எனக்கு மட்டும்..?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 2,021 
 

காலிங் பெல் ஒலிக்கும் சப்தம் கேட்டது. உடம்பு சரியில்லாமல் படுத்திருந்த நான், “ உள்ளே வா “ என்று குரல் கொடுத்தேன்.

என்னுடைய அக்கா பெண் நித்யா உள்ளே வந்தாள். அவள் முகம் இறுக்கமாக இருந்தது.

”வா நித்யா” என்று அவளை வரவேற்றேன்.

”மாமா உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

”உட்கார். என்ன விஷயம்? சொல்லு”

என் அருகில் உட்கார்ந்த அவள் என்னை நோக்கிச் சொன்னாள்.

”உங்களுக்கு மாசம் இருபதாயிரம் ரூபாய் மேலே செலவு ஆகிறது. அவ்வளவு வருமானம் உங்களுக்கு இல்ல. தப்பா நினைச்சுக்காதீங்க. நல்ல முதியோர் இல்லத்தில் சேர்த்து விடறேன். அங்கே நிம்மதியா இருங்க.”

அதிர்ச்சியில் என்னால் ஒரு நிமிடம் எதுவும் பேச முடியலை.

சற்று சுதாரித்துக் கொண்டு கேட்டேன்.

“ஏன்.. ஏன்… அப்படி சொல்றே நித்யா?”

“உங்களுக்கோ உடம்பு சரியில்லை. மருந்து மாத்திரை எல்லாம் வாங்கனும்.. எப்படியும் மாச செலவு ரூபாய் இருபத்தி இரண்டாயிரம் ஆகி விடுகிறது.. உங்களுக்கு மாசம் ரூபாய் பத்தாயிரம் பேங்க் வட்டி வர்றது . எனக்கு மாச செலவு ரொம்ப ஆகிறது. என் வீட்டுக்காரர் வேலையில்லாமல் வீட்டிலே உட்கார்ந்து இருக்கார். என் பெண் மாலினியின் பிரசவ செலவு வேறே இருக்கு. நானே விழி பிதுங்கி நிக்கறேன். உங்களுக்கு நா எதுவும் தர முடியாது. வேறு வழியில்லை. நீங்க முதியோர் இல்லம் தான் போகணும். நான் நல்லதா பார்த்துச் சேர்த்து விடறேன்.” என்றாள் தீர்மானமாக.

அவளை முறைத்துப் பார்த்தேன். .

“நான் பி காம் படித்திருக்கேன், ஒரு தனியார் கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை செய்து ரிடையர்ட் ஆகி இரண்டு வருசம் ஆகிறது. இப்போது என் வயது அறுபது. சீனியர் சிடிசன். ஆனால் தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கேன். . பென்ஷன் எதுவும் கிடையாது, பாங்கிலிருந்து வர்ற வட்டியை வைச்சு நானும் என் தங்கை சுபாவும் வாழ்ந்து கொண்டிருக்கோம். சுபா என்னை விட நான்கு வயசு சிறியவள். அவளுக்குக் காது கேட்காது. ஆனால் பேசமுடியும். என்னை மாதிரி. என் மனைவி பாமா கர்ப்பப்பை கேன்சர் வந்து இறந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. சாவதற்கு முன் இரண்டு வருசம் அவள் ரொம்ப கஷ்டப் பட்டுட்டா. அக்கா பெண் நித்யாவை சொந்த மகள் போல் வளர்த்து பாமா கல்யாணம் செய்து கொடுத்தாள்.

பாமா போனப் பிறகு நான் ரொம்ப கஷ்டப் பட்டு விட்டேன். எனக்கு ஹெரண்யா ஆப்ரேசன் நடந்தது. கண்ணுக்கு கேட்ராக்ட் ஆப்ரேசன். மூட்டி வலிக்கு காலில் ஆப்ரேஷன். பல் செட் வைக்க வேண்டியதாயிற்று. தலை வலி எப்பவாது வரும். ஒரு விதத்தில் அவள் போனது நல்லதுதான். இருந்திருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பாள்.

சுபாவுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது. சமையலறைக்குள் அவளை விடாமல் பாமாவே எல்லாவற்றையும் செய்வாள். அது இப்போது கஷ்டமா தெரிகிறது. நான் சாதம் மட்டும் வைத்து விடுவேன். கூட்டு, குழம்பு, ரசம், பொறியல் எல்லாம் ஒரு மாமி கொணர்ந்து விடுவார். ஒரு மாசம் முன்பு ஸ்டேஷனில் போகும் போது மயங்கி கீழே விழுந்து முதுகு தண்டில் அடிப்பட்டு விட்டது.. ஆஸ்பிட்டலில் தங்கி இரண்டு வாரம் சிகிச்சை எடுத்து வீட்டுக்கு வந்து இரண்டு மாதம் ஆகிறது,.. ஒரு மாசம் அட்டெண்டரை வைச்சிருந்தேன். அவனுக்கு மாசம் பத்தாயிரம் கொடுத்தேன். இப்போது வீட்டுக்குள்ளே மெதுவா நடக்கிறேன். நித்யா கூறியது எனக்கு தலையில் வெடி குண்டு போட்டதைப் போல் இருந்தது. அவள் மேல் எனக்கு அளவுக்கு மீறிய கோபம். அவளை வளர்த்து கல்யாணம் செய்து கொடுத்தோம். என்னுடைய வீட்டைக் கூட அவளுக்குக் கொடுத்தேன். பெண் கல்யாணத்துக்குப் பணம் வேண்டுமென்று அதை விற்று விட்டாள். எனக்கு ஒரு இலட்சம் கொடுத்தாள். இப்போ எனக்கு இருப்பது சொற்ப பணம். பேங்கில் போட்டு அதில் வரும் வட்டியில் நானும் என் தங்கையும் வாழ்ந்து கொண்டிருக்கோம். முதியோர் இல்லம் போகணுமாமே. எனக்கு அதில் துளி கூட விருப்பமில்லை”.

”நீ சொல்றது எனக்குப் புரியலை.”

“மாமா, இரண்டு முதியோர் இல்லத்தில் விசாரித்தேன். அங்கே நீங்க பிரியா இருக்கலாம். உங்களுக்குச் சொத்து எதுவும் இருக்கக் கூடாது. உங்க டிபாசிட் எல்லாம் என் பேரில் மாத்திடுங்கோ. நீங்களும் சுபாவும் அங்கே போய் இருங்கோ. உங்க பணம் என் பேரிலே பேங்க்ல இருக்கும். பின்னாடி உங்களுக்கு வேணும்போது நான் தரேன். என்று சாதுர்யமாகச் சொன்னாள் நித்யா.

அவள் சொல்வதை முழுவதும் நம்ப முடியாது. இப்போ அப்படிச் சொல்லுவாள். அப்புறம் பணம் தேவை என்றால் அதை எடுத்துச் செலவழித்து விடுவாள். எதுக்கும் முதியோர் இல்லம் போய் பார்த்து விட்டு கருத்தைச் சொல்லாம் என்று தோன்றியது.

“முதியோர் இல்லம் எங்கே இருக்கிறது ?”

“ஒன்று அம்பத்தூரில் இருக்கிறது. மற்றொன்று பல்லாவரத்தில் இருக்கிறது”.

“அங்கு இடம் இருக்குமா? நீ வேறே ப்ரி என்று சொல்கிறாய். எல்லாருக்கும் எப்படி இடம் கிடைக்கும்”.

“அதை நான் பார்த்துக் கொள்கிறேன்”.

“அப்போ நாளைக்கே போய் பார்த்து விடலாம்.. எனக்குப் பிடித்திருந்தால்தான் அங்குப் போவேன். பிடிக்காவிட்டால் என்னை வற்புறுத்தக் கூடாது”.

“அப்படியே செய்யுங்க மாமா”. நித்யா திருப்தியோடு அவள் வீட்டுக்குப் போனாள்.

அடுத்த நாள் காலை நானும் நித்யாவும் கிளம்பி முதலில் அம்பத்தூரில் உள்ள முதியோர் இல்லம் போனோம். அங்கு இருக்கும் பொறுப்பாளர் அறைக்குச் சென்றேன் சொத்து எதுவும் இருக்கக்கூடாது. இப்போ இடம் எதுவும் காலி இல்லை. காத்திருப்பு லிஸ்டில் வைச்சுப்போம். காலி ஆகும்போது நாங்க தகவல் தெரிவிப்போம். ஜ்ஸ்ட் பாக்கலாம்னு வந்தேன். எனக்குச் சொத்து எதுவுமில்லை என்று சொல்லி விட்டு முதியோர் இல்லத்தைச் சுற்றிப் பார்த்தேன்.

அந்த முதியோர் இல்லத்தில் ஒரு அறையில் இரண்டு அல்லது மூன்று பேர் தங்கியிருந்தனர். அங்கு மொத்தம் நாற்பது பேர் வசிக்கின்றனர். நாலைந்து பேர் படுத்த படுக்கையாக இருந்தனர். இரண்டு பேர் டையபர் மாற்ற வேண்டிய நிலையில் இருந்தனர். அந்த முதியோர் இல்லம் திறம்பட நிர்வகிக்கப்பட்டாலும் எனக்கு என்னமோ பார்த்தவுடன் அதைப் பிடிக்கலை. இன்னொரு விஷயம், யாருடைய முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்க முடியலை…

அடுத்து இன்னொரு முதியோர் இல்லம் போனோம்.. அது பல்லாவரம் பக்கத்தில் இருக்கிறது. அங்கு சுமார் இருபது பேர் இருப்பர்கள். ஒரு அறையில் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் இருந்தனர். எனக்கு அங்கு காலம் தள்ள முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. என் மனம் காலம் சென்ற பாமாவை நினைத்துக் கொண்டது. வேளா வேளைக்கு எல்லாம் செஞ்சு கொடுப்பாய். இரக்கமில்லாமல் என்னை அநாதையாய் விட்டுட்டு போய் விட்டாயே. இப்போ நான் திண்டாறேன். அவள் உருவம் என் மனதில் தோன்றி நீ சமாளிச்சுகோங்கோ என்று சொல்லியது போல் எனக்கு தோணிச்சு.

சரி, வா வீட்டுக்குப் போய் பேசிக்கலாம் என்று நித்யாவிடம் சொன்னேன். அங்கிருந்து கிளம்பி ஆட்டோவில் வீட்டுக்கு வந்தோம்.

என்ன மாமா சொல்றீங்க? என்று நித்யா கேட்டாள்.

நான் சிரித்துக் கொண்டே, “இரண்டு நாள் டைம் கொடு . யோசிச்சு சொல்றேன்.” என்று சொல்ல

”பல்லாவரம் முதியோர் இல்லத்துக்கு நீங்க போயிடறது நல்லதுன்னு எனக்கு தோன்றது மாமா. அம்பத்தூரில் உடனே சேர முடியாது. காத்திருக்கணும்..” என்றாள் நித்யா.

சுபா கிட்டே பேசிட்டு சொல்றேன். அவளுடைய விருப்பத்தையும் கேட்கணுமில்லையா?

அவ விருப்பம் இருக்கட்டும். உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லையே.

எனக்கு அங்குப் போய் இருக்க முடியுமா என்று சந்தேகமா இருக்கு. நாங்க இப்படியே தனியாகவே இருந்துடறோம்.

அப்படிச் சொல்லாதீங்க. உங்க நன்மைக்குத்தான் சொல்றேன். தனியா இருக்க்கிறது உங்க இரண்டு பேருக்கும் ஆபத்து. அதனாலே நான் சொல்றதை கேளுங்க. சுபா கிட்டே நான் புரிய வைக்கிறேன்.

அவள் பேசுவதைப் பார்த்தால் அவளுக்கு நாங்க சுமை ஆகி விடுவோம் என்ற பயத்தில் எங்களை முதியோர் இல்லத்துக்குத் துரத்த பார்க்கிறாள் போலத் தெரிந்தது.

நீ கஷ்டப் பட வேண்டாம். நாங்க பார்த்துக்கிறோம்.

”உங்களுக்கு இஷ்டமில்லைன்னா வேண்டாம். எப்படியாவது போங்க” என்று உரத்த குரலில் கூறியவள் ”. ”அப்புறம் பேசறேன்” கோபத்துடன் விர்ரென்று கிளம்பிவிட்டாள்.

அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் இவள் சொன்னதைக் கேட்கவில்லையென்றால் கோபம் பொங்கி வழிகிறது. இவளை நம்பி இனி பிரயோசனமில்லை என்று தோன்றியது.

”சீதாராமா எப்படி இருக்கே?” என்று கேட்டுக் கொண்டே என் நண்பன் ரகு என் அறைக்குள் வந்தான். நானும் அவனும் ஒன்றாக வேலை செய்தவர்கள். ஒரே நாளில் சேர்ந்து ஒரே நாளில் ரிடையர்ட் ஆனவர்கள். என்னுடைய போராத காலம் எனக்குச் சோதனைகள் நிறைய உண்டு. அவன் நல்ல ஆரோக்கியமா சுகமா வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கான்.

”வா, ரகு. இரண்டு முதியோர் இல்லம் போய்ப் பார்த்து விட்டு வந்தேன். எனக்கு இரண்டையுமே பிடிக்க வில்லை. நித்யா எங்களைப் பார்த்துக் கொள்ள மாட்டாளாம். முதியோர் இல்லம் போய் விடுங்க என்று

சொல்கிறாள். எனக்கு என்ன செய்வது என்று தெரியலை. அவளுக்கு நான் எவ்வளவோ செஞ்சேன். எல்லாத்தையும் மறந்து விட்டாள். நண்ணி கெட்டவ.”

அப்படி சொல்லாதே. அவள் நிலைமை அப்படி . நீ மறுபடியும் யோசி. சினியர் சிடிசன் ஹோம் தான் உனக்குச் சரிப்பட்டு வரும் என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் எவ்வளவு நாள் உறவுகளை நம்பி இருப்பது. நம்முடைய வாழ்க்கையை நாம் தான் வாழணும்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி வாழ்க்கையில் துன்பமும் துயரமும் வருகிறது? நான் என்ன தப்பு செய்தேன்? என்று கேட்டேன். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

உனக்கு மட்டுமா துன்பம். உன்னை விடத் துன்பம் அனுபவித்தவர்கள், அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.. நமக்கு ஏன் துன்பம் வருகிறது என்று ஆராயாமல் மற்றவர்களுக்குப் பயனுடையதான வாழ்க்கையை வாழ்ந்தால் உனக்கு வாழ்க்கையில் சலிப்பு இருக்காது. என் நண்பர் ராமசந்திரன் காஞ்சிப்புரத்திலுள்ள ஒரு சீனியர் சிடிசன் ஹோமில் இருக்கிறார். அவரிடம் பேசி விட்டு முடிவு எடு என்றவர், நண்பரின் மொபைல் நம்பரை கொடுத்தார்.

அப்ப்டியே செய்கிறேன் என்று மொபைல் நம்பரை குறித்துக் கொண்டேன்.

கொஞ்ச நேரம் பேசியிருந்து விட்டு ரகு கிளம்பிப் போனான்., ”இனிமேல் என்னால் முடிந்த உதவி செய்வேன்” என்ற சுபா, வெளியே போய் செய்ய வேண்டிய வேலைகளைப் பொறுப்பு எடுத்துக் கொண்டு செய்ய ஆரம்பித்தாள்.

ஒரு நாள் சுபா வெளியே போய் ஓட்டலிருந்து டிபன் வாங்கி வரும் போது இரு சக்கர வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த அவள் மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டாள். பல்துறை மருத்துவ குழுவினர் அவள். மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனர். அதையடுத்து அவளுடைய உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்கச் சம்மதம் தந்தேன்.அவளது கல்லீரல், சிறுநீரகங்கள், விழிப்படலங்கள் தானமாக கொடுக்கப்பட்டன.

நீரிழிவு நோய், ரத்த அழுத்தப் பாதிப்பு அவளுக்கு இல்லாததால் அனைத்து உறுப்புகளும் தேவையானவர்களுக்குப் பொருத்தப்பட்டன. இதன் வாயிலாக, ஐந்து பேருக்கு மறு வாழ்வு அளிக்கப் பட்டது.

காது கேட்காத என் தங்கை இந்த உலகை விட்டுப் போகும் போது மற்றவர்களுக்கு நன்மை செய்துவிட்டுப் போனதை நினைத்து எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. என் மனசில் ஒரு

எண்ணம் தோன்றியது. மிஞ்சியுள்ள எனது வாழ்நாட்களில் நான் மற்றவர்களுக்குப் பயன் தரும் வாழ்க்கையை வாழ வேண்டுமென்று உறுதி செய்து கொண்டேன். காஞ்சிபுரத்திலுள்ள சீனியர் சிடிசன் ஹோமில் இருக்கும் ராமசந்திரனுடன் போன் செய்து பேசினேன். என்னுடைய துரதிர்ஷ்டம். அங்கு இடம் இல்லை. காலி ஆனதும் சொல்றேன் என்று அவர் கூறினார்.

அந்த சமயத்தில் எரிகிற நெருப்பில நெய்யை விடற மாதிரி, என் அவுஸ் ஓணரும் வீட்டை காலி பண்ணுன்னு சொல்லிட்டான்.

மனைவி போயாச்சு. தங்கை போயாச்சு. அக்கா பெண் நித்யாவையும் நம்ப முடியலை. நான் தனி மரமா ஆகி விட்டேன் . எனக்கு எல்லாமே வெறுத்து விட்டது. என்ன வாழ்க்கை ! என்ன உலகம் !

அந்தத் தருணம் வானத்தைப் பார்த்தேன். மிகவும் இருண்டு இருந்த போதிலும் வான் கடலில் விண்மீன்கள் கண் சிமிட்டிப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. இருள் அதிகமாகும்போது நட்சத்திரங்கள் வெளிவருகின்றன போலும் என எண்ணி வியந்தேன்.

என்னுடைய பிரச்சனையை என் நண்பர்களிடம் கலந்து ஆலோசித்தேன். எல்லாரும் நடைப் பயிற்சி செய்யும் நண்பர்கள். என் பிரச்சனைக்கு ஒரு விடிவுகாலம் பிறந்தது. என் நண்பன் கோபால் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தான். கோபால் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்னால் புற்று நோயால் இறந்து விட்டாள். அவள் நினைவாக ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து கேன்சர் நோயாளிகளுக்கு இலவசமாக மாத்திரை, மருந்து கொடுக்கும் நற்பணியினை செய்து கொண்டிருக்கிறான். அமெரிக்காவில் வசிக்கும் அவனுடைய பெண் அந்த டிர்ஸ்ட் பணிகளுக்காக மாம்பலத்தில் ஒரு சிறிய ஃபிளாட் வாங்கிக் கொடுத்திருக்கிறாள். .. கோபால் என்னிடம் அந்த பிளாட்டில் ஒரு அறையில் தங்கிக் கொண்டு டிரஸ்ட் வேலைக்கு உதவ முடியுமா….? என்று கேட்டான். கரும்பு தின்னக் கசக்குமா? மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டு புதிய வேலையை ஏற்றுக் கொண்டேன். சாப்பாட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு நல்ல மெஸ் இருக்கிறது.

என் மனோபாவம் இப்போது மாறி விட்டது. வாழ்க்கை இனிக்கத் தொடங்கியது. சமூகத்துக்கு உபயோகமானதைச் செய்கிறேன் என்று எண்ணும்போது பெருமையாக இருந்தது.

நித்யா எப்பாவது என்னிடம் வந்து தன் கஷ்டத்தைச் சொல்லிப் புலம்புவாள். எனக்கு நித்யா மேல் துளி கூட கோபம் இல்லை. நான் அவளுக்கு ஆறுதல் சொல்லி என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்.

ஒரு நாள் இரவு ரகு என்னைப் பார்க்க வந்தான். எப்படி இருக்கே? என்று கேட்டான்.

நன்றாக இருக்கேன் என்றேன்.

”நல்லது, மற்றவர்களுக்கு உதவி செய்கிறாய்.. ரொம்ப சந்தோஷம். ” என்று என்னைப் பாராட்டினான். ”எல்லாம் கடவுள் காட்டும் வழி” என்றேன்.

”எனக்கு மட்டும்னு….. அன்னைக்குக் கண்ணீர் வடித்தாயே. இப்போ என்ன சொல்றே?” என்றான்.

”எப்படியோ இருந்தேன். இப்ப எப்படியோ இருக்கேன் ! எல்லாம் அவன் செயல். எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும்தான் துன்பம் வருகி’றது. ஏன் எப்படி என்பது புரியாத புதிராக இருக்கிறது. கடவுளின் அந்தரங்கத்தையோ அல்லது கருத்தையோ உலகத்தில் வாழும் சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது. எப்பவுமே ஆசை மட்டும்தான் துன்பத்துக்குக் காரணமென்று திட்டவட்டமா சொல்ல முடியாது.. துன்பம் வரும் போது சோர்ந்து விடாமல் அடுத்தது என்ன என்று செயல் பட்டால் வாழ்க்கை இனிக்கும்” என்றேன்.

”சரியாகச் சொன்னாய்” என்ற ரகு, புன்னகையுடன் என்னை இறுக்க அணைத்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *