சுதந்திரத்தின் விலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 8,953 
 

கொழும்பு நகரில் பிரபல்யமானது அந்த ‘லொட்ஜ்’ அங்கு இருந்தவர்களில் அநேகமானோர் என்னைப்போலவே வட பகுதியிலிருந்து வந்தவர்களாகக் காணப்பட்டனர். வெளி நாட்டிலிருக்கும் தமது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பணம் பெறுவதற்காகச் சிலரும் வெளிநாடு செல்வதற்கு வேண்டிய ஒழுங்குகள் செய்வதற்காக வேறு சிலரும் வெளிநாடுகளிலிருந்து வந்து தமது சொந்த இடங்களுக்குப் போகமுடியாமல் தவிப்பவர்கள் ஒரு சிலருமாகப் பலர்.

லொட்ஜின் மனேஜர் மேசையருகே உட்கார்ந்தபடி எனது

‘டெலிபோன்’ உரையாடலைக் கேட்ட வண்ணம் இருந்தார். நான் ரிசீவரை வைத்ததும் என்னைப்பார்த்து புன்னகை செய்துவிட்டு “என்ன தம்பி விஷயம் சரியே, எந்த விலாசத்துக்கு எப்புடி அனுப்பிறதெண்டு விபரமாய்ச் சொன்னனீரே?” என வினவினார்.

மனேஜருக்கு அறுபது வயதுவரை மதிக்கலாம். நெற்றியிலே பளீரெனத் துலங்கும் விபூதிப் பூச்சும் சந்தனப் பொட்டும் வெள்ளை வேட்டியும் சேட்டுமாக காட்சிதரும் அவரது பேச்சில் எந்த நேரமும் ஒருவித குழைவு தொனிக்கும்.

“ஓம் ஐயா, எல்லாம் விபரமாய்ச் சொல்லிப் போட்டன். நாளைக்குக் காசு அனுப்புறனெண்டு மாமா சொன்னவர்” என்றேன்.

மனேஜர் அமர்ந்திருந்த மேசையின் பின்புறமாக மேலே சுவரில் மாட்டப்பட்டிருந்த சுவாமிப் படங்களிலிருந்து ஊதுபத்தியின் சுகந்தம் காற்றுடன் கலந்து வந்தது.

“தம்பி கண்ட கிண்ட ஏஜென்ட் மாரிட்டைக் காசைக் குடுத்து மாட்டிக் கொள்ளாதையும். அவங்கள் வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கிறதெண்டு சொல்லி காசை வாங்கிக்கொண்டு அந்தரத்திலை விட்டிடுவாங்கள். எங்கட சனம் வெளிநாட்டிற்குப் போற வழியில எவ்வளவு அல்லல் படுதுகள் தெரியுமே….”

என் மனதைப் பயம் கௌவிக் கொண்டது. சிறிது காலத்திற்கு முன் ஜேர்மனிக்குள் கள்ளத்தனமாகப் புகுவதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் பொருட்களோடு பொருட்களாக இருந்து, லொறிகளில் பயணம் செய்த இலங்கைத் தமிழர்கள் விறைத்து மரணமானதும், இத்தாலிக்கு தஞ்சம் நாடிச் சென்றவர்கள் மத்திய தரைக் கடலில் கப்பலிலிருந்து படகுகளில் இறக்கப்பட்டு பயணஞ்செய்தபோது பெருந்தொகையானோர் மூழ்கி இறந்ததும் நினைவில் வந்தன.

நான் யோசனையோடு எனது அறையை நோக்கி நடந்தேன். பக்கத்து அறையிலும் எனது வயதையொத்த இளைஞன் ஒருவன் தங்கியிருந்தான். வெளிநாடு செல்வதற்காக ஏஜென்ட் ஒருவனிடம் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்துவிட்டு வெகு காலமாகவே எதுவுமே நடக்காமல் ஏஜென்டின் முன்னும் பின்னுமாக அலைந்து கொண்டிருக்கிறான்.

லொட்ஜ் மனேஜர் அங்கு தங்கியிருந்த எல்லோரது விபரங்களையும் அறிந்திருந்தார். தேவைப்பட்டபோது அவர்களுக்கு ஆலோசனை கூறவும் செய்தார். எந்த எந்த வேலையை யார்யாரைப் பிடித்து எவ்வாறு இலகுவாகச் செய்து முடிக்கலாம் என்ற நெளிவு சுளிவுகளும் அவருக்குத் தெரிந்திருந்தது.

நான் லொட்ஜுக்கு வந்த அன்று காலையிலேயே எனது அறிமுக அட்டை, வவுனியாவில் இராணுவத்தினர் கொடுத்த ‘பாஸ்’ யாவற்றையும் வாங்கிச்சென்று பொலிசில் பதிவு செய்து, நான் அங்கு தங்குவதற்கு வேண்டிய அனுமதியைப் பெற்றிருந்தார். ஆனாலும் அநாவசியமாக கொழும்பில் சுற்றித் திரிவதைத் தவிர்க்கும் படியும் வெளியே எங்காவது செல்வதானால் தன்னிடம் கூறிவிட்டுச் செல்லும்படியும் என்னிடம் கூறியிருந்தார்.

மனேஜர் மூலந்தான் ஏஜன்ட் நம்பிக்கையானவரா, பணம் கொடுக்கலாமா எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

இரவு படுக்கைக்குத் தயாரானபோது வெளியே அறைக்கதவை யாரோ தட்டினார்கள். திறந்தபோது இரண்டு பொலிசார். மனது திக்திக்கென்று அடித்துக் கொண்டது.

எனது அனுமதியைக் கூடப் பெறாமல் அவர்கள் உள்ளே நுழைந்து அறையைச் சோதனை செய்யத் தொடங்கினர்.

ஒருவன் எனது அறிமுக அட்டையை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு ஏதோ சிங்களத்தில் முணுமுணுத்தான். மற்றவன் அருகே வந்து கொச்சைத் தமிழில் “வாங்க பொலிசுக்கு, விசாரிக்க வேணும்” என்றான்.

அப்போது லொட்ஜ் மனேஜர் அவசர அவசரமாக அங்கு வந்தார். “இவரைத்தான் முறைப்படி பொலிசில் பதிவு செய்திருக்கிறேனே…. பின்பு ஏன் அழைத்துச் செல்கிறீர்கள்?” எனச் சிங்களத்தில் வாதாடுவது எனக்குப் புரிந்தது.

அவர்கள் விடுவதாயில்லை.

“தம்பி பயப்பிடாதையும்….. உவங்கள் உப்பிடித்தான். காசு புடுங்கிறதுக்கு வெருட்டுவாங்கள். நீர் போம், நான் எல்லாம் கவனிச்சுக் கொள்ளுறன் ”என இரகசியமாக என் காதுக்குள் கிசுகிசுத்தார் மனேஜர்.

லொட்ஜின் வெளிவாசல்வரை பொலிசார் என்னை அழைத்து வந்தனர். அவர்களில் ஒருவன் திரும்பிச் சென்று மனேஜரிடம் சிறிது நேரம் ஏதோ கதைத்துவிட்டு வந்தான்.

நல்லவேளையாக பொலிஸ் ஸ்டேசனில் விசாரணை நான் எதிர்பார்த்த அளவுக்குக் கடுமையாக இருக்கவில்லை. எனக்குச் சிங்களம் தெரியாததால் தமிழ் தெரிந்த ஒரு பொலிஸ்காரரே விசாரணை செய்தார். வழக்கம்போல பெயர், விலாசம், குடும்பப்பின்னணி, போராளிகளோடு தொடர்பு இருக்கின்றதா என்ற கேள்விகளே கேட்கப்பட்டன. அந்தப் பொலிஸ்காரர் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டார்.

“நீங்க பயங்கரவாதி இல்லை என்று எங்களுக்குத் தெரியும். நீங்க வெளிநாட்டுக்குப் போகத்தான் கொழும்புக்கு வந்திருக்கிறீங்க. உங்களைப் போல பொடியங்களைப் பார்க்க எங்களுக்குப் பாவமாயிருக்கு. நீங்க அவங்கட கரச்சல் தாங்கமாட்டாமத்தான் வெளிநாட்டுக்குப் போறீங்க”

பொலிஸ்காரர் கூறுவதெல்லாவற்றிற்கும் நான் ஆமோதிப்பது போலத் தலையாட்டிக் கொண்டிருந்தேன். எப்படியாவது இவர்களிடமிருந்து விடுபட வேண்டும்.

“உங்களைப்போல அப்பாவிகளைப் பயங்கரவாதிகள் சும்மா விடமாட்டாங்க. ‘பங்கர்’ வெட்டச்சொல்லுவாங்க. பணம் கேட்பாங்க. அவங்க சொல்றதெல்லாம் நீங்க செய்யவேண்டியிருக்கும். என்ன நான் சொல்லிறது சரிதானே”

நான் மௌனம் சாதித்தேன்.

“என்ன பேசாமல் இருக்கிறீர் ? நீர் என்ன பயங்கரவாதிகளுக்கு சப்போட்டா? அந்த மாதிரித்தான் தெரியுது.”

பொலிஸ்காரனின் பேச்சு திசை திரும்பியது. அவரது அபிப் பிராயத்திற்கு மறுப்புத் தெரிவித்தால் பயங்கரவாதி எனப் பட்டம் சூட்டிவிடுவார் போலிருந்தது.

“என்ன நான் சொல்லிறது சரிதானே. அவங்க பங்கர் வெட்டச் சொன்னால் வெட்டத்தானே வேணும். பணம் கேட்டால் கொடுக்கத்தானே வேணும். உமக்கு அப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்கும்தானே. ஆனால் நீங்க பயங்கரவாதியில்லை”

“ஓமோம் நீங்கள் சொல்றது சரி” என்றேன் தடுமாற்றத்துடன்.

“உண்மையை ஒத்துக்கொள்ளுறதுக்கு ஏன் இப்படித் தடுமாறுகிறீர்? நாங்கள் எங்களுடைய கடமையைத்தானே செய்யிறோம். உம்மைப் போல இளைஞர்களைக் கஷ்டப்படுத்திறது எங்களுக்கு விருப்பமில்லை. விசாரணை செய்யவேண்டியது எங்களுடைய கடமை. நீங்க பயங்கரவாதி இல்லை என்று எங்களுக்கு நல்லா தெரியும்”

அந்தப் பொலிஸ்காரர் தனது அபிப்பிராயத்தைக் கூறிக்கொண்டே ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வந்ததும் என்னை விடுதலை செய்வதாகக் கூறி, தான் எடுத்த குறிப்பின் கீழ் எனது கையொப்பத்தைப் பெற்றுக் கொண்டார்.

அன்றிரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தின் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்தேன். கடந்த ஒருவருடகாலத்தில் எவ்வளவோ சீரழிவுகளை எதிர்நோக்கவேண்டி எற்பட்டுவிட்டது.

இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற ‘ரிவிரஸ’ நடவடிக்கை மேற்கொண்டபோது ஷெல் தாக்குதல்களும் விமானத்திலிருந்து சரமாரியாகக் குண்டுகளும் வீழ்ந்தபோது, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சனங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியபோதுதான் நானும் எனது வயோதிபத் தாயாரும் எனது சகோதரியும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினோம். கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெய்யிலிலும் எங்கே போக்கிடம் என்று தெரியாமல் சனத்தோடு சனமாய் கால் போகிற போக்கில் நடந்து களைத்து, கடலிலும் தரையிலும் பயணஞ்செய்து கிளிநொச்சியை அடைந்து அகதிகளாய் காலங்கழித்தபோதுதான் அங்கும் இராணுவ நடவடிக்கை தொடங்கியது. மீண்டும் ஷெல் அடி, பொம்பர் தாக்குதல்கள்…. சனங்கள் மாங்குளத்துக்கு ஓட, நாங்களும் ஓடினோம்.

அகதிகளாய் எத்தனை நாளைக்குத்தான் காலங்கடத்துவது. அடுத்தவர் வீட்டுக் கோடிகளில் தஞ்சம் புகுவது. ஊர் மாறுவது. அம்மா அபுதாபியில் இருக்கும் தனது சகோதரனுக்கு எமது நிலைமையை விளக்கி உருக்கமாகக் கடிதம் எழுதினார். அவர் உடனே என்னை எப்படியாவது கொழும்புக்கு வந்து தொடர்பு கொள்ளும்படியும் வெளிநாடு செல்வதற்கு தான் உதவுவதாகவும் பதில் எழுதியிருந்தார்.

அம்மாவிடம் கடைசியாக இருந்த காதணிகளை விற்று நான் மட்டும் தனியனாய் கொழும்பு வந்து சேர்ந்தேன்.

நான் கொழும்புக்குப் புறப்பட்டபோது, அம்மா என்னைக் கட்டிப் பிடித்து அழுத அழுகை என் நெஞ்சைப் பிழிந்தெடுத்தது. “என்ரை ராசா நீ வெளியில போனாத்தான்ரா எங்களுக்கு ஒரு வழிபிறக்கும். இங்கை இருந்து கொண்டு ஒண்டும் செய்யேலாது. உன்ரை தங்கச்சியையும் நீதான் கரைசேர்க்க வேணும்” எனக்கூறி வழியனுப்பியபோது, எனது மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் புறப்பட்டேன்.

மாமா அனுப்பும் பணம் நாளை வந்துசேரும். முதலில் அனுப்பும் பணத்தை உடனே மாங்குளத்தில் இருக்கும் அம்மாவுக்கு அனுப்பி, அம்மாவினதும் தங்கையினதும் அகதிவாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என என் மனம் துடிதுடித்துக் கொண்டிருந்தது. அம்மா ஒவ்வொரு நிமிடமும் எனது கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பாள்.

கைதிக் கூண்டுக்குள் எனக்கு நித்திரை வரவில்லை. எப்போது விடியுமெனக் காத்திருந்தேன். நிலையப்பொறுப்பதிகாரி வந்தபின்பு தான் எனக்கு விடுதலை கிடைக்கும்.

ஆனால் நிலையப்பொறுப்பதிகாரி வந்து வெகுநேரமாகியும் என்னை விடுதலை செய்யவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் என்மேல் வழக்குத் தொடரப்போகிறார்களாம்.

எனக்குத் தலை சுற்றியது. நான் என்ன குற்றம் செய்தேன் என்பது தெரியவில்லை. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பலர் வழக்குத் தொடரப்படாமல் வருடக்கணக்கில் சிறையில் வாடுவதுபோல நானும் வாடவேண்டியது தானா?

எனது எதிர்காலம், என்னை நம்பியிருக்கும் எனது தாய், சகோதரி, இவர்களின் எதிர்காலம் எல்லாம் சூனியமாகிவிட்டதுபோல் தோன்றியது.

நான் சற்றேனும் எதிர்பார்க்காதவகையில் சட்டத்தரணி ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் லொட்ஜ் மனேஜருடன் கதைத்துக் கொண்டிருந்தது ஞாபகத்தில் வந்தது. மனித உரிமைகள் பாதுகாப்பு நிறுவனத்திலிருந்து தான் வந்திருப்பதாகக் கூறினார்.

என்னைச் சந்திப்பதற்கு முன்னர் எனது விடுதலைக்காக நிலையப் பொறுப்பதிகாரியைத் தான் சந்தித்ததாகவும் எனக்கு எதிராக அவர்கள் தயாரித்திருக்கும் குற்றப் பத்திரிகையை வாசித்ததாகவும் கூறினார்.

“தம்பி, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பொலிஸார் குற்றப்பத்திரிகை தயாரித்திருக்கிறார்கள். இரண்டு குற்றங்கள் உம்மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. ஒன்று பயங்கரவாதிகளுக்கு ‘பங்கர்’ வெட்டிக் கொடுத்திருக்கிறீர். இரண்டாவது பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை நீர் அறிந்திருந்தும் இதுவரை காலமும் அதனைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தாமல் அவர்களுக்கு உடந்தையாக இருந்திருக்கிறீர்”

“ஐயா சத்தியமாய் நான் ‘பங்கர்’ வெட்டவுமில்லை, உடந்தையாய் இருக்கவுமில்லை” எனப் பதறினேன்.

“பதற்றப்படாதையும் தம்பி, நீர் ‘பங்கர்’ வெட்டினதாக வாக்குமூலம் கொடுத்து, கையொப்பம் போட்டிருக்கிறீர்” என்றார் சட்டத்தரணி தாழ்ந்த குரலில்.

“ஐயா நீங்கள்தான் இதற்கு ஏதாவது வழி செய்யவேணும்”

“கைது செய்யப்படுபவர்களை இருபத்திநாலு மணித்தி யாலத்திற்கு மேல் வைத்திருக்க சட்டம் இடங்கொடுக்காது. அதனால் உம்மை இன்று ‘கோட்’டில் நீதவான் முன்பாக ஆஜர்செய்து அவரது உத்தரவின் பேரில் ரிமான்டில் வைக்கப்போகிறார்கள்”

“நான் நிரபராதி என்பதை நீங்கள்தான் ஐயா நீதவானுக்குச் சொல்லவேணும்” என்றேன் கலக்கத்துடன்.

“நான் உமக்காக வாதாடலாம். ஆனாலும் எழுத்து மூலமான ஒப்புதல் வாக்குமூலம் பொலிசாரிடம் இருக்கும்போது நீதவான் உம்மை‘ரிமான்டில்’ வைப்பதற்குத்தான் உத்தரவிடுவார், பொலிசாரும் லேசில் விடமாட்டார்கள்”

“ஐயா நான் எப்படியும் இந்தச் சிக்கலிலிருந்து விடுபடவேணும். இதற்கு நீங்கள்தான் ஒருவழி செய்யவேணும்” எனது குரல் தழதழத்தது.

அவர் தயங்கினார். ஏதோ சொல்வதற்கு முயல்கிறார் என்பது புரிந்தது. ஆனாலும் எதுவுமே பேசவில்லை. சுற்றியிருந்தவர்களை நோட்டம் விட்டுவிட்டுப் புறப்பட்டார்.

“ம்….. நான் நாளை வருகிறேன்”.

அப்போது என்னுடன் தங்கியிருந்த சக கைதி கூறினான், “இவங்கள் எல்லாரும் கூட்டுக் கள்ளர். உம்மட்ட காசு இருந்தா எடுத்து விடும்; வெளியில போகலாம்”

எனக்குப் பகீரென்றது. உயிர்கள்….. உணர்வுகள்…… உடைமைகள்….. உறைவிடங்கள் இப்படி எத்தனை எத்தனை இழப்புகளுக்கு இன்று மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குள் ‘எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம்’ என இயங்கிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

அம்மாவினதும் தங்கையினதும் அகதிவாழ்க்கையை நீக்குவதற்கு மாமா அனுப்பும் பணம் இன்றோ நாளையோ வந்துவிடும்.

என் இரத்தம் கொதித்தது. நெஞ்சு பற்றி எரிந்தது, உரோமக் கால்கள் குத்திட்டன. கைதிக் கூண்டின் கம்பிகளைப் பற்றி உலுக்கியபடி விரக்தியில் அலறினேன், “இந்தச் சிறைக் கூண்டில் இருந்து மட்டுமல்ல…. இந்த நாட்டிலை இருந்தும் நான் வெளியிலை போகவேணும்….. அதுக்கு என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை”

அப்போது அந்தக் கைதி என்னை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தான்.

“என்னண்ணை சிரிக்கிறியள்? ” கோபத்துடன் கேட்டேன்

“நாட்டைவிட்டு வெளியிலை போறது இதற்குத் தீர்வாகாது தம்பி” என்றான் அவன்.

“ அப்ப என்ன செய்யச் சொல்லுறியள்?”

“உம்மேல என்ன குற்றம் சாட்டப்பட்டிருக்கு என்று யோசிச்சுப் பாரும்; முள்ளை முள்ளாலதான் எடுக்கவேணும்” அவனது கூற்றில் நிதானம் இருந்தது.

-தினக்குரல் 1997

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *