கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 18,636 
 

ஓரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி கதவைத் தட்டிய பொழுதே, உள்ளிருந்து என் ஆறு வயது இளவரசியின் உற்சாகக் குரல் கேட்டது: “அப்பா வந்தாச்சு…அப்பா வந்தாச்சு…”

கதவைத் திறந்தும் திறக்காததுமாய் குதித்துக் கொண்டிருந்தவள், என் கால்களைக் கட்டிக் கொண்டு, “அப்பா இன்னிக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு உனக்கு” என்றாள்.

“என்ன குட்டிமா? ஒழுங்கா சாப்டுட்டு அம்மா சொன்னது எல்லாம் கேட்டிட்டிருக்கியா நீ?” என்றேன். “இல்லை” என்றவள் என் கால்களையும் கைகளையும் பற்றி இழுத்தாள். “பெட் ரூமுக்கு வா…” என்றாள்.

“இரும்மா, கால் கை கழுவிட்டு வர்ரேன்”

“இல்ல வா” – தரதரவென்று என்னை இழுத்துக் கொண்டு பெட் ரூமிற்குச் சென்று, கண்ணாடிக் கதவின் திரையை விலக்கி பால்கனியை நோக்கி விரலைச் சுட்டிக் காண்பித்து, “இதோ பாரு…நம்ம பால்கனியில ஒரு நெஸ்ட் கட்டியிருக்கு பறவை” என்றாள். அவளுடைய உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது. “வாவ்…ஆமாடா. எந்தப் பறவைன்னு தெரியுமா?” என்றவன் ஒரே அளவில் இருந்த சில மரக் குச்சிகள் பால்கனியின் ஒரத்தில் அடுக்கப் பட்டிருந்ததைக் பார்த்துக் கொண்டிருந்தேன். “இல்லப்பா…தெரியல” என்றாள்.

“சரி சரி…பறவை வரும். அப்போது பாக்கலாம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஒரு புறா தன் வாயில் ஒரு குச்சியுடன் வந்து பால்கனி கம்பியில் அமர்ந்தது. “இதோ வந்துருச்சு பாரு…இது புறாக் கூடுடா” என்றேன்.

“அம்மா…அம்மா…இங்க வந்து பாரு. இது புறா நெஸ்ட் அம்மா” என்று அடுத்த அறையிலிருந்த அம்மாவைக் கத்திக் கூப்பிட்டாள் குட்டி. என் மனைவியும் வந்து சேர, மூவரும் ஆச்சர்யமாய் அந்தப் புறாவைப் பார்த்தோம்.

கருஞ்சாம்பல் நிறம். குட்டிச் சிவப்புக் கண்கள். இத்தனை அருகிலிருந்து புறாவைப் பார்த்ததில்லை. “அம்மா…இது நம்மளை பாக்குது பாரு” என்றவள் “ஹாய்” என்று புறாவைப் பார்த்து கையசைத்தாள். அது கம்பியிலுருந்து பறந்து தரையில் அடுக்கிக் கிடந்த குச்சிகளின் மேல் வாயிலிருந்த குச்சியையும் போட்டுவிட்டு பறந்து சென்றது. “ஹூம்…பறந்து போயிருச்சே…புறா எப்ப திரும்பி வரும்?” என்று சிணுங்க ஆரம்பித்தாள் குட்டி. ‘வரும்மா…சீக்கிரம் வரும்…அது மறுபடி போய் குச்சி எடுத்துட்டு வரணும்ல” என்றேன். “இன்னும் எவ்வளவு குச்சி எடுத்துட்டு வரும்? ரெண்டு, மூணு?” என்றாள். “தெரியாதுப்பா. நீ போய் விளையாடு. அப்பா முகமெல்லாம் கழுவிட்டு வர்ரேன்” என்றவுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

“நான் அப்பவே பாத்தேன். நிறைய குச்சியா இருந்துச்சு…கூடுதான்னு. நாம இந்தப் பால்கனி கதவைத் திறக்கறதே இல்ல. இனிமேயும் திறக்க முடியாது” என்று சொல்லிட்டு என் மனைவியும் நகர்ந்தாள். அது பிரதான சாலையை நோக்கி இருக்கும் பால்கனி. துணிகள் உலர்த்துவதற்கு மற்றொரு பால்கனியே உபயோகப்படுத்தப்பட்டது எங்கள் வீட்டில்.

இப்படியே நாட்கள் ஒடிக் கொண்டிருக்க, ஒரு நாள் குட்டி வந்து “ரெண்டு புறா பாத்தோம்ப்பா இன்னிக்கு, ஒண்ணு டாடி பர்ட், ஓண்ணு மம்மி பர்ட்” என்று சொன்னாள். இந்தப் புறா நெஸ்ட் ரொம்ப அழகா இருக்கும்மா. இது நம்ம வீட்லயே தான இருக்கும் ?” என்றவளுக்கு “ஆமா குட்டிமா” என்று சும்மா சொல்லி வைத்தாள் அம்மாவும். “இதுல புறா முட்டை வருமாம்மா?” என்று அம்மாவைக் கேட்க, அவளும் ‘தெரியல கண்ணா. வரும்னு தான் நினைக்கிறேன்” என்றாள்.

“எப்பம்மா வரும்?”

“அதான் தெரியலன்னு சொன்னேன்ல…”

“நாளைக்கு வருமா?”

“இப்ப படிக்கிறியா இல்லயா? எப்ப பாத்தாலும் இதே பேச்சு தான் உனக்கு” – மனைவி அலுத்துக் கொண்டாள்.

பிஞ்சு மூளைகளுக்கு எல்லாவற்றிலும் ஆர்வம் தான். உற்சாகம் தான். அவர்களைப் போல் இருந்து விட்டால் நம் வாழ்க்கை எப்படி ஒரு கொண்டாட்டமாக இருக்கும். வளர வளர ஆர்வம் குறைந்து, உற்சாகம் குன்றி, குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதே வாழ்க்கையாக இருக்கிறது…

ஒரு நாள் மதியம், அலுவலகத்துக்கு அழைப்பு வந்தது, “அப்பா, உனக்கு ஒண்ணு தெரியுமா? இன்னிக்கு நெஸ்ட்ல ரெண்டு முட்டை வந்திருக்கே…” – அவ்வளவு ஒரு ஆனந்தம் குட்டியின் குரலில்.

“அப்படியா செல்லம்?! என்ன கலர்ல இருக்கு?”

“ஆமா.. மஞ்சள் கலர். ரொம்ப குட்டியா இருக்குப்பா முட்டை. அழகா இருக்கு. அதுல இருந்து எப்ப பாப்பா வரும்?”

“இப்ப தானடா முட்டை வந்திருக்கு. இன்னும் கொஞ்சம் நாளாகும்மா அதுக்கு”

“அப்ப நீ இப்பவே வீட்டுக்கு வர்றியா? முட்டையை பாக்கலாம்.”

“இல்லடா…எனக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு”

“மீட்டிங்னா என்ன?”

“மீட்டிங்னா ஒரு விஷயத்தைப் பத்தி சில பேர் சேர்ந்து பேசி முடிவெடுக்குறது…”

“இன்னிக்கு என்ன விஷயம் பத்தி பேசப் போறீங்க?”

“அது உனக்கு புரியாதுடா”

“புரியும்”

“சரி…ஆபீஸ்ல ஒரு மிஸ்டேக் நடந்துருச்சு. யாரு செஞ்சாங்க அதை? ஏன் செஞ்சாங்க? எப்படி அதை சரி செய்றது…அதப் பத்தி பேசணும். அப்பா கொஞ்சம் அப்செட்டா இருக்கேன்டா…”

நீ தான சொன்ன…எல்லாரும் மிஸ்டேக் பண்ணுவாங்கன்னு…ப்ளீஸ்பா அவங்கள திட்டாத…பை” என போனைத் துண்டித்த நொடி, என் அலைபேசியின் திரையில் ஒளிர்ந்த குட்டியின் முகத்தயும் அவள் சிரிப்பையும் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை வீடு திரும்பியதும், குட்டியின் முகம் வாடி இருந்ததைக் கவனித்தேன்.

“என்ன குட்டிமா?”

“முட்டையிலிருந்து பாப்பா இன்னும் வர்ல.”

சிரிப்பு வந்தது. என்னை இழுத்துக் கொண்டு முட்டைகளைக் காண்பிப்பாள் என்று எண்ணியவனுக்கு ஏமாற்றம் தான்.

“சரி வா…முட்டைகளைப் பாக்கலாம்”

“அப்பா நீ முட்டையைப் பாக்க முடியாது”

“ஏன்டா”

“நானும் அம்மாவும் ஒரு தடவை தான் பாத்தோம். பாரு…அம்மா புறா அது மேல உக்காந்திருக்கு. முட்டை உனக்கு தெரியாது.”

“ஓ” என்றவன் அம்மா புறாவைப் பார்த்தேன். அது அடை காத்துக் கொண்டிருந்தது. ஒரக் கண்ணால் எங்களைத் தான் பார்த்ததா? தெரியவில்லை.

அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் இப்படித் தான் போனது. மூவரும் போய் நின்று அடிக்கடி திரையை விலக்கிப் பார்த்தால் அம்மா புறா ஒரு சிலை போன்று நகராமல் அப்படியே அடை காத்துக் கொண்டே இருந்தது. எனக்குள் தாய்மை பற்றிய பல சிந்தனைகள் விரியத் தொடங்கின. தாய்மை ஒரு தவம்.

“என்ன இது? இந்தப் புறா எப்டி சாப்பிடும்? எப்டி தண்ணி குடிக்கும்? சாப்பிடவே சாப்பிடாதா?” என்றேன் மனைவியிடம்.

அவள் மெல்ல சொன்னாள்: “ஊஹும்..அப்பா புறா ஒண்ணு இருக்குல்ல…அது வந்து சாப்பாடு குடுத்துட்டு போகும்.”

“ஒ…அப்படியா. அதப் பாக்கவே இல்லயே” என்றேன்.

“நீங்க எங்க பகல்ல வீட்ல இருக்கீங்க?” என்றாள்.

“அம்மா முட்டை தெரியவே இல்லம்மா” என்றாள் குட்டி.

“கண்ணாடியை கொஞ்சம் அடிச்சா புறா கொஞ்சம் அசையும். அப்ப பாக்கலாம்” என்று மனைவி கையால் பால்கனிக் கண்ணாடிக் கதவைத் தட்ட ஆரம்பித்தாள்.”

“பாவம். அதை தொந்தரவு செய்யாத…அப்புறம் பாத்துக்கலாம்” என்றேன்.

“இந்தத் திரையை மாட்டியிருக்க கம்பி வேற லூசா இருக்கு. குட்டிமா, ஜாக்கிரதையா இருக்கணும் சரியா…இல்லன்னா இந்தக் கம்பி விழுந்துரும் தலைல” என்றேன்.

“சரிப்பா” வென சொல்லிக் கொண்டே ஒடினாள்.

“பயங்கரமான வெயில் காலமா இருக்கே. தண்ணி எப்படி குடிக்கும் இந்தப் புறா…நம்ம ஒரு கிண்ணத்துல கொஞ்சம் தண்ணி வெக்கலாம்ல” என்றேன்.

“நானும் யோசிச்சேன். ஆனா, கொக்கி திறக்குற இடத்துல பாத்து இருக்கு கூடு. அந்தப் பக்கத்துல இருந்துச்சுன்னா வெக்கலாம். மொதல்ல கதவத் திறந்தாலே பயந்து பறந்தே போயிரும் புறா” என்றாள் மனைவி.

அடுத்த ரெண்டு நாளும், புறா எப்படி தாகத்தில் தவிக்கும், அதை எப்படி தணிப்பது என்பதிலேயே சிந்தனை ஒடிக் கொண்டிருந்தது.

அதுவும் துபாயில் அடிக்கும் ஐம்பது டிகிரி வெயிலில் தண்ணி இல்லாமல் இந்தப் புறா எப்படி தவமிருக்கிறது? எப்படி வாழ்கிறது என்றே புரியவில்லை. மூன்றாவது நாள், நானே என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். “இப்ப நம்ம வீட்ல இல்லாம, வேற எங்கயாவது இருந்துச்சுன்னா, என்ன செய்ய முடியும்? இயற்கையிலேயே அதால வாழ முடியும் போல…” என்றேன் மனைவியிடம்.

‘ஆமாம்” என்று ஆமோதித்தாள் அவளும். குட்டி வந்தது – “நான் எப்டி பேபியா வந்தேன்…அம்மா வயித்துல இருந்து வந்தேன்ல…உங்களுக்கு தெரியுமா, யாழினி சொன்னா அவளுடைய தம்பி பாப்பாவ சாய் பாபா தான் குடுத்தாராம். அது எப்டிமா?”

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். “இந்தப் புறா மாதிரி தாண்டா நம்ம லைஃப். இந்த வீடு தான் நம்ம நெஸ்ட்.”

“அப்பா…நம்ம வீட்ல ரூம்ஸ் இருக்கு. நெஸ்ட்ல ரூம்ஸ் இல்லையே…”

“நெஸ்ட் தான் புறாவுக்கு முழு வீடு. இங்க தான் அது தங்கும். தூங்கும். பாதுகாப்பா இருக்கும். அத எந்த வேற மிருகமும் பிடிச்சு சாப்பிட முடியாது. சரியா? இந்த நெஸ்ட்ல தான் நானும் அம்மாவும் இருந்தோம். ஒரு பாப்பா வேணும்னு நெனச்சோம். நீ வந்துட்ட…உன்னை அம்மா பத்திரமா வயித்துல வச்சிருந்தாங்க. அம்மா சாப்பிடுறதைத் தான் நீயும் சாப்பிட்ட…நீ பொறந்ததுக்கு அப்புறம் உனக்கு சாப்பாடு எல்லாம் ஊட்டிட்டே உன்னை எப்போதும் பத்திரமா பாத்துட்டே இருந்தாங்க…அப்பாவும் உனக்கு கதை எல்லாம் சொல்லி தூங்க வெச்சிட்டுருந்தேன்…ஆனா ஓரு நாள் நீயும் பெரிசான உடனே, இந்த கூட்டுல இருந்து பறந்துருவ…”

“என்னால பறக்க முடியாதுப்பா”

சிரித்துக்கொண்டே சொன்னேன் “பறந்துருவடா”

புரியாமல் மலங்க மலங்க விழித்தவள், “எப்ப முட்டை உடையும்” என்று மறுபடி ஆரம்பித்தாள்.

டக்கென ஒரு யோசனை தோன்றியது. இத்தனை நாள் ஏன் தோன்றவில்லை…புறாவின் வாழ்க்கை முறை பற்றி கூகுள் செய்தேன். ஆச்சர்யமான தகவல்கள் காத்திருந்தன. புறா முட்டை பதினேழு நாட்களிலிருந்து பத்தொன்பது நாட்களுக்குள் பொறிந்து விடுமாம். அடை காக்க அம்மா புறா ராத்திரி ஷிஃப்ட் பார்க்குமாம், அப்பா புறா பகல் ஷிஃப்ட் பார்க்குமாம்.

“உனக்கு இது தெரியுமா? ரெண்டு புறாவும் மாத்தி மாத்தியா அடை காக்குது…இது தான் ரகசியமா? அது தான் தண்ணியெல்லாம் வெளியில குடிச்சுட்டு வந்திடும் போல ரெண்டும்…”என்றேன் மனைவியிடம்.

“எனக்கு தோணுச்சு…ஆனா ரெண்டும் ஒரே மாதிரி இருக்குறதால வித்தியாசம் தெரியல…”என்றாள்.

முட்டையிட்டு பத்து நாட்கள் தான் ஆகி இருந்ததால், குட்டிக்கு இன்னும் பத்து நாட்கள் கழிந்து தான் குஞ்சுகள் வெளி வருமென்று சொல்லி விட்டு, புறாக்களையும் கூடையும் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தோம்.

குட்டி அவளுடைய நண்பர்களுக்கெல்லாம் புறாக்கள் பற்றியும் முட்டைகள் பற்றியும் குஷியாக செய்திகளை பகிர்ந்து கொண்டிருந்தாள். வீட்டிற்கு வருபவர்கள் எல்லோரிடமும் காண்பித்துக் கொண்டும் இருந்தாள்.

அவளுடைய நண்பன் ஒருவன், தினமும் தொலை பேசியில், ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டே இருப்பான்: “டிட் த எக்ஸ் ஹேட்ச்?”, இவள் “நாட் யெட்” என்று பதில் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

ஒரு நாள் இரவு அவன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். ஆர்வம் மிகுதியாக, குட்டி அவனைக் கூட்டிக்கொண்டு பால்கனியை காண்பிக்க, குதூகலத்தில் உணர்ச்சி வசப்பட்டுக் குதித்து, திரையை முழுவதும் பற்றி இழுத்ததில் மேலிருந்து திரை மாட்டப்பட்டிருந்த கம்பி விழுந்து விட்டது. அலறல் சத்தம். நாங்கள் ஹாலில் இருந்து ஒடி வந்தோம். இரண்டு குட்டிகளும் பயந்து போயிருந்தன. “என்ன ஆச்சு?” என்றேன். “நான் தான் பிடிச்சு இழுத்துட்டேன்” என்றாள் குட்டி.

“ஏன் இப்டி செஞ்ச? உனக்கு எத்தனை தடவை சொன்னோம்? ஜாக்கிரதையா இருன்னு…” – கத்தினேன்.

குட்டி அழ ஆரம்பித்தாள். வெளியே பார்த்தால்,சத்தம் கேட்ட அதிர்வில், புறாக்களைக் காணோம்! இரண்டு மஞ்சள் நிற முட்டைகள் மட்டும் நன்றாகத் தெரிந்தன. “பாத்தியா? இப்ப புறா பறந்து போயிருச்சு…இனி வருமா தெரியாது. அது பயந்து போயிருக்கும். இனி ‘பேபிஸ்’ வருமான்னு தெரியாது…” – நான் அதிகமாகக் கத்தினேன்.

குட்டியின் அழுகை அதிகமாகி விம்ம ஆரம்பித்தாள். அதன் நடுவே, தேம்பி தேம்பி சொன்னாள்: “நான் மிஸ்…மிஸ்…..டேக் பண்ணிட்டேன். சாரி………ப்பா. மிஸ்டேக் பண்….ணிட்டு உண்மையை சொன்னா தி….ட்ட மாட்……டேன்னு நீ தான சொன்ன…நான் குமார் கிட்ட சொன்………..னேன்….நான் பண்ண மிஸ்டேக்க அப்பா அம்மா கிட்ட கிட்ட சொன்….னா, அவங்க திட்ட மாட்டாங்கன்னு…ஆனா ஆனா நீ என்ன திட்டுற…”

அவளை அணைத்துச் சொன்னேன்: ”நான் தான் சாரி சொல்லணும் குட்டிமா. ரியலி சாரிடா. அப்பா உன்னை திட்ட மாட்டேன்.” என்னை இறுக்கிக் கொண்டு இன்னும் அழுதாள். அவள் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்தினேன். அவளுடைய அழுகை அடங்கியதையும் கவனிக்காமல் என் கைகள் வெகு நேரம் அவள் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தது.

இனி புறா வராது என்று, எல்லோரும் சோகமாக இருந்தோம். மறுபடியும் கம்பியை மாட்டி, திரையை மாட்டி விட்டு, படுக்கைக்கு செல்லுமுன், மனைவி திரையை லேசாக விலக்கிப் பார்த்துச் சொன்னாள் “அம்மா புறா, அப்பா புறா ரெண்டும் வந்துருச்சு.”

நானும் குட்டியும் ஒடிப் போய்ப் பார்த்தோம். ஆமாம். சத்தம் எல்லாம் அடங்கி விட்ட பிறகு, அப்பா புறா கம்பி மேல் அம்ர்ந்து குறுக்கும் நெடுக்குமாக, ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்று ரோந்து பார்த்துக் கொண்டிருந்தது. அம்மா புறா ஒரு சிலை போல மறுபடியும், அடை காக்கத் துவங்கி இருந்தது. எல்லோரும் சந்தோஷமாக இருந்தோம். குட்டியை மெதுவாக முதுகில் தட்ட, தூங்கிப் போனாள்.

அடுத்த நாள், அதிகாலையே விழிப்பு வந்து விட்டதால், திரையை விலக்கிப் பார்த்தேன். எதுவும் மாறவில்லை. புறாக்கள் அதே நிலையில் தான் இருந்தன. சாலையில் சுமார் முப்பது தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு ஒரு சிறிய பிக்-அப் வண்டி விரைந்து கொண்டிருந்தது.

என்ன ஒரு கொடுமை இது? ஆடு மாடுகளைப் போன்று நிற்கக் கூட இடமில்லாமல், இடித்துப் பிடித்து நின்று கொண்டிருந்தார்கள்.

துபாயில் கோடை காலத்தில், மதியம் 12:30 மணி முதல் 3 மணி வரை, நேராக வீசும் சூர்ய ஒளியின் கீழ் யாரும் வேலை பார்க்கக் கூடாது. இது அரசாங்கச் சட்டம். அதனால் தான் ஐந்து மணிக்கே பணியிடத்தை நோக்கி, பணியை விரைவாகத் தொடங்க பயணம் செய்து கொண்டிருந்தார்கள் போலும்.

இந்த அப்பா புறாக்கள் எக்ஸ்சேஞ்ச் சென்டர்கள் மூலம், தங்கள் குடும்பங்களுக்கு வாழ்க்கைக்கான பணத்தை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா புறாக்கள் கூட்டில் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அப்பா புறாக்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் தன் குடும்பங்களைப் பார்க்க முடியும்.

எல்லாமே ஒரு தவம் என்றே தோன்றியது.

ஒரு வாரம் சென்று, அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பினாள் மனைவி : “ ஒரு குஞ்சு பொறிந்து விட்டது. குட்டி மதியம் பள்ளியிலிருந்து வந்தவுடன் பயங்கர குஷியாகி விடுவாள். வீட்டுக்கு வரும் போது, அவளுக்கு ஒரு கேக் வாங்கி வாருங்கள்.”

நேரம், நட்சத்திரம் எல்லாம் தெரியுமா?! எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன். வீட்டுக்கு வந்ததும் குட்டி, “அப்பா, பாப்பா புறா வந்துருச்சு தெரியுமா? ஹேய்!” என்று என் தோளைக் கட்டிக் கொண்டாள்.

“வா..வா…பாக்கலாம்” என்று சென்றால் குஞ்சு தெரியவில்லை. “அம்மா புறா அது மேல உக்காந்திருக்கு” என்றாள் குட்டி. “நான் பேர் வெச்சிருக்கேனே பாப்பாக்கு”

“ஓ..அப்டியா, என்ன பேர்?”

“லில்லி…அப்பா உனக்கு தெரியுமா அது பாயா, கேர்ளான்னு?”

“லில்லி நல்ல பேர் தான்…எனக்கு தெரியாதும்மா அது பாயா கேர்ளான்னு…”

“எனக்கு ரெண்டும் கேர்ள் பேபிஸ் தான் வேணும். பாய்ஸ் ஆர் நாட்டி”

சத்தமாகச் சிரித்தேன்.

“எதுக்கு சிரிக்கிற?”

“ஓண்ணுமில்ல குட்டிமா…நானும் உன்ன மாதிரி சின்ன வயசுக்கு மாறிட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சு…”

“ஆனா…எனக்கு உன்ன மாதிரி பெரிசா ஆகணும்னு தோணுது…”

“ஓ…ஏன்?”

“ஏன்னா உன்ன மாதிரி மத்தவங்கள டேக் கேர் பண்ணலாம்”

அவளுடைய பெரிய கண்களை ஆச்சர்யமாகப் பார்த்தேன்.

“நிஜமாவே நீ பெரிய குட்டிமா தான்”

“அப்பா இனி அடுத்த பாப்பா எப்ப வெளியில வரும்”

“தெரியலயேடா…சீக்கிரம் வரும்”

“நாளைக்கு வருமா?”

“வரலாம்”

அடுத்த நாள் குஞ்சு வெளி வரவில்லை. குட்டி தவித்துப் போனாள். அதற்கு அடுத்த நாள் வெளி வந்தது. குட்டி “பிங்கி” என்று பேர் சூட்டினாள்.

“ஏன்டா செல்லம்…யூ டியூபுல நிறைய கார்ட்டூன்ஸ் பாத்து பாத்து இந்த மாதிரி பேர் வைக்கிற? வேற பேர் சொல்லேன்…நான் ஒரு நிமிஷம் ரெண்டு பேபிஸையும் பாத்தேன். ஒரு மாதிரி மஞ்சள் கலர்ல இல்ல இருக்கு…பிங்க் இல்லயே.”

“உனக்கு தெரியும்ல பிங்க் தான் எனக்கு பிடிச்ச கலர்னு…பிங்கியே இருக்கட்டும்.”

என்ன சாப்பிடும் இந்த புறா குஞ்சு? எங்களுக்கு தாய் புறா என்ன ஊட்டுகிறது என்றே தெரியவில்லை…வலை தளத்திலிருந்து தெரிய வந்த தகவல்: உலகத்தில், மனிதனுக்கு அடுத்து பறவையினங்களில் மூன்றே மூன்று தான் தன் குஞ்சுகளுக்கு பாலூட்டும். அதில் புறா ஒன்று! பல பறவைகள் சாப்பாட்டை தன் தொண்டை பாகத்தில் வைத்திருந்து அதைக் குஞ்சுகளுக்கு வாய் வழியாக ஊட்டும்… ஆனால் அம்மா அப்பா புறாக்கள் இரண்டுக்குமே குஞ்சு பொறியும் இரண்டு நாட்கள் முன்பிலிருந்தே தொண்டையில் பால் சுரக்கும்! அதையும் புறாக்கள் வாய் வழியாக தன் குஞ்சுகளுக்கு ஊட்டும்.

இயற்கையின் ஆச்சர்யங்கள் பற்பல என்றே தோன்றியது.

“அப்பா இந்த பாப்பா புறா எல்லாம் நம்ம வீட்லயே தான இருக்கும்?” என்று கேட்டாள் குட்டி.

“சீக்கிரம் வளர்ந்துடுமாம்டா புறா குஞ்சு எல்லாம்…முப்பது நாள் தானாம். அப்புறம் பறக்கத் தெரிந்தவுடன் பறந்து போயிருமாம் கூட்டை விட்டு…அதனால தான் வெளியில பேபி புறாவையே பாக்க முடியாதாம். சீக்கிரம் பெரிசு ஆயிருமாம். உனக்கு தெரியுமா? கூட்டை விட்டு 1300 மைல்….ர்ர்ர்ர்ரொம்ப தூ……..ரம் பறந்து போனாலும் அதுக்கு கரெக்டா கூட்டுக்கு வர வழி தெரியுமாம்!”

குட்டி “ரியலி” என்றாள்.

ஒரு நாள் என் நண்பன் ஒருவன் வீட்டிற்கு வந்தவனிடம் புறா புராணத்தை பாடிக் கொண்டிருந்தேன். அவனிடம் வலையில் பார்த்து அறிந்து கொண்ட அரிய தகவல்களை சொல்லிக் கொண்டிருந்தேன்…ரொம்ப புத்திசாலியானது புறா. கண்ணாடியில தன் பிம்பத்தைப் பார்த்து அது அதனுடைய பிரதிபலிப்பு என்று அறிந்து கொள்ளக்கூடிய சக்தி அதற்கு உண்டாம். உலகத்திலேயே ஆறு ஜீவ ராசிகளுக்குத் தான் இந்த சக்தி உண்டாம். இதை எல்லாம் கேட்டு விட்டு என் நண்பன் கண் சிமிட்டிக் கேட்டான்: “அதெல்லாம் சரி…அதுக்கு எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃப்ஃபேர் உண்டா, அத சொல்லு…”

அவன் கேள்விக்கு கூகுள் பதில் சொன்னது: “புறாக்கள் ஜோடி மாற்றுவதில்லை” நண்பன் ஆச்சர்யமாக என்னைப் பார்த்தான். “கத்துக்கணும்டா” – சிரித்தேன்.

“அப்பா, புறாவெல்லாம் தூங்கவே தூங்காதா” எனக் கேட்டாள் குட்டி.

“புறாவுடைய பேபி அஞ்சு நாளைக்கு கண் மூடியே இருக்குமாம். அப்பா புறாவும் அம்மா புறாவும், ஒரு கண் மட்டும் மூடித் தூங்குமாம். அதோட ஒரு கண்ணு மூடும் போது அந்த ஒரு பக்க மூளை ரெஸ்ட் எடுத்துக்குமாம். அப்புறம் இன்னொரு பக்க கண் மூடும் போது இன்னொரு பக்க மூளை ரெஸ்ட் எடுத்துக்குமாம்”

“எப்டிப்பா ஒரு கண்ணு மூடித் தூங்க முடியும்?”

குட்டி ஒரு கண்ணை தன் விரல்களால் மூடி மறு கண்ணால் என்னை முழித்துப் பார்த்தாள்.

கிடுகிடுவென புறாக் குஞ்சுகள் வளர்ந்து, றெக்கைகளை அசைத்து, பால்கனியின் ஒரு புறத்தீலிருந்து இன்னொரு பக்கத்திற்கு அன்ன நடை பயின்று, தன்னை பறக்க தயார் செய்து கொண்டுருந்த அடுத்த நாட்களில் குட்டி கேட்டாள்: “புறா பறந்து போயிருச்சுன்னா, வெளியில அப்பா புறாவுக்கும் அம்மா புறாவுக்கும் எப்டிப்பா அதை தெரியும்? எல்லா புறாவும் ஓரே மாதிரி இருக்குமே”

“அதுக்கு தெரியும் குட்டிமா”

“அதான் எப்டி”

“இப்ப…எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி யூனிஃபார்ம் போட்டாக்கூட, ஸ்கூல்ல உன் முகம் வெச்சு உன்ன கூட்டத்துல கண்டு பிடிச்சிருவோம்ல, அந்த மாதிரி தான்”

“ஆனா எல்லா புறாவுக்கும் முகம் ஓரே மாதிரி தான இருக்கு” என்றாள்.

நிசப்தமானேன்.

ஒரு நாள் மாலையில் பால்கனியில் பார்த்தால் புறாக்கள் எதுவுமில்லை. குஞ்சுகளும் பறந்து விட, அதன் குடும்பமும் பறந்து சென்று விட்டது.

குட்டி வெற்றிடத்தைப் பார்த்துக் கத்தினாள் “புறா எல்லாம் பறந்து போச்சும்மா” அழுதாள். சாப்பிட மறுத்தாள். சமாதானப் படுத்தியும் முகம் வாடியே இருந்தது.

“இனி நம்ம வீட்டுக்கு வரவே வராதா?”

“மறுபடியும் புறாக்கள் அதே கூட்டுல முட்டை இடாதுடா. வேற வீடு, பில்டிங், எங்க ஆளே இல்லயோ அங்க பறந்து போய் இதே மாதிரி ஒரு கூடு கட்டும்…”

“அப்ப லில்லி பிங்கி என்ன பண்ணுவாங்க?”

“அது ரெண்டும் விளையாடிட்டிருக்கும்…உன்ன மாதிரி…”

புறா எச்சங்கள் அப்பிக் கிடந்த பால்கனி, எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகி விட்டிருந்த புறாக்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது.

தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில், எப்பொழுதுமே தானியங்கள் இறைத்திருக்கும் ஒரு இடத்தில் கூட்டமாக நிறைய புறாக்கள் இருக்கும். அதைக் கடக்கையில் தினமும் “குட் மார்னிங் பிஜன்ஸ்” என்பாள் குட்டி.

அன்று “லில்லி பிங்கி இதுல இருப்பாங்களா?” என்றாள்.

“இருக்கலாம் கண்ணா” என்றேன்.

அந்தப் புறாக்கள் தெரியும் வரை திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தாள். கண்களில் சோகம்.

பள்ளி வந்ததும் இறங்கிச் செல்கையில், கீழே பார்த்தபடி நடந்தாள்.

அவள் எங்கள் கூட்டை விட்டுப் பறந்து செல்கையில் நானும் இப்படித்தான் இருப்பேன் என நினைத்துக் கொண்டேன்.

அவள் உச்சந்தலையில் ஒரு முத்தமிட்டு மெல்லக் கையசைத்தேன்.

அவளும் கையசைத்து விட்டு பள்ளியை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினாள்.

Print Friendly, PDF & Email

5 thoughts on “கூடு

  1. நல்ல கதை, கதையின் போக்கு சுவாரஸ்யமாக செல்கிறது… புறாவை பற்றி தெரியாத சில விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள்… வாழ்த்துக்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *