வள்ளி தந்த படிப்பினை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,579 
 

வள்ளி ஓர் ஏழைச் சிறுமி. ஆனால் பதினோரு வயது நிரம்பிய புத்திசாலிப் பெண். மலையடிவார கிராமம் ஒன்றில் அவள் தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். வள்ளி, நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பாள். அது அவள் தானாகக் கற்றுக் கொண்டது. அவள் எப்பொழுதும் தன் கைவசம் புல்லாங் குழல் ஒன்று வைத்திருப்பாள்.

வள்ளி தந்த படிப்பினைவள்ளியின் தாய் தந்தை இருவரும் வயதானவர்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள். வேலைக்குச் செல்லாமல் அவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். வள்ளிதான் தினமும் காட்டுக்குச் சென்று கிழங்குகளையும் கனிகளையும் சேகரித்துக் கொண்டு வருவாள். அவற்றைப் பெற்றோருக்குக் கொடுத்துத் தானும் உண்டு பசியாறி வந்தாள். இது அவளின் தினசரி வேலைகளில் ஒன்று.

ஒருநாள் காட்டில் சேகரித்த கிழங்குகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். சுடுவெயில் நேரம்; அவளுக்குத் தாகம் எடுத்தது. அருகாமை ஓடைப் பக்கம் நீர் அருந்தப் போனாள். ஓடை நீரின் சிலுசிலுப்பை உணர்ந்ததும் வள்ளிக்கு மகிழ்ச்சி பிறந்தது!

ஓடையருகே அமர்ந்து கொண்டு, இடுப்பில் செருகி வைத்திருந்த புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் சென்றிருக்கும்… அவள் முன்பாக இரண்டு சேவகர்கள் வந்து நின்றனர். அவர்களைப் பார்த்தவுடன் அரண்மனைக் காவலர்கள் என்பதைப் புரிந்து கொண்டாள்.

‘சிறுமியே, உன் பெயர் என்ன? இந்தக் காட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார்கள் அவர்கள்.

“என் பெயர் வள்ளி. நான் காட்டில் கிழங்கு எடுக்க வந்தேன்!’

என்ற வள்ளி தன் கைவசம் இருந்த கிழங்குக் கொத்தை எடுத்து அவர்கள் முன் காட்டினாள்.

“அருகாமையில்தான் அரசர் இருக்கிறார். அவருக்கு உன் புல்லாங்குழல் இசை கேட்டுவிட்டது. யாரென்று பார்த்து அழைத்து வரச் சொன்னார்’ என்ற சேவகர்கள், வள்ளியை மன்னரிடம் அழைத்துச் சென்றனர்.

வள்ளி, இதுவரை மன்னரை அருகாமையில் கண்டதில்லை. அவர் இந்தக் காட்டுக்கு அடிக்கடி வேட்டையாட வருவார் என்பது மட்டும் தெரியும். மன்னருக்குத் தனது புல்லாங்குழல் இசை பிடித்துவிட்டது போலும்!

சரிதான்… இன்றைக்கு மன்னரை மிக அருகாமையில் பார்க்கப் போகிறாள்.

மன்னர் தன்னிடம் என்ன கேட்பார்? தன்னைப் பற்றியா? தன் குடும்பத்தைப் பற்றியா? இப்படி ஏராளமான கேள்விகள் மனதில் தோன்ற, மிகுந்த யோசனையுடன் வள்ளி சென்றாள். அவளது எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக அமைந்தது மன்னருடனான அவளுடைய சந்திப்பு!

வேட்டைக்கு வந்த இடத்தில், தாற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரம் ஒன்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் மன்னர்.

மிகுந்த வறுமைத் தோற்றத்தில் இருந்த வள்ளியை, அவர் ஒரு பூச்சியைப் பார்ப்பது போலப் பார்த்தார்.

“ஓ..! நீதான் அந்தப் புல்லாங்குழல் ராணியா? புல்லாங்குழல் நன்றாக வாசிப்பாயா? எங்கே வாசி கேட்கலாம்.. நான் சிறிது நேரம் கண்ணயர்ந்து கொள்கிறேன்’ என்றார் மன்னர் எள்ளிநகையாடும் குரலில்.

வள்ளிக்கு அதிர்ச்சியாக இருந்தது! ஒரு தேசத்தை ஆளும் அரசருக்கு, ஒரு சிறுமியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாதா? இந்த வயதான அரசரின் அரண்மனையில் வள்ளியின் வயதையொத்த சிறுவர்கள் யாருமில்லையா? வள்ளி குழம்பிப் போனாள்.

மன்னர், தன்னை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது! அவருக்காக, அவள் புல்லாங்குழல் இசைக்க விரும்பவில்லை. மன்னரின் வார்த்தைகள் கட்டளை ஆயிற்றே? எப்படித் தவிர்ப்பது என்று யோசித்தாள். சற்றே யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள்.

நிதானமாகப் பேச ஆரம்பித்தாள். “மன்னா! ஏறுவெயில் நேரம்தான்… இருந்தாலும் ஈரக்காற்று அவ்வப்போது உடலைத் தழுவிச் செல்லவே செய்கிறது. ஓடைநீர் சலசலக்கிறது. காய்ந்த இலைச்சருகுகளோ சரசரக்கின்றன. அங்கும் இங்குமாய் பறவைகளும் பண் இசைக்கின்றன. வண்டுகளின் ரீங்காரமும் கேட்கின்றது. ஒட்டுமொத்த கானகமே தங்களுக்காகக் கானம் இசைக்கும் போது, தாங்கள் சிறுதுயில் கொள்ளத் தடை ஏது? என்னை மன்னியுங்கள் மன்னா..!’ என்று மடமடவென்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு சட்டென்று அகன்று போனாள்.

ஒரு சிறுமியிடமிருந்து இப்படி ஒரு சாதுர்யமான பதிலை மன்னர் எதிர்பார்க்கவில்லை! ஒருகணம் அசந்து போனார். அவர் உட்பட அங்கிருந்த யாரும் வள்ளி செல்வதைத் தடுக்கவில்லை!

வீட்டுக்கு வந்து, கிழங்குகளைச் சமைத்து பெற்றோருக்குத் தந்துவிட்டுத் தானும் உண்டு சற்று ஓய்வாக இருந்தாள். மாலை மயங்கிக் கொண்டிருந்தது. அப்போது குடிசைக்கு வெளியே ஆள் அரவம் கேட்டது. எழுந்து சென்று வெளியே பார்த்தாள். மன்னர்தான் தனது படை பரிவாரங்களுடன் வந்திருந்தார்.

இதற்குள் அக்கம்பக்கம் கூட்டம் சேர்ந்துவிட்டது. தனது குதிரையை விட்டு இறங்கி வந்த மன்னர் வள்ளியின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டபடி, “என்னை மன்னித்து விடு, வள்ளி!’ என்றார்.

வள்ளிக்குக் கூச்சமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது! ஒன்றும் புரியவில்லை!

“தேசத்தை ஆளும் ஒரு ராஜா தனது குடிமக்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டுமே தவிர ஆணவத்தைக் காட்டக்கூடாது. அதுவும் ஒரு சிறுமியிடம் தனது அகங்காரத்தைக் காட்டக்கூடாது. நான் மறந்துபோன ஒரு விஷயத்தை எனக்கு ஞாபகப்படுத்தி விட்டாய், வள்ளி! மிக்க நன்றி!’ என்றார் மன்னர், நெகிழ்வான குரலில். அவரே தொடர்ந்து பேசினார்…

“கற்றறிந்த எத்தனையோ அறிஞர்கள், பண்டிதர்கள் தினமும் என்னை நாடி வருகின்றனர். அவர்கள் என்னிடமிருந்து எதையாவது பெற்றுச் செல்வதற்காக, என்னைத் துதி பாடக் கொஞ்சமும் தயங்குவதில்லை! என்னிடம் எவ்வளவு கூடுதலாகப் பெற முடியும் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும். அவர்கள் யாரும் தங்கள் மேதைமை குறித்து ஒருபோதும் பெருமிதம் கொண்டதில்லை! ஆனால் ஒரு சிறுமியான நீ, இளங்கன்று பயமறியாது என்பதுபோலத் தன்மானம் எத்தனை உயர்ந்தது என்பதை எனக்கு அழகாக உணர்த்திவிட்டாய். உனக்கு என்ன வெகுமதி வேண்டும்? கேள்… நான் தருகிறேன்… வள்ளி!” என்று முடித்தார்

மன்னர்.

“என் பெற்றோர்கள் இருவரும் இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெற வைத்தியம் செய்ய வேண்டும். விட்ட பள்ளிப் படிப்பை நான் மீண்டும் தொடர வேண்டும்! இதுதான் எங்களுக்கு உண்மையான வெகுமதி, மன்னா..!’ என்று தழுதழுத்தாள் வள்ளி.

“நீ கேட்டது எல்லாம் நிச்சயமாக உனக்குக் கிடைக்கும்படி செய்கிறேன். நான் வருகிறேன்..!’ என்ற மன்னர் தனது பரிவாரங்களுடன் கிளம்பிப் போனார்.

– ஜனவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *