குளிரெழுத்தின் வண்ணங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,777 
 

பொன்வண்டுகளுக்குக் குளிரடிக்காது. குளிரடிப்பதாக இருந்தால், அவை மழைக் காலத்தில் தோன்றுமா? ‘அம்மா’ என்று ஆசையுடன் அழைக்கும் மூன்றரை வயது மகளை என் மாமியாரின் வீட்டில் விட்டுவிட்டு வந்தபோது, பொன்வண்டின் ஞாபகம்தான் வந்தது.

எனக்கும் தனசேகரனுக்கும் திருமணம் முடிந்து, அவருடைய ஊரான பட்டத்திபாளையத்தில்தான் அவள் பிறந்தாள். அமராவதி ஆறு, கரை நாணல்கள், காட்டுப் புற்கள், புல் மேயும் எருமை, ஆட்டினங்கள், நால் ரோட்டில் பால் ஊற்றும் சொஸைட்டி, மிஞ்சிய பாலில் மத்துக் கடையும் தயிரரவம், நெய் மணக்கும் உணவு வகைகள்… என்றுதான் தன் வாழ்வைத் தொடங்கினாள் என் மகள்.

அந்த நிலையில், ஏற்கெனவே எழுதி முடித்த தேர்வுக்கு எனக்கு ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் வேலை கிடைத்தது. குளிர்ப்பாங்கான மலை பூமி. குழந்தையும் கணவனுமாக ஏற்காடு வந்தபோது, ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்ததற்கு அடுத்த வேலை, ஸ்வெட்டர்கள் வாங்கியதுதான்.

தங்க நிறத்தின் மேல் பட்டையாக சாக்லெட் வர்ணம் ஓடுகிற ஸ்வெட்டர், குழந்தைக்கு உரிய உடுப்புபோல அது மிக அழகாகவே இருந்தாலும், ஸ்வெட்டரை ஸ்வெட்டர் என்று காட்டுவதற்கு பிரத்தியேக பட்டன்கள் அதில் உள்ளன.

தனசேகரனுக்குத் தோதான வேலை ஏற்காட்டில் இல்லை. கடுப்பான சமயங்களில் ‘ஏற்காட்டில் மட்டுமல்ல; உலகில் எங்கேயும் இல்லை’ என்று தோன்றும். சில நாள் ஏதாவது வேலைக்குச் செல்வார். அடுத்த சில நாளில் அதை உதறிவிட்டுச் சும்மா இருப்பார். வேலைக்கே போகாத ஆண்களைவிட இவர்கள் ஆபத்தானவர்கள். நம்பி ஒரு காரியம் பண்ண முடியாது. மரக் குதிரையை நம்பி மண்ணிலும், மண் குதிரையை நம்பி நீரிலும் பயணிப் பதற்கு ஒப்பாகும். ‘குழந்தையைப் பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இரு’ என்று கணவனிடம் கேட்டுக்கொண்டேன்.

குழந்தை எல்.கே.ஜி&யில் சேர்ந்தாள். வாங்குகிற ஃபீஸ§க்கு அவளுக்கு இளம் வயதிலேயே ஏராளமான அறிக்கைகள் கிடைத்தன. பிராக்ரஸ் ரிப்போர்ட்டில், தமிழில் கூடுதலாக சிவப்பு அடிக்கோடுகள் வாங்கினாள். கையெழுத்து சரியில்லை என்று பள்ளியில் அடியும் கிடைத்ததாம்.

தனசேகரன் கொதித்துப் போய்விட்டார். சதிபதியாக பள்ளிக்குக் கிளம்பிப் போனோம்.

‘‘மூணு வயசுக் குழந் தையை ரூல் பென்சில் புடிச்சு எழுதச் சொல்றதே தப்பு!’’ என வாதிட்டார் தனசேகரன்.

‘‘அப்படியா! இங்கே பாருங்க’’ என்று மிஸ், வேறு சில பிள்ளைகளின் கையெழுத்து ஏடுகளைக் காட்டினாள். அச்சென்றால் அச்சு, அப்படி அச்சு! ஐந்து வயது முடிவதற்குள் ரப்பர் ஸ்டாம்ப் குடைந்து பழகிவிடுவார்கள் போன்றதொரு தெளிவு. தெய்வங்களே மிரளும் சொற்களை அவர்கள் மழலையில் கதைத்தனர். ‘யு ஃபார் யுனிவர்ஸ்!Õ

போட்டி உலகில் எங்கள் குழந்தை யின் போதாமையை உணர்ந்தோம்.

‘‘தனா! இனி நீ வெங்காயம் வெட்ட வேண்டாம். பூண்டு உரிக்க வேண்டாம். குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, அவ ஹோம் வொர்க்கை ஃபாலோ பண்ணு!’’

ஆங்கில எழுத்துக்கள் அதிகம் பிரச்னை தருவதில்லை. கோடு போட, வட்டம் போட, வட்டத்தைப் பாதியி லேயே நிறுத்த… இவற்றை மட்டும் கற்றுக்கொண்டால் போதும். அ, ஆ அப்படியல்ல! எங்கள் குழந்தை ‘ப’ மட்டும் நன்றாக எழுதினாள். ‘இ’ எழுதினால், அவள் சுழிக்கிற சுழிகளின் மீது சர்க்கரைக் கரைசலை ஊற்றி, ஜிலேபியாகச் செய்து தின்றுவிடலாம். எட்டின் மீது எட்டைப் படுக்கவைத்து, அதுதான் ‘ஐ’ என்றாள். ஆய்த எழுத்துக்கு மூன்று புள்ளிகள் வைக்கத் தெரிந்திருந்தாலும், அதைச் சரிபார்க்க நோட்டையே திருப்பவேண்டியிருந்தது.

இந்நிலையில்தான், தனசேகரனுக் குள்ளிருந்த வாத்தியார் தலைகாட்டி னார். குழந்தையை வாத்தும், காதும், யானையும் வரையச் சொன்னார். வாத்து& உ, வாத்தின் மீது யானை நிற்கிறது & ஊ, காது & ஒ, தோடுடைய காது & ஓ, காதுக்கு வெளியே யானை கத்துகிறது & ஒள.

குழந்தை கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழிலும் தேறிக்கொண்டு இருந்தாள்.

திடீரென, ‘‘அடுத்த வாரத்துல இருந்து ஒரு வேலை. அஞ்சாயிரம் சம்பளம். நான் போறேன்’’ என்றார் தனசேகரன். அவருக்குள்ளிருந்து ஆண்மகன் மறுபடி பொத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டார்.

வீட்டிலேயே தங்குகிற மாதிரி வேலைக்கு ஆள் அகப்படுமா என்று ஒரு வாரம் உழன்றோம். ம்ஹ¨ம்!

குழந்தையை தனசேகரனின் ஊரில் விட்டுவிட முடிவாயிற்று. இந்தப் பருவத்தில் குழந்தையைப் பிரிந்து வாழ்வது, சாலவும் கொடுமை. தவிரவும், எனக்கும் தனசேகரனுக்கும் ‘இரண்டு ஆள் அலுப்பு மருந்தா’க அவள் இருந்தாள். முக்கியமாக, எனக்கும் தனாவுக்கும் சண்டை நேரும்போது, நெறிபடும் ஓசைகள் எழாவண்ணம் தடுக்கும் உயவு எண்ணெயாகவும் அவளே இருந்தாள்.

புள்ளினங்கள் சிலம்பாத வெள்ளிக் கிழமை நள்ளிரவில், பட்டத்திபாளையம் போய், குழந்தையை அத்தையின் கையில் தந்தேன். ‘‘முதல்ல இருந்தே இவ இங்கியே இருக்கட்டும்னுதானே சொன்னேன்’’ என்றவாறு குழந்தையை வாங்கிக்கொண்டார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மத்தியானம், குழந்தை எருமையின் அழகை ரசித்துக்கொண்டு இருந்த வேளையில் கம்பி நீட்டிய நானும் என் கணவனும் மூலனூர், கரூர், சேலம் மார்க்கமாக ஏற்காட்டை அடைந்தோம்.

அப்போது வெயில் காலம். இப்போதோ குளிர்காலம். பனி. நரியின் ஊளையை நினைவூட்டும் குளிர். அதிகாலைச் சங்குகள்கூட ஒருமுறை தந்தியடித்துவிட்டுத்தான் ஒலிக்கின்றன & முறையிடுகின்றன. வரலாறு காணாத குளிரென்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.

இரவுகளின் தனிமை, குழந்தையின் அண்மையையும் அணைப்பையும் விழைகிறது. மகளே… ஆங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? என் தோலை உரித்து அவளுக்குப் போர்த்த ஆசை. முலைகள் இரண்டையும் அறுத்து, அவள் அணைவதற்குத் தந்தனுப்பினால் இன்னும் உசிதம்.

சனிக்கிழமை மாலை, பாச்சைகளும் கரப்பான்களும் விரளுமாறு அட்டைப் பெட்டிகளைச் சுத்தம் செய்துகொண்டு இருந்தபோதுதான், பாப்பாவின் ஸ்வெட்டர் கிடைத்தது.

‘‘அம்மா ஊர்ல இருந்து போன் பண்ணியிருந்துச்சு. நாம போகும்போது பாப்பாவுக்கு ஸ்வெட்டர் ஒண்ணு எடுத்துட்டுப் போகணுமாம்’’ என்ற செய்தியுடன் வந்தவன், ‘‘இந்த ஸ்வெட்டரே அவளுக்குச் சரியாய் இருக்குமா?’’ என்று கேட்டதும் எரிந்து விழுந்தேன்…

‘‘ஒரு ஸ்வெட்டர் வாங்கித் தர வக்கில்லையா அங்கே?’’

சண்டைக் காரமும் தொண்டை ஈரமும் முற்றிலும் உலர்ந்துபோகும் முன்னரே, நானும் தனசேகரனும் சேலத்துக்கு பஸ் பிடித்தோம்.

சேலத்தில், மூன்றாவது கடையில் கிடைத்தது, நான் விரும்பும்விதமான ஸ்வெட்டர். தீப்பெட்டிப் பொன்வண்டின் வானவில் தீற்றமுள்ள நிறங்கள் முயங்கி மாறும் குளிர் உடை. அதனுடன் வந்த பிளாஸ்டிக் பையிலேயே பழைய ஸ்வெட்டரையும் திணித்துக் கொண்டேன்.

பிறகு, கரூர் வந்து தாராபுரம் பஸ் ஏறி, மூலனூர் சென்று கார் எடுத்துக் கொண்டு, பட்டத்திபாளையம் போய்ச் சேர்ந்தபோது மணி இரண்டரை. பனி இரவு. எங்கள் வருகையால் துலக்கம் கொண்டு, வீடு எழுந்தது.

பாப்பாவும் எழுந்துவிட்டாள். நான்கைந்து நிமிடங்கள் என்னையே பார்த்துக்கொண்டு நின்றாள். எனக்குக் கண்களில் நீர் முட்டியது. பனிக் காலத்திலும் கண்ணீர் வெது வெதுப்பாகத்தான் இருக்கிறது. \

திடீரெனத் தாவி ஓடி வந்து, என் மடி அமர்ந்து கழுத்தைக் கட்டிக்கொண்டாள் குழந்தை. அத்தை காபி வைக்க, அடுப்படிக்குப் போனார்கள். இடைப் பட்ட தருணத்தில் நான் மகளுக்கு ஸ்வெட்டரை அணிவித்தேன்.

‘‘நல்லாருக்கு’’ என்றவாறு அவள் என்னை நசுக்குகிறாள். ஸ்வெட்டர் ஒரு வெப்பக் கடத்தியாக மாறுகிறது. ‘‘இது சேருதான்னு பாரு!’’ என்று தனசேகரன் பழைய ஸ்வெட்டரைப் போட்டுவிடுகிறார். ஸ்வெட்டருக்கு மேல் ஸ்வெட்டர். ஆச்சர்யமின்றி அதுவும் பொருந்துகிறது.

‘‘அம்மா! காலைல இருப்பேதானே?’’

‘‘இருக்கேண்டா கண்ணு! எஞ் சக்குடூ..!’’

காபியை எங்க ளுக்கு வைத்துவிட்டு, கட்டிலில் சென்று படுக்கிறார் அத்தை. பாப்பா, ‘‘அம்மாச்சி!’’ என்று குரல் விட்டாள். பின், என்னிலிருந்து எழுந்தாள். பழைய ஸ்வெட்டரைக் கழட்டிப் போட்டாள். அப்புறம் புது ஸ்வெட்டரையும்! உரித்த முயல் போல இருந்தாள். கட்டிலில் ஏறி அத்தையின் மார்புக் குவட்டில் முழங்காலைப் போட்டாள். கழுத்து வரிகளை பிஞ்சு விரல் கொண்டு நிரடினாள். சடுதியில் தூங்கிப்போனாள்.

அத்தையின் கழுத்தி லிருந்து புறப்பட்ட பொன்வண்டொன்று பறந்து வந்து என் மார்பு மீதமர்ந்தது. அதைப் போர்வையால் மூடிக்கொண்டேன்.

வெளியான தேதி: 26 மார்ச் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *