனில், சென்ற இரண்டு வருடங்களாகவே அவள் ஒடிந்த இறக்கையுடன்தான் வளைய வந்துகொண்டிருந்தாள்.

இப்பொழுது அவளுடன் கூடவந்த அவள் மகன் கருவா யிருக்கையிலேயே, அவள் புருஷன் இங்கெல்லாம் வேலை தேடி மனஞ்சலித்து, ஒருவருக்கும் சொல்லாமல் சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டான். புக்ககத்தில் அவளைக் கவனிக்கக்கூடிய நெருங்கின பந்துக்கள் யாருமில்லை. பிறந்த வீட்டுச் சாய்கால் தான் எத்தனை நாட்களுக்கு இருக்கும்? பெற்றவர்களின் ஏச்சும் இடிசொல்லும் பொறுக்கக்கூடியதாயில்லை. குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு, தனிப் பிழைப்பாகவே வந்துவிட்டாள். இலை தைத்து விற்பதும், சமய சந்தர்ப்பங் களுக்குச் சமைத்துப் போடுவதும், சிறு பகrணங்களின் வியாபாரத்திலும் அவள் ஜீவனம் நடந்துகொண்டிருந்தது.

கோவிலுக்குப் பக்கத்தில் ஒரே அறையுடன் கட்டிய ஒரு இடிந்த வீடுதான் அவள் குடில். சந்தர்ப்பங்களின் சதியால், தன் ஆணின்றி, துணையின்றி வாழ நேர்ந்து, அதுவும் சற்றுக் களை முகமும் கட்டுடலும் படைத்துவிட்ட ஒரு வயதுப் பெண்ணை, வழக்கப் பிரகாரம் ஏதேனும் பேச ஊர் நாக்கு துடித்தாலும், அவளைக் கண்டு ஏனோ எதற்கோ அஞ்சி முடங்கியது.

மத்தியான்னம் கட்டுவேளைக்கு, தன் குழந்தையே தனக்கு ஆண் துணையாய், அவன் கையைப் பிடித்துக்கொண்டு வந்து தபால் அறை வாசலண்டை வந்து நிற்பாள். குனிந்து அவனைப் பார்த்து, “டேய் மாமாவைக் கேளுடா- அப்பா கிட்டேயிருந்து ஏதாவது கடிதாசு வந்திருக்கான்னு” என்பாள்.

அவனுக்கென்ன, நாலு வயதுதானிருக்கும். அவன் அம்மா எப்படியோ சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்து, ஆசையாய்த் தைத்து மாட்டியிருக்கும் அரை நிஜாரையும் அரைக்கைச் சொக்காவையும் மாட்டிக்கொண்டு, எவ்வளவோ சுத்தமாய் அலம்பியும் நூலொழுகும் மூக்குடன் வாயில் கட்டைவிரலை மாட்டிக்கொண்டு, என்னைத் தன் ஸெலுலாயிட்டுப் பொம்மைக் கண்களுடன் ஆழ்ந்து பார்க்கையில், என்னை ஏதோ சங்கடம் பண்ணும். கடிதம் இருந்தால் அவனண்டை வந்து குனிந்து கொடுப்பேன்.

“எங்கேடா உங்கப்பா?”

வாயில் போட்ட கட்டைவிரலை யெடுக்காமலே, “அப்பா ஓ போயிட்டா- நேக்குப் பப்புட்டு வாங்கிண்டு வவ்வா” என்பான்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாய் ஸ்ரீமதியின் புருஷனிடமிருந்து ஒழுங்காய்ப் பணமும் வரவில்லை; கடிதமும் வரவில்லை. சேர்ந்தாற்போல் இப்போது ஆறு மாத காலமாய் அவனிடமிருந்து ஒரு வரியுமில்லை.

பையன் வாசற்படியண்டை வந்து நிற்பான். “மாமா! அம்மா ஒவு கவவ் வாங்கிண்டு வவச் சொன்னா, காசு நாளைக்கித் தவாளாம்”- அவனுக்கு இன்னும் ‘ர’கரம் படியவில்லை.

கொடுப்பேன். இன்னொரு நாள் வருவான்.

“மாமா அம்மா ஒவு கவவ் வாங்கிண்டு வரச் சொன்னா. மின்னயே ஒவு கவவ் பாக்கியாம். அத்தோடு இதையும் சேத்துத் தவாளாம்.”

கொடுப்பேன்.

“மாமா, அம்மா கவவ் வாங்கிண்டு வவச் சொன்னா.”

“மாமா, அம்மா கவவ் வாங்கிண்டு வவச் சொன்னா”

அப்புறம் வந்து வாய்பேசாது வெறுமென நிற்பான். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட திகைப்பும் சோகமும் இப்பவே தேங்கிய அம்முகத்தைப் பார்த்து வயிறு ஒட்டிக் கொள்ளும் கட்டுக் கட்டாய்க் கார்டும் கவரும் அவனெதிரில் வைத்துக்கொண்டு, ஏதோ குற்றம் செய்கையில் கையும் பிடியுமாய் அகப்பட்டுக் கொண்டாற்போல் உள்ளம் குலுங்கும்.

“அம்மா கவர் வாங்கிக்கொண்டு வரச்சொன்னாளா? இந்தா, எடுத்துக்கோ.”

கவரைக் கையில் பிடித்துக்கொண்டு குதித்து ஒடுவான்.

ஆனால் ஸ்ரீமதி பதறிப்பதறி எழுதிய கடிதங்களுக்கும் பதில் இல்லை.

***

கிராமத்தை வளைத்து ஒரு வாய்க்கால் ஓடியது. அதன் மூலஊற்று வீட்டிலிருந்து ஒன்றரை மைல்.

ஒருநாள் மாலை அந்தப் பக்கம் உலாவச் சென்றிருந்தேன். தோய்ப்பதற்குக் கொண்டு வந்திருந்த துணிகள் பந்தாய்ச் சுருட்டிப் பக்கத்திலிருக்க, ஜல ஒரத்தில் அவள் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அருகே அவள் பையன் கிளிஞ்சலோ, கூழாங்கற்களோ பொறுக்கி விளையாடிக் கொண்டிருந்தான்.

அவர்கள் என்னைப் பார்க்கவில்லை. என்னை மணல் திட்டு மறைத்தது. ஆனால் நான் அவளைப் பார்த்தேன். அவள் முகத்தில் நான் கண்டதைக் கண்டதும், மறு அடி எடுக்கத் தூக்கிய கால் கீழிறங்க மறந்து அந்தரத்தில் நின்றது.

ஸ்ரீமதியின் எதிரில் ஜலமுகம் அகன்று விரிந்தது. அவள் நாட்டம் ஜலத்தின் நடுவில் ஏதோ ஒரு மீன் துள்ளிச் சுழித்த சுழியிலும், அச்சுழியில் ஜலத்தின் விதிர் விதிர்ப்பிலும்
பதிந்திருந்தது. நெற்றிப்பொட்டு மயிர் சற்றுப் பரட்டையாய் மாலைக் காற்றில் அசைந்தது. முகத்தில் முந்நூறு மூவாயிரம் வருடங்கள். காலத்தின் வரையே கடந்து வயதேயிலாத வயோதிகம் கவிந்திருந்தது. இமைகள் கொட்டவில்லை. முகமே ஒழித்துப் பெருக்கி வைத்தாற்போல், ஒரு தனி வெறிச்சிட்டு, அதில் ஒரு எண்ணம், ஒரே எண்ணம், கொஞ்சம் கொஞ்ச மாய்ப் பயங்கரமாய் முறுக்கேறிக் கொண்டிருந்தது. எனக்கு நடுமுதுகு சில்லிட்டது.

“அம்மா- அம்மா-” –

அமிர்தாஞ்சன் பொம்மை மாதிரி அவள் முகம் அவன் பக்கம் திரும்பியது. ஆனால் அவன் அவளைப் பார்க்கவில்லை. தண்ணிரை உற்சாகத்துடன் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந் தான். கன்னக் கதுப்புக்களில் மாம்பழச் சிவப்பு மிளிர்ந்தது. தலையின் சுருட்டை மயிர் வெயிலின் ஜாலத்தில் தங்க மோதிரக் குவியலாய் மாறிற்று.

“வவிக்கை!-”

அவள் தோய்க்கக் கொண்டு வந்த ரவிக்கை மிதந்து சுழலில் இழுக்கப்பட்டு, அவள் எட்டும் தூரத்தையும் மீறி ஜலத்தின் நடுவுக்குப் போய்க்கொண்டிருந்தது.

அமுக்கிய எஃகுச் சுருள் திடீரென்று திரும்பிக்கொண் டாற்போல், அவள் முகம் சட்டெனக் கலைந்தது; பூமியே புரண்டதுபோல் ஒரு பெரும் கேவல் அவளை அதிர்த்துக் கொண்டு அவளின்று கிளம்பியது. சுட்டிய முழங்கால்களின் மேல் விழுந்தது.

“என்னம்மா! ஏம்மா அழவே? ஏம்மா-?”

முன்னொரு நாள் நடுத்தெருவில் ஒரு ஆடு படுத்திருந்தது. அவசரமாய்ப் பந்தய வேகத்தில் வந்த ஒரு சைக்கிள்காரன் அதன்மேல் வண்டியை ஏற்றிவிட்டு, இறங்கிக்கூடப் பாராது விட்டடித்துக்கொண்டு போயே போய்விட்டான் ஆட்டுக்கு நடுமுதுகு ஒடிந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் எழுந்திருக்க முயலுந்தோறும் ஒரு அலறல்தான் அதனின்று கிளம்பி, அதைக் கீழே தள்ளுகிறதேயொழிய, அதனால் நிற்க முடியவில்லை. அதன் குட்டிக்கு என்ன தெரியும்? அது பால் குடிப்பதற்காக அதைச் சுற்றிச் சுற்றி, முனகி முனகி, முகர்கிறது.

இதைப் பார்க்கையில் அந்த ஞாபகம் சொல்லாமலே என்முன் எழுந்தது. தலையைப் பிடித்துக்கொண்டு நடந்தேன். நெற்றி கசகசத்திருந்தது.

***

“ஏன் மாமி? என் குழந்தையைத் தூக்கிண்டு என்னிடத் துக்கு நான் போறதுக்கு எனக்கென்ன வெட்கமா, பயமா? ஆனால் கால் நடையாய்ப் போயிடறத்துக்கு மூணு மைல் தூரமா? ரயில் பிரயாணமாய்ப் போறதுக்கு முந்நூறு மைல் தூரமா? உள் நாடுகூட இல்லையே. மாமி! நான் எங்கே போவேன், எப்படித் தேடுவேன்?”

அழுகைக்கிடையில் சிந்தும் வார்த்தைகள் என் நெஞ்சைப் பிழிகின்றன. மேல் காரியம் ஒடமாட்டேன் என்கிறது.

எல்லாத் துக்கமும் இவள் துக்கமும் ஒன்றாகிவிடுமா?

“மாமா, அம்மா ஒவு கவவ் கேக்கவா-”

இப்பொழுதுகூட, வந்த தபாலைப் பார்த்துக்கொண்டிருக்கையில், அவள் பேசுவது ரேழியிலிருந்து கேட்டது:

“எனக்கு இனிமேல் ஒண்ணும் வேண்டாம், மாமி! சிங்கப்பூரிலிருந்து சம்பாதிச்சு, தூக்கமுடியாமல் தூக்கிண்டு ஒண்ணும் வரவேண்டாம். தன் புள்ளைக்கு தகப்பன்னு தான் மாத்திரம் தனியா வந்து சேர்ந்தாப் போறும். ஒண்ணுமே வேண்டாம். ஆத்துலே வந்து உட்கார்ந்தாப் போறும். இட்டிலிக்கு அரைச்சு இப்போ வயத்தே வளக்கிறாப்பிலே அப்போ மாத்தரம் முடியாதா, என்ன?”

“ஆமாமா- பொடி நறநறங்கறதே, இன்னும் ரெண்டு இடி தாங்குமில்லே? சித்தே மசியேன்!-”

“ராஜி முந்தி மாதிரியில்லே மாமி! நேத்து ராத்திரி யெல்லாம் ஒரு கடிதாசுத்துண்டுமேலே கவிஞ்சு படுத்துண்டு, அவனுக்குத் தெரிஞ்ச ஆனா ஆவன்னா, ஒண்னுரெண்டு மூணு எல்லாம் எழுதினான். அப்பாவுக்கு எழுதற கடுதாசுலே அதையும் சேர்த்து அனுப்பணுமாம். பாதி விளையாட்டுலே நெனைப்பெடுத்துண்டு ஒடி வந்துடறான். அப்பா எப்போ வருவான்னு கேக்கறான். ஒரே படுசுட்டியாயிருக்கு இப்பொல்லாம்.”

“ஸ்ரீமதி—ஸ்ரீமதி–

கண்ணைக் கடிதங்களின்மேல் வைத்துக்கொண்டு, ரேழிப் பேச்சில் கவனத்தைச் செலுத்தியவண்ணம் கட்டைப் புரட்டுகையில், அவள் பெயர் திரும்பத் திரும்ப நினைவைத் தடுக்கிறது.

“ஸ்ரீமதி அம்மாள் அவர்களுக்கு – ”
எனும் விலாசம் திடீரென்று கடிதங்களிடையினின்று தாவிக் குதித்து, நினைப்பைச் சட்டென இழுத்து, பார்வையுடன் சேர்த்துப் பிணைத்து இருத்தியபோது என் உடல் பரபரத்தது.

அவள் பிள்ளையைக் கூப்பிட எழுந்த நாக்கை இழுத்துக் கொண்டேன். தைப்பிறப்பும் அதுவுமாய் ஸ்ரீமதிக்குக் கடிதம் வந்திருக்கும் சந்தோஷத்தை- ஸ்ரீமதிக்காக நான் படும் சந்தோஷத்தை நானே தனியாகக் கொஞ்ச நேரம் அநுபவித்துக் கொள்ள வேண்டுமெனத் தோன்றிற்று.

கடிதத்தையெடுத்து, முன்னும் பின்னுமாய்த் திருப்பிப் பார்த்தேன். தபால் தலைமேல் சிங்கப்பூர் முத்திரை விழுந்திருந்தது. ஆனால் கையெழுத்து வேறாயிருந்தது. விலாசத்தின் கையெழுத்து எனக்குப் பழக்கத்தானே! எனக்கு ஏதோ சந்தேகந்தட்டிற்று. நான் என்ன செய்தேன் என்பதை உணருமுன்னரே கடிதத்தைப் பிரித்துவிட்டேன். அதிலிருந்தவை நாலைந்து வரிகள்தாம். அவைகளைப் படித்து, அவைகளின் அர்த்தம் மூளையில் தோய்கையில் –

கொக்கிபோல் வளைந்து கூரிய நகங்களை விரித்துக் கொண்டு புலிப்பாதம் என் முகத்தில் அறைந்தது. கண்கள் இருண்டன. அறையும், ஜன்னலும், அதற்குப் புறத்தில் புலப்படும் தெருவும், எதிர்ச்சாரி வீடுகளும் அதிர்ச்சியில் ஆடி மிதந்தன. எதிர் வீட்டுத் திண்ணையில் சார்த்தியிருந்த ஒரு வண்டிச் சக்கரம் கிறுகிறுவென்று சுழன்றது. என் உடலிற்குள் சதைக்கடியில், பின் மண்டையிலிருந்து பீறி இரத்தம் வழிந்து ஒழுகுவதை உணர்ந்தேன். இரு கைகளாலும் மண்டையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டேன். ரேழியிலிருந்து திடும் திடும் என்று கேட்கும் உலக்கை என்மேல்தான் இறங்கிக் கொண்டிருந்தது.

லக்ஷம் ஸ்ரீமதியிடம் கொல்லைப்புறத்திலிருக்கும் ஒற்றை வாழை மரத்தை வெட்டச் செய்த ஏற்பாட்டைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அதுதான் குலை தள்ளிப்பிடுத்து, சீமதி இனிமேல் அதை நீ எத்தனை நாள்தான் வெச்சுக்கோயேன்- இருந்தும் ஒண்ணுதான்! அனாவசியமாய் இடத்தை அடைச்சிண்டு.”

லக்ஷம் ஏன் இப்படி ஸ்ரீமதியின் பேரில் பயங்கரமான தீர்ப்பைக் கூறுகிறாள்? ஆனால் லக்ஷம் உண்மையைத்தானே கூறுகிறாள்! அப்படியானால் லக்ஷத்துக்கு மேஜைமேல் என்னெதிரில் கிடக்கும் கடிதத்தின் பொருள் ஏதாவது ஆச்சரியமான செப்பிடு வித்தையால், மனோதந்தி வாக்காய்த் தெரிந்துவிட்டதா? ஐயையோ அது ஸ்ரீமதிக்குத் தெரிய எத்தனை நாழியாகும்? அதுவும் சங்கராந்தியில், நம்பிக்கையின் நன்னாளாய் எல்லோருக்கும் விளங்கும் இன்னாள் இவளுக்கு மாத்திரம் பொய்த்துப் போக வேண்டுமா? இந்தக் கடிதத்தில் செருகியிருக்கும் கத்தியால் ஸ்ரீமதியை வெட்டிச் சாய்த்துத்தான் ஆகவேண்டுமா?

இம்மாதிரி சமயங்களில்தான் மனிதன் கடவுளின் தன்மையை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. முத்தொழிலும் செய்யும் பரத்தின் பொறுப்புக்குத் தனி லாயக்கு, கிராமப் போஸ்ட் மாஸ்டருக்குத்தான் இருக்கிறது.

மறுகணம் என்னெதிரில் அக்கடிதம் நாலு சுக்கல்களாய்க் கிடந்தது.

ஜன்னல் வெளியே நோக்கினேன். தெருவும் வீடுகளும் மறுபடியும் தம் நிலையில் நின்றுகொண்டிருந்தன. பொங்கலின் மனோகர வெயில், எதிர் வீட்டுத் திண்ணையில் வண்டிச் சக்கரம் சாய்ந்து நின்றுகொண்டிருந்தது.

வாசலில் சாணியுருண்டையில் நேற்றுச் செருகி வைத்திருந்த ஒரு பறங்கிப்பூ கசங்கி வதங்கிக்கொண்டிருந்தது.

நான் முன்பின் பார்த்திராத ஒரு அன்னிய ஸ்திரீ தெரு வழியே, என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டே குலுங்கி நடந்து சென்றாள்.

– ஜனனி (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு ஜூன் 1992, திருநாவுக்கரசு தயாரிப்பு. நன்றி: https://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *