ஊருக்கு உபதேசம்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 27,766 
 
 

என் நண்பன் சரவணபிரசாத் இருக்கிறானே சரியான இலக்கியப் பைத்தியம். நானும் புத்தகங்கள் படிப்பதுண்டு . வார, மாதப் பத்திரிக்கைகள் , தவிர ராஜேஷ் குமார் , இந்திரா சௌந்தர்ராஜன் என்று தமிழ் கூறும் நல்லுலகம் வியந்து படிக்கும் எழுத்தாளர்களே எனக்கும் இஷ்டம். ஆனால் சரவணன் அப்படியல்ல அவனுடைய இலக்கிய உலகம் பரந்து விரிந்தது. அதி நவீன எழுத்தாளர் , பன்மொழி வித்தகர் விவேகானந்தனை மையமாகக் கொண்டு இயங்குவது.

எழுத்தாளர் விவேகானந்தன் நண்பர்களுக்கு , வாசகர்களுக்கு சுருக்கமாக விவி. அவர் தான் சரவணனின் ஆதர்ச தெய்வம். அவருடைய நூல் எது வெளி வந்தாலும் உடனே வாங்கிப் படித்து விடுவான். விவியைப் பற்றி சரவணன் பேசி நீங்கள் கேட்க வேண்டும். “டேய் ! ஸ்ரீராம் (நான் தான்) என்ன ஒரு மனுஷர்டா அந்த விவி. சே ! அவர் மாதிரி எல்லாம் இன்னொருத்தராலே எழுதவே முடியாதுடா” என்பான் கனவு மிதக்கும் கண்களோடு.

“ஏண்டா அப்டிச் சொல்றே? அவரொட கையெழுத்து அவ்ளோ மோசமா இருக்குமா?”

“சீ போடா! நீயும் உன் அசட்டு ஜோக்கும்! இந்த உலகமே அவரக் கொண்டாடுது தெரியுமா? ஆந்திராவிலே அவருக்கு எவ்ளோ மரியாதை தெரியுமா? நம்ம தமிழர்களுக்குத்தான் நல்ல இலக்கியவாதிகளை மதிக்கவே தெரியாது” . அவன் சொல்லும் விவியை தமிழ் நாட்டிலேயே பலருக்குத் தெரியாதே என்று சொல்ல நினைத்தேன் சொல்லவில்லை.

அப்படி என்ன தான் எழுதியிருக்கிறார் என்று தான் பார்ப்போமே என்று அவனிடம் அவர் எழுதிய புத்த்கம் ஒன்று கேட்டேன் . அவனும் கொடுத்தான். சத்தியமாகச் சொல்கிறேன் பத்துப் பக்கம் படிப்பதற்குள் எனக்கு குமட்டிக் கொண்டு வந்து விட்டது. குதிரைகள் உறவு கொள்வதையும் , மனிதக் கழிவுகள் பற்றியுமே அந்தப் பத்துப் பக்கங்களிலும் எழுதப் பட்டிருந்தது.. அதற்கு மேல் படித்தால் மதிய உணவு செல்லாது என்று மூடி வைத்து விட்டேன். எழுத்து என்பது அருவருப்பு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று யாரோ ஒரு பிரபலம் அநேகமாக அது கல்கியாக இருக்கலாம் சொன்னதாக எனக்கு நினைவு. அந்தப் புத்தகத்தை வீட்டிலுள்ளோர் கண்ணில் படாமல் ஒளித்து வைத்து மறு நாள் சரவணனிடம் கொடுத்தேன்.

“சரவணா! எப்டிடா இதெல்லாம் படிக்கறே? அவரு கன்னா பின்னான்னு எழுதியிருக்காரேடா” என்றேன். அவ்வளவு தான் கோபம் போங்கியது அவனுக்கு.

“உங்கிட்ட போய் அந்தப் புத்தகத்தைக் குடுத்தேனே! நீயெல்லாம் சராசரி மனுஷண்டா. அதைத் தாண்டி உங்களாலே சிந்திக்கவே முடியாது. ஒரு குறுகின வட்டத்துக்குள்ளேயே தான் நீங்க சுத்தி சுத்தி வருவீங்க. வாழ்க்கையின் நிஜத்தை ஏண்டா ஒப்புக்க மறுக்கறீங்க , அதை எழுத்துல கொண்டு வந்தா ஏண்டா முகம் சுளிக்கிறீங்க? ” என்று என்னவோ விவி பிரபலம் ஆகாமல் இருக்க நானே தான் காரணம் என்பது போலக் கத்தினான். அவரின் எழுத்தை ரசிக்கும் அளவு எனக்கு புத்திசாலித்தனம் போதாது என்று நான் ஒப்புக்கொண்ட பிறகே சமாதானமானான்.

“டேய் அவரையெல்லாம் நாம புரிஞ்சிக்கவே முடியாதுடா. அவரு தமிழ்நாடு , இந்தியாங்கற குறுகின கோட்டுக்குள்ள நிக்கறவர் கிடையாது. அவரு உலகளாவிய பார்வை உள்ளவரு. மொழிப்பற்று , நாட்டுப்பற்று இதெல்லாம் கூட ஒரு வகையான மாயைன்னு சொல்றவரு , அதையெல்லாம் தாண்டி மனுஷனை மனுஷனாப் பாக்கணும்னு சொல்றவருன்னா பார்த்துக்கோயேன். ழீன் கூய் , ஃஸாக் டீப் இவங்களைப் பத்தியெல்லாம் கேள்விப்பட்டுருக்கியாடா?

“யாருடா அவங்கள்லாம்? சைனாக்காரங்களா?”

“உன் மூஞ்சி! செக்கஸ்லோவேக்கிய எழுத்தாளர்கள்டா! அவங்களோட எழுத்தையெல்லாம் கரச்சுக் குடிச்சவர்டா விவி. அவரப் போயி” என்று மறுபடியும் ஆரம்பித்தான். நம் நாட்டிலேயே எத்தனையோ சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்களே , அவர்களையெல்லாம் கரைத்துக் குடித்து விட்டு வெளி நாட்டுக்குப் போனால் போதாதோ? என்று கேட்க நினைத்தவன் வாயை மூடிக் கொண்டேன். எதற்கு வம்பு? அதற்கு வேறு திட்டுவான்.

ஆனால் எனக்குள் சரவணன் சொன்ன ஒரு விஷயம் உறுத்தியது. உண்மையிலேயே மொழிப்பற்று , நாட்டுப்பற்று இவையெல்லாம் மாயையா? தேவையில்லாத உணர்வுகளா? அப்படியென்றால் தேசப்பாதுகாப்புக்காக நாம் கோடிக்கணக்கில் செலவு செய்வது எல்லாம் வீணா? நம் நாட்டுக்காகப் போராடியவர்கள் அனைவரும் முட்டாள்களா? நாட்டுக்காக உடைமையை , உறவை ஏன் உயிரையே துறந்தவர்கள் எத்தனை பேர்? அவர்களின் தியாகங்கள் எல்லாம் வெறும் மாயையைக் காப்பாற்றவா? நாட்டுபற்று , மொழிப்பற்று மாயை என்றால் குடும்பப் பற்றும் பாசமும் கூட பித்தலாட்டம் தானே? அப்படியெனில் அவர்களைப் பொறுத்தவரை எது தான் நிஜம்?அதே போல் ஒவ்வொருவரும் நினைக்க ஆரம்பித்தால் இந்தச் சமூகம் என்னவாகும்? இந்த உலகம் மக்கள் வாழ தகுதியான இடமாக இருக்குமா? என்றெல்லாம் யோசித்தவாறு இருந்தேன். எங்கோ இடித்தது ஒருவேளை நாம் தான் ரொம்பக் குறுகலாக யோசிக்கிறோமோவென நினைத்தேன். இல்லை இல்லை நிஜமாகவே யோசித்துக்கொண்டே நடந்ததில் கட்டில் இடித்து விட்டது.

திடீரென சரவணன் ஒரு நாள் வந்து “டேய் ! ஸ்ரீராம்! நம்ம ஊர்ல எழுத்தாளர்கள் மாநாடு நடக்கப் போகுதுடா. அதுல எல்லா பிரபல எழுத்தாளர்களும் கலந்துப்பாங்க! அதுக்கு விவியும் வராருடா! எனக்கு லக்கு! அவரை நேர்ல பாத்துப் பேசலாம். அவரோட கை குலுக்கலாம். ஆட்டோகிராஃப் கூடக் கிடைக்கும்டா!” என்று வானத்தில் மிதந்தான். எனக்கும் மகிழ்ச்சி தான். என்னுடைய அபிமான எழுத்தாளர்களும் வருவார்களே. அவர்களோடு உரையாட எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா?

மாநாடு ஆரம்பித்தது. நான் என்னுடைய பிரிய எழுத்தாளர்கள் அனைவரிடமும் சென்று பேசி அறிமுகப் படுத்திக் கொண்டேன். அனைவரும் சிறிதும் பந்தா இன்றி சிரித்துப் பேசினர். எனக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி. எழுத்துக்களால் மட்டுமே அறிமுகமாகியிருந்தவர்களோடு பழகும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது மட்டுமில்லை , தமிழகமே கொண்டாடும் எழுத்தாளர்கள் என்னோடு என்னை மதித்துப் பேசுவதென்றால்? நானும் வானில் தான் பறந்தேன்.

சொல்ல மறந்து விட்டேனே! சரவணன் விவியைச் சந்தித்து விட்டான். ஏதோ தெய்வத்தை நேரில் பார்ப்பது போல விவியைப் பார்த்துப் பேச நடுநடுங்கினான். ஒருவாறு சமாளித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான். என் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. ஆம்! விவி மிக இயல்பாகப் பேசினார். தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டார். இது எனக்கு அவர் மேல் இருந்த மரியாதையை உயர்த்தியது என்றால் மிகையாகாது.

ஒரு கட்டத்தில் நான் சரவணனை விட்டு வந்து விட்டேன். அவன் விவியே கதியென்று கிடந்தான். எப்போதும் அவருடனேயே பேசிக்கொண்டிருந்தான். அவன் மட்டுமில்லை. அவனைப்போல பல இளைஞர்கள் அவ்வாறே இருந்தனர். அவர்களின் பேச்சுக்களெல்லாம் உலக அளவிலேயே இருந்தது. பல நாடுகளுக்கும் சென்று வந்த அநுபவங்கள் , குடித்த மது வகைகள் , பார்த்த கேளிக்கைகள் என்று எல்லாவற்றைப் பற்றியும் மிக விரிவாகப் பேசினார். ஒளிவு மறைவு இல்லாமல் அவர் பேசியது ஆச்சரியமாக இருந்தது .எனக்கே கூட நாமெல்லாம் எதற்கு லாயக்கு? என்ற எண்ணம் வந்து விட்டது. இந்தத் தலைமுறை இளைஞர்களின் வழிகாட்டியாக அவர் இருப்பார் என்று எனக்குத் தோன்றியது.

ஆயிற்று ! மூன்று நாள் மாநாடு முடிவுக்கு வந்தது. அன்று இரவு நானும் சரவணனும் , எங்களுடைய பிரிய எழுத்தாளர்களைச் சந்தித்த மகிழ்ச்சியைக் கொண்டாட நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றோம். கண்ணுக்கு சுகம் தரும் இருள். ஆனால் பக்கத்திலுள்ளோரைப் பார்க்க முடிந்த வெளிச்கம். மெல்லிய சங்கீதம். சரவணன் உலகின் உச்சத்தில் இருந்தான். அவனுடைய அந்த நேரத் திருப்திக்கு அவன் சொன்ன உதாரணத்தை என்னால் கண்டிப்பாக இங்கே சொல்ல முடியாது. எல்லாம் சகவாச தோஷம் என்று நினைத்துக் கொண்டேன். சரவணனே செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான்.

எனக்கு அதில் கொஞ்சம் கூட மறுப்பு இல்லை. நான் முதல் ரவுண்டு முடிக்கும் முன் அவன் இரண்டு ரவுண்டு முடித்து விட்டான். விவியின் புகழையே பாடிக் கொண்டிருந்தான். எனக்குக் கோபமாக வந்தாலும் ஓசியில் வாங்கிக் கொடுக்கிறானே என்று பேசாமல் இருந்தேன். சுற்று முற்றும் பார்த்த போது கொஞ்சம் தள்ளி ஒரு டேபிளில் சாட்ஷாத் எழுத்தாளர் விவி மற்றொரு எழுத்தாளரோடு அமர்ந்திருந்தார். இருவர் முன்னும் டம்ளர்கள். அதை சரவணனுக்குச் சுட்டிக் காட்டினேன். “விவி ஒண்ணும் தான் குடிக்கறதேயில்லேன்னு சொல்லல்லியே? ” என்றான். அவன் சொல்வதிலும் உண்மை இருந்ததால் எனக்கென்ன? என்று விட்டு விட்டேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் விவி அமர்ந்திருந்த டேபிளில் சலசலப்பு ஏற்பட்டது. விவி யாரோ ஒருவருடன் உரக்க வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தார். கூட இருந்த எழுத்தாளர் சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தார். சரவணனும் அதைப் பார்த்தவாறிருந்தான். “ஏதோ ஒரு பெரிய விஷயத்துல கருத்து வெறுபாடு வந்துருக்கும் போல இருக்கு , என்னன்னு தெரியலியே?” என்று பரிதவித்தான் சரவணன். கொஞ்சம் விட்டால் எழுந்து போய் விவியோடு சண்டை போட்ட அந்த ஆளை உண்டு இல்லையென்று செய்து விடுவான் போல இருந்ததால் அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.

அங்கே வாக்கு வாதம் வலுத்தது. ஒரு கட்டத்தில் விவி அந்த ஆளை அடித்தே விட்டார். அந்த ஆளும் சும்மா இல்லாமல் விவியை ஓங்கி விட்டார் ஓர் அறை. விவி கீழே விழுந்து டேபிள் நுனி பட்டு ரத்தம் வர ஒரே களேபரம். கூட இருந்த எழுத்தாளார் விவியைத் தரதரவென வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு பாரை விட்டு வெளியேறிவிட்டார். சரவணனுக்கு அவர்கள் என்ன விஷயமாக அடித்துக் கொண்டார்கள் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றான். அத்தனை பெரிய விஷயம் தெரியவராமல் போவது தன் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடும் என்று பயமுறுத்தினான்.

நானும் வேறு வழியில்லாமல் அந்த டேபிளுக்கு சர்வ் செய்தவனை அழைத்துக் கேட்டேன் .

“அட! ஏன் சார் கேக்கறீங்க? ரெண்டு பேரும் சரியான குடிகாரனுங்க!” என்றான். சரவணன் அதிர்ந்து “அடப்பாவி அவர் விவிங்கற பிரபல எழுத்தாளர்யா! அவரப் பாத்தா இப்படி சொல்றே? என்றான்.

“அது என்னவோ எனக்குத் தெரியாது. ரெண்டு பேரும் சாதாரணமாத்தான் பேசிக்கிட்டு இருந்தாங்க . உக்காந்திருந்த ஆளோட (அது தான் விவி) சொந்த ஊரைப் பத்தி நின்னுக்கிட்டுருந்த ஆளு ஏதோ கேலி பண்ணிப் பேசிட்டாருன்னு சண்டை வந்துடுச்சு. போட்டு அடிச்சுட்டாரு அவரு. அவருக்குத்தான் ஊர்மேல எவ்ளோ பாசம் ? பற்று? ” பேசிக்கொண்டே போனான் சர்வர்.

பின்னால் தடால் என்ற சத்தம். பார்த்தால் சரவணன் விழுந்து விட்டான். பின்னே இமயமலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தவனை தலைகுப்புற அதல பாதாளத்தில் தள்ளி விட்டால் மயங்காமல் வேறு என்ன செய்வான் ?பாவம் !

– பெண்கள் மலர் (6-10-2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *