கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2023
பார்வையிட்டோர்: 16,634 
 
 

கனகாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களில் கண்ணீர் அணையில் திறந்த வெள்ளம்போல் கரைபுரண்டோட எத்தனித்து நின்றது. ‘எப்படியாவது திருமண முகூர்த்தம் நடந்து மகளின் கழுத்தில் தாலி ஏறி விட வேண்டும்’ என தனது குல தெய்வத்தை மனமுருகி கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டாள்.

திருமண மண்டபத்தில் உறவுகள், நட்புகள் என கூட்டம் நிரம்பி வழிந்தது. உச்சபட்ச மகிழ்ச்சியால் வந்திருந்த ஒவ்வொருவரும் கனகாவின் கையைப்பிடித்துக்கொண்டு வாழ்த்தினார்கள். “நீ சாதிச்சிட்டே. சின்ன வயசுலயே புருசன எழந்துட்டு தொழில்ல கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து, பொண்ண வெளிநாட்ல படிக்க வெச்சு இப்ப நல்ல பெரிய எடத்து மாப்பிளைக்கு கண்ணாலம் பண்ணிக்கொடுக்கப்போறத நெனச்சா எனக்கே பெருமையா இருக்குது” என தனது வயதொத்த அத்தை மகள் அருளி பேசிய போது அந்தப்பாராட்டை உள் வாங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பு போலத்தவித்தாள். போலியாக சிரித்து நடித்தாள்.

திருமணமாகி மகள் பிந்து பிறந்து பத்து நாட்களில் விபத்தொன்றில் கணவனைத்தூக்கி நிரந்தரமாக எமனிடம் கொடுத்தவளுக்கு பெற்றோரின் ஆதரவு, முக்கியமாக தந்தையின் பங்களிப்பு துக்கத்தை படிப்படியாக மறக்கச்செய்திருந்தது. உறவில் பலரும் மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் கணவன் மீது வைத்திருந்த மாசற்ற மாறாக்காதலால் மற்றொருவரை அவரிடத்தில் அருவமாகவும், உருவமாகவும் வைத்துப்பார்க்க முடியாதவளாய் ஒரே வார்த்தையில் தனது மறுப்பைச்சொன்னவள் தனது தந்தையின் ஏற்றுமதித்தொழிலுக்கு உதவியாக இருந்து தொழிலைக்கற்று ஊரில் பெயர் சொல்லும் அளவுக்கு உயர்ந்து நின்றவள் இன்று தனது கனவுகள் நனவாகும் நாளில் கூனிக்குறுகி, கலங்கி, விக்கித்து நின்றாள்.

“கனகா அப்பா எங்கே?” அம்மா கேட்டதும் துக்கத்தை அடக்க முடியாதவளாக முகத்தைத் திருப்பியபடி, “வந்திடுவாரு….” என்றவள் அந்த இடத்தை விட்டு உடனே வெளியேறி மண்டபத்தில் தனக்கான அறைக்குச்சென்று அறைக்கதவைத்தாழிட்டு கதறி, கதறி அழுதவள், சிறிது தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அலைபேசியை எடுத்து மணவறையில் இருந்த தனது மாமாவுடன் பேசினாள்.

“மாமா தாலி எடுத்துக்கொடுக்க அப்பாவத்தேடாதீங்க. டிராஃபிக்ல சிக்கிட்டாரு. புருஷன் இல்லாத நானும் அங்க வரல. பாத பூஜைக்கு என் பொண்ணோட பெரியப்பா, பெரியம்மா நின்னுக்குவாங்க. அப்பாவுக்கு பதிலா நீங்களே தாலி எடுத்துக்கொடுத்திடுங்க” எனச்சொன்னவள் மண்டபத்தின் பின் கதவு வழியாகச்சென்று தயாராக நின்றிருந்த காரில் ஏறி மருத்துவமனைக்குச்சென்று பார்த்தபோது உயிரற்ற உடலாக தந்தையைப்பார்த்துக்கதறி அழுதாள்.

‘தந்தை இறந்ததை வெளியே சொன்னால் திருமண மண்டபம் இழவு வீடாக மாறிவிடும். தன் மகளுக்கு காலத்துக்கும் அழியாத பழிசொல் வந்து சேர்ந்து விடும்’ என யோசித்தவள் மருத்துவர்களிடம் தனது யோசனையைச்சொல்லி ஐசியு விலேயே நாளை வரை வைத்திருக்கும் படி வேதனையுடன் கூறிவிட்டு மறுபடியும் அலைபேசியில் தன் மாமாவை அழைத்து முகூர்த்தம் முடிந்ததை அறிந்தவுடன் “அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஐசியுல இருக்காரு. நான் பக்கத்துல இருந்துக்கறேன். அழைப்பு, சம்மந்தி விருந்து எல்லாம் முடிச்சிட்டு மண்டபத்த காலி பண்ணிட்டு பொண்ணு மாப்பிள்ளைய மாப்பிள்ளை வீட்ல விட்டுட்டு நாளைக்கு காலைல அப்பாவைப்பார்க்கிறதுக்கு எல்லாரும் வாங்க” என சொல்லவே கூடாத பொய்யைச்சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தான் ஆட்பட்டதை எண்ணி வேதனையின் உச்சத்துக்கே சென்றாள் கனகா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *