முள் எலியும் முயலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 12,010 
 

ஒரு முள்ளெலி தினந்தோறும் அதிகாலையில் இரைதேடு வதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தது. அது செல்லுகின்ற வழியிலே இருந்த புல்லை மேய்வதற்காக ஒரு முயல் அந்த நேரத்தில் அங்கு வருவதுண்டு. வளைந்து குட்டையாக இருக்கும் முள்ளெலியின் கால்களைப் பார்த்ததும் முயலுக்குச் சிரிப்பு வரும். முள்ளெலி குடுகுடுவென்று மெதுவாக ஓடுவதைக் கண்டும் அதற்குச் சிரிப்பு வரும். அதன் உடம்பெல்லாம் முள்ளாக இருப்பதை நோக்கியும் முயல் நகைக்கும்.

“முள்ளெலியாரே, எங்கே இவ்வளவு வேகமாகப் புறப்பட்டீர்கள்?” என்று இப்படி முயல் கிண்டலாகத் தினமும் கேட்ப துண்டு. முயல் தன்னைக் கேலி செய்வதை முள்ளெலி தெரிந்து கொள்ளாமல் இருக்கவில்லை. ஆனால் அது பொறுமையோடு ஏதாவது பதில் சொல்லும். அப்படிச் சொல்லும் பதிலைக் கேட்டு மேலும் கேலியாக முயல் பேசத் தொடங்கும்.

இப்படிப் பல நாட்கள் நடந்தன. ஒரு நாள், “ஐயா, முள்ளெலியாரே, இப்படி மின்னல் வேகத்திலே போகிறீரே உங்கள் உடம்பு கெட்டுப்போகாதா? காடுமேடுகளெல்லாம் உங்கள் வேகத்திலே அதிர்ந்து நடுங்குகின்றன” என்று சொல்லிவிட்டு முயல் கள்ளச் சிரிப்புச் சிரித்தது. முள்ளெலி அந்தச் சிரிப்பைக் கவனித்துவிட்டது.

அன்று அதற்கு எப்பொழுதும் போலப் பணிவாகப் பதில் சொல்ல மனம் இடங் கொடுக்கவில்லை. அதன் மனத்தில் மிகப் பெரிய வருத்தம் தோன்றிற்று. “ஐயா, முயலாரே உங்களுக்குக் கால் நீண்டிருந்தாலும் ஓட்டப் பந்தயம் வைத்தால் என்னை உங்களால் தோற்கடிக்க முடியாது. நான் தான் நிச்சயமாக வெற்றியடைவேன். இதை நினைவில் வைத்துக்கொள்ளும்” என்று அமைதியாகச் சொல்லிற்று.

இதைக் கேட்டதும் முயலுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. முதலில் அது தன் காதுகளையே நம்பவில்லை. இந்த முள்ளெலிக்குப் பயித்தியம் தான் பிடித்திருக்கிறது என்று பிறகு எண்ணிக்கொண்டது.

“என்னோடு ஓட்டப்பந்தயத்திற்கு வருகிறீரா? உம்மால் அது முடியுமா?” என்று முயல் அசட்டையோடு கேட்டது.

“நான் வர எப்பொழுதும் தயார். ஆனால் உமக்குத் தோல்வி நிச்சயம். இதை எண்ணிப் பார்த்துப் பேசுங்கள்” என்று மறுபடியும் நிதானமாகவே முள்ளெலி பதில் சொல்லிற்று.

முயலுக்கு மூக்கிற்குமேல் கோபம் வந்துவிட்டது. இந்த முள்ளெலியின் மண்டைக் கர்வத்தை ஒரு நொடியில் அடக்க வேண்டு மென்று தீர்மானித்துக்கொண்டு, “சரி இப்பொழுதே இந்தயிடத்திலிருந்தே இந்தக் காட்டின் கோடி வரை ஓடலாம். முதலில் அங்கே போய்ச் சேர்வது நீயா நானா பார்க்கலாம்” என்றது.

“ஐயா, முயலாரே, நீர் நன்றாகப் புல் மேய்ந்து விட்டீர். நான் இன்னும் உணவே தொடவில்லை. இந்தச் சமயத்தில் ஓட்டப் பந்தயத்திற்குக் கூப்பிடுவது சரியா? நான் வீட்டுக்குப் போய் உணவருந்திவிட்டு இரண்டு நாழிகையில் இந்த இடத்திற்கே வருகிறேன். நீர் இங்கேயே புல் மேய்ந்துகொண்டிரும். நான் வந்தவுடனே பந்தயம் தொடங்கலாம்” என்றது முள் ளெலி. முயல் இதற்கு ஒப்புக்கொண்டது.

முள்ளெலி வீட்டிற்குப் புறப்பட்டது. அங்கு சென்றதும் தன் மனைவியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லிற்று. “நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். இப்பொழுது என்னுடன் கூடவா” என்றது முள்ளெலி. அதன் மனைவியும் உடனே சம்மதித்துப் புறப்பட்டது. இரண்டும் சேர்ந்து கொண்டு, ஓட்டப் பந்தயம் எந்த இடத்தில் போய் முடிவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்திற்கு அவசர அவசரமாகச் சென்றன. அங்கே போய்ச் சேர்ந்ததும் ஆண் எலி தன் மனைவியைப் பார்த்து, “நீ இந்த இடத்திலேயே தங்கி இரு. முயல் வேகமாக இந்த இடத்தை நோக்கி வரும் போது, நீ அதைப் பார்த்து ‘என்ன முயலாரே இவ்வளவு நேரமாயிற்றா உமக்கு? நான் வந்து வெகுநேரமாகிறதே?’ என்று சொல்” என்று கூறிற்று. இப்படித் தந்திரம் சொல்லிக் கொடுத்துவிட்டு முயலைத் தேடிக்கொண்டு அது சென்றது. பெண் எலி குதூகலத்தோடு அங்கேயே தங்கிற்று.

குறிப்பிட்ட நேரத்திற்கெல்லாம் ஆண் முள்ளெலி முயலிடம் வந்து சேர்ந்தது. உடனே இரண்டும் ஓட்டப் பந்தயத்திற்குத் தயாராயின. முயல் ஒரே பாய்ச்சலாகத் தாவிக் குதித்து வெகுவேகமாக ஓடி மறைந்துவிட்டது. முள்ளெலி ஓடுவதைப் போலக் கொஞ்ச தூரம் பாசாங்கு செய்துவிட்டு, முயல் கண்ணுக்கு மறைந்ததும், புறப்பட்ட இடத்திற்கே திரும்பிவந்து நிம்மதியாகப் படுத்துக்கொண்டது.

முயல் நாலுகால் பாய்ச்சலிலே தாவித்தாவிச் சென்று குறிப்பிட்ட இடத்தை அடைந்தது. “அந்த முள்ளெலி இன்னும் நூறில் ஒரு பங்கு தூரம்கூட வந்திருக்க முடியாது” என்று பெருமையோடு எண்ணிக் கொண்டு அது முன்னால் பார்த்தது.

“என்ன முயலாரே, இவ்வளவு நேரமா உமக்கு? பாவம் உம்மால் என்னுடன் ஓடிவர முடியுமா?” என்று கூறும் முள்ளெலியின் குரல் கேட்டது. அதைக் கேட்டதும் முயல் அப்படியே திகைத்துப்போய் நின்றுவிட்டது. அதற்கு ஒன்றுமே புரியவில்லை. “முள்ளெலியாரே, ஒரு தடவை ஜெயித்தால் அது உண்மையான வெற்றியாகாது. இங்கிருந்து மறுபடியும் நாம் புறப்பட்ட இடத்திற்கே ஓடலாம். இந்தத் தடவை யாருக்கு வெற்றி கிடைக்குமென்று பார்ப்போம்” என்று தலை குனிந்து கொண்டே சொல்லிற்று.

“ஓ, நான் தயார். புறப்படுங்கள்” என்றது முள்ளெலி.

முயல் மீண்டும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தோடிற்று. பெண் முள்ளெலி அங்கேயே நின்று கொண்டது. முதலில் புறப்பட்ட இடத்தை முயல் அணுகியதும் அங்கிருந்த ஆண் முள்ளெலி, “என்ன முயலாரே, பாவம் உங்களால் ஓட முடியவில்லை” என்று பரிகாசமாகச் சொல்லிற்று.

முயல் மறுபடியும் மேலும் ஒரு முறை ஓடலாம் என்றது. முள்ளெலியும் உடனே சம்மதித்தது. இப்படிப் பல முறை முயல் ஓடிஓடிப் பார்த்து மூச்சுத் திணறிக் களைத்துப் போய் விட்டது. வெற்றி மட்டும் அதற்குக் கிடைக்கவில்லை. கடைசியில் நகரக்கூட முடியாமல் அது அப்படியே ஓர் இடத்தில் படுத்துக்கொண்டு தன் தோல்வியை ஒப்புக் கொண்டது.

முயலுக்குக் கால்கள் நீண்டிருந்தாலும் மூளை கொஞ்சம் கட்டைதான். முள்ளெலிகளோ ஆண்பெண் எல்லாம் ஒன்றைப் போலவேயிருந்தன. அதனால் முயலின் மூளைக்கு முள்ளெலியின் சூழ்ச்சி எட்டவேயில்லை.

– தம்பியின் திறமை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 14-11-63, பழனியப்பா பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *