ஆண்ட்ராய்டும் கடவுளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 2,646 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஒரேயொரு அப்ளிகேஷன், நச்சுன்னு சும்மா உலகத்தை அசைச்சுப் பார்க்கிற மாதிரி செஞ்சுட்டேன்னா, கோடீஸ்வரன் தான், அதுக்கப்புறம்,,,, நோ கோடிங், நோ வேலை, நார்வே ல பெரிய வீடு வாங்கிட்டு செட்டில் ஆயிட்டு, ஒன்லி கொஞ்சல்ஸ் ஆஃப் அம்மு” என அம்முவின் கன்னத்தைக் கிள்ளினேன்.

ஒவ்வொரு சீசனுக்கும் ஒன்னு சொல்லு, போன வாரம் சினிமா ஸ்கிரிப்ட் பத்திப் பேசின, அதுக்கு முந்தின வாரம் ஷார்ட் ஃபிலிம் எடுக்கப்போறேன்னு கேமரா வாங்கின, இன்னக்கி ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன், ரோம்ல வேலைக்கிடைக்கிறதே குதிரைக்கொம்பு, கிடைச்ச வேலையை, அடக்கிக்கிட்டு ஒழுங்காப்பாரு, எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும்”

அம்மு சொல்றதும் உண்மைதான். நாய் எல்லாத்துலேயும் வாயை வைக்கிற மாதிரி, கோடையில் ஒரு லட்சியம் உருவாகும், அது இலையுதிர்காலத்தில் மறைந்து, குளிருக்கு இதமாய் வேற ஏதாவது ஒன்று தோன்றும். திரும்ப விட்ட குறை தொட்ட குறையாய் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் ஒரு சுற்று வரும். இருந்த போதிலும், இந்த ஆண்ட்ராய்ட் மென்பொருள் உருவாக்கம், எளிதில் நடக்கும் என்று தோன்றியது. எனக்கு கொஞ்சம் ஜாவா தெரியும், ஒரு பத்து நாள் ஆண்ட்ராய்டு இணையப் புத்தகங்களையும், எடுத்துக்காட்டுகளையும். முழுமூச்சாய் படித்தால், அடிப்படைத் தெரிந்து விடும். எந்த விசயத்திற்கு அடித்தளம் பலமாக இருந்தால், அதன் மேலே ஏறி கதகளியே ஆடிடலாம்.

பத்துநாட்கள் என்பது ஒரு மாதம் ஆனபின்னரும், நுனிப்புல் மேயாமல் முழுமையாகக் கற்றுக்கொண்டேன். இப்பொழுது என்ன புதிதாக வடிவமைக்கலாம், வங்கிகளுக்கான ஏதேனும் ஒன்றைச் செய்யலாமா, விளையாட்டு நிரலி ஏதேனும், அரட்டை சம்பந்தப்பட்டவை ம்ஹூம் ஒன்றுமே உருப்படியாகத் தோன்றவில்லை.

‘இன்னக்கி மனசுக்கு சாந்தமா இருந்துச்சுடா,” அம்மு மாலை நடைப்பயிற்சியையும், அத்துடன் அவளுக்கான கடவுள் வேண்டுதலையும் முடித்துவிட்டு வருகிறாள். எங்கள் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சிறிய குன்று இருக்கின்றது. அதில் ஏறுவதற்கான நடைபாதையும் உண்டு. அம்மு தினமும் அங்கு போய் எந்த இடத்தில், அவளுக்கு சாந்தமான உணர்வு கிடைக்கிறதோ, அந்த இடத்தில் அமர்ந்து, கொஞ்சம் தியானம் செய்துவிட்டு வருவாள். அவளின் பக்தி, மனிதம் மற்றும் இயற்கை சார்ந்தது.

“அந்த ஹில் முழுசுமே ஒரு பவர் இருக்குடா, ஐ கேன் ஃபீல் த காட்லினெஸ்”

கடவுள் என்றதும் ஒரு பொறித்தட்டியது. ஏன் கடவுள் தொடர்பான மென்பொருள்கள், எழுதக்கூடாது. கூகுள் பிளேயில் தேடிப்பார்த்தால், ஏகப்பட்ட மதம் சார்ந்தவைகள்தாம் இருந்தன. தினம் ஒரு பைபிள் வாசகம் சொல்லுவதற்கு, மெக்கா திசை கண்டுபிடிப்பதற்கு, ராகுகாலம் எமகண்டம் சொல்லுவது !!! ஜோசியம் சொல்லுவது, அவை எல்லாவற்றையும் விட, பேய், பிசாசு இருந்தால் கண்டுபிடிக்க உதவுபவை என சொல்லிக்கொண்டவைகள் கூட இருந்தன.

“God Detector, God Finder, God Locator” என்று தேடிப்பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை. நானே கடவுளைத் தேட முடிவு செய்தேன். மேம்பட்ட ஆண்ட்ராய்ட் கைபேசிகளில், மின்காந்தப் புலங்களை கண்டறியவும், வேறுசில புலனறிவுக் கருவிகளும் உள்ளடக்கமாகவே வருகின்றன. இணையத்தில் ஏற்கனவே பேய் பிசாசு கண்டுபிடிக்க எழுதியிருந்த எடுத்துக்காட்டு நிரலியை அடிப்படையாக வைத்து மென்பொருளை எழுத ஆரம்பித்தேன்.

வாடிகன், உள்ளிட்ட ரோமின் பிரபல தேவாலயங்களிலும், மசூதிகளிலும் கிடைக்கும் அதிர்வெண், அலைவரிசைகள், தமிழ்நாட்டில் பிரபலமான கோவில்களிலும், பிரபல சாமியார்கள் கூடும் இடங்களிலும் அதே விபரங்களை என் நண்பர்களை வைத்தும் எடுத்துக்கொண்டேன். எலக்ட்ரானிக் குரல் நிகழ்வுகள், மின்காந்த சூழல், ஆற்றல் ஆகியனவற்றை, அடிப்படையாக வைத்தும், வெவ்வேறு மதங்களின் நல்ல நேரம், கெட்ட நேரம், இருப்பிடம் ஆகியன வைத்து, ஓர் ஒழுங்கற்ற வகையில், கடவுள் இருக்கிறது எனக் காட்டக்கூடிய வகையில் ஓர் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை தயார் செய்தேன். கிட்டத்தட்ட, வாயில் இருந்து லிங்கம் எடுக்கக்கூடிய வகையில் உட்டாலக்கடியான வேலையாக இருந்தாலும், மக்களின் ஆர்வக்கோளாறினால் இது நன்றாக வியாபாரம் ஆகும் என நம்பினேன்.

இப்பொழுது ஆய்வு செய்துப் பார்த்துவிட வேண்டியதுதான் அம்மு, தனக்காக வைத்திருக்கும் தியான அறையில், அவள் தியானிக்கும்பொழுது, மெல்ல எனது கைபேசியில் தரவிறக்கி வைத்திருந்த “கடவுளைத் தேடி” மென்பொருளுடன் உள் நுழைந்தேன். கரு நீல நிறத்துடன், கணினித் திரை சினுங்கியது, கடவுள் இருக்கின்றாராம். கடவுளுக்கு நீல நீறம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதால், நான் வடிவமைத்த கடவுளின் அலைவரிசை கிடைக்கும் பொழுது எல்லாம் நீலம் நீறம் திரை முழுவதும் விரவும்.

அம்முவுடன் மறுநாள் நானும், அந்த மலைக்குன்றிற்கு சென்றேன், கணினித் திரை நீல நீறத்திலேயே இருந்தது. அந்த மலை முழுவதும் கடவுளின் ஆதிக்கம் தான் போலும்.

மனம் மகிழ்ச்சியில் குதுகலித்தது. கடவுள் இருக்கின்றாரா இல்லையோ !!! கடவுள் சார்ந்த விசயங்களில் என் அப்ளிகேஷன் ஒளிர்கிறது. ஏதாவது சாமியாரிடம் பேரம் பேசி, அவரை வைத்து மார்க்கெட்டிங் செய்து, டாலர்களில் சம்பாதித்து விட வேண்டும். நெருங்கிய நண்பர்களிடம் தரவிறக்கி சோதனை செய்துப் பார்க்க மென்பொருளை அனுப்பி வைத்தேன். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை வாடிகனில் சோதித்துப் பார்க்கக் கிளம்பினேன். கோடையாதலால் காலையிலேயே சுள்ளெனெ வெயில் அடித்தது. அரைக் கிலோமீட்டர்களுக்கு நீண்ட வரிசை, தண்ணீர் தாகம் அடித்தது. “கடவுளைத் தேடி” மென்பொருள் இன்னும் ஒளிரக் காணோம். எனக்கு முன்னே ஒரு வயதான அம்மணி, மிக பக்தியுடன் புனித பீட்டர் தேவாலயத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்து சிரிக்கவும், வாடிகன் எல்லையை மிதிக்கவும் எனது கைபேசி நீலநிறத்தில் ஒளிரவும் சரியாக இருந்தது. அந்த அம்மணியிடம் கூச்சப்படாமல் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்துக் கொண்டேன்.

அனைவரின் பார்வையும் தேவாலயத்தின் மாடத்தின் மேலேயேத் தான் இருந்தது. போப்பாண்டவர் வந்து காட்சித் தருவார் என, மாடத்தையும் கைபேசியையும் மாறி மாறிப்பார்த்துக் கொண்டிருந்தேன். அவரும் வந்தார், கைபேசியைப் பார்த்தேன், நீலநிறம் சுத்தமாக காணாமல் போய் இருந்தது.

நிரலியில் ஏதாவது பிழை இருக்கலாம், வெப்பநிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டேனா என ஐயம் வந்தது.

அருகே அருகே இருந்த வெவ்வேறு சர்ச்சுகளிலும் நீல நிறம் கிடைக்கவில்லை. ரோமில் இருந்த மிகப்பெரும் மசூதியிலும் கிடைக்கவில்லை. ஹரே கிருஷ்ணா கோவிலிலும் சீக்கிய குருத்வாராவிலும் சோறு போடும் இடத்தில் மட்டும் நீல நிறம் கிடைத்தது.

மாலையில் சில நண்பர்களிடம் இருந்து மின்னஞ்சல்கள் வந்திருந்தன. எந்தக் கோவிலிலும், சர்ச்சிலும், மசூதியிலும் நீல நிறம் கிடைக்கவில்லை. ஆனாலும் ஒரு நண்பன், கோவிலுக்குப் போய்விட்டு, அப்ளிகேஷனை ஓடிக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு, மருத்துவரைப் சந்திக்கையில் ஒளிர்ந்ததாக சொன்னான். அந்த மருத்துவர், அவனின் குழந்தையை ஒரு நோயில் இருந்து மீட்டவர். எனது மூளையில் நீலநிறம் படர்ந்தது.

அம்மு மளிகைக் கடைக்குப் போய் இருந்தாள், எனது கைபேசி எடுத்துக் கொண்டு அவளின் தியான அறைக்கு சென்றேன், ஒளிரவில்லை. அவள் வழக்கமாகப் போகும் குன்றிற்கு போனேன், நீலநிறத்திற்கான சுவடே இல்லை. திரும்பும் வழியில், ரொசாரியோ வைச் சந்தித்தேன். அவர், அகதிகளுக்காகப் போராடும் வாதாடும் ஒரு வழக்கறிஞர். புரிந்திருப்பீர்கள்., நீல நிறம் ஒளிர்ந்தது. பக்கத்து வீட்டு குழந்தை, என்னைப் பார்த்தால் வாலை குழைக்கும் நாய், எதிர்த்த வீட்டுப் பாட்டி என இவர்களைக் கடக்கும்பொழுதெல்லாம் நீலநிறம் கிடைத்தது. வீட்டிற்கு வந்ததும் அம்மு கட்டி அணைத்துக் கொண்டாள். நீலநீறம் ஒளிர்ந்தது.

ஒருப்பக்கம் என்னை நினைத்து பெருமையாக இருந்தது. ஏதோ ஒரு வகையில் கடவுளைக் கண்டுபிடித்துவிட்டேன் அல்லவா !! “கடவுளைத் தேடி” மென்பொருள் திட்டம் மிகப்பெரும் தோல்வி. மென்பொருளை அவரவர் கைபேசிகளில் இருந்து நீக்கிவிடுமாறு நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன். இதை நான் விற்கப்போவதில்லை. மடிக்கணினியில் இருந்த அத்தனை நிரலியையும் அழித்துவிட்டு, கைபேசியில் இருந்த கடைசி பிரதியையும் அழிக்க எத்தனிக்க முனைகையில் என்னிடத்திலும் நீலநிறம் ஒளிர்ந்தது.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *