வீட்டில் உள்ள பொருள் யாருக்கு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,346 
 
 

ஒரு சிற்றூரில் இருந்த விவசாயி, தன்னுடைய வீட்டை, பக்கத்து ஊரில் வசித்த விவசாயிக்கு விற்றார்.

அந்த வீட்டை விலைக்கு வாங்கிய விவசாயி, வீட்டைச் சுத்தப்படுத்தி வெள்ளையடிப்பதற்காகச் சென்றார்.

அங்கே விட்டத்தில் இரண்டு செப்புக் குடங்கள் இருப்பதைக் கண்டார். ஆனால், அவற்றில் என்ன இருக்கிறது என்பதையும் அவர் பார்க்கவில்லை.

மறுநாள், வீட்டை விற்றவரிடம் சென்று, ”விட்டத்தில் இரண்டு செப்புக் குடங்கள் இருக்கின்றன. வந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் வீட்டை வாங்கியவர்.

“நான் வீட்டை விற்று விட்டதால், அதில் உள்ள பொருள்கள் உங்களுக்கே உரியன. அதை நான் எடுத்துக் கொள்வது நியாயம் அல்ல” என்றார் வீட்டை விற்றவர்.

“நான் வீட்டைத்தான் விலைக்கு வாங்கினேன்; அதில் உள்ள பொருள்களை நான் எடுத்துக் கொள்வது நியாயம் ஆகாது” என்றார் வீட்டை வாங்கியவர்.

இப்படியாக இரண்டு மாதங்கள் கடந்து விட்டன.

அதன் பின்னர், வீட்டின் விட்டத்தில் இருக்கும் இரண்டு செப்புக் குடங்களை எடுத்துக் கொண்டு போவதற்கு வந்தார் வீட்டை விற்றவர்.

“அது என்ன நியாயம்? அதில் உள்ள பொருள் எனக்குத் தானே சொந்தம். அதை நீங்கள் எடுத்துக் கொள்வது எப்படி நியாயம் ஆகும்?” என்றார் வீட்டை வாங்கியவர்.

“நான் வீட்டை மட்டுமே உங்களுக்கு விற்றேன், அதில் இருக்கும் பொருள்கள் என்னைச் சேர்ந்ததே . அதை நான் எடுத்துக் கொள்வதுதான் நியாயம்” என்று வாதாடினார் வீட்டை விற்றவர்.

இருவரும் ஊர்ப்பஞ்சாயத்தாரிடம் சென்று முறையிட்டனர். “வீட்டில் உள்ள பொருள், வீட்டை வாங்கியவருக்கே உரியது” என்று தீர்ப்புக் கூறினார் பஞ்சாயத்தார்.

இரண்டு மாதங்களில் அவர்களின் போக்கு எப்படி மாறிவிட்டது!

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *