‘மண்டை உடைத்துக்கொண்டு சண்டை போடுகிறவர்கள்தான் அன்பான தம்பதிகள்’ என்று ஆண்டவனே சொன்னாலும், அவன் வாயில் தெர்மாமீட்டர் வைத்து காய்ச்சல் எவ்வளவு என்று பார்க்கத் தோன்றும். அப்படி யிருக்க, சண்டையில் மண்டை உடைத்துக் கொண்ட ஒரு ஜோடியை அன்பான ஜோடி என்று ‘பாபா நகர் வெல்ஃபேர் அசோசியேஷன்’ தேர்ந்தெடுத்து விழா நடத்தியிருக்கிறது. அசோசியேஷனில் இருப்பது ஒருவேளை கிறுக்கு மாக்கியான்கள் கூட்டமா?
பாபா நகருக்காக குள்ளப்பன் என்பவரிடம்தான் தரிசு நிலத்தை வாங்கியது. நிலத்தை வாங்கி, வீட்டைக் கட்டி வந்து உட்கார்ந்து பார்த்தால் நகரில் தண்ணீரைக் காணோம், கரன்ட் கம்பத்தை காணோம், சாக்கடை செல்ல வழியைக் காணோம், ரோடு என்று ஒன்றையும் காணோம். அதை சரி செய்யத்தான் குடியிருப்போர் நலச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
நலச்சங்க தலைவர், செயலாளர், கமிட்டிகள் எல்லாம் கூடி இரவெல்லாம் பேசினார்கள். கடைசியில் பார்த்தால் அவர்கள் குடித்து கும்மாளமடித்து அதை ‘குடிப்போர் நலச் சங்க’மாக மாற்றியிருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கடைசியில் பொங்கி விட்டாள் சாந்தி நாகராஜ் என்ற பெண். தலைவர் வேணுகோபாலை ஒருநாள் மத்தியானம் கன்னத்தில் பளார் என்று அவள் அடித்த அடியில், அந்த குடியிருப் போர் நலச்சங்க போர்டு அறுந்து தொங்கி விட்டது.
‘‘இப்படியே ஆம்பளைங்க பேன்ட்டு போட்டுக்கிட்டு முனிசிபாலிட்டிக்கு போய் பேசி கரன்ட், தண்ணி, ரோடு வசதி யெல்லாம் செஞ்சி தருவாங்கன்னு பாத்தா நாம இருட்டுலயே இருக்க வேண்டியதுதான். நாம கீழ இறங்கி வேலை செய்யணும். செய்வோம்!’’ என்று சாந்தி நாகராஜ் பேசினாள்.
பெண்களுக்கு சாந்தி நாகராஜ் சொன்னது பிடித்துப் போனது. ஆண்கள் ஆட்சி தடாலடியாக கவிழ்க்கப்பட்டு, பெண்கள் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அடுத்தடுத்த அதிரடிகளால், அசோசியேஷன் தன் நகருக்கு தேவையான வசதிகளை எல்லாம் பெற்றதோடு நில்லாமல், மரம் நடுவது, மருத்துவ முகாம் நடத்துவது, ரத்த தானம் செய்வது என்று பல நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்தது. அசோசியேஷனின் தலைவியாக இப்பொழுது இருப்பது பிரியதர்ஷினி. ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியின் மேனேஜர். செயலாளர் நிர்மலா ராகவன் ஸ்கார்பியோ செக்யூரிட்டி சர்வீஸின் புரொப்ரைட்டர். ஊதாரிகள் கூட்டமல்ல.. பாபா அசோசியேஷன். ஆனால், தப்பான தம்பதியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?
அசோசியேஷனின் பத்தாம் ஆண்டு விழாவுக்கான ஏற்பாட்டுக் கூட்டத்தில் தலைவி பிரியதர்ஷினி ஒரு விஷயத்தை முன்வைத்தார், ‘‘நாம அசோசியேஷன் ஆரம்பிச்சி இத்தோட வெற்றிகரமா பத்து வருஷம் முடிஞ்சது. நாம வருஷா வருஷம் விழா எடுக்கிறது தெரிஞ்சதுதான். குழந்தைங்க, பெண்களுக்கு போட்டி வெச்சி பரிசும் தரோம். இனி வருஷா வருஷம் ஒரு சிறந்த தம்பதிய தேர்ந்தெடுத்து பரிசு தரலாம்னு நான் நினைக்கிறேன். அப்படி செய்யறதால என்ன ஆகும்னா.. பரிசுக்கு ஆசைப்பட்டாவது சில தம்பதிங்க அன்பா இருப்பாங்க.. இல்ல இருக்கிற மாதிரி நடிக்கவாவது செய்வாங்க..’’ என்றாள்.
‘‘ஆமா.. இப்ப மட்டும் தெனம் துப்பாக்கி எடுத்து புருஷனும் பொண்டாட்டியும் செவுத்து மறைவில நின்னு டுமீர் டுமீர்னு சுட்டுக்கறாங்ளா?’’ என்று கேள்வி கேட்டான் திருஞானம். அவனை அடக்கிய பெண்கள், அப்படியே செய்யலாம் என்று ஆதரவு தந்தார்கள். அதன்படி சிறந்த தம்பதியை தேர்ந்தெடுக்க ஏழு பேர் கொண்ட ஒரு கமிட்டியும் தேர்ந் தெடுக்கப்பட்டது. அவர்கள் வீடு வீடாக சென்று தம்பதிகளிடம் பேட்டி கண்டு சிறந்த தம்பதிகளை தேர்வு செய்ய முடிவானது.
சிறந்த ஜோடி தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததுமே பாபா நகரில் பல விநோத சங்கதிகள் நடக்க ஆரம்பித்தது. போட்டி அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்து பாபா நகருக்கு பல பட்டுப்புடவைகள், மூக்குத்தி, வைர நெக்லஸ்கள், பட்டு வேட்டி, தங்கக் கடிகாரங்கள், ஆண்மை சென்ட்டுகள், பரிசுப் பொருட்கள் என்று வந்து குவிந்தது. புருஷன் மனைவிக்கும், பொண்டாட்டி புருஷனுக்கும் என்று மாறி மாறி பரிசளித்த பொருட்களின் மொத்த மதிப்பு பத்திருபது லட்சங்களை பத்தே நாளில் தாண்டியது. சிரிக்கத் தெரியாதவனெல்லாம் பிரைவேட்டாக டிப்ளமோ சேர்ந்து சிரிக்கக் கற்று மனைவியிடம் சிரித்துக் காண்பித்தான். சமைக்கத் தெரியாதவள் எல்லாம் அடுப்பங்கரையில் சாமியாடிக் கொண்டிருந்தாள். ‘ச்சீ போடி கழுதை’, ‘அட போடா பேமானி..’ என்பன போன்ற அன்றாடப் புழக்கத்தில் இருந்த வார்த்தைகள் எல்லாம் பாபா நகர் அகராதியிலிருந்து காணாமல் போய்விட்டது. ‘அன்பே ஆருயிரே!’ என்ற வார்த்தைகள், விடியற்காலையில் விளக்கு வைத்ததில் ஆரம்பித்து நள்ளிரவு சைபர் வாட்ஸ் பல்புக்கடியில் குறட்டை விட்டு தூங்கும் நேரம்வரை கேட்டுக்கொண்டே இருந்தது.
ஒரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளிப்போன ‘அட போடாங்க..’ ரக ஜோடிகள் எல்லாம் ஈ நுழைந்தால் சட்டினியாகும் நெருக்கத்தில் அம்மி அரைப்பதுபோல உரசி நடந்துகொண்டிருந்தார்கள். மச்சினிச்சி குடும்பத்தை யும், கொழுந்தன் குடும்பத்தையும் கடிதம் போட்டு கழுத்தை பிடித்து இழுத்து வந்து கோழி குழம்பு வைத்து குரல்வளையில் அன்பை அரைத்து ஊற்றிக் கொண்டிருந் தார்கள். காணாமல் போயிருந்த அனாதை மாமனார் & மாமியார் தம்பதிகள் அநியாயத்துக்கு திடீர் விஜயம் செய்து மலங்க மலங்க சிரித்தபடி, ‘என்னை ரொம்ப நல்லா பாத்துக்கறாங்க’ என்று தெருவில் நின்று தேவை யற்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். பஞ்சு மிட்டாய் கேட்டு அழுது ஏமாந்த குழந்தைகளுக்கெல்லாம் பறக்கும் தட்டு வாங்கிக்கொடுத்து பதறவிட்டார்கள் பெற் றோர்கள். இத்தனைக்கும் காரணம் என்ன? சிறந்த ஜோடிக்கு பத்து பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளி குத்து விளக்கு இரண்டு, வெளிநாட்டு கடிகாரங்கள் இரண்டு, விலை உயர்ந்த உடைகள், பதக்கம், ரொக்க காசு பத்தாயிரம் எல்லாம் கிடைக்கும். அதுவுமில்லாமல் சிறந்த ஜோடி என்ற ஃபிரேம் போட்ட சான்றிதழை ஒரு உயர்தர ஓட்டலில் வைத்து புகழ்பெற்ற சிரிப்பு நடிகர் ஒருவர் தரவிருந்தார். அதனால்தான் பைத்தியம் பிடித்து ஆடிக்கொண்டிருந்தார்கள் பாபா நகர் புருஷன் & பொஞ்சாதிகள்.
கமிட்டிகள் ஒரு மாதம் முழுதும் வீடு வீடாக சென்று பேட்டி எடுத்தார்கள். தேவ தேவதைகள் போன்ற அன்பான ஜோடிகள் பாபா நகரில் இருப்பது அப்பொழுதுதான் தெரியவந்தது. அதில் ஜோதிமாலா- & சொர்ணமுத்து தம்பதி யும், ஏஞ்சலா- & யேசுபுத்திரன் தம்பதியும் ஜெயிக்கிற வாய்ப்பு அதிகம் கொண்டவர்களாக இருந்தார்கள். இன்னும் ஒரே ஒரு ஜோடியை மட்டும் பேட்டி காண வேண்டி இருந்தது. அது மீனா & -ஐயனாரப்பன் தம்பதி. தேர்வுக் கமிட்டி பெண்கள், ‘அவர்களிடம் விசாரிக்கவே தேவையில்லை. அவர்கள் தினமும் சண்டை போட்டு அக்கம்பக்கத்தில் உயிரெடுப்பது ஊரறிந்த சங்கதி’ என்றார்கள். அதுவுமில்லாமல் அவர்கள் கிழட்டுத் தம்பதி. மீனாவுக்கு வயது 61. ஐயனாரப்பனுக்கு 70. ‘‘அவர்களையும் ஒரு பேருக்காவது விசாரிக்க வேண்டும்’’ என்றாள் பிரியதர்ஷினி. பல்லை கடித்துக்கொண்டு ஐயனாரப்பன் வீட்டுக்கு அவர்கள் போனார்கள்.
ஈஸிச்சேரில் உட்கார்ந்து துணியை தைத்துக்கொண்டிருந்த ஐயனாரப்பன் அவர்களைப் பார்த்து மரியாதையாக எழுந்து நின்று, ‘‘வாங்க வாங்க! சனியனே.. வந்தவங் களுக்கு சீக்கிரம் உட்கார பாய் போடு’’ என்றார். சனியனே என்பது வந்தவர்களுக்கா, உள்ளே இருந்த மனைவிக்கா என்று முதலில் குழப்பமாக இருந்தாலும், ‘‘நாப்பது வருசமா இந்த சனியனேதான் பாய் போடுது. சொல்லித்தான் தெரியணுமா?’’ என்று அவர் மனைவி மீனா கேட்டதும்தான் குழப்பம் தீர்ந்தது.
ஐயனாரப்பன், பிரியதர்ஷினி மேடத்தை பார்த்து அன்பாகச் சிரித்துவிட்டு, ‘‘அறிவு கெட்டவளே.. குடிக்க என்ன வேணும்..’’ என்று நிறுத்தி இரண்டு இருமல் இருமிவிட்டு ‘‘ன்னு.. அவங்கள கேளேன்’’ என்று மனைவியிடம் சொன்னார். மிக சுவையான காபியை மீனாவே கொண்டுவந்து கொடுக்க, ஐயனாரப்பன் பெண்களுக்கு முன்பாகவே தரையில் உட்கார்ந்து ‘‘என்ன விஷயமா வந்திருக்கீங்க?’’ என்று கேட்டார்.
‘‘சிறந்த தம்பதியைத் தேர்ந்தெடுக்கப் போறோம். அதுக்காக உங்களை விசாரிச்சிட்டு போக வந்தோம்’’ என்று பிரியதர்ஷினி சொன்னதும், கண் மூடி யோசித்த ஐயனாரப்பன், ‘‘சிறந்த தம்பதியா..? சத்தியாவும் அவ புருஷன் விமலனும்தான் சரியான ஜோடிங்க. எத்தனை அழகா குடும்பம் நடத்தறாங்க. சுபாஷ் & ஞானலட்சுமியும் நல்ல புருஷன் பொண்டாட்டிதான்.. ஆனா, அவங்களை விட ஆயிஷாவுக்கும்.. ஏண்டி ஆயிஷா புருஷன் பேரு என்னா? ம், முபாரக்.. அவங்கதான் சிறந்த ஜோடினு நான் சொல்வேன்’’ என்றார். பக்கத்தில் நின்றிருந்த மீனா, ‘‘அட நீங்க வேற.. வேல்முருகனும் அவன் பொண்டாட்டி யும் எத்தனை அழகா குடும்பம் நடத்தறாங்க. அவங்க தான் சரின்னு நான் சொல்வேன்’’ என்றாள்.
தேர்வுக் கமிட்டி பெண்கள் திகைத்தார்கள். எல்லா ஜோடிகளையும் அவர்கள் பேட்டி கண்டு முடித்து விட்டார்கள். இந்த மீனா & -ஐயனாரப்பன் தம்பதியை விட மூத்த எண்பது வயது ஜோடிகளும் ‘நாங்கள் எப்படி எப்படியெல்லாமோ இருந்தோம்’ என்று தங்கள் பெருமை தான் பேசினார்களே அன்றி அடுத்தவர்களை சிபாரிசு செய்யவேயில்லை. ‘‘நாங்க உங்களைப்பத்தி விசாரிக்க வந்தோம்’’ என்றாள் பிரியதர்ஷினி.
ஐயனாரப்பன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டார், ‘‘எங்களயா..? ஐயோ நாங்க வாழ்ந்து சலிச்சவங்க. வாழற சிறுசுங்களுக்கு பிரைஸ் குடுங்க. அதுமில்லாம நாங்க போடற சண்டையைப் பாத்திருப்பீங்க. பக்கத்து வீட்டுக்காரன் பன்னித் தொழுவம்னு இதை சொல்லுவான்’’ என்றார்.
பிரியதர்ஷினி சிரித்தாள், ‘‘சரி, அப்ப எதனால சண்டை போடறீங்க. எப்ப இருந்து சண்டை போடறீங்கன்னு சொல்லுங்க’’ என்றாள்.
நரைமுடியை சொரிந்தபடி மீனாவை ஏறிட்டுப் பார்த்த ஐயனாரப்பன், ‘‘எம் பொண்டாட்டி அவ்ளவா சண்டை போட மாட்டா. நான்தான் அப்படி.. எப்ப இருந்து சண்டையா? அவள மொத மொத பாத்தப்ப இருந்தேதான் சண்டை. அவளோட அப்பன் குப்பை பொறுக்கிற வேலாயுதம். என்னோட அப்பா முனிசிபாலிட்டியில பெரிய வேலை பாத்தவரு.’’
‘‘கொசு மருந்து அடிக்கிற ஆள்னு தெளிவா சொல்லுங்க’’ என்று நடுவில் புகுந்தாள் மீனா.
‘‘ம்.. கொசு மருந்து அடிக்கிற ஆள்தான். ஒரு நாள் அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லேன்னு நான் கொசு மருந்து அடிக்க போனப்பதான் இவளை பாத்தேன். அப்பனோட சேர்ந்து பேப்பர் பொறுக்கிட்டு இருந்தா. அப்ப இவளுக்கு பதினேழு வயசு இருக்கும். ‘ஏய் பொறம்போக்கு.. தள்ளி நில்லு. மருந்தடிக்கணும்’னு இவளை பாத்து நான் சொன்னேன். அதுக்கு இவ, ‘நான் என்ன கொசுவா? எனக்கு மருந்து அடிக்காதே’னு சொல்லி சிரிச்சா. இவ எத்தனை சண்டை போட்டாலும் ஒரு சிரிப்பு சிரிச்சா எனக்கு கோவமும் போயிடும், பசியும் போயிடும். இவ சிரிச்ச கிறக்கத்துலயே, வழியே போன நாய்க்கு கொசு மருந்து அடிச்சிக்கிட்டே ஓடினேன் நான். நாங்க பிரியப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க.’’
மீனா நடுவில் நுழைந்து, ‘‘பிரியமெல்லாம் ஒண்ணுமில்ல. வேறவழி இல்ல. இந்த ஆள் மொகறைய மொத நாள் பாத்தப்ப எனக்கு ஒரே எரிச்சல். நான் கோவப்பட்டா சிரிச்ச மாதிரி இருக்கும். அதுக்கு நான் என்ன செய்யட்டும். என்ன பாக்க கொசு மருந்த எடுத்துக்கிட்டு தெனம் வருவாரு இந்த மன்மதரு. நான் ஓடி ஒளிஞ்சிப் பேன். ‘என்னை பாத்து எதுக்கு வெக்கப்படறேன்’னு கேனத்தனமா கேப்பாரு, இந்த கூறு கெட்ட மனுசன்’’ என்று சொன்னாள்.
‘‘ஆமா, ரம்பைய பாக்க நான் கொசு மருந்து அடிக்கிற வேஷத்தில போனேன்னு வெச்சிக்கோங்க. ஆனா, என்னைய இவ Ôவாடா போடாÕனு பேசி எத்தனை வாட்டி வறுத் தெடுத்தா தெரியுமா? சின்ன புள்ளை அப்படி பேசினா கிழவன் எனக்கு கோவம் வராதா. அதான் வெடுக்கு வெடுக்குனு பேசினேன்’’ ஐயனாரப்பன் சொல்ல, மீனா பற்றிக்கொண்டு கத்தினாள், ‘‘ஆமா பொண்டாட்டிய சதாய்க்கிற மாதிரி என்னை சதாய்ச்சா எனக்கு கோவம் வராதா.. அதான் பேசினேன். ஆனா, என் அப்பா கரன்ட் ஒயர்ல மாட்டி மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில சாகக் கிடந்தப்ப ஒரு வாரம் என் கூடவே இருந்து பாத்துக் கிட்டாரு இந்த மனுசன். நான் அம்மா இல்லாத பொண்ணு.. இந்த மனுசன் இல்லாட்டி நான் தவிச்சிப் போயிருப்பேன். இந்த ஆளுதான் எனக்கும் என் அப்பாவுக்குமே அம்மாவா அப்ப இருந்தாரு’’ சொல்லும்போது மீனாவின் வயோதிக உதடு துக்கத்தில் துடித்து அடங்கியது.
மீனாவின் உதடு துடிப்பதை தவிப்போடு ஒரு கணம் பார்த்த ஐயனாரப்பன், ‘‘ம்.. அதுக்கப்பறம் மூணு வருஷம் கழிச்சிதான் கல்யாணம் ஆச்சி. ஆனா, அதுக்கு முன்னாடியே இவ என் அம்மாகிட்ட வந்து ‘ஏய் கெழவி, நான் உன் மருமக.. உன் புடவைய அவுத்து குடுக்கிறீயா.. இல்லை நானே உருவட்டுமா’னு மிரட்டி உருட்டி வாங்கி அதை துவைச்சி, கிழிஞ்சதை தெச்சி குடுத்தா. அதப் பாத்துட்டு தான் இவள Ôநல்ல மருமகள்Õனு நெனைச்சி என் அம்மா ஏமாந்துட்டா. என் அப்பனுக்கு இருமல் மருந்து கலக்கிக் குடுத்தே என் குடும்பத்துக்குள்ள புகுந்துட்டா. என் வீட்டுக்குள்ள மொதல்ல மருமகளாதான் நொழைஞ்சா. பிறகுதான் எனக்கு ஆசையான பொண்டாட்டி ஆனா.’’
‘‘ஆமா, ஆசை தோசைனு வாயில சொன்னா போதுமா? தெனம் என்னை எத்தனை சதாய்ச்சாரு இந்த மனுசன். கல்யாணமாகி வந்த ரெண்டாவது நாளே என்னை கன்னத்தில அடிச்சி ரத்தம் வர மண்டைய ஒடைச்சாரு..’’ மீனா குற்றம் சாட்டினாள்.
‘‘தப்புதான். ஆனா, அவ செஞ்சது சரியா? பெத்த அப்பனை வீடு சேத்தாம மானம் ரோசம்னு இவ பேசினா, எனக்கு கோவம் வருமா, வராதா. ஒத்தை பொண்ணை பெத்த, பொண்டாட்டி இல்லாத மனுசன் எங்க போவாரு பாவம். அவரை வீட்டுக்குள்ள கொண்டு வர எனக்கு வேற வழி தெரியலை. அடிச்சேன். அதுக்கு பழிவாங்கறதுக்காக என் மேல அவ சுடுதண்ணிய கொதிக்க கொதிக்க ஊத்தினாளா, இல்லையா?னு கேளுங்க..’’
‘‘ஐயோ நான் வேணும்னா ஊத்தினேன். எங்க மாமியா வுக்கு குளிக்க தண்ணி கொண்டு போனேன்.. தரையில படுத்துக்கிட்டு இருந்த மனுசன் பகல்னு கூட பாக்காம, வெக்கமே இல்லாம என் கெண்டைக் காலை பிடிச்சா நான் என்ன செய்யட்டும். புதுப் பொண்டாட்டின்னாலும் கையில சுடு தண்ணி இருக்கிறது தெரியவேணாம் மூதேவிக்கு.’’
‘‘ஆமா.. மூதேவிதான். அதனாலதான் எட்டு மாசம் என்கிட்ட பேசாம இருந்தீயா? கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகல. டணால் டணால்னு பாத்திரத்தை போட்டு உடைக்கிறதும், கதவுல தலைய முட்டிக்கிட்டு அழுகிறதும்.. ஒரே நரகமா போச்சி வாழ்க்கை.’’
‘‘நரகமாதான் போகும் வாழ்க்கை. வயசானவங்க மூணு பேரோட மாத்திரை மருந்துக்கே காசு போதலைன்னு அல்லாட்டிட்டு இருக்கு குடும்பம். குழந்தை வேணும்னு நச்சரிச்சா குரல்வளைய நான் அறுத்திருக்கணும். வேலைக்கு நான் போறேன்னு சொன்னேன்.. விட்டியா நீ?’’
‘‘அழகான பொண்டாட்டி பேப்பர் பொறுக்கறதை எந்த மானம் கெட்டவன் ஏத்துப்பான். அப்புறம் நான் ஆம்பளையா இருந்து என்னடி பிரயோஜனம்?’’
‘‘ஆமா, பெரிய ஆம்பளை. வீட்டுல குண்டு பல்பு மாட்டறேன்னு ஸ்டூல்ல ஏறி மல்லாக்க விழுந்த இந்த ஆம்பளை கதை எனக்குதானே தெரியும்.’’
‘‘ஆமா விழுந்தேன். வழுக்கி விழறதும் ஆம்பளைக்கு அழகுதானே..’’ & ஐயனாரப்பன் விழுந்த அவமானத்தை சிரித்து சொல்லி மழுப்ப பார்த்தார்.. ஆனால், பழைய துன்ப நினைவுகள் கண்களில் தெரிந்தது.
‘‘நான் சந்தோஷமாதான் விழுந்தேன். ஆனா, ஒரு வருஷம் இவதான் வீடு வீடா போய் பாத்திரம் கழுவி துணி தொவைச்சி வீட்டை பாத்துக்கும்படி ஆச்சு. இவ இல்லாட்டி நான் போய் சேந்திருப்பேன். அந்த கஷ்டத்தில கிழவியா போனவதான் இன்னும் கொமரி ஆகவே முடியலே. கிழவியான பிறகுதான் அவ குழந்தையே பெத்துகிட்டா’’ & ஐயனாரப்பன் சொல்லி சிரித்தார். மீனா வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டு சமையலறைக்குள் போனாள். உள்ளே தடால் புடால் என்று பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது.
‘‘கோவம் வந்துடுச்சி அவளுக்கு. ஆனா, அவ மகராசி. பெத்த புள்ளைங்களை அவ என்னமா வளத்தா.. தெரியுமா? என்னையும்தான். புள்ளைங்களை பெரிய படிப்பு படிக்க வெச்சா. எங்களுக்கு ரெண்டு பசங்க ஒரு பொண்ணு. எல்லாருமே வேலையில இருக்காங்க. மாசா மாசம் காசு தர்றாங்க. முன்ன மாதிரி கஷ்டமில்ல, இப்ப சந்தோஷமா தான் சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம்.’’
வெடுக்கென்று வெளியே வந்த மீனா கத்தினாள், ‘‘சந்தோஷமா இருக்கிற மொகறையப் பாரு. இன்னும் வேலை வேலைனு ராத்திரி பகலா ஒழைச்சி சாகறாரு இந்த மனுஷன். புள்ளைங்கள வளக்கத்தான் ராத்திரி பகல்னு பாக்காம ரத்தத்தை வியர்வையா அன்னிக்கி சிந்தினாரு. சாப்பாடு, தண்ணி இல்லாம செத்தாரு. இப்பவாவது ஒழுக்கமா தின்னு ஒழுக்கமா தூங்க வேணாமா. நான் எதுக்கு இந்த மனுஷன்கிட்ட சண்டை போடுறேன்? நேரத்துக்கு சாப்பிடு.. நேரத்துக்கு தூங்குனு தானே! கேக்கணுமில்ல? இப்பல்லாம் ஒடம்பு அடிக்கடி தாளாம போயிடுது. இந்த கிழம் போயிட்டா இந்த அனாதைக்கு யாரிருக்கா?’’ கத்துவதை நிறுத்தி அழ ஆரம்பித்தாள் மீனா.
‘‘புள்ளைங்க இருக்கேடி..’’ அழுத மீனாவைப் பார்த்து ஐயனாரப்பன் பரிதாபமாக சொன்னார். ‘‘என்னைய பத்தி இத்தனை சொல்லறாளே.. இவ ஒழுக்கமா ஒரு வாய் சாப்பிட்டிருக்காளா கேளுங்க… நல்ல தூக்கம் உண்டா.. யாருக்கு பின்னாடியும் யாராலயும் இருக்க முடியாது.. அதான் நெஜம். அப்படி ஒருத்தரை ஒருத்தர் அண்டி குடும்பம் நடத்திட்டோம்’’ சொல்லிவிட்டு ஐயனாரப்பன் தொண்டை செருமி வேட்டியால் கண்களை துடைக்கும் போது பெருத்த அமைதி அங்கு வந்ததுவிட்டது.
பிரியதர்ஷினிதான் ஆரம்பித்தாள், ‘‘ஒருத்தர் மேல ஒருத்தர் இத்தனை அக்கறையோட இருக்கீங்க.. எதுக்கு சண்டை போட்டுக்கறீங்க, தப்பான வார்த்தை வேற. அன்பா பேசிக்கலாமில்ல.’’
ஐயனாரப்பன் சிரித்தார், ‘‘அன்பா பேசறதா..? அப்டீன்னா? சினிமாவுல பேசற மாதிரியா? சிரிப்பா வருது. அது எங்களுக்கு பழக்கமில்லையே. ‘என்னங்க, ஏங்க’னு என் பொண்டாட்டி என்னை மரியாதையா ஒரு நாள் பேசிட்டா எனக்கு பயமாயிடும். ‘ஒடம்பு சரியில்லையா மீனா’னு பதறி கேப்பேன். நாங்க காட்டு வாசி கூட்டமுங்க. கடுவன் பூனை ஜாதி. ராத்திரியில பூனைங்க கத்தறதை கேட்டிருக்கீங்களா? ஆக்ரோஷமா அதுங்க கத்தறதை பாத்தா பெரிய சண்டை மாதிரி தெரியும். பூனைங்க குடும்பம் நடத்தற லட்சணம் அப்படி. என்ன பண்ணறது. நான் ஒரு பூனைக் கெழவிய கல்யாணம் கட்டி தினம் கத்திகிட்டு இருக்கேன்’’ ஐயனாரப்பன் சொல்லி முடிப்பதற்குள் கோரைப் பாயை எடுத்துக் கொண்டு அடிக்க ஓடிவந்தாள் மீனா. பிரியதர்ஷினி அதை பிடுங்கி வைத்ததும் பெரிய பழைய சோற்றுப் பானையை எடுத்துக்கொண்டு அடிக்க வந்தாள். ஐயனாரப்பன் சிரித்துக்கொண்டே மீனாவை உசுப்பேற்ற அந்த முதிர்ந்த காதல் மனைவி அநியாயத்துக்கு கத்த ஆரம்பித்தாள்.
தேர்வுக் கமிட்டி பெண்கள் மீனா & -ஐயனாரப்பன் ஜோடிதான் சிறந்த தம்பதி என்று அசோசியேஷன் கூட்டத்தில் சொன்னதும், மொத்த பேரும் ஒரு மணி நேரம் புரண்டு புரண்டு சிரித்தார்கள். வெளியே அதிகம் பழகாத அவர்கள் கதை யாருக்கு தெரியும்? அவர்கள் கதையை தேர்வுக் கமிட்டி அழகாக சொன்னதும் மொத்த பாபா நகர்வாசிகளும் சேர்ந்துதான் அவர்களுக்கு பெரிய விழா எடுத்தார்கள்.
அது கிடக்கட்டும், பாபா அசோசியேஷனில் காதலர் தினம் கொண்டாட முடிவாகி இருக்கிறது. அதற்கும் மீனா- & ஐயனாரப்பன் ஜோடிதான் சிறந்த காதல் ஜோடி என்று கல்லூரிக்கு போகும் சின்ன பையன்களும், பெண் களும் சொல்லிவிட்டார்கள். அதைவிட முக்கியமானது, அவர்களுக்கு பரிசளித்த சிரிப்பு நடிகர், மேடையில் அவர்கள் போட்ட சண்டையை பார்த்துவிட்டு, ‘‘படத்தில் நடிக்கிறீர்களா’’ என்று கேட்டிருக்கிறார். கிழவன் & கிழவி சண்டைப் படம் வந்து நூறு நாள் ஓடினால் அது அவர்கள் நடித்த படமாகவும் இருக்கும். காணத் தவறாதீர்கள்.
எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது, சண்டை பிடிக்காத தம்பதிகள் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க கியூவில் நிற்கிறார்கள் என்றால் உங்களுக்கு சிரிப்பு வரும். ஆனால், அவர்கள் அதற்குப் பிறகும் பிடிக்கிற பெரிய ஆக்ரோஷ சண்டையை பார்த்தால் பயத்தில் உங்களுக்கு சிரிப்பே நின்று போய்விடும்.
– பெப்ரவரி 2007
ஹாஹாஹாஹா எவ்வளவு அருமையான கதை சூப்பர் …
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்…
அருமையான கதை. யதார்த்தின் முடிச்சு