கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 52 
 
 

    ஏரகத்து முருகன் கோவிலில் தூணோடு தூணாகச் சாய்ந்துகொண்டிருந்த காளமேகம் காலையில் தமக்குச் சீரகம் தர மறுத்துவிட்ட வயிரவநாதன் செட்டியார் (மளிகைக்கடை முதலாளி) கோவிலுக்குள் நுழைவதைக் கண்டார். காலையில் மண்டையை பிடித்து உலுக்கும் தலைக்குத்துத் தீர அரைத்துப் பூசிக் கொள்ளலாம் என்று நாலு சீரகம் கேட்டார் அந்தச் செட்டியாரிடம். வாய் கூசாமல் இல்லையென்று சொல்லி விட்டார் அந்தச் செட்டியார். அதோடு போகாமல் காள மேகத்தின் பேரில் தற்செயலாக நடந்த ஒரு தவற்றுக்காக ஒரு பெரிய திருட்டுப் பழியையும் சுமத்தப் பார்த்தார். ஈரித்துக் கசிந்துபோயிருந்த பெருங்காயக் கட்டி ஒன்று காளமேகத்தின் மேல் போர்வை நுனியில் ஒட்டிக் கொண்டுவிட்டது. சீரகம் கிடையாத ஏமாற்றத்துடன் திரும்பிய காளமேகத்தை, “என்ன கவிராயரே, பெருங்காயத்தைத் திருடிக்கொண்டு போகலாம் என்று பார்த்தீர்களோ?” என்று திரும்பி அழைத்தவாறே துணியிலிருந்து பெருங்காயத்தைப் பிய்த்து எடுத்துக்கொண்டு ஆளைத் திருப்பி அனுப்பினார் செட்டியார். காளமேகம் அவரை மனத்தினுள் வைத்துகொண்டே திரும்பிச் சென்று விட்டார்.

    அதற்குப் பிறகு இப்போதுதான் அந்த வயிரவன் செட்டி யாரைக் கோவிலில் பார்க்கிறார். அந்தச் செட்டியாரை எப்படிப் பழிவாங்கலாம் என்றெண்ணிக் கொண்டிருந்த காளமேகத்திற்குத் திடீரென்று ஒரு யுக்தி தோன்றியது. ‘கோவிலிலுள்ள முருகனைப் பாடுவது போல ஒரு வெண்பா பாடுவோம். அந்த வெண் பாவையே வேறு ஒருவகையாகப் பார்த்தால் செட்டியாரைத் திட்டுவதாயும் அமைய வேண்டுமாறு பாடிவிடுவோம்’ இந்தத் தீர்மானத்தோடு தூணில் சாய்வதிலிருந்து விடுபட்டுச் செட்டி யாரைப் பின்பற்றி மூலத்தானத்தை நோக்கி நடந்தார் காளமேகப் புலவர்.

    செட்டியார் தோத்திரப் பாடல்களை வரிசையாகப் பாடி வழிபாட்டை முடிக்கவும், பின்னாலிருந்து வேறோர் குரல் வழிபாட்டைத் தொடங்கியது. எங்கேயோ கேட்ட குரல் போல் இருக்கவே வயிரவநாதன் செட்டியார் திரும்பிப் பார்த்தார். காளமேகம் ஒன்றும் அறியாதவர்போலப் பரம பக்தராக உருகி உருகிப் பாடிக்கொண்டிருந்தார். பாட்டை உற்றுக் கவனித்த செட்டியாருக்கு யாரோ ஓங்கி மண்டையில் அடிமேல் அடியாக அடிப்பது போலிருந்தது. ஒன்றும் பேசி வம்புக்கு இழுக்க முடியாத இரண்டுங்கெட்ட பொருளுடன் பாட்டு அமைந்தி ருந்ததால் செட்டியார் காளமேகத்தை முறைத்துப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து நழுவி விட்டார்.

    “வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
    இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை – மங்காத
    சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியாரே!”

    வெங்காயம் = வெம்மையான உடல், சுக்காதல் = வறண்டு போதல். வெந்த தயம் = ஒரு மருந்துச் சரக்கு, உடலின் பாரம். சீரகம் – மோட்சம், காயம் = உடல்

    என்று பாடிக்கொண்டே உதடுகளில் விஷமப் புன்னகையை நெளியவிட்டார் காளமேகம்.

    “வெம்மையான உடல் வறண்டு போனால் வெந்து போன அயச் செந்தூரமென்னும் மருந்தினாலும் அந்த வறட்சி தீராது. வீண் பாரமான இந்த உடற்சரக்கை யார் சுமப்பார்? சீர்மையான அகமாகிய மோட்சத்தை அளித்தால் இந்தப் பெரிய உடலைத் தேடமாட்டேன்! ஏரகத்து முருகனே!” என்று வெளிப்படை யாகவும், “வெங்காயம் முதலிய சரக்குகளைக் கட்டி அழுது சுமப்பதால் பயனென்ன? தலைவலிக்குச் சீரகம் தந்திருந்தால் பெருங்காயத்தைத் திருடியிருக்கமாட்டேன்! ஏரகத்து வயிரவநாதன் செட்டியாரே!” என்று உள்ளே வேறு ஒரு பொருளும் பொதிந்துள்ளது.

    – தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

    Print Friendly, PDF & Email

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *