பொய் சொல்லி ராஜா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 9,508 
 
 

முன்னொரு காலத்தில் நாகபுரி என்று ஒரு பட்டணம் இருந் தது. அந்தப் பட்டணத்தை ஆண்ட அரசனுக்கு நீண்டகால மாகப் பிள்ளையில்லாமலிருந்து கடைசியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் தாயாராகிய அரசி அதைச் செல்வமாக வளர்த்து வந்தாள். அதே சமயத்தில் பொய்யே பேசக்கூடாது என்று குழந்தைக்குப் போதித்து வந்தாள். “உயிர் போவதாக இருந்தாலும் பொய் பேசக்கூடாது” என்று அவள் சொல்லுவாள். பல கதைகள் சொல்லியும் அந்த எண்ணத்தை நன்றாக மனதில் பதியச் செய்வாள். தாயின் அன்பை நன்றாக அறிந்திருந்த அந்தக் குழந்தை அவள் சொன்னபடியே நடக்கப் பழகிக் கொண்டிருந்தது. அதற்கு லோகநாதன் என்று பெயர்.

லோகநாதனுக்கு எட்டு வயதாக இருக்கும்போது திடீ ரென்று ஒரு நாள் இரவில் ஒரு பக்காத்திருடன் அரண்மனைக் குள்ளே எப்படியோ தந்திரமாகப் புகுந்து யாருமறியாமல் அவனைத் தூக்கிக்கொண்டு போய் விட்டான்.

நாகபுரிக்கு மேற்குப் பக்கத்திலே ஒரு பெரிய மலை இருந் தது. அதில் அநேக குகைகள் உண்டு. அந்தக் குகைகளைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய மரங்களும் புதர் களும் இருக்கும். அவற்றின் வழியாக யாருமே வரப் பயப்படு வார்கள்.

அப்படிப்பட்ட இடத்தில் தான் அந்தப் பக்காத்திருடன் யாருக்கும் தெரியாமல் வசித்து வந்தான். அவன் திடீரென்று ஏதாவது ஒரு ஊருக்குள் நுழைந்து கொள்ளையடித்துக் கொண்டு போய்விடுவான். அவன் எங்கிருந்து வருகிறான், எப்பொழுது வருகிறான் என்று யாருக்குமே தெரியாது.

நாகபுரி அரசன் அவனைப் பிடிக்க எத்தனையோ முயற்சி செய்தும் பலிக்கவில்லை. தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு போனபிறகு அரசனே பல இடங்களுக்குத் தனது படை வீரர்களோடு சென்று தங்கி அந்தப் பக்காத்திருடனைக் கண்டுபிடிக்கப் பிரயத்தனம் செய்தான். அப்பொழுதும் அவன் அகப்படவில்லை. நாகபுரிக்குப் பக்கத்தில் சந்திரபுரி என்ற ஒரு பட்டணம் உண்டு. அந்தப் பட்டணத்து அரசனும் திருட னைப் பிடிக்க முயன்றான். ஆனால் அவனாலும் முடியவில்லை.

பக்காத்திருடனுக்கு எட்டு வயதுள்ள ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் செல்லமுத்து. பிறந்த சில மாதங்களில் அவன் தாய் இறந்துபோன தால் பக்காத் திருடனே அவனை வளர்த்து வந்தான். “என்றைக்கும் யாரிடத்திலும் பொய் தான் பேசவேண்டும். உண்மை சொல்லக் கூடாது” என்று அந்தத் திருடன் தன் மகனுக்குப் போதித்து வந்தான்.

தன் மகன் பொய்யே பேசுகிறானா என்று அறிந்து கொள் வதற்காகப் பக்காத்திருடன் பலவிதமான சோதனைகள் எல்லாம் செய்வான். சோதனையில் ஒரு தடவை தப்பினாலும் மகனை நன்றாக உதைப்பான்.

ஒரு நாள் காலையில் செல்லமுத்துவும் பக்காத் திருடனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இருவரும் சாப்பிட்டு முடிந்த வுடன் பக்காத்திருடன் தன் மகனைப் பார்த்து, “காலை உணவு சாப்பிட்டாயிற்றா?” என்று கேட்டான். “ஆயிற்று” என்று செல்லமுத்து பதில் சொன்னான்.

உடனே பக்காத்திருடன் அவன் கன்னத்திலே ஓங்கி ஓர் அறை கொடுத்தான். “ஏண்டா, சாப்பிட்டாயிற்று என்று எதற்காக உண்மையைச் சொன்னாய்?” என்று அவன் கோபத்தோடு கேட்டான்.

“இரண்டு பேருமாகத்தானே இப்பொழுது சாப்பிட்டோம்?” என்றான் செல்லமுத்து.

“அப்படியிருந்தாலும் நீ உண்மையைச் சொல்லியிருக்கக் கூடாது. அதோடு இன்னொரு விஷயத்தையும் நீ தெரிந்து கொள்ளவேண்டும். நீ யாரையும் நம்பக்கூடாது. நம்பினால் ஏமாந்து போய் அகப்பட்டுக் கொள்வாய்” என்று அவன் போதனை செய்தான். இப்படிப் போதனை செய்தே திருடன் தன் மகனை வளர்த்துவந்தான்.

இந்தச் செல்லமுத்துவுடன் அரச குமாரனான லோக நாதன் மலைக் குகையிலே வாழ வேண்டி நேந்தது.

பக்காத்திருடனைக் கண்டு பிடிப்பதற்காக நாகபுரி அரசன் முயற்சி செய்தானல்லவா? அரசனால் தன்னைக் கண்டுபிடிக்க முடியாது என்று காண்பிப்பதற்காகவே பக்காத் திருடன் அந்த அரசனுடைய பையனையே தூக்கிக் கொண்டு வந்து விட்டான்.

லோகநாதன் குகையிலே கைதியைப் போல வாழ வேண்டியதாயிற்று. அவனைச் செல்லமுத்தாவது பக்காத் திருடனாவது சதா காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். அவர் கள் இரண்டுபேரும் வெளியில் போனாலோ அல்லது தூங்கி னாலோ லோகநாதனை ஒரு குகைக்குள் அடைத்து வைத்து விடுவார்கள்.

இவ்வாறு பல வருஷங்கள் சென்றன. லோகநாதனுக்கும், செல்லமுத்துவுக்கும் இருபது வயதாயிற்று. அப்பொழுது அவர்கள் இருவரும் சேர்ந்து திருட்டுக்குப் போகவேண்டும் என்று பக்காத்திருடன் சொன்னான். லோகநாதன் தன் உயிர் போவதாக இருந்தாலும் திருட்டுக்குப் போக முடியாது என்று கண்டிப்பாகப் பேசினான். அவனை அடித்தார்கள். அப்பொழுதும் அவன் இணங்கவில்லை. அதனால் செல்லமுத்து மட்டும் கொள்ளையடிக்கப் போனான்.

அவன் குகைக்குத் திரும்பி வரும்போது நாகபுரிக் காவலாளிகள் பார்த்துக் கொண்டார்கள். அவன் போன வழியை நன்கு தெரிந்துகொண்டு அவர்கள் பட்டணத்துக்குப் போய் அரண்மனையில் விஷயத்தைச் சொன்னார்கள்.

அந்தச் சமயத்திலே நாகபுரியில் அரசன் யாரும் இல்லை. அரசனும் அரசியும் வயதாகி இறந்துவிட்டார்கள். லோகநாதனைக் கண்டுபிடிக்க முடியாத கவலையோடு அவர்கள் இறந்ததால் மந்திரிகள் லோகநாதனை எப்படியாவது தேடிப் பார்க்க வேண்டுமென்று முயற்சி செய்தார்கள்.

அவர்கள் பக்காத்திருடனுடைய இருப்பிடத்தைப் பற்றிச் சேதி அறிந்ததும் அந்த இடத்தை நோக்கிப் பல வீரர்களுடனே வந்தார்கள்.

அவர்கள் வரும் சமயத்தில் லோகநாதனும் செல்லமுத்துவும் மலைக் குகைக்குச் சற்று தூரத்திலே காட்டுக்குள் மல்யுத்தம் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். லோகநாதனுக்கு ஈடாக செல்லமுத்து மல்யுத்தம் செய்ய முடியாது. அதனால் லோகநாதன் அவனைச் சுலபமாகக் கீழே வீழ்த்தி நிலத்தோடு அழுத்தினான். அவன்மேலே ஏறி உட்கார்ந்தான்.

அந்த வேளையிலே மந்திரிகளும் படைவீரர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். முதன் மந்திரி லோகநாதனைப் பார்த்துத்தான் வந்த விஷயத்தைச் சொல்லியதோடு அவனை யாரென்று அறிந்துகொள்ள விரும்பினான்.

“நான் தான் ராஜகுமாரன். என் பெயர் லோகநாதன்” என்று அவன் சொன்னான்.

அவன் சொல்லி வாய் மூடுவதற்கு முன்பு செல்லமுத்து முதன் மந்திரியைப் பார்த்து, “இவன் பொய் சொல்லுகிறான். இவன் ராஜகுமாரனல்ல. நான் தான் ராஜகுமாரன்” என்று பொய் சொன்னான்.

முதன் மந்திரிக்கு யார் சொன்னது உண்மை என்று தெரியவில்லை. அதனால் கொஞ்சம் யோசனை செய்து கொண் டிருந்தான்.

அதைக்கண்டு செல்லமுத்து, “உங்களுக்கு இன்னும் சந்தேகமா? நீங்கள் வரும்போது இவன் என்மேலே ஏறிக் கொண்டு என்னை நிலத்தில் அழுத்தியதை நீங்கள் பார்க்க வில்லையா? சிறைக்கைதியாகக் கிடக்கும் ராஜகுமாரனாகிய நான் அந்தப் பக்காத்திருடனின் மகன் மேல் ஏறி உட்கார அவன் சம்மதிப்பானா? நீங்களே யோசித்துப் பாருங்கள். அதற்கு மேலும் உங்களுக்குச் சந்தேக மிருக்குமானால் வாருங்கள். நான் உங்களுக்கு அந்தப் பக்காத்திருடனைக் காட்டிக் கொடுக்கிறேன். அவன் தான் என்னை இதுவரை இங்கு கைதியாக வைத்திருக்கிறவன்” என்று சந்தேகத்துக் கிடமில்லாமல் மள மள வென்று பேசினான்.

மந்திரிகளும் படைவீரர்களும் செல்லமுத்துவைப் பின் தெரடர்ந்து சென்றார்கள்.

செல்லமுத்து பக்காத்திருடனாகிய தன் தந்தையைக் காட்டினான். “இவன் தான் பக்காத்திருடன். இவனைப் பிடித்து விலங்கு போடுங்கள்” என்று அதிகாரத்தோடு சொன்னாள். உடனே வீரர்கள் திருடனைக் கைது செய்தார்கள்.

செல்லமுத்துதான் லோகநாதனென்று அனைவரும் நம்பி விட்டார்கள். அதனால் அவனை நாகபுரிக்கு அரசனாகச் செய்தார்கள். பக்காத்திருடனையும் உண்மையான லோகநாதனையும் பாதாளச் சிறையில் அடைத்தார்கள்.

அரசனாகிவிட்டால் மிகுந்த சந்தோஷம் உண்டாகுமென்று செல்லமுத்து நினைத்தான். ஆனால் அரசனானதிலிருந்து அவனுக்குக் கவலையாரம்பித்துவிட்டது. தன் தகப்பன் யாரையும் நம்பவேண்டாம் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறானல்லவா? அதனால் அவனால் யாரையும் நம்பமுடியவில்லை. மேலும் ஒவ்வொருவனும் தன்னைப் போல் பொய்யே பேசுவதாக அவனுக்குப் பட்டது.

மந்திரிகளும் பிரதானிகளும் அரசனிடத்திலே மிகுந்த விசுவாசம் உடையவர்களென்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் செல்லமுத்துவால் அதை நம்ப முடியவில்லை. பொக்கிஷசாலையில் இருக்கும் பணத்தையெல்லாம் முதல் மந்திரியோ மற்ற மந்திரிகளோ அபகரித்துக் கொள்ளுவார்களென்று அவனுக்கு பயம் உண்டாயிற்று. அதனால் பொக்கிஷசாலையின் சாவிகளை யெல்லாம் அவனே வைத்துக்கொண்டு இரவிலே அதற்கு வெளியிலிருந்து தூங்காமல் காவல் காத்து வந்தான். அதனால் தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டான்.

பகலிலே எந்தக் காரியத்தைப் பற்றி யார் சொன்னாலும் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. “பொய்யா பேசுகிறாய்?” என்று எல்லோரிடமும் சீறி விழுந்தான். அவன் இவ்வாறு நடந்துகொள்வதைக் கண்டு எல்லோரும் திகைப்படைந்தார்கள்.

செல்லமுத்துவுக்குப் பகலிலும் சந்தோஷ மேற்படவில்லை. இரவிலே தூங்குவதற்கே முடியாமல் காவல் வேலை செய்ய வேண்டியதாயிற்று.

இப்படியிருக்கும்போது சந்திரபுரி அரசன் தன் மகளைச் செல்லமுத்துவுக்குக் கலியாணம் செய்து கொடுப்பதற்காக அதைப் பற்றிப் பேசுவதற்கு தன் மந்திரியையும் வேறு முக்கியமான சிலரையும் நாகபுரிக்கு அனுப்பினான்.

அவர்கள் தாங்கள் வந்த நோக்கத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். செல்லமுத்துவுக்கு உடனே சந்திரபுரி அரசன் மேல் சந்தேகம் வந்துவிட்டது. “இவர்களெல்லாம் கலியாணப் பேச்சுப் பேசுவது போல வந்து இந்த நாட்டு ரகசியங்களைத் தெரிந்து கொண்டுபோக வந்திருக்கிறார்கள். நமது பட்டணத் தின்மேல் படையெடுக்கத்தான் இந்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள்” என்று நினைத்தான்.

உடனே தனது சேனைகளைத் திரட்டிக்கொண்டு சந்திரபுரி அரசன்மேல் சண்டைக்குப் புறப்பட்டான். சேனாதிபதி எவ்வளவு சொல்லியும் அவன் பேச்சைக் கேட்கவில்லை. “சேனாதிபதியும் பகைவர்களோடு சேர்ந்தடுக்கிறான். அதனால் தான் போர் வேண்டாமென்கிறான்” என்று சந்தேகித்து அவனைச் சிறையில் போடும்படி உத்தரவிட்டுத் தானே படைத்தலைவனாகப் போருக்கு புறப்பட்டான்.

நாகபுரி வீரர்கள் மனமில்லாமல் போர் செய்தார்கள். அத்துடன் செல்லமுத்துவுக்குப் போரை நடத்தத் தெரியவில்லை. அதனால் அவன் தோல்வியடைந்து போர்க்களத்தை விட்டு ஓட்டமெடுத்தான். அந்தச் சமயத்தில் ஓர் அம்பு முதுகில் படவே அப்படியே விழுந்து உயிர்விட்டான்.

உயிர் விடும் தருணத்தில்தான் அவனுக்குத் தான் செய்த தவறெல்லாம் நினைவுக்கு வந்தது. பொய் பேசி ஒரு சுகமும் அடையவில்லையே என்றும் விசனப்பட்டான். அதனால் அவன் உயிர் விடுவதற்கு முன்பு பக்கத்திலிருந்த வீரர்களைக் கூப்பிட்டு பாதாளச் சிறையில் இருப்பவனே உண்மையான ராஜகுமாரனென்று சொல்லிவிட்டான்.

லோகநாதனைச் சிறையிலிருந்து அழைத்து வந்து நாகபுரியின் அரசனாக்கினார்கள். சந்திரபுரி அரசனும் உண்மையை அறிந்து மகிழ்ச்சியடைந்து தன் மகளை அவனுக்கு மணம் செய்து கொடுத்தான். லோகநாதன் தன் குடிகளை அன்போடு நெடுங்காலம் ஆண்டுவந்தான்.

– தம்பியின் திறமை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 14-11-63, பழனியப்பா பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *