பதினேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கருணா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 1,765 
 

பதினேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கருணா சொன்ன கை பிடித்த கதை

“கேளாய், போஜனே! ‘ஆட்டுப்பட்டி, ஆட்டுப்பட்டி’ என்று ஒர் ஊர் உண்டு. அந்த ஊரிலே ‘ஆண்டியப்பன், ஆண்டியப்பன்’ என்று ஒரு குடியானவன் உண்டு. காய்கறித் தோட்டம் போட்டுப் பிழைத்து வந்த அவன், வாரத்துக்கு ஒரு நாள் தன் தோட்டத்தில் விளையும் காய்கறிகளுடன் அடுத்த ஊரில் கூடும் சந்தைக்குப் போவான். அங்கே, தான் கொண்டுபோன காய்கறிகளை விற்றபின், விற்று முதலான காசை அவன் ஒரு முறை அங்கேயே எண்ணிப் பார்ப்பான். எண்ணிப் பார்த்தபின் அதை ஒரு பையில் போட்டுக் கட்டி இடுப்பில் செருகிக்கொண்டு, காலியான கூடையைத் தூக்கித் தலையில் கவிழ்த்துக்கொண்டு, ஏதாவது ஒரு சினிமாப் பாட்டை வழி நெடுகப் பாடிக்கொண்டே வரும் அவன் பொழுது சாய்ந்த பின் வீடு திரும்புவான். வாசலில் அவன் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அவனுடைய மனைவி அன்னலட்சுமி, ‘இன்று எனக்கு என்ன வாங்கிக் கொண்டு வந்தீர்கள்?’ என்பாள்; ‘மருக்கொழுந்து’ என்பான் அவன். ‘அவ்வளவுதானா?’ என்று அவள் அவனைத் தன் கண்ணால் ஒரு வெட்டு வெட்டிக் கேட்டுக்கொண்டே, அவன் தலையிலுள்ள கூடையை எடுத்து ஒரு மூலையில் வீசி எறிவாள். ‘இல்லை; லாலாக் கடை மிட்டாயும் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன்!’ என்று சொல்லிக் கொண்டே அவன் உள்ளே போவான். அவள் அவனைத் தொடர்ந்து சென்று, அவன் தன் இடுப்பில் செருகி வைத்திருக்கும் பணப்பையை வெடுக்கென்று பிடுங்கி, ‘இன்று எவ்வளவுக்கு விற்றுக் கொண்டு வந்திருக்கிறீர்கள்?’ என்ற கேட்டுக்கொண்டே அதன் முடிச்சை அவிழ்ப்பாள். ‘இருபத்தெட்டுக்கு!’ என்பான் அவன். ‘நிஜமாகவா?’ என்று கேட்டுக்கொண்டே அவள் விளக்கடிக்குச் சென்று, மீண்டும் அதைக் கீழே கொட்டி எண்ணிப் பார்ப்பாள். அங்ஙனம் எண்ணிப் பார்க்குங்காலையில் ‘குப்’பென்று விளக்கு அணையும். ‘பாழாய்ப்போன காற்று எங்கிருந்தோ வந்து இந்த விளக்கை அனணத்துவிட்டதே? அம்மா, இங்கே வந்து இந்த விளக்கைக் கொஞ்சம் ஏற்று, அம்மா!’ என்று அவள் அப்பொழுதும் விடாமல் பணத்தை எண்ணிக்கொண்டே தன் அம்மாவுக்குக் குரல் கொடுப்பாள். அடுக்களையில் இருக்கும் அவள் அம்மா அங்கிருக்கும் விளக்கைக் கொண்டு வந்து அந்த விளக்கை ஏற்றிவிட்டுப் போவாள். அன்னலட்சுமி தொடர்ந்து பணத்தை எண்ணி முடித்துவிட்டு, ‘இருபத்தெட்டு என்றீர்களே, இருபத்துமூன்றுதானே இருக்கிறது?’ என்பாள். ‘அப்படியா? நான் சரியாக எண்ண வில்லையோ, என்னவோ?’ என்பான் அவன். ‘நீங்களும் உங்கள் கணக்கும்!’ என்று அவன் கன்னத்தில் ஓர் இடி இடிப்பாள் அவள். ‘ஆசையோடு இடிக்கிறாளாக்கும்!’ என்று அவன் அதையும் வாங்கிக்கொண்டு இளித்து வைப்பான்.

இப்படி ஒரு வாரமல்ல, இரண்டு வாரமல்ல; ஒவ்வொரு வாரமும் அவன் கணக்குக்கும் அவள் கணக்குக்கும் ஐந்தோ, ஆறோ குறைந்துகொண்டே வந்தது. அப்படிக் குறையும் போதெல்லாம் விளக்கும் தவறாமல் ‘குப், குப்’ பென்று அணைந்துகொண்டே வந்தது. இதில் ஏதோ மர்மம் இருக்க வேண்டும் என்பதை ஒருவாறு ஊகித்த ஆண்டியப்பன், சந்தையிலிருந்து கொஞ்சம் வெளிச்சத்தோடு வீட்டுக்குத் திரும்ப முயன்றான்; முடியவில்லை. ‘நான்தான் அங்கேயே ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக எண்ணிப் பார்த்து விட்டு வருகிறேனே, அன்னலட்சுமி! இருக்கிற வேலையையெல்லாம் விட்டுவிட்டு நீ ஏன் இன்னொரு தடவை அனாவசியமாக எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று ஒரு முறை கொஞ்சம் நாசூக்காகக்கூடச் சொல்லிப் பார்த்தான்; ‘பணத்துக்குத்தான் நான் சொந்தக்காரியில்லை; எண்ணிப் பார்ப்பதற்குக்கூடவா சொந்தக்காரியில்லை?’ என்று அவள் உடனே அவன்மேல் கோபித்துக்கொண்டு விட்டாள். அன்றிரவு அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் அவன் பாடு ‘போதும், போதும்’ என்று ஆகிவிட்டது. ‘இதென்ன வம்பு! இவளுடைய கோபத்துக்கு ஆளாகாமல் இந்த மர்மத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?’ என்று அவன் யோசித்தான், யோசித்தான், அப்படி யோசித்தான்; ஒன்றும் புலப்படவில்லை. கடைசியாக மிஸ்டர் விக்கிரமாதித்தர் என்று யாரோ ஒருவர் ஏதோ காரியமாக அந்த ஆட்டுப் பட்டிக்கு வந்திருப்பதாகவும், அவரிடம் யார் எதற்கு வழி கேட்டாலும், அவர் உடனே தக்க வழி கூறி அவர்களைத் தடுத்தாட்கொள்வதாயும் யாரோ சொல்ல, ‘அப்படியா சங்கதி?’ என்று ஆண்டியப்பன் அவரைத் தேடி ‘ஓடு, ஓடு’ என்று ஓடுவானாயினன்.

அவன் குறை கேட்டார் விக்கிரமாதித்தர்; ‘கவலை வேண்டாம்; நான் சொல்லுகிறபடி செய்!’ என்றார். ‘விளக்கு அணைந்ததும் நீ அவளுடைய கைகள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக்கொள்; ‘கண்ணே! வாழைத் தண்டைப் போலக் கைகள், அலேக்! வெண்டைக்காயைப் போல விரல்கள் அலேக்!’ இப்படி ஏதாவது சொல்லி, அவள் அம்மா அடுக்களையிலிருந்து விளக்கை கொண்டு வரும்வரை அவளை வர்ணி; அவள் வந்ததும் கைகளை விட்டுவிடு. அப்புறம் பார், அவள் கணக்கும் உன் கணக்கும் சரியாக வருவதை!’ என்றார். ‘அப்படியே செய்கிறேன்!’ என்று அவன் வந்தான்; அவர் சொன்னபடி செய்தான். கணக்கும் சரியாக வந்தது; ‘அட, என் ராசா! சினிமாக்காரிபோல அவ்வளவு அழகாவா இருக்கேன் நான்?’ என்று அவளைக் கட்டி அணைத்துக் கொள்ளும் அளவுக்கு அவனிடம் அவளுக்கு அத்தனை நாளும் இல்லாத காதலும் பிறந்தது!”

பதினேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான கருணா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *