கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 36,292 
 

செல்லதுரை மிகவும் தெளிவாக எந்தவித பதற்றமும் இல்லாமல், சந்தோஷமாக முகமலர்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தால் அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனத் தெரிந்துவிட்டது. இருப்பினும் அதை உறுதி செய்துகொள்ளலாம் என, ”உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா?’ எனக் கேட்டேன். ”இன்னும் இல்லங்க…” என வருத்தமாகச் சொன்ன செல்லதுரையை நாங்கள் பொறாமையுடன் பார்த்ததில் இருந்தே எங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். ‘நாங்கள்’ என்றால் மனோஜ் ஆகிய நான் மற்றும் திலீப்.

நானும் திலீப்பும் சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் டீம் லீடராக இருக்கிறோம். இருவருக்கும் திருமணம் ஆகி ஐந்தாறு வருடங்கள்தான் ஆகின்றன. திருமண பந்தத்தைத் தொடர்ந்து காப்பாற்ற நிறையப் பொய்கள் சொல்லவேண்டியிருக்கிறது.

‘இன்னைக்கி சாம்பார் சூப்பரா இருந்துச்சு!’

‘உன் ஃப்ரெண்ட்ஸுங்க ஒருத்திகூட உன் அளவுக்கு அழகா இல்லை.’

‘எங்க அம்மாவுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு.’

‘இப்ப நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன். அப்புறம் போன் பண்றேன்.’

‘இந்த டிரெஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க.’

‘தோ…. வீட்டுக்குக் கிளம்பிட்டே இருக்கேன்.’

எவ்வளவு பொய்கள்… எவ்வளவு பொய்கள்? இரண்டு நாட்கள், பொய்யில் இருந்து விடுபட நினைத்தோம். ‘ஆபீஸ் வேலையாக பெங்களூரு செல்கிறோம்’ எனக் கடைசியாக ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு பாண்டிச்சேரி வந்திருக்கிறோம்.

ஒரு செல்லகதை

செல்லதுரையை நாங்கள் இப்போதுதான் முதன்முதலாகச் சந்திக்கிறோம். செல்லதுரை, எங்கள் கம்பெனி புராஜெக்ட் மேனேஜர் வினோத்தின் நண்பன். நாங்கள் பாண்டிச்சேரி செல்கிறோம் எனச் சொன்னவுடன் வினோத், ‘என் ஃப்ரெண்டு செல்லதுரை பாண்டியிலதான் சிவில் இன்ஜினீயரா இருக்கான். நான் அவன்கிட்ட சொல்றேன். உங்களை கூடவே இருந்து கவனிச்சுப்பான்’ என அனுப்பிவைத்தான். இதோ எங்கள் முன்னால் செல்லதுரை.

”பொண்ணு பார்த்துட்டு இருக்காங்களா?’ என்றேன் செல்லதுரையிடம்.

”ஆமாம். கூடிய சீக்கிரமே முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.’

”ஓ.கே ஆல் தி பெஸ்ட். சீனியர்ங்ற முறையில ஒரு அட்வைஸ் சொல்லலாமா?’

”சொல்லுங்க.’

”கல்யாணமான புதுசுல உங்க வொய்ஃப் உங்கள்ட்ட கொஞ்சலா, ‘என்னங்க குக்கர்ல ஆவி வருதான்னு பார்த்து விசிலைப் போடுங்க’னு சொல்வாங்க. உடனே நீங்க புதுக் கல்யாண மோகத்துல குடுகுடுன்னு ஓடிப்போய் விசிலைப் போட்டீங்கனு வெச்சுக்குங்க… அவ்வளவுதான். அப்புறம் சாவுற வரைக்கும் நீங்கதான் அந்த விசிலைப் போடணும்’ என்றேன் திலீப்பைப் பார்த்தபடி.

”அந்த விசில் பார்ட்டி நான்தான்’ என்றபடி மொட்டைமாடி தரையில் திலீப் டாஸ்மாக்கை விரித்தான்; ஊற்றிக் கொடுத்தான். முதல் ரவுண்டில் ”ஊத்துங்க சார்…” என்ற செல்லதுரை, இரண்டாவது ரவுண்டிலேயே, ”ஊத்து மச்சி… இப்ப நான் பரவச நிலையை அடைஞ்சுக்கிட்டிருக்கேன்’ என்றான்.

அரைப்பரவச நிலையில் இருந்த திலீப் செல்லதுரையை நோக்கி, ” ‘முதல் சந்திப்பிலேயே தண்ணியடிக்கிற ஃப்ரெண்ட்ஸ் முன் ஜென்மத்துல அண்ணன், தம்பியா பிறந்திருப்பாங்க’னு சொல்வாங்க. இனிமே நீ செல்லதுரை கிடையாது… என் செல்லம் நீ’ என்றான்.

”உனக்கும் ஏறிடுச்சாடா? இன்னைக்கு நான் செத்தேன்’ என்றபடி எழுந்தேன். மொட்டைமாடியில் இருந்து அரை நிலா வெளிச்சத்தில் மெல்லிய போதையில் தெரிந்த கடற்கரை மகா அற்புதமாக இருந்தது. மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு நாம் மட்டும் சந்தோஷமாக இருக்கிறோம் என மனதில் ஒரு குற்றவுணர்ச்சி. எனவே, என் மனைவி கவிதாவுக்கு, ‘ஐ லவ் யூ’ என ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு நிமிர்ந்தபோது, என் கையில் இருந்து மொபைல் பிடுங்கப்பட்டது. திலீப்தான் பிடுங்கியிருந்தான்.

”எங்களைத் தனியா விட்டுட்டு, நீ என்னா மொபைல நோண்டிக்கிட்டு…’ என மொபைலைப் பார்த்தான். அதில், ‘மெசேஜ் சென்ட்…’ என வந்தது.

”யாருக்கு இந்த நேரத்துல மெசேஜ் அனுப்புற?” என்றபடி மெசேஜைப் பார்த்தான். அடுத்த விநாடி, ”உனக்கு வெக்கமா இல்லை?’ என்றான்.

”என்ன திலீப்?’ என எழுந்து வந்தான் செல்லதுரை.

” ‘ஐ லவ் யூ’னு மெசேஜ் அனுப்பிட்டு இருக்கான் செல்லம்.’

”அநியாயமா இருக்கே. கல்யாணம் பண்ணிட்டு, இன்னொரு பெண்ணுக்கு ‘ஐ லவ் யூ’னு

எஸ்.எம்.எஸ் அனுப்பலாமா?’ என்றான்.

”இன்னொரு பொண்ணுக்கு இல்லை செல்லம். வெளியே சொல்லவே அசிங்கமா இருக்கு. தாலி கட்டின பொண்டாட்டிக்குப் போய் ‘ஐ லவ் யூ’னு மெசேஜ் அனுப்பியிருக்கான்’ என்ற திலீப்பின் குரலில் நிறைபோதை ததும்பி வழிந்தது.

”வொய்ஃபுக்குத்தானே… விடு மச்சி’ என்றான் செல்லம்.

”அதெப்படி விட முடியும். உனக்குக் கல்யாணமாகி எத்தனை வருஷம்டா ஆவுது?’ என்றான் திலீப் என்னிடம்.

”ஆறு…’ என்றேன்.

”கல்யாணமாகி ஆறு வருஷம் ஆன பொண்டாட்டிக்குப் போய் யாராச்சும் ‘ஐ லவ் யூ’னு மெசேஜ் அனுப்புவாங்களா?’

”ஆபீஸ் வேலைனு பொய் சொல்லிட்டு வந்திருக்கோம். ரொம்ப அழகான இடம். வொய்ஃபை மிஸ்பண்ற மாதிரி ஒரு ஃபீலிங்… அதான்.’

”ஏன்… எனக்கு பொண்டாட்டி இல்லையா?’ என அடுத்த ரவுண்டைக் கடகடவென அடித்து முடித்த திலீப்பின் முகத்தில் போதை தாண்டவம் ஆடியது.

”செல்லம்… நீதான் இதைக் கேக்கணும். கல்யாணமாகி இப்ப வந்தவளுக்கு ‘ஐ லவ் யூ’னு எஸ்.எம்.எஸ் அனுப்புறான். நானும் இவனும் பத்து வருஷமா ஃப்ரெண்ட்ஸ். இன்னைக்கு வரைக்கும் எனக்கு ‘ஐ லவ் யூ’னு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கானான்னு நீயே கேளு..!”

திலீப்புக்கு மேல் போதையில் இருந்த செல்லம், ”என்ன மச்சி… அனுப்பியிருக்கியா?’ என்றான்.

”டேய்… லூஸு மாதிரி பேசாதடா…’

”இவ்ளோ நாள் அனுப்பலைனா பரவாயில்லை. இப்ப திலீப்புக்கு ‘ஐ லவ் யூ’னு எஸ்.எம்.எஸ் அனுப்பு.’

”சீ… போடா.’

”சரி… எனக்கு வேண்டாம். நம்ம செல்லத்துக்கு அனுப்பு…’ என்றான் திலீப்.

செல்லம் என் தோளை அணைத்தபடி, ”குறைந்த காலத்தில் நெருங்கிப் பழகிய நண்பா, திலீப் சொன்ன மாதிரி நீ எனக்கு ‘ஐ லவ் யூ’னு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பு…’ என்றான்.

நான் அடுத்த ரவுண்டை அடித்தபடி, ”இல்ல செல்லம்… அது வந்து… வொஃய்புக்கு மட்டும்தான் ஐ லவ் யூ சொல்வேன். ஸாரி…’ என்றேன்.

செல்லதுரை, ”சரி… நீ ஐ லவ் யூ சொல்லலைன்னாலும் பரவாயில்லை. நான் தண்ணியடிச்சேன்னா ஃப்ரெண்ட்ஸ்களுக்குக் கன்னத்துல முத்தம் கொடுப்பேன். அதையாச்சும் வாங்கிக்குவியா?” எனக் கேட்டான்.

நான் சிரித்தபடி, ‘சரி கொடு…’ என்றேன்.

கொடுத்தான்.

”திலீப்…’ என திலீப்பை அழைத்து அவனுக்கும் முத்தம் கொடுத்தான். என் மடியில் படுத்துக்கொண்டு, ”உன்னோடு இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காதடா மனோஜ்…’ என செல்லம் கவிதை வாசிக்க… நான் சத்தமாகச் சிரித்தேன்.

”இன்னும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?’ என செல்லம் வானத்தை நோக்கி வணங்க, நான் ”டேய்… இவன் அலம்பல் தாங்கலைடா” என்றேன்.

”செமயா கம்பெனி கொடுக்கிறான்ல’ எனச் சிரித்தான் திலீப்.

மறுநாள் இரவு நாங்கள் பாண்டிச்சேரியில் பஸ் ஏறும் வரையிலும் நன்கு கம்பெனி கொடுத்தான் செல்லதுரை. செல்லத்தின் அலம்பலால் நாள் முழுவதும் சிரிப்பு. பஸ் புறப்பட்டவுடன் செல்லம் கை அசைத்தபடி பின்னால் நகர… சட்டென மனதில் ஒரு பாரம். பஸ் ஏறுவதற்கு முன்பும் தண்ணி அடித்துவிட்டுத்தான் ஏறியிருந்தோம். எனவே, போதையில் செல்லதுரை மீது பாசம் பெருக்கெடுத்தது. அவ்வளவு கேட்டும் அவனுக்குக் கடைசி வரையிலும் ‘ஐ லவ் யூ’ என மெசேஜ் அனுப்பாமலே வந்தது வருத்தமாக இருந்தது. மொபைலை எடுத்து, எஸ்.எம்.எஸ்-ஸைத் தமிழில் தட்ட ஆரம்பித்தேன்.

‘பாண்டிச்சேரியில் உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காதடா செல்லமே… ஐ லவ் யூ அண்ட்

ஐ மிஸ்டு யூ’ என டைப்படித்து செல்லத்துக்கு அனுப்பிவிட்டு, அதிர்ச்சியுடன் ‘ஆ…’ எனக் கத்திவிட்டேன்.

”என்னாச்சுடா?’ என்றான் திலீப்.

”செல்லத்துக்கு ‘ஐ லவ் யூ’னு மெசேஜ் அனுப்பினேன்.’

”அதுக்கு என்ன? அவன்தான் கேட்டுக்கிட்டிருந்தானே…’

”அய்யோ… அது இல்லடா. எஸ்.எம்.எஸ்-ஸை அவனுக்கு அனுப்புறதுக்குப் பதில் என் வொய்ஃபுக்கு அனுப்பிட்டேன்.’

”எப்டிரா?’

”என் வொய்ஃப் நம்பரை ‘செல்லம்’னுதான் சேவ் பண்ணி வெச்சிருக்கேன். இவன் நம்பரை ‘செல்லம் 2’-னு சேவ் பண்ணி வெச்சிருந்தேன். போதையில செல்லம் 2-க்கு அனுப்புறதுக்குப் பதிலா என் வொய்ஃபுக்கு அனுப்பிட்டேன்.’

”பரவாயில்லை விடு… ‘ஐ லவ் யூ’னுதானே அனுப்பின?’

”அது மட்டும் இருந்தா பரவாயில்லைடா…’ என்ற நான் அனுப்பிய எஸ்.எம்.எஸ்-ஸை திலீப்பிடம் காட்டினேன். ‘பாண்டிச்சேரியில் உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காதடா செல்லமே… ஐ லவ் யூ அண்ட் ஐ மிஸ்டு யூ செல்லம்…’ என வாய்விட்டுப் படித்த திலீப் என்னைத் திகிலுடன் பார்த்தான்.

”வாய்ல இருந்து வந்த சொல்லையும், செல்லுல இருந்து அனுப்பின எஸ்.எம்.எஸ்-ஸையும் திருப்பி வாபஸ் வாங்கவே முடியாது. நீ செத்தடி…’ என்றான் திலீப். அப்போது என் மனைவியிடம் இருந்து கால் வர… நான் பீதியுடன் மொபைலை நோக்கினேன். அடித்த அத்தனை போதையும் இறங்கிவிட்டது.

”என்ன மச்சி பண்றது?’

”எதுவும் பண்ண முடியாது. பேசுடா…’ என்றான்.

நான் போனை எடுத்தவுடனேயே எனது மனைவி அழும் சத்தம் கேட்டது. ”கவி…’ என நான் ஆரம்பிக்க, ”உண்மையைச் சொல்லுங்க. இப்ப எந்த ஊர்ல இருந்து வர்றீங்க?’ என்றாள்.

பொய் சொல்ல முடியாது. நானே எஸ்.எம்.எஸ்-ஸில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறேன். ”அது வந்து கவி… நான் நேர்ல வந்து சொல்றேன்…’ என்றேன்.

”எங்கேருந்து வர்றீங்கனு மட்டும் சொல்லுங்க…’

”பாண்டிச்சேரி…’ என்றவுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நான் அவளை அழைக்க முயற்சிக்க, போன் ஸ்விட்ச் ஆஃப்.

”மத்த விவரம் எல்லாம் தெரியலைன்னாலும், இதை மட்டும் வேற யாருக்கோ அனுப்பவேண்டிய மெசேஜை நமக்கு அனுப்பிட்டான்னு கண்டுபிடிச்சுட்டா. இப்ப என்னடா பண்றது?’

”ஆளையும் மூஞ்சியும் பாரு. அனுப்புறதுதான் அனுப்பினே சும்மா ‘ஐ லவ் யூ’னு அனுப்பாம… டயலாக் வேற.’

”பாவம்டா. கிராமத்து அப்பாவிப் பொண்ணு. ரொம்ப டென்ஷன் ஆகிடுவா…’

”அவங்களை விடு. உன் வொய்ஃபோட அண்ணனுங்க உன்ன டின்னு கட்டப்போறானுங்க’ என்றவுடன் நான் பேய் முழி முழித்தேன்.

கவிதாவுக்கு இரண்டு அண்ணன்கள். ஒருத்தன் ‘பாசமலர்’ சிவாஜி என்றால், இன்னொருத்தன் ‘என் தங்கை கல்யாணி’

டி.ராஜேந்தர். அதுவும் பெரிய அண்ணன் காவல் துறையில் அதிகாரி ரேஞ்சில் இருக்கிறான். ‘சாப்புடுங்க மாப்ள…’ என்பதையே, ‘ஓங்கி ஒரு அறைவிட்டன்னா…’ என்பதுபோல் விறைப்பாகத்தான் பேசுவான். இன்னோர் அண்ணன் சும்மா சும்மா, ‘என் தங்கச்சி…’ என சென்டிமென்ட்டாகப் பேசிக் கண்ணீர் வடிப்பான்.

திருமணம் முடிந்து கவிதாவை நான் அழைத்துக்கொண்டு கிளம்பியபோது, இருவரும் அழுது தீர்த்துவிட்டனர். அதுவும் சின்ன அண்ணன், எங்கள் கார் கிளம்பியப் பிறகும் கார் ஜன்னலில் தலையை நீட்டி அழுதபடி, சிறிது தூரம் தொங்கிக்கொண்டே வந்து அவன் வேட்டி அவிழ்ந்த பிறகுதான் இறங்கினான். எனக்கு இப்போது கவிதாவைவிட, அவள் அண்ணன்களை நினைத்தால்தான் திகிலாக இருந்தது.

விடியற்காலையில் நான் வீட்டை அடைந்து காலிங்பெல்லை அடித்தேன். கதவு திறக்கப்பட… நான் அதிர்ந்தேன். கதவைத் திறந்தது… கவிதாவின் போலீஸ் அண்ணன் கணேஷ். ‘இன்ட்ரோகேஷன் ஸ்பெஷலிஸ்ட்’ என்பது துறை வட்டாரத்தில் அவருக்கான பெயர். தீவிரவாதிகள், ரௌடிகள் என அனைவரையும் விசாரிக்க இவரைத்தான் அழைப்பார்கள்.

நான் உள்ளே நுழைய மேலும் அதிர்ச்சி.

வீட்டில் கவிதாவின் அப்பா, அம்மா, சின்ன அண்ணன், அண்ணிகள், சித்தப்பா, சித்தி, கவிதாவின் பாட்டி… என ஒரு படையே உட்கார்ந்திருந்தது. நடுவில் கவிதா தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டு, அழுதழுது வீங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தாள். நல்லவேளையாக என் இரண்டு மகள்களும் ஓரமாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

என்னைப் பார்த்தவுடன் கவிதா, இழவு வீட்டில் முக்கிய உறவினர்கள் வந்தவுடன் திடீரெனக் குரல் உயர்த்தி அழுவார்களே… அதுபோல சத்தமாக அழுதபடி, ”இவ்ளோ பெரிய துரோகத்தைப் பண்ணிட்டு எப்படி அண்ணே வீட்டுக்கு வர மனசு வந்துச்சு?’ என்றாள், தன் சின்ன அண்ணன் குமாரை நோக்கி.

குமார் தன் கண்களில் உலகிலுள்ள அத்தனை அண்ணன்களின் சோகங்களையும் சுமந்தபடி, ”அய்யோ… ரோஜாப் பூவை வளர்த்து ஆசிட்ல போட்டுட்டோமே அம்மா…’ என்றான். திருதிருவென முழித்த கவி, ”யாரு ரோஜா… என்ன ரோஜா?” என்றாள்.

”அடிப்பாவி மவளே… இப்படி ஒரு விவரமும் தெரியாம, சிரிச்சுக்கிட்டே புருஷனைச் சக்களத்தி வீட்டுக்கு அனுப்பிவெச்சிருக்கியே…” என்றாள் கவிதாவின் அம்மா.

அதற்கு கவிதாவின் பாட்டி, ”கண்ணு… கவி… உங்க அம்மாதான் இப்படி புருஷன்கிட்ட ஏமாந்தான்னா, நீயும் அப்படியே வந்து பொறந்திருக்கியே…’ என உணர்ச்சிவசப்பட்டு தடாலடியாக ஒரு குண்டைத் தூக்கிப்போட… அத்தனை பேரும் அமைதியானோம்.

நான் என் மாமனாரைப் பார்த்தேன். அவர் சட்டெனத் தலையைக் குனிந்துகொண்டு விரலை நீட்டி ஏதோ கணக்குபோட்டார். என்ன கணக்கு… சக்களத்திகள் எண்ணிக்கையா? இந்தச் சமயத்தில் ஏனோ தெரியவில்லை… கவிதாவின் சித்தப்பா நைஸாக எழுந்து வெளியே சென்றார். இருவரும் நிச்சயமாக செகண்டு இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார்கள். நான் மனதுக்குள், ‘அடப்பாவிகளா… அயோக்கியப் பசங்க எல்லாம் கமுக்கமா மேட்டரை முடிச்சுட்டு, யோக்கியன் மாதிரியே வந்து உக்காந்திருக்கீங்களேடா…’ எனப் எனக்குள் புலம்பினேன்.

”கவி… நான் சொல்றதைக் கொஞ்சம் கேட்கிறியா?’ என்றேன்

”இனிமே கேட்கிறதுக்கு என்ன இருக்கு? அதான் எஸ்.எம்.எஸ்-லயே தெளிவா சொல்லிட்டீங்களே…’

”கவிதா… நான் ‘பெங்களூரூ போனேன்’னு சொன்னது பொய்தான். ஆனா, பாண்டிச்சேரி போனது நாங்க தண்ணியடிக்கத்தான்…’ என ஆரம்பித்தேன். அவ்வளவுதான். என் மனைவி ஒரு மனிதவெடிகுண்டைப் பார்ப்பதுபோல் பயங்கர அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தாள்.

”முத ராத்திரி அன்னிக்கு ‘தண்ணியடிப்பீங்களா?’னு கேட்டதுக்கு ‘இல்லை’னு சொன்னீங்களே’ என்றாள்.

”அறிவு கெட்டவளே… முத ராத்திரி அன்னிக்கே நான் தண்ணியடிபேன்னு சொன்னா, அப்புறம் முத ராத்திரி நடக்குமா?’

”போச்சு… எல்லாம் போச்சு. அண்ணன்… வாரா வாரம் மாரியம்மனுக்கு கற்பூரம் ஏத்துவனே… அப்படியும் அவ என்ன இப்படி சோதிச்சுட்டாளே… இனிமே அவளுக்குக் கற்பூரம் ஏத்த மாட்டேன். நான் கற்பூரம் ஏத்த மாட்டேன்…’ என்று கூற, ”ஏத்தாத கவி… இனிமே கற்பூரம் ஏத்தாத கவி…’ என்று தங்கையின் கண்களைத் துடைத்துவிட்டான் குமார்.

நான் மனதுக்குள், ‘டேய் லூஸுப் பசங்களா… இப்ப கற்பூரம் ஏத்துறதாடா பிரச்னை? சட்டுபுட்டுனு விசாரிச்சு பஞ்சாயத்தை முடிங்கடா…’ என்றேன். இந்தக் களேபரத்தில் குழந்தைகள் விழித்துக்கொண்டு, ”அப்பா…’ என என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதன.

இப்போது கவிதாவின் பாட்டி, ”சந்தனத்துல சிலை செஞ்சு சாக்கடையில விட்டுட்டோமே…’ என ஆரம்பிக்க…

கவிதா, ”யாரு சந்தனம்?’ என்றாள் அப்பாவியாக.

நான் கோபமாக, ”நீ சந்தனச் சிலை… நான் சாக்கடை. போதுமா?’ எனக் கூறியவுடன் அந்தத் துக்கத்திலும், கவிதாவின் முகத்தில் மெல்லிய ஒரு சந்தோஷம்.

இதுவரையிலும் அமைதியாக இருந்த போலீஸ் அண்ணன் கணேஷ், ”நீங்க எல்லாரும் பேசாம இருங்க… நான் விசாரிக்கிறேன். நீங்க உள்ளே வாங்க…’ என, என்னை அறைக்குள் அழைத்துச் சென்றான்.

அறைக்கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தினான் கணேஷ். ஒரு சேரை இழுத்து அறையின் நடுவில் போட்டான். எனக்கு உள்ளுக்குள் ‘பக்… பக்’ என்றது. ட்யூப்லைட்டை இருளில் ஆழ்த்தி, ஜீரோ வாட்ஸ் பல்ப் மட்டும் ஏற்றி திகில் சூழலை உண்டாக்கினான். ‘குருதிப்புனல்’ படத்தில் கமல், நாசரை விசாரிப்பதுபோல் விசாரிக்க ஆரம்பித்தான்.

”செல்லத்தோட உண்மையான பெயர் என்ன?’

”நிஜப்பெயர் செல்லதுரை. நாங்க சுருக்கமா ‘செல்லம்’னு கூப்பிடுவோம்.’

”கேட்கிற கேள்விக்கு எனக்கு உண்மையான பதில் தேவை. இப்ப நீங்க பேசணும் மிஸ்டர் மனோஜ்குமார். நிறையப் பேசணும். உங்க கண்ணுல எப்போதும் ஒரு சபலம் தெரியுது. பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கே நீங்க என் தங்கச்சியைப் பார்க்காம, துணைக்கு நின்னுட்டு இருந்த அவளோட தோழியைப் பார்த்துட்டு இருந்தீங்க…’

”அய்யோ… அவங்க நான் பாதி கேசரி தின்னுட்டு இருந்தப்பவே என் தட்டைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க. அந்தக் கோபத்துல முறைச்சுப் பார்த்தேங்க…’

”பரவாயில்லை விடுங்க… அதெல்லாம் பழைய கதை. சொல்லுங்க… உங்களுக்கும் அவளுக்கும் எத்தனை நாளா தொடர்பு? அந்தச் செல்லத்தோட ஊரே பாண்டிச்சேரியா? இல்லை… இங்கிருந்தே அழைச்சுட்டுப் போனீங்களா?’

”அய்யோ… நான் சொல்றதை நம்புங்க. செல்லம்கிறது பொம்பள இல்லைங்க… ஆம்பள. பாண்டிச்சேரியில சிவில் இன்ஜினீயரா இருக்கான். பாண்டிச்சேரியில நாங்க தண்ணியடிச்சுட்டு ஜாலியா இருந்தோம். நேத்து பஸ் ஏறின பிறகு, அவனைப் பிரிஞ்சு வந்தது, ஒரே ஃபீலிங்கா இருந்துச்சு. அதான் அப்படி மெசேஜ் அனுப்பினேன். மொபைல்ல கவிதா பேரைச் ‘செல்லம்’னுதான் போட்டு வெச்சிருக்கேன். செல்லதுரை பேரைச் சுருக்கமா ‘செல்லம் 2’-னு போட்டு வெச்சிருந்தேன். அந்தக் குழப்பத்துல தவறுதலா கவிதாவுக்கு அனுப்பிட்டேன். வேணும்னா நீங்களே செல்லத்துக்கிட்ட பேசிக்கோங்க’ என்ற நான், மொபைலில் செல்லத்தின் எண்களை அழுத்தினேன்.

ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. நான் அதிர்ச்சியுடன் கணேஷைப் பார்த்தேன். என் முகம் மாறியதைப் பார்த்து என் மொபைலை வாங்கிய கணேஷ், மீண்டும் அந்த நம்பருக்கு அடித்தான். ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.

”போதும் மாப்ள… நீங்களே உண்மையைச் சொல்லிடுறீங்களா… இல்ல நான் சொல்லட்டுமா?’

”என்ன உண்மை?’

”யாரோ ஒரு பொண்ணோட உங்களுக்குத் தொடர்பு இருக்கு. வீட்டுல பொய் சொல்லிட்டு அவளை அழைச்சுட்டு பாண்டிச்சேரி போயிருக்கீங்க. உங்களுக்குப் பிரியமான பொண்ணுங்களை எல்லாம் நீங்க ‘செல்லம்’னுதான் கூப்பிடுவீங்க. அவளுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கீங்க. ஆனா, துரதிர்ஷ்டவசமா எஸ்.எம்.எஸ்-ஸை மாத்தி அனுப்பிட்டீங்க. அ’ம் ஐ ரைட்? இல்லைன்னா யாராச்சும் ஆம்பளைக்குப் போய் இப்படி எஸ்.எம்.எஸ் அனுப்புவாங்களா?’

”அது சும்மா மப்புல அனுப்புனதுங்க. மப்புல ஃப்ரெண்ட்ஸ்ங்ககிட்ட இந்த மாதிரி ‘ஐ லவ் யூ மச்சி’னு சொல்றதெல்லாம் சகஜம்ங்க.’

”நீங்க மச்சினு சொல்லலியே… செல்லம்னுதான சொல்லியிருக்கீங்க?’

”இருங்க… அவன்கிட்ட பேசிட்டா உங்க டவுட் எல்லாம் போயிடும்…’ என்ற நான் மீண்டும் செல்லத்துக்கு போன் செய்தேன். அது ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. திலீப்புடன் சென்றேன் எனச் சொல்லலாம் என்றால், அவனும் வீட்டில் பொய் சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறான். இவர்கள் திலீப்பை விசாரிக்கப்போக… அவன் மாட்டிக்கொள்வதோடு மட்டுமின்றி, அவனும் ஒரு பெண்ணோடு பாண்டிச்சேரி சென்றதாக நினைத்துக்கொள்வார்கள். திலீப்பின் மாமனார்

50 வருடங்களாக தெலுங்கு டப்பிங் பட விநியோகஸ்தர். மொத்தக் குடும்பமுமே பயங்கர டெரராக இருக்கும். வேறு வழியின்றி செல்லத்தின் போனுக்கே மீண்டும் மீண்டும் போன் அடித்துக்கொண்டிருந்தேன்.

கணேஷ் கடுப்பாகி, ”இனிமே என்னால பொறுமையா இருக்க முடியாது. உண்மையைச் சொல்லிடுங்க’ என்றான்.

”செல்லம்கிறது சத்தியமா ஆம்பளைதாங்க…’

”போன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. அப்படியே அவன் பேசினாலும், அது உங்க செட்அப்பா இருந்தாலும் இருக்கலாம். அதனால கிளம்புங்க. நம்ம பாண்டிச்சேரிக்கே போய் பார்த்துட்டு வந்துடலாம்’ என்றவுடன் நான் அதிர்ந்தேன்.

”என்னங்க இது… இவ்ளோ சொல்றேன். நம்பிக்கை இல்லையா?’

”அதெல்லாம் நம்ப முடியாது. நம்ம இப்ப பாண்டிச்சேரி போறோம்.’

போனோம். பாண்டிச்சேரியில் செல்லதுரை வேலை செய்த கம்பெனிக்கே சென்று அவனைப் பார்த்தோம். செல்லதுரையின் மொபைல் தொலைந்துவிட்டது. அதனால்தான் ஸ்விட்ச் ஆஃப் என வந்திருக்கிறது. செல்லதுரையின் சர்ட்டிஃபிகேட்டை எல்லாம் வாங்கிப் பார்த்து, அவன் பெயரை உறுதி செய்துகொண்ட பிறகுதான் கணேஷ் சமாதானம் ஆனான்.

சென்னை திரும்பி கணேஷ் உண்மையைக் கூறியவுடன், கவிதா என்னை வெட்கத்துடன் பார்த்தாள்; நான் அவளை எரிச்சலுடன் பார்த்தேன்.

அன்று இரவு 11 மணிக்கு திலீப் போன் செய்தான்.

”என்ன மச்சி… இந்த நேரத்துல கூப்பிடுற?” என்றேன்.

”இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, செல்லம் தண்ணியடிச்சுட்டு எனக்கு போன் பண்ணியிருந்தான்; முத்தம் கொடுத்தான். என்னையும் முத்தம் தரச் சொன்னான். நான், ‘இப்ப வீட்ல இருக்கேன். முத்தம் தர முடியாது செல்லம்’னு சொன்னேன். அப்ப கரெக்டா என் ரூம்ல நுழைஞ்ச என் வொய்ஃப் அதைக் கேட்டுட்டா. இப்ப என் மாமனார், என் மச்சானுங்களோடு டாடா சுமோல வந்துட்டிருக்கார்” என்றான்.

மீண்டும் ஒரு செல்லக் கதை ஆரம்பம்!

– மார்ச் 2015

Print Friendly, PDF & Email

4 thoughts on “ஒரு செல்லகதை

  1. சிரிப்பை அடக்கவே முடியல.. நினைச்சி நினைச்சு சிரிச்சிட்ருக்கேன் .. சூப்பர் ஸ்டோரி …

  2. அருமை யான கதை.. சிரித்துக்கொண்டே இருக்கிறேன்

  3. ரொம்ப அருமை சார்.. ரொம்பவும் சிரித்தேன் ..

    நன்றி
    சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *