கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 22, 2023
பார்வையிட்டோர்: 3,930 
 

    (2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

    10. நீலக் கலர்ல கயிறு கட்டிக்கலாமா? | 11. லூசாடா நீ? 

    ஓரு வாரம் ஆயிற்று. எல்லோரும சாமிநாதனிடம் “கடைசியில பார்ரா, உள்ளூருக்குள்ளேயே உனக்குப் பொண்ணு இருந்திருக்குது. அங்கீம் இங்கீம் சுத்திட்டுத் திரிஞ்சிருக்கே! நல்ல புள்ளடா! தண்ணி கிண்ணி போடாம நல்லா வெச்சுப் பொழச்சு நல்லா இரு.. கல்யாணச் சாப்பாடுதான் மொதல்லயே எங்களுக்குப் போட்டுட்டியே!” என்று தான் பேசினார்கள். 

    பிரியா வீட்டில் தான் அவள் சித்தப்பன்கள் தைதை என்று குதித்தார்கள் பிரியாவிடம். “ஏண்டி? ஏன் இப்படிப் போச்சு உம்பட புத்தி? சரி சாமிநாதனைத்தான் கட்டிக்குவேன்னா உங்கம்மாகிட்ட சொல்ல வேண்டிது தான? சாமத்துல எந்திரிச்சுப் போயி அவன் ஊட்டுல உட்கார்ந்துட்டுத் தாலியக் கட்டிக்கிட்டிருக்கியேடி. வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கிற புள்ளைன்னா உனக்கு அவ்வளவு தூரத்துக்கு ஆயிப்போச்சா? ஒரு யோசனை பண்ண வேண்டாம்? நம்ப குடும்பத்தப் பத்தி நாலு பேரு நாலு விதமா பேசிப் போடுவாங்களே அப்படின்னு! என்ன புள்ளை போ.. மயிருப் புள்ளை. அட நம்ம கோயில்ல நாலு பேர்த்து முன்னாடி தாலி கட்டிக்கிட்டிருந்தீன்னாக் கூட மனசுக்கு நிம்மதியா இருந்திருக்குமே! இனி அவனை நாங்க வாங்க மாப்ள, வாங்க மாப்ளென்னு கூப்பிடணும்!” என்று கத்தியவர்களைப் பிரியாவின் அம்மாதான் “நடந்துடுச்சு.. இனி என்ன பேச்சு? உடுங்க! புள்ளைக்குப் புடிச்சுப் போச்சு. ஊட்டுல சொன்னா எதாச்சிம் சொல்லுவம்னு நெனச்சுப் பண்ணிப் போட்டாளாட்ட இருக்குது! பேசுனா மட்டும் இனி எல்லாம் இல்லைன்னு அழிஞ்சு போயிருமா! உடுங்க. இனி அவ வாழ்க்கைய அவளே பார்த்துப்பா” என்று பேசி அடக்கிவிட்டது! 

    அன்றைய இரவில் சாமிநாதனுடன் சைக்கிளில் வந்தவள் அவள் வீட்டில் எழுந்து பிள்ளையைக் காணோம் என்று கசமுசாவெனப் பேசாமல் இருந்திருந்தால் சப்தமில்லாமல் வீடு சென்று படுத்துவிடுவது என்ற முடிவோடு தான் வந்தாள். ஆனால் எப்படியோ விழித்துக் கொண்டு விட்டிருந்தார்கள். அதனால் தான் சாமிநாதன் வீட்டுக்கே வந்துவிட்டாள். அவளாகவே யோசித்து சாமிநாதனைத் தாலிக்கயிறு கட்டச் சொல்லிவிட்டாள். சின்னசாமியின் மாமன் வாசலில் வீசியெறிந்து விட்டுப் போன மஞ்சள் கயிற்றுக்குப் புதிதாய் மஞ்சள் தடவி பிரியாவின் கழுத்தில் கட்டிவிட்டான். பொண்ணு வேணும் பொண்ணு வேண்மென்று சுற்றிக் கொண்டிருந்தவனுக்குப் பொண்ணே வேண்டாம் என்று நினைத்தபோது வீடு தேடி வந்து தாலிகட்டச் சொல்லி ஒரு பெண் உட்கார்ந்திருப்பாள் என்று நினைத்தானா ஒன்றா? எதற்குமே மாட்டேன் என்று சொல்லியே பழக்கமில்லாத சாமிநாதன் இதற்கும் மாட்டேன் என்றா சொல்லிவிடுவான். சொன்ன பத்தாவது நிமிடத்தில் தாலி கட்டினான். “சாமத்துல ரெண்டு மணிக்குத் தாலிகட்டினவன் நான் தான்” என்றான் அவளிடம். சாமிநாதன் ஒரு வாரமாய்க் குடியை விட்டொழித்தான். சரோஜா அக்காவுக்கு ரொம்ப சந்தோஷமாயிருந்தது! “எப்படியோ இப்படி அமைஞ்சிருக்குது பாரு உனக்கு” என்றது. 

    பிரியா உள் அறையில் தரையில் தனியாகப் பாய் விரித்துப் படுத்துக் கொண்டாள் ஏன் என்று கூட சாமிநாதன் அவளிடம் கேட்கவில்லை. மல்லிகைப்பூ வாங்கிவந்து கொடுத்தாலும் அது சாமி படத்திற்குப் போனது. ஆனால் மற்றபடிக்குச் சுமுகமாய்த்தான் பேசினாள். என்ன தான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று தான் இவனுக்கு எதுவும் விளங்கவேயில்லை. சரி, விட்டுப் பிடிப்போம் என்று நினைத்தான். ராஜேந்திரன் செல்லுக்கு இவன் சந்தேகமாய் அடித்துப் பார்த்தாலும் அது சத்தமில்லாமல் தான் இன்னமும் இருந்தது! இவன் பிரியாவைக் கட்டிக் கொண்ட விசயம் அவனுக்குத் தெரியுமா என்று கூடத் தெரியவில்லை. என்னதான் ஆனான் என்று பார்க்க இனி அவன் வீடு தான் போகவேண்டும். 

    வீட்டில் அப்பனுக்கு ஒரு கோட்டர் கொண்டுபோய்க் கொடுத்த போது இவன் அப்பனையே பிரியா சப்தம் போட்டாள். “குடித்தால் வீட்டுக்குள் படுக்கக் கூடாது, ரோட்டில் தான் போய்ப் படுத்துக்கணும். இன்னையோட கடைசியா இருக்கோணும்” என்று சொல்லிவிட்டாள். ‘அப்பனைக் கோட்டர் குடுத்துக் கெடுப்பது உன் வேலையா?” என்று திருப்பி இவனிடம் சண்டைக்கு நின்றாள். அப்பனின் சமையலையே சாப்பிட்டு வந்தவனுக்கு இவள் சமையல் டேஸ்ட்டாக இருந்தது. ஆனால் பருப்போ ரசமோ இன்னம் ஊத்து என்று கேட்கத்தான் சங்கடமாய் இருக்க ஊற்றியதைப் பிசைந்து சாப்பிட்டுவிட்டு எழுந்தான். 

    வழக்கம்போல எச்சில் வட்டலைக் கழுவ எடுத்தால் விடுவதில்லை. அவளே எடுத்துப் போய்க் கழுவுகிறாள். ஆனால் ராத்திரியில் மட்டும் தனியே பாய் விரித்துப் படுத்துக் கொள்கிறாள். இத்தனை நாள் சும்மா கிடந்தமாமா இனியும் கெடக்கறதுக்கு என்ன மொடை என்று தான் கிடந்தான். ஆனால் இன்று உடம்பு அசதி அதிகமாய் இருந்தது. சைக்கிள் கண்மணி டாஸ்மாக் கடைக்கே திரும்பியது! வேண்டாம் கண்மணி என்று சொன்னால் கேட்கவா போகிறது! ஒரு கோட்டர் மட்ட்டும் ஊற்றிக் கொண்டான். ஒரு வாரமாய்க் குடிக்காமல் விட்டதற்குக் குப்பென ஏறிக் கொண்டது. 

    வீட்டினுள் கொண்டுபோய் சைக்கிளை நிறுத்திவிட்டுக் கட்டிலில் விழுந்தான். ப்ரியா இவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் “இன்னைக்கு ஏன் லேட்டு? ஏதோ வாசம் அடிக்குதே” என்றாள். 

    “அடிக்காம என்ன பண்ணும் பிரியா, தாலியக் கட்டச் சொன்னே கட்டினேன். கல்யாணம் பண்டியும் தனியா கட்டில்ல கிடக்கேன். இன்னைக்கு ஒரே சடவூ.காலு வேற வலிச்சுட்டே இருந்துச்சா ஒன்னும் முடியல” 

    “சடவுன்னா எல்லாரும் தண்ணி தான் போடறாங்களா?” 

    “ஆமாம் பிரியா! ரொம்ப முடியலீன்னா மாத்திரை போடறாங்க. சும்மா ஏன் மாத்திரை போடாட்டி இதையத் துளி ஊத்திட்டம்னா காலையில் எந்திரிக்கப்ப கைகால் எல்லாம் உட்ட மாதிரி வெடுக்குனு இருக்கும்” 

    “சரி, நான் எங்கம்மா ஊட்டுக்கே போய்ப் படுத்துக்கறேன்” “இங்க கெடந்தாலும் அவத்திக்கித்தான தனியாக் கெடப்பே! நீ எங்க போய் படுத்தாலும் நான் தனியாத்தான் தூங்கணும்! இத்தன காலமா எப்பிடியோ அதே தா. இதே கட்டல்ல தான் எனக்குத் தெரிஞ்சு தனியாவே கெடக்கேன். எங்காத்தாளும் பத்து வருசத்துக்கு முன்னையே என்னைய உட்டுப்போட்டு ஓடிப்போயிட்டா! சரி எங்கப்பன் எங்கே காணம்?” 

    “ என்ன இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கே நீயி! உங்கொப்பனும் சடவா இருக்குதுன்னு குடிச்சுப் போட்டன். நாம் போயி மாரன் ஊட்டுத் திண்ணையில படுத்துக்கறேன் சாமி. ‘சோறு வேண்டாம்’னுட்டுப் போயிடுச்சு! பார்த்தா நீயும் குடிச்சுட்டு வந்திருக்கே! தனியா படுத்துக் கெடக்கேன். அப்பிடிங்றே! நான் ஊடு போயிப் படுத்துக்கறேன்கறேன். போக வேண்டாம்னு சொல்ல உம்மட வாயில வரலை பார்த்தியா!”

    “நான் எதுக்குப் பிரியா உன்னைப் போக வேண்டாங்றேன்! நான் தண்ணி போட்டுட்டு வந்துட்டேன். உன்னை எதாச்சிம் பண்டிப் போடுவன்னு பயந்துட்டு தான உன் ஊடு போறேன்னு சொன்னே! தண்ணி யாரு போடுல பிரியா! எல்லாரும் மனசு சங்கடமானா போடத்தான் செய்வாங்க! தண்ணி போடத் தெரியாதவங்க தான் சுத்திம் புத்திம் பார்த்துட்டு சாவுறதுக்குத் திரியறாங்க. என்னால ஒரு வாரமா சரியாத் தூங்க முடியல பிரியா. தூக்கமே வர மாட்டீங்குது! இன்னிக்காச்சும் தூங்கலாம்னு குடிச்சுப் போட்டேன். குடிச்சுட்டா சோத்துக்கு வதுலா வேற எதாச்சியும தின்னுப் போடுவேன். நீ பாட்டுக்குத் தூங்கு பிரியா. நான் அப்பிடி எல்லாம் கெட்டவன் கெடையாது. நல்லவனை, கெட்டவன்ங்றே, கெட்டவனை நல்லவன்ங்றே!”

    “இப்பிடிப் பேசிட்டு இருந்தீன்னா கண்டிப்பா நான் எங்கம்மா வீட்டுக்குப் போயிடுவேன்” என்றாள் பிரியா.! திடீரென சாமிநாதன் தலையை உயர்த்தி முக்கிலிருந்த கட்டல் காலில் மண்டையை மட்மட்டு மட்டு என இடித்து மோதினான். பிரியா பயந்து போய் அவன் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தாள். சாமிநாதன் தலையிலிருந்து ரத்தம் வடிந்தது! 

    “பாரு மண்டை ஒடஞ்சு போச்சு பாரு. லூசாடா நீ!” என்று உள்ளறைக்குப் போய் காபிப்பொடி டப்பாவை எடுத்து வந்தாள். இவன் தலையைக் குனிய வைத்துக் காபிப்பொடியைக் காயத்தில் வைத்து அழுத்தினாள். காபிப்பொடி டப்பாவைக் கொண்டு போய் உள் அறையில் வைத்துவிட்டு வந்தாள். 

    “இந்த மாதிரி எல்லாம் பண்ணாதே ஆமா! தண்ணி போட்டிருந்தங்காட்டித் தான மண்டையை இடிச்சுக்கச் சொல்லுது உன்னை. அதனால தான் தண்ணி போட வேண்டாங்றேன். இந்தா துணி, ரத்தத்தைத் தொடச்சுக்கோ” என்று நீட்டியவளிடம் வாங்கித் துடைத்தான். 

    “ஊடு போறேன் ஊடு போறேங்றியே. ஊடு போறதுக்குத்தான் என்னைத் தாலி கட்டச் சொன்னியா? நீ சொன்னதும் மறுபேச்சுப் பேசாம உனக்குக் கட்டினேன். நீ சொன்னதுக்கு எதாச்சும் மாட்டேன்னு சொன்னனா?” என்றான். திரும்பக் கட்டிலில் சாய்ந்தான். 

    “நான் எங்க வீட்டுக்குப் போகலை. எந்திரிச்சு வந்து சாப்பிட்டு நீ படுத்துக்க!” 

    “இப்போ சாப்பிட்டா கக்கி வச்சுடுவேன். ஒரு வாரமாக் குடிக்காத இருந்தங்காட்டி திடீர்னு கிறுகிறுப்பா இருக்கு. ஒரு மணி நேரம் கழிச்சுத் தின்னுக்கறேன். நீ சாப்பிட்டுப் படு” 

    “நானெல்லாம் ஒன்பது மணிகே சாப்டாச்சு! தினமும் அதே பழக்கமாப் போனங்காட்டி அந்த நேரமானா பசிக்கும். உனக்குப் போட்டுட்டு நீ சாப்பிட்டின்னா நான் கழுவி வெச்சுட்டுத் தூங்கிடுவேன்” 

    “நானே கழுவி வெச்சுடறேன்” 

    “நீ தூங்கீருவே!” 

    “தூங்கற நிலையிலயா இருக்கேன். ஒரே யோசனை யோசனை. ஆமா, நீ எதாச்சும் கொழப்பத்துல இருக்கியா? இன்னும் ராஜேந்திரனை நினைச்சுட்ட்டே இருக்கியா?” 

    “அவன் தான் வரலீல்ல! என்னை ஏமாத்திட்டான்ல. அவனை நான் எதுக்கு நினைக்கோணும். ஆனா இப்படிப் பண்ணிட்டானேன்னு தான் சங்கடமா இருக்கு! நான் அவன் மேல எப்பிடிப் பிரியம் வச்சிருந்தேன் தெரியுமா?” 

    “நானும் லதாபுள்ளை மேல அத்தனை பிரியமா இருந்தேன். என்னைய ஏமாத்திட்டு அவ அப்பன் ஆயாவோடப் போயிட்டாள்ல! இன்னும் நினைச்சா அவளை வெட்டிப் போடணும்னு தான் கோவம் வருது! சரி, நீ போய்ப் படுத்துக்க. எனக்குத் தூக்கம் கண்ணைச் சொழட்டுது” என்று சுவரோரமாய்த் திரும்பிப் படுத்தான். பிரியா எழுந்து போய்க் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு உள் அறைக்குள் பாய் விரித்துப் படுத்தாள். ராஜேந்திரன் நினைப்புத் தான் வந்தது. 

    அடுத்த நாள் மதியத்தில் பிரியாவின் செல்போன் “கூக்கூக்.. கூக்கூக்” எனக் கத்தியது! அப்போது தான் சாப்பிட்டுவிட்டுக் கட்டிலில் படுத்திருந்தவள் தன் செல்லை எழுந்து போய் எடுத்து யார் எனப் பார்த்தாள். சாமிநாதனாய் இருக்குமோ என்று பார்த்தவள் வேறு புதிய எண்ணாக இருக்கவே எடுத்தாள். 

    “ஹலோ..” என்றவள் கட்டிலிலேயே வந்து சாய்ந்து படுத்தாள். “ஹலோ நான் ராஜேந்திரன் பிரியா!” 

    “ஐயோ! இப்ப எதுக்குடா போன் பண்ணினே எனக்கு? செத்துட்டாளா? உசுரோட இருக்காளான்னு பாக்குறதுக்கா? எப்ப நீ வரச் சொல்லிட்டு வரலியோ அப்பவே செத்துட்டேன்டா. மறுபடி ஏண்டா என்னைக் கூப்பிடறே! சாவடிக்கவா?” என்றவளுக்கு அழுகை பீறிட்டு விட்டது! எதிர்முனையிலும் அழுகைச் சப்தம் கேட்கவே நிதானித்து அழுகையை உதடு கடித்து அடக்கிக் கொண்டாள். இவனெதுக்கு இப்புடி அழுறான்? அழுகை தொடர்ந்து கொண்டே இருக்கவே இவளுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. போனைக் கட் செய்தாள். இதென்ன துன்பமா இருக்கே! இனி போன் பண்ணவே மாட்டான் என்று நினைத்திருந்தவன் இப்படி ஒரு வாரம் கழித்துப் போன் பண்ணுகிறானே! இவனை எந்த விதத்திலும் மறக்க முடியாமல் தான் எந்த நேரமும் இவன் சிந்தனையிலேயே இருந்தாள் பிரியா! பத்து நிமிடம் கழித்து மறுபடியும் இவள் போன் “கூக்கூக் கூக்கூக்” என்றே கத்தியது! ராஜேந்திரனே தான். எடுக்காமல் விட்டாள். ஆனால் மறுபடியும் அவன் விட்டபாடில்லை! ஆப் செய்துவிடுவோமா! என்று தான் யோசனை ஓடிற்று! ஆனாலும் என்னதான் பேசுகிறான் என்று கேட்டுவிடலாம் என்றே உள் மனது கத்திற்று! 

    “ஹலோ! ஏண்டா என்னைச் சாவடிக்கறே?”

    “உன்னைப் போய் சாவடிப்பேனா பிரியா? போனை எடுக்கவே மாட்டீங்றே பார்த்தியா! அந்த அளவுக்கு நான் உனக்கு மோசமான ஆளாப் போயிட்டேன்ல! நீ இனி அப்படித்தான் நெனைப்பே பிரியா. ஒரு வாரமா ஆஸ்பத்திரில கெடந்து இப்போ தான் வீடு வந்தேன் பிரியா!” 

    “அதுக்கு நான் இப்ப என்னடா பண்ணணும்? நான் சாவாம இருக்கறதே பெருசுடா! என்னை ஏமாத்திப் போட்டுப் போனவன் தானடா நீ? எப்படிடா மறுபடியும் என் நெம்பருக்குக் கூசாமக் கூப்பிடறே? குத்துலியாடா உனக்கு?” 

    “இப்படிப் பேசனீன்னா சத்தீமா இப்போ டிமிட்டைக் குடிச்சு செத்துப் போயிடுவேன் பிரியா!” 

    “என்னை உசுரோட சாவடிச்ச நீ சாவுடா! நீ சாவு! எதயாவுது குடிச்சு சாவு!” 

    “ஐயோ, பிரியா! சொல்றதைத்தான் கேளேன்! நீயே இப்படிப் பேசிட்டு இருந்தீன்னா நான் அதைத்தான் பண்ணனும்! அந்தன்னைக்கு எவ்ளோ ஆசையா கெளம்பினேன் தெரியுமா? செரியா பன்னெண்டு மணிக்குத்தான் ஒரே ஒரு சூட்கேஸ் எடுத்துட்டு வண்டிக்கும் முன்னால வச்சுட்டுக் கிளம்பி வந்தேன். பாதி வழியில நாலஞ்சு பேரு வண்டியில வந்தவங்க தான், நிறுத்திட்டுத் தண்ணி போட்டிருந்திருப்பாங்ளாட்ட! அவங்க என்னோட வண்டியைக் கைகாட்டி நிறுத்தினாங்க. எங்க ஊரு பெரிய மனுசங்க தான். தெரிஞ்ச முகங்காட்டித்தான் நிப்பாடி இறங்கி, ‘என்னங்க விசயம்! இன்னேரத்துல இங்க இருக்கீங்க’ன்னு? அவங்க கிட்டப் போனேன். ‘இன்னேரத்துல பேண்ட் சர்ட் போட்டுட்டு நீ எங்கடா போறே?’ன்னு புடிச்சுட்டாங்க! ‘எங்க புள்ளை ஈரோட்டுல எங்கடா இருக்கா? எங்கடா தங்க வச்சிருக்கே எங்க புள்ளைய? சூட்கேஸ்ல என்ன இருக்குதுன்னு பாரு மாப்ளன்னு அதை ரோட்டுல உடைக்கறாங்க! உள்ளார உன்னோட பட்டுச்சேலை.. அதும் போக ரெண்டு சேலை.. இதையெல்லாம் பார்த்துட்டுச் சப்புச்சப்புனு அடிக்கறாங்க. என்னோட செல் வேற அப்ப அடிச்சுது! ஒருத்தன் புடுங்கி அதை ரோட்டுல போட்டு ஓடச்சிட்டான். எங்க புள்ளைக்கித் தாலிகட்டப் போறியாடான்னு என்னை டிச்சுக் குழியில தள்ளிக் கெட்ட வார்த்தை சொல்லியே மிதிக்கறாங்க பிரியா! கையெடுத்துக் கும்பிட்டும் பார்த்துட்டேன். பெருந்துறை போய் கேஸ் குடுத்துட்டு ஊடு திரும்பி வந்தவங்ககிட்ட மாட்டீட்டேன். மயக்கமாயிட்டவனைத் தூக்கி வண்டிக்கிட்டப் போட்டிருக்காங்க. அவங்க புள்ளையே சித்த நேரத்துல சேலத்துல கல்யாணம் பண்ணிட்டேன்னு போனு பண்டிச் சொல்லிடுச்சாம்! மிதிச்சாலும் மிதிச்சாங்க, என்னைய கார் போட்டு பெருந்துறையில ஆஸ்பத்திரிலியும் கொண்டி சேர்த்திட்டாங்க! காத்தால என்னால எந்திரிக்கவே முடியில. என் அப்பா, அம்மா, சித்தி எல்லாரும் அழுதுட்டு,நிக்கறாங்க! என்னால வாயைத் திறந்து பேசக்கூட முடியல பிரியா! தெரியாம அடிச்சுப் போட்டோம்னு அவங்களே பூராச் செலவையும் பார்த்துக்கிட்டாங்க! கார்ல ஊடு கொண்டாந்து உட்டுட்டு, போனும் வாங்கிக் குடுத்துட்டாங்க! இன்னும் எனக்குக் கழுத்துலயும் இடுப்புலயும் சுருக்சுருக்குனு வலி பிரியா! இப்பிடி ஆயிப்போச்சுன்னு சொல்லிடலாம்னு தான் உன்னைக் கூப்பிட்டேன். நீ என்னடான்னா சாவச் சொல்றே!”

    “ஐயோ கடவுளே!”

    “என் வீட்டுல இப்பக் கூடக் கேட்டுட்டே இருக்காங்க பிரியா. ‘பட்டுச் சேல, இன்னம் ரெண்டு சேலை, தாலியோட யாரைக் கல்யாணம் பண்ணக் கிளம்பிப் போனே? சொல்லு சொல்லுன்னு! நான் இன்னும் ஒரு வார்த்தை அவங்ககிட்ட உன்னைப் பத்திச் சொல்லவே இல்ல. ‘யாரா இருந்தாலும் செரி! சொல்லு. வேற சாதியா இல்லாம இருந்தா சரி. நாங்களே அந்தப் புள்ளையைக் கட்டிவைக்கிறோம்’னு வீட்டுல ஒரே அழுவாச்சி பிரியா!” 

    “இதெல்லாம் இப்பச் சொல்றியே நீயி! அந்தன்னைக்கு சாமிநாதன் கூடவே திரும்பி வீட்டுக்கு வந்தேன். சத்தமில்லாமப் படுத்துக்கலாம்னு பார்த்தா வீட்டுல முழிச்சுக்கிட்டாங்க! ஒன்னும் பண்ண முடியாதுன்னு சாமிநாதன் ஊட்டுக்கே வந்துட்டேன். அவனையே தாலிகட்டச் சொல்லிட்டேன். அவனும் கட்டீட்டான்” 

    “ஐயோ என்ன பிரியா சொல்றே? என் நெஞ்சே வெடிச்சுடுமாட்ட இருக்குதே!” 

    “ஐயோ.. பின்ன நான் அந்த சமயத்துல என்ன பண்ண முடியும்? சும்மா ஊடு போனா வீட்டுல என்ன நெனைப்பாங்க? உன் நெனப்புல இவன் கூடவும் என்னால இருக்க முடியலடா! நேத்துத் தண்ணியப் போட்டுட்டு வந்து என்னைப் படுக்கக் கூப்பிடுறாண்டா! மனசுல பூராவும் நியி. அவன் கூட எப்படிடா படுப்பேன்? ஊட்டுக்குப் போய்ப் படுத்துக்குவேன்னு சொன்னதும் கம்முன்னு படுத்துட்டான். ஐயோ! நான் இனி என்னடா பண்ணட்டும்? தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கட்டின தாலிய கழுத்துல வாங்கீட்டனே! நீயும் இனி என்னைக் கட்டிக்க மாட்டே! நான் இனி சாவுறதைத் தவிர வழியே இல்ல!” 

    “உன் வீட்டுல தான இருக்கே?” 

    “சாமிநாதன் வீட்டுல இருக்கேன்” 

    “கால்மணி நேரத்துல அங்கே வருவேன். நீ என் பைக்குல ஏறி உட்கார்ந்த உடனே நாம கொளப்பலூரு போறோம்.. சரியா! சொல்லுடி!” 

    “சரி” 

    “ம்.. நான் வர்றப்ப அவன் கட்டின தாலி உன் கழுத்துல இருக்கக் கூடாது! சரியா!” 

    “சரி” 

    சரோஜா அக்காதான் சாமிநாதனுக்குப் போன் போட்டது. எடுத்து “ஹலோ.. சொல்லுக்கா. தறி ஓடிட்டு இருக்குது” என்றவனுக்கு அக்கா தான் சொல்லியது, “உம் பொண்டாட்டி சித்த நேரத்துக்கும் முந்தி பைக்குல ஒருத்தன் கூட உட்கார்ந்துட்டுப் போயிட்டா! வீட்டுக்குள்ளார போயிப் பார்த்தேன். நீ கட்டின தாலி டிவி கிட்ட கெடக்குது” 

    நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்? 

    சாமிநாதன் சாக்னாக் கடையில் பணியாரங்களைக் குழம்பில் பிசைந்து எடுத்து வாயில் திணித்துக் கொண்டான். காரம் சேரச் சேர போதை கிர்ர்ரென உச்சி மண்டையை ஆட்டியது. தலையை உதறிக் கொண்டு எழுந்து போய்க் கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தான். சாக்னாக் கடையில் இன்று கூட்டம் குறைவுதான். செவ்வாய்க்கிழமை சந்தை நாளிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் மட்டும் தான் உட்கார இடமின்றி கூட்டம் நிரம்பியிருக்கும். பெரியண்ணன் தான் இவனுக்கு சப்ளை செய்தது! 

    “பெரியண்ணா” என்று குரல் எழுப்பினான். “என்றா சத்தம் பெருசா வருது? மப்பு ஏறிப்போச்சா? ஒன்னர கோட்டர் குடிச்சிருக்கே, ஏறாம என்ன செய்யும்?” என்றவன் இவனிடம் வந்து நின்றார். 

    “எம் பொண்டாட்டி ஓடிப்போயிட்டாண்ணா!” என்றான். 

    “அதத்தான் வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கியே. போனா போயிச் சாட்டாறா. இன்னொருத்தியப் புடிச்சாப் போவுது” என்றார். “அதச் சொல்லுண்ணா! கணக்கு எவ்ளோ ஆச்சு?” என்றான். “முப்பத்தி அஞ்சு ரூவா ஆச்சு” என்றவருக்கு ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்துவிட்டுத் தள்ளாடி எழுந்தான். 

    “போயிடுவியாடா” என்றவரைத் திரும்பிப் பார்த்து, “கன், கன் மாதிரி போயிடுவேன்” என்றான். அவன் போன் அலறியது! “ஆரோ கூப்புடறாங்க!” என்றவன் எடுத்து “ஹலோ யார் பேசறீங்க?” என்றான். எதிர்முனை மௌனமாய் இருந்தது! “நான் பிரியா பேசுறேன்” என்றது பிற்பாடு! “என்னைய மன்னிச்சிடு சாமிநாதா. உன்னோட உன் வீட்டுல இருக்கவே முடியல என்னால! ராஜேந்திரன் கூடயே வந்துட்டேன்” என்றாள்! ஒன்றும் பதில் பேசாமல் கட் செய்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வெளியே வந்தான். சைக்கிளை ஓட்ட முடியாது போலத்தான் இருந்தது! இருந்தும் ஏறி அழுத்தினான். ஓட்ட ஆரம்பித்ததுமே நிதானம் வந்தது! போய்ச் சேர்ந்துவிடலாமென்ற நம்பிக்கையும் வந்தது! மூங்கில்பாளையம் நோக்கி அழுத்தினான். வின் டெக்ஸ் அருகே குழியில் விட்டுத் தடுமாறிச் சுதாரித்துக் கொண்டு மூங்கில்பாளையப் பிரிவு வந்தவனுக்கு அதற்கும் மேல் முடியவில்லை. முக்கில் வண்டியப் போட்டு மணலில் விழுந்தான். சைக்கிள் இவனைத் தாண்டி போய் விழுந்தது. கையை ஊன்றி எழுந்து சம்மணம் போட்டு உட்கார்ந்தான். 

    “எம்பட கண்மணி என்னைய உட்டுட்டு ஊட்டுக்கு அவசரமாப் போயிட்டா! எங்கப்பனக் கூட்டிட்டு வருவா! எங்கப்பனுக்குக் கோட்டர் வாங்கியாச்சா? ம்.. வாங்கியாச்சு! நல்ல கட்டெ நாட்டுக் கட்டே நம்பகிட்டே மாட்டிக்கிட்டே! ஹேய்! நல்ல கட்டெ நாட்டுக் கட்டீ ஏ நம்பக்கிட்ட மாட்டிக்கிட்டே! எங்க போயி.. நல்ல கட்டெ மாட்டுது.. ஓடிப்போயிருதுகளே! ஒரு கோட்டர் போனா என்ன நாட்டுல கோட்டர்களுக்கா பஞ்சம்? இன்னம் வேற கோட்டரைக் கலியாணம் பண்டுனா போவுது? பெரியண்ணன் சொல்லிடுச்சு! மருதமலை மாமணியே முருகய்யா! கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன். நாடிய வினை தீர்க்கும் மாமணியே! என் வினைய மட்டும் தீர்க்கவே மாட்டான் மாமணி முருகன்! 

    அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே! புதுமையிலே மயங்குகிறேன். புதுமையிலே மயங்குகிறேன். ஆமாமா! எவளைக் கண்டாலும் எனக்குத் தமன்னா மாதிரியே மயக்கமா இருக்குது. தமன்னாவக் கட்டிக்கலாம்னா மெட்ராஸ் போகோணுமாட்ட! ங்கொய்யால! ங்கொய்யால! ங்கொய்யால! அன்பே அன்பே! கொல்லாதே! கண்ணே கண்ணைக் கிள்ளாதே! ஐயோ! என்ன செய்வேன் உயிரே கலங்காதே! எல்லாரும் வர்றாளுக கண்ணைப் புடுங்கீட்டுப் போயிர்றாளுக! 

    பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே! என் ஐயனே! டொடடொண்டொய்! டொடொண்டொய்! யாமொரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன். யார்ரா அது செல்லுல கூப்புடறது! ஹலோ! நான் சாமிநாதன் கோல்டு சாமிநாதன். அந்தரத்துல மெதந்துட்டுப் பேசுறேன். யார் நீங்க? யாரு? சரோசா அக்காவா? வாக்கா வா! எம் பொண்டாட்டி போயிட்டாக்கா! என்ன, பாட்டுப் பாடாதேயா! பாட்டுப் பாடாம் அழுவச் சொல்றியாக்கா? எம்மட கண்மணி ஊட்டுக்கு என்னைய ட்டுப்போட்டு வந்துடுச்சு அக்கா. பார்ல இருந்து கண்மணியை எடுத்துட்டுத்தான் வந்தேன். வந்துட்டே இருந்தேன். என்னைய முக்குல மணல் மேல பூவாட்டத் தள்ளி உட்டுட்டு வந்திடுச்சுக்கா! அத்தனை செல்வமும் உன்னிடத்தில். நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்? டொடடொண்டொய்!” 

    சாமிநாதன் போனை மேல் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மணலில் கால் நீட்டிப் படுத்தான். கொடேர்ச்சென வாந்தி வந்தது! 

    “அவள் பறந்து போனாளே. என்னை மறந்து போன்னாளே! தாலியக் கழட்டி வெச்சுட்டுப் போயிட்டாளா! போயி இன்னொன்னு கட்டிக்கிட்டாளா? அஞ்சு கட்டிக்கோடி! அஞ்சு கவுறு கட்டிக்கோடி! நினைத்து நினைத்துப் பார்த்தேன். நெருங்கி விலகி நடந்தேன். உன்னால் தானே நானும் வாழ்கிறேன். ஓ… ஓ… ஓ”. 

    “டேய் சாமிநாதா! டேய்!”

    ”யார்ரா அது?” 

    “சாமிநாதா! ஏன்டா இப்புடி நீயி!” என்று சரோஜா அக்கா அவனைத் தூக்கி உட்கார வைத்துக் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த தண்ணீரை முகத்தில் அடித்தது! 

    “தண்ணி வாத்து உடறியாக்கா?” 

    “ஆமா எந்திரிடா மேல! இப்புடிக் குடிச்சிட்டு ரோட்டுல கெடக்கோணுமுன்னு உனக்கெல்லாம் என்ன கேடு?” 

    “அவள் பறந்து போனாளே! என்னை மறந்து போனாளே!”

    ‘ஆமா அவ பறந்து போனா போறான்னு உடறத உட்டுட்டு நீ ஏன்டா குடிச்சுட்டுத் திரியறே?”

    “யக்கோவ்.. ஒரு நிமிசம்.. நான் ஸ்டெடி ஆயிடுவேன்.. எம்பட கண்மணி ஊடு வந்திடுச்சா?” 

    “இதென்ன இவத்திக்குக் கெடக்குறா?” 

    “கண்மணி.. அன்போட காதலன் எழுதும் கடிதமே!” 

    “நாலு பேரு சிரிப்பாங்கடா எந்திரிடா…” 

    “நான் சித்த நேரம் பாட்டுப் பாடீட்டு வர்றேன்னா உடமாட்டீங்றியே அக்கா!” 

    “எம்பட பையனைப் பின்னாலயே வரச் சொன்னேன் இன்னும் காணமே!” என்று சரோஜா அக்கா எழுந்து தன் செல்போனை எடுத்தபோது முருகேசன் சைக்கிளில் வந்துவிட்டான். 

    “நான் பஸ் ஸ்டாப்ல இருந்து ஒரம் பூராவும் தேடீட்டு வர்றேன். இங்க உழுந்து கெடக்கறானா?” 

    “சரி, அவன் சைக்கிளை முன்னாடி கொண்டுட்டுப் போ”

    “ரெண்டு சைக்கிளா? பகல்னா புடிச்சு ஓட்டிட்டுப் போயிடுவேன். ரெண்டுலயும் லைட் இல்ல! உருட்டீட்டுப் போயிடறேன். நீ கூட்டிட்டு வந்துடுவியா!” 

    “யாரா? முருகேசனா! முருகேசா! அவள் பறந்து போனாளே!” 

    “எத்தனியக் குடிச்சான்னு தெரியில. இடுப்புல தொட்டுப் பாரும்மா. அவங்கப்பனுக்குக் கோட்டர் வாங்காம வரமாட்டானே!” 

    “இருக்குடா. எங்கப்பனுக்கு வச்சிருக்கறன். கொண்டாந்து குடுத்துடுவன்” 

    “சரி நான் சைக்கிளை எடுத்துட்டு உருட்டறேன். நீ கூட்டிட்டு சீக்கிரம் வந்து சேரு” என்றவன் கீழே கிடந்த சைக்கிளைத் தூக்கி நிறுத்தி இவனுடையதையும் ஒரு பக்கமாய்ப் பிடித்துக் கொண்டு சென்றான். சாமிநாதனைத் தூக்கி நிறுத்தித் தன் மீது சாய்த்தவாறு சரோஜா அக்கா “நட போலாம்” என்றது! சாமிநாதன் சரோஜா அக்காவின் தோளில் கைபோட்டுப் பிடித்து கொண்டான். 

    “என்னைய இந்தப் பாலத்துல படுக்கவச்சுட்டு நீ போ” என்றான். 

    “ஊடு போய்ப் படுத்துக்கலாம்” 

    “ஸ்டெடி ஆயிட்டேன் அக்கா.. உன்கிட்டயும் பிரியாகிட்ட அடிச்ச வாசனை அடிக்குதே! எல்லாரும் மணக்கறீங்க! எல்லாருமே மணக்கறீங்க!” 

    “லிரில் சோப்பு வாசம்டா அது! இப்பத்தான் தண்ணி வாத்துட்டு உன்னை ஆளைக் காணம்னு கூப்புட்டேன்” 

    “நீயா கூப்புட்டே! பிரியா கூப்பிட்டா! மன்னுச்சுக்கறதாம் நானு! சித்த உட்கார்ந்து போலாம்” என்று சரோஜா அக்காவின் புட்டத்தில் கை வைத்து இவனே பாலத்திற்குத் தள்ளிக் கொண்டு போனான்.பாலம் சென்றதும் திண்டில் உட்கார்ந்தான். “உட்காரு” என்று அக்காவிடம் சொன்னான். 

    “மன்னிச்சுக்கோன்னு சொன்னாளா?” என்று இவன் அருகில் உட்கார்ந்து கொண்டது. 

    “நான் ஒன்னும் பேசுல! கட் பண்ணிட்டேன்” 

    “அந்த நெம்பரு எதுன்னு பாரு. போட்டுக் குடு அவுளுக்கு நான் சாபம் குடுக்கறேன்” 

    “எனக்கே தோணுச்சுக்கா. ஆனா போனவளச் சத்தம் போட்டு நமக்கென்ன ஆவப் போவுது? உடு உடு உட்டுடு!’ 

    “எவளும் உன்கிட்ட பொழைக்காம ஓடிப்போயர்றாளுகளேடா! சாதகத்துல உனக்கெதாச்சிம் கெரகம் கழிக்கோணும்னா போய் பவானில் கூடுதுறையில் தலைமுழுகிக் கழிச்சிட்டு வந்துடலாம்டா. ஆன செலவு ஆகட்டும்” 

    “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது. ஏக்கா எல்லாக் கழுதைங்களும் முட்டீட்டு முட்டீட்டு ஓடீருதுக! அந்தப் பல்லடத்துக்காரி கருங்கொரங்கி சாபம் உட்டாக்கா. மல்லிகா… ம்… மல்லிகா.. ‘உனக்குப் பைத்தியக்காரி தான்டா பொண்டாட்டியா இருப்பா’ன்னு.. அவ சாபமாத்தான் இருக்கும். அதுக்கு நான் இனி ஒட்டங்காட்டுல உட்கார்ந்து யாகம் வளர்க்கோணும். கடவுள் எம் முன்னாடி வந்தாப்லைன்னா தான் சாபத்தை அக்கட்டால் தூக்கச் சொல்லோணும். கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது!” 

    “ஔறாம எந்திரிச்சு வாடா சாமிநாதா போலாம்” 

    “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட்டு ரெண்டு பாடீட்டுப் போலாம்” 

    “ஊட்டுல போயிப் பாடிக்கலாம்டா” 

    “ஊட்டுல போயிப் பாட முடியுமாக்கா? எல்லாரும் வந்து வாசல்ல ஒரு ரூபா ரெண்டு ரூவா போட்டுட்டுப் போயிருவாங்க! வானத்து நிலவாய் நீயிருந்தால் உனக்குப் பதில் நான் தேய்ந்திடுவேன். சொல்லு பூங்காற்றே! காதல் வெண்ணிலா கையில் சேருமா? சொல்லு பூங்காற்றே! அக்கா எனக்கொரு முத்தம் குடுக்கா நீயி!” 

    “முத்தமா?” 

    “ஆமாக்கா.. முத்தம்… எம்பட ஓதட்டுல குடு” 

    “வெத்தல பாக்கு போட்டிருக்கன்டா.. அதான் உனக்கு ஆவாதே!” 

    “துப்பு.. அக்கட்டால துப்பு. இதோ பார். தண்ணி கலந்து உனக்கு அரைக் கோட்டர்” என்று பாண்ட்டின் இடது பக்கப் பாக்கெட்டிலிருந்து பாட்டிலை எடுத்துக் கொடுத்தான். அக்கா வெத்தலை பாக்கை துப்பிவிட்டுப் பாட்டிலை வாங்கிக் கொண்டது. 

    “உங்கொப்பனுக்கு எங்கடா பாட்டலு?” 

    “இதா என் இடுப்புல இருக்குது. இதா, நான் குடிக்கறதுக்கும் இருக்குது” என்றவன் வலது பக்கப் பாக்கெட்டிலிருந்து கோட்டர் பாட்டிலை எடுத்து மூடி திருகினான். இரண்டு மடக்குக் குடித்துவிட்டு மூடிப் பாக்கெட்டிலேயே போட்டுக் கொண்டான். சரோஜா அக்கா குடித்துவிட்டுப் பாட்டிலைத் தூர வீசி எறிந்துவிட்டு இவனை நெருங்கி உட்கார்ந்தது. சாமிநாதன் முகத்தையத் தன் புறமாய்த் திருப்பி அவன் உதட்டில் வாய் வைத்து முத்தம் கொடுத்தது. சாமிநாதன் அக்காவைக் கட்டிக் கொண்டான். அக்காவை இறுக்கித் தன் நெஞ்சுக்குள் புதைத்து கொள்ள முயன்றான். அக்காவும் சளைக்காமல் அவனை இறுக்கமாய்க் கட்டிக் கொண்டது! பின் அவனை விலக்கித் தள்ளி உட்கார்ந்து கொண்டது. 

    “உன்னையாட்டமே தானக்கா.. பாதில பாதில எல்லாக் கழுதைகளும் உட்டுட்டு ஓடீர்றாளுக!” என்றான். அக்கா மறுபடியும் நெருங்கிக் கட்டிக் கொண்டது. 

    “ஊடு போலாம்டா சாமிநாதா.. என் பையன் காணமேனுட்டு வந்தாலும் திரும்பி வருவான். நானென்னா ஓடியா போறேன். கெணத்துத் தண்ணிய ஆத்துத் தண்ணியா இழுத்துட்டுப் போயிடப் போவுது. எந்திருச்சு நட!” என்று எழுந்து கொண்டது. சாமிநாதனும் எழுந்து அக்கா தோள் மீது கைபோட்டுக் கொண்டான். இருவரும் ஊர் நோக்கி நடந்தார்கள். சாமிநாதனுக்கு மறுபடியும் கிர்ரென்று சுழன்று சுழன்று வந்தது. அக்கா தோளில் போட்டிருந்த வலது கையை இடுப்புக்குக் கொடுத்துப் பிடித்தான். 

    “இன்னுமா இழுத்துட்டு வர்றே இவனை? ஊட்டுல எழவு உழுந்துடுச்சும்மா. இவன் அப்பன் கட்டல்ல செத்துக் கெடக்கான்” என்றான் முருகேசன். 

    “என்னடா சொல்றே முருகேசா? பகீர்ங்குதுடா” 

    “சைக்கிளை ஊட்டுல நிறுத்திட்டுக் கூப்புட்டுப் பார்த்தேன். சத்தமே இல்ல. அப்புறம் பக்கத்து ஊடெல்லாம் சொல்லீட்டேன். நீ கூட்டிட்டு வந்திருவீன்னு பார்த்துட்டு நின்னேன். காணம்னு வந்தேன்” அவனும் வலதுபக்கம் போய் சாமிநாதன் கையைப் பிடித்துக் கொண்டான். இருவரும் அவனை வீட்டுக்குக் கூட்டி வந்தார்கள். 

    “ப்போவ், அப்போவ்.. எம் பொண்டாட்டி ஓடீட்டாப்போவ்… தே.. எல்லாரும் கூட்டமா எம்பட வாசல்ல நின்னுட்டு இருக்கீங்க? அவ எப்புடி ஓடினான்னு கேக்க வந்துட்டீங்ளா? எங்கப்பனுக்குக் கோட்டர் இதா இடுப்புல. குடிச்சா ஊட்டுக்குள்ள வரக் கூடாதுன்னுட்டா. எங்கப்பனையும் என்னையும்..” என்று உளறிக் கொண்டே கட்டிலுக்குப் போனான். 

    “நான் படுத்துக்கட்டா?” என்றான். 

    “உங்கொப்பனை நடு ஊட்டுல போட்டு வச்சிருக்குது சாமிநாதா! கண்ணு தெரியிலியா?” தெய்வா சத்தமாய்க் கூறி அழுதாள். 

    “உங்கொப்பன் செத்து போயிட்டான்டா” என்று சரோஜா அக்காவும் அழுதது. 

    “எங்கப்பன் செத்துப் போயிடுச்சா? அவ ஓடிப்போயிட்டா. எங்கப்பனும் போயிடுச்சு. எல்லாரும் போலாம் போங்க! நான் இதுல ஓடறேன். நீங்கெல்லாம் அதுல அந்தச் சந்துல ஓடுங்க. எல்லாரும் ஓடலாம்.எங்கப்பனுக்கு இந்தக் கோட்டரைக் குடுங்க. கொண்டுட்டுப் போவட்டும்” 

    இடுப்பில் இருந்து பாட்டில எடுக்கத் தடுமாறியவன் கீழே சாய்ந்தான்.

    – முற்றும் –

    – எட்றா வண்டியெ, முதற் பதிப்பு: 2012

    Print Friendly, PDF & Email

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *