நாளைக்கு நல்ல விருந்து !

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 15,160 
 

இளைஞன் ஒருவன் முனிவர் ஒருவரிடம் வந்தான். “”முனிவரே! விலங்குகள் பேசிக் கொள்வது எனக்குப் புரிய நீங்கள் அருள் செய்ய வேண்டும். அப்படி செய்தால், நான் பல சுவையான செய்திகளையும், விலங்குகளின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்வேன்…” என்று வேண்டினான்.

“”விலங்குகள் மொழியை அறிந்து கொள்வது வீணான முயற்சி. அந்த முயற்சியை விட்டுவிடு. உன் கவனம் முழுவதையும் கடவுளிடத்திச் செலுத்து. நல்ல முறையில் வாழ முயற்சி செய்!” என்று அறிவுரை சொன்னார் முனிவர்.
அவர் மறுத்தும், அவன் அவரை வற்புறுத்தத் தொடங்கினான். “”முனிவரே! இதுவரை யாரும், எதையும் கேட்டு நீங்கள் மறுத்தது கிடையாதே. கடவுளின் பெயரால் கேட்கிறேன். என் வேண்டுகோளை மறுத்து விடாதீர்கள். விலங்குகள் மொழி எனக்குப் புரிய நீங்கள் அருள் செய்யவேண்டும்,” எனக் கெஞ்சினான் அவன்.

NalaikkuNallaவேறுவழி இல்லாது, “”கடவுளே! இந்த இளைஞனை, சாத்தான் தீய வழியில் செல்லும்படி தூண்டுகிறானே. நான் என்ன செய்வது எனக்கு வழிகாட்டு!” என்று வேண்டினார் முனிவர்.
“”உன் ஆசையை நிறைவேற்றுகிறேன். இன்று முதல் பறவைகள், விலங்குகள் பேசுவது உனக்குப் புரியும்!” என்றார் முனிவர்.

மகிழ்ச்சியுடன் தன் வீடு வந்து சேர்ந்தான் அவன்.

மறுநாள் காலையில் வேலைக்காரி அவனுக்கு மேசையில் உணவு பரிமாறினாள். அப்போது சிறு ரொட்டி துண்டு ஒன்று தவறிக் கீழே விழந்தது. கோழி ஒன்று அதைச் சாப்பிட ஓடி வந்தது.

இதைப் பார்த்த நாய் கோபத்துடன், “”கோழியே! உனக்கு உரிய உணவு நெல் போன்ற தானியங்கள் தானே? அவற்றை என்னால் உண்ண முடியாது. அப்படி இருக்கும்போது எனக்கு உரிய உணவை உண்ண வருகிறாயே இது நியாயமா?” என்று கேட்டது.

“”ஏன் உணவுக்காக இப்படி அலைகிறாய். நான் இந்த ரொட்டியைத் தின்றால் கடவுள் உனக்குப் பெரிய விருந்தே அளிப்பார்…” என்றது சேவல்.

“”நீ என்ன சொல்கிறாய்? எனக்குப் புரியவில்லையே!” என்றது நாய்.

“”நாளைக் காலையில் நம் முதலாளியின் குதிரை இறக்கப் போகிறது. அதன் கறியை நீ வயிறார உண்ணப் போகிறாய். நானோ உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்க வேண்டும். அதனால், இந்த ரொட்டியை தின்கிறேன்!” என்ற சேவல், ரொட்டியைத் தின்றது.

சேவல் பேசியது முழுவதையும் கேட்டான் இளைஞன். அன்றுமாலையே அந்தக் குதிரையை விற்றுவிட்டான்.

மறுநாளும் வேலைக்காரி உணவு பரிமாறும்போது ரொட்டித்துண்டு ஒன்று கீழே விழுந்தது. அதைத் தின்ன சேவல் ஓடி வந்தது.

அதைப் பார்த்த நாய், “”பொய்யனே! ஏமாற்றுக்காரனே! நேற்று என்ன சொல்லிவிட்டு எனக்குரிய ரொட்டியைத் தின்றாய். நீ சொன்னது ஏதேனும் நடந்ததா? எதிர் காலத்தை அறிந்ததாகச் சொல்லி என்னை ஏமாற்றி விட்டாய். மீண்டும் என்னை ஏமாற்ற நினைக்கிறாயா?” என்று கோபத்துடன் கேட்டது.

“”நான் சொன்னது இதுவரை ஏதேனும் பொய்யாகி இருக்கிறதா? அந்தக் குதிரை இந்நேரம் இறந்திருக்க வேண்டும். அதை விற்றதனால் நம் முதலாளி இழப்பிலிருந்து தப்பித்துக் கொண்டார். அதை வாங்கியவன் இப்போது புலம்பிக்கொண்டிருப்பான். இன்றைய விருந்து தவறினால் என்ன? நாளை காலை நம் முதலாளியின் கழுதை இறக்கப் போகிறது. உனக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. இந்த ரொட்டியை நான் உண்கிறேன்…” என்று தின்றது சேவல்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த இளைஞன் மகிழ்ந்தான்.

“நல்ல வாய்ப்பால் இத்தகைய அரிய ஆற்றலைப் பெற்றேன். எதிர்கால நிகழ்ச்சிகளை முன்னரே தெரிந்து கொள்வதால் இழப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிகிறது’ என்று நினைத்த இளைஞன் அன்றே கழுதையை விற்றான்.
மறுநாள் சேவலைச் சந்தித்த நாய், “”அண்டப்புளுகனே! இன்று என்ன பொய் வைத்திருக்கிறாய்? உன் பேச்சை நம்பி இரண்டு நாட்களாக பட்டினி கிடக்கிறேனே. நாளை என்ன விருந்து என்று கதை அளக்கப் போகிறாய்?” என்று கேட்டது.

“”நம் முதலாளியின் அடிமை நாளை சாகப் போகிறான். அவன் உறவினர்கள் பிச்சைக்காரர்களுக்கு விருந்து வைக்கப்போகின்றனர். உனக்கும் வயிறார உணவு கிடைக்கும்…” என்றது சேவல்.

இதைக் கேட்ட இளைஞன் தன் அடிமையை இன்னொருவனுக்கு விற்றுவிட்டான். “விலங்குகளின் மொழி தெரிந்ததால் மூன்று இழப்புகளிலிருந்து தப்பித்துக் கொண்டேன். இல்லாவிட்டால் என் செல்வத்தின் ஒரு பகுதி அல்லவா அழிந்திருக்கும்’ என்று மகிழ்ந்தான் அவன்.

மறுநாள் சேவலைச் சந்தித்த நாய், “”என்னை மடையன் என்று நினைத்துக் கொண்டாயா? மூன்று நாட்களாக தொடர்ந்து பொய் சொல்லி என்னை ஏமாற்றுகிறாய். இப்படிச் செய்ய உனக்கே வெட்கமாக இல்லையா?” என்று கோபத்துடன் கேட்டது.

“”நான் எதிர்காலத்தில் நடக்கப் போவதைச் சொல்கிறேன். அப்படியேதான் நடக்கிறது. நம் முதலாளி தனக்கு வரவேண்டிய இழப்பை அடுத்தவர் தலையில் கட்டி விடுகிறார். அந்த அடிமை இந்நேரம் இறந்திருப்பான். இப்படிச் செய்வது கொடிய பாவம் என்பதை அவர் உணரவில்லை. நாளை காலையில் நம் முதலாளி சாகப் போகிறார். அவர் உறவினர்கள் பெரிய விருந்து வைக்கப் போகின்றனர். மூன்று நாள் விருந்து தவறியதற்காக நீ வருந்தாதே!” என்றது சேவல்.

இதைக்கேட்ட அவன் அழுது புலம்பியபடி ஓடினான். முனிவரின் திருவடிகளில் விழுந்தான். “”முனிவரே! இந்த ஆபத்தில் இருந்து நீங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்!” என்று கெஞ்சினான்.

“”ஆபத்தில் இருந்து தப்பிக்க உனக்கா தெரியாது. நீயே உன்னை யாரிடமாவது விற்றுக்கொள். உன்னை நம்பிப் பொருட்களை வாங்கியவர்களை ஏமாற்றினாயே! அதை போல இந்த முறையும் ஏமாற்று,” என்றார் அவர்.

“”ஐயோ! என் அறியாமையால், விலங்குகள் பேசுவது புரிய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக எனக்குக் கொடிய தண்டனை தந்து விடாதீர்கள். நான், பிறரை ஏமாற்றியது தவறுதான். என் பிழையை மன்னித்து அருள் செய்யுங்கள்…” என்று கெஞ்சினான் அவன்.

“”மகனே! வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு, குறியைத் தாக்கிய பிறகு மீண்டும் வில்லுக்கு வராது. இதுதான் விதி. இதை யாராலும் மாற்ற முடியாது. உனக்கு நல்ல அமைதியான சாவை வழங்க வேண்டும். நம்பிக்கையுடன் இறக்கும் இவன் பாவங்களைப் போக்க வேண்டும் என்று கடவுளிடம் உனக்காக வேண்டுகிறேன்…” என்றார் முனிவர்.

அப்போதே அவன் மயங்கி விழுந்தான். அவன் உடல்நிலை மோசமாகியது. நான்கு அடிமைகள் அவனை வீட்டிற்குத் தூக்கி சென்றனர். மறுநாள் காலையில் அவன் மூச்சு நின்றது.

– அக்டோபர் 29,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *