உயர்ந்த உள்ளங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2023
பார்வையிட்டோர்: 835 
 

 (2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஹலோ மிஸ்டர், வில்யு ப்ளீஸ் பாக் யுவர் கார் ப்ரோப்பலி” 

தனது காரின் சட்டரை இறக்கிக் கொண்டே பிழையாக கார் பாக் பண்ணும் ஒருவரைப் பார்த்து சொன்னாள் நிர்மலா. 

“உவை, எனி ப்ரோப்புளம்” கேட்டான் கார்க்காரன் 

“பிகோஸ் ஐ ஹாவ் டு பாக் மை கார், நெக்ஸ் டு யுவர் கார், யு நோ” 

சற்று உரத்துச் சொன்ன நிர்மலா, 

“பார்த்தால் ஸ்ரீலங்கன் போல இருக்கினம் இல்லையா” என்று குரலை தாழ்த்தி பக்கத்தில் இருந்த தன் மகளிடம் சொன்னாள். 

அவள் சொன்னது கார்க்காரனுக்கு கேட்டுவிட்டது. 

“ஓம் ஓம்…நாங்க ஸ்ரீலங்காதான். நீங்க சிங்கபூரோ” நக்கலாக கேட்டான். 

“டேய், சுரேன் விடடா, அவங்களப் பார்த்தா ஏதோ வசதியான பெரிய இடம்போல தெரியுது.” தன் நண்பனுக்கு பணிவாக சொன்னான் பக்கத்திலிருந்த சிவா. 

இல்லடா, எவ்வளவு இடம் அந்தப் பக்கம் இருக்குதல்ல. அங்க கொண்டு அவவின்ற காரை பாக் பண்ணலாம்தானே. இங்கே ஏன் கொண்டுவந்து சொருகிறா” 

சுரேனும். சிவாவும் பேசியதைக் கேட்டுக்கொண்ட நிர்மலா, 

“தம்பி நாங்களும் சிறிலங்காதான். 

ஆனா உங்களைப்போல அகதியாக வந்தவங்க அல்ல. எங்களின்ற அப்பா செவன்டீல ஒக்ஸ்போர்ட் யுனிவெர்சிடிக்கு படிக்க வந்தவர். வந்து படிச்சிப் பட்டம்பெற்று பேந்து இங்கேயே செட்டிலாகியவர். நானெல்லாம் இங்கதான் பிறந்து வளர்ந்து படிச்சிப் பட்டம்பெற்று, உத்தியோகம் பார்த்து கல்யாணம் பண்ணி, பிள்ளைகள் பெற்று நல்லபடியா வாழுறம் தெரியுமே” நிர்மலா தன் பூர்விகம் சொன்னாள். 

“மம்மி உவை மம்மி, இதெல்லாம் ஏன் அவங்களுக்கு சொல்லுறீங்க” மகள் தாயை கேட்டாள். 

“இல்ல, இவங்களுக்கு நாங்க யாரென்று தெரிய வேணுமல்ல. அதுக்குத்தான்” 

“மேடம் நீங்க யாராக எண்டாலும் இருந்திட்டுப் போங்க. எங்களோட சொருகாதைங்கோ கண்டியளோ” 

“உங்களோட நான் ஏன் சொருக வேணும்? நீர் ஒழுங்காக உமது காரைப் பாக் பண்ணு என்றதான் சொன்னனான்.”

“அதுதான் கேட்கிறேன் அதை சொல்ல நீங்க ஆரு. ட்ராபிக் போலீசா அல்ல பாக்கிங் அட்ரென்டனா எவ்வளவு இடம் பின்னால் இருக்குதல்ல இதுக்குள்ள ஏன் வாறியள்?” 

“இங்க பார் தம்பி தேவையில்லாம, புரியாம கதைக்காதையும். நீர் பாக் பண்ணிய இடத்துக்கு பக்கத்தில இருக்கிற இடத்தில நான் பாக் பண்ண அவசியமிருக்கு. அது “டிசாயபில் பாக்கிங்” அதுதான் சொன்ன நான். 

“டேய், வீணா அவங்களோட வாக்குவாதம் பண்ணாமல் காரைப் பின்னுக்கு எடுத்து ஒழுங்கா கோட்டுக்குள் நிற்கிறமாதிரி பாக் பண்ணு. அவங்க “டிசாயப்பில் பேர்சன்” என்று நினைக்கிறன். 

சிவா சொன்னதும், சுரேன் ஒரு முறைப்போடு வேகமாக பின்னுக்கு எடுத்து பாக் பண்ணினான். 

நிர்மலா தனக்கு ஏற்றபடி வசதியாக தன் காரை “டிசாயப்பில் பாக்கிங்” என்ற சைன் போட்டிருந்த இடத்தில பார்க் பண்ணிவிட்டு, காரில் இருந்த சிவாவைப் பார்த்து “தாங்ஸ்” சொன்னாள். 

பரவாயில்ல மேடம் நாங்க உங்களுக்கு சிரமம் கொடுத்திட்டம் சொறி வெரி சொறி” என்று நண்பன் சுரேன் சற்று கடினமாக நடந்து கொண்டமைக்காக நிர்மலாவிடம் மன்னிப்புக் கேட்டான் சிவா. 

ஆனா. சுரேனுக்குநிர்மலாவின் பேச்சு பிடிக்கவில்லை.அதிலும் தங்களை அகதி என்று பேசியது அறவே பிடிக்கவில்லை. 

அவளுடன் மீண்டும் பேசினான். 

“மேடம் நாங்க அகதிதான். தாய்மண்ணில் எங்கள் சொந்தங்களை பறிகொடுத்துவிட்டு உயிரைக் காப்பாற்ற அகதிகளாக வந்தவங்கதான். வந்தும் இங்கேயும் கஷ்டப் படுகின்றோம். இதைவிட ஊரிலிருந்து எங்கட சனத்தோட செத்துப்போய் இருந்திருக்கலாம்.” என்று சொன்ன சுரேன்,காரை விட்டு இறங்கி, 

“டேய் இருந்துகொள் நான் டெஸ்கோ சுப்பர் மார்கெட் உள்ள போய் நமக்கு தேவையானவற்றை வாங்கிற்று வாறன்” என்ற சுரேன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். 

நிர்மலாவின் காரிலிருந்து அவள் மகள் இறங்கி வெளியில் வந்தாள். பதும வயதுப் பிள்ளை பார்க்க அமசமாக இருந்தாள். சிவாவும் இறங்கி வெளியில் வந்தான். 

“அங்கிள் டோன்ட் மிஸ்டேகின், மம்மி உங்களோட வீம்புக்கு பேச வரயில்ல. அவ கொஞ்சம் டிசிப்ளின் மெய்ண்டைன் பண்ணுவா. நீங்க கொஞ்சம் கோணலாக பார்க் பண்ணியதைப் பார்த்ததும் கொஞ்சம் டென்சன் ஆயிட்டா.அத்தோடு அவ டிசாயப்பில் பேச் ஹோல்டர். டிசாயப்பில் பாக்கிங் இடத்தில்தான் பாக் பண்ண வேண்டும் என்று நினைப்பவர்.” என்றாள் நிர்மலாவின் மகள். 

“நோ நோ ஒரு பிரச்சினையும் இல்லை. என்ர பிரண்ட்தான் காரை ஒழுங்கா பார்க் பண்ணயில்ல அது அவனின் மிஸ்டேக் தான் நாங்கதான் சொறி கேட்கவேணும். அதனால்தான் முதலில் நான் சொறி கேட்டனான். 

நிர்மலா தன் காரை நேர்த்தியாக பார்க் பண்ணிவிட்டு ஊன்று கோல் ஒன்றை எடுத்து ஊண்டிக்கொண்டு தன் காரிலிருந்து மெதுவாக இறங்க முற்பட,மகள் ஓடிச்சென்று தாயின் கையை பிடித்து வெளியில் இறக்கி விட்டாள். 

பார்ப்பதற்கு நடுத்தர வயது இருக்கும். நல்ல களையான முகம். மெதுவாக சிவா நின்ற இடத்துக்கு தனது ஊன்றுகோலை ஊண்டிக்கொண்டு வந்தாள். 

சிவா மீண்டும் முந்திக்கொண்டு “சொறி மெடம் நாங்க உங்களுக்கு தொந்தரவு தந்திட்டம். என் நண்பன் காரை கோணலாக பார்க் பண்ணியதாலதான் நீங்க பேசவேண்டியதாய்ப் போயிற்று. ரியலி சொறி போர் தட்” 

இட்ஸ் ஓக்கே. பிழை விடுபவர்கள் தவறுக்காக மன்னிப்புக் கேட்டால் அது அவர்கள் நல்ல குணம் என்று எடுத்துக்கொள்ளலாம். எல்லோரும் மனித நேயத்துடன் நடந்துகொண்டால் நல்லதுதானே. இந்த நாக்குதான் 

நல்லதைதும் கேட்டதையும் பேசிவிட்டு தன்பாட்டுக்கு வாயினுள் அடங்கி விடுகிறது.ஆனால் அது பேசிய அது வெளிப்படுத்திய சொற்கள்தான் மற்ற உறுப்புகளை துன்புறுத்தும், மற்ற மனிதர்களையும் காயப்படுத்தும்.” 

“சரியாக சொன்னீங்க மேடம். “எலும்பில்லாத நாக்கினால் எதைவேணுமெண்டாலும் கதைக்கலாமா? எதற்கும் ஒரு வரம்பு முறை இருக்குத்தானே இல்லையா மேடம்” 

“கண்டிப்பா இருக்கு. நல்லா பேசுறீர் தம்பி. நீர் என்னை அன்ரி என்றே கூப்பிடலாம்”. 

“சரி அன்றி.உங்களின்ர மகளும் நல்லா தமிழ் பேசுகிறா. நீங்களும் நல்ல தமிழ் கதைகிறியள். இங்கே பிறந்து வளர்ந்த நீங்கள் நல்லா தமிழ் கதைக்கிறியள். ஆனால் ஊரிலிருந்துநீங்க சொன்னமாதிரி அகதிகளாக வ ந்தவையெல்லாம் ஆங்கிலத்திலதான் விளாசிவினம்.” 

“தம்பி அதற்குள்ள போகவேணாம். அது அவரவர் விருப்பம். எங்களை எங்களின்ற அப்பா அம்மா தமிழ் படிக்க. பேச வைத்தவர்கள். அதுபோல்தான் நானும் எனது பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொள்ள வசதி செய்து கொடுத்திருக்கிறேன். வீட்டிலும் நாங்க தமிழில்தான் பேசுவோம். இடைக்கிடை ஆங்கிலம் பேசுவது தவிர்க்கமுடியாதது.”

“சுப்பர் அன்றி, உங்களை நினைத்து பெருமைப் படுகின்றேன். உங்கள் தாய் மொழிப்பற்றை பாராட்டுகிறேன்.’ 

“சரி தம்பி. நீர் சிறிலங்காவில் எந்த இடம்?” 

“அன்ரி ..நீங்களுமா” 

“ஏன்..என்ன தம்பி?” 

“எங்களின்ர ஆட்கள் யாரை முதலில் கண்டு பேசினாலும், முதல் கேள்வி, நீர் ஊரில் எந்த இடம்? என்றுதான் அன்ரி கேட்கிறாங்க. ஊரின் பெயரை பதிலாக சொன்னதும், ஆ அந்த ஊரே என்று சொல்லி, பேந்தும் விலாவாரியாக விசாரித்து நகர்ந்து செல்வார்கள். இவர்கள் எந்த இடம் என்று கேட்பது ஏன் என்று முதலில் எனக்கு விளங்கயில்ல, நண்பர்கள் சொன்னபிறகுதான் தெரிந்து கொண்டேன். சாதியை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் ஊரை கேட்டு, பின் ரோட்டு, சந்தி, மூலை, முடுக்கு என்று அறிந்து கொண்டு செல்வது. நாட்டை விட்டு வந்த பின்னரும் சாதி பற்றி அறிய அவர்களுக்கு அப்படியொரு ஆர்வம்”

“சே.சே…நான் அப்படியொன்றும் அந்த அர்த்தத்தில் கேட்கயில்ல தம்பி. அந்தமாதிரி வித்தியாசமாக வில்லங்கமாக எல்லாம் எனக்கு கேட்க விருப்பமில்ல. அவசியமும் இல்ல. 

நான் சொன்னமாதிரி நாங்க பிறந்தது லண்டனில்தான். எங்களின்ற அப்பா ஸ்ரீலங்கா. அவரின் பூர்விகம் அங்குதான். அதனால் அதில் எங்களுக்கும் ஈடுபாடு உண்டு.” 

“சரிஅன்ரி. விடுங்கோ.. நாங்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் என்ற ஊரை சேர்ந்தவர்கள். இது யாழ் டவுனுக்கு பக்கமான ஊர்தான் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?” 

‘இல்லை தம்பி…. எங்களின்ற அப்பாவின் ஊர் வந்து காரை நகர் என்று சொன்னவர். நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருந்தபோது இரண்டுறை அங்கு கூட்டிக்கொண்டு போனவர். அவ்வளவுதான்” 

“ஓ .மிச்சம் காலத்துக்கு முந்தி..இல்லையா.. நாங்கள் எல்லாம் பிறந்தும் இருக்க மாட்டோம்” 

“உண்மைதான். நாங்கள் இங்கு லண்டனில் பிறந்து வளர்ந்து ஏழு வயசு இருக்கும்போது போனபிற்பாடு அங்கு போகவில்லை. ஆனால் அப்பா அடிக்கடி போய் வருவார். அவர் தனது தாய்மண்ணில் கொண்ட பற்றை மறக்கவில்லை. தாய் நாட்டை மறக்கவில்லை. 

அவர் படித்த பாடசாலை, பற்றியெல்லாம் சொல்லுவார். இங்கேயும் அவர் பாடசாலை பழைய மாணவர் ஒன்றுகூடலுக்கு வருடாவருடம் சென்றுவருகிறார். அவரது பங்களிப்புகளையும் செய்வதை நாங்கள் அறிவோம்.” 

நாடு நல்லா இருந்த காலத்தில் அவர் போய் வந்திருப்பார்.பிரச்சினை தொடங்கி போர் மூண்ட மூட்டம் அங்கு சென்று இருக்க முடியாது. போராளிக் குழுக்கள் தொடங்கி நாட்டில் இயல்பு வாழ்க்கை நிலை. குலைந்து அடிபாடுகள் ஆரம்பிக்கப் பட்டபின்னர் மக்கள் பட்ட துன்பம், துயரங்கள் உங்கள் அப்பாவுக்கு தெரிய நியாமில்ல.அது பற்றி அவர் பிள்ளைகளான உங்களுக்கு தெரியவே வாய்ப்பும் இல்லை.” 

“உண்மைதான் தம்பி. அங்கு தொண்ணூறுகளிலும், புத்தாயிரம் ஆண்டு ஆரம்பம் முதல் போர் முடிவுக்கு வந்த இரண்டாயிரத்து ஒன்பது வரை சிறிலங்காவின் வடகிழக்கு மாகாண மக்கள பட்ட துன்பங்கள், இழப்புகள் ஒன்றும் எங்களுக்கு நேரடியாக தெரியாது. ஆனால் அப்பா இங்குள்ள டிவி,ரேடியோ மூலமாக செய்திகளை, காணொளிகளை பார்க்கும்போது நாங்களும் பார்த்து இருகின்றோம். அந்த காலங்களில் நீங்கள் அங்கு இருந்திருப்பீர்கள் இல்லையா” 

“தொண்ணூறுகளின் மத்தியில் நாங்கள் உயர்தரம் படித்து முடித்துவிட்டு பல்கலைக்கழகம் செல்ல ஆயத்தமாக இருந்த வேளையில்தான் எங்கள் வாழ்கையில் பேரிடி வீழ்ந்தது. இரண்டு பக்கத்தாலும் பெரும் நெருக்குவாரம் வந்தது. ஒருபக்கத்தில் இராணுவம், போராளிகளையும், அவர்களுக்கு உதவி செய்பவர்களையும் ஒட்டுக்குழுக்களின் ஒத்தாசைகளுடன் பிடித்து கொண்டு சென்றார்கள். 

அடுத்த பக்கம் போராளிக் குழு, போராளிகளை இணைப்பதற்காக ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கி இருந்தார்கள். 

“ஓ இக்கட்டான நிலைமைதான்” 

“எங்களுக்கு படிப்பதா? பல்கலைக்கழகம் செல்வதா? அல்லது வீட்டைவிட்டு வெளியேறி மண்மீட்பு போராட்டத்தில் இறங்குவதா? என்ற மனப் போராட்டங்கள் எழுந்தன. இதனிடையில் தமிழர் பகுதியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு, என்று நடந்து கொண்டு இருந்ததால் உயிர் இழப்புகளும்,உடமை அழிப்புகளும் ஏற்பட்டன. 

எங்கள் வீடுகளில் எங்களை எப்படி காப்பாற்றுவது என்ற பயம் அப்பா,அம்மாவுக்கு ஏற்பட்டது. வீட்டில் அக்கா,தம்பி,தங்கை வேற இருந்ததால் அவர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்கள் பெற்றோருக்கு. 

“அவர்களையும் அவர்கள் காப்பாற்றிக்கொண்டல்லவா, உங்களையெல்லாம் பாதுகாக்க வேண்டும்” 

“அது சரி, எல்லோரும் உயிரை காப்பாற்ற போராடிய தருணங்கள் அவை. அப்பாவுக்கும் முதுமை நிலை. என்னைவிட்டால் வீட்டில் ஆண் துணையில்லை. என்னை எப்படியாவது காப்பாற்றினால்தான் பின்னுக்கு குடும்பம் நல்லா இருக்கும் என்பதால், என்னை ஊரை விட்டு வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தார். எங்களூரிலிருந்து பலர் வெளிநாடுகளுக்கு பல சிரமங்கள் பட்டு சென்று கொண்டு இருந்தார்கள். அப்பாவும் பலரையும் அணுகி, கொழும்பு ஏஜன்ட்மார் உண்மையில் தன் மகனை அனுப்பி வைப்பார்களா என்று அவர்களை விசாரித்து தெரிந்து கொண்டே என்னை இங்கு அனுப்ப ஒழுங்குகளை மேற்கொண்டார். 

“எப்படி தம்பி ஏஜன்ட்மார் உதை செய்வினம்” 

“எல்லாம் பணம்தான் அன்ரி. பல லட்சம் பணம் வாங்கிக்கொண்டே செய்வார்கள். அப்பாவும் அவ்வளவு பணம் கொடுக்க மிகவும் கஷ்டப்பட்டார். காணி விற்று, நகை அடவு வைத்து, கடன் வாங்கிதான் பணம் கொடுத்தார். எல்லாம் முடிந்ததும் ஊரிலிருந்து கொழும்பு வருவது பெரிய பிரச்சினையாக இருந்தது. வழியில் தடைகள், கேள்விகள். இராணுவத்திற்கும் பதில் சொல்லவேண்டும். 

போராட்டக் குழுவுக்கும் பதில் சொல்ல வேண்டும். ஒருபடியாக கொழும்பு வந்த பின்னர் முகவர் இழுத்தடிப்பு இரண்டு மாதங்கள். கொழும்பில் தங்குவது பெரிய சிரமம் ..ஐயோ அன்ரி அந்த உபாதைகளை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. இதையெல்லாம் சொல்லப்போனால் ஒரு நாள் வேணும். நீங்களும் அலுவலாக வந்திருப்பியள்” 

“தம்பி எங்களுக்கு, அங்கே நீங்கள் பட்ட துன்பங்கள் தெரியாது. அப்பாவுக்கு தெரியும்.இங்கு லண்டனிலுள்ள தமிழ் மக்களும் அங்கு போர் நடந்த நேரம், போரை நிறுத்த பல போராட்டங்களில் ஈடுபட்டார்கள். 

அப்பா அந்த நிகழ்வுகளுக்கு சென்றவர். அதை நாங்கள் அறிவோம். 

உண்மைதான். இங்குள்ளவர்கள் மட்டுமல்ல. உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் இன அழிப்புக்கு எதிராக குரல்கொடுத்து, கடைசியில் உடைந்து போனவர்கள்தான். என்ன செய்ய, ஒருத்தராலும் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. 

நாங்களும் உயிரைக் காப்பாற்ற இங்கு வந்து மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இன்றும் இருக்கின்றோம். ஒரு நல்ல நிரந்தர வேலையில்லை. இந்த நாட்டில் இருப்பதற்கான அனுமதி கிடைக்க படாத பாடு பட்டோம். ஒரு சமயம் எங்களை நாட்டை விட்டு வெளியேற்ற அரச முடிவு செய்தது. அதற்கு எதிராக பல அமைப்புகள் நடவடிக்கை எடுத்தன. 

ஒரு வழக்கறிஞர் வைத்து வாதாடினோம். அவருக்கு பணம் கொடுக்க இராப் பகலாக வேலைக்கு சென்றோம். இப்பொழுது நாட்டில் இருக்க அனுமதி வழங்கி இருக்கிறார்கள். 

“அப்படியா தம்பி.. நல்லது,, சந்தோசம்.” 

“ஓம் அன்ரி. அது ஒரு வகையில் சந்தோசம்தான். ஆனாலும் மனதில் பல உடைசல்கள், காயங்கள் விழுந்து விட்டன. 

நாட்டில் ஒரு நல்ல சூழ்நிலை இருந்திருந்தால் நாங்களும் படித்து பட்டம்பெற்று பெற்றோரையும் மகிழ்ச்சிப்படுத்தி, உறவுகளையும் சந்தோசப்படுத்தி, நாங்களும் நல்ல நிலையில் இருந்திருப்போம். ஆனால் அது நடக்கல்ல. இங்கு வந்து பெரும் பாடுபட்டுக் கொண்டிருகின்றோம். ஊரில் இருக்கும் குடும்பமும் பல கஷ்டம் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். 

“உங்கள் குடும்பத்தில் எல்லோரும் இருக்கிறாங்களா? அப்பா,அம்மா உட்பட 

“கடவுள் புண்ணியத்தில் அவர்கள் எல்லோரும் உயிருடன் இருக்கிறார்கள். இடப்பெயர்வு அங்கு ஏற்பட்ட போது நிறைய துன்பங்கள் பட்டார்கள்.” 

“அக்கா, தங்கை, தம்பி இருப்பதாக சொன்னீர்கள் அவர்கள்?” 

“அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு வழி கிடைக்கல்ல அன்ரி. அப்பா,அம்மா முதுமையின் பிடியில். அக்கா முதிர்கன்னி. தங்கை படிக்கிறாள். தம்பியும் படிக்கிறான். எல்லோரும் இப்போ என்னை நம்பித்தான் அன்ரி. நான் பணம் அனுப்பினால்தான் அவர்கள் வாழமுடியும் என்ற நிலை. எனக்கோ ஒரு நிரந்தர வேலை இல்லை.” 

“உங்கள் பிரண்ட் எப்படி? அவரும் உங்க மாதிரித்தானோ?” 

“இல்லை. அவரின் இரண்டு சகோதரர்கள் வெளியில்தான்.ஒருவர். கனடா. மற்றவர் சுவிஸ். இவர் இங்கே. ஊரில் அவர் குடும்பம் நல்லா இருக்கிறது. நானும் என் குடுப்பதை நல்லா வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எனக்குத்தான் படிப்பை தொடர முடியவில்ல. என் தம்பி தங்கையாவது படித்து பட்டம்பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று விரும்புகின்றேன். அக்காவிற்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க பாடுபடுகின்றேன்.” 

“ஓ ஐ பீல் வெறி சொறி தம்பி.. உங்க பெயர் என்ன தம்பி ‘ 

“என் பெயர் சிவதாசன். சிவா என்று கூப்பிடுவார்கள்.’ 

“நல்லது தம்பி சிவா. உங்களுக்குள் இருக்கும் துன்பங்களை, துயரங்களை. உங்களோடு பேசியபோதுதான் அறிய முடிகிறது இல்லையா?” 

“என்னைப்போல இன்னும் பலர் இங்கு இருக்கின்றார்கள்.’ 

“கண்டிப்பாக இருப்பார்கள். எங்களுக்கு எந்தக் கஷ்டமும் தெரியாமல் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து நல்லபடி வாழ்கின்றோம். ஒருவேளை அப்பா இந்த நாட்டுக்கு வராமல் அவரது ஊரான காரை நகரில் இருந்திருந்தால் எங்கள் நிலைமையும் மாறி இருக்கும் இல்லையா? என்னதான் நாங்கள் இங்கு பிறந்து வளர்ந்து கல்விகற்றாலும் எங்களுக்கும் இந்த நாட்டில் சில பிரச்சினைகள் எழுந்தன. நாங்கள் இனப்பாகுப்பாடு, நிறப்பாகுபாடு, என்று பள்ளிக்கூட காலங்களில் ‘டிஸ்க்ரிமினேசனுக்குள்” தள்ளபட்டோம். 

என்ன இருந்தாலும் நாங்கள் வெள்ளைக்காரர் இல்லைத்தானே. தமிழர்கள். தமிழ் பாரம்பரியம். தமிழ் கலாசாரம். இதை எல்லாம் புறந்தள்ளி வாழ முடியுமா?” 

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.எம்மில் பலர் இங்கு எங்கள் விழுமியங்களை, அடையாளங்களை ஒதுக்கி, இந்த நாட்டு எடுப்புகளில் வாழ விரும்புகின்றார்கள். ஆனால் அது முடியாது. பல இடங்களில் அவர்களும் “டிஸ்க்ரிமினேசனுக்கு” ஆளாகி இருக்கினம். 

தங்களை தாங்களே எம்மாற்றிக் கொண்டு வாழும் வாழ்க்கை அன்ரி அது. 

“சிவா சரியாக கணித்திருக்கிறீர். நாங்கள் நிறைய பட்டு தேர்ந்திருக்கிறோம். அதன் பின்னர் எங்களை மாற்றிக்கொண்டு வாழ்கின்றோம். எனது பிள்ளைகளையும் எங்கள் பண்பாட்டுடன் 

வளர்க்க அதீத அக்கறை எடுத்துள்ளோம். அவர்களும் எங்கள் அனுபவங்களை உள்வாங்கி நல்லபடி வளர்கின்றார்கள்.” 

“மம்மி,வன் மினிட், கொஞ்சம் வாரீங்களா” என்று அழைத்தாள் நிர்மலாவின் மகள். நீண்ட நேரம் சிவாவும்,நிர்மலாவும் பேசியதை அவள் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். நிர்மலா தன் ஊன்றுகோல் துணையுடன் அவளை நெருங்கினாள். இருவரும் ஏதோ பேசினார்கள். 

அதை தொடர்ந்து நிர்மலாவின் முகத்தில் ஒரு மகிழ்ச்சி மின்னி தெறித்தது. 

சிவா. இங்கே வாங்க. அழைத்ததும் அவர்கள் பக்கம் சென்றான் சிவா. 

இந்தாங்க என் கணவரின் விசிடிங் கார்ட். அவரை போய் உடனே சந்தியுங்க. உங்கள் பிரச்சினைகள், கஷ்டங்கள், உங்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும். நீங்கள் என்னோடு பேசும்போது உங்கள் கஷ்டங்களை நினைத்து நான் வருந்தத்தான் முடிந்தது. 

ஆனால் என் செல்ல மகள் அந்த கஷ்டங்களை எப்படி தீர்க்கலாம் என்று சிந்தித்து இருக்கின்றாள். 

வாட் ஏ பெண்டாஸ்டிக் டாட்டர். ஐ ரியலி லவ் ஹேர்.” 

என்று உணர்ச்சி வசப்பட்டு தன் மகளை அணைத்து முத்தம் கொடுத்தாள். சிவா, நிர்மலா கொடுத்த விசிடிங் கார்டை பார்த்துக்கொண்டு இருந்தான். அதில் மிஸ்டர் ஆர்.சந்திரசேகர் என்ற பெயர் இருந்தது. கீழே பல கொம்பனிகள் குறிக்கப்பட்டு அதற்கு சொந்தக்காரர் என்ற தகவலுடன், விலாசமும் இருந்தது. 

“தம்பி சிவா, என் கணவர் இங்கு தொழிலதிபராக இருந்து பல தொழில்கள் செய்கிறார். நேற்று அவர் ஒரு புதிய வியாபார நிலையம் ஒன்று வாங்கி இருக்கிறார். அதை நடத்துவதற்கு நல்ல நம்பிக்கையான ஒருவரை அவர் தேடுவதாக என் மகள் சொல்கிறாள். உங்களுக்கு விருப்பமானால் நான் அவரிடம் சொல்லி இந்த வேலையை வாங்கித் தருகின்றேன்.” 

யெஸ் அங்கிள். நீங்கள் மம்மியுடன் பேசும்போது நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். 

உங்க பாமிலி, உங்க சிஸ்டர்,பிரதர், எல்லாம் நல்லா இருக்க, நீங்க கஷ்டப் படுறீங்க. ஒரு வேலை. பர்மனட் வேலை கிடைச்சா இட்ஸ் குட். நான் டாடிக்கு சொன்னால் அவர் கேட்பார். வி வில் ரெக்கமன்ட் யு அங்கள்.” 

நிர்மலாவின் மகள் சொல்ல சிவாவுக்கு உள்ளம் சிலிர்த்தது. கல்லுக்குள் தேரைக்கும் கடவுள் படியளப்பான். கஷ்டப்படும் பலருக்கும் பராசக்தி கண்திறந்து இருக்கின்றாள். 

எனக்கும் அம்பிகை இந்த சின்ன பொண்ணு மூலம் அருள் தந்திருக்கின்றாள் என்று எண்ணியபடியே நிர்மலாவின் மகளை நெருங்கி, 

“தாங்கஸ் தங்கச்சி. இந்த அங்கிளின் கஷ்டத்தை கேட்டு இந்த நல்ல வாய்ப்பை தர நினைத்த உங்களுக்கு கடவுள் எல்லா நலன்களையும் தருவார். நன்றி “

என்று பிள்ளையின் கையைப்பிடித்து குலுக்கினான். அந்த பிள்ளையும் “கோட் பிளேஸ் யு அங்கிள்” என்று வாழ்த்தியது. 

அந்த சமயத்தில் நிறைய சாமான்கள் வாங்கிக்கொண்டு சுரேன் வந்து காரில் ஏறினான். 

சிவா, நிர்மலாவுக்கும், மகளுக்கும் வணக்கம் சொல்லி விடைபெற்றான். 

சுரேனுடன் காரில் வரும்பொழுது அவனின் கஷ்டங்கள் படிப்படியாக காற்றில் கரைந்து போவதாக சிவா உணர்ந்தான். உயர்ந்த உள்ளங்கள் இன்னும் இந்த உலகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த உள்ளங்களைச் சந்திக்கும் காலமும், நேரமும்தான் மனிதர்களுக்கு 

சரியாக வாய்ப்பதில்லை. என்று எண்ணிக்கொண்ட சிவா. நிர்மலா கொடுத்த விசிடிங் கார்டை மீண்டும் ஒரு முறை பார்த்துக்கொண்டான். நாளை அவன் வாழ்க்கையை மாற்றும் உன்னத துருப்பு சீட்டு அல்லவா அது. 

“டேய் சிவா என்னடா அது கார்ட்.” கேட்டான் சுரேன். 

“ஆ.. சொல்லுறன் நீர் கவனமாக காரை ஓட்டு ” என்ற சிவா. 

தன் இருக்கையில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டான். அப்போது ஊரில் உள்ள அவனது அப்பா,அம்மா, அக்கா,தங்கை, தம்பி எல்லோரும் அவனுக்கு வாழ்த்து கூறுவதுபோல் காட்சி தெரிவதாக உணர்ந்தான். 

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Print Friendly, PDF & Email
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *