கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 54 
 
 

    திருச்சிராப்பள்ளிக்கு வந்தும் உச்சிப்பிள்ளையாரைத் தரிசனம் செய்யாமல் ஊர் திரும்ப மனம் இல்லை இராம கவிராயருக்கு . கையில் மிகுந்திருந்த பொருளை மேலே போர்த்தியிருந்த சரிகைத் துப்பட்டாவின் முன் தானையில் முடிந்து கொண்டே மலைக் கோட்டையை நோக்கி நடந்தார். அந்தி மயங்கும் நேரம். பூக்கடைகளும் சந்தனக் கடைகளுமாக மலைக்கோட்டை வாயில் மாலை நேரத்துப் பொலிவுடன் விளங்கியது. மல்லிகை, பிச்சி முதலிய பூக்களின் நறுமணத்தோடு கலவைச் சந்தனத்தின் புதுமணமும் மூக்கைத் துளைத்தது. ‘கணீர் கணீர்’ என்று வந்த தாயுமானவர் கோவில் மணியோசை கோவிலில் சந்தியாகால பூஜை நடக்கிறது என்பதை ஊருக்கு அறிவித்தது.

    கீழே, கடையில் வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பழம், கொஞ்சம் பூ இவைகளை வாங்கி மேலே போர்த்துக் கொண்டிருந்த அந்தச் சால்வையில் சுற்றியவண்ணம் படிகளில் ஏற ஆரம்பித்தார் கவிராயர். எந்தக் காலத்திலோ எவனோ ஒரு வள்ளல் மனம் விரும்பிக் கொடுத்த பரிசே அந்தச் சால்வை. கவிராயர் எங்காவது வெளியூர் புறப்பட்டால்தான் பொட்டியிலே உறங்கும் அந்தச் சால்வையும் அவரோடு உடன் போகும். ஏறக்குறைய இருபத்தைந்து வருட உபயோகமாகிய அதன் சேவையில் பட்டவீரத் தழும்புகள் போல இரண்டோர் கிழிசல்கள் அதை அலங்கரித்தன. ஒரு கோடியில் காசு முடிச்சுடன் தேங்காய், பழம் முதலியவற்றையும் தாங்கியவாறே கவிராயரின் இடுப்பைச் சுற்றிவிளங்கும் பேறு பெற்றது சால்வை. மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கப் படியேறித் தாயுமானவர் கோவிலை அடைந்த கவிராயர் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடிக்கொண்டே தரிசனத்தைத் தொடங்கினார். தாயுமானவப் பெருமானை வழி பட்டு முடிந்தபின் உச்சிப் பிள்ளையாரை நோக்கி உயர ஏறிச் சென்றார். யாருக்காக ஊருக்குப் புறப்பட்டவர் பயணத்தை நிறுத்திவிட்டுத் திரும்பி வந்தாரோ, அவரைத் தரிசிக்காமல் போய்விட்டால் எப்படி? உச்சிப் பிள்ளையாரைப் பார்க்க வேண்டும் என்று ஆவலும் உந்தித் தள்ளப் படிகளைத் தாண்டி மேலே வேகமாக ஏறினார்.

    இரண்டு நாழிகை கழிந்தபின் உச்சிப் பிள்ளையார் வழிபாட்டை முடித்துக்கொண்டு மறுபடியும் கீழே இறங்கினவர் இரண்டு மூன்று படிகளைத்தான் கடந்திருப்பார்…! சால்வையின் முன்தானை கனங்குறைந்து லேசாக இருந்ததைக் கண்டு மேலே இழுத்துப் பார்த்த அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது! காசு முடிச்சை எந்தப் பயலோ அவிழ்த்துக் கொண்டு போயிருந்தான். தம்மை மறந்த பக்தியுடன் அவர் தரிசனம் செய்து கொண்டிருந்த போது எந்த முடிச்சவிழ்க்கும் பயலோ அந்த வேலையைச் செய்திருந்தான். உச்சிப் பிள்ளையார் மீது அவருக்குப் பெரிய கோபம் வந்துவிட்டது. அந்தப் பொல்லாத பிள்ளையாரைத் தரிசிக்க வந்ததனாலேதான் காசு பறிபோயிற்று! பிள்ளையாரையே முடிச்சவிழ்த்தவராக எண்ணி அது அவருடைய பரம்பரைக் குணம் போலும் என்றும் கூறிவிடுகிறார்! வேடிக்கையாகத்தான் சொல்கிறார் வேறொன்றுமில்லை.

    “ஏ! உச்சிப் பிள்ளையாரே! உன் தம்பியாகிய முருகன் மாறுவேடத்தில் வள்ளியைத் திருடி மணந்து கொண்டான். மாமனாகிய திருமாலோ கண்ணனாக இருந்தபோது வெண்ணெயைத் திருடி உண்டான். நீரோ இன்று என்னுடைய முடிச்சை அவிழ்த்துக் காசைப் பறித்துக் கொள்ளச் செய்து விட்டீர்! இந்தத் திருட்டு உம்முடைய கோத்திரத்திற்கே உரிய பரம்பரைக் குணமா? என்ன.?” இராம கவிராயர் வயிற்றெரிச்சல் தீரப் பிள்ளையாரை வைத்து தீர்த்தார்.

    “தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த
    வம்பனோ நெய்திருடி மாயனாம் – அம்புவியில்
    மூத்த பிள்ளை யாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே
    கோத்திரத்தில் உள்ள குணம்”

    தம்பி = முருகன், வம்பன் = கண்ணன், அம்புவி = அழகிய உலகு.

    உச்சிப் பிள்ளையாரைக் காணவந்த வைபோகத்தில் சோற்றுக் கடைக்குக் கொடுக்க வைத்திருந்த காசை . முடிச்சவிழ்க்கக் கொடுத்துவிட்டுக் கையில் எஞ்சிய தேங்காய் மூடி பழங்களுடன் இறங்கினார் கவிராயர். முடிச்சைப் பறிகொடுத்ததோ எமாற்றம் அடைந்ததுவோ பெரிதில்லை. அதைப் பிள்ளையாரோடு தொடர்பு படுத்தி வேறு சில பரம்பரைச் செய்திகளையும் ஒட்டவைத்துக் கோத்திரத்துக்கு உள்ள குணம் என்று சமத்காரமாகச் சொன்னாரே பாட்டாக, அதுதான் பெரிய சாமர்த்தியம். தனிப்பாடல் திரட்டிலுள்ள பாட்டுக்களிலே மிகப் பல இம்மாதிரிச் சந்தர்ப்பத்தை ஒட்டி இயற்றப்பட்டவைதாம். சந்தர்ப்ப அனுபவமும் சாதுரியமும் அவ்வாறு பாடும் போது ஒன்று சேருவதனால் அசாதாரணத் திறமையாக வெளிப்பட்டு நம்மை வியக்கச் செய்கிறது.

    – தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

    Print Friendly, PDF & Email

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *