தீர்க்க முடியாத புதிர்

2
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: December 29, 2023
பார்வையிட்டோர்: 3,671 
 
 

“ஓகே, நம்முடைய நிகழ்ச்சி நிரலில் அடுத்த ஐட்டம் என்ன?”

“AP6745 புதிர் ஒன்றைக் கண்டுபிடித்து நம் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். அதற்கு தீர்வு காண வேண்டும்.”

“புதிர் என்ன?”

“என் வீட்டிலிருந்து மது பார் ஐந்து நிமிட நடை தூரம். ஆனால் மது பாரிலிருந்து என் வீடு 35 நிமிட நடை தூரம்.”

“எப்போது எழுதப்பட்டது இந்தப் புதிர்?”

“இது முதன் முதலில் 1999 ஆம் ஆண்டில், அதாவது சுமார் நாற்பத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. பின்னர் அது இன்னும் முப்பது ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வெவ்வேறு ஊடகங்களில் வெளியாகியது. நிறைய மனிதர்கள் இந்தப் புதிரை சொல்லியிருக்கிறார்கள்.”

“அது சரி. மது பார் என்றால் என்ன?”

“அது மனிதர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கவும், அரட்டை அடிக்கவும் செல்லும் இடம்.”

“இந்தப் புதிரின் ஆசிரியர் மது பாரில் இருந்து திரும்பி வர அதிக நேரம் எடுத்ததாக கூறுகிறார். ஏன்?”

“அது தான் தெரியவில்லை.”

“திரும்பும்போது அவர் வேறு வழியில் சென்றாரா?”

“அதெல்லாம் இல்லை. அவர் ஏன் வேறு வழியில் செல்ல வேண்டும்?”

“அவர் மது பாரில் இருந்த போது அவரது வீடு இடம் மாறி நகர்ந்து போனதா?”

“அந்த கோணத்தை நாங்கள் ஆராய்ந்து விட்டோம். வீடு என்பது ஒரு உயிரற்ற பொருள். அதனால் நகர முடியாது.”

“ஒரு வேளை மது பார் நகர்ந்து விட்டதோ?”

“மது பாரும் வீட்டைப் போல் தான். நகர முடியாது.”

“ஒருவேளை இந்தப் புதிரின் ஆசிரியர் இதில் தவறு செய்து விட்டாரோ?”

“இந்தப் புதிர் பல வருடங்களுக்கு நிலைத்து நின்றது. இது ஒரு தவறாக இருக்கவே முடியாது.”

“இப்பொழுது நாம் என்ன செய்வது?”

“இது மிகவும் கடினமான ஒன்று. நம்முடைய நிபுணர்களுக்கு இதை அனுப்பிக் கேட்போம்.”

அடுத்த நாள், @PuzzleMasterRobots என்னும் குழுவிற்க்கு செல்ல வேண்டிய புதிர் தவறுதலாக பூமியில் உள்ள ஒவ்வொரு ரோபோவுக்கும் சென்றது. மனித குலம் அழிந்து பதினோராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, பூமியில் மிஞ்சியிருந்த ரோபோக்களின் மின் சுற்றுகள் எல்லாம் தீப்பிடித்து எரிந்தன. ஒரு சாதாரண புதிரின் தீவிரத்தைத் தாங்க முடியாமல்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “தீர்க்க முடியாத புதிர்

  1. மனிதர்கள் இல்லாத ஓர் உலகைக் கதாசிரியர் கற்பனை செய்திருக்கிறார்.

    ஒரு புதிர் கேள்விக்கு ரோபோக்களால் ஏன் விடை காண முடியவில்லை என்பதைக் கதாசிரியர் வாசகர்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறார். இது ஒரு நல்ல உத்தி.

    ரோபோக்கள் மது அருந்துவதில்லை என்பதால், மது அருந்திய மனிதர்கள் போதையில் தள்ளாடியவாறு நடந்து வர நேரம் ஆகிறது என்பதை ரோபோக்களால் கண்டு பிடிக்க முடியாமல், அந்தப் புதிரை ஆராய்ந்த ரோபோக்களின் மின்சுற்றுக்கள் தீப்பிடித்து எரிந்து விடுகின்றன என்று கதையை முடிக்கிறார்.

    ஆனால் கதாசிரியர் இதை நேரடியாகக் கூறாமல் நுணுக்கமாக விட்டு விடுகிறார்.

    இருந்தாலும், மதுவில் உள்ள இரசாயனங்கள் மனித மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து ரோபோக்கள் ஆராய்வதாக ஒரு சில வரிகள் சேர்த்திருக்கலாம். அத்துடன் மனிதர்கள் தயாரித்த மது வகைகள், மதுபான தயாரிப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததைப் போலவும், இதனால் ரோபாக்களால் அந்தப் புதிரைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதாக ஒரு கருத்தைக் கொண்டு வந்திருந்தால் தர்க்கரீதியில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    இருந்தாலும் இதுவொரு நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    1. மிக்க நன்றி விஜய், கதையைப் படித்து உங்கள் விரிவான கருத்தைத் தெரிவித்ததற்க்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *