கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2023
பார்வையிட்டோர்: 2,104 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மகளின் கழுத்திலே தாலியேற்றிச் சுமங்கலியாகப் பார்க்க வேண்டும் என்ற அபிலாசையின் உந்துதலால் சட்டத்தை மீறுவதையும் அவன் பொருட்படுத்த தயாரில்லை. எத்தனையோ பேரிடம் கடன் கேட்டு ஏமாந்த நிலைமையிற்தான் இந்த முடிவுக்கு வந்தான்.

‘அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான்’ நெஞ்சமெலாம் நிறைந்து வழிந்து உடலின் அணுவறை தோறும் நிரவிவிட்ட அந்த வாக்கியம் அவனை அறியாமலேயே கரீமின் நாவில் உச்சாடனம் பெறுகின்றது.

அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான் மலையிடை இழியும் அருவியின் வேகத்தில் மையிருட்கனதியைக் குடைந்து நடக்கின்றான் அப்துல்கரீம். பத்து வயதுப் பையனும் தந்தையைத் தொடர்கின்றான். சாதகமான சாபல்ய வேட்கையில், வரும் காரியம் வாயில் வரும் என்ற எண்ணச் சுழிப்பில் ‘அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான்’ என்ற வாக்கியத்தை அசை போடுவதில் தன் சிந்தனையை வயப்படுத்தி விட்டான் கரீம். ஊதற் காற்றின் உந்துகை தங்களுக்காய்ப் பிறப்பிக்கப்படும் ஆக்ஞையெனும் மருட்சியிற் தனையுண்டு வேலைத் தழைகளும் தென்னந் கீற்றுகளும் பாழ்வளவுகளில் மண்டிக் கிடக்கும் செடிகளும் அசைந்தரற்றும் மெல்லோசையைச் சுருதியாகக் கொண்டு வெண்கருமக் குறுமணலில் மூழ்கி மீண்டும் ‘சரக்’ ‘சரக்’ இசைபாடும் அவர்கள் பாதங்களுக்குக் கூட அந்த நம்பிக்கை.

உவர் களப்பின் மேற்பரப்பில் தவழ்ந்த ஈர்ப்பதனின் பளுவால் மெல்லென நீந்தும் சீதளக் காற்றுக்குக் கஞ்சற் சாரனால் வேலிகட்டும் எண்ணத்தில் உடலைப் போர்த்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அக்கினிப்பாளமாகத் தகிக்க வேண்டிய அயனப் பிரதேசத்தையும் தாவராதியளும், ஜீவராசிகளும் வதியக்கூடியதாக வளப்படுத்தும் கடற்காற்றினால் சுன்னக்காளவாயாகக் கனன்று கொண்டிருக்கும் கரீமின் மனவேக்காட்டைத்தான் தணிக்க முடியவில்லை.

அந்தவல்ல பெரிய நகுமான் முகம் பார்த்தால்……. ?

வாழ்க்கை எனும் கொல்லன் கொப்பரையில் கொழுந்து தள்ளும் வறுமைத்தீயின் பசித்த நாக்குகளுக்கு இரையாகும் குடும்பத்தில் வசந்தம் சிரிக்கும் என்று நம்புபவன் கரீம். அந்த நம்பிக்கையின் நட்சத்திர பிரகாச சுகானுபவத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை கடத்தி விட்டான்.

கண்கடை தெரியாத இருளில் பாற்தில்லைப் பற்களை விலத்தி வழிகண்டு செல்வதில் அவர்கள் அநுபூதிகள். கரீமின் வலது தோள்பட்டை வலிகண்டிருக்க வேண்டும். துருப்பை இடது தோளுக்கு மாற்றுகிறான்.

“அந்தவல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான்.

மகளின் வாழ்வுப்பாதையிலே நந்தியாகக் குறுக்கிட்ட ஏழ்மைப் பகைவனைச் சிரக்கம்பம் செய்விக்க கரீமை யுத்த சன்னத்தனாய் வழியனுப்பி வைத்த போது அவன் மனைவி கூறிய நன்மாராயம்.

எலி வளைகளாக இரு அறைகளைக் கொண்ட குடிசை. ஈயெறும்பு தானும் நுளையாதவாறு இறுகக் கட்டிய கிடுகுச் செத்தையையே கவராகக் கொண்ட குடிசையின் கர்ப்பக் கிரகத்தினுள் பக்குவமடைந்த மகள் என்னதான் அவல வாழ்க்கை வாழ்ந்தாலும் பருவ பக்குவமடைந்த குமரைக் கட்டுக் காவலாகத்தானே வைத்திருக்க வேண்டும். மற்ற அறையில் முன்பக்கம் முழுமையாகவும் மற்றிரு பக்கமும் மேல் அரையளவுக்குள்ள காலதர் வழியே, வெளியே வெண்பஞ்சாகத் துமிக்கும் பனித்திவலைகள் உள் நுழைந்து மயிர்க்கால்களைத் துளைப்பதில் நின்றும் பாதுகாப்புப் பெறுவதற்காய்ச் சாரனெனுங் கருப்பையுள் சிசுவாக முடங்கிக் கிடந்தனர். தந்தையும் தனையனும், வாழ்க்கை முழுக்க கும்பகர்ண வரம் நல்கி விட்டால் எவ்வளவு செளகரியப்படும் என்பது போலிருந்தது அவர்கள் தோற்றம்.

பசியின் அழுங்குப்பிடியில் வெறி முற்றிவிட்ட புலியின் நகங்களாக மனத்தை வராண்டும். அவசரங்களையும், குசேலகாண்டப் பாராயணத்தையும் மறந்த நிம்மதியின் பேராட்சி அவர்களில்.

ஒட்டுத் திண்ணையில் ஈரவிறகுகளோடு நடத்திய மடைப்பள்ளிப்போரை நிறுத்தி விட்டு, குப்பி விளக்குடன் நெருங்கி வந்தாள் ஹலீமா; அவன் மனைவி மெத்தென்ற இளமை நலம் இல்லாவிட்டாலும் மதாளிப்புக் குறையாத கஞ்சமலர் ஒத்தணம் பெற்றது கரீமின் புயம். அங்குசத்தின் பிரயோகத்தில் அடங்கியிருக்கும் யானையாகக் கரீம் வாரிச்சுருட்டி எழுந்தான். மகனையும் எழுப்பினான். கரித்துணிக்கைகளை அசைபோட்டுப் பல்துலக்கி அவர் தயாராய் வைத்திருந்த வெந்நீரில் முகம் அலம்பினார்கள்.

இலங்கை ஆலைகளின் உலக சாதனையாக ஊசல் மணக்கும் ஊசலரிசிப் பழஞ்சோறும், சூடுகாட்டிய மட்டிச்சதைப் பழங்கறியும் நிசிக்குளிரில் கரும்பாக. கடைந்தெடுத்த அமுதாக….. உணவு முடிந்ததும் உலர்ந்த தென்னங் குருத்தும் நிலாவெளிப் புகையிலையும் நெருப்புக் கொள்ளியும் கொணர்ந்து வைத்தாள் ஹலீமா. மனித இயந்திரத்திற்குப் புகை மூலம் சூடு காட்டுவதற்கான ‘றேக்கை’ க்குத் தேவையான மூலவஸ்த்துக்கள் அவளும் பத்தாவின் தேவைகள் அறிந்த பதிவிரதை. பணிவிடை முடிந்ததும் புறப்பட ஆயத்தமானார்கள்.

‘அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான்.’

கரீமின் மனைவி நெட்டுயிர்ப்புடன் பிரசவித்த நம்பிக்கைப் பல்லவி. அவள் பெருமூச்சு கொளுந்து விட்டெரியும் குப்பி விளக்கின் ராட்சசச் சுடரோடு மோதித் தணிந்தது.

பல்லவி?

கரிமைப் பொறுத்தவரை இடிமுழக்கம்.

இடியொலிக்கு அதிரும் நாகமாகத் தன்னை மறந்த நிலையில் தலைமேற் சுமத்தப்பட்டுள்ள கடமைச் சுமை கொல்லன் பட்டரைப் பிடிச்சிராவியாக நெஞ்சை அழுத்துவதான மனப்பிராந்தியில் காரியத்திலீடுபட்டான். மூலையிலே பதுக்கி வைத்திருந்த ‘டைனமட் வெடிகளை அதீதக் கரிசனையோடு எடுத்து மடியில் வைத்து செருகிக் கொண்டான்.

தொழிலுக்கு வெளிக்கிடும் போதெல்லாம் முதலில் மனைவியைப் படலைக்கு அனுப்பி ஆள்நடமாட்டம் இல்லை என்பதற்கறிகுறியாக ‘உங்களைத்தான்’ எனும் சங்கொலி பிறந்ததும் வெண்கலக் குமிழ் போன்ற அவள் வதனத்தில் முளிவிசகளம் பெறும் சம்பிரதாயத்தையே மறக்குமளவுக்கு ஆதுரப்பட்டான். கணவன் சம்பிரதாயத்தை மறந்தாலும், மனைவி தன் கடமையிற் தவறவில்லை.

பாலை வெளியாக வெளியேறிச் சென்று கிடந்த இல்லறச்சோலையில் வசந்தம் வருஷித்த ஒரே குத்துவிளக்கு ஒளி உமிழ வகையின்றி மூலையிலே முடங்கிக் கிடக்கின்றது. திரிவிட்டு, நெய்வார்த்துத் தீபமேற்றி வைத்தால்தானே குத்துவிளக்கு குலவிளக்காக ஒளிரும். தூண்டாமணிவிளக்கென்றாலும் ஒரு தூண்டுகோல் வேண்டும்.

விளக்கிற்குத் தூண்டுகோல்

பெண்ணிற்கு?

மாப்பிள்ளை என்ன குப்பையில் கீரையா? கரீமைப் போன்றவர்கள் இலகுவிற் பெற்றுவிட? கலியாணச் சந்தையில் கரீம் பேரம் பேசிய மாப்பிள்ளையின் பெறுமானம் நானூற்றொரு ரூபாய்கள்.

முதல் படைத்தவன் கொடுத்த தோணியை வங்காளக் கடலிற் செலுத்திப் பாறைகளை அண்டி நங்கூரம் பாய்ச்சித் தூண்டிலில் இறையைக்குத்திப் போடுவான். சூரை, சுறா, பாரை, பாலை மீனென்று தோணி நிரம்பி விடும். காலந்தான் கடமையிற் தவறி உடுங்கணங்கள் தங்கள் நியதியிற் பிசகினாலும் பிசகலாம். நிறைமாதக் கர்ப்பிணியின் சாயைகாட்டி மச்சச் சூலுடன் கரைதட்டும் தோணியை வரவேற்க உடையவன் தவற மாட்டான். கறிப்பாட்டுக்கு ஒரு சிறியதைக் கையிலே பிடித்த பிடித்த வண்ணம், துடுப்பையும் தூண்டில் முதலானவற்றையும் தோளிலே போட்ட வண்ணம் வீடு திரும்புவதோடு கரீமின் அன்றைய கடமை முடிந்து விடும். தோணியையும் அதற்குத் தேவையான பணவரிசையும் கொடுத்தவனுக்குத் தினாந்தரப் படியளக்கவா முடியாது?

சீதக்காதியின் வாரிசு என்ற கற்பித்தாலோ என்னவோ செருப்பாக உழைத்தவன் என்ற நன்றி உணர்வுடன் நெருப்புக்கு இரையாகும் நிலையிலிருந்த தோணியைக் கரீமுக்கு அன்பளிப்பும் செய்ததோடு, படியளக்குங் கடமையிலிருந்தும் அவன் தன்னை விடுவித்துக் கொண்டான். ஓட்டை உடைசல்களை ஒட்டு வேலையால் மறைத்துக் கொண்டான் கரீம். சொந்தத் தோணியின் புண்ணியத்தால் அன்றாடம் உண்டு உடுக்கும் செக்குச் சுழற்சியில் வலம் வந்த கையோடு மகளுக்கும் மனைவிக்கும் இரண்டொரு சிறு நகைகளைச் செய்யுமளவுக்குத்தான் “கஜானா” இடங்கொடுத்தது.

தன் தகுதியை எகிறிய வரனுக்கு ஏங்காமல், ‘ஏழைக்கேற்ற எள்ளுருண்டை’ கிடைக்காமலா போகும்? விட்டுத்தள்ளவும் முடியவில்லை. நேர்ந்து தவமிருந்து நெய்யால் விளக்கெரித்து ஆசைக்குப் பெற்று அருமைக்கு வளர்த்த ஏகபுத்திரி. அவனைத்தான்… என்று ஒற்றைக்காலில் நாரைத்தவம் புரிகின்றாள்.

கரீம் வாலிபப் பராயத்தில் துடுக்குக்காரன், சண்டியன். ஆகக் கூடினால் இரண்டொரு அந்தர் மீனுக்காகத் தொடுவானுக்குத் தோணியோட்டி வெயிற்பால் குடிப்பது அவனுக்கு என்னவோ போலிருக்கும். மீன்பிடி இலகாவின் கண்ணிலும் பொலிஸ்காரனின் பார்வையிலும் பொடி தூவிவிட்டு பெரியமீன் பாட்டமாகப் பார்த்து ஒரு வெடியைப் போட்டால் ஆயிரக் கணக்கிற்தேறும், அவனது வாலிப முறுக்கிற்கு வாரப்பாடான தொழில், கிண்ணியாக் கடற்கரையில் ‘டைனமைட்’ காரர்களை கண்காணிக்க நேர்ந்த ஊர் வலியை நொந்து கொள்ளாத மீன்பிடிப் பரிசோதகர்கள் அபூர்வத்திலும் அபூர்வம். கரீமின் சீனடியிற் சிக்கி வாதையற்றோர் அதிகம் பேர். துணிந்து படகில் வந்து தன்னைப் பிடிக்க முயன்ற பரங்கிக்காரனைத் துடுப்பால் அடித்துக் கடலிற் சாய்த்த பரிதாபத்தோடு அந்த வெடி விவகாரத்தைக் கைகழுவி விட்டான்.

எந்தக் கையால் அதனைத் தொடுவதில்லையென்று சங்கற்பஞ் செய்தானோ, அதே கையாற்தான் இன்று அதனை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். அறிந்து கொண்டே சட்டவிரோதச் செயலில் ஈடுபடுகிறேன் என்பதை அவன் உணர்கின்றான். மகளின் கழுத்திலே தாலியேற்றிச் சுமங்கலியாகப் பார்க்க வேண்டும் என்ற அபிலாசையின் உந்துதலால் சட்டத்தை மீறுவதையும் அவன் பொருட்படுத்த தயாரில்லை. எத்தனையோ பேரிடம் கடன் கேட்டு ஏமாந்த நிலைமையிற்தான் இந்த முடிவுக்கு வந்தான்.

‘அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான்’

நெஞ்சமெலாம் நிறைந்து வழிந்து உடலின் அணுவறை தோறும் நிரவிவிட்ட அந்த வாக்கியம் அவனை அறியாமலேயே கரீமின் நாவில் உச்சாடனம் பெறுகின்றது.

சிறகாம் கைகளால் வயிலலைக்கும் கடைச்சாமச் சேவல்களின் ஓங்கார நாதத்திற்கூட அதே வாக்கியத் தொடர் இழைந்தொலிப்பதான எண்ணம் அவனுக்கு. பட்சிசாரங்கள் சேவலின் தானைத் தலைமையேற்று இருளடிமைத் தளை அறுக்கும் சமரிற்குதித்து விட்டன.

நீர்த்தாகத்தில் ஆடிக் காடையிற் சேறு கண்டு விட்ட குட்டையை விரையும் கரடியை உருவகித்து கடற்கரையை அடைகின்றனர் வாப்பாவும் மகனும். துடுப்பையெடுத்து இரு கைகளாலும் கூட்டிப் பிடித்து உலக்கை போடும் பெண்ணாக ஓங்கி மெல்லலைகளின் முத்தத்தில் கிறங்கிக் கிடக்கும் குருத்து மணலிற் குத்தி நாட்டுகிறான் கரீம். புகையிலைத் துணிக்கைக்கு உலர்ந்த தென்னங் குருத்தைச் சின்னி விரலளவு கிள்ளிப்போர்வை போர்த்து உதடுகளை குறடாக்கி றேக்கையை இழுத்துவிடும் ஒரு ‘தம்’ புகையின் வெக்கையில் கொட்டியாரக்குடாவின் வைகறைக் குளிரென்ன தூந்திரத்துச் சீதனத்தையே ஒரு கை பார்த்திடத் துடிக்கும் இறுமாப்பு.

தந்தையையும் தனயனையும் இரு அந்தங்களிற் சுமந்து கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளை அனாசாயமாக உதறித்தள்ளிவிட்ட முதுமை இலச்சினைகள் கரீமின் சிட்டையில் மறைவுண்டிருக்கும் பெருமிதத்தில் மார்க்கண்டேய வரம் பெற்ற மங்கையின் தருக்குடன் தோணி வழுக்கிச் செல்கிறது.

‘ஆண்டவா! வல்ல பெரிய றகுமானே! ஏழைக்கிரங்கு முகம்பாரு நாயனே”

மனைவி கூறிய நம்பிக்கை வாக்கியத்தைத் தாரகமந்திரமாக அடித்த பாவனையில் அதற்கு அழுத்தங் கொடுத்து ஒரு தரம் உச்சரித்துக் கொள்கிறான் கரீம். ‘சறுவா’வின் மடியை அவிழ்த்து வெடிகளையும், தீப்பெட்டிகளையும் ஒரு தரம் பார்த்து விட்டு மடியைச் செருகிக் கொள்கிறான்.

“உன்னையே இல்லை என்பார்க்கும் இரங்கும் தயாபரனே. ஏழைக் குமருக்காக மனமிரங்கு நாயனே!”

“வீச…. ஓடிவாடியம்மா…… ஓடிவா! அம்மா தாயே! செகப்பாக ஓடிவா.”

கார் நீளக் கம்பளத்தில் முத்துப் பரல்கள் உருளுவது போல கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு நீர்ச்சுழிப்புப் பரவை, நுங்கு நுரைக்கொந்தளிப்புடன் எழிற் தோற்றங் காட்டுகிறது. பிரிந்த தாயின் வரவை தொலைவிலே கண்ட தலையாக ஆற்றலை ஒரு வழிப்படுத்த அந்தச் சுழிப்புப் படலத்தினூடே கட்புலனை நிலையோட விடுகின்றான் கரீம். அவன் தொலை தூரத்திலேயே இலைப்பின் தன்மையைக் கொண்டு மீனை இனங் காணுங் கலை நன்கு கைவரப் பெற்றவன். பாரை மீன் பாட்டம். இரண்டாயிரம் பாரைகளுக்கு மேற்தேறும் என்பதை அந்த மறுகும் மயங்கிகளிற்கூட மட்டிட்டுக் கொள்கின்றான் கரீம். ஒரு வெடியை வெடிக்க வைத்து பேய்ச் சுருக்குகளும். சட்டத்தின் காபந்துக்காரர்களும் நெருங்குவதற்கிடையில் ஐநூறு பாரைகளையாவது சுழியோடிவிட்டால்….. என்று தனக்குள்ளேயே அங்கலாய்த்துக் கொள்கிறான்.

“அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்த்துவிட்டான்” என்று சொல்லிக் கொள்வதிலே அவனுக்குப் பேரானந்தம். சுற்றுமுற்றும் பார்க்கிறான். அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைநதிரை பூத்த அவனது வதனத்தில் வெற்றிப் புன்னகை பொன்னவரை மலர்க்கொத்தின் காந்தி காட்டுகிறது. துடுப்பையெடுத்துத் தோணியை வலிக்கிறான். முதலைக் குட்டிக்கு யாரும் நீந்த கற்றுக் கொடுக்க தேவையில்லை. மகனுந்தான் துடுப்பு வலிக்கிறான். வள்ளம் வாயுவேகத்திற் சறுக்கிச் செல்ல வெற்றிக் கம்பம் நெருங்கிவிட்டதான் பூரிப்பில், மல்லிகைக்குவையில் மிதப்பது போன்ற இரவு குத்துவிளக்கிற்குத் தீபமேற்றி அதன் மங்கலப் பேரெழிலைக் கண்டானந்திருக்கலாம் என்றே நம்பிக்கைக் கீற்றுக்கள் கரீமின் இதய விதானத்திற் சித்திரந் தீட்டுகின்றன.

மடியை அவிழ்த்து, வெடியொன்றையும் தீப்பெட்டியையும் எடுக்கிறான்.

‘சர்………!’

ஊசிமல்லிகைப்பூவின் வாசியில் நெருப்புப் குச்சியின் நுனியில் தீயின் நாக்கு பரதம் பயில்கின்றது. ஆடல் அணங்கை ஆலிங்கனிக்கத் துடிக்கும் காதல் நாயகனே போல வெடியின் முகையின் திரி! மகளின் சங்கு கழுத்தில் அவளின் மனங்கவர்ந்த ஆணழகன் தாலி கட்டுவதான வதுவைக் காட்சி கரீமின் மனத்திரையில் நிழலாடுகின்றது.

தீயும் திரியும் புல்லுகின்றன.

திரியில் சுடர்விடுந் தீ மகளுக்கும் மருமகனுக்கும் எடுக்கவிருக்கும் மங்கள ஆராத்தியை நினைவூட்டுகிறதா? அதைப் பார்த்துக் கொண்டே நிற்பதில் உடலெங்கும் பரவும் இன்பலாகிரியின் சிலிர்ப்பில் கணங்கள் கரைவதைக் கூட மறந்த நிலை! கொண்டவன் குமுறலோ, மோதலோ இன்றி இடியிடித்து வள்ளத்தை ஒரு உலுப்பு உலுப்புகிறது.

‘யாமுகியித்தீன்!’

‘என்ன வாப்பா’

இடியினூடே இரு அவலக்குரல் பரிதாபமாக ஒலிக்கின்றன ஆமாம். வெடி கையைவிட்டுப் பிரியும் நிலையில் வெடித்து விட்டதால் மீனை வேட்டையாடுவதற்குப் பதிலாக கரீமின் உள்ளங்கையையே அது வேட்டையாடிவிட்டது. அள்ளிப் பிடித்து அனுபவித்த கை விரல்கள் துணிகையாக அலைபாயும் கடல் நீரில் மிதந்து தாழுகின்றன.

“மீன் ஓடுது. ஒன்றையும் பாராமத் தோணியை வலிமகன்’

‘ஒரு கை போனா மத்தக் கையிருக்கு. அவன் நாடினத்த நம்ம தேடினாத்தான் தாத்தாவின் கழுத்திலே தாலி கட்டிப் பார்க்கலாம் கரீம் தலையிற் சுற்றியிருந்த சால்வையை நனைத்துக் கையைச் சுற்றிக் கொள்கின்றான். நீலப்பாலில் மாணிக்க இழைகளை மறுத்து செய்த கம்பளத்தின் சுருக்கங்கள் போல எற்றும் வட்டல்களுக்கு எவ்விக் கொடுத்து விரைகின்றது வள்ளம். ‘கரீம்’ ரணவாதையிலும் இலட்சிய சித்தியின் வேட்கையிலும் உந்தப்பட்டுச் சாம்புகிறான். வள்ளம் மீன் பாட்டத்தை அண்மித்துவிட்டது.

‘மகன் குச்சியைத் தட்டு’

‘கரீம் வலக்கையால் மற்றவெடியைப் பிடித்துக்கொள்ள மகன் தீப்பெட்டியிற் குச்சியை உரசிப் பற்றவைக்கிறான்.

முண்டகமொக்காக முருகு தள்ளும் மடந்தையின் நெஞ்சத்து நுங்கின் பூரிப்புடன் கடற்குமாரியின் மார்பைப் பிளந்து தாவுகிறான் செப்பருத்திக் குதலை.

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஒக்டோபர் 2007, எம்.ஐ.எஸ்.ஹபீனா கலீல், மருதமுனை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *