கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 50 
 
 

பிறரை வலியச் சொற்போருக்கு இழுத்து வாதமிட வேண்டும் என்ற ஆசை காளமேகத்திற்குக் கிடையாது. ஆனால் பிறராகத் தம்மை அவ்வாறு ‘வம்புக்கு இழுக்கும் போது ‘ மண்ணாந்தை மாதிரிச் சும்மா இருந்து விடுவதும் அவருக்குப் பிடிக்காது. மற்றவர்கள் திறமையைப் பரிசோதிக்கவேண்டும் என்ற ஆர்வமோ, அவர்கள் படிப்பின் ஏற்றத்தாழ்வை ஆராய்ந்தறிய வேண்டும் என்று துடிதுடிக்கும் புலமைக் காய்ச்சலோ அவருக்கு இருந்ததில்லை. ஆயினும் பொறாமையும் எதிரியைப் படிக்காதவன் என்று பலரறிய மட்டந்தட்டிக் காட்ட வேண்டுமென்ற அசூயையும் கொண்ட வேறு சில புலவர்கள் அவரையே அப்படிப் பரிசோதிக்க வந்தபோது அவர் விட்டுக் கொடுத்து ஒதுங்கி விடுவதும் இல்லை.

.. இந்த விஷயத்தில் அவரிடம் சிக்கிக் கொண்ட மற்றவர்கள் – நிலை, நேர் எதிரே இருக்கும் கற் சுவரை நோக்கிப் பந்தை எறிபவன், எறிந்த வேகத்தில் அதே பந்து மீண்டும் வந்து தன்னையே அடிக்கக் கண்டு வருந்தும் நிலையை ஒத்திருந்தது. அறியாமல் கொள்ளாமல், அவரை ஒன்றும் தெரியாதவர் என்று நிரூபித்துவிட வேண்டும்’ என நினைத்து அவரிடம் வாயைக் கொடுத்தவர்கள் இவரிடம் வந்து மாட்டிக் கொண்டோமே’ என்று எண்ணும்படியாகச் செய்துவிடுவார். வேடிக்கைக்கு வேடிக்கை பேசும் அவர் வாய் வினைக்கு வினை பேசும்!

‘தம்மைப் பற்றி மற்ற புலவர்கள் என்ன எண்ணிக் கொள்கிறார்களோ?’ என்ற கவலையை அவர் கொள்ளுவது இல்லை. இருந்தாலும் கொல்லர் தெருவில் ஊசி விற்பதைப் போலத் தம்மிடமே வாதுக்கு வருபவர்கள் மேல் அவருக்கு அசாத்தியமான சீற்றம் வந்துவிடும். தம்மை ‘வெள்ளைக் கவி’ என்று பலவீனப்படுத்தி நிரூபணம் செய்ய வரும் பொறாமைக் காரர்களுக்கே அந்தப் பட்டத்தைக் கட்டிப் பலவீனத்தோடு அவர்கள் தலைகுனிந்து போகச் செய்வதற்கு அவர் ஒருபோதும் தயங்கினதே இல்லை. அத்தகைய சந்தர்ப்பங்கள் அவருடைய கவிதை வாழ்க்கையில் எத்தனையோ முறைகள் வாய்த்திருக் கின்றன. அவற்றில் வியப்புக்குரிய ஒன்று என்னவென்றால் ஒரு முறையாவது தோல்வியின் அறிகுறி கூடக் காளமேகத்தின் பக்கம் வாய்த்ததில்லை.

அவற்றுள் சான்றாக ஒரு நிகழ்ச்சியை இங்கே காண்போம். காளமேகத்தின் திறமையிலும் புகழிலும் பெருமையிலும் பொறாமை கொண்ட சிலர் அவரை எப்படியாவது மட்டந் தட்டிக்’ காட்டிவிட வேண்டுமென்று கூடிச் சிந்தித்தனர். கடைசியில் ஒரு தீர்மானத்திற்கும் வந்தனர். “காளமேகத்தினிடம், வெண்பாவிற்குரிய – பூரணப்பொருள் சாராத – முறிப்படியாகிய இறுதி அடி ஒன்றைக் கொடுத்து அதை வைத்துக்கொண்டு பாட்டைப் பூர்த்தி செய்யுமாறு சொல்லவேண்டும். நாம் கொடுக்கின்ற இறுதி அடி விபரீதமாக அரைகுறை நிலையில் இருக்கும். ஆகையால் அவர் அதைப் பூர்த்தி செய்ய இயலாமல் தோற்றுப் போவார்” என்பதே அவர்கள் தீர்மானம். இப்படித் தீர்மானித்தபின் அவர்களே மீண்டும் கூடி குடத்திலே கங்கையடங்கும்’ என்ற இறுதியடியைக் காளமேகத்தினிடம் கூறிப் பொருள் சரியாக அமையுமாறு அதை வெண்பாவாகப் பாடச் சொல்ல வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டார்கள். குடத்திலாவது, கங்கையாவது, அடங்கு கிறதாவது?’ என்றெண்ணிக் காளமேகம் மருண்டு திகைத்துத் தோற்றுப் போவார். எப்படியாவது வாய்க்கு வந்தபடி பாடிப் பூர்த்தி செய்தாலோ பொருள் கெட்டுப்போகும். பொருளும் விபரீதமாக இருக்கக் கூடாது! இறுதியடியும் ‘குடத்திலே கங்கை யடங்கும்’ என்றிருக்கவேண்டும் என்ற நினைவுகளுடன் அவர்கள் காளமேகத்தின் பாற்சென்று தம் நிபந்தனைகளைச் சொல்லி வேண்டிக் கொண்டார்கள். உண்மையில் அந்த ஈற்றடியைத் தயார் செய்த அவர்களுக்கே அதைத் பூர்த்தி செய்யத் தெரியாது. ஆனால், காளமேகமா விடுகின்றவர்? அவர்கள் கேட்டு வாய்
மூடியிருக்கமாட்டார்கள். அதற்குள்ளேயே,

“விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை
இடத்திலே வைத்த இறைவன் சடாம்
குடத்திலே கங்கை யடங்கும்”

விண் – வானம், வெற்பு = மலை, மண் = உலகம் , பெண் = பார்வதி இறைவன் = சிவன், சடாமகுடம் = சடைமுடி”
என்று அவர் பாடினபோது அவர்கள் மூக்கில் விரலை வைத்தார்கள்.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *