மஞ்சள் பிசாசே! கொஞ்சம் நில்!

1
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 39,327 
 
 

அப்புசாமி சுற்றுமுற்றும் ஒரு தரம் பார்த்தார். மூன்று தரம் பார்த்தார். மனைவி சீதாலட்சுமியின் குறட்டை ஒலி உள்ளிருந்து வந்தது. ‘நல்ல காலம்’ என்று நினைத்துக்கொண்டு பொடிக் கடையை நோக்கி விரைந்தார். பொடிக் கடைக் கதவுகள், ஐயஹோ! அடைத்துக் கூடக்… இல்லை… இல்லை…

அப்புசாமிக்கு உயிர் வந்தது. சொர்க்கத்தின் கதவுகள் அப்போதுதான் மெதுவே மெதுவே அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதோ, கடைசிப் பலகையைச் சிப்பந்தி போடப் போகிறான். அனார்கலியின் சமாதியை அடைத்த கடைசிச் செங்கல்லைத் தடுக்க, அக்பரின் மகன் ஓடிய ஓட்டத்தைப் போலப் பத்து மடங்கு வேகத்துடன் அப்புசாமி ஓடி, “பொடி, பொடி,” என்றார். மூக்குப் பொடிக் கடைக் கடையின் கடைசிப் பலகை விழுமுன் கடைக்குள் தன்னை ஆஜர் செய்து கொண்டு விட்டார்.

“பெரிய டப்பாப் பொடிங்களா? இதோ தர்ரேங்க,” என்று மீண்டும் கடை திறந்து கடைக்காரர் ஒரு டப்பா தந்தார். ‘லூஸ்’ பொடி கொஞ்சம் அங்கேயிருந்த ஜாடியிலிருந்து எடுத்துத் தற்காலிக சாந்தி செய்து கொண்டு சஞ்சீவி பர்வதம் கிடைத்த மகிழ்ச்சியுடன், டப்பாவும் கையுமாக வீட்டுக்குள் நழைந்தார் அப்புசாமி.

அம்மாடி! இன்னும் சீதாலட்சுமி எழுந்திருக்கவில்லை. ஆனால் லேசாகப் புரண்டு படுத்தாள். அப்புசாமி, ஜிகினாக் காகிதம் சுற்றிய ‘இனிய சுகந்த’ இத்யாதி பொடியை அலமாரியில் வைத்து அழகு பார்த்தார். கையில் எடுத்து எடுத்துக் குழந்தையைக் கொஞ்சுவது போல் பார்த்தார். தூரத்தில் வைத்து ரசித்தார். டப்பாவைப் பிரிக்காமலேயே உச்சி முகர்ந்து மகிழ்ந்தார்.

ஒரு வாய் வெற்றிலைச் சீவல் போட்டுக் கொண்டு நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்து மேஜை மீதிருநத பொடி டப்பாவைப் பார்த்து மகிழ்ந்தார். அப்புசாமிக்குப் பொடிதான் உயிர் என்றாலும் வெற்றிலைச் செல்லமும் எப்போதும் கையிலிருக்கும். கால் மணிக்கொரு தரம் வெற்றிலை போடுவார். ஐந்து நிமிடத்துக்கொரு தரம் பொடி போடுவார்.

மூக்கு தன் அடுத்த தவணையை ஞாபகப்படுத்தியது. அப்புசாமி ஜிகினாக் காகிதத்தை மெதுவே உரித்தார். டப்பாவின் இறுகலான மூடியைத் திறந்தார். ஒரு சிட்டிகை எடுத்து மூக்கருகே கொண்டு போனார். மிஸஸ் அப்புசாமியின் கிழக்கரம் அவர் கையைத் தடுத்தாட்கொண்டு பொடியைத் தட்டி விட்டது.

“ஏ, மஞ்சள் பிசாசு! சும்மா இருக்க மாட்டாய்?” என்று அப்புசாமி மனைவியைக் கோபித்துக் கொண்டார்.

ஸீஸன் மாம்பழம்போல ‘மஞ்ச மஞ்சேர்’ என்று திருமதி அப்புசாமி விளங்கினார். மிஸஸ் அப்புசாமியை எல்லோரும் சுமங்கலிப் பாட்டி என்று கூப்பிடுவார்கள். இயற்பெயர் சீதாலட்சுமி. 72 வயதாகியும் கணவனை இழக்காமல் சுமங்கலியாக இருக்கிறோமே என்பதில் சீதாலட்சுமிப் பாட்டிக்கு வெகு பெருமை.

தினமும் குளிக்கும்போது அரை வீசை மஞ்சள் கிழங்கைத் தேய்த்துத் தேய்த்துத் தீர்த்துவிடுவாள். அப்புசாமிக்குச் சந்தேகம். ‘ஒருகால் குளிக்கும் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு மஞ்சள் கிழங்கைத் தின்கிறாளோ?’ என்று.

அது போதாதென்று டிரஸ்ஸிங் மேஜைமுன் ஒரு டாய்லெட் பவுடர் டப்பாவில் மஞ்சள் தூள் இருக்கும். சீதா லட்சுமிப் பாட்டி முகப் பவுடருக்குப் பதில் மஞ்சள் பவுடரைத்தான் உபயோகிப்பாள்.

இப்படியாக எல்லா வகையிலும் தன் சுமங்கல்யத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வாள். ஆனால் சுமங்கலனான அப்புசாமி, “உனக்கென்ன பெருமை வாழ்கிறது? நான் சாகாமல் இருக்கிறேன். அதற்காக நான் அல்லவோ பொருமைப்பட வேண்டும்?” என்று கொக்கரிப்பார்.

சீதாப்பாட்டி அப்புசாமியின் பதுக்கப்பட்ட பொடி மட்டையைப் பறித்துக்கொண்டு, “உங்கள் மனத்தில் என்ன எண்ணம்? பொடி போடக் கூடாது, கூடாது என்று ஹௌ மெனி டைம்ஸ் உங்களுக்கு ‘வார்ன்’ செய்வது?” என்றாள்.

பாட்டிக்குத் தங்குதடையின்றி இங்கிலீஷ் வராவிட்டாலும், இங்குமங்குமாக நல்ல சங்கீதத்தில் அபஸ்வரம் தலை காட்டுகிற மாதிரி ஆங்கில வார்த்தைகள் வந்து விழும்.

‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’டில் வந்த கட்டுரை ஒன்றைப் பாட்டி சில காலத்துக்கு முன் படித்தாலும் படித்தாள், அப்புசாமி பாடு திண்டாட்டமாகிவிட்டது.

‘புகையிலையை எந்த விதத்தில் உபயோகித்தாலும் அது இருதயத்தைப் பலவீனப்படுத்துகிறது’ என்று அதில் ஒரு கட்டுரை கூறியது.

“நீ பொடி போட்டால் உனக்கு அதன் அருமை தெரியும்!” என்று முணுமுணுத்தார் அப்புசாமி. “நான்தான் உனக்குத் தாலி கட்டிவிட்டு அவதிப்படுகிறேன். என் மூக்குமா உனக்கு வாழ்க்கைப்பட்டது?”

சீதாப்பாட்டி பொடி டப்பாவை மாடியிலிருந்தவாறே, எதிரே இருந்த மைதானத்தை நோக்கி வீசிப் போட்டாள்.

அப்புசாமி அடுத்த நிமிடம் மாடியிலிருந்து தடதடவென்று இறங்கினார்.

வழி மறித்த சீதாப்பாட்டி, “எங்கே? போகிறீர்கள்? மைதானத்துக்கு ஒடுகிறீர்களோ, நான் வீசிப் போட்டதைத் தூக்கி வர? மண்ணில் கொட்டிப் போயிருக்குமே எல்லாம்!” என்றாள்.

“பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறும்! பொடியுடன் சேர்ந்த மண்ணும் மணம் பெறும்! அந்த மைதானத்து மண்ணையாவது ஒரு சிட்டிகை போட்டுக் கொள்ளாவிட்டால் இரண்டு நிமிடத்தில் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும்!” அப்புசாமி மைதானத்து மண்ணைத் தழுவ ஓடினார்.

சீதாப்பாட்டி, “ஆ, ஐயோ, கிணறு வெட்டப் பூதம் கிளம்பியதே,. மண்ணை மூக்கில் போட்டுக் கொண்டால் உயிர் எதற்காகும்? அசல் பொடியை விட ஒருகால் அதுவே நன்றாயிருந்து, மண்ணையே போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிட்டால், என்ன செய்வேன்?” என்று பின்னாலேயே ஓடினாள்.

மைதானத்தை அடைந்த அப்புசாமியிடம் பின்தொடர்ந்து வந்த சீதாப்பாட்டி, “அதோ! அதோ! அந்த மாட்டைப் பாருங்கள்! நான் போட்ட பொடி டப்பாவை, என்னவோ ஏதோ என்று ஆசைப்பட்டு விழுங்கிவிட்டு அவதிப்படுகிறது பாருங்கள்!” என்று காட்டினாள்.

சிறிது தூரத்தில் ஒரு தெருப் பொறுக்கி மாடு “அக்சூ! அக்சூ!” என்று துள்ளித் துள்ளி சுமார் இருபது தும்மல் போட்டு விட்டு, மடேல் என்று தரையில் விழுந்துவிட்டது.

“பார்த்தீர்களா இந்தக் கோரக் காட்சியை? இனி மேலாவது திருந்துங்கள்,” என்று அப்புசாமியின் கரதலம் பற்றிக் கரகரவென்று வீட்டுக்கு இழுத்து வந்தாள்.

“கண்டவன் எழுதியதை நம்பி எனக்கு நீ தடை போடலாமா? உன் அறியாமையை ஆதாரபூர்வமாக அகற்றுவதற்கு இதோ இப்போதே கிளம்புகிறேன்?”

“என் இக்னரன்ஸா?”

“சந்தேகமென்ன? உனக்குத் தெரியும். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நாகரீகமிருப்பதுபோல ஒவ்வொரு சீதோஷ்ண ஸ்திதிக்குத் தகுந்த மாதிரி ஆரோக்யமும் உடல்நிலைகளும் மாறுபடுகிறது என்று. ஆரோக்கியத்துக்குத் தகுந்தபடி டாக்டர் யோசனை வெளியிடுகிறார்கள். ஒரு நோயாளிக்கு முட்டை கூடாது என்பார்கள்; இன்னொருத்தருக்கு முட்டை நிறையச் சாப்பிட வேண்டும் என்பார்கள். தமிழ்நாட்டில் தினமும் மூன்று வேளை குளிக்க வேண்டும். நல்லது. எஸ்கிமோவிடம் போய் இதையே கட்டாயப்படுத்தினால் எவ்வளவு மடத்தனம்?”

“ஐ கான்ட் காட்ச் யூ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஏதோ ‘ரீஸனபிள்’ ஆகப்பேசுவது மாதிரி நடிக்கிறீர்களே!”

“பார்த்தாயா? நீ இப்படி அவசர முடிவுக்கு வந்து விடுவாய் என்றுதான் நான் ஆதாரம் தேடிக்கொண்டு வரப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மேல்நாட்டு பத்திரிகையை ஆதாரம் காட்டி உன் கட்சியை நீ சொன்னாய். சரி, நான் நம் தமிழ்நாட்டு டாக்டர் எழுதியுள்ள ஒரு கட்டுரையைக் கொண்டு வந்து காட்டுகிறேன் பார். பொடி போடுகிறதிலுள்ள நாற்பது நன்மைகளையும் அது போடாவிட்டால் விளையும் எண்பது தீமைகளையும் ஆணித்தரமாகப் பாரா பாராவாக எழுதியிருக்கிறார். ‘சஞ்சாரி’ என்ற மாதப் பத்திரிகையில் அது கட்டுரையாக வந்திருக்கிறது. எந்த இதழ் ஞாபகமில்லை. நேரே இப்போது மூர்மார்க்கெட் போகிறேன். பொடி எனக்குத் திரண மாத்திரம். நான் பொடியை என்ன, பெண்டாட்டியையே கூடத் துறக்கத் தயார். ஆனால் நீ இப்படி அறியாமை காரணமாக வழிவழி வந்த நமது முன்னோரின் ஞானத்தைப் பழிப்பதை நான் சகிக்க மாட்டேன். வருவதற்குச் சிறிது நேரமானாலும் கவலைப்படாதே, பத்திரமாகப் போய்விட்டு ஆதாரத்துடன் வந்து சேர்கிறேன்.

அப்புசாமி வாக்கிங் ஸ்டிக்கையும் வெற்றிலைச் செல்லத்தையும் எடுத்துக் கொண்டு விறுவிறென்று நடக்கத் தொடங்கி விட்டார்.

“கொண்டு வரட்டும். அதையும் பார்த்து விடுவோம்” என்று சீதாப்பாட்டி, கறுவிக் கொண்டே சோபாவில் வந்து உட்கார்ந்து ‘ஸ்பெக்ஸை’ மாட்டிக்கொண்டு ‘டைஜஸ்ட் ‘கட்டுரையை மீண்டும் மீண்டும் படித்தாள்.

‘எந்தச் சீதோஷ்ண நாடாக இருந்தாலும். பொடி, கெடுதல், கெடுதல், கெடுதல்,’ என்று பன்னிரண்டாம் வாக்கியம் பேசுகிறதே, இது பொய்யா? கணவர் சொல்லும் விவரம் வந்த பத்திரிகை வரட்டுமே, பார்ப்போம் என்று காத்திருந்தாள்.

இரவு எட்டு மணிக்கு அப்புசாமி டாக்ஸியில் வந்து இறங்கினார்.

“ஸோ லேட்?” என்று கணவனை வரவேற்பதற்காக சீதாப்பாட்டி வாசல் விளக்கைப் போட்டாள்.

அப்புசாமி, “உஸ்ஸ்…” என்று மாடிப் படி ஏறினார்.

சீதாப்பாட்டி, “எங்கே உங்க மாகஸின்? கிடைக்கவில்லையா?” என்றாள்.
“கிடைக்கப்பட்ட பாடு போதும் என்றாகிவிட்டது,” என்றார் இன்னமும் எதையும் கொடுக்காமல்.

சீதாப்பாட்டி, சோபாவில் உட்கார்ந்த கணவனை இப்போதுதான் நன்றாகப் பார்த்தாள். திடுக்கிட்டாள் : “இதென்ன வேட்டி ஜிப்பா எல்லாம் கன்னங்கரேலென்று மை? எங்கேயாவது போய்த் தார்ப் பீப்பாய் மேல் விழுந்து விட்டீர்களா என்ன? இதற்குத்தான் தனியாக உங்களைப் போக நான் ‘அலௌ’ செய்வதில்லை. சொன்னால் கேட்கிறீர்களா?”

அப்புசாமி திகைத்தார். “மையா? மை.. ஏது மை? நான் எங்கே விழுந்தேன் தார்ப் பீப்பாய் மேல்?”

“அதுவாக வந்து விழுந்ததோ? முதலில் வேறு வேட்டி சட்டை போட்டுக் கொள்ளுங்கள். சேசே! சாமான்னியமாக இந்த மை போகாது போலிருக்கிறதே?” என்று பக்கத்தில் வந்து சீதாப்பாட்டி பார்த்த பிறகுதான் அப்புசாமியும் கவனித்தார். “ஆமாம். மை.. ஓ! ப்ரஸ்..” என்றவர் கப்பென்று நிறுத்திக் கொண்டார்.

“ப்ரஸ்ஸா? என்ன ப்ரஸ்?” என்றாள் சீதாப்பாட்டி.

அப்புசாமி சிறிது தடுமாறி, “ஒன்றுமில்லை. ஏதோ ஒரு பிரஸ்ஸுக்கு டிரம் நிறைய அச்சு மை ஏற்றிக்கொண்டு ஒரு வண்டி போனது. ஒருகால் அது உரசி விட்டுப் போனதோ என்னவோ? அதைப் பற்றி என்ன? நீ பத்திரிகையைப் படித்துப் பார். கொண்டு வந்திருக்கிறேன்,” என்று மடியில் வைத்திருந்த ஒரு மாதப் பத்திரிகையை வெளியே எடுத்து அதில் ஒரு பக்கத்தைப் பிரித்துக் காட்டினார்.

“ஓ! ஸஞ்சாரியா? மன்த்லியா? எந்த டாக்டர் எழுதியிருக்கிறான்?” சீதாப்பாட்டி பத்திரிகையை வாங்கி ஆராய்ந்தாள்.

“டாக்டரை, ‘அவன் இவன்’ என்று சொல்லாதே. உன் ‘டைஜஸ்ட்’ டாக்டரை வேண்டுமானால் அப்படிச் சொல்லிக்கொள்,” என்று ஆட்சேபித்தார் அப்புசாமி.

சீதாப்பாட்டி கட்டுரையை வாய் விட்டே படிக்க ஆரம்பித்தாள்.

‘பொடியின் மகிமை
டாக்டர் காமாட்சிநாதன்.
எம்.பி.பி.எஸ். பெடி போடுவதைப் பலா…’

அப்புசாமி முகத்தைச் சுளித்தார். “சரியாகப் படி. பெடி போடுவதை என்றா கம்போஸ் பண்ணியிருக்கிறான்! மடையன்ஸ்!”

சீதாப்பாட்டி அப்புசாமியை ஏற இறங்கப் பார்த்தாள். “இருக்கிறதைத்தான் படிக்கிறேன். டோன்ட் டைவர்ட் மை அட்டன்ஷன்!”

சீதாப்பாட்டி தொடர்ந்து படித்தாள் :

‘பெடி போடுவதைப் பலர் முட்டாள்தனமாகத் தப்பாக எண்ணுகிறார்கள். பொடி, நமது இந்திய நாட்டுக்கு முக்கியமாகத் தமிழ்நாட்டுக்கு மிக மிக இன்றி அமைத்ததுதுதுப. மகாராஜ ராஜ ஸ்ரீ சுபயோக சுப தினத்தினத்தில் எனது மகன்…’

அப்புசாமி பதறிப் போனார் : “என்ன, என்ன பேத்தலாகப் படிக்கிறாய்?”

சீதாப்பாட்டி ஒருமுறை முறைத்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள் :

…முக்கியமானனது. அது மூளையைச் சுறுசுறுப்பாக்குகிறது. பொடி போடுவதால் ஆயுல் நீடிக்கிறது. ஜலதோகம் பிடிக்காது. போடி போட்டி கிழவர்கள் பொடி போடாதா கிழவர்களை விட நீண்டநால் வாழ்கினார்கள். இது மிக மிக உண்மை. இதைத் தெரியாதவர்கள் சொல்லும் வார்த்தையோ, சில மேல் நாட்டுக்காரர்கள், பத்திரிகைகள் ஊலறுவதை நாம் செவி மடிக்க வேண்டியதிள்ளை….”

“நாசமாய்ப் போக!” அப்புசாமி தலை தலையாய் அடித்துக்கொண்டார்.

சீதாப்பாட்டி பத்திரிகையை மேலும் சிறிது புரட்டிவிட்டுத் தூக்கி எறிந்தாள். “டெரிபிள்! என் கண்ணே வலியெடுத்துப் போய்விட்டது. ஒரே ஒரு பாரா படிப்பதற்குள்! சகிக்க முடியாத பிரிண்ட்டிங் மிஸ்டேக்ஸ்! நான் படித்த இந்த ஒரு பக்கத்தில்தான் அதுவும் இப்படி!”

அப்புசாமிக்குக் கால்கள் கைகள் நெஞ்சுகள் லேசாக நடுங்கி வியர்க்கத் தொடங்கின.

‘தெரிந்து கொண்டு விட்டாளோ? நாசமாய்ப் போகிற குஜிலி பிரஸ்காரன்! ஆனால் அப்போதே சொன்னான், ‘அவசரப்படுத்தினீங்கன்னா, தப்புத் தவறு வந்துடும், அப்புறம் நான் பொறுப்பில்லை’ என்று. ஆனால் அதற்காக இப்படியா கண்ணராவி! ஏதோ கல்யாணப் பத்திரிகை மேட்டரையெல்லாம் கலந்து ஒரு பக்கம் அடித்துத் தொலைத்திருக்கிறான். இந்த வரைக்கும் பசை போட்டு அந்தத் தனிக் காகிதத்தை ஒட்டாமல், பின்னைக் கழற்றிச் செருகியிருக்கிறான். தொலைகிறது. நானாவது புரூஃப் சுத்தமாகப் படித்திருக்கலாம். அச்சாபீஸில் விளக்கு வெளிச்சம் இல்லை. என் கண்ணும் தெரியவில்லையே? எல்லாம் சோதனை! கடவுளே! அவளுக்கு மந்த புத்தி கொடு! அவள் என் மோசடியைத் தெரிந்து கொள்ளாதிருக்க வேண்டும். என் மூக்கு பிழைக்க வேண்டும்’ என்று மனத்துக்குள் அப்புசாமி பதறினார்.

சீதாப்பாட்டி சொன்னாள் : “முதல் வேலையாக அந்த டாக்டரை நாளை காலையில் ‘மீட்’ செய்வோம். நேரிலேயே கேட்கிறேன். ஐ டௌட் ஹிஸ் ஆதன்ட்டிஸிடி.”

“எதற்கு வீண் சிரமம்? ஒரு டாக்டரை அப்படிக் கேட்பது தவறு. நாகரீகக் குறைவு,” என்று அப்புசாமி வீணாக அணை போட முயன்றார்.

படுக்கையில் படுத்தபடி அப்புசாமி தவித்தார். ‘முந்த்ரா’ ஊழலை விடக் கேவலமான ஓர் ஊழலில் மாட்டிக்கொண்டு தவித்தார்.

நடு ராத்திரி.

அப்புசாமி மெதுவே மாடியிலிருந்து இறங்கினார்.

இரவு பன்னிரண்டுக்கு நழுவிய அப்புசாமி ஒரு மணி நேரம் கழித்து வந்து ஓசைப்படாமல் படுத்துக்கொண்டார்.

மறுநாள் மாலை. சீதாப்பாட்டி அப்புசாமியையும் அழைத்துக் கொண்டு டாக்டர் வீட்டை அடைந்தாள்.

டாக்டர் காமாட்சிநாதன் பொறுமையாக எல்லாத் திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு பிறகு, “என் கருத்து தவறு என்று நீங்கள் சொன்ன மாதிரியே பலர் தெரிவித்திருக்கிறார்கள். நான் அமெரிக்காவுக்கு என்னுடைய புரஃபசருக்கு இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். பதில் வரவேண்டும்,” என்றார்.

“அது வரை?” என்றாள் சீதாப்பாட்டி. “இவர் அதற்குள் அரை டன் பொடி தீர்த்து விடுவாரே?”

அப்புசாமியை டாக்டர், “சோதனை ரூமுக்கு ஒரு நிமிடம் வாருங்கள். உங்கள் தேக நிலையைப் பரிசோதித்து, உங்களுக்குப் பொடி நல்லதா கெட்டதா பார்க்கிறேன்,” என்று அழைத்துக் கொண்டு தனி அறைக்குப் போனார்.

சோதனை அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டதும் அப்புசாமி, டாக்டரின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு, “டாக்டர்! நேற்று நடுநிசியில் வந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்காக என்னைக் காப்பாற்றினீர்களே? உங்களுக்கு எப்படி நன்றியும் பீஸும் செலுத்துவேன்?” என்றார்.

டாக்டர் காமாட்சிநாதன், “அதெல்லாம் சரி. பெஞ்சியில் ஏறிப் படும்,” என்றார். “சோதனை நடத்த வேண்டும்.”

அப்புசாமி நடுங்கிப் போனார். ‘பாவி மனுஷா! நடு ராத்திரியில் வந்து உண்மையைச் சொல்லிக் கேட்டுக் கொண்டதற்கு இதுதானா பலன்?’ என்று எண்ணிக் கொண்டார்.

ஒரு மணி நேரம் டாக்டர் காமாட்சிநாதன் சோதனை நடத்திவிட்டு, வெளியே வந்தார் அப்புசாமியுடன்.

சீதாப்பாட்டி ஆவலுடன், “என்ன டாக்டர்? ஐ ஆம் வெரி ஆங்க்‌ஷஸ்…” என்றாள்.

டாக்டர் காமாட்சிநாதன் அப்புசாமி பக்கம் திரும்பி, “மிஸ்டர் அப்புசாமி! நீங்கள் பொடி போடக்கூடாது . அது மகாமகா கெடுதல் உங்கள் உடம்புக்கு. அத்தோடு, வெற்றிலை பாக்கும் போடக் கூடாது.வெற்றிலையை மெல்லாமல் இடித்துப் போட்டுக் கொள்வதால் அது சரியாக ஜீரணமாகாமல் உங்களுக்கு ஏதேனும் வயிற்றுக் கோளாறு ஏற்படலாம்.”

சீதாப்பாட்டி, “டாக்டர்! உங்களிடம் வந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று! ஓ மை காட்! சேவ் மை ஹஸ்பெண்ட்!” என்று தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டவள் மறு நிமிடம் அப்புசாமியின் கையிலிருந்து ஓலை வெற்றிலைச் செல்லத்தைப் பறித்து வெளியே எறிந்தாள்.

அப்புசாமி ஆத்திரத்துடன் மனைவியைப் பார்த்தார். ‘உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்’ என்றது அந்தப் பார்வை.

Print Friendly, PDF & Email

1 thought on “மஞ்சள் பிசாசே! கொஞ்சம் நில்!

  1. இந்த கதையை நான் ஏற்கெனவே படித்து இருந்தாலும் சிறுகதைகள் தளத்தில் மீண்டும் படிப்பது அதிக மகிஷ்ச்சியை தருகிறது. மேலும் ஜா. .ரா.சு.வின் அன்புக்கு பாத்திரமான சீடன் என்கிற வகையில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து வெளியிட்ட சிறுகதைகள் தள ஆசிரியர் குழுவுக்கு பாராட்டும் நன்றியும் உரித்தாக்குகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *