விடுதலையாதல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 4,882 
 

சாப்பாட்டு மேசை மீது இருந்த டெலிபோன் மீண்டும் அடித்தது. என்ன பார்க்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் டிவியின் பிம்பங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வனிதா எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தாள். அழைப்பவர் யாரானாலும் என்ன விஷயம் பேசுவார்கள் என்று தெரியும். டெலிபோனை எடுத்துப் பார்த்தால் யார் அழைக்கிறார்கள் என்றும் தெரிந்து விடும். பெர்லின் அழைப்பாக இருக்கலாம். சிக்காகோவாக இருக்கலாம். டெல்லியாகவும் இருக்கலாம். ஆனால் எல்லா ஊர்களும் எல்லா அழைப்புக்களும் நினைத்தாலே சோர்வூட்டின. ஒரே மாதிரிக் கேள்விகள்தான் வரும். “எப்படி இருக்காரு அப்பா? டிக்கட் புக் பண்ணவா வேண்டாமா?”.

முதல் கேள்விக்கு பதில் சொல்லிவிடலாம். “இருக்காரு, இழுத்துக்க, பறிச்சிக்கன்னு!”. இரண்டாம் கேள்விக்கு பதில் சொல்லுவது எரிச்சல். “சரி புக் பண்ணு!” என்றால், அப்புறம் அவர்கள் வந்து சேர்ந்த பின் ஒன்றும் ஆகவில்லை என்றால் “நீ சொன்னதுனாலதான் அவசரப்பட்டு வந்தேன். இப்ப பார், போய்ட்டு திரும்ப வரணும்” என்று அலுத்துக் கொள்வார்கள். “வேண்டாம், பார்க்கலாம்” என்றால், அப்புறம் ஏதாவது ஆகிவிட்டால், “நான் அப்பவே வந்திருப்பேன், நீ சொன்னதுனாலதான் தள்ளிப்போட்டேன். இப்ப பார் முகத்தகூடப் பாக்க முடியாமப் போச்சு!” என்பார்கள். ஆம் என்றாலும் பழி, இல்லை என்றாலும் பழி அவள் தலைமேல்தான். எவ்வளவு வசதியாகப் போய்விட்டது அவர்களுக்கு!

அப்பாவின் அறையில் ரிமோட் மைக் ஒன்று இருக்கிறது. அவர் ஏதாகிலும் முனகினால் ஹாலில் ஒலிபெருக்கியில் கேட்கும். அப்பாவுக்கு உடம்பு துடைத்துவிடப் போயிருந்த செல்வி ரிமோட் மைக்கை ஆன் செய்துவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தாள். செல்விதான் வனிதாவுக்குத் துயர்துடைப்புத் துணை. வெறும் வேலையாள் என்று சொல்லிவிட முடியாது. வனிதாவுக்கு உற்ற தோழியாகவே ஆகிவிட்டாள்.

அடித்து நின்றுவிட்ட டெலிபோனைத் தூக்கிக்கொண்டு அதன் ஸ்க்ரீனைப் பார்த்தவாறே வந்தாள். “உங்க பெரிய அண்ணன்தான் கூப்பிட்டிருக்காரு பெர்லின்ல இருந்து!” என்று வனிதாவின் கையில் தந்தாள்.

வனிதா வாங்கி வைத்துக் கொண்டாள். திரும்பவும் அடிப்பார். திரும்பத் திரும்பவும் அடிப்பார். மூத்த மகனான தான் மரணப்படுக்கையில் உள்ள அப்பாவின் பக்கத்தில் இல்லை என்ற குற்ற உணர்ச்சியை கொஞ்சமாவது ஆற்றிக்கொள்ளத்தான் இந்த அழைப்புக்கள். ‘எனக்கு அக்கறையும் கவலையும் ரொம்ப இருக்கிறது’ என்று காட்டிக்கொள்ள.

அவரையும் குற்றம் சொல்ல முடியாது. அப்பா முதல் முறை மோசமானதும் பெர்லினிலிருந்து அரக்கப் பறக்க ஓடிவந்தார். அண்ணியும் அவருடைய இரண்டு பையன்களும் கூட வந்தார்கள். அண்ணி வேலையிலிருந்து அவசர விடுமுறை வாங்கிக்கொண்டு, பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகாமல், டென்னிஸ் கிளாஸ், பியானோ கிளாஸ், பிரெஞ்ச் கிளாஸ் எல்லாம் தவற விட்டு, அண்ணன் முக்கியமான பிராஜக்டை பாதியில் விட்டுவிட்டு, வந்தார்கள். அண்ணனின் ப்ராஜக்ட் சில நாள் தாமதமாகி அவர் வேலை பார்க்கும் கம்பெனிக்கு கொஞ்சம் கெட்ட பேரும் கிடைத்திருக்கும். அண்ணனின் ஆண்டு ரிப்போர்ட்டில் அது வரும். போனஸ் கொஞ்சம் குறையும்.

இத்தனைக்கும் அத்தனை அந்தரமாக ஓடி வந்த பிறகு அப்பா சாகவில்லை. இரண்டு நாள் அண்ணன் பக்கத்திலேயே இருந்தார். அப்பா முழித்து முழித்துப் பார்த்தார். அண்ணன் கையைப் பிடித்துத் தடவினார். அப்புறம் வழக்கம் போலக் கண்ணை மூடிக்கொண்டு இளைத்துக்கொண்டு கிடந்தார்.

அண்ணன் குடும்பம் மூன்றாம் நாள் விமானத்தில் ஏறியது. பிராஜக்ட் தாமதமாகியதற்கு, கம்பெனியின் பெயர் கெட்டதற்கு, போனஸ் குறைந்ததற்கு, அண்ணியின் விடுமுறையில் நான்கு நாட்கள் வீணானதற்கு எல்லாம் என்ன பிரயோஜனம்?

அடுத்த முறை அப்பாவுக்கு ரத்த அழுத்தம் குறைந்து இருதயம் பலவீனமாகி கிட்னி செயலிழந்து, டாக்டர்கள் கெடு கொடுத்தபோது, அண்ணன் மட்டும் தனியாக வந்தார். அண்ணன் படுக்கைப் பக்கத்தில் நின்று பலமுறை கூப்பிட்டதும் அப்பா விழித்துப் பார்த்தார். ரத்த அழுத்தம் ஏறியது. சமநிலைக்கு வந்தது. இருதயம் சுமாராகத் துடித்தது. வாரத்துக்கு மூன்று நாள் டயலிசிஸ் செய்ய ஏற்பாடு செய்து டாக்டர்கள் அப்பாவை வீட்டுக்கு அனுப்பினார்கள். அண்ணன் அப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டு இன்னும்கொஞ்சம் ஏமாற்றத்தோடு பெர்லின் திரும்பினார்.

அக்கா ஆரம்பத்திலிருந்தே அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் அவள் பக்கத்தில், டெல்லியில்தான் இருந்தாள். அவளுடைய அனைத்துலக மருந்து உற்பத்திக் கம்பெனியின் டெல்லி அலுவலகத்தில் அவள்தான் நிர்வாக அதிகாரி . “ஏதுன்னா எனக்கு உடனே போன் பண்ணு வனிதா. நான் ஆபீச விட்டு அவ்வளவு எளிதா வரமுடியாது. ரொம்ப போட்டி நிறைஞ்ச மருந்து மார்க்கெட் இங்க. கொஞ்சம் அசந்தாலும் நம்ம வாய்ப்ப பிடிங்கிடுவாங்க. ஃபிளைட்தான் ஈசியா கிடைக்குதே! நீ சொன்னவொன்ன நான் வந்திட்றேன்!” என்று இருந்து விட்டாள். என்னத்தைச் சொன்ன பிறகு? இழவு சேதி என்று திறந்து சொல்லியிருக்கலாம். ஆனால் அது நாகரீகமாகாது அல்லவா?

சிக்காகோவில் இன்னோரு அண்ணன் இருக்கிறார். வழக்கறிஞர். அவருக்குத் தொழில் ஓஹோ என்று இருக்கிறது. தொழில் ஆரம்பித்தபோது விரைந்து செல்வம் சேர்க்க வேண்டும் என்று ஓய்வில்லாமல் உழைத்தார். செல்வம் பெரிதாகச் சேர்ந்தது. பின்னர் அவருடைய ஒவ்வொரு நிமிடமும் பெரிய விலையுள்ள நிமிடமாக ஆகியது. ஒரு நாள் விடுப்பு எடுத்தால் அதனால் ஏற்படும் நஷ்டம் எவ்வளவு என்று கணக்குப் பார்த்து அந்த நட்டத்தைத் தாங்க இயலாமல் ஓய்வே எடுப்பதில்லை.

அவருடைய வெள்ளைக்கார மனைவி அவரை விவாகரத்துச் செய்து விட்டாள். பெரும் பணம் தீர்வையாகப் பெற்றுக் கொண்டு அவருக்குப் பெற்ற ஒரே குழந்தையையும் அழைத்துக்கொண்டு போய்விட்டாள். அவரும் மறு பேச்சுப் பேசாமல் விட்டுக் கொடுத்து விட்டார். மனைவியும் குழந்தையும் தொழிலுக்கு இடையூறு செய்யாமல் அகன்றுவிட்ட நிம்மதியில் தொழிலே மனைவி, தொழிலே குழந்தை என்று இருக்கும் அவருக்கும் கிழட்டுத் தந்தையின் நோய் இடையூறுதான். மனச்சான்று என்று ஒன்று அவருக்கும் இருக்கலாம். அது உறுத்தும் போதெல்லாம் ஆயிரக்கணக்கில் அமெரிக்க வெள்ளியை அப்பாவின் தேவைக்காக என்று வனிதாவின் வங்கிக் கணக்கில் சேர்த்துவிடுவார்.

பெர்லினிலிருந்தும் டெல்லியிலிருந்தும் கூட பணம் வந்து கொட்டுகிறது. அப்பாவின் ஆன்மாவுக்கு உதவப்போவது யூரோவா, டாலரா, ரூபாயா என்பது வனிதாவுக்கும் விளங்கவில்லை.

தான் ஒரு வலையில் மாட்டிக்கொண்டது போலவே வனிதாவுக்குத் தோன்றியது. கடைக்குட்டியாகப் பிறந்ததன் பாவமோ? அப்பா ரொம்ப வசதியாகத்தான் வாழ்ந்தார். ஒரு பெரிய கப்பல் கம்பெனியில் பெரிய வேலை. நிறையச் சம்பளம். அதோடு சாமர்த்தியமான முதலீட்டாளர். வீடுகள் நிலங்கள் கிடைக்கும் போதெல்லாம் வாங்கிப்போட்டதில் அனைத்தும் கொழுத்த சொத்துக்களாகின.

மூத்த அண்ணன் படிக்க இங்கிலாந்து போவதற்கு அப்பா ஒரு வீட்டை விற்றார். அக்கா உள்ளூர்ப் பல்கலையில் வர்த்தக இளங்கலைப் பட்டத்திற்கு அதிகம் செலவு வைக்காமல் படித்தாள். அவளுடைய அறிவைப் பார்த்து அவள் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்க ஒரு மருந்துக் கம்பெனி உபகாரச் சம்பளம் கொடுத்து அவளைக் கொத்திக் கொண்டது. அந்தக் கம்பெனிக்குத்தான் தன்னை அர்ப்பணித்து டில்லியில் போய் உட்கார்ந்தாள்.

சின்ன அண்ணன் அமெரிக்காவுக்குப் படிக்கப் போய் பெரும் செலவு வைத்தார். அதற்கு அப்பா ஒரு வீட்டையும் நிலத்தையும் விற்றார். எல்லாரும் நன்றாகப் படித்து பட்டங்கள் பெற்று ஆங்காங்கே வேலை பெற்று அமர்ந்துவிட்டார்கள்.

அவர்கள் நாடு விட்டு நாடு பாயத் தயாரன போதெல்லாம் அம்மாதான் கவலைப்பட்டு முணுமுணுத்தாள். “ஏம்பா இப்படி அலையிறிங்க? இந்த மலேசியாவிலதான் என்ன குறை? இங்கேயும்தான நல்ல வேலைகள் கெடைக்குது. நல்ல படிப்பு கிடைக்குது. எதுக்கு அமெரிக்கா, ஆஸ்த்திரேலியான்னு அலையணும்?”

அம்மாவின் அறியாத்தனத்தைச் சுட்டிக்காட்டி பையன்கள் விவாதிப்பார்கள். ஆனால் அப்பாவின் வாதம்தான் கடைசியாகச் செல்லும். “சரசு! இப்ப நாடு முந்தி மாதிரி இல்ல. அதோட நாமே நாம பிறந்த நாட்ட விட்டு இந்த நாடு வந்ததாலதான இப்ப நல்லா இருக்கிறோம்? பிள்ளைகள் இன்னும் நல்ல எதிர்காலத்த தேடிக்கிறத நாம் தடுக்கலாமா?”

அம்மா அடங்கிப் போவாள். அவளுடைய வாதங்கள் என்றும் செல்லுபடியானதில்லை. “ஆமா! கடைசி காலத்தில நாம் நோயில விழுந்து அவதிப்படும்போது ஏன்னு கேக்க நாதியில்லாம போகும், பாத்துக்குங்க!” என்று அங்கலாய்த்தவாறு போய்விடுவாள்.

மூன்று பிள்ளைகளும் நன்றாகப்படித்துத் தேறினார்கள். விடுமுறையில் வந்து குடும்பத்தோடு இருந்து கொஞ்சிப் போனார்கள். எதிலும் முனைந்து செயற்படும் அப்பாவின் மரபணுக்களைப் பெற்றிருந்ததால் தாங்களே சுயமுயற்சியில் வெளிநாடுகளில் நல்ல வேலைகள் தேடிக்கொண்டார்கள். குடும்பம் அமைத்துக் கொண்டார்கள். அப்பாவை விடப் பல படிகள் மிஞ்சிய சம்பளங்கள் வாங்கினார்கள். அப்பா அவர்கள் அனைவருக்கும் அவர்கள் விருப்பப்படி பெருஞ் செலவில் கல்யாணமும் செய்து வைத்தார்.

வனிதாவுக்கும் அப்பா ஒன்றும் குறை வைக்கவில்லை. அவள் உயர்நிலைப் பள்ளியில் தேறியவுடன் அவளுக்கு விருப்பமான துறையில் உயர்படிப்புப் படிக்க அனுமதித்தார். அப்போது அப்பா அநேகமாக ஓய்வு பெற்றிருந்தார். வீட்டிலிருந்தவாறே ஒரு ஆலோசக நிறுவனம் அமைத்து இணையம் வழியாக ஆலோசனைகள் வழங்கி, கப்பல் போக்குவரத்து சம்பந்தமான மாநாடுகளுக்குப் பிரயாணம் பண்ணி, கொஞ்சம் சம்பாதித்து ரொம்பப் பொழுது போக்கிக்கொண்டிருந்தார்.

வனிதாவுக்கு பிற தொழில் முறைப் படிப்புக்களை விட பத்திரிகைத்துறைதான் பிடித்திருந்தது. அவ்வப்போது பத்திரிகைகளுக்கு ஏதாகிலும் சிறிய கட்டுரைகள் எழுதுவாள். நூறும் இருநூறும் என சன்மானங்கள் பெற்றதுமுண்டு.

ஆகவே உயர்நிலைப் படிப்பு முடிந்ததும் பத்திரிகைத் துறைதான் என முடிவாயிற்று. அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகம் அவளைக் கவர்ந்திருந்தது. அது பற்றி அப்பா நிறையச் சொல்லி அவள் மூளைக்குள் அதனை ஏற்றியிருந்தார். எப்படியாவது அவர்களின் பத்திரிகைத் துறை உயர் பட்டக் கல்லூரியில் சேருவது அவளுக்கு லட்சியமாயிற்று. மூன்றாண்டுகள் இளங்கலைப் படிப்புக்கு தொடர்புத் துறையில் சேரலாம். அப்புறம் ஓரிரண்டு ஆண்டுகள் ஏதாவது அமெரிக்கப் பத்திரிகைகளில் பயிற்சி நிருபராகப் பணியாற்ற வேண்டும். அப்புறம்தான் பத்திரிகைத் துறை உயர் பட்டக் கல்லூரியில் இடம் கொடுப்பார்கள்.

அண்ணன்மார்களும் அக்காவும் அவளுடைய முழுச் செலவையும் ஏற்கத் தயாராக இருந்தார்கள். அவள் மனுச் செய்து கொலம்பியாவில் இடமும் பெற்றிருந்தாள். அப்பாவையும் அம்மாவையும் தனியே விட்டுச் செல்வது கொஞ்சம் கவலையாக இருந்தாலும் அப்பாவின் என்றும் போன்ற உந்துதல், அம்மா பிரிவை நினைத்து முனகினாலும் அணைத்துத் தலையில் முத்தம் கொடுத்து அனுமதிக்கும் பாசம் ஆகியவை அவளையும் கூடுவிட்டுப் பறக்கும் சுதந்திரப் பறவையாக தயார்படுத்தியிருந்தன.

ஆனால் வாழ்க்கையில் திட்டம் போட்டபடியா எல்லாம் நடக்கிறது? விமானம் ஏறுவதற்கு மூன்று நாட்கள் முன் அம்மா திடீரென மயக்கம் போட்டு விழுந்தாள். அவசரமாக மருத்துவ மனைக்குக் கொண்டு போன போது இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்றார்கள். மூளையில் நரம்பில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது. அம்மா கோமாவில் ஆழ்ந்தாள். வெளியே சொல்ல முடியாமல் எத்தனை கவலைகள் இவள் ரத்த அழுத்தத்தை இந்த அளவுக்குக்கொண்டு போயிருக்கும் என சிந்தித்து வனிதா குழப்பத்தில் ஆழ்ந்தாள். நானும்தான் காரணமோ என்ற கேள்வி வந்து போகாமல் இல்லை.

“நான் பாத்துக்கிறேன், நீ புறப்படு” என்று அப்பா சொன்னாலும் வனிதாவால் முடியவில்லை. பயணத்தைக் கொஞ்சம் தள்ளிப்போட்டாள். கொலம்பியா இரண்டு வாரம் கழித்து வந்து பதிந்து கொள்ள அனுமதி வழங்கியது.

இரண்டு வாரங்களில் அம்மா கோமாவிலிருந்து விடுபடவில்லை. வனிதா போக மனமில்லாமல் தன் படிப்பை ஓராண்டுக்குத் தள்ளிப் போட்டாள். அம்மா ஆறு மாதங்கள் பிரக்ஞை இல்லாமல் இருந்தாள். மூன்று பிள்ளைகளும் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்து கட்டிலின் பக்கத்தில் அவள் கையைப் பிடித்துக்கொண்டிருந்த ஒரு நாளில் அவள் செயற்கை சுவாசக் குழாய் அடைக்கப்பட்டது. இப்போது யோசித்துப் பார்த்தால் அம்மா கொடுத்து வைத்தவள் என்றுதான் தோன்றியது. எல்லாப் பிள்ளைகளும் கணவரும் இருந்து சுமங்கலியாகப் போய்ச் சேர்ந்தாள்.

மீண்டும் எல்லோரும் வனிதாவிடம் ‘போ, போய் கொலம்பியாவில் சேரு’ என்றுதான் சொன்னார்கள். வனிதா தயங்கியிருந்து அப்பாவுடன் ஓர் இரவில் மனம்விட்டுப் பேசினாள்.

“போ கண்ணு, ஏன் தயங்கிற?’

“நீங்க தனியா இருப்பிங்களா?”

“இப்ப ஏதம்மா தனிமை? இண்டர்நெட் இருக்கு. ஸ்கைப் இருக்கு. வேண்டியபோது
உலகமெல்லாம் பேச கைத்தொலைபேசி இருக்கு. அப்புறம் என்ன தனிமை?”

“அது போதுமா அப்பா? மனித வாசனை வேண்டாமா அப்பா? உங்களுக்கு முதுகு வலிக்கும் போது தைலம் தேச்சு விட…?”

சிரித்தார். ”சில்லி கேர்ல்! யாரம்மா இப்ப தைலம் தேய்க்கிறாங்க? ரெண்டு மாத்திரை விழுங்கினா முடிஞ்சது. நான் நல்ல உடல் நலத்தோட இருக்கேன். நல்லா சமைச்சுப் போட நல்ல இந்தோனேசியன் மேய்ட் இருக்கா. எனக்கு கிளப் இருக்கு. நண்பர்கள் இருக்காங்க. ஆகவே நீ போய் உன் எதிர்காலத்தப் பார். உன்ன ஒரு சிறந்த ஜர்னலிஸ்டா சி.என். என்.இலியோ, பி.பி.சி.இலியோ, வால் ஸ்ட்ரீட் ஜர்னல்லியோ நான் பாக்கணும்” என்றார்.

அவளுக்கும் அதே கனவுகள்தான். ஆனால்… உண்மையில் எங்கே இருக்கின்றன கனவுகள்? கனவு என்றால் அலங்காரமானது, இன்பமானது என்ற பிம்பம் கற்பனையில்தான் இருக்கிறது. உண்மையில் பெரும்பாலோர் தூக்கத்தில் காண்பது பயங்கரக் காட்சிகள்தான். வாழ்வின் நிச்சயமின்மையும் நம்பிக்கையின்மையும்தான் குழம்பிக் காட்சிகளாக வருகின்றன. வியர்த்து விறுவிறுத்து துடித்து எழுவதுதான் இயல்பு.

அப்படித்தான் வந்தது அப்பாவின் பக்கவாதம். அவர் வனிதாவோடு பேசி, அவளும் உற்சாகமாகப் பிரயாண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த போது, ஒரு மாலையில் கிளப்பிலிருந்து அப்பாவின் நண்பர் பேசினார். அப்பா சரிந்து விழுந்து விட்டார். மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். உடனே வரவும்.

***

அப்பாவுக்கு பக்கவாதம் என்று சொன்னார்கள். குழறிக் குழறிப் பேசினார். வலது பக்கக் கையும் காலும் உணர்ச்சியற்றுப் போயின. இடது பக்கத்தில் உணர்ச்சிகள் இருந்தன. ஆனால் மருத்துவர்கள் அதற்கு மருந்துகள் உண்டு என்றார்கள். கொஞ்ச காலம் ஆனாலும் பேசுவார், நடப்பார் என்றார்கள். அதெற்கெல்லாம் ஏராளமாகப் பணம் வாங்கிக் கொண்டார்கள். அவர்கள் சொல்வதற்கேற்ப சில நாட்களில் அப்பா தெளிவாக இருந்தார். ஓரிரு வார்த்தைகள் பேசினார். அசையவும் புரளவும் செய்தார். அவள் நம்பிக்கைகள் வேர் பிடிக்கத் தொடங்கும்போது மீண்டும் சாய்ந்து விடுவார். ஆறு மாதங்கள் மருத்துவ மனையில் இருந்தார்.

அவர் கொஞ்சம் தெளிவாக இருந்த ஒரு நாளில் வனிதா இடது கையில் பேனாவைக் கொடுத்துப் பேப்பரில் எழுதச் சொன்னாள். கிறுக்கிக் கிறுக்கி எழுதினார். “டேக் மீ ஹோம்!” அன்றோடு வீட்டுக்கு வந்தார் அப்பா. அவளுடைய சுமையானார்.

அப்படியே ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. அடுத்த ஆண்டு போய்விடலாம் என்று தள்ளித் தள்ளிப் போட்ட அமெரிக்கப் படிப்பு எட்டாத பழமாகிக்கொண்டிருந்தது. அக்கம் பக்கத்து உறவுகள் வந்து பார்ப்பதும் குறைந்து போனது. அண்ணன்மார்களும் அக்காவும் தங்கள் தொழில்களிலும் குடும்பத்திலும் வெளிநாடுகளில் கட்டுண்டிருக்க, தனியாளாக இருந்த வனிதாவின் வாழ்வுதான் அப்பாவின் படுக்கைக்கால்களில் கட்டுண்டு கிடந்தது.

செல்வியை ஒரு நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார். பெரிய ஏழைக் குடும்பம். பள்ளிக்கூடம் போய்க் கொஞ்சம் படித்தாள். அவளுக்குத் மேலும் தாதிமைத் தொழிலுக்குப் படிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக முதலில் வேலை செய்து கொஞ்சம் சம்பாதிக்க ஆசைப்பட்டாள். ஆயிரம் வெள்ளியில் குமாஸ்தா வேலை தேடிக் கொண்டிருந்தாள். ‘இன்னும் ஐநூறு கூடத் தருகிறேன், என் அப்பாவைக் கவனித்துக் கொள்’ என அவளை அமர்த்தினாள் வனிதா.

கொஞ்சம் சோம்பேறி; வாயாடி. ஆனால் வேலையில் குறையில்லை. அப்பாவுக்கான சேவைகளைச் செய்வதில் அருவருப்புக் கொள்வதில்லை. தைரியமான பெண். வறுமையில் தனக்குக் கீழ் உள்ள ஆறு சகோதர சகோதரிகளை வளர்த்தெடுத்த அனுபவம் உள்ளவள். வனிதாவுக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிற்று.

இந்த ஐந்து ஆண்டுகளாக வனிதாவின் குடும்பத்தோடு ஐக்கியமாகிவிட்டாள். ஆண்டுக்கு நூறு ரிங்கிட் சம்பள உயர்வு கொடுத்தில் இப்போது அவள் சம்பளம் 1700.00 ரிங்கிட். விசேஷ நாட்களில் அன்பளிப்புக்களும் நிறைய உண்டு.

***

செல்வி வனிதாவின் பக்கத்தில் தரையில் உட்கார்ந்தாள். டிவியைக் கொஞ்ச நேரம் அவளும் வெறித்துப் பார்த்தாள். அவளுக்கும் அந்த நிகழ்ச்சியில் மனம் பதியவில்லை. அவர்களுக்கு அருகிலிருந்த அப்பாவின் ஒலிபெருக்கியில் வெற்றிக் காற்று வந்து கொண்டிருந்தது.

திடீரெனச் செல்வி சொன்னாள்:“நீங்க ஏதாச்சும் வேலைக்குப் போங்களேன்கா. நான் இருந்து ஐயாவைப் பாத்திக்கிறேனே!”

nude56_1lவனிதா அவளைப் பார்த்தாள். செல்வி இப்படிச் சொல்வது இது முதன் முறையல்ல. டிவிக்கு மீண்டும் முகம் திருப்பிச் சொன்னாள்: “எனக்கு வேலைக்குப் போக தேவையொண்ணுமில்ல செல்வி. ஆனா வெளிநாட்டுக்குப் படிக்கப் போகணும். வெளி உலகத்தப் பாக்கணும். ஒரு பத்திரிக்கை நிருபராகணும். இந்த உலகத்த ஆட்டி வைக்கிற சக்திகள்ள நானும் ஒண்ணா இருக்கணும். அதுதான் என் லட்சியம். இப்ப அது இப்படி முடங்கிப்போய் கிடக்குது!”

“அடேயப்பா! நீங்க செய்வீங்கக்கா! நீங்க ரொம்ப கெட்டிக்காரங்க! நீங்க இங்கிலீஷ்ல பேசிறத நான் பாத்திருக்கிறேன். எவ்வளவு அழகா வேகமா பேசிறிங்க! கண்டிப்பா நீங்க உலகத்த ஆட்டிவைப்பீங்க!”

புகழ்ச்சி என்றுமே குளிர்விப்பதுதான். செல்வி எளிய பெண். அவள் கண்ணில் வனிதா பெரிதாகத் தெரிகிறாள். மகிழ்ச்சிதான். அவள் புகழ்ச்சியால் ஆகப்போவது என்ன? என் முடங்கிப்போன உணர்வுகளை அவள் எப்படி உணர முடியும்?

செல்வி கொஞ்சம் பெருமூச்சு விட்டுச் சொன்னாள்: “எனக்குந்தான் வாழ்க்கை முடங்கிப் போச்சிக்கா! குடும்பம் இருக்கிற நிலையில படிப்பையும் நினைக்க முடியில, கல்யாணத்தையும் நெனைக்க முடியில! எங்க வீட்டிலேயும் ஒரு கிழடு இப்படித்தான்
பக்கவாதத்தில கிடக்குது. உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம்தானே. தம்பி தங்கச்சிங்கதான் மாறி மாறிப் பாத்துக்கிறாங்க! அவங்களுக்கும்தான் படிப்பு கெட்டுப்போகுது.”

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பேசாது இருந்தார்கள். வார்த்தைகள் உதவவில்லையானாலும் இருவருக்குமிடையில் பேச்சுக்குள் அடங்காத ஒரு அனுதாபப் பகிர்வு இருந்தது. இதில் எங்களுக்குள் பொதுமை இருக்கிறது. பெரும் சுமையை மனதிலும் வாழ்விலும் தூக்கிச் சுமப்பவர்கள். காலம் கைவிட்ட சக அகதிகள். வனிதா செல்வியின் சகோதரிபோல உணர்ந்தாள். அவர்களுக்கிடையே ஒரு நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

அதற்கு மேல் பேசத் தோன்றாமல் டிவியின் வெற்றுப் பிம்பங்களை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். டிவியில் சிரிப்பு அலையலையாகப் பொங்கிக்கொண்டிருந்தது. நிமிடத்துக்கு ஒரு தரம் கைதட்டல் வெடித்தது. உண்மையானதா? முன்னமே பதிவு செய்து போடப்பட்டதா? டிவியும் பொய்தான். உலகத்தின் பல பொய்களில் அதுவும் ஒன்று. உலகம் இன்பமயமானது, சிரிப்புமயமானது என்ற சித்திரத்தை ஏற்படுத்தும் காட்சிகள். டிவிக்கும் பொய்யழகு.

அப்பாவின் அறையில் அசைவு இருந்தது. ரிமோட் ஒலிபெருக்கியில் கேட்டது. ஏதோ குழப்பமான ஒலிகள். வனிதா செல்வியைப் பார்த்தாள். ‘போய்ப் பாரேன்’ என்ற அர்த்தம். செல்வி அக்கறையில்லாமல் அவசரப்படாமல் சிறிது நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருந்தாள். அப்புறம் மெதுவாக எழுந்தாள். போகு முன் வனிதாவிடம் திரும்பிப் பேசினாள். “நம்ப ரெண்டு கிழமும் செத்தாதான்கா நமக்கு விடிவு!” என்றாள். போனாள்.

அவளிடம் கோபம் கொள்வதா, பரிதாபம் கொள்வதா என வனிதாவுக்குப் புரியவில்லை.

மீண்டும் டிவியில் அவள் கண்கள் வெறித்தன. அறையிலிருந்து ஒலிபெருக்கியில் முனகலும் திணறலுமான சத்தம் வந்து கொண்டிருந்தது. அப்பாவுக்கு மூச்சுத் திணறல் எப்போதும் உண்டு. செல்வி கொஞ்சம் வெந்நீர் கொடுத்து நெஞ்சு தடவி விடுவாள். பிராண வாயுக் குழாயும் உண்டு. தேவைப்பட்டால் மாட்டிவிடுவாள்.

திடீரென ஒலிபெருக்கி அதிர்ந்தது. செல்வியின் விம்மலும் அழுகையும் “அக்கா” என்ற கூச்சலும் ஒலிபெருக்கியில் கேட்டன.

வனிதா சரேலென எழுந்து ஓடினாள். அப்பா சாய்ந்து கிடந்தார். கண்கள் வெறித்துத் திறந்திருந்தன. அசைவற்றுக் கிடந்தார். செல்வி முகத்தை மூடிக்கொண்டு தேம்பிக் கொண்டிருந்தாள்.

செல்வி தன் கைகளை முகத்திலிருந்து அகற்றினாள். வனிதாவைப் பாய்ந்து கட்டிக் கொண்டாள். “அப்பா போயிட்டாருக்கா” என்று உரக்க அழுதாள்.

– ஏப்ரல் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *