அப்பாவின் கைநெடிக் சபாரி வண்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 6,418 
 

திருநெல்வேலியின் மிக முக்கியமான இடங்களில் நெல்லை டவுனும் ஒன்று. பழங்காலம் தொட்டு இப்போது வரை எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இடம் இது தான். டவுன் என்றாலே எல்லோர் மனதிலும் நெல்லையப்பரும் காந்திமதி அம்பாளும் வீற்றிருக்கும் நெல்லையப்பர் கோவில் தான் நினைவுக்கு வரும். அதைத் தாண்டி டவுன் மிகச் சிறந்த வியாபாரத் தலமும் கூட. மிகப் பெரிய ஆடை ரெடிமேட் கடைகளான போத்திசும் ஆர்.எம்.கே.வியும், நிறைய நகைக்கடையும்,பல மளிகைக் கடையும், சினிமா தியேட்டர்களும் மட்டுமல்லாது எஸ்.என் ஹை ரோட்டில் பல வகையான மோட்டார் ஒர்க் ஷாப்புகளும் இருக்கின்றன. பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் தெருவுக்கு தெரு ஒர்க் ஷாப்புகள் இருப்பதில்லை. அதன் காரணமாகவே அனைத்து மோட்டார் தொழில் செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் பயணிக்கும் இடமாக நெல்லை டவுன் இருந்தது.

என் அப்பாவும் டவுன் சென்ட்ரல் தியேட்டர் எதிரே உள்ள ஒர்க் ஷாப்பில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நான் சிறுவயதாக இருக்கும் பொழுதே அப்பா அந்த கம்பெனியில் சேர்ந்து பத்து வருடங்களாவது முடிந்திருக்கும்.. நாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து அப்பா வேலை பார்க்கும் இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் இரண்டு பஸ் மாறி தான் செல்ல வேண்டும்.அப்போதெல்லாம் ஷேர் ஆட்டோக்கள் கிடையாது. அதுமட்டுமல்லாது அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் குறைவு எங்கள் ஏரியாவில்.

காலையில் எட்டு மணிக்கு எங்க பகுதியில் இருந்து பஸ் பிடித்து ஜங்ஷன் சென்று அங்கிருந்து இன்னோரு பஸ் ஏறி டவுனுக்கு செல்வார். காலை சென்றால் வீடு வர இரவு ஒன்பது மணி ஆகிவிடும் மற்றும் சனிக்கிழமை என்றால் சற்று அதிக நேரமாகும். காரணம் எல்லா தொழிலாளிகளுக்கும் சம்பளம் வாரக் கடைசியான சனிக்கிழமை தான். முதலாளி எப்போதுமே இரவு எட்டு மணிக்கு மேல தான் எல்லாருக்கும் சம்பளம் கொடுப்பார். தினமும் சீக்கிரம் தூங்கும் நானும் அக்காவும் சனிக்கிழமை மட்டும் அப்பா வந்தவுடன் தான் தூங்குவோம். அப்பா சம்பளம் வாங்கிய கையோடு சாந்தி ஸ்வீட்ஸில் போய் கால் கிலோ அல்வா மற்றும் மிக்சர் வாங்கிட்டு வருவார்.

அதே போன்றதொரு ஒரு சனிக்கிழமை நாங்கள் காத்திருக்கும் போது இரவு பத்து மணிக்கு திடீரென்று வாசலில் இரு சக்கர வாகனத்தின் வெளிச்சம் மஞ்சள் நிறத்தில் தெரிந்தது வீட்டின் முன்பு. வேறு யாரவது தெருவில் நின்று பேசிக் கொண்டு இருப்பார்கள் என நினைத்து அமைதியாக இருந்தோம் வீட்டின் உள்ளே இருந்து பார்த்த நாங்கள். பின்னர் அப்பா உள்ளே வந்ததும் வண்டில தான் வந்தேன் என்றார். எங்களுக்கோ ஆச்சர்யத்துடன் சந்தோசமும் அதிகமாக இருந்தது. நான் ஏஏஏய்… வண்ண்..டி. ன்னு சத்தம் போட்டுக் கொண்டு போய் பார்த்தேன். இது நாள் வரை மற்றவர்கள் வண்டியை மட்டுமே தொட்டுப் பார்த்த எனக்கு முதன் முதலாக அப்பா கொண்டு வந்த வண்டியை தொட்டுப் பார்த்த அந்த உணர்வு வித்தியாசமாக இருந்தது.

அம்மாவோ உடனே இது யார் வண்டின்னு அப்பாவிடம் கேட்டாங்க.

முதலாளி மூணு பழைய வண்டி ஒர்க் ஷாப்பிற்கு வாங்கியிருக்கார். ஒண்ணு கணக்குப் பிள்ளைக்கு இன்னொன்னு எனக்கு மூணாவது கம்பெனி வேலைக்கு வெளில எடுத்துச் செல்ல உள்ளே நிக்கும்ன்னு சொன்னார். உடனே நான் இனி எப்போதுமே வண்டில தான் வேலைக்கா..! என்று கேட்டேன். அப்பா அதுக்கு சிறு புன்முறுவல் புரிந்தார். அதிலிருந்து எனக்கு புரிந்து கொண்டது அந்த வண்டி நமக்கு தான் என்று.

வண்டியின் அருகே சென்று சீட், கண்ணாடி,முகப்பு விளக்கு ,பிரேக் என அனைத்தையும் தொட்டுப் பார்த்தேன் அந்த இரவு வேளையில். போதும் வீட்டுக்கு வந்து தூங்கு என அம்மா சொல்லியும் கேட்காமல் வண்டியின் மீதே ஏறி இருந்தேன். பின்பு சற்று நேரம் கழித்து இறங்க மனசே இல்லாமல் இறங்கி வீட்டுக்கு வந்து கோரைப் பாயில் படுத்தேன். இனிமேல் எங்க தூக்கம் வரும் ஒரே கற்பனை தான். நாளைக்கே வண்டி ஒட்டப் பழகணும் இனிமே கடைக்கு போகணும்னா சைக்கிள்ல்ல போகக் கூடாது வண்டில தான் போகணும். ஆத்துக்கு வார வாரம் ஞாயிற்றுக் கிழமை வண்டில தான் குளிக்க போகணும் அப்படி இப்படின்னு நிறைய யோசுச்சுட்டே இருந்து அப்படியே தூங்கிட்டேன்.

இதுவரை பரீட்சைக்குக் கூட இப்படி சீக்கிரமா எழுந்திரிச்சதே இல்லை. ஆனால் அன்னைக்கு காலையிலே விடியிறதுக்கு முன்னமே அந்த இருட்டுல எந்திருச்சுட்டேன். எந்திரிச்ச உடனே வண்டில தான் போய் உட்கார்ந்தேன். எப்படா சூரிய வெளிச்சம் வரும் வண்டியை நல்லா பாக்கணும்ன்னு காத்துட்டே இருந்தேன். அதற்குள் அம்மாவும் எழுந்து வாசல் தெளிச்சு கோலம் போட ஆரம்பிச்சுட்டாங்க.

மெது மெதுவா வெளிச்சம் வரத் தொடங்கியது. முதலில் கருப்பு வண்ணம் போல இருந்தது வெளிச்சம் வர வர நீல வண்ணத்தில் தெரிந்தது பெட்ரோல் டேங்க். முழு வெளிச்சம் வந்த பின்பு வண்டியை முழுக்க பார்த்து விட்டு இனிமே இது நம்ம வண்டி தான் என்ற சந்தோசத்துடன் வீட்டில் இருந்த பழைய துணியை எடுத்து வண்டி துடைக்க ஆரம்பித்தேன். வண்டியை எப்படியாவது ஸ்டார்ட் பண்ணிடனும்ன்னு வீட்டிற்குள் போய் சாவியைத் தேடினேன் எங்கும் கிடைக்கவில்லை. நான் காலையில் இந்த மாதிரி சேட்டை எப்படியும் செய்வேன் என்று அப்பாக்கு ஏற்கனவே தெரிந்து சாவியை எங்கோ மறைத்து வைத்திருக்கிறார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் அப்பா தாமதமாக தான் எழுந்திரிப்பார். வண்டிலே உட்கார்ந்து காத்திருந்தேன் அப்பா எழுந்திருக்கும் வரை. அப்பா எந்திரிச்சு கொஞ்ச நேரத்துல தாமிரபரணி ஆத்துக்கு போய் குளிக்க வண்டியை எடுத்தவுடன் நானும் போறேன்னு சொல்லி வண்டில போய் உட்கார்ந்தேன். முதன் முதலில் அப்பா வண்டில பின்னாடி உக்காந்தது வேற ஒரு அனுபவம்.

அன்றைய நாள் முதல் தனியாக வண்டி எடுக்கணும்ன்னு ஒரே ஆசை. ஒரு நாள் அப்பாவிற்குத் தெரியாமல் வண்டியை எடுத்து ஸ்டார்ட் செய்து கீழே போட்டுவிட்டேன். மதிய நேரம் என்பதால் நிறைய பேர் தெருவில் இல்லை. இருந்தாலும் சத்தம் கேட்டவுடன் பக்கத்து வீடுகளில் இருந்து நிறைய பேர் வெளியே வந்து பார்த்ததும் கொஞ்சம் கூட்டம் கூடி விட்டது. வண்டியை எடுத்து கீழே விழுந்தது வெட்கமாக இருந்தது அனைவரும் கூடியவுடன். அப்பா சற்று கோபத்துடன் இனிமே வண்டிய எடுத்த அதுக்கு அப்புறம் பாருன்னு ஒரு அதட்டு அதட்டி சொல்லிட்டார். அம்மாவும் அக்காவும் நல்லவேளை எனக்கு ஏதும் ஆகலன்னு சொல்லி ஆறுதல் சொன்னாங்க.

வண்டிக்கும் எனக்கும் உள்ள உறவு கொஞ்சம் காலத்திற்கு இடைவெளி விழுந்தது. பின்பு ஒரு நாள் அப்பாவே என்னைக் கூப்பிட்டுப் போய் வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தார். இப்படியாக இரண்டு வார ஞாயிற்றுக் கிழமைகளில் வண்டி ஓட்ட கற்றுக் கொண்டேன். அதன் பின்பு அப்பா என் பின்னாடி உட்கார ஆரம்பித்து விட்டார். சாலையில் தனியாக வண்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டேன். காலங்கள் கடந்தன. ஏதோ ஒரு சூழலில் அப்பா வேலை பார்க்கும் இடத்தில் இருந்து நிற்க வேண்டிய நேரம். வண்டி ஒர்க் ஷாப்பிற்கு சொந்தமான வண்டி என்பதால் வண்டியையும் கம்பெனியில் கொடுத்து விட்டு வந்தார்.

ஏதோ ஒன்று எங்களை விட்டு பிரிந்த மாதிரியே எனக்கு தோன்றியது . எனக்கே இப்படி என்றால் அப்பாவின் மனநிலை இன்றளவும் என்னால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை.

பின்பு பல மாதங்கள் கழித்து என்ன தான் வேற வண்டி வாங்கி ஒட்டிக் கொண்டு இருந்தாலும் சாலையில் அதே மாதிரி வண்டியைப் பார்க்கும் போதெல்லாம் பழைய நினைவுகள் அப்படியே நிற்க வைத்து விடும் அந்த இடத்தில்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *