வழக்கமாக நடை சாத்துவதற்கு முன்பு செய்யப்படும் கைங்கர்யம் எதுவும் செய்யப்படவில்லை. நங்கையர் குறை தீர்க்கும் நல்லாண்டானுக்கு சந்தேகம், ‘தாலாட்டு ஏன் இன்னும் பாடப்படவில்லை’. அசதியின் காரணமாக அதைப் பொருட்படுத்தாமல் உறங்கிப் போனார். வைகுண்டராஜன் தன் துயில் கலையும் போது சுப்ரபாத ஒலி கேட்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் இல்லை. குழப்பமடைந்தவர், வைகுண்டத்திலிருந்து நேரடியாக மலை மீது இறங்கினார். கோவிலே வெறிச்சோடிக் கிடந்தது. வாசலில் பல்லக்கு கேட்பாரற்றுக் கிடந்தது. வெகுதொலைவில், மலை அடிவாரத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் புள்ளியாகத் தெரிந்தார்கள். ‘எல்லாம் எங்கே ஓடுகிறார்கள்?’ வைகுண்டராஜன் சுற்றும் முற்றும் பார்த்தார். நந்தவனத்தில் ஒரு பிச்சைக்காரன் உறங்கிக்கொண்டிருந்தான். அவனை எழுப்பினார்.
“என்ன சார் நீயும் என்னமாதிரியா? பாத்ததே இல்லையே?” பிச்சைக்காரன் கேட்டான்.
வைகுண்டராஜனுக்குப் புரியவில்லை. என்ன சொல்கிறான் இவன் என்பது போல் பார்த்தார். அதைக் கேட்டும் விட்டார்.
“என்ன சொல்கிறாய் மகனே? எல்லோரும் எங்கே?”
பிச்சைக்காரன் கடவுளையே ஏற இறங்கப் பார்த்தான். கூத்துக் கட்ட வந்தவனைப் போல் அவர் ஆடை அணிந்திருந்தது அவனுக்கு ஆச்சர்யம் அளித்தது. அவன் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். “உன்னைத்தான் மகனே? எல்லோரும் எங்கே ஓடுகிறார்கள்? ”
“அதான் கவர்மென்ட்ல சொல்டாங்களே. ஐநூறு ரூவா ஆயிரம் ரூவா நோட்டுலாம் செல்லாதுன்னு. அதான் எல்லாம் மாத்த பேங்க்குக்கு ஓடுறாங்க. உங்களுக்கு தெரியாதா?”
வைகுண்டராஜன் பதில் அளிக்கவில்லை. பல்லக்கைப் பார்த்தார்.
“அது நேத்து நைட்ல இருந்து அங்கதான் இருக்கு. எட்டு மணி இருக்கும். கருட ஊர்வலம் முடிஞ்சு சாமி மறுபடியும் கோவிலுக்குள்ள நுழைஞ்சுக்கிட்டு இருந்துச்சுல. அப்பதான் யாரோ சொன்னாங்க. ஐநூறு ரூவாய் ஆயிரம் ரூவாய் நோட்டுலாம் செல்லாதுனு. எல்லாம் பல்லக்க போட்டுட்டு அப்டியே ஓடிட்டாங்க” வைகுண்டராஜனுக்கு கோபம் வந்தது. அடக்கிக் கொண்டார்.
“நீ செல்லவில்லையா மகனே?”
“என்ட எல்லாமே சில்லறை தான்” சொல்லிவிட்டு அவன் மூட்டையைக்காண்பித்தான்.
“நம்மக்கிட்ட ஏது ஐநூறும் ஆயிரமும்? ஆமா என்ன கேக்குறியே, நீ காசலாம் மாத்தீட்டியா?”
அப்போது தான் வைகுண்டராஜனுக்கு உண்டியல் முழுக்கப் பணம் இருப்பது நியாபகம் வந்தது. வெறும் உண்டியல் மட்டுமா? அங்கே திறக்கப்படாமல் இருக்கும் பல அறைகள் முழுக்கச் செல்வங்கள் இருக்கின்றன. ‘நல்ல வேளை, அவையெல்லாம் ரூபாய் நோட்டுக்களாக இருந்திருந்தால், பெரும் நஷ்டமாகி இருக்கும்’.
உண்டியலிலிருந்து அள்ள முடிந்த அளவிற்கு பணத்தை எடுத்துக் கொண்டார். அவர் கோவிலை விட்டு வெளியே வருகையில், அந்தப் பிச்சைக்காரன் எதிரில் வந்தான்.
“இம்புட்டும் உன் காசா?”
“இன்னும் இருக்கிறது மகனே?”
“அது சரி. ஆனா பேங்கல நாலாயிரம்தான் மாத்துவாங்க. கொஞ்சம் எடுத்துட்டுப் போ. ஏன் இவ்ளோவையும் தூக்கிட்டுப் போற”
வைகுண்டராஜன் தயங்கினார்.
“இந்தக் காசுக்கு இப்ப மதிப்பே இல்ல. சும்மா வச்சுட்டப் போ. நான் பாத்துக்கிறேன்”
அவர் கொஞ்சம் காசை மட்டும் எடுத்து சுருக்குப் பையில் வைத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்.
“வாத்தியாரே இந்த ட்ரெஸோட போனா உள்ள விட மாட்டாங்க. மேல் சட்டக் கூட இல்ல. இந்தா இதைப் போட்டுக்கோ” என்று அவன் தன் பைக்குளிருந்து ஒரு பேண்ட் சட்டையை எடுத்து நீட்டினான். அவர் வாங்கிக் கொண்டார்.
***
வங்கியில் கூட்டம். வைகுண்டராஜனின் கோவிலில் இருப்பதை விட அதிகக் கூட்டம். வைகுண்டராஜன் அவ்வளவு கூட்டத்தை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. வங்கியின் வாசலில் நிழலுக்காக பந்தல் போட்டிருந்தனர். வெயில் அதிகமிருந்ததால், எல்லோரும் அடித்துப்பிடித்துக் கொண்டு பந்தளுக்குள்ளே நிற்க முற்பட்டனர். வைகுண்டராஜனுக்கு வரிசையில் நின்று பழக்கம் இல்லாததால், அங்கு நிற்பதே பெரும் போராட்டமாக இருந்தது. எல்லோரும் அவரை தள்ளிவிட்டு முன்னே போய்க் கொண்டிருந்தனர். பக்கத்து வரிசையில் நின்ற பெரியவர் வைகுண்டராஜனை பார்த்த கேட்டார், “உங்கள எங்கேயோ பாத்திருக்கேனே? ஹான், சாவித்திரியோட அத்திம்பேர் தான நீங்க?”
வைகுண்டராஜன் என்ன சொல்வது என்று தெரியாமல், ஆம் என தலை அசைத்தார்
“கண்ணன் தான உங்க பேரு?” அதற்கும் தலையசைத்தார்.
“வாங்க இங்க வந்து நின்னுக்கோங்க.” என்று அந்தப் பெரியவர் தனக்கு முன் நிற்க இடமளித்தார். அகம் மகிழ்ந்த வைகுண்டராஜன் பெரியவருக்கு போகும் போது வரமளித்துவிட்டு போக வேண்டுமென்று முடிவு செய்தார். அதற்குள் கேஷ் கவுன்ட்டர் வந்தது.
“ப்ரூப் வேணும் சார். அப்பத்தான் எக்ஸ்சேஞ் பண்ணமுடியும்” கேஷியர் பெண்மணி சொன்னாள். வைக்குண்டராஜன் திருதிருவென விழித்தார்.
“மறந்துட்டீங்களா கண்ணன்?” பின்நின்ற பெரியவர் வினவினர்.
“மேடம் இது என் வைஃப்போட ஆதார். இத வச்சு மாத்திக் குடுங்களேன். ரொம்ப நேரம் க்யூல நின்னுட்டார். என் ரிலேடிவ் தான்” பெரியவர் வக்காலத்து வாங்கினார்.
கேஷியர் பெண்மணி இறக்கப்பட்டு சரி என ஒப்புக் கொண்டாள். வைகுண்டராஜன் நான்கு ‘ஆயிரம் ரூபாய்’ நோட்டுக்களை நீட்டினார். அந்த பெண்மணி இயந்திரத்தினுள் அந்த தாள்களை போட்டாள். “க்யுங்” என்று இரண்டு முறை சப்தம் வந்தது. இயந்திரத்தின் டிஸ்ப்ளேயில் “F” என்று வந்தது.
“ஃபேக் நோட்” கேஷியர் பெண்மணி கோபமாக இரண்டு நோட்டுக்களையும் திருப்பி நீட்டினாள்.
“அப்படி என்றால்”
“கள்ள நோட்டு”
“எங்க வாங்குனீங்க கண்ணன் இந்த நோட்ட?” பெரியவர் வினவினார்.
“கோவில்ல”
“பெருமாளே. கோவில்ல கள்ள நோட்ட குடுக்குறாளே உருப்புடுவாளா?”
“சார், நாங்க இந்த நோட்ட கிழிச்சு போடணும். ஏதோ வயசானவராச்சேனு திருப்பி கொடுத்துட்டேன். எங்க வாங்குனீங்களோ அங்கேயே குடுங்க” கேஷியர் பெண்மணி சீறினாள்.
“அந்த மிச்சம் ரெண்டாயிரத்தயாவது மாத்திக்குடுங்க?” பெரியவர் பவ்யமாக கேஷியரிடம் சொல்ல, கேஷியர் மீண்டும் ஒரு நோட்டை திருப்பி தந்தாள்.
“இது pre-2005 நோட் சார்”
“சில்வர் கம்பி இருக்கு பாருங்க. இந்த நோட்ட இப்போ நாங்க வாங்கக் கூடாதுன்னு ரூல். இத இங்க மாத்த முடியாது. ரிசர்வ் பேங்கபோய் மாத்திக்கோங்க?”
‘உண்டியலில் என்னென்ன நோட்டுக்களை எல்லாம் போடுகிறார்கள்’ வைக்குண்டராஜனுக்கு கோபம் வந்தது. மீண்டும் அடக்கிக் கொண்டார்.
“ஒரு ஆயிரத்தையாவது மாத்திக் குடுமா?” இது பெரியவர்.
“சின்ன denomination இன்னும் வரல சார். வெறும் 2000 denomination தான் இருக்கு ஆயிரத்துக்கு குடுக்க சில்லறை இல்லையே?”
“கொஞ்சம் ட்ரை பண்ணுமா?”
“வச்சுகிட்டா சார் இல்லன்னு சொல்றோம். வேற நோட் இருந்த குடுங்க. இல்ல கிளம்புங்க”
“வேற காசு இருக்கா?” பெரியவர் வைகுண்டராஜனை கேட்டார்.
“நிறைய இருக்கிறதே” என்றவாறே வைகுண்டராஜன் தன் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டார். பாக்கெட் ஓட்டையாக இருந்தது.
“வாத்தியாரே இந்த டரெஸோட போனா உள்ள விட மாட்டாங்க. மேல் சட்டக் கூட இல்ல. இந்தா இதைப்போட்டுக்கோ”
‘விதி வலியது’
“காச வச்சுட்டு வந்துட்டேன். நிறைய இருக்கு” வைகுண்டராஜன் சொன்னார்.
“யோவ் பெருசுங்களா எவ்ளோ நேரம் அங்கேயே நிப்பீங்க?”
பின்னிருந்து ஒருவன் கத்தினான். பெரியவர் மட்டும் தன் காசை மாற்றிக் கொண்டார்.
“அகௌண்ட் ஓபன் பண்ணி போட்டுறலாம் கண்ணன். கவலை படாதீங்க மேனஜர் என் பிரெண்டு தான்” பெரியவர் வைகுண்டராஜனை மேலாளரிடம் அழைத்துச் சென்றார்.
வேலை செய்யாமல் தொலைபேசியில் யாரிடமோ வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்த மேலாளர் இவர்களை பார்த்ததும் வேலை செய்வது போல் பாவனை செய்தார். வைக்குண்டராஜனும் பெரியவரும் வெளியே காத்திருக்க வேண்டியதாயிற்று.
‘நம்மை தரிசனம் செய்ய எத்தனை பேர் காத்திருப்பார்கள். இன்று இந்த மானிடன் நம்மையே காக்க வைத்துவிட்டானே’
ஒருவழியாக மேலாளர் இவர்களை உள்ளே அழைத்தார். வைகுண்டராஜனை அறிமுகம் செய்து வைத்தார்.
“உங்க ஃபுல் நேமே கண்ணன் தானா?”
“கண்ணன், கமலக்கண்ணன், ஹரிஹரன், வைகுண்டன், பார்த்தசாரதி. இன்னும் ஆயிரம் பெயர்கள் உண்டெனக்கு”
“ஆயிரம் பேர் இருக்கலாம் சார். ப்ரூப்ல என்ன பேர் இருக்கு? அத வச்சு தான் அகௌண்ட் ஓபன் பண்ண முடியும்”
“ப்ரூப்பா?”
“அடையாள அட்டை, ஆதார், பான் கார்ட்”
வைகுண்டராஜன் விழித்தார். “அதெல்லாம் இல்லையப்பா”
“எந்த ப்ரூப்மே இல்லையா? வோட்டர்ஸ் ஐ.டி டிரைவிங் லைசன்ஸ்?”
“அதுவும் இல்லையப்பா”
“என்ன கண்ணன். எப்பவும் வண்டில தானே வருவீங்க. லைசன்ஸ் இல்லாமயா இவ்வளவு நாளா வண்டி ஓட்றீங்க?”
“கருட வாகனம் ஓட்டுவதற்கு லைசன்ஸ் எதற்கு?”
வைகுண்டராஜன் என்ன பேசுகிறார் என்று பெரியவருக்கு குழப்பமாக இருந்தது, வெகு நேரம் வெயிலில் நின்றதால் கண்ணன் ஏதோ பேசுவதாக அவர் கருதினார். அதனால் அவர் மேலாளரிடம்,
“சார் ப்ரூப்லாம் எடுத்துட்டு வந்து அகௌண்ட் ஓபன் பண்ணிக்குறோம். இவ்வளவு தூரம் வந்ததுக்கு ஒரு ரெண்டாயிரம் எக்ஸ்சேஞ் பண்ணித்தாங்கோ. கவுன்டர்ல அந்த பொண்ணு ரூல்ஸ் பேசுறா”
மேலாளர் உதவி மேலாளரை அழைத்து, ஜாடையில் எதையோ எடுத்து வர சொன்னார். அவர் ஒரு மை டப்பாவையும் ஒரு இரண்டாயிரம் நோட்டையும் எடுத்து வந்தார்.
“இது எதுக்கு?” மை டப்பாவை காண்பித்து பெரியவர் வினவினார்.
“இனி ஒருத்தர் ஒரு முறை தான் நோட் எக்ஸ்சேஞ் பண்ணலாம். அதுக்கு தான் அடையாளத்துக்கு விரல்ல இந்த மை” என்று சொல்லிக்கொண்டே அந்த உதவி மேலாளர், வைக்குண்டராஜனின் வலது கை ஆட்காட்டி விரலில் மை வைத்தார்.
“பிப்டீன் மினிட்ஸ் முன்னாடி தான நான் எக்ஸ்சேஞ் பண்ணினேன். என்கைல யாரும் வைக்கலயே”
“பைவ் மினிட்ஸ் முன்னாடிதான் சார் RBI circular வந்துச்சு”
“ராமா” பெரியவர் அலுத்துக்கொண்டார்.
“கூப்டீங்களா?” வைகுண்டராஜன் பெரியவரைப் பார்த்துக் கேட்டார்
“கண்ணன் தான உங்க பேரு!”
“கண்ணனும் நானே ராமரும் நானே”
“விட்டா கிருஷ்ணரும் நீங்கதான்னு சொல்வீங்க போல இருக்கே?” மேலாளர் வினவினார்.
“அதிலென்ன சந்தேகம்!” வைகுண்டராஜன் சொன்னார்.
“சும்மா இருங்க கண்ணன். எப்பபாத்தாலும் ஜோக் பண்ணிக்கிட்டு”
வைகுண்டராஜன் ஒரு இரண்டாயிரம் தாளை பெற்றுக் கொண்டு வெளியே வந்தார். மேலாளர் பெரியவரிடம் சிறிது நேரம் தனியாக பேசினார். வெளியே வந்த பெரியவர்,
“வாங்க இளனி சாப்ட்டு போவோம்” என்று அழைத்தார். வைகுண்டராஜனுக்கும் தாகமாக இருந்தது. சரி என்று ஒப்புக் கொண்டார். அவர்கள் வங்கிக்கு எதிரே புதிதாக முளைத்திருந்த இளநீர் கடையில் இளநீர் அருந்தினர். பெரியவர் காசை கொடுத்தார். வைகுண்டராஜனுக்கு மீண்டும் அகம் மகிழ்ந்தது. பெரியவருக்கு இன்னொரு வரமும் தர வேண்டும் என்று தன்னுள் நினைத்துக் கொண்டார்.
“எந்த ப்ரூப்பும் இல்லாம அகௌண்ட் ஓபன் பன்றது கஷ்டமாம். அகௌண்ட் இல்லாமயே உங்க காசலாம் மேனஜர் மாத்தி தரேன்னு சொல்றார். அவருக்கு 30% ப்ரீமியம் மட்டும்தந்தா போதுமாம்” பெரியவர் சொன்னார்.
“ப்ரீமியம் என்றால்?”
“கமிஷன் அப்டினும் சொல்லலாம்”
“ஐயோ இதெல்லாம் தவறில்லையா?”
“இல்ல கண்ணன். கோவில்ல சாமிக்கிட்ட வேண்டிட்டு உண்டியல கொஞ்சம் காச போடுறோமே. அது மாதிரிதான் இதுவும்”
வைகுண்டராஜனுக்கு கோபம் தலைக்கேறியது. “வேண்டாம் என் பணத்தை நானே மாற்றிக் கொள்கிறேன்” கோபாமாக சொன்னார்.
“எப்படி மாத்துவீங்க கண்ணன்? பெரிய கட்சிக்காராலாம் தொண்டர்ங்க கிட்ட காச பிரிச்சிக் கொடுத்து பேங்க் பேங்காக அனுப்பி மாத்திப்பா. நம்மள மாதிரி மிடில் கிளாஸ் எண்ணப் பண்றது. ஒவ்வொரு பேங்க்கும் ஒரு அவதாரமா எடுக்க முடியும்?”
“யுரேக்கா” என்று வைக்குண்டராஜன் கத்தினார்.
“என்ன கண்ணன்?”
“ஒன்றுமில்லை. நான் பல அவதாரங்கள் எடுத்து என்னிடமிருக்கும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்” என்று சொல்லிவிட்டு சப்தமாக சிரித்தார் வைகுண்டராஜன்.
பெரியவர் அதிர்ச்சியாக வைகுண்டராஜனைப் பார்த்தார். வெட்ட வெளியில் அவர் அப்படி சிரித்தது பெரியவருக்கு பயத்தை ஏற்படுத்தியது.
அதற்குள் எதிரே வண்டியில் வந்த பெரியவரின் மகன், “என்னப்பா இவ்ளோ நேரம்! அம்மா பாத்துட்டு வர சொன்னா” என்றான்.
“கொஞ்சம் கூட்டம் ஜாஸ்தியாயிடுத்து” என்று சொன்ன பெரியவர், “இவர் நம்ம நாடகசபா கண்ணன்” என்று தன் மகனிடம் சொன்னார். வைகுண்டராஜன் எதையும் சட்டை செய்யாமல் ஆகாயத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தார்.
“நம்ம சாவித்திரி மாமி அத்திம்பேரா?. அவருக்குத்தான் சுவாதீனம் சரியில்லாம போச்சாமே. ஏதோ பெருமாள் கோவில் வாசல்ல பிச்சை எடுத்துட்டு இருக்காராம்”
“ஆமாடா. அப்பவே இவரும் கோவிலுனு தான் சொன்னாரு. நான் சுதாரிச்சிண்டிருக்கணும்” என்று சொல்லிவிட்டு பெரியவர் வைகுண்டராஜனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று தன் மகனின் ஸ்கூட்டரில் ஏறிக் கொண்டு தன் மகனை அங்கிருந்து நகரும்படி துரிதப்படுத்தினார். அவர்கள் சென்றதை வைகுண்டராஜன் பொருட்படுத்தவில்லை. பல அவதாரங்கள் எடுத்து காசை மாற்றுவதே அவர் குறிக்கோளாக இருந்தது. முதலில் ஒரு அவதாரம் எடுத்து காலையில் சென்ற வங்கிக்கே சென்றார். ஆனால் காவலாளி இவரை உள்ளே விடாமல்,
“காலைல தான சாப் வாங்கிட்டுப் போனீங்கோ. அபி தூஸ்ரி பார் வந்தா எப்டி சாப்?” என்று கேட்டான்.
இந்த அவதாரம் சரியில்லை போல, எளிதில் அடையாளம் கண்டுக் கொண்டான்’ என்று நினைத்துக் கொண்டு வைகுண்டராஜன் வேறொரு அவதாரத்தில் சென்றார். அதையும் அவன் கண்டுகொண்டான்.
‘இந்த வங்கிக் காவலாளி மிக புத்திசாலியாக இருக்கிறான்’
வைக்குண்டராஜன் வேறொரு வங்கிக்கு சென்றார். அங்கே காவலாளி இல்லாததால் நேரடியாக உள்ளே நுழைந்து விட்டார்.
அவரை பார்த்த கிளார்க் பெண்மணி, “ஆல்ரெடி ஒரு பேங்கல எக்ஸ்சேஞ் பண்ணிடீங்க தான சார்? அப்பறம் ஏன் இங்க வறீங்க?” என்று எரிந்து விழுந்தாள்.
‘இவர்களுக்கு எப்படி தெரிந்தது?’
வெகுதொலைவில் செல்ல முடிவேடுத்து தன் கருடவாகனத்தில் பயணித்து வேறொரு ஊரில் இருந்த வங்கிக்கு சென்றார். அங்கும் தோல்வியே மிஞ்சியது.
மனித அவதாரத்தில் போனால் தான் பிரச்சனை, என்று மனித உடலும் மிருக முகமுமாக அவதாரம் எடுத்து ஒரு வங்கிக்கு சென்றார். அந்த காவலாளி வைக்குண்டராஜனின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான்.
‘எத்தனை அவதாரம் எடுத்தாலும் எப்படி இவர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள்’ என்று யோசித்துக் கொண்டே இருந்தார் கடவுள். பதில் கிடைக்கவில்லை. அவர் வலது கை ஆட்காட்டி விரலிலிருந்த மை அவரை பார்த்து பல் இளித்தது.