எங்கே அந்தக் கடவுள்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2023
பார்வையிட்டோர்: 1,546 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலை நேரத்தில் பிள்ளைகள் பூங்காவில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் அதோ சுபாஷ் சிறுவனும் ஒருவன். அவன் மட்டும் தனியாக அந்தச் சறுக்கில் ஏறி வழுக்கி வந்து கொண்டிருந்தான்.

அப்போது அங்கு, நன்கு நரைத்துப் போன வெண் முடிகள், குழி விழுந்த கண்கள், சுருக்கம் நிறைந்த முகம்; நலிந்த உடல்; தளர்ந்த நடை, நடுங்கும் கைக்கு ஓர் ஊன்றுகோல் இந்நிலையில் ஒருவர் மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார். விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனுக்கு வேடிக்கையாக இருந்தது.

அவன் அந்தப் பெரியவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஆவல் அடங்கியதாக இல்லை. பெரியவரின் அருகில் சென்றான். தாத்தா நடக்க முடியவில்லையா? என்று இன்பம் பொங்கும் அன்பு முகத்தோடு கேட்டான்.

சிவந்தமேனி, சிரித்த முகம், பருத்த கன்னம், பவளம் போன்ற இதழ், பார்த்தோரைச் சுண்டி இழுக்கும் கவர்ச்சி நிறைந்த அந்தப் பைய னைப் பெரியவர் பார்த்தார். அந்தச் சிறுவனின் எளிய கோலத்தை அவர் ஒரு கணம் கண்டு ரசித்தார். அப்போது அந்தச் சிறுவன் என்ன தாத்தா அப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற சிறுவனின் குரல் கேட்டு ஏதோ நினை வில் இருந்தவர் திரும்பினார். ஒன்றுமில்லையப்பா. நீ படிக்கிறாயா? பையன் தலையை ஆட்டினான். அப்படி என்றால் நீ பள்ளிக்குப் போக வில்லையா? என்று தாத்தா கேட்டார்.

இல்லை தாத்தா. நேற்று நாங்கள் நல்ல தமிழ்ப் படம் பார்த்தோம். அது நன்றாக இருந்தது. அது ரொம்ப நேரமாயிற்று. ‘லேட்டா’ தூங்கி னோம். அதனால் காலையில் எழவில்லை. ரொம்ப ‘லேட்டா’ எழுந்த தால் பள்ளிக்குப் போகவில்லை; என்று சிறுவன் மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்னான். எந்த வகுப்பில் படிக்கிறாய்? என்ற தாத்தா வின் கேள்விக்கு ‘ஒன்றாம் வகுப்பு தாத்தா’ என்று சிறுவன் பட்டென பகன்றான்.

சிறுவனின் பதிலைக் கேட்ட பெரியவருக்கு ஏதேதோ நினைவுகள் தோன்றின. சோர்ந்த உள்ளத்தோடு நாம் கீழ் நோக்கிச் சென்று கொண்டி ருக்கிறோம் என்பதற்கு அடையாளமாகத் தலையைத் தாழ்த்தித் தரை யில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.

என்ன தாத்தா கீழேயே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஏதாவது பணத்தை இழந்து வீட்டீர்களா? இவை சிறுவனின் கேள்விகள். பறந்து சென்று கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து மீண்டுவந்த தாத்தா, பணத்தை மட்டும் இழக்கவில்லை பையா. இந்தப் பாவி வாழ்வையே பாழாக்கிக் கொண்டான். அது மட்டுமல்ல பிள்ளைகளின் வாழ் வையும் கெடுத்துவிட்டான். அதெல்லாம் பெரிய கதையப்பா என்று சலிப்போடு சொல்லியபோது, என்ன கதையா? தாத்தா, தாத்தா கதை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்தக் கதையைத் தயவுசெய்து சொல்லுங்கள் தாத்தா என்று சிறுவன் கெஞ்சினான். பையன் மீது பரிவு ஏற்பட்டவுடன் தாத்தா கதையைச் சொல்லத் தொடங்கினார்.

சிராங்கூன் சாலையை அடுத்துள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் ஒரு தமிழ்க் குடும்பம் இருந்தது. அவர்களுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அந்த ஒரு மகனை எப்படியாவது நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். தக்க வயதில் பள்ளியில் சேர்த்தார்கள். பையனும் பள்ளியில் நன்கு படித்து வந்தான்.

தாயாருக்கு எழுத படிக்கத் தெரியாது. தந்தைக்குத் தமிழ் மட்டும் ஓரளவுக்குத் தெரியும். காலையில் வேலைக்குச் செல்கின்ற தகப்பனார் பகல் முழுக்க வேலை செய்துவிட்டு மாலையில் தான் வீடு திரும்புவார். வேலை மிகுதியால் சோர்ந்து போய் வருபவர் சோற்றைச் சாப்பிட்டுவிட் டுப் படுத்துச் சொக்கிவிடுவார்.

ஆரம்பத்தில் நன்றாகப் படித்துவந்த பையன் சில பொல்லாத பிள் ளைகளோடு சேர்ந்துகொண்டு இல்லாத குறும்புகளைச் செய்யத் தொடங்கினான். படிப்படியாகப் படிப்பில் இருந்த கவனம் குறைந்தது. சேட்டைகள் வளர்ந்தன. ஆட்டங்களும் பாட்டங்களும் பெருகின. அத னால் ஒரு வழியாகப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவன் தலையெழுத்து அப்படி என்றால் நாம் என்ன செய்ய முடியும் என்று பெற்றோரும் விட்டுவிட்டனர்.

அந்தக் காலத்தில் அவன் படித்த ஆரம்பப் பள்ளிப் படிப்பைக் கொண்டு ஓரிடத்தில் வேலைக்குச் சேர்ந்தான். வேலை செய்த இடத்தி லும் ஒழுங்காக இல்லாமல் அங்கு வேலை செய்த பெண்களோடு அரட்டை அடிப்பதும் அவர்களைச் சுற்றித் திரிவதுமே அவனுக்கு வேலையாகப் போய்விட்டது. இளமையும் எடுப்பான தோற்றமும் முகக் கவர்ச்சியும் உள்ள அவனைப் பெண்களும் வட்டமிட்டனர். தன் ஒரே மகனுடைய போக்கைப் பற்றி அறிந்து வருந்திய பெற்றோர் ஒரு திட்ட மிட்டனர்.

மகனுக்கு மணம் முடித்து வைத்தால் மனம் மாறிவிடுவான் என்று நினைத்தனர்.உடனே தமிழ்நாடு நினைவுக்கு வந்தது. உடனே மகனைத் தமிழ்நாட்டிற்கு அழைத்துச் சென்று உறவு போகாமல் இருக்கச் சொந்தக் காரப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். மறு மாதமே மருமகளையும் மகனையும் அழைத்துக் கொண்டு சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தனர்.

மகனைக் கண்டபடி சுற்ற விட்டுவிட்ட பெற்றோர் திருமண விஷ யத்தில் மட்டும் அவன் விருப்பத்திற்கு விட்டுக் கொடுக்க முற்றாக மறுத்துவிட்டனர். அதனால் உறவுப் பெண்ணை வற்புறுத்தி மணமுடித்து வைத்தனர். பிடிக்காத பெண்டாட்டியுடன் வாழ்ந்து வந்தான். அதே வேளையில் வெளியில் பிடித்த பெண்களுடன் சுற்றித் திரிவதை அந்தக் கண்ணன் நிறுத்தவே இல்லை. இதற்கிடையில், அவனுக்க மூன்று குழந் தைக் பிறந்தனர். அப்போது கூட அவன் தன் தவற்றை உணர்ந்து திருந்த வேயில்லை. தவறுக்கு மேல் தவறு செய்துவந்த அவனால் பிள்ளைகளை எவ்வாறு கவனிக்கவோ திருத்தவோ முடியும்? அவனையே அவனால் பார்த்துக் கொள்ள முடியாதபோது, திருத்திக் கொள்ள முடியாதபோது பிள்ளைகளை எங்கே பார்க்க, திருத்த, படிக்க வைக்க முடியும்?

அவன் நிலைதான் அப்படி என்றால் அவன் மனைவி தமிழ்நாட் டில் பிறந்து வளர்ந்தவள். ஆரம்பத்தில் தமிழைத் தவிர பிறமொழி அறியாதவள். பொல்லாத கணவனுக்கு எதிர்ச்சொல் சொல்லாத மனை வியாக வாழ்ந்து பழக்கப்பட்டவள் (அந்த நாளில்). அதனால் பெட்டிப் பாம்பைப் போல் அடங்கியே கிடந்தாள். பிள்ளைகளின் தகாத செயல் அறிந்து வருந்தினாளே அன்றி வழி காணவில்லை. ஆகவே பிள்ளைகள் விருப்பம் போல சுற்ற வாய்ப்புக்கள் நன்றாக இருந்தன.

முடிவு? அவன் படித்த அளவுகூட அவனின் பிள்ளைகள் படிக்க வில்லை. ஒழுங்காகப் படிக்காத பிள்ளைகள் என்ன செய்வார்கள்? கால் போன திக்கில் சென்று உல்லாசமாகச் சுற்றித் திரிந்தனர்.

தன் பெற்றோருக்குத் தான் ஒரே பிள்ளையாக இருந்தாலும் தன் பெற்றோர் கட்டுச் செட்டாக வாழ்ந்தாலும் தனக்கு வேண்டிய வசதிக ளைச் செய்துவந்தனர். ஆனால் அந்த ஒரே மகன் தற்போது ஒழுங்காக இல்லாததாலும் பல பிள்ளைகள் இருந்ததாலும் அந்தப் பிள்ளைகளக்கு உதவ முடியவில்லை. எனவே அவர்கள் திருடுவது முதல் பல தீய செயல்களில் ஈடுபட்டு பொல்லாத போக்கிரிகளாக வளர்ந்துவந்தனர். அதனால் பிள்ளைகளினால் எவ்வித பயனும் இல்லாதுபோயிற்று.

அவன் உடலில் வலிமையும் உள்ளத்தில் தெம்பும் இருந்தவரை ஆடி ஓடி திரிந்தான். அவை முடிந்தபின் தள்ளாடித் தள்ளாடி நடக்கத் தொடங்கினான். வலிமை இழந்து ஏதும் செய்ய இயலாத நிலையில் இருந்த போதுதான் அவன் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த் தான். மனம் வேதனைப்பட்டான்; வருந்தினான்; தன் தகாத செயலுக் காக துயரப்பட்டான். ஆனால் அவை யாவும் காலங்கடந்த மாற்றங்கள்.

இனிமேல் அவன் திருந்தி என்ன பயன்? அல்லது அவன் மனம் வருந்திதான் என்ன இலாபம்? என்று சொல்லிக் கொண்டிருந்த தாத்தா வின் கண்களிலிருந்து சொட்டுச் சொட்டாகக் கண்ணீர்த் துளிகள் கொட் டின.

கண்ணீரைப் பார்த்துப் பரிதாபப்பட்ட அந்தப் பையன் ஏன் தாத்தா நீங்கள் அழுகிறீர்கள்? என்று இரக்கத்தோடு கேட்டான்.

தான் ஒழுங்காக வளராமல், தன் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க் காமல், தானும் கெட்ட பெயரை எடுத்துத் தன் பிள்ளைகளும் கெட்ட பெயரை எடுக்கக் காரணமாக இருந்ததோடு தன் சமூகத்திற்கும் கேடு செய்த அந்தப் பாழாய்ப் போன பாவி நான்தானப்பா. நான் செய்துவந்த பாவங்களுக்கு அழாமல் வேறு என்ன செய்ய முடியும்?

என் கதையை உன் பெற்றோரிடம் சொல். அவர்கள் உன்னைப் பொறுப்போடு வளர்ப்பார்கள். நீ நல்லவனாக, வல்லவனாக வளர்ந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் நற்பெயரைத் தேடிக் கொடு. உன்னைச் சரியாக வளர்க்காவிட்டால் உன் பெற்றோருக்கு மட்டுமல்ல உனக்கும் என் கதி தான் ஏற்படும். நான் வருகிறேன் தம்பி என்று கூறிய அந்த பெரியவர் சுபாஷின் அழகிய கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்துவிட்டுச் சென்று விட்டார்.

நள்ளிரவு வரை ‘வீடியோ’ என்ற கருவியில் பலவித படங்களைப் போட்டுப் பார்த்தனர். அதன்பின் படுத்துத் தூங்கியவர்களுக்கு விடிந் தது தெரியாது தூங்கினர். எழுந்தபோது காலம் கடந்துவிட்டதை அறிந்த னர். வேலைக்குச் செல்ல இயலாது என்பதை அறிந்து மருத்துவரைப் பார்த்து ஒருநாள் விடுமுறை வாங்கிக் கொண்டு வந்தனர்.

வந்த வழியில் பையன் விளையாட விரும்பவே பூங்காவில் விளை யாட விட்டுவிட்டு சற்று தொலைவில் அமர்ந்து களிப்பில் ஆழ்ந்தனர். பிச்சைக்காரனைப் போல தோற்றமளித்த ஒருவன் மகனின் அருகில் நிற்பதை திடீர் என்று பார்த்ததும் திகைப்படைந்தனர். தன் பிள்ளை அணிந்திருக்கின்ற பொன் சங்கிலியைப் பறித்துப் போகவே வந்திருக்கி றான்; என்று கருதிய பெற்றோர் செடியின் பின்னால் மறைந்திருந்து பார்த்தனர். அப்போது மகனுக்கு மட்டுமல்ல, தங்களுக்கும் நல்லதொரு பாடம் நடந்து கொண்டிருந்ததை அறிந்து அவர்களும் பொறுமையோடு கேட்டனர்.

தன்னைப் போல் தன் பிள்ளையும் துன்பப்படாமல் வாழ பல பெற்றோர் எண்ணிப் பார்ப்பதில்லை. பள்ளிக்கு ஒழுங்காக அனுப்ப வேண்டும் என்று அக்கறை கொள்வதில்லை. ஒழுங்காகப் பிள்ளை படிக் கிறதா என்று கவனிப்பதில்லை. வேலை, வேலை என்று வேலைக்குப் போவதும் வேலை முடிந்ததும் விடிய விடிய ‘வீடியோ’ பார்ப்பதுமாக இருக்கின்ற தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றி அப்போதுதான் எண்ணிப் பார்த்தார்கள்.

பையன் எப்படிப் படிக்கிறான் என்று யாராவது கேட்டால் என்னத் தைப் படிக்கிறான். பள்ளிக்குத் தான் அனுப்புகிறோம், ‘டியூசனும்’ கொடுக்கிறோம். நாம் வேறு என்ன செய்ய முடியும்? என்று ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டவர்களைப் போல பேசுகிறார்கள். போதாக்குறைக்கு எப்பவோ, எப்படியோ புகுந்துவிட்ட தலைவிதி யைச் சந்திக்கு இழுக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் தாத்தாவின் சுய கதை ஒரு பாடமாக அமைந்திருந்தது.

அதுவரை செடியின் மறைவில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சுபாஷின் பெற்றோர்களும் சிந்தித்தனர். தங்கள் தவற்றை உணர்ந்தனர். பிள்ளையின் படிப்பில் தாங்கள் காட்டத் தவறிய பொறுப்பை எண்ணிப் பார்த்தனர். தங்கள் அகக் கண்களைத் திறந்து வைத்த அந்தப் பெரியவர் மனிதரில்லை. அவர் ஒரு கடவுள். அவரை நேரில் பார்த்துப் பேச செடிகளைச் சுற்றி வந்தார்கள்.

எங்கே அந்தக் கடவுள் ஆனால், அந்தப் பெரியவர் அங்கில்லை. அவர் பூங்காவில் எப்பக் கமோ சென்று மறைந்துவிட்டார். “உன்னிடம் பேசிக் கொண்டிருந்த அந்தக் கடவுள் எங்கேப்பா?” என்று சுபாஷிடம் கேட்டபோது அவர் கடவுள் அல்ல, வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்ட ஒரு மனிதர்; வயதான ஒரு தாத்தா என்று உண்மையைச் சொன்னான் சூதுவாதற்ற சுபாஷ் தம்பி.

– தனிமரம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1990, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *