பள்ளியில் திருட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 7,972 
 
 

இரவு பனிரெண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது, ராமசாமியும், அவன் அப்பா, அம்மா, தங்கை, நால்வரும் அவர்கள் ஊருக்கு பேருந்தில் வந்து இறங்கினர். பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிடம் நடந்தால் போதும், அவர்கள் வீட்டுக்கு போய் விடலாம். நால்வரும் வேகமாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

நேரம் பனிரெண்டுக்கு மேல் ஆகி விட்டதால், தெருவெல்லாம் வெறிச்சென்று இருந்தது. வீதியில் விளக்கும் எரியவில்லை. அவ்வப்பொழுது இவர்களை கடந்து செல்லும் வாகனங்களின் வெளிச்சத்தை வைத்து பாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.

வழியில் இவர்கள், ராமசாமியும், அவன் தங்கையும் படித்துக்கொண்டிருக்கும் பள்ளியை தாண்டித்தான் போக வேண்டும்.

அந்த இருளில் நடக்கும்போதே ராமசாமியின் தங்கை அண்ணா நம்ம ஸ்கூலு

என்று கை காட்ட ஆமாம், நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும், சொல்லிவிட்டு பள்ளி காம்பவுண்டை தாண்டி பார்வையை செலுத்தினான். அப்பொழுது யாரோ அந்த இட்த்தை விட்டு நகர்வது போல் தெரிந்தது.

சட்டென நின்று உற்று பார்த்தான், காம்பவுண்டை தாண்டி சிறிது தூரம் நடந்தால் முன்புறம் தலைமையாசிரியர் அறையும், பள்ளி அலுவலகமும் அதை ஒட்டி மற்றொரு அறையும் இருக்கும், கட்டிடத்தின் வலது, இடது, பாதையின் வழியாக சென்றால் பின்புறம் பள்ளி கட்டிடம் இருக்கும்.

இப்பொழுது இரு உருவங்கள் வலது புற பாதையை கடந்து காம்பவுண்ட் அருகே நகர்ந்து செல்வது தெரிந்தது. நன்றாக உற்று பார்த்தான். பள்ளி வாட்ச்மேனை இவனுக்கு தெரியும், அவருடைய உருவம் அந்த இரு உருவங்களில் ஒத்துப்போகவில்லை. என்ன செய்வது? யோசிக்கும்போது அவன் அப்பா அவனை கூப்பிடுவது கேட்டது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். அவன் அப்பாவும்,அம்மாவும் தங்கையும் அவனை விட்டு நீண்ட தூரம் முன்னால் சென்றிருந்தார்கள். அங்கிருந்து அப்பா கத்தினார்.

ராமு சீக்கிரம் வா, அங்க எதுக்கு நின்னுட்டே? இவன் சரி முதல்ல வீட்டுக்கு போவோம், அப்புறம் பாக்கலாம், சொல்லிவிட்டு வேகமாக அவர்களை நோக்கி சென்றான்.

காலையில் தூங்கி எழும்போதே அவனுக்கு பள்ளி இருளில் பார்த்த உருவங்கள் யாராய் இருக்கும் என்ற கேள்வியே மனதில் இருந்தது.வகுப்பில் அருகில் உட்கார்ந்திருக்கும் நண்பன் பாலுவிடம் நேற்று இரவு வரும்போது பள்ளிக்குள் இருவரை பார்த்ததாக சொன்னான்.

பாலு யோசித்தான், யார் அந்நேரத்துக்கு உள்ளே இருந்திருப்பாங்க? நம்ம பசங்களை மாதிரி இருந்ததா?

இல்லை பெரிய ஆளுங்க மாதிரி தெரிஞ்சுது என்று சொன்னான் ராமசாமி.

சரி இன்னைக்கு இராத்திரி வேணா பாத்துடலாமா? பாலு கேட்டவுடன் தயக்கத்துடன் பாத்துடலாம் என்று சொன்னான். ஏன் பயமாயிருக்கா? பாலு கேட்டவுடன் சே சே. அதெல்லாம் இல்லை. அந்நேரத்துக்கு எப்படி வீட்டை விட்டு வெளியே வர்றதுன்னு யோசிச்சேன்.

எப்படியாவது எந்திரிச்சு வரணும்? பாலுவின் இருப்பிடம் ராமசாமி வீட்டை தாண்டி சிறிது தூரத்தில் இருந்தது. பாலு நான் உன் வீட்டுக்கு வந்துடறேன், நீ ரெடியா இரு என்னன்னு போய் பாத்துடலாம். சரி என்று தலையாட்டினான் ராமசாமி.

இரவு தூங்கி விடாமல் மிகவும் கஷ்டப்பட்டு விழித்திருந்தான் ராமசாமி.

பாலு வந்தவுடன் கூப்பிடுவதாக சொல்லியிருந்தான். அதற்காக விழிப்புடன் காத்திருந்தான். அவன் வீட்டில் அனைவரும் உறங்கியிருந்தனர்.

ராமு..ராமு..கிசுகிசுவென பாலுவின் குரல் கேட்டது.சத்தம் காட்டாமல் எழுந்த ராமசாமி கதவை சத்தமில்லாமல் திறந்தான். வெளியே பாலு நின்று கொண்டிருந்தான்.கதவை அப்படியே சாத்தி வெளியே தாழ்ப்பாள் போட்டவன், பாலுவை பார்த்து நீ எப்படி வந்தே?

ஸ்..ஸ் நடந்து கிட்டே பேசலாம் வா..சொல்லிவிட்டு விறு விறுவென நடக்க ஆரம்பித்தான். ராமசாமி அவன் பின்னால் ஓடினான். பேசலாம் என்று சொன்னானே தவிர பேசவேயில்லை. நடை அவர்கள் பள்ளியை நோக்கி அவ்வளவு வேகமாக இருந்தது.

இருவரும் பள்ளி காம்பவுண்ட் சுவர் அருகே நின்று எட்டி பார்த்தனர். உள்ளே இருளாய் இருந்தது. ஒன்றும் கண்ணுக்கு தெரியவில்லை. பாலு ராமசாமியிடம் அப்படியே காம்பவுண்டு தாண்டி உள்ளே பார்த்துடுவோம். ராமசாமி வேண்டாம் கேட்டை திறந்து போகலாம் என்றான்.

வேண்டாம் கேட் திறக்கும்போது சத்தம் வரும் அப்ப உள்ளே யாராவது இருந்தா நமக்கு ஆபத்து என்றான். அதுவும் நல்ல யோசனையாகத்தான் பட்டது.

சத்தமில்லாமல் காம்பவுண்ட் ஏறி உள்ளே குதித்தனர். மெல்ல..மெல்ல கால் வைத்து அலுவலக கட்டிடத்தை நோக்கி நடந்தனர். அவர்கள் இருவர் மனதும் பயத்தில் துடித்துக்கொண்டிருந்தது.

சரக்கென யாரோ நடக்கும் அரவம் கேட்டவுடன் பாலுவும், ராமுவும் சட்டென ஓடி அங்கிருந்த தூண் ஒன்றில் மறைவில் நின்று சத்தம் வந்த திசையை பார்த்தனர்..

அலுவலக அறையை ஒட்டி இருந்த அறையில் இருந்து இருவர் தலையை நீட்டி பார்த்து விட்டு வெளியே வந்தனர். திறந்து இருந்த கதவை மெல்ல சாத்தி பூட்டு ஒன்றையும் பூட்டி விட்டு திரும்பினர்.அவர்கள் கையில் ஆளுக்கொரு பெட்டி போல ஏதொவொன்று இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இருவரும் சர சர வென நடந்து காம்பவுண்ட் அருகில் வந்து சுவர் மேலேறி அந்த பக்கம் குதிப்பதை திகிலுடன் பார்த்தனர். பாலுவும், ராமசாமியும்.

மறு நாள் காலை தலைமையாசிரியர் முன்பு நின்று நேற்றிரவு நடந்ததை

அவரிடம் விவரித்தனர். அவர் இவர்கள் சொல்வதை கேட்டு விட்டு அந்த அறையை நோக்கி நடந்தார்.

எதற்கும் காவல் துறையிடம் விவரம் தெரிவித்து விட்டு பின் அந்த அறையை திறக்கலாம் என்று முடிவு செய்தவர், திரும்பி அலுவலகம் வந்து காவல் துறைக்கு போன் மூலம் விவரம் தெரிவித்தார்.

காவல் துறை ஆய்வாளர் முன் அந்த அறை திறக்கப்பட்டு உள்ளே இருக்கும் பொருட்கள் ஏதேனும் களவு போயுள்ளனவா என சோதித்தனர்.

அரசாங்கத்தால் இலவச கணினி மாணவர்களுக்கு வழங்குவதற்காக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது, அதில் கிட்டத்தட்ட இருபதுக்கு குறையாமல் காணாமல் போயிருந்தது தெரிந்தது.

தலைமையாசிரியரிடமிருந்து புகார் பெறப்பட்டு பதிவும் செய்யப்பட்டது. காவல் துறை ஆய்வாளர் ராமசாமியையும், பாலுவையும் யாரோ எதுவோ செய்தால் எனக்கென்ன? என்று பார்க்காமல் தைரியமாக அந்த இரவில் வந்து கண்டுபிடித்து சொன்னதற்கு பாராட்டு தெரிவித்தார்.

தலைமையாசிரியரும் அவர்களை பாராட்டி நல்ல வேளை திருடர்கள் மொத்தமாக கொள்ளையடித்தால் எங்கே கண்டு பிடித்து விடுவார்களோ என்று தினம் ஆளுக்கு ஒன்று என்று எடுத்து போயிருக்கிறார்கள், கிட்டத்தட்ட பத்து நாட்களாக இந்த திருட்டு நடந்து கொண்டிருக்க வேண்டும். நல்ல வேளை இன்றாவது கண்டு பிடித்து விட்டோம். இல்லாவிட்டால் எல்லார் மேலேயும் சந்தேகப்பட்டு, எல்லோருக்கும் வீண் மனவேதனை ஆகியிருக்கும்.

ராமசாமியையும், பாலுவையும் “ எதிர்காலத்தில் அவர்கள் காவல் துறை வேலைக்கு தகுதியான மாணவர்கள்” என்று இப்பொழுதே பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை பேசிக்கொள்கிறார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *