உத்தர தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 4,315 
 

சனி – 5 கிலோ, நூடில்ஸ் – 5 பக்கற், சோயா மீற் – 500 கிராம், சோடா 2 பெரிய போத்தல்….. கையிலிருக்கும் தொகையும், விருந்தினர் தொகையும் போட்டிபோட என் மனக்கணக்கில் மகளின் லக்டோஜன் மாக்கணக்கும் வந்து போனது. ”கண்டியால வாறவைக்கு ஜஸ்கிறீம் கொடுக்க வேணும். இப்ப ஜஸ்கிறீமும் வருகுதுதானே. 2 கிலோ பெட்டி வாங்குங்கோ” என என் மனைவி சொன்ன வார்த்தை மந்திர மானதால் எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டு வாசல் வந்தேன்.

வரிசையில் நின்ற ஆட்டோ ஒன்றில் ஏறிப் போய் மாளிகாவத்தையிலிருக்கும் தம்பி மகேசனைக் கண்டு மனங் குளிர்ந்து அவனுடைய கோழிக்கூடு வீட்டில் என் மனைவி தந்த பருத்தித்துறை வடை, வடகம், ஊறுகாயையும் வரிசையாய் அடுக்கியபோது லயன் எயாறின் பயணத்தில் என்னுடன் அவையும் நசுங்கித்தான் போச்சு. களைப்பாறச் சற்று உடல் சாய்ந்தேன்.

வான் ரயரின் வண்ணக் கோலங்கள், வந்த உறவினரின் வாய்ப்பேச்சில் ஏ-9 வழியின் நேர்முக வர்ணனை. “உந்தப் பாதையால.. யாரும் வருவினமே..? கஸ்ரம் ஒபீசில நான் எத்தின பேரை கவுரமா அனுப்பின்னான். என்னை இவங்கள் கவுட்டுக் கொட்டச் சொல்லுறாங்கள்…வெட்ட வெளியெல்லாம் வேகக் கட்டுப்பாடு….உலகத்தவரின் இன்றைய ஓட்டப் பாதையில் தமிழரின் வேகம்? மச்சானின் வாயில் மங்களகோசம்.

ஈட்டியாய்ப் பாய்ந்தது இரவுச் செய்தி அறிக்கை. “இரண்டாவ தாய்ப் பயணித்த லயன்எயார் விமானம் காணாமல் போனது” என்ற வருத்தமான செய்தி. வந்த வேலை முடியும் முன் வரலாற்றுப் புகழ்மிக்க திருமலையில் வசந்தாக்கா வீட்டு வராண்டாவில் நான் “இண்டைக்குப் பதியினமோ…?”

“இல்லை. போன மாசம் பதிஞ்சவைக்கு இன்டைக்கு இன்ரவியூவாம்…”

“யாழ்ப்பாணத்தில் அப்படி என்ன வேலை குடுக்கினமோ!”

இந்த மண் எங்களின் சொந்த மண். எல்லைகள் மீறி யார் வந்தவன் என்ற பாட்டுக் கசற்களை ஈயப் பேப்பரில் சுத்தி அந்த மண்ணில் புதைத்த நினைவுகள் என் மனக்கண் முன்.

மனைவி எப்படி இருக்கிறாளோ பி.பி.சி கேக்கிறபடியால் விசயம் தெரிஞ்சிருக்கும். அதிகாரிகள் முன் பதிந்து ஆக்கிமிப்பாளர் முன் பணிந்து கப்பலேறிப் போயாச்சு, கரை காணும் வரை கந்தன் தான் என் துணை. இனி தொடர்ச்சியா ஓடுமே…”

“என்னண்டு தெரியேல்ல…! ஐ.சி.ஆர்.சி. வழித் துணை கொடுக்க வேணுமே!”

“இல்லயண்ண எப்படியும் ஓடும்.”

எங்களின் மனத்தாங்கல்கள் இயலாத காரியங்களில் இயலும் என்ற நம்பிக்கை எங்கள் வாழ்க்கையில்.

மறக்க முடியாத மச்சான் வரவுடன் வசந்தாக்கா குடும்பமும் வந்து சேர்ந்தது.

“இவன் மகேசனும் குடும்பத்தோட வாறனெண்டு கொஞ்சம் முதல் போன் பண்ணினவன். அவனோட நீர்கொழும்பில இருந்து நித்தியாக்கா குடும்பமும் வருகினமாம்.” மனைவி சொல்ல மீண்டும் மணியோசை.

குருநாகலில் இருந்து ரங்கசாமிப் பெரியப்பா குடும்பமும் நாளைக்கு வெளிக்கிடுறதாயும் லண்டனில் இருக்கும் அவர் மகன் குடும்பமும் நேரே யாழ்ப்பாணம் எங்கடவீட்ட வாறதாய் வந்தது செய்தி. எம் வசதி, தேவை என்று நாம் எல்லோர் வீட்டிலும் போய்த் தங்கியதால் அவர்கள் இப்போ வரும்போது வரவேற்பது தானே முறை. இருந்தும் கொள்ளாதுதான் எம் சிறிய வீடு.

பெரியவிளானில் வைரவநாதன் வீடு என்றால் எவருக்கும் தெரியும். அப்படிப் புகழ்மிக்க செல்வச் செழிப்பான வீடு. கமம் செய்து வாழ்ந்து வந்த நான் இப்ப கொமினிக்கேஷன் வைத்து காலங்கடத்திறன். சமாதானக்கதவு சற்றே திறந்ததால் எம் வீடு நிறைந்தது விருந்தினர் கூட்டத்தால்.

“நீங்க என்ன…செய்றீங்க..?”

“நான் ரொட்டி..சாப்…இப்ப…தான்…சத்தி…எடுத்தனான்.”

“கொஞ்சம்.. உங்கட வானொலியைக் குறையுங்கோ”

“சுமதி. சரி நீங்க எப்பிடி இருக்கிறீங்க…?”

“நான் நல்ல சுகமாக…”

“உங்கட குடும்பத்தார் பற்றி…?”

“இறந்த அப்பா, இருக்கிற அம்மா, அண்ணா, அக்கா . தம்பி, தங்கை ….”

“ஓ…. நீங்க நிறையப் பேர்…!”

“ஆனால் வீட்டில நான் தனிய ஒரு பிள்ளை”

“சரி உங்கட விருப்பம்…?”

“போடா…என்ற பகவதிப் படப் பாடல்”

“ஆ…உங்களுக்காக…இதோ…” தனியார் வானொலியில் தைரியமாக உரையாடிய தம்பி மகேசனின் மகள் சுமதியின் செயலால் நான் தைரியம் இழந்தேன். என் வசதி கருதி நான் நடாத்தும் கொமினிக்கேஷன் பில் என் சக்தியை மீறி..

விட்டுக் கொடுத்தார்கள்! வரலாற்றில். ஆனால் இவர்கள் இருவரும் எப்படி! சமர்க்களம் ஆடியோர் இன்று சந்தியில் ஒன்றாய். சமாதானக் காற்றே எங்கள் மூச்சு என்றனர். சமனும் சந்திரனும் சந்தித்துக் கொண்டு சரளமான உரை.

“கோமத…?”

“நல்லது”

“ஓயா ஊரு?

“கட்டைப் பறிச்சான். ஓங்கட கம?”

“உடுகம ஊரு”

“எந்தக் காம்…?

“பாலாவி மூலஸ்தான காம். ஒயா கம நல்லம். கோயில் கெதர டமேஜ். முன்னம் எல்லாம் நல்லம்”, அன்பு மொழியோ அல்லது அடுத்து உருவாகப் போகும் மொழியோ தெரியவில்லை. ஆனால் ஒரு ஒளிக்கீற்று.

தொலைக்காட்சியிலிருந்துதான் வந்தது. அரசியற் கட்சி வெளியேறும் வரை அகிம்சை வழிப் போராட்டமாம். சனங்களின் வாழ்க்கையிலும் ஏதோ நடைபெறத் தானே வேண்டும். ஜனநாயகத்துக்காக ஜனங்களா? அல்லது ஜனங்களுக்காக ஜனநாயகமா? செய்தியின் சிதறலில் மனங்குழம்ப, முகம் கழுவி தலைவாரக் கண்ணாடி முன் வந்தபோது முகம் முழுக்கச் சிவப்புக் கொப்பளங்கள். முடியும் மட்டும் உரசிப் பார்த்தேன். நோவும் இல்லை, மறையவும் இல்லை ….! என்ன இது என் கோலம்? பின்புதான் புரிந்தது வீட்டுக்கு வந்த விருந்தாளிப் பெண்களின் ஸ்ரிக்கர் பொட்டுக்கள் என் வீட்டு நிலையாடியிலென்று நினைத்து நினைத்துச் சிரிக்கச் சிரிக்க…

சுகமாய் இருந்தது குளியல். கசுர்ணா பீச்சிலிருந்து புறப்பட்டு, பழைய நூல் நிலையம், நயினாதீவு, நல்லூர், பூங்கனிச்சோலை, சங்கிலியன் தோப்பு, வல்லிபுரக் கோயில், செல்வச் சந்நிதி, கீரிமலை, கந்தரோடை என்று எல்லா இடமும் நாலு நாளிலும் நம் விருந்தினர் அனைவரையும் கூட்டிச் சென்று சுற்றிக் காட்டினேன். நான்தான் ஹீரோ என்று எல்லோரும் வாயாரப் புகழ்ந்தனர். குழந்தைகள் தான் நுளம்புக் கடியையும் குண்டுத்துளை என்று சலித்தனர். எம் தேசத்தில் இன்றும்கூட உடலில் சன்னங்களுடன் எத்தனை குழந்தைகள் வாழ்வியற் சூழலில் எத்தனை மாற்றங்கள், பரிமாணங்கள் விளங்கவில்லை எனக்கு.

சந்திக்குப் போவதென்றால் கூட சந்திர மண்டலம் போவது போல் தலைக்கவசம். எத்தனை கெடுபிடி! இருந்தும் தினசரிப் பேப்பரில் ஓர் உயிர் பலி எனச் செய்தி. ஹீரோஹொண்டாக்களில் திரிவோர் கீதோபதேசம் செய்த கண்ணன் போன்ற அறிவுச் சாரதிகளா என்ன? உறவினர் கொடுத்த அன்பளிப்புக்களால் மனைவியும், மக்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

“இதை என்ன செய்யிறது…?”

“தலையை வாரிப்போட்டு இதை ஸ்பிரே பண்ணினால் தலை குழம்பாது.

“அப்ப இது?”

“எலாம் வைச்சால் சேவல் கூவும்”

“இதென்ன?”

“காத்தடிச்சுப் போட்டு தண்ணி விட்டு சுவிம்மிங் பண்றது.”

என் பிள்ளைகளின் விழிகளில் ஒரே ஆச்சரியம். ரயிலைக் கூட காணாமல் வளர்ந்தவர்கள்தானே.

எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு முற்றத்தில் கிடந்த கட்டிலில் இருந்த என்னிடம் வந்தாள் என் மனைவி. வீடு முழுவதும் விருந்தினர். வளவு நிறைய வாகனங்கள். எல்லோர் மனதிலும் கொண்டாட்டம். என் மனதில் மட்டும் திண்டாட்டம். உடற் சோர்வுடன் உள்ளமும் சோர்ந்து போக ஏனோ உறக்கம் மட்டும் வரவில்லை .

“என்னங்க! இற்றை வரை எவ்வளவு செலவாச்சு?”

“ஓ எல்லாமா ஒரு நாப்பத்தைஞ்சு..?”

“என்னப்பா செய்யிறது!”

“கடன்தான் சமாளிப்பம்…!”

டிஸ் அன்ரனாக்கள், இன்ரநெற் இணைப்பு, கான்போன், வங்கிகள் கணனிமயம், வாசல் வரைவரும் காப்புறுதி நிறுவனங்கள், வியாபாரக் காட்சியகங்கள்…. என வடக்கின் தரிசனங்கள். ஆனால் சாதாரண எம் வாழ்வில்…….? சமாதானத்தின் வரவை என்னால் சமாளிக்க முடியாமல் சாபம் இட்டவன் நான் ஒருவன் மட்டுமா!!! “நாளை எல்லோரும் ஒன்றாய்ப் போகினமாம்” எனக் கூறிய மனைவியின் வார்த்தை தாலாட்டாக என் மனம் தூக்கத்தில் ஆழ்ந்தது. உறக்கத்தில் கூட தரிசனங்கள். தரிசனம் தந்தது ஆண்டவனல்ல. அடுத்து வரவிருக்கும் விருந்தாளி அவதாரம்.

– என் மாதாந்திர ஓய்வூதியம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2012, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *