வ‌ருவாரா மாட்டாரா?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 20,041 
 
 

“கிருஸ்மஸ் கிருஸ்மஸ் வந்தாச்சு

நியூடிரஸ் நியூடிரஸ் தச்சாச்சு

பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும்

மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு நம்ம

மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு

ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்!

மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்!

ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்!

மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்!”

என்ற பாடல் சத்தமாக தனது மகிழ்ச்சியை பீட்டரின் வீட்டிற்குள் ஒலி பரப்பிப்கொண்டிருந்தது.

கிருஸ்மஸ்ஸுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தது. பீட்டர் தேவையான புது துணிமணிகளை எல்லாம் வீட்டிலுள்ள அனைவருக்கும் வாங்கிவிட்டார். கிருஸ்மஸ் தினத்திற்காக அனைவரும் ஆவலுடன் இருந்தனர். பீட்டரின் மனைவி மேரி. அவர்களுக்கு ஒரே மகன் விக்டர். அவன் எல்.கே.ஜி படித்து வந்தான். அவனது எல்லா பழக்கவழக்கங்களும் அனைவராலும் பாராட்டப்படும் ஒன்றே ஒன்றைத்தவிர. அது பிறருக்கு உதவுவது. அதுமட்டும் அவனுக்கு பிடிக்காது. எவ்வளவோ முறை அவனது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி சொல்லியும் அவன் பள்ளியில் கூட யாருக்கும் அவன் உதவியது கிடையாது.

அவனைத் திருத்த பீட்டரும், மேரியும் ஒரு திட்டம் போட்டனர். விக்டரின்

வகுப்பில் ஒரு ஏழை மாணவன் இருந்தான். அவன் பெயர் மணி. சரியான உடை கூட அவனிடம் இல்லை. அவர்களது திட்டத்தின் படி மணிக்கும் அவர்கள் கிருஸ்மஸ்ஸுக்கு உடை எடுத்திருந்தனர். அதனை விக்டர் மூலமாக மணிக்கு கொடுக்க ஆசைப்பட்டனர்.

யோசனையுடன் விக்டரை கூப்பிட்டார் பீட்டர்.

“விக்டர்! விக்டர்!”

“என்னப்பா?”

“உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும். உனக்கு என்ன வேணும்னு ஆசைப்படறே?”

“அப்பா.. எனக்கு மினி கம்ப்யூட்டர் வேணும்ப்பா.. அது எனக்கு ரொம்ப பிடிக்கும்பா..”

“ஓ அது ரொம்ப விலையாச்சே.. சரி நீ அத சாண்டா கிளாஸ்ட கேட்டுக்க.. அவர் இந்த கிருஸ்மஸ்ஸுக்கு உனக்கு அத கிப்டா தருவார்..”

“பொய் சொல்லாதீங்கப்பா.. சாண்டா கிளாஸ்னெல்லாம் யாரும் இல்ல.. அது சும்ம யாராவது வேஷம் போடறது.. அப்படி இருக்க.. அவர் எனக்கு எப்படி வந்து கிப்ட் தருவார்.. அதுவும் எனக்கு வேண்டிய பொருள..”

அப்போது அவனது அம்மா மேரியும் வந்து இவர்களின் உரையாடலில் கலந்து கொண்டார்.

“ஆமா விக்டர்.. அவரு கண்டிப்பா வேண்டியதை கொடுப்பார்.. ஆனால் அதுக்கு .. யாருக்கு கிப்ட் வேணுமோ அவங்க வேற யாருக்காவது உதவி பண்ணியிருக்கணும்..அப்பதான் அவர் கிப்ட் தருவார்..”

“நான் எதுக்கு யாருக்கோ உதவி செய்யணும்!!?”

“உதவி செய்யறதுல்ல தப்பே இல்ல. இருக்கறவங்க இல்லாதவங்களுக்கு கொடுப்பதால இல்லாதவங்க ரொம்ப மகிழ்ச்சி அடைவாங்க. அதனால அவங்க உதவி செஞ்சவங்கள வாழ்த்தும்போது அது கண்டிப்பா கடவுளோட காதுக்கும் கேட்கும். அப்ப கடவுள் நமக்கு என்ன தேவையோ அத நமக்கு கொடுத்து உதவுவார். கடவுள் நேரா வராம அதை கிருஸ்மஸ் தாத்தா மூலமா கொடுத்து அனுப்புவார்.”

“அப்படியா.. ம்..”

“என்ன ம்.. நீ வேணா யாருக்காவது உதவி பண்ணி பாரு.. உனக்கு கிப்ட் கிடைக்குதா இல்லையானு..”

“அப்ப யாருக்கு உதவி பண்ணட்டும்..?”

“உன் கிளாஸ்மெட் மணி இருக்கானே! அவனுக்கு உதவி பண்ணு. இதோ இந்த புதுட்ரஸ் போய் மணிக்கிட்ட கொடுத்துட்டு வா.. அப்புறம் என்ன கிப்ட் வேணும்னு சொல்லி சாண்டா கிளாஸ்கிட்ட வேண்டிக்க.. கிருஸ்மஸ் நைட்டுக்கு உனக்கு கிப்ட் கிடைக்குதானு பாரு..”

“சரி கொடுங்க.. நான் போய் கொடுத்துட்டு வரேன்..”

பீட்டரும் மேரியும் மகிழ்ச்சி பொங்க விக்டரிடம் மணியின் புது துணிமணியை

கொடுத்து அனுப்பினர்.

போனவன் ரொம்ப மகிழ்ச்சியாக திரும்பி வந்தான்.

“அம்மா அப்பா.. நான் மணி வீட்டுக்கு போயி புது டிரஸ் கொடுத்தவுடனே என்னை அவன் கட்டி புடிச்சுக்கிட்டான்.. நீ தான் என்னோட பெஸ்ட் ப்ரெண்டுனு சொன்னான்.. அவங்க அப்பாவும் அம்மாவும் எங்கிட்ட ரொம்ப ஆச ஆசயா பேசினாங்க.. எனக்கு ரொம்ப ரொம்ப ஜாலியா இருக்கு..”

“பத்தியா நீ பண்ணின உதவி அவங்கள எவ்வளவு மகிழ்ச்சி படுத்திடுச்சுனு..”

“ஆமாமா.. சரி இப்ப நான் ஒரு உதவி பண்ணிட்டேன்.. என்னோட மினி கம்ப்யூட்டர சாண்டா கிளாஸ் எனக்கு கிப்ட்டா தருவாரா..”

“கண்டிப்பா.. நீ அவர்ட்ட வேண்டிக்க”, என்றனர் இருவரும் கோரசாக…

அன்று நள்ளிரவு கிருஸ்மஸ்.

விக்டர் ஒரே தவிப்பாய் இருந்தான்…

“அப்பா சாண்டா கிளாஸ் வருவாரா..?”

“அம்மா சாண்டா கிளாஸ் வருவாரா..?”

“எனக்கு கிப்ட் தருவாரா?”, என கேட்டுக்கொண்டே இருந்தான். வெகு நேரம் சாண்டா கிளாஸ்காக விழித்திருந்து தூங்கிப்போய்விட்டான்.

பீட்டரும் மேரியும் அவன் தூங்குவதற்காகவே காத்திருந்தனர்.

ஏற்கனவே வாங்கிவைத்திருந்த மினி கம்ப்யூட்டரை அழகாக பெரிய கிப்ட்டாக பேக் செய்து.. உள்ளே நாலைந்து சாக்லேட் வைத்து.. மேலே இரண்டு பலூன் கட்டி அவன் அருகில் வைத்தனர்.

காலையில் விழித்தவன் மகிழ்ச்சிக்கடலில் துள்ளிக்குதித்தான்.

“அப்பா..”

“அம்மா..”

“எனக்கு சாண்டா கிளாஸ் கிப்ட் கொடுத்துட்டு போயிருக்காரு. நீங்க சொன்னது உண்மை தான்.. நீங்க அவர பார்த்தீங்களா…?”

“ஆமா விக்டர்.. அவரு வரும்போது நாங்க முழுச்சுக்கிட்டோம்.. என்ன கிப்ட்னு கேட்டோம்.. அவரு மினி கம்ப்யூட்டர்னு சொன்னாரு.. சரி விக்டரும் அதைத்தான் ஆசைப்பட்டான்னு சொன்னோம்.. அவரு கிளம்பும்போது இன்னொன்னு உங்கிட்ட சொல்ல சொன்னாரு..”

“என்ன சொன்னாரு.. சொல்லுங்க..”

“எப்பவுமே இதே போல பிறருக்கு உதவி செஞ்சா, எல்லா கிருஸ்மஸ்ஸுக்கும் உனக்கு என்ன வேணும்னாலும் கிப்ட்டா தருவேணு சொன்னாரு…”

“அப்படியா சொன்னாரு… இனிமே கண்டிப்பா நான் எல்லாத்துக்கும் உதவி செய்வேன்.. கிப்ட் கிடைக்காட்டியும் பரவாயில்லை.. ஒருத்தருக்கு உதவி செய்யும்போது அவங்களவிட நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும்னு நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். இனிமே நானும் எல்லாத்துக்கும் ஒரு சாண்டா கிளாஸா இருக்கப்போறேன்”,

என்று கூறிய விக்டரை பீட்டரும் மேரியும் தூக்கி அணைத்து முத்தமழை பொழிந்தனர்.

– வெளியான மாதம்/ஆண்டு: 2017 டிசம்பர் “பாவையர் மலர்” இதழில் வெளியான கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *