வட்டிப் பணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 4,408 
 

(இதற்கு முந்தைய ‘கடைக் கதைகள்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது).

வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலை மச்சக்காளை வெறும் ‘ப்ராமிஸரி நோட்’ என்ற எழுத்து ஒப்பந்தத்தில் மட்டும் செய்து கொண்டிருக்கவில்லை.

ஒருத்தர் வந்து மச்சக்காளையிடம் கொஞ்சம் குறைவான பணம் கடனாகக் கேட்டால், அவரிடமிருந்து தங்க நகைகள் ஈடாக வாங்கிவைத்துக்கொண்டு அந்த உத்திரவாதத்தின் பேரில்தான் மச்சக்காளை யாருக்கும் கடன் கொடுப்பார், கடன்கேட்டு வந்தவர் கொஞ்சம் பெரிய தொகையாகக் கேட்டால், அவரிடம் இருந்து வீட்டுப் பத்திரம் அல்லது சொத்துப் பத்திரம் எதையாவது அடமானமாக வாங்கி வைத்துக்கொண்ட பிறகே பணத்தை தூக்கிக் கொடுப்பார்.

இந்தக் காட்சிகளை கதிரேசன் எத்தனையோ தடவைகள் பார்த்திருக்கிறான். இதெல்லாம் அவனுக்கு மனதிற்கு கஷ்டமாகவும் பார்ப்பதற்கு பிடிக்காததாகவும் இருக்கும். மச்சக்காளையிடம் கடன்கேட்டு வருகிறவர்கள் வேறு வழிகளில் பணம் புரட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலைகளிலும் எதிர்பாராத அவசரத் தேவைகளுக்காக்கவும்தான் வருவார்கள்.

கடன் வாங்கிப் போவதற்காக வீட்டுப் பெண்களின் நகைகளையோ அல்லது சொத்துப் பத்திரங்களையோ ஒளிவு மறைவாக எடுத்து வருவதால், அவர்களின் தோற்றத்திலும் பேச்சிலும் ஒருவித பதட்டமும் பயமும் இருக்கும். நகையும் பத்திரமும் கைக்கு வந்து சேர்ந்த அடுத்த நிமிஷமே கடன்கேட்டு வந்த யாருக்கும் பணத்தைத் தூக்கிக் கொடுத்து விடமாட்டார். பத்திரத்தை ரொம்ப உன்னிப்பாக ஏழெட்டு தடவைகள் படித்துப் படித்துப் பார்ப்பார். நகைகளை நூற்றியெட்டு தடவைகள் அப்படியும் இப்படியும் புரட்டிப் பார்ப்பார். கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு நகையை சோதித்துப் பார்ப்பார். அப்புறமும் இரண்டு நாட்கள் கழித்து வரச் சொல்லுவார்.

மச்சக்காளை கடன் கொடுப்பாரா மாட்டாரா என்ற மர்மத்திலேயே ஆட்களை நாற்பத்தியெட்டு மணி நேரங்களுக்கு ஊறப் போட்டிருப்பார். கடைசியில்தான் ரொம்பப் பெரிய மனசு வைத்து கடன் கொடுப்பதுபோல பணத்தை எடுத்து எண்ணிக் கொடுப்பார். “கடனை எப்ப உன்னால திருப்பித்தர முடியுமோ அப்ப மெதுவா கொடு, அவசரமே இல்லை” என்று கடன் வாங்கினவரை பெரிதாக ஆசீர்வாதம் பண்ணி அனுப்புவதுபோல அந்த நேரங்களில் ரொம்ப பெரிய மனிதத் தோரணையோடும் நடந்துகொள்வார்.

கதிரேசன் இந்த மாதிரியான காட்சிகளை அவனுடைய சின்ன வயசில் இருந்தே பார்த்துக்கொண்டுதான் வருகிறான். ஆனால் இதயெல்லாம் தன்கூடப் படிக்கின்ற பையன்களிடம் பெருமையாகப் பீற்றிக்கொள்ள முடியுமா அவனால்?

கதிரேசன் இவைகள் எதையும் வாயைத்திறந்து சொல்லாவிட்டாலும், பையன்கள் அவனை ஒன்றுமே கேட்காமலா இருப்பார்கள். அவனுடைய அப்பாவிற்கு என்ன வியாபாரம் என்று கேட்பார்கள். அவருடைய கடை பாளையங்கோட்டையில் எங்கே இருக்கிறது என்றும் துருவித்துருவி விசாரிப்பார்கள்.

அப்போதெல்லாம் அவன் எதையாவது மாற்றி மாற்றி அவர்களிடம் பொய்யைத்தான் சொல்லிக் கொண்டிருப்பான். சிலநேரங்களில் வகை தெரியாமல் பொய் சொல்லிவிட்டு மாட்டிக்கொண்டு மூக்கு உடைபட்டதும் உண்டு. பவுன் மார்க் கடலை எண்ணெய் தன்னுடைய அப்பா மச்சக்காளையின் தயாரிப்பு என்று ஒரு சமயம் ஒரு பையனிடம் யோசித்துப் பார்க்காமல் பொய்யைச் சொல்லப் போக அது மிகப்பெரிய பிரச்சினையாகி விட்டது. கதிரேசன் இந்தப் பொய்யை எந்தப் பையனிடம் சொன்னானோ, அந்தப் பையனின் சொந்தப் பெரியப்பாவின் தயாரிப்புதான் பவுன் மார்க் கடலை எண்ணெய்! இது தெரியாமல் பொய்யைச் சொல்லிய கதிரேசனுக்கு பள்ளிக்கூடம் பூராவும் தெரிகின்ற மாதிரி மூக்கு உடைந்ததுதான் மிச்சம்.

ஆனால் கதிரேசனைப் பொறுத்தவரை மூக்கு உடைபட்டதற்கு அவன் பொறுப்பு கிடையாது. அது மச்சக்காளையின் பொறுப்பு. பிறகு என்ன பிறகு? நிஜத்தில் பெருமைப் படும்படியான ஒரு வியாபாரத்தில் அவர் இருந்து கொண்டிருந்தால், கதிரேசன் தேவை இல்லாமல் பெருமைக்காக அப்படி ஒரு பொய்யைச் சொல்லி இருக்கமாட்டான்…. அதனால் என்ன ஆயிற்று தெரியுமா?

நிஜத்தைச் சொல்ல பயமாக இருந்தது போல, பொய்யைச் சொல்லவும் ஒருநாள் கதிரேசனுக்கு பயமாகிவிட்டது. எல்லோருக்குமே வரக்கூடிய கஷ்டம்தான் இது என்று சொல்லிவிடக் கூடியதில்லை இது. கதிரேசனுக்கு மட்டுமே வந்த அநியாய கண்டம் இது! அதனால்தான் ரொம்பக் கஷ்டமாக இருந்தது அவனுக்கு. அதேநேரம் கதிரேசன் மற்றவர்களின் சில வெளியே சொல்ல முடியாத கஷ்டங்களையும் அவனுடைய அப்பாவின் வட்டிக்கடையில் பார்த்துக் கொண்டிருந்தானே! உண்மையில் அந்தக் கஷ்டங்கள்தான் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! வலி மிகுந்தவை…

மச்சக்காளையிடம் கடன்கேட்டு பெண்களும் கூட சில நேரங்களில் வருவார்கள். அந்தக் காட்சிகள் மேலும் சோகம் நிறைந்ததாக அவனுக்குக் காணப்படும். மச்சக்காளையிடம் கடன்கேட்டு வரும் பெண்களில் முக்கால்வாசிப் பேர் புருஷன் செத்துப் போனவர்களாக இருப்பார்கள், அல்லது புருஷனுக்கு ரொம்பவும் உடம்பு சரியில்லாமல் அந்த அவதியில் வருகிறவர்களாக இருப்பார்கள். ஆனால் என்ன தலைபோகிற சமாச்சாரமாக இருந்தாலும், அந்தப் பெண்கள் கேட்கிற கடனை மச்சக்காளை அவரின் வழக்கப்படி உடனே தூக்கிக் கொடுத்துவிட மாட்டார். சொல்லப்போனால் பெண்களைத்தான் மேலும் இரண்டு மூன்று நாட்களுக்கு நடையாய் நடக்கவைத்து அலைக்கழிப்பார். நேரிலும் தேவையில்லாமல் ரொம்பநேரம் உட்காரவைத்து மேலும் கீழுமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தபின் பணத்தை எண்ணிக் கொடுப்பார். கொடுக்கும்போது அவர்களின் கைகளை ‘அப்பாவி’யாக உரசுவார்….

மச்சக்காளை தங்களை தேவையில்லாமல் அலைய விடுவதும்; எதிரில் உட்காரவைத்து சும்மாவேனும் பார்த்துக் கொண்டிருப்பதும் எதனால் என்பது அந்தப் பெண்களுக்குத் தெரியும். ஆனால் தெரியாத மாதிரி அவர்கள் இருந்துகொள்ள வேண்டியிருந்த நுண்ணிய சோகம் அந்தப் பெண்களின் கண்களில் படிந்திருந்தது, கதிரேசனின் கூரிய பார்வையில் இருந்து தப்பவில்லை.

இப்படி ஒவ்வொன்றாகச் சேர்ந்து சேர்ந்து மச்சக்காளையின் வட்டித் தொழிலின் மீது அளவு கடந்த வெறுப்பும் அருவருப்பும் கதிரேசனின் மனதில் ஏற்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலெல்லாம் ஒரு தொழிலா என்று மனதிற்குள் குமுறிக் கொந்தளிக்கின்ற அளவிற்கு மச்சக்காளையின் ஒவ்வொரு அன்றாட காரியங்களிலும் வட்டி மனப்பான்மை பசைபோல கெட்டியாக ஒட்டிக் கொண்டிருந்தது. இயல்பான வீட்டுச் செலவுகளுக்காக பணம் கொடுக்க வேண்டிய நேரத்திலெல்லாம் மச்சக்காளை எவ்வளவு தூரத்திற்கு காலம் தாழ்த்தி பணத்தைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு காலம் தாழ்த்தித்தான் பணம் கொடுப்பார்.

உதாரணத்திற்கு, மின்சார பில்லுக்கான பணத்தை அது கட்டப்பட வேண்டிய கடைசி தேதியில்தான் மனசு வந்து எடுத்துக் கொடுப்பார். இத்தனைக்கும் பணத்தை மடியிலேதான் வைத்திருப்பார். இருந்தாலும் எடுத்துக் கொடுக்கவே மாட்டார். ஆரம்பத்திலேயே போய் பணத்தைக் கட்டிவிடக் கூடாதென்று கறாராகச் சொல்லிக் கொண்டிருப்பார். இடைப்பட்ட நாட்களில் அந்தப் பணம் கையில் இருந்ததால் எவ்வளவு ‘வட்டி லாபம்’ என்று உடனே ஒரு கணக்குப் போட்டு வட்டி நஷ்டம் எவ்வளவு என்று அச்சடித்தால் போல் சொல்வார். கதிரேசனுக்கு இந்தக் கணக்குகள் புரியாமல் தலையைச் சுற்றும். இந்த மாதிரிதான் வீட்டின் ஒவ்வொரு செலவுக்கும் வட்டிக் கணக்கு போட்டு போட்டு பார்த்துக் கொண்டேயிருப்பார்.

இதையும் தாண்டி அவருடைய வேற ஒரு அசிங்கமான சுபாவம் வடிகட்டின கஞ்சத்தனம்!

அடுத்து அதைப் பார்க்கலாம்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *