கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 6,937 
 

விமலாவுக்கு வேலைக்கான உத்தரவு கிடைத்த சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. பின் என்ன… கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் தான் எழுதிய ஒரே பாங்க் தேர்வின் முடிவில் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை. அதுவும் அவள் வீட்டிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் போஸ்டிங்.

விமலாவின் அம்மா கமலாவும், தங்கை அமலாவும் அவளை கட்டியணைத்து வாழ்த்துச் சொன்னார்கள். விமலாவையும், அமலாவையும் பாசத்தோடு வளர்த்து நன்கு படிக்க வைத்து அவர்களை வளர்த்து ஆளாக்கியது அம்மாதான். அம்மா மட்டும்தான். அமலாவுக்கு வயது இருபது.
பயோடெக் படித்துக் கொண்டிருந்தாள்.

விமலாவுக்கு அப்பாவை ஞாபகமில்லை. விவரம் தெரிந்த நாட்களிலிருந்து அவளுக்கும் அமலாவுக்கும் அம்மாதான் எல்லாமே. “அப்பா எங்கே?” என்று எட்டாவது படிக்கும்போது ஒருமுறை கேட்டபோது அப்பா இறந்து விட்டார் என்று அம்மா சொன்னது மட்டும் தீற்றலாக ஞாபகம் இருக்கிறது.

விமலாவின் அம்மா கொள்ளை அழகு. தங்க நிறத்தில், அழகான முக லட்சணத்தில், மெல்லிய உடம்பில், ஆரோக்கியமான வரிசையான சோழிப் பற்களில் ஜொலிப்பாள். அவள் தன் கரிய விழிகளை சுழட்டும்போது ஒரு அழகான ஸிந்திப் பசுவை பார்ப்பதுபோல் இருக்கும். அம்மாவுடன் அவர்கள் வெளியில் செல்லும்போது அம்மாவை அவர்களின் சகோதரி என்றுதான் பலர் நினைத்தனர். தன்னை அழகாக வைத்துக்கொள்ள கமலா ரொம்ப மெனக்கிடுவாள். தன் அழகு குறித்து அவளுக்கு ரொம்ப பெருமையும் கர்வமும் உண்டு.

பாரத ஸ்டேட் வங்கியில் சேர்ந்த அடுத்த ஒரு வருடத்தில் உதயகுமாருடன் விமலாவுக்கு திருமணம் நடந்தது. உதயகுமார் ஒரு பிரபல ஐ.டி. கம்பெனியில் ப்ராஜெக்ட் மானேஜர். பெண் பார்க்க வந்திருந்தபோது விமலாவுக்கு அவனை மிகவும் பிடித்துப் போயிற்று. வாட்ட சாட்டமாக, ரசனையுடன் உடையணிந்து ஒரு கம்பீரத்துடன் இருந்தான். குடி, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லை.

உதயகுமாரை அறிமுகப் படுத்தியதே அவள் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சுகுமார் அங்கிள்தான்.

அவருக்கு வயது ஐம்பத்துமூன்று. பெரிய பணக்காரர். அவர்தான் விமலாவின் திருமணத்தில் அக்கறை எடுத்துக்கொண்டு அவளின் திருமண வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டவர். அவள் திருமணத்தின்போது அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டதால் அவரால் திருமணத்திற்கு வரமுடியவில்லை.

உதயகுமார் விமலாவை நன்கு புரிந்துகொண்டு அவளிடம் மிகவும் அன்பு செலுத்தினான். ஒரு நல்ல கணவனாக வாஞ்சை செலுத்தினான். வீட்டில் அவன் ஒருவன்தான் ஆண்பிள்ளை என்பதால் அனைவரிடமும் அக்கறையுடன் பழகினான். ஆனால் சமீப காலங்களாக அமலா அவனிடம் ரொம்ப இழைகிறாளோ என்கிற ஒரு சின்ன சந்தேகம் விமலாவுக்கு ஏற்பட்டது. அவள் அடிக்கடி, “அத்திம்ஸ், அத்திம்ஸ்” என்று உதயகுமாரை தொட்டு, தொட்டு பேசியதும் அவ்வப்போது அவனை கொஞ்சியபடி உரசியதும் அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எனினும் பொறுமை காத்தாள்.

அமலாவுடன் அவன் அதிக நேரம் இல்லாதவாறு பார்த்துக் கொண்டாள்.

அன்று வெள்ளிக்கிழமை. அவர்கள் ஊரில் ஒரு புது தமிழ் சினிமா ரிலீஸானது. அமலா அந்த படத்துக்கு அனைவரும் சனிக்கிழமை மாட்னி ஷோ செல்ல வேண்டும் என்று அடம்பிடிக்க, உதயகுமார் உடனே தன் லேப்டாப்பைத் திறந்து நான்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தான். அமலா குதூகலத்துடன் ஓடி வந்து உதயகுமாரை கட்டிக் கொண்டாள்.

சனிக்கிழமை மதியம் அனைவரும் காரில் சினிமா சென்றனர். உதயகுமார் கார் ஓட்ட, முன்சீட்டில் அவனருகில் அமலா அமர்ந்துகொண்டாள். ஆனால் தியேட்டரில் உதயகுமாரை கார்னர் சீட்டில் உட்காரவைத்து அவனுக்கு அடுத்து விமலா அமர்ந்துகொண்டாள். அடுத்து முறையே அமலாவும் கமலாவும் அமர்ந்தனர் சினிமா விறுவிறுப்பாக இருந்தது. இன்டர்வெல்லில் உதயகுமார் அனைவருக்கும் பப்ஸ், பாப்கார்ன், குளிர் பானங்கள் வாங்கிக் கொடுத்தான்.

படம் ஓடிக் கொண்டிருந்தபோது, கமலா தன் முகத்தை வேதனையுடன் வைத்துக்கொண்டு,
“வயித்த வலிக்குது பப்ஸ் ஓல்ட் ஸ்டாக் போல…நான் வீட்டுக்கு போகிறேன்” என்று எழுந்தாள்.

உடனே விமலா அக்கறையுடன், “தனியா எப்படிம்மா போவே?…என்னங்க அம்மாவை நீங்க வீட்ல டிராப் பண்ணிட்டு வாங்களேன் ப்ளீஸ்” என்று உதயகுமாரைப் பார்த்து கெஞ்ச, கமலாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.

விமலாவும், அமலாவும் சினிமாவில் லயித்தனர்.

அடுத்த அரைமணி நேரத்தில், “அக்கா….” என்று அமலா நெளிந்தாள். “என்னடி உனக்கும் வயித்து வலியா?” என்று விமலா எரிந்து விழுந்தாள்.

“ஆமாக்கா….ஆனா இது வேற வயித்துவலி.. எனக்கு மன்த்லி சம்ஸ் வந்திருச்சு…வாக்கா வீட்டுக்கு போகலாம். எனக்கு இங்க உட்கார அன்ஈஸியா இருக்கு”

“சரி சரி கிளம்பு”

இருவரும் தியேட்டரைவிட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்தனர்.

அமலா ஆட்டோவுக்கு பணம் கொடுக்கும்போது, விமலா வீட்டின் வாசற்படிகளில் ஏறி காலிங்பெல்லை அமுக்கினாள். அது சத்தம் எழுப்பாது அமைதி காக்கவே, பவர் கட் என்பதை உணர்ந்துகொண்டு கதவைத் தட்ட எத்தனிக்கையில் – வீட்டினுள் இருந்து விசித்திரமான மெல்லிய முனகல் ஒலியும், வளையல்கள் அசங்கும் சத்தம் கேட்பதையும் உணர்ந்தாள்.

அவசரமாக வீட்டின் பக்கவாட்டில் சென்று பெட்ரூம் ஜன்னல் திரையை விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தாள்.

தன் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை.

அம்மாவும், கணவனும் தன்னை மறந்த லயிப்பில் முழு நிர்வாணமாக சல்லாபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

விமலா துடி துடித்துப்போனாள்.

அடுத்த கணம் விட்டைவிட்டு வெளியே ஓடிச்சென்று, அமலாவுக்கு இந்தக் கண்றாவியெல்லாம் தெரிந்து விடக்கூடாதே என்கிற அக்கறையில், அதே ஆட்டோவில் அவளை உள்ளே ஏறச்சொல்லி தானும் ஏறிக்கொண்டாள்.

சனி, ஞாயிறு இரவுகளில் விமலா தூங்கவில்லை. தலைவலி என்று உதயகுமாரிடம் சால்ஜாப்பு சொல்லி அவனை தன்னிடம் நெருங்க விடவில்லை.

அவளுக்கு உடம்பும் மனசும் வலித்தது. ‘அம்மா எப்படி தன் கணவனிடம்….ச்சே. அம்மாவுக்கு வாழ்வியல் ஒழுக்கம் என்பதே இல்லையா? இதுவரை எத்தனை ஆண்களை பார்த்திருப்பாள்? ஆண்சுகத்திற்காக அலைபவளா என் அம்மா? அப்படியே அரிப்பெடுத்தாலும் அதை என் கணவனிடமா தீர்த்துக் கொள்வது? இது எத்தனை நாட்களாக நடக்கிறது? வயித்துவலி என்று நடித்து, என் கணவனுக்கு தன்னுடல் ஈந்து… அம்மாவா இவள்? உடம்பில் கம்பிளிப் பூச்சி ஊர்வதுபோல் அசிங்கமாக உணர்ந்தாள்.

திங்கட்கிழமை பாங்கில் வேலையே ஓடவில்லை. இதை யாரிடம் சொல்லி அழ முடியும்?

மதியம் ஒரு மணிக்கு சுகுமார் அங்கிள் வந்தார். ‘இவராலதான அந்த கிராதகன கல்யாணம் பண்ணிகிட்டேன்…’ அவரை எரிச்சலுடன் பார்த்தாள்.

“என்னம்மா டல்லாயிருக்க? உதயக்குமார உதச்சியா..?” சிரித்தார்.

“ப்ளீஸ் அங்கிள், நீங்க எனக்கு பண்ண துரோகத்துக்கு…ச்சே என்னிடம் பேசாதீங்க.” கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது.

சுகுமார் பயந்து பதறினார்.

“விமலா இப்ப லஞ்ச் டைம். நான் உன்னோட அப்பா மாதிரி. ப்ளீஸ் என்கூட பக்கத்து ரெஸ்டாரண்ட் வர முடியமா? மனம் விட்டுப் பேசினாலே உன் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.”

அவருடன் சென்றாள்.

“அங்கிள் இந்த உலகத்துல யாரை நம்புறதுன்னே தெரியல..” எதையும் ஒளிக்காமல் அவரிடம் நடந்ததைச் சொல்லி அழுதாள்.

சுகுமார் வேதனையுடன் “உனக்கும் துரோகம் பண்ணிட்டாளா அந்தக் கமலா?” என்றார்.

“என்னது என்னோட அம்மா பேரு உங்களுக்கு எப்படித் தெரியும் ?”

“எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சு விமலா. நீ என்னோட மூத்த பொண்ணும்மா, அமலா எனக்கு ரெண்டாவது பொண்ணு. ஆண்சுகம் உன் அம்மாவுக்கு ஒரு சுவாரசியத் தேடல்… அவள அடக்க முடியாமத்தான் உனக்கு ஐந்து வயசா இருக்கும்போது உங்களை விட்டுப் பிரிஞ்சேன்.”

“எ…என்னது நீங்க என்னோட அப்பாவா?”

“ஆமாம்மா…நீயும் அமலாவும் என் இரண்டு கண்கள். உதயகுமார் நல்ல பையன்தாம்மா. அவன உடல் ரீதியா மயக்கி சொக்குப்பொடி போட்டிருக்கா கமலா. உன் அம்மாதாம்மா நம்ம குடும்பத்துக்கே சாபக்கேடு.”

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?”

“அவளைப் பற்றிய ஆண்கள் தொடர்பு அசிங்கங்களை ஒரு அப்பா தன் மகளிடம் விவரிக்க முடியாதும்மா…. என்னதான் இருந்தாலும் அவள் உன் அம்மா.”

“…………..”

“கதைகளிலும், கவிதையிலும், சினிமாவிலும்தான் அம்மா, தாய், தாய்மை என்று பம்மாத்து காட்டுவார்கள். ஆனால் பல அம்மாக்கள் அறம் சார்ந்த வாழ்வு வாழ்வதில்லை. சொந்த மகன், மகள்களிடம்கூட பணம் இருக்கும் வாரிசுகளிடம்தான் பரிவு காட்டும் எத்தனையோ அம்மாக்களை எனக்குத் தெரியும். அப்பாவி புருஷன்களை ஏமாற்றும் எத்தனையோ அம்மாக்கள் உண்டு. ஒழுக்கம்தவறி அரிப்பெடுத்து அலையும் அம்மாக்களும்…. உன் அம்மா மாதிரி நிறைய உண்டு. எல்லா உறவுகளும் நல்ல உறவுகள்தான். அதில் நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு. அதில் அம்மா என்கிற உறவும் ஒன்று, அவ்வளவுதான்.”

“சரி, நான் இப்ப என்ன செய்யணும்?”

“உதயகுமார், கமலா விஷயம் உன்னையும், என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இனிமேலும் தெரிய வேண்டாம். நீ உடனே வேறு வீடு பார்த்துக்கொண்டு உதயகுமாருடன் போய்விடு. பழசை நினைத்துக்கொண்டு மனசை குழப்பிக் கொள்ளாதே. அமலா பயோடெக் முடித்ததும் அவளுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும். அதன் பிறகு அவளின் திருமணம் நடக்கும். நான் வெளியே இருந்தபடியே நம் குடும்பத்தை கண்காணிக்க முடியும். தவிர இப்ப நீயும் எனக்கு ஒரு யானைபலம்.”

“…………………………”

“நீயும் அமலாவும் நல்லபடியாக வாழ்வில் செட்டில் ஆகிவிட்டால் எனக்கு நிம்மதி. கமலாவுக்கு இந்த உலகில் எப்படி சர்வைவ் ஆவது என்பது தெரியும். என்றைக்கு அவள் உடல் அழகு குறைந்து, தசைகள் சுருங்கி தன் ஆசைகளை விடுகிறாளோ, அன்றைக்கு நாம் அவளை ஏற்றுக் கொள்ளலாம். அதுவரை அவள் போக்கில் அவள் போகட்டும். நமக்கு எதுவும் தெரிந்தமாதிரி காண்பித்துக் கொள்ளவேண்டாம். வாழ்வின் பல நேரங்களில் நமக்கு ஒன்றுமே தெரியாதமாதிரி நடித்து அமைதி காப்பது உத்தமம். சரியா?”

“சரிப்பா…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *