கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 10,378 
 
 

“ஏம்மா, கூடையிலே என்ன?”

“கத்திரிக்காய்! நீ வாங்கமாட்டே.”

“ஏன் நான் வாங்கமாட்டேன்?”

“விசை ஒரு ரூபா சொன்னால் நாலணாவுக்குக் கேட்பியே மகராஜி.”

“பின்னே நீ கேட்டபடியே கொடுத்துடக் கொட்டியா வைத்திருக்கிறது இங்கே? விலையைச் சொல்லு.””

“அதான் சொன்னேனே?”

“கூடையை இறக்கு முன்னே? பிஞ்சோ முத்தலோ? நல்ல இளசாக இருக்குமா?”

“எவ்வளவு வேணும்?”

“எனக்கு ஒரு ரெண்டு விசை வேணும். அதைப் பற்றி என்ன?”

“அப்புறம் நீ வம்பு பண்ணுவே, பத்து பலம் போதும்னு.”

“அட! நான் வாங்குகிறேனா இல்லையா பாரேன். கூடையை இறக்கு கீழே.”

“கூடையை இறக்குவதிருக்கட்டும். விலையைக் கேளுங்க முன்னே.”

“இதோ பார். இன்னைக்கு வெட்டியாப் பேசிப் பேரம் பண்ணப் போவதில்லை. பருப்பைக்கூடக் கொதிக்கப் போட்டுவிட்டேன். நீயாக நியாயமாக ஒரு விலையைச் கொடுத்துவிடு. உன் வயத்திலே நான் அடிக்கவில்லை.”

“துட்டு இன்னிக்கே கொடுத்டுவாயில்லையா?”

“அடப் பெரிய மகாத் துட்டு? உன் கிட்டே எத்தனை தடவை கடன் சொல்லியிருக்கிறேன்?”

“அதில்லம்மா, பத்து ரூபா நோட்டு ஒண்ணை வச்சிட்டுக் காட்டிக்கிட்டேயிருப்பியே மாசக் கணக்காக?”

“அந்த இடக்குப் பேச்செல்லாம் பேசாதே. நான் கெட்ட கோபக்காரி. ஆமாம் நல்ல தராசுதானே வெச்சிருக்கே?”

“அதெல்லாம் ஞாயமாயிருக்கும். விலையைச் சொல்லுங்க நேரமாவுது.”

“அட, எனக்கு மட்டும் ஆகலியா நேரம்? காயைப் பார்த்தில்லே விலையைக் கேக்கணும்? அதென்ன அது உன் கழுத்திலே புதுப் பாஷன்லே என்னவோ போட்டிட்டிருக்கே?”

“அதுங்களா? அது என் வீட்டுக்காரரு செய்துபோட்டது?”

“இவ்வளவு நல்லா இருக்கிறதே வேலைப்பாடு. தங்கம்தானே?”

“அதென்ன அப்படிக் கேட்டுட்டேயே அம்மா? பாடுபட்டு ஒழைச்சிச் சம்பாதித்ததில பண்ணிப் போட்டுகிட்டுது அம்மா. அசலுத் தங்கம்? மூணரைப் பவுன் ஆச்சே?”

“கோவுச்சுக்காதே. கஷ்டப்பட்டு நீ ஏமாந்து விட்டாயோ என்று கேட்டேன். நேரே சொல்லிப் பண்ணினாயா? இல்லே கடையிலே ‘ரெடிமேடா’ வாங்கினாயா? கூலி எவ்வளவு தந்தே? பார்க்க வெகு லட்சணமாக இருக்கிறதே.”

“கடையிலே ரெடிமேடாகத்தான் வாங்கியாந்தார்.”

கடைபேர்கூட அப்போ போட்டிருக்குமே? எங்கே கொஞ்சம் கழட்டேன்தான் பார்ப்போம். நான்கூட இந்தப் பேஷன்லே ஒன்று செய்து கொள்ளணும்ணு ஆசையாயிருக்கிறது. கடை பேரு என்ன சொன்னே?

“என்னவோ சொன்னாரு?”

“கழட்டேன் பார்ப்போம்.”

(காய்கறிக்காரி, கூடையைத் தலையிலிருந்து கீழே இறக்கி வைத்துவிட்டுக் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழட்டி எடுத்து நீட்டுகிறாள்.)

“சரி, சரி. கூடையைத் தூக்கு! இது என்ன ஒரே சொத்தலும் பூச்சியுமாக இருக்கிறதே? நீ வீசை நாலணாவுக்குக் கொடுத்தால்கூட நான் வாங்கத் தயாராக இல்லை. இந்தக் காயைத் தலைமேல் வைத்துக்கொண்டுதான் கீழே இறக்க மாட்டேன் விலை பேசாமல் என்றாயா? நாளைக்கு நல்ல காயாகக் கொண்டுவா, ஒரு வீசை வாங்கிக்கொள்கிறேன்.”

(கதவைச் சாத்துகிறாள் எஜமானியம்மாள்.)

ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன் (பி:சூன் 1, 1932) பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *