உள்ளம் உன் வசமானதடி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2023
பார்வையிட்டோர்: 15,659 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

மறுநாள் காலையில் மிருணா கல்லூரிக்கு கிளம்பிச் செல்லும் போது, சைக்கிள் ரிப்பேர் என்று உடன் படிக்கும் பங்கஜமும் அவளுடன் வந்தாள். இருவரும் பேசிக் கொண்டே நடந்தால் – ஊர் எல்லையில் முகிலனின் காரைக் காண நேர்ந்தது.

அங்கிருக்கும் பெரிய அரசமர மேடையில், அந்தப் பைத்தியக்காரப் பெண் அலங்கோலமாகப் படுத்திருப்பதும் கார் டிரைவர் அவளருகில் சென்று ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டிருப்பதும் தெரிந்தது.

அவர்கள் அந்தக் காரைக் கடக்கும்போது. “அது நல்லாத் தூங்கிட்டிருக்கு சின்னய்யா! முழுசாப் போர்த்தி விட்டுட் டேன்” டிரைவர், பின்புறம் அமர்ந்திருந்த முகிலனிடம் கூறினார்.

ஓரக்கண்ணால் அவனையே ஒரு நொடி கவனித்து விட்டு அவள் வேகமாக முன்னே சென்ற அடுத்த நொடி, அந்தக் கார் அவர்களைத் தாண்டிச் சென்றது.

ஏனோ, அன்று முழுவதும் அவள் மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. அவனுடைய முரட்டுத்தனத்திற்கும், அந்த இரக்க குணத்திற்கும் இடையே, ஏதோ ஒன்று முரண்படுவதைப் போல்!

மாலையில் வீட்டிற்கு வந்தவுடனே, அம்மா அவள் வாயில் சர்க்கரையை அள்ளிக் கொட்டினார்.

“ரொம்பக் குடுத்து வச்சவடி! ஜாதகம் பொருந்தி, அந்தப் பையனுக்கும் உன்னைப் பிடிச்சிட்டதாலே, அவங்களுக்கு முழு சம்மதம்! ஒரு சம்பிரதாயத்துக்காக, அடுத்த ஞாயிற்றுக் கிழமை உன்னைப் பொண்ணு பாக்க வராங்களாம். அன்னிக்கே பேசி முடிச்சி, தேதி குறிச்சிடலாம்னு சொல்லியனுப்பினாங்க” – உற்சாகத்துடன் கூறினார்.

“ஏம்மா… இப்படி என்னைப் புரிஞ்சிக்காம..” எனும் போதே, மீனாவின் கணவன் தங்கவேலு அவசரமாக உள்ளே வந்தான்.

“வாங்க மாப்பிள்ளை…” என்று தேம்பாவனி வரவேற்றார்.

“என்னத்தை…? வீட்டு மாப்பிள்ளைக்கே தெரியாம, என்னென்னவோ காரியமெல்லாம் இந்த வீட்டுல நடக்குது” என்றான் கோபக் குரலில்.

”உக்காருங்க மாப்பிள்ளை… நான் டிபன் காபி எடுத்துட்டு வரேன், நம்ம மிருணா கல்யாண விஷயத்தைப் பத்திச் சொல்றீங்களா? முந்தா நாள்தான் ஜாதகம் கொடுத்தோம். உடனே பாத்துப் ‘பொருந்தி இருக்கு, பேசி முடிக்கலா’மின்னு இன்னிக்குத்தான் அவங்க வீட்டிலயிருந்து வந்து சொன்னாங்க. உடனே இவங்கப்பா உங்களைப் பாத்து சொல்லணும்னு, பள்ளிக் கூடத்துக்கு வந்தாங்களே தம்பி.”

“ஆமாம்… இப்பத்தான் மாமா வந்து சொல்லிட்டுப் போனாரு. ஏன் அத்தை… நீங்களாவது சொல்றதில்லையா? நம்ம வசதிக்கு. என்னை மாதிரி ஒரு ஸ்கூல் டீச்சர்…. இல்லை, வேற ஏதாவது ஒரு உத்தியோகத்துல இருக்கிற மாப்பிள்ளைதான் சரி! இப்படி ஒரு பட்டிக்காட்டுப் பண்ணையாருக்கு நிச்சயம் பண்ணப் போறதாச் சொல்றீங்க?”

“ஏன் மிருணா… இதுக்கு நீயும் ஒத்துக்கிட்டியா?” – என்று அவளிடம் திரும்பிக் கேட்டான்.

உடனே, “நான் வேண்டாம்னுதான் சொல்றேன் மாமா! எனக்கு அவரைப் பார்த்தாலே சுத்தமாப் பிடிக்கலை…உங்களை மாதிரி பாக்க சாதுவா. அமைதியா, நல்லவரா இருந்தாக் கூடப் பரவாயில்லை. இவங்க யாருமே கேக்க மாட்டேங்கிறாங்க!” என்றாள், தனக்கென்று பேச ஒருவர் கிடைத்த சலுகை உணர்வுடன்!’

திடீரென்று, மீனாவின் கோபக்குரல் அவனை இடைமறித்தது.

“நீ உள்ளே போ… மிருணா. பெத்தவங்க உன் நல்லதுக்குத்தான் எதுவுமே செய்வாங்க.” – இதுவரை பார்த்திராத ஒரு ரௌத்ரம், அவள் விழிகளில்!

“மீனா ஏன் இப்படி அவளைக் கோச்சுக்கறே…?” என்றபடி அவளருகில் சென்றவனிடம், “நீங்க இதிலே தலையிடாதீங்க, அப்பா அவளுக்கு நல்லதுதான் செய்வாரு!” என்று கூறிவிட்டு, வேகமாக உள்ளே சென்றாள் அவள்.

தங்கவேலுவும் அவளைத் தொடர்ந்து செல்ல, என்ன செய்வதென்று புரியாமல் நின்ற மிருணா, கொல்லைப்புறம் சென்று துணி துவைக்கின்ற கல் மேடையில் அமர்ந்து யோசித்தாள்.

தனக்கென்று பேச இங்கு ஒருவருமே இல்லை என்று தோன்றி, மனம் சோக மூட்டமானது.

அங்கு. இரவில் பெய்த மழையின் துளிகள், பூமியில் சிறு குட்டைகளாகத் தேங்கியிருந்தன.

அவள், தோட்டத்து மலர்களிடம் சென்று மௌனமாய்ப் பார்வையிட்டாள்.

பறித்தவுடன் வாடிவிடுகின்ற பூக்களைப் பார்க்கும்போது, இப்போதெல்லாம் பூப்பறிக்கவே மனம் வருவதில்லை.

இன்று, ஏனோ அவள் மனம் மிகவும் சோகமாய்…

பூக்களை யாசித்தபோது, வாழ்க்கை பாறைகளை எறிந்தது போல் இதயத்திற்குள் வலித்தது.


அடுத்த வாரக் கடைசியில், பெண் பார்க்கவென்று முகிலனின் குடும்பத்தினர் வரப்போவதை அறிந்ததிலிருந்து, மிருணாவின் மனத்திற்குள் புதுவிதமான ஒரு அலைப்புறுதல் தெரிந்தது.

உள்ளே ஒருவித இறுக்கம் நிறைந்திருக்க, இதயம் மட்டும் எதிலும் ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீராய் தனித்திருந்தது.

மறுவாரத்தில் ஒரு நாள், மாலை நேரத்தில் மீனாவிற்குப் பிரசவவலி எடுத்து விட்டது.

உடனே காரை வரவழைத்து மீனாவை அழைத்துக் கொண்டு அம்மாவும் அப்பாவும் டவுனிலிருக்கும் மருத்துவமனைக்குக் கிளம்ப – தங்கவேலுவின் பள்ளிக்கு ஃபோன் செய்தாள் மிருணா.

ஆனால் அவன் விடுமுறை என்று தெரிந்தது.

தங்கவேலுவிடம் அவளையே சொல்லி விடும்படிக் கூறிய லிங்கம், பக்கத்து வீட்டு அப்பத்தாவைத் துணைக்கு வைத்து விட்டுப் பிறகு கிளம்பினார்.

உடனே மீனாவின் வீட்டிற்குச் சென்றாள் அவள்.

பலமுறை அழைத்தும் பதிலில்லாமல் போக, வாசல் கதவைத் தள்ளியபோது அது திறந்து கொண்டது.

அவனை எங்கும் காணாததால் பின்புறம் சென்றாள் மிருணா.

பின்புறத் தாழ்வாரத்திற்குச் செல்லும்போதே ஏதோ புரியாத சப்தங்கள் கேட்டன.

மெதுவாக எட்டிப் பார்த்தபோது, அங்கு கண்ட காட்சி அவள் நெஞ்சையே உலுக்கிப் போட்டது.

ஆடைகள் கலைந்து, பார்க்கக்கூடாத ஒரு கோலத்தில் அந்தப் பைத்தியத்தை அணைத்தபடித் தரையில் படுத்திருந்தான் தங்கவேலு.

மனம் பதறித் துடிக்க அவள் வேகமாக வெளியே வந்தாள்.

எப்படி நடந்தோமென்றே புரியாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, மனமோ வெடித்துவிடும் போல்!

கண்கள் சிவந்து, முகம் வெளுத்து, இதயம் படபடக்க, தங்கவேலுவின் சுயரூபத்தை அறிந்து கொண்ட வலி முட்களாய் மனதில் நிறைந்தன.

விழியோரங்களில் கண்ணீர்த் துளிகள் ஜனித்தன. போயும் போயும், தன் நினைவில்லாத ஒரு பைத்தியக்காரப் பெண்ணிடம் தன் ஆண்மையை நிரூபிக்கும் அவனை நினைத்தால், அடிவயிறுவரை கசந்தது.

மீனாவின் மறைமுகப் பேச்சுக்களுக்கும், விரக்திப் புன்னகைக்கும் அர்த்தம் புரிந்தது.

உள்ளம் நொறுங்கிப் போயிருந்தது.

நெஞ்சுக் கூட்டுக்குள் பயப்பறவை சிறகடிக்க – வீட்டிற்குள் வந்தவள், தன் அறைக்குள் சென்று முகம் மூடி அழ ஆரம்பித்தாள்.

வெகு நேரம் கழித்து, தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு எழுந்தாள்,

முகம் கழுவி முன்னறைக்கு வந்தபோது, வெற்றிலை பாக்கை இடித்தபடி பக்கத்து வீட்டு அப்பத்தா டி.வி.யில் ஆழ்ந்திருந்தார்.

மீனாவைப் பற்றிய தகவலேதும் தெரியவில்லை.

அவளுடைய சோக வாழ்க்கையை எண்ணியபடி வேதனையுடன் அமர்ந்திருந்தபோது, வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

கதவைத் திறந்தால், புது மாப்பிள்ளை போல் குளித்து உடை உடுத்தி அங்கு தங்கவேலு நின்றிருந்தான்.

இன்று அவனுடைய சிரிப்பே வித்தியாசமாய் – மன விகாரம் மிகுந்த ஒரு ஓநாயின் சிரிப்பாய் மனதில் பதிய, அவனையே வெறித்தபடி நின்றிருந்தாள் மிருணா!

“என்ன மிருணா… அப்படிப் பாக்கறே? வாங்கன்னு கூப்பிட மாட்டியா?” வழிசலாகக் கேட்டபடி, உள்ளே வர முயன்றவனைத் தடுத்தாள் அவள்.

“அப்பா உங்களை உடனே டவுன் ஹாஸ்பிடலுக்கு வரச் சொன்னாங்க, அக்காவுக்கு வலி எடுத்துக் காரில் அழைச்சிட்டுப் போயி ரெண்டு மணி நேரமாச்சு.”

முகம் உடனே மாறிவிட “ஏன்… எனக்கு உடனே சொல்லணும்னு உங்கப்பாவுக்குத் தோணலையா?” கோபத்துடன் கேட்டான் அவன்,

“உங்களுக்கு ஸ்கூலுக்கு ஃபோன் பண்ணினோம். நீங்க லீவுன்னு சொன்னாங்க. உங்ககிட்டச் சொல்லச் சொல்லிட்டு அவங்க அவசரமாகக் கிளம்பிட்டாங்க. நான்தான் உங்களைத் தேடி வீட்டுக்கு வந்தேன். அங்கே.” மெதுவாக அவள் நிறுத்தினாள்.

அவன் பார்வை பதட்டத்துடன் உயர, மெலிதாய் வியர்த்துப் போனது.

படபடப்புடன் “நீ வீட்டுக்கு வந்தியா?” – என்று அவசரமாகக் கேட்டான்.

“ஆமாம்… ஆனா நீங்க இல்லை போலிருக்கு அந்தப் பைத்தியம் தான் எதிர்லே வந்தது. வீட்டுக் கதவைத் தட்டிப் பார்த்துட்டு வந்துட்டேன்.” அழுத்தமாகக் கூறினாள்.

சன்னமான அதிர்ச்சியுடன். “ஆமாம்… மிச்சமிருந்த சாப்பாட்டைப் போட்டு அனுப்பிட்டு குளிக்கப் போயிருந்தேன்… சரி! நான் உடனே போய் மீனாவைப் பாக்கறேன்.” கூறிவிட்டு அவள் வேகமாய்த் திரும்பிச் செல்ல, முதன் முதலாக அவன் மேல் பெரும் வெறுப்பும், கோபமும் எழுந்தன.

ஆனால், அன்றிரவு முழுவதும் வலி எடுத்து மீனாவிற்கு அதிகாலையில் பிறந்தது ஒரு பெண் குழந்தை.

ஈனப் பிறவியான தந்தையின் முகத்தையும், பாவப்பட்ட பெண்ணாகிய தன் தாயின் முகத்தையும் பார்க்க விருப்பமின்றி அந்த மழலை இறந்தே பிறந்துவிட, அவர்களின் வீடே சோகமயமானது.

எல்லாக் காரியங்களும் முடிந்து விட்டாலும், அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் மெல்லிய சோகம் குடி புகுந்திருந்தது.

புத்திர சோகத்தில் துவண்டிருந்த மீனாவைப் பார்த்தால் நெஞ்சை அடைத்தது. மிருணாளினிக்கு!

சொக்கலிங்கமும் உடைந்து போயிருந்ததால் எல்லாக் காரியங்களையும் கணபதியே முன்னின்று பார்த்துக் கொண்டார்.

வீட்டில் துக்கம் நிகழ்ந்திருந்ததால் பெண் பார்க்கும் படலத்தை நிறுத்திய சுந்தரபாண்டியன், முகிலனின் போட்டோவை மட்டும் சம்பிரதாயத்துக்கென்று அனுப்பியிருந்தார்.

இரண்டு மாதங்கள் கழித்து அவளுக்குப் பரீட்சை முடிந்ததும், திருமணத்தை பேசி முடித்துக் கொள்ளலாமென்று லிங்கத்திடம் ஃபோனில் கூறினார்.

ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்த மிருணா, அக்காவை சிறு குழந்தை போல் கவனித்துக் கொண்டாள்.

தங்கவேலுவைப் பற்றி வெளியில் கூறவும் முடியாமல், மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்க. பல வேதனைகள் அவளை ஆக்ரமித்து வாட்டின.

ஒரு வாரம் கழித்து, அவள் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தாள்.

சிறு மழலையின் வரவு மறுக்கப்பட்ட சோகமும், தங்கவேலுவின் செய்கையும் சேர்ந்து, நம்பிக்கை என்ற ஒன்றே அவள் மனதில் வறண்டு போயிருந்தது.

அன்று மாலை கல்லூரியிலிருந்து வெளியே வந்தபோது. பேருந்துகள் வேலை நிறுத்தம் செய்திருந்தன.

அவள் குழம்பிப்போய் நின்றிருக்க, முகிலனின் கார் அவளருகே வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கி வந்த டிரைவர், “வாங்கம்மா… நான் உங்களை வீட்டிலே விட்டுடறேன். சின்னய்யாதான் கார் அனுப்பினாங்க. பஸ் ஸ்டிரைக்குன்னு தெரிஞ்சுதாம்.. அதான்!” என்றார் பல்யமாக.

“இல்லீங்க… நான் ஏதாவது ஆட்டோ கிடைக்குதான்னு பாத்துப் போயிடறேன். உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்?”

“சிரமம் ஏதும் இல்லைம்மா! உங்களை அழைச்சிட்டுப் போயி வீட்டில விடலைன்னாதான், ஐயா திட்டுவாங்க ஏறுங்க!” என்று பின் கதவைத் திறந்துவிட. அவள் மெல்ல ஏறிக் கொண்டாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *