கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2023
பார்வையிட்டோர்: 2,156 
 

நான் சொல்ற இந்த நேரத்துலதான் என் மரண நேரமும் குறிக்கப்படுது. அத குறிக்கிறது என்னை படைத்ததாக நான் நம்புற கடவுளோ, நானோ, இயற்கையோ அல்ல. அது எனது ஊழ்வினைதான். எனக்கு குடல் புற்று நோய் இருக்கிறதென்று மருத்துவ அறிக்கையின் மூலமாக தெரிந்த பிறகுதான் நான் தூங்கிவிட்டதாக நினைத்து கொண்டு ஊசி மூலமாக விஷத்தை என் உடலில் செலுத்தி என்னை முடித்துவிட தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறாள். அவள் வேறு யாருமில்லை நான் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட என் மனைவிதான்.

என்னுடன் வருவதற்காக அவனை எப்படி துச்சமாக கருதி தூக்கி எறிந்துவிட்டு வந்தாளோ, அதேபோல என்னையும் இவ்வளவு சுலபமாக தூக்கி எறிந்து விட்டாளே! என்று நினைக்கும்போது கடவுள் ஒருத்தன் இருக்கிறானென்று நம்புவதை தவிர, இல்லையென்று எப்படி மறுத்துவிட முடியும். அவளாலே எனது வாலிபம் முழுவதும் வீணாகிவிட்டது. இந்த உலகமே துரோகத்தால் செய்யப்பட்டது. காலம் கடந்து வந்த இந்த ஞானத்தால யாருக்கு என்ன பலன் நேர்ந்துவிட போகிறது. ஆனாலும், எனக்கு நம்பிக்கை துரோகம் இழைத்த அவளுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லையே என்கிறபோது கடவுள் இருக்கிறாரா? என்றுகூட சில சமயம் நினைக்க தோன்றுகிறது. இறப்புக்கு பிறகு நிச்சயம் அவளுக்கு நரகம்தான் கிடைக்குமென்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்.

கடவுள்னு ஒருத்தர் இருந்து இந்த பூமியில் ஒவ்வொரு மனிதனுக்குமான கதாபாத்திரத்தை முடிவு செய்து படைத்த பிறகு அவரவர் செய்த நன்மை, தீமைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு சொர்க்கம், நரகம் கிடைக்கும் என்றால் கடவுள்தானே முக்கிய குற்றவாளி. அவர்தானே நல்லவன், தீயவன் அல்லது இரண்டும் கலந்தவன் என்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தையும் முடிவு செய்தவர்.

திருமணமான ஒரு ஆணுக்கு கிடைக்கிற மிகப்பெரிய சந்தோஷமே தனது மனைவியின் மூலமாக தனக்கு ஒரு வாரிசு வர போகிறது என்பதுதான். குழந்தை பிறந்ததும் தன்னை ஒரு ஆண் மகனாக்கிய மனைவிக்கும் தன்னை அப்பா என்று அழைக்கப் போகும் அந்த செல்ல குழந்தைக்கும் தனது அன்பு முத்தத்தையும் தனது உழைப்பால் வந்த பணத்தில் வாங்கிய இருவருக்குமான பரிசுப் பொருளை கொடுப்பதற்கு வந்த ஒருவனுக்கு எதுவுமே தனக்கு உரியது அல்ல. என்று தெரிந்தால் அவனது மனம் என்ன பாடுபடும். அவனது சுற்றத்தார் முன்னிலையில் அவன் எவ்வளவு அவமானத்தை சந்திக்க நேரிடும் என்பதை இப்போது உணர்றேன்.

என் பேரு ரவீந்தர். எனக்கு ஒரு உடல் ஊனமுற்ற ஒரு சகோதரனும் விதவைத்தாயும் திருமணம் செய்து கொடுக்கவேண்டிய வயதில் ஒரு சகோதரியும் இருந்தார்கள். எல்லோரையும் கவனிக்கவேண்டிய பொறுப்பு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்னிடமே இருந்தது. நான் எனது பொறுப்பையும் கடமையையும் மறந்து காதல் மோகத்தில் அதை காதல் மோகம் என்று சொல்ல முடியாது. காமவேட்கை என்றுதான் சொல்ல வேண்டும்.

எனக்கு அப்போது ஒரு இருபத்தைந்து வயது இருக்கும். நான் குறத்தியூரில் ஒரு ஹோட்டலில் தலைமை சமையல்காரனாக இருந்தேன். எங்க ஊரில் எனது வயதுள்ளவர்கள் ஹோட்டலில் பந்தி பரிமாறுபவர்களாகவும் டேபிள் சுத்தம் செய்பவர்களாகவும் சமையல்காரனின் உதவியாளராகவும் காய்கறி வெட்டுபவர்களாகவும் பாத்திரம் கழுவுபவர்களாகவும் இருந்தபோது நான் மட்டுமே சமையல்காரனாக உயர்வு பெற்றிருந்தேன்.

அந்த சமயத்தில்தான், அவள் விரித்த வலையில நான் விழுந்தேன். என்னை காலாவதி ஆக்கிய அந்த அசிங்கத்தின் பேரு கலாவதி. அவளை ஊரில் ஊர்வசி என்றுதான் அழைப்பார்கள். அவளுக்கும் எனது வயதுதான். அவளது அக்காவை எங்களது ஊரிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த கோலியனூரில் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். அவளது கணவன் மும்பையில் ஆசிரியராக பணியாற்றி வந்தான். அதனால் ஊர்வசியின் அக்கா மும்பையிலேயே குடியேறியிருந்தாள். ஊர்வசி அவளது அக்காவின் வீட்டிற்கு சென்றிருந்தபோது தமிழ் நாட்டை சேர்ந்த மும்பையில் மளிகைக் கடை வைத்திருந்த ஒருவன், அவனது மளிகை கடைக்கு ஊர்வசி அவளது அக்காளோடு மளிகை சாமான் வாங்க சென்றிருந்தபோது பார்த்தவனுக்கு பிடித்திருந்ததால் அக்காவிடம் சென்று பெண் கேட்டான்.

அக்காவிற்கு அவனை பற்றிய முழு விபரமும் ஏற்கனவே தெரிந்திருந்ததால் சம்மதம் தெரிவித்து பத்து பைசா செலவு இல்லாமல் செலவு முழுவதையும் மாப்பிள்ளை தலையில் கட்டி மும்பையிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டாள். அக்காவோடு சேர்ந்து ஊர்வசியும் மும்பையில் குடியேறியிருந்தாள். திருமணமான எட்டாவது மாதம் ஏழு மாத கர்ப்பத்துடன் எங்கள் ஊரில் இருந்த அவளது அம்மா வீட்டிற்கு பிரசவத்திற்காக வந்திருந்தாள்.

எங்கள் ஊரில் இருந்தவரை பார்ப்பதற்கு அவ்வளவு அழகியாக தெரியவில்லை. மும்பையிலிருந்த ஏதோ ஒரு தேவதையின் அருள் பெற்றதை போல பேரழகியாக வந்தாள். அவள் இன்னொருவனின் மனைவி, இன்னொருவனின் வாரிசு அவள் வயிற்றில் வளர்கிறதென்ற பண்பாடுகூட இல்லாமல் திருமணம் ஆகாத எங்க ஊர் இளைஞர்கள், நான் உட்பட அனைவரும் அவளையே சுற்றி சுற்றி வர ஆரம்பித்தோம். எங்க ஊரில் பையனை பெற்ற பெற்றோர்கள் அனைவரும் எங்கே தனது மகன் ஊர்வசியையும் இலவச இணைப்பாக அவளது மகளையும் இழுத்து கொண்டு வந்து குடும்ப மானத்தையும் மரியாதையும் கெடுத்து விடுவானோங்கிற பயத்தில் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு அழைந்தனர். அவர்களது வீட்டில் திருமண வயதில் பெண் இருப்பதையும் பொருள் படுத்தாமல் பையனுக்கு பெண் தேடி அழைந்தார்கள். ஐந்தாறு வருடம் சென்று பையனுக்கு திருமணம் செய்யலாமென்று நினைத்திருந்தவர்கள்கூட அவசர அவசரமாக வரன் தேடி கிடைத்த பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். பையன்களை பெற்ற பெற்றோரின் பார்வையில் தங்களது பிள்ளையை பிடிக்க வந்த மோகினியாக தெரிந்தாள். என் வயது இளைஞர்கள் அவளை பார்த்து பித்து பிடித்து அழைந்தார்கள். தாயையும் பிள்ளையையும் கூட்டி கொண்டு ஓட ஊர்வசியின் வீட்டு வாசலில் தவம் கிடந்தனர். ஆனால், ஊர்வசி சாட்டையால் சுற்றிய பாம்பரம் போல எங்களை சுற்றலில் விட்டுட்டு அவள் பல விதத்திலும் கணக்கு போட்டு வைத்திருந்திருக்கிறாள்.

என்னை திருமணம் செய்தால் எதிர்ப்புகள் குறைவு. அவளிடம் இருந்து என்னை பிரிப்பதற்கு வாய்ப்புகள் என்பது மிக மிக குறைவு. என் பக்கம் என் அம்மா மட்டும்தான் இருந்தாள். என்னை இழுத்து கொண்டு சென்றால். என் அம்மா கோபத்தில் இரண்டு நாள் கத்துவாள். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு வாரம் கத்துவாள், அதன்பிறகு தானாக அடங்கி விடுவாள். சமையல் மாஸ்டர் ஆகிவிட்டான். வருமானம் அதிகம் என்ற கணக்கும் மற்றவர்களை இழுத்து கொண்டு சென்றால் எதிர்ப்பு அதிகம் இருக்கும். பிரித்து விடவும் வாய்ப்பு உண்டு. அதுவும் போக அவர்கள் எடுபிடி வேலை செய்பவர்கள், சம்பளம் மிக குறைவு என்று மனதிற்குள் பல விதத்திலும் கணக்கு போட்டு பார்த்துவிட்டு என்னை பிடித்து கொள்ள தீர்மானித்திருக்கிறாள். சூழ்ச்சியறியாமல் அவள் சமிக்ஞை செய்ததும் கருவேலம் காட்டிற்குள் தூக்கி வீசப்பட்ட தீட்டு துணியை அதன் இரத்த வாடையை வைத்து உலர்ந்த இறைச்சி துண்டென நினைத்து துக்கி கொண்டு ஒடும் ஒரு நாயைப்போல பசுவையும் கன்றையும் சேர்த்து இழுத்து கொண்டு ஓடி விட்டேன். இல்லை, அவளது எண்ணம் போல் நடந்து கொண்டு விட்டேன். மூன்று மாதத்திற்கு அப்பறம் அவளது கணவன் மனைவியையும் குழந்தையும் பார்த்துவிட்டு அவனுடன் அழைத்து செல்வதற்காக பரிசு பொருட்களோடு வந்தான். வந்தவனுக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. அவன், இவள் செய்த தவறையும் மன்னித்து அவனோடு அழைத்து செல்ல தயாராக இருந்தான். அவள் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். அவன் கண்ணீரோடு திரும்பி சென்றான்.

ஊர்வசியினுடனான எனது வாழ்க்கை மூன்று ஆண்டுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது. நானும் அவளது மகளை எனது மகள் போலவே பாவித்து நடத்தினேன். ஊர்வசியின் மகள் மீது நான் காட்டிய பாசத்தை அவள் உட்பட யாரும் என்னிடம் குற்றம் சொல்லிவிட முடியாது. ஊர்வசியின் பெரியப்பாவிற்கு மூன்று பெண்களும் இரண்டு ஆம்பள பிள்ளைகளும் இருந்தனர். பெண்களில் மூத்தவள் கல்யாணி அவளை குற்றாலம் பக்கம் புளியறையில் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். கல்யாணியின் கணவனோடு பிறந்த அண்ணனுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் முத்த மகளை மட்டும் திருமணம் செய்து கொடுத்திருந்தார். இரண்டாவது பையன் பாலா கட்டிட கலையில் டிப்ளமோ படித்திருந்தான். பாலா ஒரு வேற்று ஜாதிப் பெண்ணை காதலித்து வந்துள்ளான். அந்த பெண் ஜாதியிலும் வசதியிலும் இவர்களைவிட ஒரு படி அதிகம். இவர்களது காதல் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்து காதலுக்கு பலமான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பெண்ணின் வீட்டில் அவளது மனதை மாற்ற பல விதத்திலும் முயற்சி செய்ய பெண் காதலில் தோற்றுவிடுவோம்ங்கிற பயத்தில் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டாள்.

பெண்ணின் வீட்டார் பையனை ஏதாவது செய்து விடக்கூடும் என்கிற பயத்தில் எங்கள் ஊருக்கு பாலாவை அழைத்து வந்து எங்கள் ஊரிலே திருமணம் செய்து கொடுத்திருந்த தனது தங்கை சுந்தரியிடம் ஒரு மாத காலம் மட்டும் காதல் மன்னனை பார்த்துக்க சொல்லிவிட்டுட்டு சென்றாள் கல்யாணி. சுந்தரியும் ஒரு மாதம்தானே என்று நினைத்து தன்னுடைய அக்காவுக்காக பாலாவை தனது வீட்டில் தங்க வைத்தாள். மாதம் இரண்டு முடிந்தும் அவன் திரும்பி போகற வழியாக தெரியல. அவள், அவனை கவனிப்பதை கொஞ்ச கொஞ்சமாக நிறுத்தி கொண்டாள்.

காதல் மன்னன் பாலா கட்டிட கலையில் டிப்ளமோ படித்திருந்தாலும் நல்ல ஓவியனும்கூட. அந்த சமயத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்தது கொண்டிருந்தது. அந்த தேர்தலில் ஒரு மிகப் பெரிய திராவிட கட்சியின் ஆதரவில் கவுன்சிலர் பதவிக்கு நின்ற வேட்பாளர் ஒருவருக்கு சுவர் விளம்பரம் செய்யும் பணி முழுவதும் பாலாவுக்கு கிடைத்தது. அவன் இரவு பகல் என்று பாராமல் சுவர் விளம்பரங்களை எழுதி தீட்டிக்கொண்டிருந்தான். அப்போது அவனது கையில் கொஞ்சம் பணம் இருந்து விளையாடியது. பணத்தை கண்டதும் ஊர்வசி மீண்டும் ஒரு முறை கணக்குகள் போட ஆரம்பித்து விட்டாள். சுந்தரி, பாலாவை கவனிப்பதை நிறுத்திக் கொண்டதும் இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஊர்வசி மகனே என் அக்கா சாப்பாடு தரவில்லையென்று எந்த கவலையும் படாதே, உனக்கு அறுசுவை என்ன? ஏழு சுவை உணவையே நான் தருகிறேன். என்று அவளது வீட்டிற்கு அழைத்து சென்று வீட்டில் தங்க வைத்து கொண்டாள்.

என் அம்மாவின் விருப்பம் இல்லாமல் நான் ஊர்வசியை திருமணம் செய்து கொண்டதால் எங்களை என் அம்மா எத்துக்கல. ஊர்வசியும் நானும் அவளது வீட்டில்தான் இருந்தோம். ஊர்வசியின் பெற்றோர்கள் மிகவும் வயதானவர்கள். இவள் அவர்களின் பேச்சை கேட்பதில்லை. அதனால் அவர்களும் இவளை எதுவும் சொல்வதில்லை. அந்த வீடு இரண்டு அறைகள் கொண்ட மிகச்சிறிய வீடுதான். முன் அறையில் ஊர்வசியின் அப்பா, அம்மாவும் உள் அறையில் நானும் ஊர்வசியும் படுத்து கொள்வோம். பாலா, ஊர்வசியின் அப்பா, அம்மாவோடு இரவில் படுத்துக்கொள்வான். நான் குறத்தியூரில் வேலைப்பார்த்து வந்ததால் கடையிலேயே எனக்கு அறை கொடுத்திருந்தார்கள். அதனால் நான் அங்கேயே தங்கி கொள்வேன். மாதம் ஒரு முறைதான் ஊருக்கு வருவேன்.

நான் வரும்போது அவள் மண்ணை பார்த்துதான் நடப்பாள். ஒவ்வொரு நொடியும் தானொரு பத்தினி என்கிற அளவில்தான் நடந்து கொள்வாள். அவள் ஒரு இருபத்தி நாலு மணி நேர நடிகை. பாலா, அவளை சித்தி என்று அழைத்து வந்தான். அவள், மகனே என்று அழைத்தாள். ஊரே இப்படி ஒரு தாய், மகனா என வியந்து கிடந்தது. நான் இல்லாத நாட்களில் ஊர்வசியின் அப்பா, அம்மா தூங்கியதும் உள் அறையில் போயி ஊர்வசியோடு ஒரே கட்டிலில் படுத்து கொண்டான்.

ஒரு நாள் இரவில் தற்செயலாக விழித்து கொண்ட ஊர்வசியின் அம்மா பாலாவை காணாமல் தேடி இருக்கிறார். காலையில் உள் அறையில் இருந்து வெளியே வந்திருக்கிறான். அதை பார்த்து ஊர்வசியிடம் “ நீ செய்றது எதுவும் எனக்கு பிடிக்கல.” என்று கண்டித்துள்ளார். அவள் வெளிய குளிர் அடிக்குதுன்னு உள்ள வந்து படுத்தான் என்று சொல்லி சமாளிக்க முயன்றாள். அவர்கள் விடாது “ஏன் கிழவன், கிழவி நாங்க படுத்து கிடக்கறோம், எங்களுக்கு குளிராமதான் அவனுக்கு குளிரு போட்டு ஆட்டிட்டாக்கும். உடனே, தாராள புழுவி உனக்கு மனசு தாங்காம, உள்ள வந்து என்னை கட்டி பிடிச்சி படுத்துக்கன்னு கூப்பிட்டயாக்கும்.” என்று மகள் என நினைக்காமல் வன்மையாக கண்டிக்கதான் செய்தனர். நான், அவளை இழுத்து கொண்டு ஓடும் போதுகூட என்னையும் சேர்த்து கண்டிக்கதான் செய்தார்கள். அவர்களின் பேச்சை ஊர்வசி சிறிதும் சட்ட பண்ணல. நானும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் ஊர்வசியின் அக்கா ஊர்வசியோடு பேசுவதையே நிறுத்திக்கொண்டாள்.

அம்மாவுக்கு விஷயம் தெரிந்துவிட்டதால் இனி நினைத்த மாதிரி இருக்க முடியாது என்று ஊர்வசி எங்கள் ஊரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு பார்த்துக்கொண்டு தனி குடித்தனம் சென்றாள். இரவில் ஒரே கட்டிலில் இருவரும் தூங்கினார்கள். மகன் தனியே படுக்க பயப்படுகிறான், அதனால அவனை, அவள் தன்னோடு ஒரே காட்டிலில் படுக்க வைத்துகொண்டு தாலாட்டு பாடினாள். ஊருக்கு உண்மை தெரிந்து காதல் மன்னனுக்கு உடுக்கன் என்று பட்ட பேரும் வைத்து அழைத்தது.

ராப்பாடிகள் இரவு நேரத்தில் மட்டும் வந்து உடுக்கையடித்து குறி சொல்லிவிட்டு செல்வதால் இவனுக்கும் ராப்பாடியின் செயலுக்கும் தொடர்பு படுத்தி அப்படி ஒரு பேர வைத்துவிட்டார்கள்.

ஊர்வசியின் முதல் கணவனுக்கு பிறந்த மகளுக்கு ஒரு ஐந்து வயதிருக்கும் போது அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நான் அது எனக்குத்தான் பிறந்தது என்று நினைத்து கொண்டாடினேன். அடுத்து ஒரு இரண்டு ஆண்டுகள் சென்று மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது அதுவும் எனக்கே பிறந்ததென்று கொண்டாடினேன். காலம் கடந்தோடியது. எங்க ஊருக்கு புதியதாக ஒரு குடும்பம் வந்து குடியேறியது. அந்த குடும்பம் இரண்டு தலை முறைக்கு முன்னால் எங்கள் ஊரில்தான் இருந்துள்ளார்கள். தற்போது அவர்கள் இருந்த ஊரில் ஏதோ பிரச்சனை என்று பழைய ஊருக்கே திரும்பி வந்தார்கள். அந்த குடும்பத்திற்கு ஊர்வசியின் கணக்கு போடும் வித்தையை பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் கறந்த பாலை போல குற்றமற்றவர்களாக இருந்தனர்.

ஊர்வசியின் மூத்த மகளுக்கு ஒரு பதினாறு வயதிருக்கும் போது பிள்ளைகளே உலகம் என்று வாழ்ந்து வந்த அந்த குடும்பத்தில் எதோ ஒரு தூரத்து உறவு முறையைப் சொல்லி புகுந்து புது உறவ ஏற்படுத்தி கொண்டுவிட்டாள். அந்த குடும்பத்தில் முத்த மகனுக்கு மட்டும் திருமணம் நடந்து புது மருமகள் மூலமாக ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஊர்வசி உள்ளே புகுந்து அவளது பதினாறு வயது மகளுக்கும் குடும்பத்தில் உள்ள இரண்டாவது பையனுக்கும் காதலை ஏற்படுத்திவிட்டு அந்த பையனை குடும்பத்தில் இருந்து பிரித்து விட்டாள். அவன், இவளின் மகள் மீது பித்து பிடித்து அழைந்தான். நான் எனது வாலிபத்தில் பித்து பிடித்து அழைந்ததைபோல. அந்த சமயத்தில் அந்த குடும்பத்தின் தலைவருக்கு புத்தி சுவாதீனம் இல்லாது போக அவர் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ சென்றுவிட்டார். அந்த குடும்பம் முழுக்க முழுக்க இரண்டாவது பையனையே நம்பி இருந்தது. ஊர்வசியின் பேச்சை கேட்டுகொண்டு அந்த பையனும் குடும்பத்தை கண்டு கொள்ளாமல்விட அந்த குடும்பம் பெரிய கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு தவித்தது. இறைவன் ஒரு வாசலை அடைத்தால் இன்னொரு வாசலை திறந்து விடுவான். யாரை நம்பியும் யாரும் இந்த உலகில் பிறப்பதில்லை. எல்லோரும் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்று ஒவ்வொருவருக்குமான இறக்கை தானாகவே முளைக்கும், பறப்பதர்கான சக்தியும் தானாகவே உருவாகும். வாழ வேண்டும் என்று எண்ணம் இருந்தாலே போதும், அந்த வகையில் குடும்பத்தின் வாசல்கள் எதோ ஒரு வகையில் திறந்துகொண்டது அடுத்தடுத்த பிள்ளைகளுக்கு ரெக்கை முளைத்தது. பறந்தும் சென்றார்கள்.

நான் நல்லவனாக இருந்திருதால் அவளின் இந்த செயலை முற்றிலும் அப்போதே கண்டித்திருக்க வேண்டும். என் உழைப்பைதானே தின்று வாழ்கிறாள். இருந்தும், எனக்கு ஏன் இன்னும் அவளது செயலை கண்டித்து இது தப்பு, இது சரி என்று அவளுக்கு சொல்லி உணர்த்தும் எண்ணம் வரவில்லை. வசிகம், மாந்தரிகம் என்று ஏதாவது செய்து என்னை பேசவிடாது செய்து விட்டாளா? இவையெல்லாம் செய்து ஒரு மனிதனை கட்டு படுத்த முடியும் என்றால் அவற்றை செய்யும் மாந்திரீகன் தானே இந்த தேசத்தை ஆள வேண்டும். ஏன் எவன் எவனோ ஆளுறான்? ஒரு வேளை ஆளுகிறவன் எல்லாம் மாந்திரீகனை விடவும் சிறந்த மாந்திரிகனா? இருப்பார்களா? மாந்திரிகத்தைவிட மோசமானது தந்திரமும் சூழ்ச்சியும்தான் போல. எல்லாமே எப்பொழுதையும் காணும் அந்த ஒளியின் நாயகனுக்கே வெளிச்சம். புத்தி பேதலித்து அழைந்தவர் மனநிலை சரியாகி திரும்பி வந்தார். அதன் பிறகு ஒரு வழியாக மகன் மீது கொண்ட பாசத்தால் ஊர்வசியின் மகளை அந்த குடும்பம் ஏற்றுக்கொண்டது. நானும் அவளோடு வாழ ஆரம்பித்து இல்ல, இல்ல. நான் எங்க வாழ்ந்தேன். அவளோடு சேர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகுது. இப்போது அவளது இரண்டாவது மகள் அதாவது எனக்கு பிறந்ததாக சொன்ன மூத்த மகள், மகன் என்று சொல்லிக்கொண்டு இருபத்தி மூன்று வருடங்களாக இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறானே அவனுடைய அக்கா மகனோடு ஊர்வசி கூட்டி கொடுத்துவிட்டாள். நான் ஊர்வசியிடம் “காதல் பண்றது தப்பில்ல. ஆனா, முறை இல்லாம காதல் பண்ணிட்டு போயிட்டாளே?” என்றேன். அதற்கு “எல்லாம் சரியான முறைதான்.” என்றாள். “எப்படி சொல்ற?” என்றேன். அதற்கு “நீ உனக்கு பிறந்ததுன்னு நினைச்சிட்டு பேசுற. அவன் மகள அவனோட அக்கா மகனுக்கு அவன்தான் அழைச்சிட்டு போயி கட்டு கொடுத்துருக்கறான். உனக்கு என்ன?” என்றாள்.

நான் சாதாரண மனிதர்கள் அடைகிற அளவுக்குகூட அதிர்ச்சியாகவில்லை. என்ன தைரியம் பாருங்க, என்னை இவ்வளவு காலம் ஏமாற்றியதை எவ்வளவு சுலபமாக சொல்கிறாள். எனக்கு இப்படி ஒரு மானம் கெட்ட வாழ்க்கை அவசியம் தானா? அந்த நிமிடமே அவளை வெட்டி துண்டு துண்டாக போட்டு விடலாம் போலதான் கோபம் இருந்தது. இவளை கொன்றுவிட்டு நாம ஏன் சிறையில போய் கஷ்டப்பட வேண்டும். என்ற நினைப்பு வந்தது. இது ஒன்றும் புத்திசாலித்தனமான எண்ணம் இல்லை. தொடை நடுங்கித்தனம்னுதான் சொல்லனும். துரோகத்திற்கு தண்டனை துரோகம்தான் அதைத்தான் நான் இப்போது அனுபவிக்கிறேன். ஊர்வசியின் மூன்றாவது மகளை உற்று பார்த்தேன். அந்த பன்றி மூஞ்சிகாரன் உடுக்கனின் முக சாயலே தெரிந்தது. எனது பொருள் என்று நினைத்தது எதுவுமே எனது பொருளே அல்ல. பெற்ற தாயும் அந்த தாயின் வயிற்றில் பிறந்த உறவுகள்தான் நிஜம் என்பதை உணர எனக்கு இருபத்தைந்து ஆண்டுகள் தேவைபட்டிருக்கு.

நடு இரவில் தனியே படுத்து யோசித்தாளோ, இல்லை. என் மூலம் வருகிற வருமானம் போய் விடும் என்பதாலோ என்னை சமாதானம் செய்வதாக நினைத்து “நான் உனக்குதான் பிள்ளைகள பெத்திருப்பேன், உன் அப்பாவுக்கு குஷ்டம் இருந்தது. உன் மூலமா பொறக்குற என் பிள்ளைகளுக்கும் அது வந்துவிடும். உனக்கு இப்ப குஷ்டம் இல்லதான். இனிமேல வராதுன்னு எப்படி உறுதியா சொல்ல முடியும். அதனாலதான் உனக்கு பிள்ளை பெத்துக்கல. பிள்ளைகள் அவனுக்கு பிறந்தது என்றாலும் அது வளர்ந்தது நீ வியர்வை சிந்தி உழைத்த உழைப்பில்தானே ” என்றாள்.

என் தந்தை இரவு பயிர் காவலுக்கு சென்று படுத்திருந்த இடத்தில் எதோ ஒரு விஷ பூச்சி கடித்து இரண்டு காலிலும் மூட்டுக்கு கீழே புண் வந்து அந்த புண்ணால்தான் இறந்தார். அதைதான் அவள் குஷ்டம் என்று இட்டுகட்டி அவளது தவற நியாயப் படுத்தினாள். வாழ வேண்டிய வயதில் விதவையாயி எங்களுக்காக வாழ்ந்த என் தாயின் வாழ்க்கை என்னால்தான் அழிந்தது. என் தங்கையின் வாழ்க்கை என்னால்தான் சிதைந்தது. என் அண்ணன் வாழ்க்கை கேள்வி குறியானது. நான் தறுதலையாக போனதால் என் அம்மா குடும்ப கஷ்டத்தை சமாளிக்க, என் தங்கையையும் அவளோடு கூலி வேலைகளுக்கு அழைத்து கொண்டு சென்றாள். என் அம்மா பக்கத்து ஊர்க்காரர் ஒருவரின் தோட்டத்துக்கு பதிவாக வேலைக்கு செல்வாள். உடன் என் தங்கையையும் வேலைக்கு அழைத்து சென்றாள். ஒரு சமயம் என் அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் போனதால். என் தங்கை மட்டும் வேலைக்கு சென்றாள். பழகிய ஆட்களின் தோட்டம் என்பதால் என் அம்மாவும் தனியே அனுப்பி வைத்தாள். அந்த தோட்டத்துக்கார முதலாளியின் பையன் ஏதோ ஆசை வார்த்தைகளை சொல்லி என் தங்கையோடு முயங்கிவிட்டான். அதன் விளைவால் என் தங்கை கருத்தரித்துவிட்டாள். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாம் வயிற்றில் மறைக்க முடியுமா? அவளது வயிறும் வளர்ந்தது. என் அம்மாவுக்கு விஷயம் தெரிந்து அதை மறைக்க என் மகள் தனியே காட்டு வழியே வேலைக்கு சென்று வந்தபோது எதோ காத்து கருப்பு அவ வயிற்றுக்குள்ள புகுந்துடிச்சி என்று ஊர நம்ப வைத்தார். என் அம்மாவின் மேல் எங்க குலதெய்வத்தின் அருள் வந்து ஊருக்கு குறி சொல்லுவாள். அதையே சாக்காக வைத்து அருள் வராமலே வந்ததாக காட்டிக்கொண்டு குறி சொல்லி ஊரையும் நம்ப வைத்தாள். பிரசவ மாதம் நெருங்கும்போது பேய் ஓட்ட வெளியூர் செல்வதாக சொல்லிவிட்டு எங்கள் ஊரில் இருந்து வெகு தொலைவில் இருந்த ஒரு அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று அங்கேயே பிரசவம் பார்த்து குழந்தையை கொலை செய்ய மனம் இன்றி தத்து கொடுத்துவிட்டு என் தங்கையை அழைத்து கொண்டு ஊருக்கு வந்தார். நான் எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு என் தங்கைக்கு வரன் பார்த்து திருமணம் செய்து கொடுத்தார். நான் யாருக்கோ திருமணம் என்பதுபோல இருந்துவிட்டேன். என் அம்மா அவரது சக்திக்கு மீறி உடல் ஊனமுற்ற எனது சகோதரன் மேலுள்ள ஒரு நம்பிக்கையில் அந்த சம்பந்தத்தை பேசி முடித்திருந்தார். வரதட்சணையாக கேட்ட நகையை கடைசி நேரத்தில் கொடுக்க முடியாமல் கவரிங் நகைகளை வாங்கிப்போட்டு என் தங்கையை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். திருமணத்திற்கு பின் அது தெரிய வந்தப்போது படாத பாடுபட்டு கடன் வாங்கி சமாளித்திருக்கிறார். அதையும் நான் கண்டு கொள்ளவில்லை. நான் ஹோட்டலில் சமையல்காரனாய் இருப்பதால் மூன்று வேலை சாப்பாடும் எனக்கு அங்கே கழிந்துவிடும். தினமும் இருநூறு ரூபாய் தினபடி என்று தருவார்கள், அதை நான் என் கை செலவுகளுக்கு வைத்துக்கொண்டேன். மாத சம்பளத்தை வாங்கி அப்படியே அவளுக்கு போட்டுவிட்டேன். நான் முழுக்க முழுக்க அவளையே நம்பியதால் என்னை நம்பி இந்த நிமிடம் ஒரு ஆயிரம் ரூபாய்கூட இல்லை. அவள் எனது பணத்தை வைத்து விதவிதமாக நகைகள் வாங்கி கொண்டாள். அவளது அப்பா, அம்மா இறந்து போனதால் அவர்களது வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் அவளது பெயரில் புதியதாக வீடு கட்டிகொண்டாள்.

என்னைபோல இவ்வளவு முட்டாளாக ஒரு மனிதன் இருப்பானா! என்று என் மேலே எனக்கு ஆத்திரமாக வருகிறது. நான் வாழ்க்கையில் ஏமாந்து விட்டேனேன்று என் தாயிடம் போயி எப்படி நிற்பேன். அவர் எவ்வளவோ என்னிடம் சொன்னார். காமம் என் காதுகளில் அவரின் பேச்சை கேட்காமல் செய்துவிட்டது. நான் தினமும் நெருப்பில் வெந்து உழைத்து கொடுத்ததை இருபத்தைந்து வருஷமா தின்றவளுக்கு நன்றி என்பது கொஞ்சம்கூட இல்லாமல் போயி விட்டதே. கஷ்டபட்டு வளர்த்த பிள்ளைகளின் ஆதரவு இல்லாமல் தளர்ந்து போயி வாழ்க்கையின் இறுதியில் இருக்கும் என் தாயிக்காக வாழலாமென்று நினைத்திருக்கும் என்னை மன்னித்து என் தாய் ஏற்று கொள்வாளா?

என் தாய் என்னை மன்னித்தாலும் மன்னிக்க விட்டாலும் அவருக்கு நான் சேவை செய்து போற வரைக்குமாவது புண்ணியம் தேடிக் கொள்ள நினைக்கிறேன். ஆனால், என் உடல் உணர்ச்சியற்று கிடக்கிறது எனது தாய் மட்டுமே என் உடல் மீது விழுந்து கிடந்து அழுது அரற்றிக் கொண்டிருக்கிறாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *