1800களின் பிற்பகுதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 4,750 
 

1,800 களின் பிற்பகுதி, அன்றைய பேச்சுத்தமிழே, காதில் தேன்வந்து பாய்ந்தது போல் சுவைக்கும்.

மண்மணக்கும் அந்த அழகிய கிராமத்தின் சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டே புதிதாய் பூத்த மஞ்சள் ரோஜாவை ரசித்து நின்றவள் காதில், உரக்கக்கேட்டது…

“பூ… எங்கம்மா இருக்க….?”

ஆனால் பூங்குழலி அக்குரலை சட்டை செய்யவில்லை. மஞ்சள் ரோஜாவை விட்டுவிட்டு அதனருகிலிருந்த சிகப்பு ரோஜாவை ரசிக்கச் சென்றுவிட்டாள்.

அடுத்து சமீபமாயிருந்த வேப்பமரத்திற்குச் சென்று, தன் கரங்களுக்கு எட்டிய தொலைவிலிருந்த ஒரு குச்சியை உடைத்து, பற்களைத் துலக்க ஆரம்பித்தாள்.

“ஒரு திவலையாவது நினைப்பிருக்கா இவளுக்கு.. அடியே பூ.. மாட்டுவண்டு வந்துவிடப் போகிறது. மாமன் ஊருக்குப் போக நாழியும் ஆகிறது. கிழக்குதித்த‌ சூரியன் கூட அஸ்தமிச்சிடுவான் போல.. பல் துலக்கப் போன இவளைக் காணோமே.. அடியே பூ.. ஏனடி இமிசிக்கிறாய்? நாழிகை ஆக ஆக குருணி அரிசிக்கும் குறையாத கூட்டம் வழியெல்லாம் வந்துவிடுமே.. நமது பயணம் தடைப்படுமே”, என அரற்றியவாரே வீட்டை விட்டு வெளியே வந்தாள் இளவேனில்.. பூங்குழலியின் தாயார்.

தாயைக் கண்டதும் இன்னும் சடுதியாய் பற்களைத் துலக்கிவிட்டு சளப்பென்று துப்பினாள் பூங்குழலி.

அருகேயே ஏதேதோ காற்றுடன் கதைத்தபடியே சலசலவென ஓடிக்கொண்டிருந்தது பொய்கை நதி.

அதிலிறங்கி வாய் கொப்பளித்தவளுக்கு தாயாரின் வசவுகள் செவியில் கேட்டது.

“தாயே.. நான் தான் முன்னமே சொல்லிவிட்டேனே.. எனக்கு வரும் உத்தேசமில்லையென்று.. வழக்கம்போல கலாசாலைக்குப் போகவேண்டும். நம் வீட்டைச் சுற்றியிருக்கும் மரம் செடி கொடிகளையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும். நம் ஜீவனம் நன்றாயிருக்க வேண்டுமானால், நம்மைச் சார்ந்த பிராணிகள், இயற்கை வளங்கள், நீர் நிலைகளின் ஜீவனமும் நன்றாயிருக்க வேண்டுமென தந்தை சொல்லியுள்ளாரல்லவா? அதனால் என்னை இங்கேயே விட்டுவிட்டு நீ மட்டுமே போவாயாம். ஒன்றிரண்டு நாட்களில் வந்துவிடுவாய் தானே?!”

“கழுதைகுபதேசம் காதிலே சொன்னாலும், அபயக் குரலொழிய அங்கொன்றுமில்லை”னு சொல்வாங்க.. “எவடி இவ? தனியாக இங்கிருந்து நீ ஏன் உபத்திரவம் படவேண்டும்?”

“இதில் ஒரு உபத்திரவமும் இல்லை தாயே.. சிறுசிறு அசௌகரியங்கள் இருந்தாலும், அதற்கான தீர்வுகளையும் உத்தேசித்துத்தான் வைத்துள்ளேன்”

“ஆக எல்லாப் பெண்டுகள் போலவும் நீயும் தாயின் சொற்பேச்சைக் கேட்பதாயில்லை?!”

“நாவெடுத்து பதில்பேசவும் சக்தியன்றி இருக்கும் இந்த ஜீவன்களை நாம் தானே கவனித்துக் கொள்ளவேண்டும்!”

“உன்னிடம் பேசி இணங்கச் செய்யவேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால் நீயோ இப்படி முரண்டாயிருக்கிறாயே!? உன் இட்டம் போல விட்டுவிட இயலுமா? உன் மாமனுக்கு விசனமாகி விடுமல்லவா தங்கமே!”

“அதை நான் ஒப்பவில்லை தாயே!”

அதே வேளை.. இளவேனிலின் தமையன் ஆடலரசுவின் மாட்டுவண்டு மணியோசை சமீபமாய் கேட்டது.

“இதோ வந்துவிட்டான் உன் மாமன்.. நீ வரவில்லையெனும் செய்தி, அவன் மகிழ்வெய்தும்படி நிச்சமிராது பூ.. என் மனமிசையவில்லை”

“தாயே.. என்னால் சாத்தியமாயிருந்தால் நான் வரவில்லையென எதற்கு சொல்லப்போகிறேன்? ஜீவனம் செய்ய பட்டணம் சென்றிருக்கும் தந்தையார் சொன்னது தான் எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு நாளும் நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையைப் பேணாமல் என்னால் இருக்கவியலாது. நீ மகிழ்வாய் போய் வா.. எந்த சமுசயமும் உனக்கு வேண்டாம்”

இவர்களது சம்பாஷனை கண்டு மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு அருகில் வந்தான் ஆடலரசு.

“என்ன அக்கா.. இன்னுமா கிளம்பவில்லை? சங்கதியின் அவசரமுணர்ந்து இருவருமே கிளம்பியிருப்பீர்கள் என்றல்லவா நினைத்து வந்தேன்!”

“வாங்க மாமா! அதோ அந்த வாகை மரம் என்னிடம் பேச என்னை அழைக்கிறது. நான் சிறிது பேசிவிட்டு வருகிறேன். நீங்கள் இருவரும் கிளம்புங்கள்”

“அப்போ பூ.. நம்மோடு வரவில்லையா அக்கா!”

“ஆமாம் அரசா.. அவள் மனதிற்கு இயற்கைப் பேணலே முதலிடமாம். தந்தை சொற்படி எப்போதுமே மரம், செடி, கொடி மற்றும் வாயில்லாப் பிராணிகளையெல்லாம் விட்டுப் பிரியமாட்டாளாம். அதிலொன்றும் தவறில்லை தானே!”

“நிச்சயமாகத் தவறில்லை அக்கா.. ஒன்றை நூறாகச் சொல்வது லோகத்திலே சகஜந்தானே.. பூ இப்படியே இருக்கட்டும் இயற்கைப்பெண்ணாய்.. இயற்கைக்கும் இவள் மாதிரி ஆசாமிகள் தேவை. இப்படி ஊருக்கொருவர் இருந்துவிட்டால் கூடப் போதும். லோகத்தில் பஞ்சம், பசி, பட்டினி என எந்த பிரச்சனைகளும் இராது. மழையும் தேவையுணர்ந்து பொழியும். நமது நாட்களும் மனமகிழ்ச்சியாய் விடியும்”, என்று சொல்லிய ஆடலரசு.. வாகை மரத்துடன் உரையாடிக் கொண்டிருந்த பூங்குழலியை காதலுடன் பார்த்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *