பல்லக்கு சுமந்த வள்ளல்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 50 
 
 

சொக்கநாதர் மாவூருக்கு வந்து சில நாட்களே கழிந்திருந்தன. மாவூர்க் கருப்பண்ணவள்ளலின் அழைப்புக்கு இணங்கியே அவர் அங்கு வந்து அவரிடம் தங்கியிருந்தார். கருப்பண்ண வள்ளல் மாவூரில் மிகப் பெரிய செல்வர். அவருக்கு மூன்று தம்பியர்கள் இருந்தனர். செல்வம் அளவற்றுத் தங்கியிருந்தது போலவே கல்வியும் நற்பண்புகளும் அவர்களிடம் நிறைந்திருந்தன.

சகோதரர்கள் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். போட்டி, பொறாமை சிறிதும் இன்றி, என்றும் குன்றாத சகோதர் பாசத்துடன் அவர்கள் வாழ்ந்து வந்தது மற்றவர்களுக்கு வியப்பு அளிக்கத் தக்க முறையில் இருந்தது.

புலவர்களை வரவழைத்துப் பாராட்டி மகிழ்வதிலும்கூடச் சகோதரர்கள் அசாத்தியமான ஒற்றுமையும் அன்பும் காட்டினார்கள். மூன்று தம்பிமார்களும் அண்ணனிடம் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் கூட அவ்வளவு உயர்ந்ததாகவே இருந்தது. முன்பு பலரிடம் இவைகளை எல்லாம் கேள்விப்பட்டிருந்த சொக்கநாதர் இப்பொழுது நேரிலேயே அங்கு நிதரிசனமாகக் கண்டு மகிழ்ந்தார்.

ஒரு நாள் உலாவச் சென்றுவிட்டு வெளியில் வீடு திரும்பிய போது வழியில் வந்து விழுந்து கிடந்த பெரிய கருவேல முள் ஒன்று சுருக்’ கென்று புலவரின் உள்ளங்காலில் தைத்து விட்டது. புலவருக்கு வலி துடிதுடித்தது. பொறுத்துக் கொண்டு காலைத் தூக்கி உள்ளங்காலிலிருந்த முள்ளின் நுனியைப் பிடித்து இழுத்தார். முள்ளின் முக்கால் பகுதி காலில் ஆழத் தைத்திருந்த தினால் நுனி மட்டும் முறிந்து அவர் கையில் வந்தது. இருளில் வேறொன்றும் செய்யமுடியாமல் அப்படியே காலை மெதுவாகத் தடம் பெயர்த்து ஊன்றி நடந்து மேலே சென்றார்.

இரவில் வீட்டிற்கு வந்த பின்பும் கூட வள்ளலிடமோ, மற்றவர்களிடமோ தமக்கு முள் தைத்தைப் பற்றி அவர் கூறிக்கொள்ளவில்லை. தாமாகவே அதை எடுக்க முயலவும் இல்லை. அப்புறம் ஏதேதோ இலக்கியச் சர்ச்சைகளில் ஈடுபட்டு விட்டு இரவு வெகு நேரத்திற்குப்பின் உறங்கப் போன போது கூட அவர் அதை எடுப்பதற்கு எண்ணவில்லை. முள் தைத்ததை மறந்தே போனார் என்று கூடச் சொல்லலாம்.

நாட்கள் இரண்டு கழிந்தன. முள் தைத்ததை அவர் மறந்து பேனால் முள்ளும் அவரை மறந்து வலிக்காமல் இருந்து விடுமா என்ன? கால் வீங்கி விட்டது. ஆழத்தில் தைத்த முள் பழுத்து உள்ளே சீழ் கொண்டிருந்தது. இருந்த இடத்தில் இருந்து அப்புறம் இப்புறம் நகர்வதுகூட இயலாததாகிவிட்டது. அப்போதும் புலவர் தாமாக எதுவும் சொல்லவில்லை. கருப்பண்ண வள்ளல் அவர் நிலையைக் கண்டு நடுநடுங்கி மனம் பதைத்து விசாரித்த போதுதான் முள் தைத்ததைப் பற்றி வள்ளலிடம் கூறினார் அவர்.

“தைத்தவுடனே கூறியிருந்தால் இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்காதே? வீண் சிரமத்திற்கு இடம் கொடுத்துக் கொண்டு விட்டீர்களே?” என்று அன்புடன் அவரைக் கடிந்து சினந்து கொண்டே வைத்தியருக்கு ஆள் அனுப்பினார் கருப்பண்ண வள்ளல். அவருடைய தம்பியர்களும் புலவருக்கு வந்த துன்பத்திற்கு மனமிரங்கிக் கவலை தோய்ந்த முகத்துடனே அருகில் நின்று கொண்டிருந்தனர்.

வைத்தியரை அழைத்து வரச் சென்ற ஆள் அவரை அழைத்து வருவதற்கு முன்பே, புலவரைத் தேடி அவர் சொந்த ஊரிலிருந்து ஓர் அள் வந்து சேர்ந்தான். பரபரபப்பாக வந்த அந்த ஆள் ஊரில் புலவர் மனைவி நோயுற்றிருப்பதாகவும் சென்ற இரண்டு நாட்களாக நோய் முற்றி உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகி இருப்பதாகவும் அவரை உடனே காண விரும்பி அழைத்து வரச் சொல்லியதாகவும் கூறினான். புலவர் வேதனை யடைந்து ஊர் செல்லுவதற்குத் துடித்தார். காலில் முள் தைத்திருப்பதினால் ஏற்பட்ட தம் அவஸ்தைகூட அவருக்கு அப்போது நினைவில்லை. அவருடைய சொந்த ஊர் அங்கிருந்து மிகுந்த தொலைவில் இல்லை நான்கு நாழிகைப் பயணம்தான்.

‘வீணாக இப்போது வைத்தியரை அழைத்து வரவேண்டாம்! எப்படியாவது – ஒரு பல்லக்கில் வைத்தாவது என்னை ஊரில் கொண்டு போய்விடச் செய்யுங்கள்! அதுதான் நீங்கள் இப்போது எனக்குச் செய்யவேண்டிய பேருதவி, இந்த நிலையில் நான் அவளைக் காணாமல் இருக்கமுடியாது. என் காலை நான் ஊருக்குச் சென்று அங்கே வைத்தியரிடம் காண்பித்துக் கொள்கிறேன். அவளே இப்படிக் கிடக்கும்போது என் காலுக்கு வைத்தியம் செய்ய இப்போது என்ன அவசரம் வேண்டிக் கிடக்கிறது?’ என்று மனம் நொந்து இரக்கமும் உருக்கமும் தேங்கிய குரலில் கூறினார் புலவர்.

அவர் வேண்டிக் கொண்ட விதம், கருப்பண்ண வள்ளலையும் அவர் தம்பியரையும் உருக்கம் கொள்ளச் செய்தது. அந்த நிலையில் காலில் முள்ளை எடுத்துச் சொஸ்தமாக்காமல் அவரை அனுப்புவது சரியில்லை என்றாலும் அவரது வேண்டுகோளை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. நோயாளியாக இருக்கும் மனைவியைப் பார்க்கும் பரபரப்பும் ஆவலும் புலவருக்கு இருக்கும்போது அவர் விருப்பப்படி அவரை ஒரு பல்லக்கில் ஏற்றி அனுப்பி விடுவதே நல்லது என்று அவர்களுக்கும் தோன்றியது. கருப்பண்ண வள்ளல் வீட்டில், ஒருவர் தாராளமாக அமர்ந்து கொண்டு போகும்படியான மூடு பல்லக்கு ஒன்று இருந்தது. அதில் புலவருக்கு அளிக்க வேண்டிய பரிசிற் பொருள்களை எல்லாம் வைத்து அவரையும் ஏறிக்கொள்ளச் செய்து அனுப்பி விடலாம் என்று சகோதரர்கள் தீர்மானித்தார்கள். ஆனால் அந்தப் பல்லக்கைச் சுமந்து செல்வதற்கு இரண்டு ஆட்களும் இடையிடையே தோள் மாற்றிக்கொள்ள இரண்டு ஆட்களம் வேண்டும். சமீப காலமாக அது உபயோகத்தில் இல்லாமல் இருந்ததனால் அந்தப் பல்லக்கைத் தூக்குவதற்கென்று நியமிக்கப் பெற்றிருந் தவர்களையும் விலக்கி அனுப்பிவிட்டிருந்தார்கள். புலவருடைய பதைபதைப்பையும் அவசரத்தையும் பார்த்தால், அங்கே இங்கே ஓடிப் பல்லக்குத் தூக்குவதற்கு ஆள் திரட்டிவிடலாம்’ என்பதற்குக்கூட அவகாசம் இருப்பதாகத் தெரியவில்லை. வைத்தியரை அழைத்து வரச் சென்ற ஆளும் இன்னும் திரும்ப வில்லை. ஊரிலிருந்து புலவருக்குச் செய்தி கொண்டு வந்த ஆள் நடுவே விடைபெற்றுக் கொண்டு தன் காரியமாகச் சென்றுவிட்டான். புலவரின் ஊர் செல்ல வேண்டும் என்ற தவிப்போ, கணத்துக்குக் கணம் அதிகமாகிக் கொண்டிருந்தது. வள்ளலும் சகோதரர்களும் என்ன செய்வது?’ என்று தெரியாமல் திகைத்து மயங்கினார்கள்

திடீரென்று கருப்பண்ண வள்ளலுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர் தம் தம்பியர்களைச் சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று அவர்களிடம் தனியாக ஏதோ கூறினார். அவர்களும் முகமலர்ச்சியோடு அவர் கூறியதை வரவேற்று ஒப்புக்கொண்டனர்.
பல்லக்கு, புலவருக்கு அருகில் கொண்டு வந்து வைக்கப் பட்டது. கருப்பண்ண வள்ளல் ஒரு பெரிய வட்டத் தாம்பாளத்தில் பரிசில்களைப் புலவரிடம் வணக்கத்தோடு அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டு அளித்தார். புலவர் அதைப் பெற்றுக்கொண்டு பல்லக்கில் ஏறி அமர்ந்தார். பல்லக்கில் அவரது முள் தைத்து வீங்கிய கால் உறுத்தாமல் இருப்பதற்காக மெத்தை விரிக்கப் பட்டிருந்தது.

“என்ன? பல்லக்குத் தூக்குபவர்களை இன்னும் காணவில்லையே? விரைவில் வருமாறு சொல்லி அனுப்பினீர் களோ இல்லையோ?” பல்லக்கில் அமர்ந்து கொண்டதும் புறப்பட்டுச் செல்லும் வேகம் மனவேகத்தை உந்தித்தள்ள ஆவலோடு புலவர் இப்படிக் கேட்டார்.

“அவர்கள் வந்துவிட்டார்கள்! இங்கேதான் அந்தப் பக்கமாகப் போயிருக்கிறார்கள்! இதோ நான் போய் அழைத்து வருகிறேன்” – என்று புலவருக்கு விடை சொல்லிக் கொண்டே மூடுபல்லக்கின் திரைச் சிலையை இழுத்து மூடிக்கட்டி மாட்டினார் கருப்பண்ண வள்ளல். புலவர் நன்றாகக் காலை நீட்டி வசதியாக உள்ளே அமர்ந்துகொண்டார். இரட்டையாக மடித்துத் தொங்கவிடப்பட்டிருந்த மெல்லிய பட்டுத் திரைச் சிலையின் வழியே பல்லக்கிற்குள் மிக மங்கலான ஒளியே பரவியிருந்தது. பல்லக்குக்கு உள்ளிருப்பவர்க்கும் வெளியே இருப்பவர்க்கும் இடையே மறைவை உண்டுபண்ணியது அந்தத் திரை.

பல்லக்கு புறப்பட்டு வீட்டு வாசலுக்கு வந்தது, அதன் முன்பக்கத்துக் கொம்பு கருப்பண்ண வள்ளலின் வலது தோள் மேலே இருந்தது. பின்பக்கம் அவருடைய இளைய தம்பி தாங்கிக் கொண்டிருந்தார். மற்ற இரண்டு தம்பிகளும் தோள் மாற்றிக் கொள்வதற்காகத் தயாராகப் பின் தொடர்ந்து உடன் வந்து கொண்டிருந்தனர்.

தாங்கள் தெய்வாம்சமாகக் கருதி வணங்கிவரும் பெரிய சீமானும் குணவானுமாகிய கருப்பண்ண வள்ளல் தெரு வழியே இடுப்புத் துணியோடு முண்டமாகப் பல்லக்குச் சுமந்து செல்வதை மாவூரார் அன்று, அப்போது கண்டனர். அவர்கள் சிலர் கண்ணீர் சிந்தினர், சிலர் நெஞ்சுருக வைத்த கண் வாங்காமல் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே நின்றனர். கருப்பண்ண வள்ளலும் அவர் தம்பியருமோ புன்முறுவல் பூத்து மலர்ந்த முகத்துடனே தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் பக்தர்களைப் போலப் பல்லக்கைச் சுமந்தவாறே மேற்சென்று கொண்டிருந்தனர்.

வீதிகளைக் கடந்து பல்லக்கு ஊர் எல்லையை அடைந்தது. அங்கே அருகில் வயல்களிலே வேலை செய்து கொண்டிருந்த வேளாளர்கள் இந்தக் காட்சியைக் கண்டு திடுக்கிட்டு ஓடோடியும் வந்து பல்லக்கைச் சூழ்ந்து கொண்டார்கள். “என்ன காரியம் செய்துவிட்டீர்கள் பிரபு? ஒரு வார்த்தை சொல்லி அனுப்பி இருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோமா, இதைச் செய்ய?” என்று கெஞ்சினார்கள்.

வெளியே ஆரவாரம் கேட்டுப் பல்லக்கினுள்ளே இருந்த புலவர் திரையை விலக்கி எட்டிப் பார்த்தார். திடுக்கிட்டார். வள்ளலும் அவர் தம்பியும் பல்லக்கைச் சுமந்து நின்றதைக் கண்டு அவர் பல்லக்கிலிருந்து கீழே குதித்து விட்டார். அப்படிக் குதித்த போது வீங்கிச் சீழ் கொண்டிருந்த அவர் கால்கூட வலிக்கவில்லை. அதைவிட மனம் தான் வலித்தது. ஒரு பெரிய சீமான் தம் தம்பி களோடு தனக்காக எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக் கிறார்!’ என்று எண்ணி உருகியது உள்ளம் புலமை உள்ளம் வலித் தால் என்ன? மகிழ்ந்தால் என்ன? வாடினால்தான் என்ன? அந்த உள்ளத்தின் எல்லா அனுபவங்களும் பாட்டாகத்தானே வடிவம் பெறும்?

“எல்லப்பன் அம்மையப்பன் தரு
திருவேங்கடராமன் எழிற் சீராம்
வல்லக் கொண்டமனுடனே
மாதை வேங்கடேசனைப் போல்வரிசை தந்தான்
செல்லத் தம்பியருடனே மாவையில்வாழ் கருப்
பண்ணன் தெருவீதிக்கே
பல்லக்குத்தான் சுமந்தான் அது
நமக்கு ஓராயிரம் பொன் பரிசுதானே?”

எல்லப்ப = வள்ளல், அம்மையப்ப வள்ளலின் புதல்வராகிய திருவேங்கடராமன் சீராம வள்ளல் (ஸ்ரீராமவல்லக்கொண்டம் நாயகர், மாதைப்பதி வேங்கடேசன் – சொக்கநாதரைப் பாராட்டி உதவிய சில வள்ளல்கள்)
என்ற பாட்டு, சொக்கநாதர் வாயிலே அப்போது பிறந்தது. பல்லக்கு வேளாளர் தோள்களில் மாறியது. அவர் வள்ளலிடமும் சகோதரர்களிடமும் விடைபெற்று அதிலேறிக் கொண்டார். பல்லக்கு புறப்பட்டது. சகோதரர்கள் திரும்பினர். தியாகத்தை ஓராயிரம் பொன் பரிசுக்கு மதிப்பிட முயல்கிறார் புலவர் பாடலில்.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *