(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விமான நிலையத்திலேயே அந்த குண்டு சர்தார்ஜியைப் பார்த்தேன். புல்டோஸர் அளவுக்கு தொந்தக்கா பொந்தக்கா என்று நடந்து வந்து பருமனான வெள்ளரி விரல்களால் தன் டிக்கெட்டை எடுத்துக் கவுண்டரில் நீட்டினார்.
“கடவுளே! இந்த ஆசாமி என் பக்கத்தில் வந்து தொலைக்கக் கூடாது” என்று வேண்டிக் கொண்டேன். ட்ரான்சிட் லவுள்ஜில் பெண்டுலம் போல அசைந்து அசைத்து மிகுந்த பிரயாசையுடன் ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார விழைந்த போது அது விரிந்து சப்தம் போட, இடம் போறாமல் நின்று கொண்டார். பைக்குள் வைத்திருந்த பொட்டலத்தில் மடித்த ஒரு கட்லெட், ஒரு கேக் இவைகளை எடுத்து உண்ணத் தொடங்கினார். வாழ்க்கை பூராவும் நிறுத்தாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் போலத் தோற்றமளித்தார், ‘ஏரோ ப்ரிட்ஜை’க் கடந்து உள்ளே சென்றதும் கடவுள் என் பிரார்த்தனையைக் கேட்டு விட்டார்.
ஏர்பஸ் விமானத்தில் இருபத்தேழாம் வரிசையில் சீட் கிடைத்தால் அதிர்ஷ்டம். கால் நீட்டிக் கொள்ள நிறைய இடம், சாப்பாட்டுத் தட்டுக்கு முன் சீட்டின் முதுகைப் பிரித்து, மார்பு வரை அசௌகரியமாக அழுத்திக் கொள்ள வேண்டியதில்லை. ‘ஆரா’மாகப் பிரயாணம் செய்யலாம். மேலும் டேக் ஆஃப் லாண்டிங் போது விமானப் பணிப்பெண் இருவர் எதிர் இருக்கையில் ஒரே திசையில் பார்த்துக் கொண்டு அமருவார்கள். சிலவேளை புன்னகைப்பார்கள். இதெல்லாம் போனஸ் சந்தோஷங்கள்.
ஆனால் இருபத்தேழாம் வரிசையில் ஓர் அபாயம் உள்ளது. கைக்குழந்தைத் தாய்மார்கள் அல்லது நிறை கர்ப்பவதிகளுக்கு சௌகரியத்தை உத்தேசித்து அந்த வரிசையில் இடம் கொடுப்பார்கள். சில சமயம் மந்திரிகள். அப்படி யாரும் கர்ப்ப ஸ்திரீயோ, மந்திரியோ வராததால் நான் மகிழ்ச்சியுடன் கால்மேல் கால் போட்டுக் கொள்ள, என் சந்தோஷம் அதிக நிமிஷங்கள் நீடிக்கவில்லை.
செக் – இன் கவுண்டரில் பார்த்த அந்த குண்டு சர்தார்ஜி ஒவ்வொரு வரிசை எண்ணாகத் தன் டிக்கெட்டோடு ஒத்துப் பார்த்துக் கொண்டே வந்தவர், என் வரிசையில் நின்றார், என் அருகில் அமர்ந்தார். ஒரு சர்தார்ஜி என்று சொல்வதை விட கிட்டத்தட்ட மூன்று சர்தார்ஜி. ஏராள தாராளமாக இருந்தார். முழுசாக சீட்டில் உட்கார முடியவில்லை. வயிற்றில் இறுக்கிக் கொள்ள சீட் பெல்ட் நீளம் போதவில்லை. உட்கார்வதற்குள் கொல்லன் துருத்தி போல் மேல் மூச்சு வாங்கியது. என் அருகே உட்கார இருக்கையின் பக்க நீட்டலில் வைத்துக் கொண்ட கை பிதுங்கி, என் மார்மேல் வந்து இடித்தது. நான் எத்தனைதான் இந்தப் பக்கம் ஒதுங்கிக் கொண்டாலும் அவர்மேல் படாமல் இருக்க முடியவில்லை. நான் அவ்வளவு தொட்டாற் சுருங்கி இல்லையென்றாலும் இரண்டரை மணிநேரப் பிரயாணம் முழுவதும் குண்டு சர்தார்ஜியால் இவ்வாறு நெருக்கப்பட்டு இருபத்தைத்து விழுக்காடு சீட்டில் முழங்கால்களுக்கு இடையில் இரண்டு கைகளையும் செருகிக் கொண்டு பயணம் செய்வதை நிச்சயம் விரும்பாதவன்.
ஹாஸ்டஸைக் கூப்பிட்டு வேறு சீட்டு கிடைக்குமா என்று தாழ்ந்த குரலில் விசாரித்தேன். சர்தார்ஜி என்னை ஓரக் கண்ணால் பார்த்து, பையிலிருந்து பிரயாசையுடன் ஒரு புத்தகத்தை எடுத்து மடிமேல் வைத்துக் கொண்டு அரைக் கண்ணாடி அணிந்து கொண்டார். நான் அதற்கு மேல் முடியாதபடி நெற்றியைச் சுருக்கிக் கொண்டு உலகத்தின் சகல ஜீவராசிகள் மேலும் வெறுப்பாக இருந்தேன். இன்னும் ஒதுங்கி உட்கார, இன்னும் நெருக்கப்பட்டு, என்னைக் கால்பாகமாக சுருக்கிக் கொண்ட பின்னும் உடல் அவர் மேல் பட்டது.
***
‘சாரி சார்! தி ஃப்ளைட் இஸ் ஃபுல்” என்று புன்னகைத்தான், என்னை நோக்கி வந்த விமானினி.
இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் ரெண்டு டிக்கெட் வாங்கி, இடையில் இருக்கும் தடுப்பை நீக்கும் வசதி மேல் நாட்டில் உள்ளது என்று சொல்ல விரும்பினாலும் சர்தார்ஜியின் ஆகிருதியை யோசித்துப் பேசாமல் இருந்து, முகத்தையும் நெற்றியையும் இன்னமும் சுண்ட வைத்துக்- கொண்டேன். சாதார்ஜி என் தர்மசங்கடத்தைப் பற்றிக் கவலைப்படாமல் திமிங்கல மூச்சு விட்டுக் கொண்டு இசுனாமிஸ்ட் பத்திரிகையைப் பிரித்து வைத்து படிக்க முற்பட்டார். அரைக் கண்ணாடி மூலம் என்னைப் பார்த்து “எம் ஐ இன்கஸ்வீனியன்சிங் யூ” என்றார்.
உலகத்திலேயே மிகையற்ற வாக்கியம்.
“இல்லை” என்றேன், ‘ஆம்’ என்பதற்கு பதில்.
இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் ஏன் மனுஷராய்ப் பிறக்கிறார்கள்? திமிங்கலமாகவோ, காண்டாமிருகமாகவோ அல்லது அன்று ‘இந்தியன்’ ஷூட்டிங்கில் பார்த்தேனே. அந்த ஓவர் சைஸ் பறவையாகவோ பிறந்து, கடலிலோ கூண்டிலோ இருக்க வேண்டியவர்கள்.என்னத்துக்காக ஏ 319ல் வருகிறார்கள்!
இல்லை, இது சில வேளை வம்சத்தில் உண்டு என்றும் சொல்வார்கள். பார்த்தால் சாப்பிட்டுப் பெருத்தவர் போலத்தான் தோன்றுகிறார். இவர் யார்? பிறக்கும் போது எத்தனை பவுண்டு இருந்திருக்கும் குழந்தை? சாப்பிட்டு சாப்பிட்டு இப்படி பருமனான ‘சூமோ’ சண்டைக்காரனா, இல்லை டீவியில் பாசாங்கு சண்டைபோடும் ரெஸ்லிங் பவுண்டேஷன் ஆசாமியா என்றெல்லாம் பலவாறு யோசித்தேன்.
***
ஹாஸ்டஸ் வழக்கம்போல் ஆக்சிஜன் மாஸ்க இத்யாதிகளை இயந்திரத்தனமாக அறிவித்துவிட்டு எங்கள் எதிரில் டேக் ஆப் சமயத்துக்காக உட்கார்ந்து கொள்ள, அவளைப் பார்த்து “இஸ் மோனா ஆன் டியூட்டி?” என்று கேட்டார்.
“ஷி இஸ் ஆன் பாம்பே ஃப்ளைட் சார்” என்றாள் அவள் புன்னகை மாறாமல் அத்தனை க’ன’வருடன் பேசுவதில் எவ்வித தர்ம சங்கடமும் சலனமும் இன்றி. இதற்கெல்லாம் அவர்களுக்குப் பயிற்சி தருகிறார்கள் போல! நான் மட்டும் ஹாஸ்டஸாக இருந்தால் சுருக் கென்று சிரித்திருப்பேன்.
“கேன் யு கெட்மி எ கிளாஸ் ஆப் வாட்டர்?”
“டேக் ஆப் ஆனதும் முதல் காரியமாகக் கொண்டு வருகிறேன்” என்றாள்,
விமானம் உயர்ந்து, சீட்பெல்ட் விளக்குகள் அணைந்ததும் பளாஸ்டிக் தம்ளரில் அந்தப் பெண் தண்ணீர் கொண்டு வந்து கால் பட்டனை அணைக்க, சர்தார்ஜி தன் பைக்குள் ளிருந்து மாத்திரை எடுத்து அதை வாய்க்குள் அனுப்ப முற்பட்ட போது அது உருண்டு கீழோ விழுந்தது.
சாதார்ஜியால் குனிந்து பார்க்க முடிய வில்லை. வயிறு மறைத்தது.
“சாரி, நீங்கள்தான் அந்த மாத்திரையை எடுத்துத் தரவேண்டும்! என்னால் குனிந்து பார்க்க முடியாது.”
“ப்ளீஸ் கால் தி ஹோஸ்டஸ்” என்றேன்.
கால் பட்டனை மறுபடி. அழுத்தி அவளைக் கூப்பிடுவதற்குள் அவருக்கு அலறலாக ஒரு தும்மல் வந்து தும்மி, மூக்கை ஹனர் என்று பண்ணிக் கொண்டு ‘எக்ஸ்யுஸ்மி’ என்று பொதுவாக சொல்லிக் கொண்டே என் பக்கத்தில் இருந்த ‘ஸ்டேட்ஸ்மன்’ பேப்பரை எடுத்து வைத்து அதன் க்ராஸ்வோர்டை மடக்கிக் கொண்டார்.
எனக்கு ஆத்திரம். என ஜாதகராசி! எந்த நல்லது ஏற்பட்டாலும் கூடவே ஒரு குறக்களி இருக்கும். இருப்பதற்குள் நல்ல சீட் கிடைத்தால் இந்த மாதிரி சக பயணி வந்து சேருவான்.
***
ஹாஸ்டஸைக் கூப்பிட்டு, “வேறு சீட் டில் யாரேனும் சிறுவர்கள் இருந்தால் இடம மாற்றிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கும் சௌகரியம்; என் சக பயணிக்கும் சௌகரியம்” என்றேன்.
“லெட்மி ஸீ சார். ப்ரேக் பாஸ்ட் பரிமாறிய பின் முதல் காரியமாக இதை கவனிக்கிறேன்” என்றாள். சர்தார்ஜி என் முறையீடுகளைக் கவனித்தாலும் கவனிக்காததுபோல் சாக்லேட் சிப்ஸிலும் க்ராஸ் வோர்டிலும் ஆழ்ந்திருந்தார். டைம்ஸ் குறுக்கெழுத்தைப் படபடவென்று நிரப்பிக் கொண்டிருந்தது வேறு எனக்கு வெறுப்பாக இருந்தது. சாக்லேட் வாசனையுடன் கரக் கரக்கை ஒரு முறை நிறுத்திவிட்டு என்னைச் சிறிய கண்களால் பார்த்து, “ஸாரி! நான் இரண்டு சீட்டு கேட்டுத்தான் வழக்கமாக வாங்கிக் கொள்வது. இன்று ப்ளைட் நிரம்பியிருந்ததால் கிடைக்கவில்லை. எனக்கு எப்படியும் டில்லி போயே ஆக வேண்டும்! ஒரு டிஸ்க்ஷன் இன்று.
“எனக்கு இந்த உடல் பெரிய பிரச்னை, எங்கு போனாலும் இதையும் கூட எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது” என்று சிரித்து பதில் புன்னகையை என் முகத்தில் தேடினார்.
முப்பத்தைத்து, நாற்பது வயதுதான் இருக்கும். முகத்திலும் தோள் பட்டையிலும், முழங்கையிலும் வயிற்றிலும் தொடைகளிலும் மடிப்பு மடிப்பாக கிடைத்த இடங்களில் எல்லாம் அவன் சாப்பிட்ட சாப்பாடெல்லாம் மழைக்காலத்துக்கு சேகரித்து வைத்திருந்தது போல.
“சில ஓட்டல்களிலும் இந்தப் பிரச்னை உண்டு! ரூம் கதவுக்குள் நுழைய முடியாது. மல்லாக்காகப் படுக்க முடியாது. படுத்தா எழுந்திருக்க க்ரேன் வேண்டும். அதனால் எப்போதும் குப்புறத்தான் படுப்பேன்.”
இப்போதாவது சிரிக்கிறேனா என்று பார்த்தார். நாள் ஒத்துழைக்காததால், டைம்ஸ் குறுக்கெழுத்தைத் தொடர்ந்து நிரப்பிவிட்டார். எனக்கு அது வேறு எரிச்சல். என்னால் அதில் ஒன்றிரண்டுதான் போட முடியும்.
***
ஹாஸ்டஸ் வந்து, “சாரி சார்! அந்த சிறுவன் தாயின் பக்கத்தில் வீற்றிருக்கிறான். இடம்மாற்ற மறுக்கிறான்.”
“வேறு யாரும் சிறுவர்கள் இல்லையா விமானத்தில்” என்றேன் அலுப்புடன்.
“ஐல் ட்ரை” என்று அவள் புன்னகை மாறாமல் சென்றாள். அவள் முகத்தில் சற்றே கவலை ரேகை படர்ந்திருந்தது. சாப்பாட்டு தட்டுகள் வைத்த போது அதை நான் தொடவில்லை. ஏர்லைன்ஸ் சாப்பாடு எதையும் தொடுவதில்லை.
ஆனால் அவரோ, கட்லெட், ஐஸ்க்ரீம் கூட விடாமல் உண்ட பின், “யு ஆர் டெம்ப்ட் டிங் மி யங் லேடி” என்று மற்றொரு ஐஸ்க்ரீமையும் கேட்டு வாங்கி விரலில் ஒரே வழிப்பில் உள்ளே செலுத்தி விட்டு “ஒரு சமயம் சாப்பாட்டை குறைத்து தேகப் பயிற்சி, ஆப்பரேஷன் என்றெல்லாம் யோசித்தேன்! என்ன, இன்னும் பத்து வருஷமோ பதினைந்து வருஷமோதான் இருப்பேன். சாப்பிட்டாவது கழிக்கலாம் என்று எல்லா சிகிச்சைகளையும் நிறுத்தி விட்டேன்” என்றார்.
காப்பி சாப்பிடும் போது என் மேல் கொட்டி விட்டார்.
விடுவித்துக் கொண்டு “ஐம் ஸாரி” என்று என் கோட்டைத் தட்டும் போது ஐஸ்க்ரீமையும் என் மேல் கொட்டி விட்டார்.
தன் பையிலிருந்து கைக்குட்டை எடுத்து துடைத்து விடுகிறாற்போல் பண்ணி, தட்டிய போது நிஜமாகவே வலித்தது. அத்தனை தாட் டியான புறங்கை. என் உடைகளை இன்னும் மோசமாக்கி விட்டார்.
“ஐம் சாரி! வெரி சாரி.”
நான் தாங்காமல் பெல்ட்டைக் கழற்றிக் கொண்டு எழுத்து பின்பக்கம் பாண்ட்ரி அருகில் போய் ஹாஸ்டஸிடம் முறையிட்டேன்.
“என்னால் அந்த இருக்கையில் உட்கார முடியாது. மூச்சுத் திணறுகிறது. நான் இங்கே நின்று கொண்டாவது பிரயாணம் செய்கிறேன்” என்றேன்.
அவள் “உங்கள் சங்கடம் எங்களுக்குப் புரிகிறது. நிச்சயம் முயற்சி செய்கிறோம்” என்றாள்.
***
ஹாஸ்டஸ் ஒவ்வொரு வரிசையாகப் போய், சிறுவர் சிறுமியர் இருந்தால் “இந்த அங்கில் சீட்டுக்குப் போகிறாயா? நிறைய சாக்லேட் தருகிறோம்” என்று ஆசை காட்டி, மாற்றிக் கொள்ள விருப்பமா என்று கேட்க, அனைவரும் தத்தம் பெற்றோரை நோக்க, அவர்கள் சர்தார்ஜியைப் பார்த்த மாத்திரத்தில் மறுக்க, ஒரே ஒரு பெண் சம்மதித்து விட்டு போன கையோடு பயந்துபோய் திரும்ப வந்துவிட்டாள்.
“மம்மி அங்கே ஒரு பூதம் உட்கார்ந்து கொண்டிருக்கிறது” என்று இரைச்சலாகச் சொல்ல, வரிசை எண் இருபத்தெட்டிலிருந்து முப்பத்தாறு வரை எல்லாரும் சிரித்தார்கள்.
சர்தார்ஜியும் பின்னால் திரும்பிப் பார்த்து சிரித்தார்.
“சாரி சார்” என்றாள் ஹாஸ்டஸ் அனுதாபத்துடன்.
“நான் இங்கேயே நின்று கொண்டு பயணம் செய்யலாமா?”
“அதற்கு அனுமதி இல்லை. டர்புலன்ஸ் வந்தால் ஆபத்து:”
“சரி,மேலும் கீழுமாவது நடக்கிறேன்” என்று உலவ ஆரம்பித்தேன்! யாராவது தெரிந்தவர்கள் தென்படுகிறார்களா என்று பார்த்தேன். அன்றைக்குப் பார்த்து எந்த நண்பரும் இல்லை. பாத்ரூம் போயிருப்பவர்களின் காலி சீட்டுகளில் சங்கீத நாற்காலி போல் இடம் பெயர்த்து இரண்டரை மணி நேர ப்ளைட்டில் ஒருவாறு இரண்டு மணி இருபது நிமிட நேரத்தைக் கழித்து விட்டேன்.
***
கடைசியில் திரும்ப என் இடத்துக்குப் போய் உட்கார முயன்றேன். இருக்கைக்குத் திரும்பிய போது, அவர் என் இருக்கையின் இடைத் தடுப்பை உள்ளே தள்ளிவிட்டு இரண்டு சீட்டையும் ஆக்ரமித்துக் கொண்டிருந்தார். நான் வந்ததும் மிகுந்த சிரமத்துடன் எழுந்து தடுப்பை மீட்டு எனக்கு உட்கார கால் இடம் கொடுத்தார்.
“எங்கே காணாமற் போய். விட்டீர்கள். நடுவில் எங்கேயாவது இறங்கி விட்டீர்களோ இந்த குண்டனின் அசௌகரியம் தாங்காது?” என்றார். நான் பேசாமல் இருக்க “என்னால் உங்களுக்கு மிகுந்த துன்பம், அதற்கு ஈடாக உங்கள் கார்டு கொடுத்தால் புத்தகம் அனுப்புகிறேன்” என்றார்.
“தேவையில்லை. இதெல்லாம் விமானப் பயணத்தில் உள்ள அனிச்சயங்கள்” என்றேன்.
‘உண்மைதான்! நான் ஒரு முறை தென் அமெரிக்காவில் முன்னூறு மைல் ஒரு ஆட்டுடன் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதன் சொந்தக்காரன் என்னருகில் ஸ்பானிஷ், பாஷையில் தன் வாழ்க்கை சரிதத்தைச் சொல்லிக் கொண்டிருந்தான்! பயணம் மூடிவதற்குள் பிரசவித்து விட்டேன்” என்றார், நான் பிடிவாதமாக சிரிக்க மறுத்தேன். இந்த குண்டனுடன் என்ன வேடிக்கைப் பேச்சி.
இரண்டு மணி நேரம் கால்கடுக்க அலைய வைத்தவனுக்கு நான் பதில் சொல்லவில்லை. அதைவிட அவமானம் இருக்க முடியாது. இருந்தும் அவர் மதிக்காமல் “யு ஆர் ப்ரம் தி சௌத்?” என்று கேட்டார்
“யா”
“ஆர் யு ஓர்க்கிங்?”
ஆங்கில உச்சரிப்பில் கொஞ்சம் பிரிட்டிஷ் தனம் இருந்ததை கவனித்தேன்.
“யா”- இதை விட சின்ன வார்த்தை கிடைக்காததால்.
***
அதன் பின் சர்தார்ஜி மௌனமாகி விட்டார். எப்படியாவது என்னிடம் பேச எடுத்த முயற்சிகள் எதும் பலிக்காமல், ‘இன்னும் சிறிது நேரத்தில் நாம் டில்லி விமான நிலையத்தில் இறங்கப் போகிறோம். சீட்டு பெல்டு களை இறுக்கிக் கொண்டு சீட்டு இருக்கையை நேராக வைத்துக் கொள்ளவும்’ என்று அறிவிப்பு வர,
“எனக்கு மட்டும் விதிவிலக்கு! நான் உங்கள் அருகில் உட்கார்ந்திருப்பதால் விமானம் மெத்தென்று இறங்கும். சீட்பெல்ட்டே தேவையில்லை! என்னால் சீட் பெல்ட் அணிந்து கொள்ளவும் முடியாது.”
“நீ என்ன இன்ஜினியரா?”
“கம்ப்யூட்டர் சைன்ஸ்.”
“என் கஸின் குஷ்வந்த் ஒரு கம்ப்யூட்டரைக் கொடுத்து பயன்படுத்த என்னை வற்புறுத்திக் கொண்டிருக்கிறான். எனக்கு இன்னும் பழகவில்லை. பழைய டைப்ரைட்டர் தான். சின்னதாக தொப்பை மேல் வைத்துக் கொண்டே டைப் அடிப்பேன். சுண்டு விரலால்தான்! மற்ற விரல்கள் பெரிசு”
எனக்கு முதல் தடவையாகச் சிரிப்பு வந்தது. அவரும் தண்ணீர்ப் படுக்கை குலுங்குவது போல் சிரித்தார்.
வாழ்க்கையில் எத்தனை தற்செயலான பரிச்சயங்கள் ஏற்படுகின்றன. அவைகளில் குண்டு சர்தார்ஜியுடன் என் வாழ்க்கையில் செல்வழித்த ரெண்டரை மணி நேர சகபிரயாணத்தை நான் மறக்காததற்குக் காரணம். ஆகிருதி அல்ல. பின்?
சொல்கிறேன்.
***
பாலம் விமான நிலையத்தில் சுந்தரம் என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தான், சரோலில் குண்டு சர்தார்ஜி என்னைப் பார்த்ததும் “நைஸ் மீட்டிங் யு. சாரி! உங்களுக்கு அசௌகரியத்தை அளித்து விட்டேன். பாத்ரூம் அருகிலேயே நின்று கொண்டிருந்தீர்கள் என்று தேவிகா சொன்னாள்.”
ஒரு வெண் சீருடை டிரைவர் சலுகையுடன் உள்ளே வந்து அவர் கைப்பையை வாங்கிக் கொள்ள, அவர் கூட்டத்தில் இலைமறை காய்மறையாகத் தெரிந்தார்.
சுந்தரம், “எப்படி இருந்தது பயணம்?” என்றான்.
“என் ஜாதக ராசிடா சுந்தர். உலகத்திலேயே குண்டு சர்தார்ஜி ஒருத்தன் வந்து பக்கத்தில வந்து உக்காந்தான். இடம் போறலை, ஏறக்குறைய நின்னுண்டே வந்தேன், மொபசல் பஸ்ல கிருத்திகைக்குப் போற மாதிரி!”
ப்ரி பெய்டு டாக்ஸிக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு வெளியே வந்தபோது, சர்தார்ஜி ஒரு பெரிய காண்டோஸா காருக்குள் திணித்துக் கொள்வதை சுந்தரத்துக்குக் காட்டினேன்.
“அதோ அவர்தான்!”
“அவரா! அவரோடயா பிரயாணம் செய்தே?”
“ஆமா பக்கத்து பக்கத்து சீட்டில.”
“கை குடு! என்ன ஒரு பாக்கியம்டா உனக்கு! அவர் யாரு தெரியுமா? சந்தோக் சிங் அலுவாலியா!”
“எங்கோ பேர் கேட்டா மாதிரி இருக்கு.”
“கேட்ட மாதிரியா! ரொம்ப பெரிய இன்டலக்கவல்! எசுனாமிஸ்ட் அவர் கூட பத்து நிமிஷம் பேசினா போதும் அவருடைய அறிவினுடைய பரப்பு எவ்வளவு விஸ்தாரமானதுன்னு தெரியும், பெரிய இகனாமிஸ்ட் அவர் கூட ரெண்டு நிமிஷம் கிடைக்குமான்னு நூத்துக்கணக்கான பேர் காத்துண்டிருக்கா. ரெண்டரை மணி நேரமா! என்ன லக்டா உனக்கு!”
“மை காட்! இந்த வருஷம் நோபல் பரிசுக்கு பேர் போயிருக்கே, அவரா” என்றேன்.
“சாட்சாத் அவரேதான்! வாங்காத அவார்டு இல்லை. அவர் கூடப் பேசினா போது போறதே தெரிஞ்சிருக்காதே! இந்த முறை எகனாமிக்ஸ் ப்ரைஸ் கிடைச்சுருன்னு சொல்றா.”
கால்ப்ரெய்த் கூட அவருக்கு இன்னிக்கு ஒரு டிஸ்கஷன், அதுக்குத்தாள் வந்திருக்கார்!
அந்தக் காரை நிறுத்தி சர்தார்ஜி என்னை அடையாளம் கண்டு கொண்டு “நைஸ் டாக்கிங் டு யு சார்” என்று கண் சிமிட்டினார். அவர் கார் புறப்பட, “குடுத்து வெச்சவண்டா நீ” என்றான் சுந்தரம்.
“என் ஜாதக ராசி” என்றேன்.
– 15-10-1995