தேசத் தொண்டர் சீற்றம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 22 
 
 

சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை மாவட்டத்தில் உத்தமபாளையத்துக்கு அருகிலுள்ள அனுமந்தன்பட்டி என்னும் சிற்றூரில் சிறந்த தேசத் தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த நாளில் தேசப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற தியாகிகளில் அவரும் ஒருவர்.

‘அனுமந்தன்பட்டி கிருஷ்ணசாமி ஐயங்கார்’ என்று அவருடைய பெயரைச் சொல்லிய அளவில் மதுரை மாவட்டத்தின் மேற்குச் சீமையில் நன்றாகத் தெரிந்து கொள்ளுவார்கள். அவர் தேசத் தொண்டர் மட்டுமல்லர். சிறந்த கவிஞர். பரம்பரைப் பாவலர்கள் பலர் பிறந்த மரபில் வந்தவர். நினைத்த அளவில் தாம் நினைத்த கருத்தைப் பாட்டாகச் சொல்லும் திறமை அவருக்குண்டு. இராமாயண வெண்பா, செம்பை நாற்பது போன்ற கவிதை நூல்களையெல்லாம் அவர் இயற்றியிருக்கிறார்.

தேசியப் போராட்டத்தில் ஈடுபட்ட, குற்றத்துக்காக அப்போது ஆண்டு வந்த அந்நிய அரசாங்கம் அவரைக் கைது செய்து கடலூர் சிறையில் கொண்டுபோய் வைத்தது. அதே சிறையில் நாட்டு விடுதலைப் போரில் குதித்த வேறு சில தேசத் தொண்டர்களும் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ‘கல்கி’ சதாசிவம் அவர்களும் ஒருவர்.

தமிழ்ப் பாவலரான அனுமந்தன்பட்டி ஐயங்காரவர்கள் சிறையில் இருந்தது எல்லாத் தேசபக்தர்களுக்கும் ஒரு வகையில் நல்ல பயனை அளித்தது. தமிழ் இலக்கியத்தைப் பற்றி அவர் சுவையான செய்திகள் பலவற்றைக் கூறி, எல்லோருடைய நேரத்தையும் பயனுள்ளதாக்குவார். அவரால் சிறையில் தமிழ் மணம் கமழ்ந்தது. இதனால் சிறையில் இருப்பதையே மறந்து ஒரு குடும்பமாக வாழ்வது போல் கடலூர் சிறையில் நாட்களைக் கழித்தார்கள் தேசபக்தர்கள்.

அந்தக் காலத்தில் கடலூர் சிறையில் இப்போதிருப்பது போன்ற வசதிகள் இல்லை . அதுவும் கைதிகள் தேசபக்தர்கள் என்று தெரிந்தால் கொடுமை அதிகம்.

ஒருநாள் காலையில் தேசபக்தர்களுக்கு உணவு கிடைக்க வேண்டிய வேளையில் கிடைக்கவில்லை. எல்லோரும் பட்டினி . ‘செவிக்கு உணவு இல்லாத சமயத்தில் வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்ற கருத்தின்படி ஐயங்கார் கம்பராமாயணம், திருக்குறள் என்று எதை எதையோ சுவையாகக் கூறி நண்பர்களின் பசியை மறக்கச் செய்வதற்கு முயன்றார். சிறிது நேரம்தான் அவருடைய முயற்சி வெற்றி பெற்றது. நேரம் ஆக ஆகப் பசி வயிற்றைக் கிள்ளியது. இலக்கியச் சுவை செவிகளில் ஏறவில்லை . பிறருக்கு இலக்கியச் சுவையூட்டிய ஐயங்காருக்கே பசி பொறுக்க முடியவில்லை. சிறைச்சாலை அதிகாரிகள் கவனிக்கிற பாடாயில்லை. தேசத் தொண்டர்களுக்குப் பசியும் கோபமும் அதிகரித்தன. சிறைக் காவலாளிகளை நோக்கிக் கூச்சலிட்டனர். போடுவதோ அறைகுறைச் சாப்பாடு. அதையும் நேரத்தோடு போடாமல் பசியை வளரவிட்டால் எப்படிப் பொறுக்க முடியும்? சிறையில் கூப்பாடு வலுத்தது. சிறை வார்டன்வரை தகவல் போயிற்று. எல்லோருக்கும் ஒரே மனக் கொதிப்பு, பசியோடு கூடிய ஆவேசம் அந்தக் கொதிப்பை மேலும் வளர்த்தது. ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்ற நிலையாகிவிட்டது. சிறை வார்டன் எமகிங்கரனைப் போல ஓடிவந்து நின்றான். அதட்டினான். “இப்படி அமளி செய்தால் இன்று முழுதும் உங்களைப் பட்டினி போட்டு விடுவேன்.”

இந்த அதட்டலைக் கேட்டதும் எல்லோரும் ‘கப்சிப்’ என்று அடங்கிவிட்டனர். அதுவரை அடங்கிப் பசி மயக்கத்தோடு உட்கார்ந்திருந்த ஐயங்கார் பொங்கியெழுந்தார். சீற்றத்தோடு வார்டனைப் பார்த்தார். அவர் உதடுகள் துடித்தன. முகத்தில் ஆவேசம் படர்ந்தது. அடுத்த கணம் அவர் குரல் இடி முழக்கம் போல் ஒலித்தது. வார்டன் அந்த ஆவேசத் தமிழ்க் குரலுக்கு முன் கட்டுண்டு வெலவெலத்துப் போய் நின்றான். அவன் முகத்தில் ஈயாடவில்லை !

“பன்றியெனத் தின்று பணம் பறிக்கும் வெள்ளயர்கள்
இன்றெமக்குச் சிற்றுணவும் ஈயாது – துன்று சிறை
இட்டுவருத்து கின்றீர் ஏதுக்கிந்த இழவோலை
கிட்டும் நாளொன்று கெமர்.”

ஐயங்காருடைய பசியில் பிறந்த ஆவேசக் கவிதையைக் கேட்டு அயர்ந்து போய் நின்ற வார்டனின் கன்னத்தில் அறைவதுபோல் மற்றொரு பாட்டும் முழங்கியது. வார்டன் பயந்து நின்றான்.

“ஏடா எமதன்னைக் கின்ன லிழைத்தகுடி
கேடா நெறியழித்த கீழ்மகனே – வாடாத
பேரறவாள் கொண்டு குதித்தார் பீடா ரிளந்தமிழர்
போடா இனிவிரைந்து போ!”

பாட்டிலுள்ள ஒவ்வொரு ‘டா’வும் கன்னத்தில் அறைவது போலவே இருந்தது. அடுத்த சில விநாடிகளில் உணவு வந்தது. வார்டனைப் பார்த்து அந்தத் தேசத் தொண்டர் பாடிய பாடலில்
தேசீய எழுச்சி மட்டும் இல்லை . தமிழின் எழுச்சியும் இருக்கிறது. இப்படி எத்தனையோ தேசத் தொண்டர்கள் பட்ட துன்பங்களின் பயனான உரிமை வாழ்வைத்தான் நாம் சுதந்திரமாக அனுபவிக்கிறோம்.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *